கட்டுரைகள்

பல தேசங்களின் தேசம் -சுவிட்சர்லாந்து

நிர்மல்

உலக பணக்கார நாடுகளில் ஒன்று, செழுமையான ஐரோப்பாவின் அழகிய ஒர் நாடு, சுவிஸ் வங்கி, கருப்புப் பணம், சுவையானச் சாக்லேட்டுகள், சிறந்த வாட்சுகள் மற்றும் அழகிய ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள், இதுதான் எனக்கு தெரிந்த சுவிட்சர்லாந்து. ஆனால்,அது பல தேசியங்களின் ஒன்றியம், ஏழுபேர் கொண்ட கூட்டாட்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வரும் நாடு, அந்த ஏழு பேர் கொண்ட குழுவிடமே முழு அரசியல் அதிகாரமும் உள்ளது, அந்த எழுவரில் ஒருவர் சுழற்சி முறையில் அடையாளப் பிரதமராக இருக்கிறார், முழுமையான சுயாட்சி முறை கொண்ட மாநிலங்கள் பல கொண்டது என்பது போன்ற விபரங்கள் எனக்கு தெரிந்திருக்கவில்லை.

India, that is Bharat, Shall be a Union of States என்று நம் நாட்டின் பெயரை நம் அரசியல் சாசனம் சொல்லுவது போல, சுவிட்சர்லாந்தின் பெயர் Confederation of Switzerland.

சுவிட்சர்லாந்தின் அடி நாதம் – கூட்டாட்சி. சுவிட்சர்லாந்து காண்டோன்கள் என அழைக்கப்படும் 26 மாகாணங்களைக் கொண்ட கூட்டாட்சிக் குடியரசு. சுவிட்சர்லாந்தை நிர்வகிக்க பிரிக்கப்பட்ட மொழி வாரிய மாநிலங்கள் அல்ல இந்த காண்டோன்கள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் இந்த காண்டோன்கள் ஒவ்வொன்றும் ஆல்ப்ஸ் அடிவாரத்திலும், பனி முகடுகளிலும் பல வரலாற்று நிகழ்வுகளாலும், புவியியலாலும், மொழி, கலாச்சாரத்தினாலும் பல ஆண்டுகளாக ஒன்றாய் வாழ்ந்து வந்த சிறு குழுக்களின் வாழ்விடமே. தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொண்டு வாழ்ந்த தேசிய இனக்குழுக்கள் இவர்கள். தங்களின் குழுவாகவே தங்களை அடையாளப்படுத்தி வாழ்ந்தவர்கள் இவர்கள்.

Switzerland Parliament

ஒவ்வொரு காண்டோன்களுக்கும் தனியாக அரசியல் சாசனம் உண்டு. தனி போலீஸ் படை, தனிக் கொடி, தங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமை, நீதிமன்றம், கல்விக் கொள்கை, மருத்துவம், வரி, வருமானம் என பல துறைகளிலும் தங்களுக்கு ஏற்ற சட்டத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். தங்களுக்கென வெளியுறவு கொள்கையைக் கூட ஒரளவுக்கு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு சட்டங்களும் முறைகளும் இருப்பது என்பது ஸ்விட்சர்லாந்தில் மிகச் சாதாரணமானது. கிட்டதட்ட தனி நாடு மாதிரிதான்.

நம்மூர் மாதிரி நீட்டுக்கும், ஜிஎஸ்டிக்கும் போராட வேண்டியதில்லை. யாரோ எடுத்த முடிவுகளை சங்கடத்தோடு பின்பற்ற வேண்டியதில்லை, அதை எதிர்த்து போராடி அலுத்துப் போக வேண்டிய அவசியமில்லை, ஹிந்தியை திணிக்காதே என உயிரிழக்க வேண்டியதில்லை. அங்கும் நம்மூர் போல மத்திய அரசு உண்டு. நாம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது போல அவர்களும் ஒவ்வொரு காண்டோனின் மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கூடவே மேலவை என்கிற Upper Houseசுக்கும் ஒவ்வொரு காண்டோன்களும் தலா இரு உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். (இதில் ஒரு உறுப்பினர் மட்டும் கொண்ட மிகச் சில காண்டோன்களும் உண்டு) இதிலும் இவர்களுக்குள் ஒரே முறை இல்லை பாருங்கள். இது தவிர உள்ளாட்சி நிர்வாகமும் உண்டு.

