சிறுகதைகள்

சனியன் – செல்வசாமியன்

சிசு பிதுங்கி வெளியே வந்ததும், காற்று வெளியேறிய பலூனாகத் தளர்ந்து விழுந்தாள் சாந்தி. எண்ணெய் வற்றியிருந்த சிம்னியின் மங்கலில், அவிழ்த்துப்போட்ட சேலையாக அவள் கிடப்பது தெரிந்தது. சாந்திக்கும் சிசுவுக்குமிடையே தடிமனான மண்புழுபோல் தொங்கிக்கொண்டிருந்த தொப்புள்கொடியை மரியா துண்டித்தபோது, சாந்தியிடமிருந்து சிறு விசும்பல்கூட எழவில்லை. குழந்தைதான் வீறிட்டுக்கொண்டிருந்தது. மரியா, ஆற்று நீரை இரண்டு கைளாலும் அள்ளுவதைப்போல குழந்தையை அள்ளி சிம்னி விளக்கிடம் காட்டி, “என்ன குழந்தை?” என்று பார்த்தாள். “ஆம்பளக் கொயந்த..!” அனிச்சையாக வார்த்தைகள் விழ, குழந்தையை மயங்கிக் கிடந்தவளின் முகத்தருகே கொண்டுபோய், “சாந்தி, ஆம்பளக் கொயந்தடி.” என்று உயிர்ப்பில்லாமல் சொன்னாள்.

சாந்தி பிரக்ஞையின்றி இருக்க, அவள் தோளில் கை வைத்து, “சாந்தி, ஒனக்கு மவன் பொறந்திருக்கான்டி.. பாரு” என்று லேசாக உலுக்க, சாந்தி நினைவுக்கு வந்தவளாக மெதுவாக இமைத் திறந்தாள். முகத்துக்கு வெகுநெருக்கத்தில் குழந்தைத் தெரிய, உச்சி சூரியனைப் பார்ப்பதுபோல் கண்களைச் சிமிட்டினாள் சாந்தி. “இன்னாடி அப்டிப் பாக்குற.. ஒம்மொவந்தான்டி.. நல்லா முழிச்சிப் பாரு” என்ற மரியா, குழந்தையை அவள் முகத்தில் தொடுவதுபோல் கொண்டுசெல்ல, விசுக்கென்று குழந்தையைத் தள்ளிவிட்ட சாந்தி, “செனியன்.. செனியன்.. அந்தச் செனியன எதுக்குடி எங்கிட்ட காட்ற.. அந்தச் செனியனயலாம் நாம் பாக்கமாட்டேன்.. அந்தப் பொட்டபாடு கௌரியாண்ட கொண்டுபோயி காட்றி தேவ்டியா” என்று அழத் தொடங்கினாள். அவளோடு மரியாவும் சேர்ந்துகொள்ள, மூன்று பேரின் அழுகைச் சத்தத்தையும் அந்தப் பத்துக்குப் பத்தடி வீட்டுக்குள்ளேயே முடக்கியது. வெளியே நெருக்கமாய் கொட்டிக்கொண்டிருந்த மழை.

