இணைய இதழ்இணைய இதழ் 100குறுங்கதைகள்

தீ – ச.வி சங்கரநாராயணன்

குறுங்கதைகள் | வாசகசாலை

“ராம், என்னடா ஆச்சு? எப்படி இருக்கா இப்போ?” கதவோரம் நின்று தலையைத் துவட்டிக்கொண்டிருந்தவள் என்னைப் பார்த்ததும் வெளியே வந்தாள். துண்டோடு சேர்த்துக் கொண்டை போட்டுக்கொண்டாள். கடந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டு எப்போது வெளியே வந்தாலும் பாரதியின் அம்மா வாசலில்தான் நின்றுகொண்டிருந்தாள்.

“கஷ்டம்தான்னு சொல்றாங்க”

“கஷ்டம்தான். சிக்ஸ்டி பெர்சன்ட் பார்ன்லாம் கஷ்டம். நான்தான் சொன்னனே”

எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தலையை ஆட்டிவிட்டு கதவைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன். அவளும் பின்னாலயே வந்தாள்.

“எங்க…அம்மா இல்லையா?”

“ஊருக்குப் போயிருக்காங்க”

“அப்பா?”

“அவரும்தான்”

“டீ போடவா உனக்கு. காப்பியா, டீயா? பால் இருக்குல்ல?” கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தாள்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

“போ. போய் கை கால் கழுவிட்டு வா. டீ போட்டு வைக்கிறேன்.”

வெளியே வந்தபோது ஹாலில் டீ தயாராய் இருந்தது. அவள் டம்ப்ளர் காலியாக இருந்தது. அடுப்பில் இருந்து இறக்கியவுடன் அப்படியே எடுத்து வாயில் விட்டுக்கொள்வதால்தான் நாக்கு தடித்துப்போய் விட்டது. அவள் காதில் விழாதவண்ணம் முணுமுணுத்தேன்.

அவள், முன்பெல்லாம் இப்படி இல்லை. முன்பென்றால் பல வருடங்களுக்கு முன்பெல்லாம் இல்லை. போன பொங்கலுக்கு கரும்பைத் தின்றுகொண்டு ஒரு கூட்டமே அவள் வீட்டில் உட்கார்ந்து மஞ்சு விரட்டு பார்த்துக்கொண்டிருந்தோம். கல்யாண வீடு போல் எப்போதும் சத்தமாகவே இருக்கும் பாரதியின் வீடு. அடிக்கடி பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சண்டைப் பிடிப்பார்கள். பாரதிக்காகவும், எங்களுக்காகவும் அவர்களோடு மல்லுக்கு நிற்பாள். அவர்களோடு மட்டுமா, எங்கள் தெருவில் இருக்கும் எல்லோரிடமும் சண்டை பிடித்திருக்கிறாள். “பொம்பள புள்ள இருக்க வீட்ல இப்படி பசங்கள விடுறது சரி இல்ல” என ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் பாரதியின் சித்தப்பாவும் கோபப்படுவார்.

“பொண்ணுங்கள பொத்தி பொத்தி கைக்குள்ளயே வச்சுட்டிருக்க கூடாது. வைக்கவும் முடியாது. வீட்ட விட்டு வெளிய போனா அவங்க எல்லாரையும் சந்திச்சுதான் ஆகணும். வீட்டுக்குள்ள, நாம கூட இருக்கும்போதே அவங்கள பேஸ் பண்ண முடியலன்னா வெளிய போய் தனியா எப்படி சமாளிப்பாங்க. இப்போ நான் இல்ல? இப்படி பயந்திருந்தா ஒத்தப் பொம்பளப் புள்ளய வச்சுக்கிட்டு எப்படி வாழறதுன்னு இவ அப்பா போனப்பயே நானும் போயிருக்கனும்”