இந்த இரு அவையிலுள்ள தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏழு பேரை நான்கு பெரிய கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கு ஆளும் கட்சி, எதிர் கட்சி என எதுவும் கிடையாது. நான்கு கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஏழு பேரைக் கொண்ட குழுதான் நம்மூர் அமைச்சரவையைப் போல, அனைத்து துறைகளையும் நிர்வகிக்கும். இந்த ஏழு பேரும் அனைத்து துறைகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள்தான் சுவிட்சர்லாந்தின் பிரதமர் / தலைமை அமைச்சர்/ஜனாதிபதி எல்லாம். அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளால் ஆன இந்த குழுவுக்குதான் அனைத்து அதிகாரங்களும் உண்டு. நாடென்றால் ஒரு பிரதமர் இருக்க வேண்டும் அல்லவா. எனவே இந்த ஏழுபேர் குழுவிலிருந்து வருடத்திற்கு ஒருவர் Ceremonial Head ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுவார். இந்த தனி நபருக்கென தனியாக எந்த அதிகாரங்களும் கிடையாது. சும்மா விழாக்களில் பங்கேற்பது, வெளி நாட்டுத் தலைவர்களை வரவேற்பது போன்ற சடங்குகளில் கலந்து கொள்ளும் வேலை மட்டும்தான். எல்லா பிரச்சனைகளுக்கும் Consensus Politics எனும் அடிப்படையில் அனைவரும் ஒத்துக் கொள்ளும் முறையில் தீர்வு காணப்படுகிறது. இங்கு கூட்டாச்சி முறையில் அரசாட்சி மிளிர்கிறது.

இது போக, உலகின் பெரிய மக்களாட்சி நாட்டில் வாழும் எனக்கு புரியாத, சம்பந்தமே இல்லாத Direct Democracy என்கிற முறை ஒன்று இருக்கிறதாம். Direct Democracy முறையில், மக்கள் நினைத்தால், இந்த அவைகளில் நிறைவேற்றிய சட்டங்களுக்கு எதிராக பொது வாக்கெடுப்புகள் (Referendum) நடத்தலாம், தீர்மானம் கொண்டு வரலாம், கையெழுத்து இயக்கம் மூலம் சட்டங்களை கேள்விக்குள் உட்படுத்தலாம். இங்கே மக்களென்றால் ஆளும் ஆட்சியாளர்களின் சட்டங்களுக்கு வளைந்து,நெளித்து, சமாளித்து வாழ வேண்டிய அவசியமில்லை. மக்கள் நேரடியாக அரசியலில் தலையிடலாம். Democracyயையே இன்னும் நாம் முழுமையாக அனுபவிக்காத நிலையில் இந்த Direct Democracy என்பதெல்லாம் கேட்கும் போது ‘கடுப்பேத்துறார் மை லாட்’னு தான் தோனுது. மாநிலத்தில் முழுமையான சுயாட்சி, மத்தியில் அம்சமான கூட்டாச்சி,பிரதமர் சுழற்சி முறை, இதுதான் சுவிஸ் ஆட்சி முறை.

கொஞ்சும் மலை முகடுகள் பல கொண்ட ஆல்ப்ஸ் மலைத்தொடரும், பல ஐரோப்பிய நாடுகளிடையே ஓடி நெதர்லாந்தில் சங்கமிக்கும் தி ரெயின் நதியின் பிறப்பிடமும் இந்த சுவிஸ் தான். கிறிஸ்துவத்தின் பல்வேறு பிரிவுகளில் மிக முக்கிய பிரிவுகளான ரோமன் கத்தோலிக்கமும், புராட்டஸ்டேண்டும் இங்கு முக்கிய மதங்கள். பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா அதன் நான்கு திசைகளிலும். பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி மற்றும் 0.5% மக்கள் மட்டுமே பேசும் ரோமாஷ் என நான்கு தேசிய மொழிகள் கொண்டது இந்த சுவிட்சர்லாந்து. ஆல்ப்ஸ் மலையும், ரெயின் நதியும் ஓடும் பலவித உணவு, உடை, மொழி,கலை, கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழும் தேசம் இது. இங்கு சுதந்திர சிந்தனையும், கூட்டாட்சி முறையும் மட்டுமே அனைத்து காண்டோன்களுக்கும் பொதுவானது.

இவர்களின் கூட்டாட்சி முறை பற்றியும், தனித்துவமான காண்டோன்களை பற்றியும் பரவலாக சொல்லப்படும் நக்கல் ஒன்று உண்டு. அதாவது உங்கள் நாட்டில் குழந்தைகள் எப்படி உருவாகும் என சுவிட்சர்லாந்துகாரர்களைக் கேட்டால் ‘அது எங்கள் நாட்டின் எந்த காண்டோன் (மாகாணம்) என்பதை பொருத்தது’ என்பார்களாம்.. அதாவது குழந்தை பிறப்பு என்கிற பொதுவான செயல் கூட அவர்களுக்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் (காண்டோன்கள்) ஒவ்வொரு விதமாய் வேறுபடலாம் என்கிற பொருள்பட பதில் கூறுவார்கள் என ஸ்விஸ் மக்களை கிண்டலடிப்பார்களாம்.