ஒரு வகையில், கௌரியை சாந்தியின் முதலாளி என்றுகூட சொல்லலாம். பேறுகால ஆஸ்பத்திரி நுழைவாயில் அருகே, சுற்றுச்சுவர் ஓரமாக நிற்கும் தள்ளுவண்டிக் கடை, கௌரியின் பெயரில் இருந்தது. அதை சாந்தியின் பொறுப்பில்தான் விட்டிருந்தான் கௌரி. டீயுடன் கூடிய பீடி சிகரெட் கடை.. சாலையின் புழுதியும் வாகனங்களின் கரியும், தள்ளுவண்டியின் மீது மட்டுமல்லாமல், சாந்தியின் மீதும் படிந்திருக்கும். அதனால்தானோ என்னவோ நுழைவாயில் ஓரமாக இருந்தும், பெரிதாக வியாபாரம் இருக்காது. கௌரிக்கு இன்னொன்றும் உடமையாக இருந்தது. அது ஆஸ்பத்திரி கட்டடத்திலிருந்து சுற்றுச்சுவர் வரைக்கும் விரிந்து கிடக்கும் சிமென்ட் தளம். அதை சாந்தியும் பாக்கியமும் மேற்பார்வை பார்த்துக்கொண்டார்கள். ஆஸ்பத்திரி வாசலின் இடதுபுறத்தை சாந்திக்கும், வலதுபுறத்தை பாக்கியத்துக்கும் பிரித்துக் கொடுத்திருந்தான் கௌரி. இருந்தும் அவர்கள் இருவருக்கும் எல்லைப் பிரச்னை தீர்க்க முடியாததாக இருந்தது. அதை முன்னிட்டு அவர்கள் வீடிருக்கும் தெருவில் தினமும் அவர்களிடையே வாய்ச்சண்டை நாராசமாக நடக்கும். பகல் பொழுதுகளில் சிமென்ட் தளத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இருள் இறங்கத் தொடங்கிவிட்டால் சிமென்ட் தளம் அவர்களுடையது. அவர்களின் அனுமதியில்லாமல் அங்கே யாரும் உட்காரவோ, துண்டு விரிக்கவோ முடியாது. தளம் முழுவதும் கோரைப்பாய்களை இடைவெளி இல்லாமல் விரித்துப் போட்டிருப்பார்கள். இரவானதும் வார்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் நேராக இவர்களிடம்தான் வருவார்கள். ஒரு பாய்க்கு ஒரு நபர் என்று கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள். துணையுடன் ஜோடியாக படுத்துக்கொள்ள விரும்பினால் சுற்றுச்சுவர் ஓரமாகவும், இடதுபக்க மூலையில் நிற்கும் புளியமரத்தின் அடியிலும் இடம்கொடுப்பார்கள். அதற்கென்று தனிக் கட்டணம். பாய்கள் நிரம்பியதும் பாக்கியம் வீட்டுக்குக் கிளம்பிவிடுவாள். சாந்தி புளியமரத்துக்கும் சுற்றுச்சுவருக்கும் இடைப்பட்ட மறைவான இடத்தில் படுத்துக்கொள்வாள். அவளுடன் கௌரி அனுப்பும் வாடிக்கையாளர்கள் படுத்துகொள்வார்கள். சில நேரம் கௌரியே படுத்துகொள்வான்.

அந்த நாளுக்கான பாக்கியத்துடனான சண்டையை முடித்துக்கொண்ட சாந்தி, வீட்டினுள்ளே சோர்வாகப் படுத்திருந்தாள். அவளைத் தேடிக்கொண்டு வந்த கௌரி வீட்டுக்குள் நுழைந்து, “பார்ட்டி புட்சிக்கினு வந்துருக்கேன் சாந்தி” என்றான். புரிந்துகொண்டவளாக எழுந்து அமர்ந்தவள் சலிப்பாக, “இப்பலாம் கண்ட கண்ட இடத்திலயும் கேமரா வெச்சிருக்கானுங்க கௌரி. கக்கூஸ் போறதுக்கே பய்மாருக்கு தெரிமா. நீ கொயந்தய வழிச்சினு வரச் சொல்ற. அதெல்லாம் ஒம்ப ரிஸ்க்கு கௌரி” என்றாள்.

“ரிஸ்க்குதான். ரிஸ்க்கு எடுத்தாத்தான் துட்டு சேக்க முடியும்.”

“துட்டு சேத்து..? நான் இன்னா ரெயிலா வாங்கப்போறேன். வேறாளப் பாத்துக்க கௌரி.”

“ரொம்ப பிகு பண்ணாத சாந்தி. மாமூலா தர்றதவிட அஞ்சாயிரம் சேத்து தர்றேன். இப்ப இத்த அட்வான்ஸ் துட்டா வச்சிக” என்று, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கத்தையாக எடுத்த பணத்தை அவள் மடியில் போட்டு, “ஆம்பளக் கொயந்ததான் வேணும். கொயந்த ரெட்டா இருந்தா தனிக்காசு.” என்றான். அவள் மடியில் கிடந்த பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கினாள். அப்போது, கௌரியின் செல்போனுக்கு அழைப்பு வர, போனை காதில் வைத்து, “யாரு?” என்றான். எதிர்முனையில் ஏதோ சொல்ல, சாந்தியைப் பார்த்து, “மாமூல்காரனாம். வர்ட்டுமான்னு கேக்குறான்” என்றான். அவள் எண்ணிமுடித்த பணத்தை ரவிக்கைக்குள் செருகியபடி, “இங்க குடு” என்று போனை வாங்கி,
“யாரு..?” என்றாள்.
“…..………”
“ராமலிங்கமா..!”
“………..…”
“எத்ன பேரு..?
“………..…”
“மூணுப் பேரா? செரி செரி வா. வரச்சொல்ல மறக்காம சரக்கு பாட்டில் புடிச்சிக்கினு வா” என்று போனை கௌரியிடம் தந்தாள். அவன், “சாந்தி, கை நீட்டி துட்டு வாங்கிருக்க. சொன்னமாரி கொயந்தய செட்லுமென்ட் பண்ணனும். பேஜார் ஆச்சு அசிங்கமாயிடும் பாத்துக்க.” என்று சொல்லிவிட்டுப் போனான்.

