இணைய இதழ்இணைய இதழ் 66கட்டுரைகள்

திரைப்படத்திற்கும் அப்பால் மிச்சம் இருப்பவர்கள் – கவிதைக்காரன் இளங்கோ

கட்டுரை | வாசகசாலை

ந்தியாவின் நீதிமன்றங்களில் முடிக்கப்படாத வழக்குகளின் நிலுவை எண்ணிக்கை மட்டும் நாற்பத்தி ஏழு மில்லியன் என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்டது.. என்கிற புள்ளிவிபரக் கணக்கோடு ஒரு திரைப்படத்தின் இறுதித் திரை நம் கண்முன்னே தம் திரைக்கதையை முடித்துக்கொண்டு இருண்டு விடுகிறது. அந்தத் திரைப்படம் ‘Saudi Vellakka CC.225/2009.’ மலையாளத் திரைப்படம். எழுதி இயக்கி இருப்பவர் தருண் மூர்த்தி.

கதைச்சுருக்கம் இதுதான்: முதிய பெண்மணியான ஆயிஷா ராவுத்தர் குற்றம்சாட்டப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. நீண்ட வருடங்களாக அக்குற்றத்தின் எதிர்த்தரப்பில் இதுவரை ஆஜராகாத ஆறு சாட்சிகளை ஆஜராகும்படி நீதிமன்றம் வலியுறுத்துகிறது. அவர்களுக்கு இறுதி சம்மன்களை வழங்க ஒரு போலீஸ்காரர் கிளம்பிப் போகிறார். ஆனால், ஆயிஷா ராவுத்தர் பத்து வருடங்களுக்கும் மேலாக அத்தனை வாய்தாகளுக்கும் தவறாமல் ஆஜராகிக் கொண்டிருக்கிறார். ஆறு சாட்சிகளில் முதன்மை சாட்சியாக இருப்பவன் பாதிப்புக்கு ஆளான அபிலாஷ் சசிதரன். இந்த வழக்குத் தொடுக்கப்பட்டபோது அவனுக்கு வயது பத்து. இப்போது அவன் இருபத்திநாலு வயது நிரம்பிய வாலிபன். பெங்களூரில் தங்கி வேலை செய்துகொண்டிருக்கிறான். அங்கிருந்து அயல்தேசம் போவதற்கான விசாவுக்காக காத்திருக்கிறான். அவனுடைய அம்மாவும் சகோதரியும் கொச்சியில் இருக்கும் சவுதியில், ‘முண்டேம்வெளி’ என்னும் பகுதியில் வசிக்கிறார்கள். சகோதரி கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்த சம்மன், இப்போது செய்துகொண்டிருக்கும் அவனுடைய வேலையைக் கெடுத்து நீதிமன்றத்தை நோக்கி அவனை இழுக்கிறது. ஏன்? அவனுடைய பால்ய வயதில் அப்படி என்ன நடந்தது? போன்ற கேள்விகளோடு தொடங்குகிற இக்கதை ஒரு வாழ்க்கையை நம் கண்முன்னே அகலமாய் இழுத்துப் பிடிக்கிறது.

அண்டை வீட்டார்களான ஆயிஷா ராவுத்தருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் எப்போதுமே ஆவதில்லை. மச்சுவீட்டில் வசதியாக இருக்கிற ராதாகிருஷ்ணனுக்கு விவாகரத்து ஆன ஒரு பெண் இருக்கிறாள். புரோக்கர் மூலமாக அவளுக்கு இன்னொரு மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருக்கிறார் அவர். நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலைப்பார்த்து ரிடையர் ஆனவர். திமிர் பிடித்த ஆசாமி. அவருடைய மகள் மொட்டைமாடியில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துவருகிறார்.

ஆயிஷா ராவுத்தருக்கு மகன் சத்தாரும் மருமகள் நஸியும் தான் குடும்பம். சத்தார் வாடகை ஆட்டோ ஓட்டிப் பிழைப்பவன். சாந்தமானவன். அம்மா மீது அதிக பாசமும் மரியாதையும் வைத்திருப்பவன். மனைவியின் புகார்களுக்கு நடுவில் வாழ்வைச் சமாளித்துக்கொண்டு இருப்பவன். அவனுக்கு குழந்தை கிடையாது. வீட்டில் ஆயிஷா ராவுத்தருக்கும் மருமகளுக்கும் எப்போதும் ஏதாவது வாய்வார்த்தையாக வாக்குவாதம் இருந்துகொண்டே இருக்கிறது. மருமகளின் அண்ணன் ஒருத்தன் ஏதோ வழக்கில் சிக்கிக்கொண்டு அடிக்கடி நீதிமன்றம் போய்வருவதை எப்போதும் சுட்டிக்காட்டி பேசும் வழக்கம் ஆயிஷா ராவுத்தருக்கு இருக்கிறது. அப்போதெல்லாம் மருமகள் நஸி டென்ஷன் ஆகிப்போய் பதிலுக்குப் பதில் பேசிவிடுவாள்.