அப்போதெல்லாம் பாரதியின் அம்மாதான் எங்கள் நட்பு வட்டத்தில் மிகப் பிரபலம். எங்கள் கேங் பெரியது. எல்லாரையுமே அவள் பிள்ளையாகத்தான் பார்த்தாள். அடிக்கடி அனைவருக்கும் சமைத்துப் போடுவாள். சிக்கன் பிரியாணிதான் அவளின் ஸ்பெஷல். எப்போது அசைவம் சமைத்தாலும் எனக்காக மட்டும் தனியாய் சைவமும் செய்வாள். எந்தப் புதுப் படம் வந்தாலும் அவளுக்கும் சேர்த்தே டிக்கெட் போடச் சொல்வாள். விஜய் படமென்றால் கட்டாயம் முதல் நாள் முதல் ஷோ பார்த்தாகவேண்டும் அவளுக்கு. ஒரு வாரம் சேர்ந்தாற்போல் யாராவது வீட்டிற்கு வரவில்லையென்றால் வராத ஆளை கூட்டி வரச் சொல்லி மற்றவர்களை அனுப்புவாள். “என்ன சண்டையா…? யார் கூட…? உண்மையைச் சொல்” என விசாரணை நடக்கும். அதெல்லாம் ஒன்றுமில்லை என வேறு என்ன காரணம் சொன்னாலும் நம்ப மாட்டாள். அதற்காகவே பொய்யாய் யாரையாவது கையைக் காட்டியதும், அவள் அறிவுரைக் கூறி சேர்த்து வைத்ததெல்லாம் நடந்திருக்கிறது. “கூடிய சீக்கிரம் எல்லாம் அவங்க அவங்க பாதைல பிரிஞ்சு போயிடப் போறீங்க. ஏன் காலேஜ் போனாவே இந்தக் கேங்ல எத்தன பேரு இப்படி ஒன்னா இருப்பீங்கன்னு தெரியல. அதுக்குள்ள எதுக்கு சண்டைலாம்” அவள் சொன்னதுபோலவே நடந்தாலும் அதற்குப் பிறகுமே கூட எங்கள் கேங்கின் எண்ணிக்கை பத்திற்கு குறையவில்லை. அதில் எங்களை விட பாரதியின் அம்மாவிற்குத்தான் அதிக சந்தோஷம்.

ஒரு நாள் இரவில் எல்லாம் மாறிப்போனது.

பாரதி போன பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு அவள் யாரிடமும் எதுவும் பேசவில்லை. பெரும்பாலான சமயங்களில் கதவு சாத்தப்பட்டேயிருக்கும். எப்போது வேலைக்குப் போகிறாள். எப்போது வீட்டில் இருக்கிறாள் எனத் தெரியாது. அவளை எதிர்கொள்ள சங்கடப்பட்டுக்கொண்ட என் வீட்டிற்கு கூட நண்பர்கள் யாரும் வராமல் இருந்தார்கள்.

பின் அவளே ஒரு நாள் வீட்டிற்கு வந்தாள். “ராம், எல்லாரையும் பாத்து ரொம்ப நாளாச்சு. பசங்கள மட்டும் வர சொல்லு, போதும். அங்க வரலன்னாலும் பரவால்ல. இங்கயாச்சும் வர சொல்லேன்” ஊரில் யார் யார் இருக்கிறார்கள் என்று கேட்டு, அவளே அவர்களுக்கு கூப்பிட்டாள். மூன்று, நான்கு பேர்கள் வந்தார்கள். அவள் சமைத்து கொண்டு வந்தாள். என் வீட்டில் வைத்து சாப்பிட்டோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் கொஞ்சம் சந்தோசமாக இருந்தாள். ஆனால், அதன் பிறகு யாரையும் பார்க்க வேண்டும் என அவள் சொல்லவில்லை.

“போன வாரம் எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு கேஸ் வந்துச்சு”

“ஹ்ம்ம்”

“ரிமோட் எங்க? டிவிய போடு” அவளே எழுந்துபோய் டிவி அருகே இருந்த ரிமோட்டை எடுத்து வந்தாள்.

“ஆசிட் அட்டாக்”

“ஆறேழு வருசம் ஒன்னா சுத்திட்டு அவன்ட்ட காசு நல்லா கறந்துட்டு அப்றம் கழட்டி விடப் பாத்துருக்கா”

எனக்கு பயங்கரமான தலைவலி. நான் அப்படியே சோபாவில் படுத்துக் கொண்டேன். அவள் டிவியைப் பார்த்துக்கொண்டே பேசினாள்.

“ஆசிட் அடிச்ச பையனும் பக்கத்து வார்ட்லதான் இருந்தான். அவ மேல ஊத்திட்டு ஓடாம கொள்ளாம அங்கயே நின்னுட்டு இருந்திருக்கான். புடிச்சு அடி அடின்னு அடிச்சு கொண்டு வந்து போட்ருந்தாங்க”

“ம்ம்ம்”

“என்ன ஏன் நர்ஸ் காப்பாத்துறீங்க. அவ செத்ததுக்கு அப்றம் நானே ட்ரெயின் முன்னாடி விழலாம்ன்னுதான் இருந்தேன் அப்படின்றான். எப்படி இருக்கு பாரு இவங்க லவ் கத.. செமல்ல”

“கால விரிக்க வேண்டியது. அப்றம் யாராவது ஒருத்தர் கைய விரிக்க வேண்டியது. இதே பொழப்பு”

எனக்கு வாந்தி வருவதுபோல் இருந்தது.