மறுநாள் அதிகாலையிலேயே கறுப்பு நிற கேரிப்பேக்கை கொண்டுவந்து தூங்கிக்கொண்டிருந்த கௌரியின் முன்பு வைத்தாள் சாந்தி. கண்களைக் கசக்கிக்கொண்டு கேரி பேக்கைத் அவிழ்த்துப் பார்த்த கௌரி, முகமெல்லாம் புன்னகையுடன் போனை எடுத்து டயல் செய்தான். “மொதலாளி கொயந்த கைக்கு வந்துருச்சு. பார்ட்டியாண்ட சொல்லிரு. அப்றம் மொதலாளி, கொயந்த செம்ம ரெட்டு. டவ்ட்டு வேணாம் மொதலாளி, பார்ட்டிய எஸ்ட்ரா துட்டு எடுத்தார சொல்லிரு” என்றான். அன்று இரவு, சாந்திக்கும் மரியாவுக்கும் வெளிநாட்டு பிராந்தி ஊத்திக் கொடுத்தான் கௌரி. மூன்று பேரும் வயிறு நிரம்ப குடித்தார்கள். கௌரிக்கு போதை ஊறிய நிலையில், எப்பொதும்போல புலம்ப ஆரம்பித்தான்.

“த்தா ஷாந்தி.. நான் கும்பிட்ற சாமி என்னை பலி குட்துரும் ஷாந்தி.. பெத்த தாய்ட்டருந்து பிள்ளய வழிச்சிக்கினு வர்ற பாவம் என்னை சும்மாவிட்ரும்னு சொல்றியா. நான்லாம் புழுப்புழுத்துதான் சாவேன் ஷாந்தி.”

“ஏய் ச்சி, வாயக் கழுவு அந்தாண்ட.. கொயந்தய வழிச்சினு வந்தது நானு, ஒனக்கு இன்னா? எனக்குத் தெரியாதா பாவம் கீவம்லா. இவ்ளோ பினாத்துறியே, மொதல்ல அந்த கொயந்தய பெத்தவள நீ பாத்துருக்கியா? நல்லா திருக்கை மாரி செரியா இருப்பா. இன்னும் பத்து புள்ளகூட பெக்கலாம். ஆனா, அவ புருசந்தான் பாவம். நம்ம மரியா மாரி இப்டி இருப்பான்” என்று இடதுகை சுண்டுவிரலைக் காட்டி சிரித்துக்கொண்டே கிளாஸை எடுத்தாள்.

“சாந்தி, ஜாஸ்தியா குடிச்சிக்கினு இருக்க போதும். அப்பால வாந்தி பண்ணி என்னை காண்டு ஏத்தாமா ஒய்ங்கா துன்னு” என்று பிரியாணி பொட்டலத்தைப் அவள் எதிரில் நகர்த்திவைத்தாள் மரியா. சாந்தி நிலைகொள்ளாத போதையில், பொட்டலத்திலிருந்து ஒரு கை அள்ளி வாய்க்குக் கொண்டுபோய் அப்படியே சரிந்து விழுந்தாள்.