ஒருநாள் டியூஷன் படிக்க வந்த சிறுவர்கள் மொட்டைமாடியில் தென்னமட்டையை பேட்டாக பிடித்துக்கொண்டு வெள்ளக்காவை (குட்டி இளநீர்க்காய்) பந்தாக பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ரேஷன் கடையிலிருந்து திரும்பி வருகிற ஆயிஷா ராவுத்தரின் தலையில் வந்து மோதுகிறது அந்த வெள்ளக்கா. அதை அடித்தவன் சிறுவன் அபிலாஷ் சசிதரன். கோபத்தில் மாடி ஏறி வருகிற ஆயிஷா ராவுத்தர், அவனைக் கன்னத்தில் அறையும்போது அவனுடைய பல் உடைந்து கீழே விழுகிறது. ஒரே ரத்தமாகக் கொட்டுகிறது. எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பயந்துபோன ஆயிஷா அமைதியாக வீட்டுக்குத் திரும்பிப்போய்விடுகிறார்.

விஷயம் பரபரப்பாகி விடுகிறது. அபிலாஷின் அப்பா சசிதரன் மட்டும், அதனை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொள்கிறார். ஆனால், ராதாகிருஷ்ணன் அவரை அச்சுறுத்தி ஒரு புகாரை ஆயிஷா ராவுத்தரின் பெயரில் போலீஸில் பதிவு செய்யும்படி தூண்டுகிறார். அன்றைய இரவில் போலீஸ் வந்து ஆயிஷா ராவுத்தரை கைது செய்து கூட்டிப்போகிறார்கள். சத்தாருக்கு ஒன்றும் ஓடவில்லை. செய்வதறியாமல் தடுமாறுகிறான். அவனுடைய குடும்ப நண்பனான ப்ரிட்டோவை தேடி ஓடிப்போய் உதவி நாடுகிறான். நட்ட நடு இரவில் இருவரும் பைக்கில் அலைகிறார்கள். போலீஸ் ரூல்ஸ்படி நடந்துகொள்கிறது. மறுநாள் அக்டோபர் இரண்டாம் தேதி நீதிமன்றம் விடுமுறை என்பதால் அன்றிரவோடு இரவாக பதினொரு மணிக்கு எப்படியாவது பெயில் வாங்கியாக வேண்டும் என்பது நிலை. பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக ஆயிஷா ராவுத்தருக்கு அன்றைய இரவே பெயில் கிடைத்துவிடுகிறது. எப்போது போலீஸ் வந்ததோ அப்போதே பேச்சு குறைந்துபோய் அமைதியாகிவிடுகிறார் ஆயிஷா ராவுத்தர். ஒரு சின்னப் பையனை அடித்துவிட்டோமே என்று அவருக்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. அந்த இரவு சத்தாருக்கு மிகப் பெரிய சோதனையான ஒன்றாக மாறுகிறது.

மறுநாள் காலையில் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி, அபிலாஷை பார்த்துவர மருத்துவமனைக்குப் போய்விடுகிறார் ஆயிஷா ராவுத்தர். ஆனால், அபிலாஷின் குடும்பத்தார் அவரை ஓர் எதிரியைப் போல நடத்துகிறார்கள். அவரைத் துரத்துகிறார்கள். அதற்குள் ப்ரிட்டோவும் சத்தாரும் வந்துவிட கைகலப்பு ஆகிவிடுகிறது. அபிலாஷின் தாய்மாமன் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறான். குடுவையில் இருந்த அபிலாஷின் சிறுநீரை எடுத்து ஆயிஷா ராவுத்தரின் முகத்தில் விசிறி அடித்துவிடுகிறான். பெரும் அவமானத்தோடு அம்மாவும் பிள்ளையும் திரும்பிப் போகிறார்கள்.