‘இந்தியா முழுக்க சுத்தினேன். எங்கும் இந்தியர்களை நான் காணவில்லை’ என கான் அப்துல் கஃபார் கான் சொன்னது நினைவுக்கு வருகிறது.

எங்கிருந்து வந்தது இவர்களின் இந்த கூட்டாட்சி முறை என்கிற சிந்தனை?

எங்கிருந்து வந்தது இவர்களின் ஜனநாயக உணர்வு?

எங்கிருந்து வந்தது இவர்களின் வேறுபாட்டைக் கொண்டாடும் பாங்கு?

முரண்பாடுகளின் சிக்கலுக்குள் சிக்காது, உலகின் மிகப் பணக்கார நாட்டுகளில் ஒன்றாக மாற முடிந்தது எப்படி?

எனப் பல்வேறு சிந்தனைகளையும், கேள்விகளையும் மிக எளிதாக நமக்குள் எழச் செய்து விடுகிறது இந்த சுவிட்சர்லாந்து.

யார் இந்த சுவிட்சர்லாந்துக்காரர்கள்? இவர்களின் சரித்திர, கலை, கலாச்சாரப் பின்னணி என்ன? என்பதை பற்றியெல்லாம் விரிவாகப் புரிந்து கொள்ள மிக இயல்பாகவே நமக்கு ஆசை வந்து விடுகிறது.

மிகச்சுருக்கமாக இவர்களின் சரித்திரத்தைக் கூற வேண்டுமென்றால், ஐரோப்பாவின் பல பகுதியிலிருந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் குடிபெயர்ந்து வந்து ஆல்ப்ஸ் மலை அடிவாரத்திலும், பனி முகடுகளிலும் வாழத் தொடங்கிய கூட்டமே இவர்கள் என சொல்லிவிட முடியும். 2500 வருடங்களுக்கு முன் செல்டிக் மொழி பேசும் ஹெல்வீஷியர்கள் கூட்டமும் (Helvetians), அவர்களைப் போலவே இந்தாலி மொழி பேசும் ரீஷன் கூட்டமும் (Rhetians), ஜெர்மானிய மொழி பேசும் கூட்டமும், பிரெஞ்சு மொழி குழுவினரும் வெவ்வேறு காலகட்டத்தில் வந்து வாழத் துவங்கிய இடமே இன்றைய சுவிட்சர்லாந்து. சிறு சிறு கூட்டமாகத் தங்களை தாங்களே நிர்வாகித்து ஆட்சி புரிந்து வந்த இவர்கள் என்றுமே பெரும் சாம்ராஜ்ஜியக் கனவு கண்டதே இல்லை. இவர்கள் ஒரே அரசனுக்கு கீழ் வாழ்வதை என்றும் விரும்பாதவர்களாக இருந்தி6ருக்கிறார்கள். தங்களின் சுதந்திரத்தை எந்த பெரும் தேசிய கனவுக்காகவும், ஒரே மதத்திற்காகவும் என்றுமே விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்ததில்லை இவர்கள் என தெரிய வருகிறது. தனியாக அவரவர்களின் பகுதியை நிர்வகிப்பது , வெளியிலிருந்து யாராவது வந்து குடைச்சல் கொடுத்தால் அனைத்து சிறு குழுக்களும் ஒன்றிணைந்து அவர்களை துரத்தி அடிப்பது- இதுதான் இவர்கள் ஸ்டைல். தங்களுக்குள்ளே ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, அதை முடிந்தவரை காப்பாற்றி வரும் இவர்களுக்கு இந்த வழக்கம் எவருடைய தனித்துவமும் கெடாமல் பாதுகாப்பைத் தந்துகொண்டே இருந்திருக்கிறது. ஒரு காலகட்டத்தில் நெப்போலியன் இவர்களின் பகுதியை போரிட்டு வென்று, அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து, ஒரே அரசன் ஒரே தேசம் என கட்டமைத்திருக்கிறான். அவ்வளவுதான்,இங்குள்ள மக்கள் கிளர்ந்து எழுந்துவிட்டார்கள். ‘அடிமையாகக் கூட இருப்போம், ஆனால் எங்களையெல்லாம் ஒன்று என இணைத்து புதுக் கதை எழுதாதே. அப்படி எழுத நீ யார்?’என ஒன்றாய் சேர்ந்து நெப்போலியனை துரத்தி அடித்து மீண்டும் தங்களின் சுயாட்சி முறைக்கு திரும்பிவிட்டார்கள். நினைக்கவே காமெடியாக இருக்குல? ஒன்றாய் சேர்ந்து போரிட்ட பின், மீண்டும் தனியாகவே தொடர்தல் — என்ன மாதிரியான டிசைனோ என்றுதான் தோன்றுகிறது.