தூங்கிக்கொண்டிருந்த சாந்தி திடும்மென எழுந்து உட்கார்ந்தாள். அடிவயிற்றிலிருந்து ஒரு நீரலை திரண்டு மேலெழுந்து வருவதுபோல் இருந்தது. வெடுக்கென்று எழுந்து குடுகுடுவென்று வாசற்படிக்கு வெளியே ஓடி கபக்கென்று வாந்தி எடுத்தாள். குடல் அறுந்து வெளியே வருவதுபோல் குமட்டிக் குமட்டிக்கொண்டு வந்தது. வெளியே போய் டிபன் வாங்கிக்கொண்டு திரும்பிய மரியா, “சொல்லச் சொல்ல ஊத்திக்கினே இருந்தா வாந்தி வராம, பின்ன இன்னா பண்ணும். எல்லாம் அந்த மாமா பையன் கெவ்ரி பண்றது. ஊத்திக் குட்துக்கின்னே இருக்கான் பாடு” என்று வீட்டின் உள்ளே சென்று, செம்பில் தண்ணீர் எடுத்துவந்து நீட்டி, “இன்னாடி பண்ணுது?” என்று கேட்க, “நைட்டு துன்ன புரோட்டா செட்டாகல” என்று தண்ணீரில் வாய் கொப்பளித்தாள். “புரோட்டா துன்னுது செட்டாகலயா. ஊத்திக்கினது செட்டாகலயா?” என்று கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள் மரியா. தார் சாலையில் வெறுங்காலோடு நடப்பதுபோல் இருந்தது. “இன்னாடி இப்டி கொதிக்குது. வாடி டாக்டராண்ட போகலாம்” என்று கையைப் பிடிக்க, “ஏ… அதெல்லாம் ஒண்ணுல்ல விடு. ரெஸ்ட்டு எடுத்தா சரியாபூடும்.” என்று கையை உதறினாள். “ஏ… இன்னா நீ. நெருப்பா அடிக்குதுன்றேன். வர்றியா இன்னான்ற” என்று மீண்டும் கையைப் பிடித்து இழுக்க, சாந்தி அவளை மிகவும் பலவீனமாகப் பார்த்தாள்.

வாசலில் கௌரியின் செருப்பு கிடந்தது. மரியாவும் சாந்தியும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைய, எதிரில் கௌரி கட்டிலில் அமர்ந்து மாவாவை மென்றுகொண்டிருந்தான். உள்ளே வந்த இருவரையும் பார்த்து, “கடையத் தெறக்காம இவ்ள நேரம் எங்க போயிட்டு வர்றீங்க” என்று கத்தினான். “டாக்டராண்ட போய்ட்டு வர்றோம்” என்று மரியா சொல்ல, “சீக்கோழி, இன்னாதானம் ஒனக்கு ஒடம்புக்கு. எப்ப பாரு சும்மா லொக்கு லொக்குன்னு” என்று எரிச்சலாக, மரியா “வயித்துல கொயந்த இருக்காம்” என்றாள்.

“இன்னாது..?”

“வயித்துல கொயந்த வளந்துருக்காம். டாக்டரு கலைக்க முடியாதுன்னுட்டாரு.”

“த்தா… இன்னாடி சொல்ற” என்று சாந்தியைப் பார்த்தான். அவள் அவனிடமிருந்து பார்வையை நகர்த்த, கோபமும் வெறுப்புமாய், “த்தா, தொழில்காரியாடி நீ. வய்த்துல கொயந்தய வாங்கினு நிக்கிற. இத்துனுண்டெல்லாம் இன்னா வெவரமா இருக்குதுங்கோ. அசிங்கமா இல்ல ஒனக்கு. இத்தன காலம் தொழில் பண்ற. சேப்டியா இருக்கணும்னு தெரியாது..?”

“எனக்கென்னாத் தெரியும். ஒருத்தனா வர்றான். கும்பலா வர்றானுங்கோ. ஊத்திக் குட்துறானுங்கோ. எனக்கு இன்னா நடக்குதுனே தெர்ல. மட்டயாயிடுறேன். நான் இன்னா பண்றது?”

“இன்னா பண்றதா? வய்த்துல கொயந்தய வச்சிக்கினு எப்டி பிசினஸ் பண்ணுவ? துன்றதுக்கு பீயத் துன்னுவியா?”

“அதான் வய்த்துல கொயந்த இருக்குல்ல. மொதலாளிட்ட அட்வான்ஸ் துட்டு வாங்கிக் குடு.”

கௌரி அவளை முறைத்துப் பார்த்தான்.

