
‘இந்தக் கட்டடம் அதிக சிகஸ்ததாய்விட்டபடியால் துரஸ்து செய்துகொண்டு வருகிறார்கள்’
1903-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் தினப் பத்திரிகைக் கட்டுரையில் வந்துள்ள வாக்கியம் இது. காசு கொடுத்து வாங்கிய பத்திரிகையை நேரம் செலவழித்துப் படித்து அது என்ன சொல்கிறது என்று புரிய பல மொழி அகராதியும் அந்தக் காலத்தில் தேவையாக இருந்திருக்கும். வேறே ஒண்ணுமில்லை, கட்டுரை ஆசிரியர் சொல்ல உத்தேசித்தது இதுதான் – இந்தக் கட்டிடம் அதிகமாகப் பழுதடைந்திருப்பதால் அதைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நூறு, நூற்றைம்பது வருடம் முந்தைய எழுத்துத் தமிழே இப்படி வினோதமாகத்தான் இருக்கும் என்று ஒட்டுமொத்தமாகக் கழித்துக்கட்ட முடியாது. கருப்பன் செட்டியார் என்ற திரு ஏ.கே செட்டியார் அந்தக் காலத் தமிழை இன்றைய மொழிநடையை விட எளிமையாக, சுவாரசியமானதாகக் கையாண்டு எழுதிக் காட்டியிருக்கிறார். அப்படி எழுதியவர்களின் எழுத்துக்கான உதாரணங்களைத் தொகுத்து வழங்கியும் இருக்கிறார். ‘தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்’ என்ற அவரது நூல் (சந்தியா பதிப்பக வெளியீடு) இந்த வகையில் முன்னோடி.
சுதேசமித்திரன் கட்டுரை ஒன்று இப்படி இருந்தால் இன்னும் பத்து அதே இதழில் நல்ல மொழிநடையோடு எளிய தமிழில் வந்திருப்பதைப் பார்க்கலாம்.
பழநி பயணக் கட்டுரை அதே சுதேசமித்திரனில் 1903-இல் வந்திருக்கிறது. பழநி முருகன் கோவிலில் பக்தர்கள் பட்ட கஷ்டத்தைச் சொல்வது இப்படி=
ஒரு பிரார்த்தனைக்காரர் அபிஷேகம் செய்யும் காலத்திலேயே வேறு ஒருவருடைய அபிஷேகமும் செய்யப்படுகிறது. ஒரு குருக்கள் விபூதி அபிஷேகம் செய்து முடிப்பதற்குள்ளாகவே வேறொரு குருக்கள் பஞ்சாமிருதத்தை அபிஷேகம் செய்கிறார். அது முடிவதற்கு முந்தியே மற்றொருவர் பாலைக் கொண்டுவந்து சாய்க்கிறார். இன்னொருவர் சந்தனக் குழம்பை ஊட்டுகிறார். மற்றொருவர் அர்ச்சனை செய்கிறார்.
1875-இல் ஜனவிநோதினி பத்திரிகையில் வெளியான செஞ்சிப் பட்டண யாத்திரைக் கட்டுரை கவிதையும் கூடியது –
வாசயோக்கியமான அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கிற அம்மண்டபங்களில் எப்பொழுதும் கடுங்காற்று வீசுகின்றது. மண்டபங்களின் மேல் ஏறிச் சுற்றிலும் பார்த்தாலும் பூமி அதலப் பாதாளத்தில் அழிந்து விட்டாற் போலவும், நான் ஆகாயத்தில் பறக்கிறது போலவும் தோன்றியதல்லாமல் சற்று நேரத்தில் (Fascination of the precipice) கிறுகிறுப்பான மயக்கமும் உண்டாயிற்று.
