எமோஜிஸ்
டெக்ஸ்ட்டும், சிம்பலும்.
இன்றைய காலகட்டத்தில் படிப்பதாக இருக்கட்டும், பிசினஸ் செய்வதாக இருக்கட்டும், வரன் பார்ப்பதாக இருக்கட்டும், அனைத்தும் செல்போனுக்குள்தான் நடக்கிறது என்பது எத்தனை உண்மையோ, அதே அளவுக்கு எமோஜிஸ் மூலம் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மையானதுதான்.
நவீன உலகில் நிற்க முடியாமல் ஓடிக்கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு பேசவும், எழுதவும் அதை முறையாகப் புரிய வைப்பதற்குள் ஒவ்வொரு மனிதனின் நேரமும் அதிகமாக வீணாகிறது. அதனால் டிஜிட்டல் உலகில் மறுபடியும் ஓவியங்கள் மூலம் எமோஜிஸை ஜப்பான் மக்கள் இறக்கி விட்டார்கள்.
உண்மையில் நம் ஆதி மக்கள் ஓவியங்கள் மூலம்தான் பேசவே செய்தார்கள். அதனால் இந்த எமோஜிஸ் எல்லாம் நமக்குள் ஒன்றுக்குள் ஒன்றாக மாறி விட்டது.
மொழி இல்லாத உலகில் ஓவியங்கள் மூலம்தான் ஒவ்வொரு மனிதனும் தாங்கள் செய்யும் செயல்களை பதிவு பண்ணிக் கொண்டு வந்தனர். அதன் பின் பேசுவதற்கு மொழியைத் துணையாக வைத்துக்கொண்டு அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் நடத்தியபடி வந்தார்கள். அந்த வரலாற்று நிகழ்வுகளை அடுத்த தலைமுறையும் தெரிந்து கொள்வதற்கு எழுத்து முறையை வைத்து பதிவு செய்தார்கள்.
இந்த ஓவியங்கள் மூலம் செயல்படும் எமோஜிஸ் எல்லாம் மூளைக்கு புதிதாக ஒரு புத்துணர்ச்சியை உருவாக்கி விடும் என்பதுதான் சோசியல் மீடியாவின் உரையாடல் தளத்தின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது.
அதுபோல பேஸ்புக், வாட்ஸப் போன்றவற்றில் வரும் ரியாக்சன் மற்றும் சிம்பலும் மனிதர்களின் அத்தனை விதமான நவரச உணர்வுகளை மனதிற்குள் கொண்டு வரக்கூடியதாகவும் இருக்கிறது. நாம் சந்தோசமாக இருப்பதையும், ஆச்சரியப்படுவதையும், அத்தனை பாதுகாப்பு உணர்வையும் மற்றும் யாரோ ஒருத்தர் நமக்காக கவலைப்படுகிறார்கள் (கேர் சிம்பல்) சொல்லி மனதை அமைதிப் படுத்தவும் ஒரு கருவியாக இருக்கிறது.
உண்மையில் இந்த எமோஜிஸ் குறித்து டிஜிட்டல் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் நம்முடைய மூளையில் புது விதமான வார்த்தைகள் அற்ற, ஆனால் உணர்வை சொல்லக்கூடிய விஷயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர்.
ஒவ்வொரு எமோஜிஸ் சொல்லும் விதங்கள் எல்லாம் சில நேரங்களில் வேறு ஒரு பார்வையில் இருக்கும். அன்பு, பாசம், காதல், குரோதம், நட்பு என்றெல்லாம் நாம் பேசிக்கொண்டு இருக்கும்போது அமைதியாக அதை மாற்றும் எமோஜிஸ் ஆக, விதம்விதமாக செயல்பட வைக்கிறார்கள்.
சிலர் காதல் தோல்வியில் பதிவுகள் போடும்போது, யாரோ சிலர் அதற்கு சிரித்து வைத்து இருப்பார்கள். சிலர் ஜாலியாக பதிவு போடும்போது அதில் கோபமாக சிம்பல் போட்டு இருப்பார்கள். இப்படி இந்த வார்த்தைக்கு இதுதான் அர்த்தம் என்பதை எல்லா இடங்களிலும் யோசிக்காமல் உடைத்துவிட்டுப் போகும் வேலையைத்தான் எமோஜிக்கள் செய்கின்றன.