**********

“என்னா கௌரி, எப்பவோ பொறக்கப்போற கொழந்தைக்கு இப்ப துட்டு கேட்டுக்கிட்டு இருக்க” முதலாளி, இருக்கைக்கு நேராக தலைக்குமேல் இருக்கும் சாமி போட்டோவை கும்பிட்டு, விபூதியை அள்ளி நெற்றியில் பட்டைப் போட்டுக்கொண்டு இருக்கையில் அமர்ந்தார்.

“வய்த்துல கொயந்தய வாங்கினு நிக்கிறா மொதலாளி. அவளுக்கு வேற தொழில் கிழில் தெரியாது அதான்” என்றான் கௌரி.

“ஏ என்னாப்பா நீ இப்படி சொல்லிட்ட.. அவ புதுசு புதுசா தொழில் பண்றா. நீயோ நானோ நெனைச்சாலும் பண்ண முடியுமா? வருசத்துக்கு ஒண்ணுன்னாலும் இன்னும் பத்து வருசத்துல பணக்காரியா ஆயிடுவா தெரியுமா.”

“அட நீங்க வேற மொதலாளி. நானே, இந்தச் செனியன் வந்து என்னை சாகடிச்சிட்டு கெடக்குனு இருக்கேன்” என்று விரக்தியாக வயிற்றில் கை வைத்தாள் சாந்தி.

“என்னா நீ இப்படிச் சலிச்சிக்கிற? இன்னும் கொஞ்ச வருசத்துக்குப் பின்னாடி இதான் செம பிசினஸ் தெரியுமா? பணக்காரிய எவளும் கொழந்தயெல்லாம் பெத்துக்க மாட்டாளுக. எல்லாம் துட்டு குடுத்துதான் வாங்கப்போறாளுக.”

“நெசமாவா மொதலாளி சொல்றிய?”- சாந்தி

“பின்ன, இப்பக்கூட உன்ன நம்பித்தான் துட்டு தர்றேன். சொன்ன தேதிக்கு ஷார்ப்பா கொழந்தய பெத்து போட்றணும் என்ன” என்று மேஜை அடியைத் திறந்து பணக்கட்டை எடுத்தார்.

முதலாளியின் அலுவலத்திலிருந்து வெளியே வரும்போது, பணத்தை எண்ணிக்கொண்டு வந்த கௌரி, அதில் பாதியைத் தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, “மொதலாளி, இன்னா சொன்னாருன்னு கேட்டல்ல. மோசமான ஆளு. அவரு சொன்னா மாரி தொழில் கிழில் பண்ணாம ஒடம்ப பாத்துக்கினு சேப்டியா இரு. அவ்ளோதான் சொல்வேன்” என்று மீதிப் பணத்தை சாந்தியின் கையில் வைத்தான்.

சாந்தி வெளியே எங்கும் போவதில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்தாள். தள்ளுவண்டிக் கடையையும், பாய் வசூலையும் பாக்கியமே பார்த்துக்கொள்வதாக மரியா சொன்னாள். டீக்கும் டிபனுக்கும் மரியாதான் வெளியே போய்வந்தாள். சாந்தியின் வயிறு தொடுவானக் கடலில் உதித்தெழும் சூரியனைப்போல பெரியதாகியது. சாந்தியைத் தேடி வருவதை கௌரி நிறுத்திக்கொண்டான். சாந்திதான், கௌரி புளியமரத்துக்கடியில் இருப்பதைத் தெரிந்துகொண்டு போய்ப்பார்த்தாள். “மொதலாளி கையில கொயந்தய கொடுக்காம துட்டு கேக்க முடியாது சாந்தி. என் கையில இருந்ததையும் கொடுத்துட்டேன். சும்மா சும்மா தேடிக்கினு வராத. கொயந்த பொறந்ததும் சொல்லியனுப்பு. இப்ப கெளம்பு” என்று அழுத்தமாகச் சொல்லித் திருப்பிவிட்டான். கௌரிக்குத் தெரியாமல், மரியாவைக் கூட்டிக்கிட்டு போய் மொதலாளியைப் பார்த்தாள் சாந்தி. அவர், “ஓம்பேர்ல கௌரி ரெண்டு வாட்டி பணம் வாங்கிருக்கான் சாந்தி” என்று நோட்டைப் பார்த்து சொன்னார். கௌரி தன்னை ஏமாற்றிவிட்டதை உணர்ந்துகொண்ட சாந்தி, அதன்பின்பு அவனைத் தேடிப் போவதை நிறுத்திக்கொண்டாள்.