சுவிட்சர்லாந்தின் ஒரு பகுதியான ஹெல்வீஷியா என்கிற இன குழுவில் நடந்த ஒரு செய்தியை சொல்கிறேன். மிகவும் வித்தியாசமாகவும் எதிர்பாராததாகவும் இருக்கும். கிமு 60 ஆம் ஆண்டுகளில் இன்றைய சுவிட்சர்லாந்து நிலப்பகுதியில் ஹெல்வீஷியர்கள் என்கிற குழு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இன்றைய சுவிடன், நார்வே போன்ற பகுதியிலிருந்து வந்திருக்கலாமென்று சொல்கிறார்கள்.. முரட்டு ஆல்ப்ஸ் மலை வாழ்க்கை மீது வெறுப்படைந்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பகுதியை விட்டு மொத்தமாக இடப்பெயர்வு செய்யலாமென இவர்கள் முடிவு செய்தனர். கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ஆல்ப்ஸ் மலை வாழ்கையை விட்டுவிட்டு இன்றைய பிரான்சு நாட்டின் சமவெளிக்கு இடம் பெயர முடிவு செய்தனர். இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் ஒர்ஜிடோரிக்ஸ் என்கிறவன். ஹெல்வீஷிய கூட்டத்தை சேர்ந்த ஒர்ஜிடோரிக்ஸ் இந்த இடப்பெயர்வு திட்டத்தை முன்னிருந்து நடத்தி வந்தான். கிட்டதட்ட மூன்று வருடம் திட்டமிடுகிறார்கள். பயணத்திற்கு தேவையான உணவுகளை சேமிக்கிறார்கள். பயணம் தடையின்றி செல்ல அவர்கள் கடந்து செல்லும் பாதையில் இருக்கும் மற்ற இனக்குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதையெல்லாம் ஒர்ஜிடோரிக்ஸ்தான் முன்னிலையில் நின்று செய்கிறான் ( co-ordinator மாதிரி). இப்படி முன்னணியில் இருந்து செய்து கொண்டிருக்கும் ஒர்ஜிடோரிக்ஸ் ஒரு கட்டத்தில் தன்னை தானே ஹெல்வீஷியர்களுக்கு தலைவனாக நினைத்துக் கொள்ள ஆரம்பிக்கிறான். முன்னிலையில் இருந்து செயல்படும் ஒரு தனி நபர் இப்படி நினைப்பது மிக எதார்த்தமான ஒன்றுதானே. யூதர்களை வழி நடத்தி சென்ற மோசே இன்றுவரை நினைவுபடுத்தப்பட்டு வருகிறார் தானே. ஆனால் ஹெல்வீஷியர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஒர்ஜிடோரிக்ஸை கண்டிக்கிறார்கள். அது வன்முறையில் சென்று முடிகிறது. இந்த பிரச்சனையில் ஒர்ஜிடோரிக்ஸ் மரணம் அடைந்துவிடுகிறார். கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா எனத் தெரியாவிட்டாலும் தன்னை மட்டும் தனி தலைவனாக முன்னிறுத்திய காரணத்தாலே அவரின் மரணம் நிகழ்கிறது.

Swiss Bank

அதன் பின் மக்கள் தங்கள் வீடுகளை தீக்கிரையாக்கி ஆல்ப்ஸ் மலை பகுதியை விட்டு இன்றைய பிரான்சுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இவர்களின் இடம்பெயறும் முயற்சியை பிரான்ஸ் எல்லை பகுதியில் பிரான்ஸ் நிலப்பரப்பை ஆண்டு வந்து கொண்டிருந்த சீசர் முறியடித்து ‘ஒழுங்கா வந்த இடத்துக்கே திரும்பிப் போங்கள்’ என மிரட்டி ஒடுக்கி அனுப்பி வைத்தான் என்பது சரித்திரம். இதை ஏன் நான் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், சுவிட்சர்லாந்து மக்கள் சரித்திரபூர்வமாகவே தனி ஒருவனை தங்கள் தலைவனென்றோ, அரசனென்றோ ஏற்றுக் கொள்வதில்லை போலும் என யூகிக்க வைக்கிறது என்பதாலேயே. எப்பொழுதும் தங்களை தாங்களே நிர்வகிக்க குழு அமைப்பது, அவர்களிடையே சண்டையிடுவது, வெளியிலிருந்து யாராவது வந்தால் ஒன்றாய் சேர்ந்து அவர்களை துரத்துவது என்பதே இவர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது. எந்த தருணத்திலும் தலைவன், அரசன் என யாரும் தங்களை சுரண்டிவிடக் கூடாது, தங்களின் சுதந்திர வாழ்க்கைக்கு கட்டுப்பாடு விதித்திட கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இவர்கள் இருந்திருக்கிறார்களே என வியக்கவும் வைக்கிறது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்து மக்களிடையே ‘அனைவருக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தொகை பாகுபாடின்றி வழக்கப்படும்,சம்மதமா?’என கேட்டு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ‘நீங்க ஆணிய புடுங்க வேண்டாம், இலவசமா எதுவும் தந்து எங்களை ஏமாத்த வேண்டாம்’ என ஒட்டு மொத்த நாடும் இலவச பணத்திற்கு நோ சொல்லி விட்டார்கள். என்னா தெளிவு இல்ல?? அதே போல நிறைய விடுமுறை நாட்கள் வேண்டுமா எனக் கேட்டதற்கும் நோ… சொல்லிவிட்டார்கள் இந்நாட்டு மக்கள். சும்மா தருவதை வாங்கினால் நாம் தந்தவனுக்கு அடிமைதானே? இல்லையா.