வீட்டுக்கு வந்ததும் சத்தாருக்கு ஒருபக்கம் மனைவியின் அங்கலாய்ப்பு. இன்னொரு பக்கம் அம்மாவிடம் தம் நிலையைச்சொல்லி மன்றாடி கலங்குகிற தன்னுடைய கையாலாகாத்தனம். அடுத்து பெயில் ரத்தாகி இந்த விஷயம் வழக்காக மாறப்போகிறது. இந்த வழக்கை எடுத்து நடத்தக்கூடாது என்பது மனைவி நஸியின் வாதம். ஏற்கனவே தன் வீட்டில் தன்னுடைய அண்ணன் படுகின்ற பாட்டைச் சொல்லி மாய்கிறாள். ‘நமக்கு என்று சொந்தமாக ஒரு ஆட்டோ கூட இல்லை. சரியான வருமானம் இல்லை. சொந்தம் கொண்டாட ஒரு குழந்தையும் இல்லை. இந்த நிலையில் இந்த வழக்கை எடுத்து நடத்திட நான் அனுமதிக்கப்போவதில்லை’ என்று வாதம் செய்கிறாள். ‘உங்களுக்கு எதையுமே மனசிலருந்து தான் யோசிக்க தெரியுது. மூளையில இருந்தும் கொஞ்சம் யோசிக்க கத்துக்குங்க’ என்று ஆதங்கப்படுகிறாள். அப்போது பேச்சுவாக்கில் ஒன்றைச் சொல்லிவிடுகிறாள். ஆயிஷா ராவுத்தரை இரண்டாம்தாரமாக கட்டிக்கொடுத்தவர் அவருடைய அண்ணன்தான். அவர் இன்னும் இருக்கிறார். அவரிடம் நிறைய பணம் இருக்கிறது. ‘அண்ணன் என்கிற முறையில் அவரை வேண்டுமானால் இந்த வழக்கை எடுத்து நடத்தச் சொல்ல வேண்டியதுதானே’ என்கிறாள். ஆயிஷா ராவுத்தர் அந்த இரவில் ஒரு முடிவு எடுக்கிறார்.

விடிந்ததும், அம்மாவை தன் ஆட்டோவில் கூட்டிப்போகிறான் சத்தார். அவர் பின்சீட்டில் உட்கார்ந்தபடி அமைதியாக அவனையே பார்த்தபடி இருக்கிறார். கையில் ஓர் எலுமிச்சைப்பழத்தை வைத்துக்கொண்டு அதனை முகர்ந்தபடியே தன் மகன் அறியாத ஒரு தருணத்தில் அவனைப் பார்த்தபடி ஒரு சிறு புன்னகை அவர் முகத்தில் தோன்றி மறைகிறது. அப்போது கேட்கிறார். ‘என்னப்பா அம்மாவை எங்கயாவது கொண்டு போய் விட்டுடலாம்னு பாக்கறியா?’ . ஆட்டோவை ஓர் ஓரமாக நிறுத்துகிறான் சத்தார். ‘எதுக்குமா அப்படி சொல்லுறீங்க?’ 

‘நானாவே இங்கருந்து பஸ்ல போயிக்கிறேன்பா. கேஸையும் நானே பாத்துக்கறேன். உனக்கு மனசுலருந்து தான் மனுஷங்களை நேசிக்க தெரியும். அதுதான் சரியும் கூட’

சத்தார், அம்மா போவதையே பார்த்தபடி இருக்கிறான். அவருடைய அண்ணனாலும் ஆயிஷாவுக்கு உதவிட முடியவில்லை. அவருக்கும் வயதாகிப்போய் அதிகாரம் மொத்தமும் தம் பிள்ளைகளிடம் இருக்கிற நிலை. ஆனால், தங்கைக்காக ஒரு சிறிய இருப்பிடத்தை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருகிறார். அன்று இரவு மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. சத்தார் அம்மாவைப் போய் அழைக்கிறான். தன்னுடன் வந்துவிடும்படி கேட்கிறான். அவர் மறுத்துவிடுகிறார். ஆயிஷா ராவுத்தர் யாருக்கும் தொல்லைத்தர தயாராக இல்லை. மகன் அவன் வாழ்வை, பிரச்சனைகளை இனி அவனே எதிர்கொள்ளட்டும். தன்மீது விழுந்திருக்கும் வழக்கின் சுமையையும் வாழ்வையும் தானே தனியாக எதிர்கொண்டுவிடலாம் என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார்.