சாந்தியின் வயிறு நன்றாக மேடிட்டு இருந்தது. அதைப் பார்த்த மரியா, “சாந்தி, ஒனக்கு ரெட்டக் கொயந்ததான் பொறக்கப் போவுது. துட்டுக்கொசரம் ரெண்டையும் மொதலாளியாண்ட கொடுத்துறாம, ஒண்ண என்னாண்ட கொடுத்துரு. நான் வளத்துக்குறேன்” என்றாள். சாந்திக்கு அவள் சொன்ன வார்த்தைகள் காதில் ஏறவில்லை. அந்த அளவுக்கு உடம்பில் சக்தியில்லாமல் இருந்தாள். எப்பொழுதும் கட்டிலிலேயே கிடையென கிடந்தாள். பட்டர் பிஸ்கட்டும் டீயுமாக நாட்கள் கழிந்தது.

மரியாதான் அவனை அழைத்துவந்தாள். அடர்ந்த தாடியும் மீசையுமாக இருந்தான். கையில் கேமிரா வைத்திருந்தான். சாந்தி, “என்ன..?” என்பதுபோல் மரியாவைப் பார்த்தாள். அவள், “ஒன்ன படம் எடுக்கணும்னு சொன்னாரு. துட்டு தருவியான்னு கேட்டேன். தர்றன்னாரு அதான் கூட்டியாந்தேன்” என்றாள். சாந்தி அவனைப் பார்க்க, அவன் “நான் அகிலேஷ் பிரசன்னா. பிராஸ்ட்டியூசன் பத்தி, அதான் பாலியல் தொழில் செய்றவங்கள பத்தி ஒரு டாக்குமென்ட்ரி பண்றேன். உங்கள பத்தி சொன்னாங்க. இப்படி ஒருத்தங்க பிரக்னென்சியா இருக்குறது இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்துச்சு. நீங்க கொஞ்சம் சப்போர்ட் பண்ணீங்கன்னா, டாக்குமென்ட்ரில நல்ல இம்பாக்ட் இருக்கும்” என்றான்.

சாந்திக்கு அவன் சொன்னது புரியவில்லை. இருந்தாலும், “நான் இன்னா பண்ணனும்?” என்று கேட்டாள். அவன் கேமிராவை ஸ்டாண்டில் போட்டு, விளக்கை ஒளிரவிட்டு, “நான் கேக்குற கொஸ்ட்டீன்ஸ்க்கு நீங்க ஆன்சர் பண்ணா போதும்” என்று ரெக்கார்டிங்கை ஆரம்பித்தான். அவன் அவளைப் பற்றிய கேள்விகளை அடுக்க, அதற்கு சாந்தி தனக்குத் தெரிந்தவற்றை பதில்களாகச் சொன்னாள். மகப்பேறு மருத்துவமனை எதிரில் டீக்கடை நடத்துவதில் ஆரம்பித்து, பாய்கள் விரித்து வசூல் செய்வது வரை அனைத்தையும் சொன்னாள். வயிற்றில் கரு உண்டான பின்பு தொழில் செய்ய இயலவில்லை என்றும், வருமானம் நின்றுபோனதால் சாப்பாட்டுக்கே சிரமப்படுவதாகவும் சொன்னாள். அதைக் கேட்டதும், அவன் தலை உயர்த்தி சிரித்துவிட்டு, “பிரக்னென்ஸியா இருந்தா செக்ஸ் வச்சிக்கக்கூடாதுன்னு யார் சொன்னா? நாளைக்கு டெலிவரின்னாகூட இன்னைக்கு உடலுறவு பண்ணலாம். அது ரொம்ப நல்லதும்கூட.” என்றான்.