The Rhino River

சுவிட்சர்லாந்து காண்டோன்களில் ஒன்றான ஜெனிவாவில் பிறந்தவரும், சமூக ஒப்பந்த கோட்பாடுகள் எனும் தத்துவத்தைச் சொன்னவரும், பிரெஞ்சு புரட்சிக்கு அறிவாயுதமாய் இருந்தவருமான Jean-Jacques Rousseau (ஜான் ஜாக் ஊசோ)

“மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான், ஆனால் எங்கும் அடிமைச் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான்” என்ற புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்கும் The Social Contract (சமூக ஒப்பந்தம்) எனும் நூலில் “அரசன் என்பவன் மக்களின் நலனுக்காக மக்களோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பயனாய் உருவானவன். மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுகிற வரையில்தான் அவன் அரசன். அவ்விதிகளை அரசன் மீறும் போது மக்களும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த விதிகளை மீறலாம்” என்கிறார். முழுக்க முழுக்க சிறு குழுக்களின் ஆட்சி முறைகளை ஆதரித்தும் பெரும் ராஜிய கனவுக்கு எதிராக தன் நிலைப்பாட்டை முன் வைத்த ஊசோவின் தத்துவங்கள் ஆல்ப்ஸ் மலை அடிவார பண்பின் நீட்சியே எனக் கூட சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த இடத்தில் ஹெல்வீஷியர்களை மீண்டும் அவர்களின் பகுதிக்குத் துரத்திய சீசர் சொன்ன வாக்கியத்தை, இந்த கட்டுரையின் நோக்கத்திற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் உங்களுக்கு சுட்டிக் காட்ட நினைக்கிறேன்.

“ஆயுதங்களை விட்டொழித்து நீங்கள் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லுங்கள். உங்கள் மலைகளாலும், உங்கள் சட்டங்களாலும் திருப்தியோடு வாழுங்கள்.தேசத்தின் மனிதர்கள் தேசத்திற்கு நல்லவர்களாக இருந்தால், அந்த தேசமும் மனிதர்களுக்கு நல்ல தேசமாக இருக்கும்.எனவே திரும்பிப் போங்கள்” என்றார்.

சுவிட்சர்லாந்து தேசம் மிக மகிழ்ச்சியான தேசம் என்கிறார்கள். போய் பார்த்ததில்லை, மகிழ்ச்சி என எதை சொல்கிறார்கள் என்றும் எனக்கு தெரியவில்லை. மதங்கள் சண்டை கிடையாதாம் – கத்தோலிக்கமா – புராட்டஸ்டேண்டா என்கிற மோதலில் 16ஆம் நூற்றாண்டிலே சண்டை போட்டு கொன்று குவித்து டயர்டாகிவிட்டார்கள் போலும். சாதி இல்லையாம், மேலும் பெரும்பாலோனோர் வேளாண்மை தொழில் செய்கிறார்களாம். சமத்துவத்தையும் பொறுப்புணர்வையும் போற்றி வளர்க்கிறார்களாம். இதெல்லாம் படித்து பார்த்ததுதான், நேரில் கண்டிலன் நான். ஆனாலும் இப்படியான சூழலை கற்பனை செய்து வாழ்ந்து பார்த்தால் மகிழ்வாகத்தான் இருக்கிறது என்றாலும் இந்த காண்டோன்களுக்கு இடையில் போர்களும் பல நடந்திருக்கிறது. நீயா? நானா? என்கிற போட்டி, வெளி நாட்டினரோடு ஒப்பந்தம், கத்தோலிக்கமா – புராட்டஸ்டேண்டா போன்றவற்றை வைத்து போர் செய்து பலர் மாட்டிருக்கிறார்கள். மேலும் இடைக்காலங்களில் ஜெர்மானியர்களாலும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார்கள் இம்மக்கள்.