1910-ஆம் ஆண்டு சென்னையில் பறந்த விமானம் பற்றிக் குறிப்பிடுவது இப்படி –
சில நாளைக்கு முன் கல்கத்தாவில் ஒரு விமானம் செய்யப்பட்டு ஆகாயத்தில் பறந்ததாகத் தெரிவித்திருந்தோம். இப்பொழுது மற்றொன்று சென்னையில் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் ஆங்கில வண்டிப் பட்டறையாகிய ஸிம்ப்ஸன் கம்பெனியால் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மவுண்ட்ரோடில் பெயர்போன ஓட்டல் வைத்திருக்கும் டாஞ்சலிஸ் (டி ஆஞ்சலிஸ் என்றும் சொல்வதும் உண்டு) என்னும் பிரெஞ்சுக்காரரால் கண்டு பிடிக்கப்பட்டு, தமிழ் வேலைக்காரர்களால் செய்யப்படுகிறது. ஸிம்ப்ஸன் கம்பெனி மானேஜர் மேற்பார்வையின்கீழ் வேலை நடந்து வருகிறது. இப்போது 12 குதிரை சக்தியுள்ள எஞ்சினால் நடத்திப் பார்த்தார்கள். சென்னைக்கு அருகில் நடத்தினபொழுது திருப்திகரமாகவே இருந்ததாம். மறுபடியும் 25 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்சினைச் சேர்த்து விடும்பொழுது எல்லா ஜனங்களுக்கும் காட்டப்படும். இந்த விமானத்தின் மொத்தபளு, எஞ்சின், ஆளோடு சேர்த்து எழுநூறு ராத்தல்தான். இந்தச் சமயத்திற்கு 20 குதிரை சக்தியுள்ள ஒரு எஞ்சினை இந்த விமானத்திற்கு முடுக்கிவிட்டுப் பறக்க வைக்க யத்தனித்து வருகிறார்கள். இம்மாதிரியான விஷயங்களில் கூடிய சீக்கிரத்தில் நம் இந்தியர்களும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
இந்தக் கட்டுரை பிரசுரமான வார இதழ் இந்தியா. எழுதியவர் பாரதியார்

குறிப்பு – இந்தக் கட்டுரையில் கண்டுபிடிப்பு என்ற சொல்லை invention என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகப் பயன்படுத்துகிறார் மகாகவி. கண்டுபிடிப்பு discovery இல்லையோ.
***
ஓணம் தமிழ்நாட்டில், முக்கியமாக சென்னையில் கொண்டாடப்படுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். மகாபலி ஓணத்தன்று கேரள சேட்டன்மாரையும் தொட்டடுத்த மாநிலத்தாராகிய நந்தமிழரையும் சந்தித்து ஆசியருள வரும்போது கிட்டத்தட்ட முழுத் தமிழகமும் ஓண விடுமுறையில்.
பத்து நாள் ஓணப் பெருநாளின் திருவோண நாளன்று பாதி சென்னை கேரளமாகி விடும்.
அநேகமாக கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணி செய்யும் மூத்த இளைஞர்கள் ஆபீஸ் ஹாலில் பூக்களம் என்ற பூக்கோலம் அலங்காரமாக வைக்க தற்போதைய புது வழக்கமான கருப்பு வேஷ்டி, அச்சுதானந்தன் ஜிப்பா தரித்து, பூ வாங்கப் போவார்கள்.
செட் முண்டு என்ற தலைப்பில் சன்னமாகப் பூப்போட்ட வெள்ளைப் புடவையும் முழங்கை வரை மறைக்கும் அதே மாதிரி ப்ளவுஸுமாக தமிழ்ப் பெண்கள் ‘ஓணாஷம்ஸகள்’ என்று ஓண வாழ்த்தை மலையாளத்தில் சொல்ல ஆபீஸ் கேண்டீன் நாயரிடம் ட்ரெயினிங் எடுப்பார்கள். தலை குளித்து நெற்றியில் சந்தனம் தீற்றி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் வழிபடுவார்கள். அடுத்து ஓண சத்ய என்ற ஓண விருந்து. ஒரு காலத்தில் ஓண சத்ய வீடுகளில் விஸ்தாரமாக உண்டாக்கி, சாரி, சமைத்து எல்லோரும் தரையில் உட்கார்ந்து இலைபோட்டு உண்ணப்பட்டது. இப்போது ஏதாவது பெரிய ஹோட்டலில் முன்கூட்டியே ரிசர்வ் செய்து சுற்றமும் நட்புமாகக் கூடியிருந்து கழித்து, சாரி மறுபடியும், உண்டு மகிழ்வது நடக்கிறது. குறைந்தது பத்து ஐட்டமாவது உள்ள விருந்து.