சாந்தி நம்பமுடியாமல் அவனைப் பார்த்தாள். அவன், யூடியூப்பில் இருக்கும் வீடியோக்களை பிளே பண்ணிக் காட்டி, “டாக்டர்ஸ்ஸே சொல்றாங்க.. பின்னே ஏன் பயப்படுறீங்க? நார்மல் டைம்ல கஸ்டமர்ட்ட போற மாதிரி இல்லாம, லிமிட்டேடா வச்சிக்கங்க. ஹெல்த்துக்கும் நார்மல் டெலிவரிக்கும் நல்லது” என்று அறிவுரை வழங்கினான். அவள் இன்னும் குழப்பம் தீராதவளாக இருக்கவும், கேமிராவை ஆஃப் பண்ணி பேக் பண்ணியவன், மரியாவை வெளியே அனுப்பிவிட்டு, கதவைச் சாத்தி ஒளிர்ந்துகொண்டிருந்த விளக்கை அணைத்தான்.

அகிலேஷ் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தபோது, வாசலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான் கௌரி. அவனருகே மரியா ஒடுங்கியபடி நின்றுகொண்டிருந்தாள். மரியாவைப் பார்த்து அகிலேஷ், “தேங்க்ஸ்” என்று சொல்லிப் போக, கௌரி, “புளிச்…” என்று பாக்கைத் துப்பிவிட்டு, எழுந்து வீட்டின் உள்ளே போனான். பின்னாடியே மரியாவும் போக, அகிலேஷின் விருப்ப நிலையில் கட்டிலில் கிடந்த சாந்தி, “வா கௌரி” என்று தொய்ந்த நிலையில் எழுந்து உட்கார்ந்தாள்.

அவளை ஆழமாக நோட்டம்விட்ட கௌரி, “இன்னா சாந்தி, கொஞ்ச நாளு வூட்டாண்ட வர்லனவுடனே தனியா ரூட்டு ஓட்ட ஆரம்பிச்சிட்டியா? மொதலாளியாண்ட கைநீட்டி துட்டு வாங்கினது ஞாபகம் இருக்கா?” என்று அவள் முகத்துக்கு நேரே குனிந்து தலையை ஆட்டியபடியே கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சன இல்லயாம் கௌரி, நாளைக்கு கொயந்த பொறக்குதுனா இன்னிக்குகூட பண்லாமாம். கொயந்தைக்கு நல்லதாம்.”

“நீ இன்னா வேணா சொல்லு, கை நீட்டி துட்டு வாங்கினது நீயி. சொன்ன மாரி கொயந்தய செட்லுமென்டு பண்லனா மொதலாளி கம்பு உட்ருவாரு. என்னாண்ட கேட்டா, நான் சைலன்ட்டா கை காமிச்சினு போய்னே இருப்பேன்” என்று அவளை அச்சமூட்டும்படி பேசியவன், அவள் வீட்டிலேயே தங்கிக்கொண்டான்.

கௌரியின் கூட்டாளி அவனைத் தேடிக்கொண்டு வந்துவிட்டான். “இன்னா கௌரி, ரெண்டு நாளா ஆஸ்பித்திரியாண்ட ஆளயே காணும். வந்து வந்து பாத்துட்டு போனேன். பாக்கியந்தான் சொன்னுச்சு நீ இங்க இருக்கனு” என்றான்.

“சாந்தி இப்ப வேற மாரி இருக்கா மச்சி. இதுக்கு மின்னாடி அவளாண்டா போய்ருந்தாலும் இப்ப வயிறு பெரிசா, ஒரு மாரி தித்திப்பா இருந்துச்சா, புட்சிருச்சி. அதான் தங்கிட்டேன்” என்றான். கௌரியின் வார்த்தைகளைக் கேட்டு, வந்தவன் நாக்கைத் தொங்கவிட்டான்.

கௌரி, சாந்தியிடம் சென்று, “கஸ்டமர் வந்துருக்கு. நீ இன்னா சொல்ற” என்றான். அவள், “எத்துன பேரு?” என்று கேட்க, அவன் “சிங்கிள் ஆள்தான்” என்றான். சாந்தி தலையாட்டினாள்.

கௌரியின் வாடிக்கையாளர்கள் வட்டத்தில் சாந்தியின் புகழ் பரவியது. கௌரியின் செல்போன் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. சாந்தி மிகவும் பலவீனமடைந்திருந்தாள். அவளுக்கு செத்துவிட்டால் நல்லது என்பதுபோல் இருந்தது. கௌரியின் கால்களைப் பிடித்துகொண்டாள். அவன், “போடித் தேவடியா” என்பதுபோல் தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, கால்களை சிலுப்பிவிட்டு வெளியே போனான். சாந்திக்கு பெரும்வலி உடலெங்கும் தெறித்து பரவியது.