“ஆண்டி.. ப்ளீஸ்…”

அவள் அதன் பிறகு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“ஜட்ஜ் டிக்ளரேசன் வாங்க வர்றாங்கன்னு சொன்னியே? வந்தாங்களா?”

“வந்தாங்க”

“என்ன சொன்னாளாம்?”

“சமைக்கும் போது புடவைல நெருப்பு புடிச்சிருச்சுனு சொல்லிருக்கா”

“அவ்ளோ லவ்வாமா? அப்படி இருந்தா எதுக்கு தீ வச்சுக்கணும்?”

நாங்கள் எங்கள் நண்பர்களுக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்ளும் ஒரே கேள்வி “ஏன் இப்படி ஆனாள்?” என்பதுதான். இத்தனைக்கும் அவளுமே காதல் திருமணம்தான். வீட்டை எதிர்த்துதான் அவளது திருமணமும் நடந்திருக்கிறது. பாரதி பிறந்த பிறகுதான் அவளின் அப்பாவின் உறவினர்கள் சமாதானம் ஆகியிருக்கிறார்கள். அவளது பக்கம் மொத்தமாக தலை முழுகிவிட்டார்கள். எங்களுக்குத் தெரிந்தவரை ஒரு நாள் கூட அவர்கள் யாரையும் பாரதி சந்தித்ததில்லை. அப்படி ஒரு நிலமையைத் தன் பெண்ணுக்கும் அவளே எப்படி தருகிறாள் என்பதை எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதே சமயம் எங்கள் யாரிடமும் அவளுக்கு கோபமே இல்லை என்பதும் எங்களுக்கு ஆச்சர்யமாய்தான் இருந்தது. பாரதி போன அன்று எங்கள் நண்பர்களில் பசங்களை மட்டும் ஸ்டேசனுக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது கூட எங்களுக்கு ஆதரவாய்த்தான் பேசினாள். “அவனுங்க என்ன பண்ணானுங்க பாவம்” என்ற அவள் சொன்ன ஒரு வரிதான் எங்கள் மீது விழ இருந்த அடிகளில் இருந்து காப்பாற்றியது.

“இப்படி பேசி பேசித்தான் புள்ளய இழந்துட்டு நிக்கிற. படிச்சு படிச்சு சொன்னேன். கேட்டியா? இப்போ அனுபவி” பாரதியின் சித்தப்பா, அதன் பிறகு அவள் வீட்டிற்கு வருவதை நிறுத்திக்கொண்டார். அதைப் பற்றி அவள் கவலைப்படவுமில்லை.

“இன்னும் உங்க கேங்கல எவ மிச்சமிருக்கா. இப்போ கொளுத்திக்கிட்டது கலைதான?”

நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அவள் நாக்கில்தான் தீ எரிகிறது என்று நினைத்துக்கொண்டேன்.

மேலும் சிறிது நேரம் டிவி பார்த்தாள். “சரி, நீ தூங்கு. நான் அப்றமா நைட்டுக்கு டிபன் பண்ணி எடுத்துட்டு வரேன். வெளிய எதுவும் ஆர்டர் பண்ணிட்டு இருக்காத”

அவள் கிளம்பவும் நானும் எழுந்து கொண்டேன். அதுவரை சொல்லலாமா வேண்டமா என மண்டையை உடைத்துக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.

“ஆண்ட்டி”

“சொல்லுடா”

“பாரதிய ஹாஸ்பிடல்ல பாத்தேன்.”

அவள் தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

“ப்ரெக்ணெண்ட்டா இருக்காளாம்”

அவள் ஒன்றும் பேசாமலே நின்றாள்.

“அவ ஹஸ்பண்ட் நல்லா பாத்துக்குறாராம் ஆண்ட்டி”

என் பக்கம் திரும்பினாள். ஒரு வறட்டுப் புன்னகையோடு “சரி” என்று சொல்லிவிட்டு கதவைச் சாத்திவிட்டுச் சென்றாள்.

narayanan.sangara@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button