நான் இந்த ஓணத்தன்று – ஆகஸ்ட் 29 2023 செவ்வாய் – குடும்பத்தோடு பாட்டி வீட்டில் ஓண சத்ய விருந்துண்டேன். பாட்டி வீட்டில் என்பது ஹோட்டல் பெயர். சென்னை தி.நகரில் இருக்கும் உணவு விடுதி. கல்யாண வீடு போல் விருந்துக்கு விரைகிறவர்களாகவும், உண்டு முடித்து வருகிறவர்களுமாக நெரிசலும் பரபரப்பும் ஓண வாடையும், சந்தன வாடையுமாக இருந்த சூழல். எங்கேயும் தமிழ்க் குரல்கள் தான் ஓணத்துக்கு வாழ்த்திக் கொண்டிருந்தன.
எனக்கு இஷ்டமான புளி இஞ்சி தொடங்கி கிட்டத்தட்ட 20 வகை கேரள பாரம்பரிய உணவு வகைகள் – பருப்பு வடை, தோரன், ஓளன், மெழுக்குப் புரட்டி, எரிசேரி, பப்படம், அவியல், ரெகுலர் சோறு, சாம்பார், ரசம் வகையறா. உண்ட பிறகு சின்னச் சின்னதாக குருவாயூரப்பனுக்கு நைவேத்தியம் செய்கிற தோதில் உன்னியப்பம், சக்க பிரதமன் வெல்லப் பாயசம், பாலடை பிரதமன் பால் பாயசம், மற்றும் ஸ்ட்ராங்க் ஃபில்டர் காஃபி.
உப்பேறி – ஊறுகாய் என்ன ஆச்சு?
***
பசிஃபிக் தீவு நாடுகளான ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் திரைப்படத் துறையில் பிரகாசித்திருக்கின்றனவா என்று போன மாதம் என்னிடம் யாராவது கேட்டிருந்தால் செயற்கை அறிவு artificial intelligence CHATGPTஐ விசாரித்திருப்பேன். இப்போது அந்த Down Under பிரதேசத்து சினிமா பார்த்து அறிவு பெற்று முகம் சற்றே ஒளிர்ந்திருக்கிறேன். விவரம் இதோ-
அரபு சாயையில் ஒரு ராஜகுமாரன். அமெரிக்கா வரும்போது தலைமுடி காடு மாதிரி அடர்ந்து இருக்கிறது. காரியதரிசி மூலம் ராஜகுமாரர்கள் முடிவெட்டிக் கொள்ளும் முடிதிருத்தகத்தைக் கூப்பிடச் சொல்கிறான். தவறுதலாகப் பெயர் கொடுத்துத் தேடி ஒரு அழகான கத்துக்குட்டிப் பெண்ணை அழைத்து வருகிறார்கள். கரெக்ட், அதே தான். அவள் தான் கதாநாயகி. சுமாராக முடிவெட்டுகிறாள். அட்டகாசமாகக் காதலிக்கிறாள். ராஜகுமாரன் அவளையும் கடையில் சக கத்துக்குட்டிப் பெண்கள் சிலரையும் தன் நாட்டுக்கு – இது நியூசிலாந்தில் இருக்கும் ஒரே கோட்டை- தன் கல்யாண நிச்சயதார்த்தத்துக்கு அழைத்துப் போகிறான். செகண்ட் ஹீரோயின் வந்தாச்சு. முடிதிருத்தும் பெண், ராஜகுமாரன் காதல் வலுவாகிறது. அவனுக்கு நாட்டில் ஏழைகள் இருப்பதே அவள் சொல்லித்தான் தெரிகிறது. சமூகப் பிரக்ஞையோடு காதலுக்காக முடி துறக்க, இது வேறே முடி, இளவரசன் தயார் – மீதியை சின்னத்திரையில் காண்க.
திரைப்படம் The Royal Treatment. Netflix Release.
முழுக்க kiwi கிவிகளே – நியூஸிலாந்து நடிகர்களே நடித்த படம் இது. இது போல் ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து படங்கள் குறைந்தது நான்காவது நெட்ஃப்ளிக்ஸில் இருக்கின்றன.
இன்னும் எத்தனை காலம் ஆஸிவுட்டிலும், நியூஸிவுட்டிலும் இம்மாதிரிக் கதை திரித்துக் கொண்டிருப்பார்களோ.
(தொடரும்…)