இரவெல்லாம் கொட்டிய மழை ஓய்ந்திருந்தது. கௌரியும் முதலாளியும் வந்திருந்தார்கள். சாந்தி கால்களை நீட்டி மடியைப் பார்த்தபடி கட்டிலில் சாய்ந்திருந்தாள். மரியாதான் குழந்தையைத் தூக்கி கௌரியின் கையில் கொடுத்தாள். குழந்தையை வாங்கியவன் அதன் முகத்தைப் பார்த்துவிட்டு, “சாந்தி மாரியே இருக்கான் மொதலாளி” என்று வாயைப் பிளந்தான்.

முதலாளியும் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு, “ஆமா, சாந்தி ஜாடையிலதான் இருக்கான்” என்று குழந்தையை வாங்கினார். அதைப் பார்த்துகொண்டு நின்ற மரியா, “சாந்திதான் அந்த கொயந்த மொகத்த பாக்க மாட்டங்குறா” என்றாள். சட்டென திரும்பிய முதலாளி, “ஏன் பாக்கல சாந்தி? நீ கொழந்த முகத்த பாக்கலனா, நான் இங்கிருந்து போகமாட்டேன்” என்று சாந்தியின் மடியில் குழந்தையை வைத்தார். அவள் “அந்தச் செனியன நா பாக்க மாட்டேன்” என்று முணகியபடி கண்களை இறுக்கமாய் மூடிக்கொள்ள, அவள் பின்தலையில் பலமாகத் தட்டிய கௌரி, “ரொம்ப பிகு பண்ணாம, ஒரு தபா பாத்துட்டு குடு” என்றான்.

வேறு வழி தெரியாமல் சாந்தி மெல்ல கண் திறந்தாள். பிஞ்சுக் குழந்தை, கண்கள் மூடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். சாந்தி இமைக்காமல் குழந்தையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது, மின்னலைப் போன்று புன்முறுவலொன்று குழந்தையின் முகத்தில் தோன்றி மறைந்தது. சிலிர்த்துப்போன சாந்தி, குழந்தையை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். சாந்தியின் கண்களிலிருந்து கண்ணீர் உருகியது. சிலைபோல் உறைந்திருந்தவளை கௌரிதான் அதட்டினான். “சாந்தி, மொதலாளி வெய்ட் பண்றாரு பாரு. கொயந்தய குடுத்துடு” என்றான். அவள் அசையாமல் அப்படியே இருக்க, “இன்னா நான் சொல்லிக்கினே இருக்கேன். நீ பாட்டுக்கு இருக்க. கொயந்தய குட்றி” என்று குனிந்திருந்த சாந்தியின் பின்தலையில் அடித்தான்.

அவள் தரமாட்டேன் என்பதுபோல் தலையை அசைத்தாள். அவன் வலுக்கட்டாயமாக, ஈரமண்ணிலிருந்து செடியை வேர் முறியாமல் பிடுங்குவதுபோல, குழந்தையை சாந்தியின் பிடியிலிருந்து உருவி, முதலாளியிடம் கொடுத்தான். குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. முதலாளி குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியேறிப்போக, சாந்தி தலைகுனிந்தபடியே இருந்தாள். அவள் காதில் குழந்தையின் நீண்ட அழுகுரல் தேய்ந்து அடங்கியது.
கௌரி பேன்ட் பாக்கெட்டிலிருந்து கத்தையாக ரூபாய்த் தாள்களை எடுத்து அவள் மடியில் போட்டான். சாந்தி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன், “இன்னா பாக்குற, நெஸ்ட்டு கொயந்தைக்கு அட்வான்ஸ் துட்டு. ஷார்ப்பா எண்ணி பத்து மாசத்துல கொயந்தயப் பெத்து போட்ரு” என்று சொல்லிவிட்டு வெளியேறினான். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த சாந்தி, எதையோ நினைத்தபடி பணத்தை கையில் எடுத்தாள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருமையான கதை! நல்ல சொல் நெர்த்தி. மிகவும் பிடித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button