விஷயம் கேள்விப்பட்டு ப்ரிட்டோ சத்தாரை கன்னாபின்னாவென்று திட்டுகிறான். ‘பெத்த அம்மாவை விட்டுட்டு வந்திருக்கியேடா. எங்கயாவது செத்து போடா மயிரே’ மேற்கொண்டு அவன் முகத்தைக்கூட பார்க்கவில்லை அவன். அன்றிரவே ப்ரிட்டோ, ஷார்ஜா கிளம்பி போய்விடுகிறான். செய்வதறியாது இடதுகை நடுக்கத்தோடு தன்னைவிட்டுப் பிரிந்துபோகும் நண்பனை பார்த்துக்கொண்டு நிராதரவாக நிற்கிறான் சத்தார். இந்த நிகழ்வுகளால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்ட சத்தார், தம்மை முற்றிலும் கையாலாகதவனாக உணர்ந்த அழுத்தத்தில் அந்த இரவுக்குப் பிறகு வீடு திரும்பவில்லை. அவன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை. நஸி, போலீஸில் கணவன் வீடு திரும்பவில்லை என்கிற புகாரைக் கொடுத்துவிட்டு தன் தகப்பனோடு பரிதவித்து நிற்கிறாள்.

எழுபது வயதாகும் அம்மாவின் பிள்ளையான சத்தாருக்கு எப்படியும் முப்பத்தைந்து வயதாவது இருக்கும். அந்த முதிர்ச்சி அவன் முகத்தில் இருக்கிறது. அப்படியென்றால் ஆயிஷா ராவுத்தருக்கு எப்போது மணவாழ்க்கைத் தொடங்கி இருக்கும்? மகனைப் பெற்று வளர்க்கும்போதே பக்குவப்பட்ட மனுஷியாக இருந்திருக்கும் அவரின் பார்வையில் விளையாடும் சிறுவர்கள், மகன், அவனுடைய நண்பர்கள், மருமகள், தன்னுடைய அண்ணன் என்று எல்லோரும் என்னவாக இருப்பார்கள்? தலைமுறை இடைவெளி என்பது அவருக்கு வேறாக இருந்திருக்கலாம். இன்னொரு நபருக்கு இரண்டாம்தாரமாகத்தான் தன் மணவாழ்க்கையை ஆயிஷா ராவுத்தர் தொடங்கி இருக்கிறார் என்கிற இடம் கவனிக்கவேண்டிய உளவியலுக்கானது. எது வேண்டும், வேண்டாம் என்கிற முக்கியமான முடிவுகளை எப்போது எடுக்கிறோம், ஏன் எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தானே சாமான்ய மனிதனின் மிச்ச வாழ்க்கை.. அந்த ஆட்டம், இந்தக் கதையில் ஆள் ஆளுக்கு எப்படியெல்லாம் திரிந்துபோகிறது. அதன் வழியே என்னவெல்லாம் அனுபவமாகிறது என்பதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கோணத்திலிருந்தும் நம்மால் யோசித்துக்கொள்ள முடியும்.

ஜூனியர் வக்கீலான கோகுலன் போதிய அனுபவம் இல்லாதவர். ஆனாலும், பெயில் வாங்கித் தருவதாக உறுதி அளித்து ஆயிஷா ராவுத்தரின் வழக்கையையே தன்னுடைய பிராக்டீஸாக மாற்றிக்கொள்கிறார். அதற்கான ஃபீஸோடு சேர்த்து அவ்வப்போது வெவ்வேறு செலவு காரணங்கள் சொல்லி கூடுதல் பணத்தையும் தேற்றிக்கொள்கிறார். அவர் பிழைப்பு அவருக்கு.

ஷார்ஜாவிலிருந்து திரும்பி வந்துவிட்ட ப்ரிட்டோ, ஆயிஷா ராவுத்தரை வந்து பார்க்கிறான். கோர்ட்டுக்கு போகவர எப்போது வேண்டுமானாலும் துணைக்கு வருவதாகச் சொல்லுகிறான். வக்கீலை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம் என்கிறான். ஆனால், ஆயிஷா ராவுத்தர், கோகுலனே போதும் நன்றாகத்தான் உதவுகிறார். கோர்ட்டுக்கு போய்வருவது பழகிவிட்டது என்கிறார். அவனுடைய குழந்தைக்கு பணியாரம் கொடுத்துவிடுகிறார். விடைபெறும்போது நின்று திரும்பி ப்ரிட்டோ சத்தாரைக் குறித்து கேட்கிறான்.

“அவன் ஏன்மா திரும்பி வரவே இல்ல?”