இன்றைய சுவிஸ் பகுதி 14 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரிய / ஜெர்மானிய ஹெப்ஸ்பெர்க் (Habsburg) மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதை நிறுவ ஹெப்ஸ்பெர்க் மன்னரால் அங்கீகரிக்கப்பட்டவர்தான் Gessler என்பவர். இந்த ஜெஸ்லர் சுவிஸ் மக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்திருக்கிறான்.. அவர்களை அடிமையாக்கி அவர்களை சுரண்டியிருக்கிறான்.. இவன் ஒரு நாள் மன்னரின் தொப்பியை ஒரு கம்பில் வைத்து அதை மக்கள் அனைவரும் வணங்கிச் செல்ல வேண்டுமென கட்டளை இட்டிருக்கிறான். அதை மறுக்கிறான் வில்லியம் டெல் என்கிற வேடவன். டெல் வில் வித்தையில் சிறந்தவன். கோபம் கொண்ட ஜெஸ்லர், வில்லியம் டெல்லின் மகனை மரத்தில் கட்டி, அவன் தலையின் மீது ஆப்பிள் ஒன்றை வைத்து வில்லியம் டெல்லின் அம்பு எய்யும் திறனைச் சோதிக்கிறான். வில்லியம் டெல்லின் அம்பு ஆப்பிளை இரண்டாகப் பிளந்தது என இந்தக் கதை நாம் அனைவரும் அறிந்ததே. வில்லியம் டெல்லின் இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் ஒன்றாகி ஆஸ்திரிய அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்பது சுவிஸ் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று.

இந்த வில்லியம் டெல் காலத்தில்தான் இன்றைய சுவிஸ் ஒன்றியம் போல, சில காண்டோன்கள் தங்களுக்குள் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி கூட்டுறவு ஆட்சி முறையை கொண்டு வந்ததிருக்கிறார்கள். இதை சரித்திர நிகழ்வாகவும், தங்களின் கூட்டுறவு முறை, அதாவது தங்களைத் தாங்களே தனியாக ஆள்வது ஆனால் ஆபத்து காலத்தில் ஒன்றாவது என்கிற கூட்டமைப்பு உருவாக காரணமாக இருந்த கதையும் இதுதான் என சிலர் நம்புகிறார்கள். சிலர் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் சொல்கிறார்கள். இதை அடுத்து இந்த கூட்டுறவு ஒப்பந்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி 1848ல் முழுமையானதொரு அரசியல் சாசனமாக மாற, அனைத்து காண்டோன்களின் ஒப்புதலோடு பிறந்தது சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு என்கிற தேசம்.

இயற்கையாகவே தங்களை மிகுந்த போர் குணம் கொண்டவர்கள் என கருதும் இவர்கள் ( வீர பரம்பர டா!!!) , இன்றைய சுயாட்சி / கூட்டாட்சிக்குள் வெகு எளிதாக வரவில்லை என்பது தெரிகிறது. கண்டிப்பாக மற்ற உலக நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்றவாறு ஒரே தேசம் ஒரே மொழி போன்ற முனைப்புகள் இங்கும் இருந்திருக்கதான் செய்யும். ஆனாலும் அதையெல்லாம் அவர்களால் கடக்க முடிந்திருக்கிறது. சுவிஸ் மக்கள் எப்பொழுதும் தங்களை மற்றவர்கள் எப்படி அடையாளப்படுத்த வேண்டுமென்பதில் அக்கறை செலுத்துவதில்லையாம். எப்படியான செயல்பாடுகளை செய்கிறோம் என்பதே இவர்களுக்கு முக்கியமாம். Functionality than Brand. எந்த பொருளை வாங்கினாலும் அதன் செயல்பாட்டுக்குதான் முக்கியத்துவத்துமே தவிர அதை பயன்படுத்துவதால் வரும் எந்த அடையாளமும் முக்கியமல்ல என்பதே சாமானிய சுவிஸ் சிந்தனைகளில் ஒன்று என்கிறார்கள் சில கட்டுரையாளர்கள்.

