
வாசனையுணரா சொல்லின் நியூரான் முடிச்சுகள்
திரும்பப் பெற முடியாத காலத்தின்
முனை முள்
சுற்றிச் சுற்றி நிற்கவைக்கிறது
திரும்ப வழியற்ற சொல்லின் முன்
கொடுத்ததை
கொடுத்ததாய் உண்டு ருசிபார்த்த
தாகத்தின் மேல் நிற்கும் மனதை
பிறழ் கணத்தை பிறழா கனமாக்கிச் சுமக்கச்செய்யும்
வித்தைக்கு பலியிடுகிறேன்
எங்கும் ஓலம்
திசை முடுக்கி
தினவு கூட்டிப் பறக்கும் கூட்டின் தாழ்
நம்பவைத்த சூடு
அது
நம்பி வைத்த சூட்டுக்கு இட்டுப்போக
தொலைத்திருந்த வாசனையின் சுவை நரம்பை
உணரும் தருணத்தின் மேல்
மொய்த்துக்கொண்டிருக்கிறது
ஞாபகம்
தீண்டும் சுவையே
நீ சொல்
சுவை உணராச் சொல்லின் களத்தில்
மனமே கேடயம்
மனமே மந்திரம்
மனமே ஊழ்வினை
மனமே திருட்டின் நாடகம்
நடி
துடிக்கும் நரம்படங்கும் கணம்
நியூரான் கண்டுணரட்டும்
அவிழா முடிச்சின் அர்த்தச் சுவைகளை.
***
கையிருப்பின் கானல் மழை
சொல்லமுடியா வெக்கையை
சுமந்து அலைகிறது
உடல் கூடு
சாவதானமாய் வந்துவிடாத
மழைக்காய்
மனம் அவிய அடைகாக்கிறது
சுமையை
தணிந்துகொள்ள
ஈரம் என எழுதிச் சேர்க்கிறது
கை நிழலை
வளர் சிறகாய்
வராத மழையாய்.
***
ஒன்றும் இரண்டும் பல்லாயிரம்
மினுங்கும்படியாகவே முதலில் தெரிந்தாய்
பின் பிரகாசிக்கும் மினுங்கலில்
எனக்கானதென்ற எண்ணத்தை தொட அனுமதித்த போது
அதன் மையத்தில்
அறை மினுங்க
என் உலகின் எண்ணமுடியா சத்தியத்தின்
கணக்காகிப்போனாய்
வாழ்க்கை
இப்படித்தான் போல
கைக்குள் அடங்கா ஒன்றை எப்போதும் ஆள்கிறது
இப்போதும்
நீ மினுங்குகிறாய்
பிடி சாம்பலுக்குள்
அறைச்சாம்பலாய்
அடங்கா நிறமாய்.
***
தேவைக்கென வந்துவிழுந்துவிட்ட
வார்த்தைகளை
அத்தனை வேகமாய் அள்ளிக்கொள்கின்றன
தீர்க்கம்
அளக்கத் தெரிந்த தீர்மானம்
ஆழம் பார்க்கும் ஒற்றைக் கணத்தை
ஒளித்துவைக்கிறது
ஓராயிரத்தின் வளிப்பாதைக்கு.
***
நீங்கிப்போய்விடு என்று
எப்போதும் சொல்லமுடிந்ததில்லை
பிரியாமல் இருக்கிற
இருப்பின் மைய அச்சில்
ஒரு செக்குமாடு சுற்றிக்கொண்டிருக்கிறது
எப்படி
எப்போது
அந்த பிரிவு வந்ததென்று
***
எதுவாயினும் சொல்
எனும்படி தான் தொடர்ந்தது
ஒரு முதலின் முதல்
சொல் பதம் அறிய
கூர்தீட்டென்கிற கத்தியை
நீ
புறமுதுகில் செலுத்தும் வரை.
***
வந்துவிட இன்னும் கொஞ்சம் தூரம் தான்
அந்த வராத பாதையின் மேல்
இப்படித்தான் தங்கியிருக்கிறேன்
பல காலமாய்.