அதற்கு அந்த அம்மா சொல்லுகிறார், “அவன் இஷ்டமாய் போன இடம் ரொம்ப புடிச்சிருச்சு போல”

ப்ரிட்டோவின் குற்ற உணர்ச்சிதான் அவனை வேதனையோடு அதைக் கேட்க வைத்திருக்கிறது. அந்த அம்மாவின் பதில் இன்னும் தைத்துவிடுகிறது. தக்க சமயத்தில் தன்னால் நண்பனுக்கு உதவமுடியாத சூழ்நிலையில் கடுமையாகத் திட்டிவிட்டதால் சொன்னபடியே தப்பான முடிவை அவன் எடுத்திருப்பானோ என்கிற உறுத்தல் அது. அவனுக்கு மட்டுமே தெரிந்த உறுத்தல்!

ஆயிஷா ராவுத்தர், தனக்குக் கீழே வேலைக்கு சில பெண்களை அமர்த்திக்கொண்டு பணியாரங்கள் சுட்டு அவற்றைப் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுத்து ஒரு வருமானத்தை ஈட்டிக்கொண்டபடியே அனைத்தையும் சமாளித்து வருகிறார். எல்லாவற்றையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைக்கிறார். தன்னுடைய வழக்கை எதிர்கொள்வதற்கு எல்லாவற்றையும் ஓர் ஒழுங்கிற்குள் அமைத்துக்கொள்கிறார். உலகைப் புதிதாக கவனிக்கிறார். எல்லோரிடமும் இணக்கமாக பேசுகிறார், பழகுகிறார். இந்த புதிய வாழ்வை பழக்கிக்கொள்கிறார். புதிய மனுஷியாகவும் தன்னம்பிக்கையோடும் தன்னை உணர்கிறார்.

இதெல்லாம், அவருடைய வீட்டுக்குள் அடைக்கலம் புகும் ஒரு குட்டிப் பூனையிலிருந்தே தொடங்குகிறது. அது ஒரு துணை. தன்னைத் தாண்டி இன்னோர் உயிருக்காகவும் வாழ்வின் நோக்கை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு ஒரு காரணம். அந்த நோக்கமே ஆயிஷா ராவுத்தரின் மனமாக அந்தப் பூனைக்குட்டியோடு சேர்ந்து, அதுவும் வளருகிறது. தன்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்கள் மீதும் அந்த அன்பு கொடி போல படர்கிறது. நஸி, தன் தகப்பனோடு வந்து ஆயிஷா ராவுத்தரைப் பார்க்கிறாள். ‘எனக்கு அவனைத் தெரியும். என்னைவிட உனக்கு நல்லாத் தெரியும். எப்படியும் திரும்பி வந்துடுவான்மா. தைரியமா இரு’ நஸியின் முகத்தில் சோகம் அகலவில்லை. ஆனாலும், அந்த வார்த்தைகள் சிறிய நம்பிக்கையைத் தருகின்றன. 

வாய்தாவிற்கு அடுத்து வாய்தாவாக வருடங்கள் ஓடுகின்றன. நீதிபதிகள் மாறுகிறார்கள். தப்பும்தவறுமாக ஆஜாராகும் கோபாலனுக்கும் தொழில் பிடிபட்டுப் போய் அவருக்கும் கீழே ஒரு ஜூனியர் கூட வந்துவிடுகிறார். அதேவேளை, கோபாலன் ஆயிஷா ராவுத்தரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார்.

நீதிமன்றங்களின் வழக்காடுமுறைகளும் அவற்றின் ஒழுங்குகளில் இருக்கின்ற சம்பிரதாய முரண்பாடுகளும் கறார்தனங்களும் மெத்தனங்களும் என அனைத்துமே சிறு சிறு காட்சிகளில் வெவ்வேறு வழக்குகளின் வழியாக கையாளப்பட்டிருக்கிறது. வாதி, பிரதிவாதி, சாட்சிகள், குற்றவாளிகள், போலீஸ்காரர்கள், குமாஸ்தாக்கள், நீதிபதிகள், வேடிக்கை பார்ப்பவர்கள் எனக் கலந்துகட்டிய இடமாக நீதிமன்ற வளாகங்கள் இருக்கின்றன. இதனூடே மனிதன், மனுஷத்தனம் இவை யாவும் அரசியலாகின்ற அந்தப் புள்ளியை கண்டுணர்ந்துகொள்ள ஒரு வாழ்வனுபவம் தேவையாகிறது. கேள்விப்படுவது என்பது வேறு, அனுபவப்படுவது என்பது வேறு. ஆனால் இரண்டுக்கும் நடுவே பாலமாக இருப்பது தகவலறிவு மட்டுமே. அதனைக் கொஞ்சம் உற்றுக் கவனிக்க முடிந்தாலும் கூட உணர்வுகளோடு நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவோ உறவுகளின் நீட்சியாக எஞ்சுவதை அர்த்தப்படுத்திக்கொள்ளவோ முடியலாம்.