யாரோ ஒருவரின் சிரிப்பு யாரோ ஒருவருக்கு கோபத்தைத் தருகிறது. யாரோ ஒருவரின் அழுகை யாரோ ஒருவருக்கு சிரிப்பைத் தருகிறது. அந்த நேரத்தில் மனிதன் இந்த டிஜிட்டலில் இருக்கும் நவீன மொழியைக் கையாள முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட முயல்கிறான்.
ஆனால் டிஜிட்டல் ஆய்வாளர்கள் இத்தகைய எமோஜிஸ் மனித மனதை இலகுவாக்க கொண்டு வரப்பட்ட மற்றும் உணர்வுகளை வெவ்வேறு வகையில் சொல்ல முடியும் என்பதையும் குறிக்கத்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால் மனிதன் உணர்வுகளோடு மொழிகளைக் கொண்டு வரும்போது கண்டிப்பாக முட்டி மோதத்தான் செய்வான். அப்படியாக சில நேரங்களில் இந்த எமோஜிஸ் எல்லாம் தனக்குப் பிடித்தவர்கள் வேறு யாருக்கும் அனுப்பக் கூடாது என்றும், அந்த எமோஜிஸ் சிம்பல் தங்களுக்கு மட்டுமே உரியது என்றும் சொந்தம் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.
எங்களுக்கு வெறும் லைக் போட்டார்கள் என்றும், அடுத்த நபருக்கு மட்டும் ஹார்டின் போடுகிறார்கள் என்றும் விவாதங்கள் ஆரம்பித்து நட்பு அழைப்பை பிளாக் செய்வதாக இருக்கட்டும், பேசாமல் முகம் திருப்பிக் கொள்வதாக இருக்கட்டும்…இந்த எமோஜிக்களால் உறவுகளுக்கிடையே வம்பு தும்புகளுக்கும் குறைவில்லை.
இதனால் யார் யாருக்கு எந்த எமோஜிஸ் என நண்பர்களில் ஆரம்பித்து காதலர்கள் வரை பிரித்து பிரித்து சொல்லவும் ஆரம்பித்து விட்டனர். டிஜிட்டல் உலகில் புதிது புதிதாகக் கொண்டு வந்த விஷயங்களை உறவுகளுக்குள் கொண்டு வந்து அதையும் ரொம்ப எமோசனல் ஆக மாற்றி விட்டனர்.
இதை எல்லாம் தாண்டிப் பார்க்கும்போது வார்த்தைகளை அனுப்பாமல் ஒரு எமோஜி கொடுத்து தப்பி விட வாய்ப்புகள் அதிகம். எழுத்தின் மூலம் தகவலை கொடுத்து வாக்குவாதத்தை ஏற்படுத்துவதையோ, இல்லை ஏதும் தவறா புரிந்து கொள்ளும் தருணத்தை ஏற்படுத்தாமல் தவிர்க்க மட்டுமே எமோஜிஸ் அதிகம் உபயோகப்படுகிறது. இன்றைக்கு இருக்கிற சோசியல் மீடியாவில் மிக முக்கியமான, அந்தரங்கமான, ஆத்மார்த்தமாக பேசிக் கூடிய மொழியாக எமோஜிஸ் மாறி விட்டது.
டிஜிட்டல் உலகில் பல நபர்களுடன் பேசும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், பழகினவர்கள், பழகாதவர்கள் எனப் பலப் பேருடன் கமெண்ட் செய்தும், எமோஜிஸ் சிம்பல் போட்டும் என சோசியல் மீடியாவில் பேசிக் கொண்டு இருக்கிறோம். இப்படி இருக்கும்போது சிலரைத் தவிர்க்கிறோம் என்பதற்காக எமோஜி சிம்பல் போடும் போது பலவித குழப்பங்களை ஏற்படுத்தி விடுகிறோம். இதனால் சரியான அர்த்தத்தை சொல்லமால் ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டு போல் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு இருக்கிறோம்.