வரலாறு முழுக்க தங்களின் உரிமைக்கும் விடுதலை உணர்வுக்கும் எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் சுவிஸ் மக்கள் மிகுந்த அக்கறை காட்டியுள்ளனர். இரண்டு உலக போர்களிலும் நடு நிலைமை, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க மறுப்பு என முழுக்க முழுக்க தங்கள் நாடு, தங்கள் மக்கள், தங்களின் அரசியல் என்கிற நிலையில் மிக உறுதியாக இன்று வரை இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியங்களில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் சுவிஸைச் சுற்றி உள்ளன, இருந்தும், தங்கள் மக்களின் தன்னாட்சிக்கு பிரச்சனை வரும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்திற்காக சட்டங்களும் மாற்றங்களும் கொண்டு வர வேண்டியது இருக்கும் என்றும், ஒவ்வொரு காண்டோன்களுக்கும் வேறுவேறு சட்டங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்காக மாற்ற வேண்டியிருக்கும் என்பதற்காகவும் சுவிஸ் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய குழுமத்தில் இன்று வரை சேரவில்லை. எது நம் நாட்டுக்கு சரியாக வரும் என்பது தான் முக்கியம், மற்றவர்களுக்கு சரியானது நமக்கும் சரியாக வரும் என்பது அவசியமில்லை தானே.

ஒரே மொழிக் குடும்பத்தை சார்ந்தவர்களின் தேசமான யூகோஸ்லாவியா இப்பொழுது இல்லை. அது பல தேசங்களாக சிதறிவிட்டது. ஒரே மதத்தினர் சேர்ந்து கட்டிய சோமாலியா தேசம் மனித வரலாற்றின் கருப்பு பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல தேசங்கள் இன,மொழி, மத உணர்வால் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கிறது. எது தங்கள் தேசத்தின் தேசிய உணர்வு என இன்னும் புரிந்து கொள்ளாமல் குழம்பிக் கொண்டிருக்கும் தேசங்கள் அதிகமே. ஆனால் சுவிட்சர்லாந்தில் கிட்டதட்ட 800 வருடங்களாக பல மொழிகள், கலாச்சாரம், மத பிரிவுகளை கொண்ட பல தேசியங்கள் ஒன்றாக, ஒரே தேசமாக சிறப்பாக வாழ்ந்து வருவது ஆச்சரியமாகதான் இருக்கிறது.

பல மொழிகள், பல கலாச்சாரங்கள், கிறுஸ்தவமென்றாலும் அதிலுள்ள பல பிரிவுகளை தழுவிய பெரும்பான்மையான மக்கள், வெவ்வேறு தன்மை கொண்ட நிலங்கள் என்று இருந்தும் மத,மொழி கலாச்சார அடக்குமுறைகள் இல்லாத நாடாகவும், ஒரு குழுவின் ஆதிக்கமற்றதாகவும் இன்று வரை இருப்பதால் சுவிட்சர்லாந்து ஒரு முரண்பாடுகளின் தேசமாகும். ஒரு தேசமென்றால் அது நிலப்பரப்பில் ஒன்றிணைக்கப்பட்டு மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றால் இணைக்கப்பட்ட, மக்கள் வாழும் பகுதியென நமக்கு பாடத்தில் சொல்லி கொடுத்தது சுவிசை பொருத்தவரை முழுமையாகப் பொருந்தாது.

வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையென கருதும் பல தேசங்கள் உண்டு. ஆனால் சுவிட்சர்லாந்தை பொறுத்தவரைக்கும் அவர்களின் வேறுபாடுகள் இன்றும் அவர்களுக்கு பிரச்சனையாக இருந்ததில்லை. ஜெர்மானிய மொழி பேசும் காண்டோன்கள் ( மாகாணங்கள்) கொண்டுவரும் சட்டத்திற்கு பிரெஞ்சு பேசும் காண்டோன்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், ஆனால் சுவிட்ஸர்லாந்து ஒன்றியத்தை விட்டு விலகுவீர்களா என்றால் இருவரும் “நோ” என்பார்கள். பல முறை அரசியல் சாசனத்தை திருத்தியும், ஆட்சி முறையை மாற்றியும், வேறுபாடுகளை நிர்வகிக்க கற்றுக் கொண்டனர் இவர்கள் எனலாம்.

தேசியம் மற்றும் தேசிய உணர்வுகளைக் குறித்து பல சிந்தனைகள் இருக்கின்றன.

தேசியமும், தேசிய உணர்வும் மனிதனின் அடிப்படை உணர்வு எனச் சிலர் கூறினார்கள்.

தேசியமென்பது கட்டுக்கதை, அது செயற்கையாக கட்டமைக்கப்படுவது, அது பெரும்பாண்மையினர் மற்றவர்களை சுரண்ட ஏற்படுத்திய போலியான உணர்வு என்பார்கள் சிலர்.

ஏர்னஸ்ட் கெல்லர் ‘தேசத்திலிருந்து பிறப்பதில்லை தேசிய உணர்வு, அதற்கு நேர் எதிராக தேசிய உணர்விலிருந்துதான் தேசம் பிறக்கிறது / அழிகிறது’ என்கிறார்.