இப்படியாகத்தான் நாம் ஒரே விஷயத்தின் வெவ்வேறு வடிவங்களை நமக்குப் பிடித்த சூழலுக்குத் தகுந்தபடி நுகர்பவர்களாக பழக்கப்பட்டிருக்கிறோம். கண்ணாடியில் முகம் தெரிவது போலத்தான் சில சினிமாக்களில் நம் சாயலையும் கண்டுவிடுகிறோம். அதனை சமயங்களில் மனசாட்சியாக வரிந்துகொள்ளும்போது கண்கலங்கி மௌனம் ஆகிறோம். சாமானியனுக்கான தத்துவம் மிகவும் எளிமையான ஒன்று. அவனுக்கு அவை ஒரு சில பழமொழிகளிலேயே கிடைத்துவிடும். மெத்தப் படித்தவனுக்குத்தான் மண்டைக் குழப்பங்கள். அதில் ஒன்று சட்ட நுணுக்கம்.

ஆயிஷா ராவுத்தருக்கு எதிரான சாட்சிகள் தம் சாட்சியங்களை மாற்றிச் சொன்னாலே போதும் அவர் தண்டைனையின்றி விடுவிக்கப்பட்டுவிடுவார். ஒருவேளை அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் அது உண்மை என்று நிரூபணம் ஆனாலோ அவருக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது சட்ட நிலைமை.

ஏற்கனவே பத்து வருடங்களுக்கும் மேலாக வழக்கு வாய்தாவிலேயே போயிருக்கிறது. முறையாக விசாரணை நடந்து நிரூபணமானால் தீர்ப்பு மோசமானதாக இருக்கும். இது நீதிபதிக்கும் தெரியும். அரசு வழக்கறிஞருக்கும் தெரியும். ஆயிஷா ராவுத்தருக்காக வாதாடுகிற கோபாலனுக்கும் தெரியும். கதையின் போக்கில் நமக்கும் தெரிந்துவிடுகிறது. காரணம் ஆயிஷா ராவுத்தரின் பேரில் மொத்தம் ஐந்து செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், காயம்பட்ட அபிலாஷ் சசிதரன் முதல் சாட்சியாக வந்து தமது சாட்சியத்தை மாற்றிச் சொல்ல வேண்டும். “பெரியவர்கள் போட்ட வழக்கு. அவர்கள் சொன்னதைச் செய்தேன். வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை” என்றால் போதும். ஆயிஷா ராவுத்தர் தண்டனையிலிருந்தும் தப்பித்துவிடலாம். வழக்கிலிருந்தும் விடுபட்டுவிடலாம். அதற்காகத்தான் அபிலாஷ் இப்போது பெங்களூரிலிருந்து கிளம்பி வந்திருக்கிறான்.

ப்ரிட்டோ அபிலாஷிடம் சொல்கிறான், “நாங்க யாருமே அவங்க முகத்துல சிரிப்பைப் பார்த்ததே இல்லைடா. அதுல எந்தவொரு உணர்ச்சியுமே வெளிப்பட்டதில்லடா… அவங்க வாழ்க்கையில எல்லோருமே அவங்களைத் தோக்கடிச்சிட்டாங்க. நீ எப்படியாவது இந்த கேஸை தோத்து குடுத்துடுடா. ஒருவாட்டியாவது அவங்க இந்த வாழ்க்கைய ஜெயிச்சதா இருக்கணும்”

அவனைப் போலவே மற்ற சாட்சிகளையும் வாக்குமூலத்தை மாற்றிச் சொல்ல வைக்க ப்ரிட்டோவும் அபிலாஷூம் ஒவ்வொருவரையாக தேடித் தேடி அலைகிறார்கள். வயதான மூதாட்டியாக உருவத்தோற்றம் மாறிப்போய்விட்ட ஆயிஷா ராவுத்தருக்காக அலைகிறார்கள். எதற்கு? வயதான பெண்மணி என்பதற்காக மட்டுமா? இல்லை. அதன் அர்த்தம் மாறி இருக்கிறது அல்லவா?