நாம் நெருங்கிய நபர்களுடன் உரையாடும்போது எழுத்துக்கள் மூலம் தகவல்கள் கூறி, அதனுடன் உணர்வுகளின் தன்மையைப் பொறுத்து எமோஜிஸ் சேர்ந்து உரையாடல் இருக்கும். முகம் தெரியாதவர்கள் பேசும்போது யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று அவர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு ஏற்ப ஒரு எமோஜிஸ் சிம்பல் அனுப்பி வைத்து விடுவார்கள். அப்படி அனுப்பும் எமோஜிஸ் என்பது அந்த தகவல்களுக்கான சிம்பல் என்பதே உண்மை. அதை அவர்களோடு கூடிய உறவோடு சம்பந்தப்படுத்த முடியாது.
உண்மையில் யாருடன் அதிக அன்பாக இருக்கிறோமோ அவர்களிடம் வார்த்தைகள் மற்றும் இந்த எமோஜிஸ்கள் சேர்ந்து உரையாடும் பொழுதுதான் உணர்வு பூர்வமாக எளிதாக கனெக்ட் ஆக முடியும் என்று சொல்கிறார்கள். மற்ற நேரத்தில் எமோஜிஸ்களை பார்த்துவிட்டு வெறும் பார்வையாளராக கடந்து போய் விடுவோம். ஆனால் இது புரியாமல் சிலர் இந்த எமோஜிஸ் சிம்பல் வைத்து ரொம்ப நெருக்கமாக, உணர்வு பூர்வமாக அந்த அந்த மனிதர்களை நினைத்துக் கொள்கின்றனர். இது ஒரு கானல் நீரான உறவாகதான் இருக்கும் என்ற உண்மையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
கணவன் மனைவிக்குள் சிலர் சொல்வது, கணவனிடம் ஏதோ ஒரு விஷயத்தை தெரிவிக்கும்போது, அவர்கள் வார்த்தைகளை சொல்லாமல், விளையாட்டுத்தனமாக எல்லாத் தகவலுக்கும் ஏதோ ஒரு எமோஜிஸ் அனுப்பி விட்டு அமைதியாக இருக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிவதில்லை. சிலர் ஏதோ ஒரு சோக எமோஜிஸ் அனுப்பி விட்டு அவர்கள் வேலையை பார்க்க போய் விடுவார்கள். ஆனால் மற்ற நபரோ எதற்கு இந்த எமோஜிஸ் தற்போது அனுப்பி இருக்கிறார்கள் என்பது புரியாமல், அதைப் பற்றி அதிகமாக யோசித்து நேரத்தை வீணடிக்கவும் செய்கிறார்கள். நவீன மொழியில் பேசும்போது அத்தனை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அப்போது அவர்களுக்கான வேலைகளை செய்யாமல், அதைப் பற்றி அதிகமாக யோசித்து, தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
மனிதன் எப்பவும் வார்த்தைகளாலும், கதைகளாலும், தொடுதலாலும் நிறைந்தவனாக இருப்பான். இந்த மாதிரியான நவீன ஓவிய மொழிகள் எல்லாம் பார்க்கவும், கொண்டாடவும் நன்றாக இருக்கும். ஆனால் அதை நடைமுறை வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் கொண்டு வர முடியாது. அவனிடம் இந்த மாதிரி எமோஜிஸ் எல்லாம் தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். அதனால்தான் இந்த எமோஜிஸை எடுத்து உறவுக்குள் சொந்தம் கொண்டாடினாலும் அதன் பின் நிஜ வாழ்க்கையில் எமோஜிஸ் எந்த உணர்வுகளையும் தராமல் போகும்போது போது எளிதாக சலிப்படைந்து விடுகிறார்கள்.
ஒவ்வொரு புது டெக்னாலாஜியும் தன்னை மார்க்கெட் உலகில் நிரூபிக்க விதவிதமாக கம்யூனிகேஷன் மெத்தட்ஸை கொண்டு வருவார்கள். அதை வைத்து நட்புக்குள், காதல் போன்ற உறவுகளுக்குள் உங்களை சுருக்கி கொள்ளாதீர்கள். இந்த மாதிரி புது விஷயங்களை ரசிக்கலாம், கொண்டாடலாம், உபயோகப் படுத்தலாம். அதை மீறி உங்கள் வீட்டுக்குள் இதைக் கொண்டு வர முடியாது. கொண்டு வந்தாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது.
தொடரும்…