தேசியமென்பது ஒருவருக்கு ஒருவர் முன்பின் தெரியாதவர்கள் கூட்டாக காணும் கனவு என்கிறார் இன்னோரு அறிஞர். தேசியம் உணர்வு போரை உருவாக்கும் என சிலர் நம்புகிறார்கள். தேசிய உணர்வின்றி தேசம் வலுப்பெறாது என இன்னும் சிலர் நம்புகிறார்கள்.

தேசியவாதம் என்பதை வெறும் ‘உணர்வுச் சீற்றம்’ எனக் கருதினாலும் சரி , ‘நிஜமான பிதற்றல்’ என்றாலும் சரி, அல்லது வேறு விதமாக சொன்னாலும் சரி, அது உண்மைக்குப் புறம்பான கூற்றாக இருந்தாலும் ‘தேசியவாதம்’ என்ற ஒன்றை மறுக்க முடியாது. அது மிகவும் சக்தி வாய்ந்தது,பெரும் மாற்றங்களைக் கொண்டுவர வல்லது.

ஒரு தேசத்தின் தேசியவாதம் எது என சரியாகக் கணிப்பதிலேயே ஒரு நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. இந்தியா எனது தேசம் என்பது தேசியம். ஏன் இந்தியா எனது தேசம் என்பதற்கான பதிலே தேசிய உணர்வை உருவாக்குகிறது. தேசியமென்றாலே ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே இனம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி என இருக்க வேண்டியதில்லை. எது நம் தேசிய உணர்வு என்பது நம் வரலாற்றிலிருந்தும், கடந்து வந்த பாதையிலிருந்தும் எடுத்து வடிவம் கொடுக்கப்பட வேண்டியது. ஏதோ யாரோ கண்ட கனவுகளுக்கு வடிவம் கொடுப்பதல்ல தேசியம்.

இதைத்தான் சுவிட்சர்லாந்து மக்கள் மிக அழகாகச் செய்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. வரலாறு முழுக்க தங்களின் தனித்தன்மையை எதற்கும் விட்டுக் கொடுக்காத இவர்கள். தனது தனித்துவத்தை விடாமல், அதே நேரத்தில் மற்றவர்களின் தனித்துவத்தையும் அங்கீகரித்து, கூட்டாக செம்மையாக வாழும் கலையை நேர்த்தியாக்கி இருக்கிறார்கள். தங்களின் வர்லாற்றின் தொடர்ச்சியாக தங்களின் தேசிய உணர்வை கட்டமைத்து சுவிட்சர்லாந்தை உருவாக்கி செம்மையாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்துக்காக தன் ஜெனிவாவையும் ஜூயூரிக்கையும் விட்டு யாரும் வரவில்லை. அப்படி வர வேண்டுமென்றும் யாரும் கேட்கவுமில்லை. “ஒன்றாக இருக்கிறோம். அதற்காக 2000 ஆண்டுகளாக என்னை நான் அடையாளப்படுத்தி வந்த என் அடையாளத்தை இழக்க விரும்பவில்லை” என உரக்கச் சொல்லுவதோடு நிற்காமல், இவர்கள் மற்ற குழுவினரோடு இணைந்து வாழும் மேஜிக் ஃபார்முலாவையும் தாங்களாகவே கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் மேஜிக் ஃபார்முலாவை உருவாக்கிவிட்டார்கள்.

நாம்?…..


குறிப்பெடுத்த புத்தகங்கள்/ கட்டுரைகள்

  1. History of Switzerland  – Heinrich Zschokke.
  2. Federalism: The Case of Switzerland -Wolf Linder.
  3. The Political System of Switzerland  – Residency Pre-Assignment World Comparative Politics – Tabea Hirzel.
  4. Analysis Of The Theory Of Soial Contract  – Jean Jazques Roussau.
  5. Do you know why you don’t know who the president of switzerland is? Joanna Lampka
  6. Rousseau and Geneva – Helena Rosenblatt
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அருமை அருமை
    நன்றி

    எனக்கென்னவோ தமிழர்களும் இத்தகைய வாழ்வியலையே முன்பு
    கொண்டிருந்தார்கள்
    பொது எதிரி வந்தால் வீழ்த்துவோம்
    மற்றபடி தனித்தனியாக வாழ்வோம் என்பதாக

    ஆரியர்கள் வருகையே
    இந்த வெகுளிகளை நயவஞ்சகமாக பிரித்து விட்டதென்பேன்

    ஆரியர்கள் ஒரு வேளை போரிட வந்திருந்தால்
    அப்போதே சேர்ந்து ஒழிச்சி கட்டி யி ரு ப் பார் கள்

    வாழ வந்தார்கள்
    வழி குடுத்து ஆப்பு வச்சிக்கிட்டோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button