இதற்கெல்லாம் மூலக்காரணமான ராதாகிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறான் ப்ரிட்டோ. அவர் பழைய இடத்திலிருந்து எங்கோ இடம்பெயர்ந்து போய்விட்டிருந்திருக்கிறார். அவர்தான் அபிலாஷின் அப்பாவை வழக்குத் தொடுக்கத் தூண்டிவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஆயிஷா ராவுத்தரைப் பழிவாங்கும் நோக்கில் ஐந்து செக்ஷன்களில் கோர்த்துவிட்டதும் அவரே. அவர் வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லுவாரா? சொல்ல வைத்துவிட முடியுமா? என்கிற சந்தேகம் தயக்கம் எல்லாம் இருக்கிறது. அவருடைய மகள் அவர்களை வரவேற்று நிலைமையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு உள் அறைக்கு அழைத்துப் போகிறார். அங்கே, ராதாகிருஷ்ணன் படுத்த படுக்கையாக நோயாளியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். “நான்கு வருடங்களகிறது. அவருக்குப் பழசெல்லாம் மறந்துவிட்டது. ‘வீட்டுப் பின்பக்கம் தேங்கா பொருக்கப் போனவரு அங்கேயே விழுந்துட்டாரு” அவருடைய மகளின் முகத்தில் சோகம் அப்பிக் கிடக்கிறது. பதில் சொல்ல ஒன்றுமில்லாமல் இரவில், பைக்கில் வந்துகொண்டிருக்கிறார்கள். திடீரென்று அபிலாஷ் கேட்கிறான்.

“மனுஷனுக்கு மதிப்பு இவ்ளோதான் இல்லண்ணா?”

ப்ரிட்டோவிடம் அப்போது பதில் இல்லை. மறுநாள் வழக்கு நாள். ப்ரிட்டோ, அபிலாஷை அவனுடைய வீட்டில் இறக்கிவிடும்போது அவன் நின்று திரும்பி ப்ரிட்டோவைப் பார்த்துக் கேட்கிறான். “நாளைக்கு நாம நிச்சயம் தோத்துருவோம்தானே அண்ணா?”

விடிகிறது.

சாட்சிகள் ஒவ்வொருத்தராக வாக்குமூலங்களை மாற்றிச் சொல்லி முடித்த பிறகு தீர்ப்பு சமயத்தில்… ஆயிஷா ராவுத்தர் நீதிபதியின் முன்னால் வந்து நின்று தம் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். “நான் அவனை அடிச்சது உண்மைதான். எனக்கு என்ன தண்டனை வேணா குடுங்க. ஆனா, நான் அவன்கிட்ட மன்னிப்பு கேக்கணும். அதுக்குமட்டும் அனுமதி கொடுங்க” என்கிறார். நீதிபதி, கோபாலன், ப்ரிட்டோ, அபிலாஷ், அரசாங்க வழக்கறிஞர் என அத்தனைப் பேரும் அவரை அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். தீர்ப்பு மறுநாள் ஒத்திவைக்கப்படுகிறது.

வழக்கு, இவர்கள் எல்லோரும் போட்ட திட்டத்தை மீறி தடம்புரண்டு அதன் ஒழுங்குக்குள் வந்து நிற்பது என்பது ஆயிஷா ராவுத்தருக்கு முற்றிலும் எதிரானது. பதிமூன்று ஆண்டுகள் கரைந்துபோன நிலையில் அவருடைய தள்ளாத வயதையும் மனத்திற்கொண்டு நீதிபதி தண்டனையைக் குறைத்து வழங்குகிறார்.

அதற்கான தண்டத்தை அபிலாஷ் கட்டுகிறான்.

காரிடாரில் முதன்முறையாக ஆயிஷா ராவுத்தரின் பக்கத்தில் வந்து உட்கார்கிறான் அபிலாஷ். தயக்கத்தோடும் மனக்கலக்கத்தோடும் அவரிடம் பரிவாகப் பேசுகிறான். நீதிமன்றத்திற்கும் மற்ற மனிதர்களுக்கும் பயந்து அபிலாஷை நெருங்கிப் பேச இத்தனை வருடங்களில் எந்தெந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தான் தள்ளி நின்று அவனை வேடிக்கைப் பார்த்ததாக ஒவ்வொன்றாக அவர் பொறுமையாக சொல்லச் சொல்ல… அது ஒரு பெருவாழ்வின் நெடுஞ்சாலை அளவிற்கு நீண்டு கிடைக்கிறது. அவரைப் பொறுத்தவரை, இப்போது நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது. அவனோடு நேரிடையாகப் பேசுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆயிஷா ராவுத்தர் என்கிற அந்த மனுஷி பதிமூன்று வருடங்களுக்கு முன்பு ஓர் உணர்ச்சிவேகத்தில், கோபத்தில் தான் அடித்துவிட்ட சின்னப் பையனிடம், இப்போது வளர்ந்து வாலிபனாக தன் மகனைப் போன்று கண் முன்னால் உட்கார்ந்திருக்கும் அபிலாஷிடம் அவனது கண்களை உற்றுநோக்கிப் பார்த்தபடியே சொல்லுகிறார்.

“என்னை மன்னிச்சிடுப்பா”

செய்வதறியாமல் அவருடைய கைகளைப் பற்றிக்கொள்கிறான். வீட்டுக்கு ஃபோன் செய்து அம்மாவிடம் நடந்ததை சொல்லிவிட்டுக் கேட்கிறான். “அவங்கள நம்ம வீட்டுல இருக்கட்டும்மா”. அவனுடைய அம்மா ஏதோ சொல்லித் திட்டுகிறாள். அதற்குள், கழிவறைக்குச் சென்ற ஆயிஷா ராவுத்தர் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்.

மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் ஆயிஷா ராவுத்தருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் அபிலாஷின் அம்மாவும் சகோதரியும். ஆயிஷா ராவுத்தரின் முகத்தில் சந்தோசம் படர்ந்திருக்கிறது. குடும்ப உறவுகள் ஒன்று திரண்டிருக்கும் சூழலாக அது இருக்கிறது. அபிலாஷ் சொல்லிக்கொண்டு வெளியே காரிடாரில் வந்து நிற்கிறான். பக்கத்தில் ப்ரிட்டோவும் இருக்கிறான். அன்றொரு நாள் அபிலாஷ் கேட்டபோது சொல்ல முடியாத பதிலை இப்போது ப்ரிட்டோ சொல்லுகிறான். அது இந்த வாழ்வின் அர்த்தத்திற்கு அத்தனைப் பொருத்தமாக இருக்கிறது. அந்த உரையாடலோடு படம் முடிந்துபோகிறது.

ஆனால், நமக்குள் படம் வளரத்தொடங்குகிறது. ஜாதி, மத பேதங்களை கழித்துக்கட்டினால் மிஞ்ச வேண்டியது மனிதநேயம் மட்டும்தான். ஆனால், அன்றாடங்களோடு மல்லுக்கட்டி பிழைப்பு நடத்துவதே பெரிய சாதனை என்றாகிவிடும்போது நாம் சக உயிர்களிடம் காட்டியிருக்க வேண்டிய அன்பு என்கிற உணர்வை மழுங்கடித்துவிடுகிறோம். அதனை மென்மையாகவே கேள்வி கேட்கிறது இத்திரைப்படம். மனம் எதையெல்லாம் மீட்டுருவாக்கம் செய்துகொள்ள விரும்புகிறதோ அவை எல்லாமும் மனதுக்குள் காட்சிகளாகத் திரள்கின்றன. உருவகமாக ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் மாண்டேஜ் காட்சித் துண்டுகள் ஒவ்வொன்றும் ஆழமானவை. படம் நெடுக ஓர் உற்ற தோழனைப் போல ஒளிப்பதிவும், இசையும் திரைக்கதையோடு இயைந்து பயணித்திருக்கிறது.

மனித உணர்வுகளின் மேன்மையைப் பிரதிபலிக்கவே எல்லா கலைகளும் முயற்சி செய்கின்றன. அவற்றுக்கான கச்சாப்பொருளாக பெரும்பான்மை வாழ்விலிருந்து அப்படியப்படியே எடுத்துக்கொள்ள எப்போதுமே ஒரு சாமானிய மனிதனின் இருப்பு அனுமதித்துவிடுகிறது. அது ஒரு பொதுச்சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியைப் போல அனாமத்தாகக் கிடக்கிறது. கவனிப்பாரற்றுக் கிழிகிறது. வெயில், மழை என எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு மக்கி மறைந்தும் போகிறது.

நீதிமன்ற அனுபவங்களின்படி இங்கே ஒரு பொதுக்கூற்று உண்டு. வாதியும் இறந்துவிடுவான். பிரதிவாதியும் இறந்துவிடுவான். வாய்தா மட்டும் உயிரோடு இருக்கும்.

அதனால் என்ன? பெருமூச்சு விடுவதையெல்லாம் தாண்டி வாழ்க்கையும் இருக்கத்தான் செய்யும்.

******

elangomib@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button