இணைய இதழ்இணைய இதழ் 62சிறுகதைகள்

வாள் – ஜார்ஜ் ஜோசப்

சிறுகதை | வாசகசாலை

கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும். ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். (நீதிமொழிகள் 18:8)

கூகுள் மேப்பைப் பார்த்தபடி சென்றடைந்தோம். அதுபோலொரு கிராமத்தைக் கண்டு ரொம்ப காலம் ஆகியிருந்தது. வண்டியை விட்டிறங்கி கோயிலுக்கு எதிரிலிருந்த டீக்கடையில் போய் நின்றேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் டீ போட்டுவிட்டு அழைப்பதாக உட்காரச் சொன்னார். ‘சாமியைப் பத்தி எதாவது சொல்லுங்க. ரொம்ப தூரத்திலிருந்து வர்றோம்’ என்றேன். மாமா அப்போது உள்ளே நுழைந்து தண்ணீர் பாட்டில் வாங்கினார்.

அம்முதியவர் மிகப் பொறுமையாக பாட்டிலை எடுத்துத் தந்துவிட்டு அரை நாற்காலியில் அமர்ந்தார். எங்களையும் எதிரே போடப்பட்டிருந்த பலகையில் அமரச் சொன்னார். கொட்டகை குளுமையாக இருந்தது. வெளியே இருந்த உஷ்ணத்தின் சுவடே தெரியவில்லை. அம்மாவையும் அப்பாவையும் அழைக்கலாமா என்று ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்தேன். அம்மா காரிலே இருப்பதாக சைகையிலேயே சொன்னார்.

‘நீங்க எந்த ஊர்லேந்துங்க வரதா சொன்னீங்க?’

‘திருச்சிலேந்துங்கய்யா. காலைல நாலரைக்கெல்லாம் கிளம்பிட்டோம். இப்பதான் இங்க வரமுடிஞ்சிது’ என்றார் மாமா. 

பெரியவர் அத்தனை தூரத்திலிருந்து பொறையார்க்கு வருவதை ஆச்சரியமாகப் பார்ப்பார் என்று நினைத்தேன். மிகச் சாதாரணமாக, ‘இங்க ஆந்திராவுல இருந்தெல்லாம் வெள்ளென வருவாங்க தம்பி. அவ்வளவு விஷேசம்’ என்றார் டீ போட்டுக்கொண்டே. அப்பா பெல்ட் இல்லாததால் இறங்கிவந்த பேண்ட்-ஐ இழுத்துவிட்டபடி கடைப்பக்கம் வந்து, வா வெளிய என்று கையசைத்தார். கிளம்பியதிலிருந்து அவரைப் பார்க்கும் போதெல்லாம் பகீரென்றுதான் இருந்தது. இருளறியா ஒளியைத் தின்னும் சாயை. ‘அவர் பேரு தெரியாதுங்க…’. ‘அவர் கோவில்தான்.’ ‘ஒன்பது மணிக்குப் பெரும்பாலும் வந்துடுவார்.’ ‘வரிசையில எல்லாம் கூப்பிடமாட்டாரு அவரா கூப்பிடுறதுதான்’ என தொடர்ந்து பெரியவர், மாமாவின் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் பதிலளித்ததை மனதில் ஓட்டியபடியே நால்வர்க்குமான டீயைப் பெற்றுக்கொண்டு காருக்குச் சென்றமர்ந்து மெல்லப் பருகினோம். ஒருவித அமைதி நிலவியது. 

‘மாமா, சாண்டியாகோவைத்தானே சந்தியாகப்பர்னு தமிழ்ல சொல்லுறாங்க?’

‘ஆமா. ஆனா, சாண்டியாகோ யார்னு தெரியுமா?’

‘ஸ்பானிஷ் பேர் போல இருக்கு. ஏதாவது பக்தியுள்ள போர் வீரரா?’

‘இல்ல இல்ல. அவர்தான் முதல் ரத்த சாட்சியா மரிச்ச அப்போஸ்தலர் ஜேம்ஸ். அந்தப் பேரை ஸ்பானிஷ்ல யாகூனு சொல்வாங்க. அது… யாகூப்ன்ற பேரோட திரிபு. பைபிள் அவரை யாக்கோபுனு சொல்லுது. செயிண்ட் – சந்த்னு ஆகி, ரெண்டும் சேர்ந்து சந்தியாகோனு ஆகி தமிழ்ல சந்தியாகப்பர்னு ஆகிடுச்சு.’

‘அப்படியா! எனக்குத் தெரியவே தெரியாது’ என்று அம்மா, அப்பா குடித்து முடித்திருந்த பேப்பர் கப்பை வாங்கினார்.

‘ஏன் மாமா! சர்சுக்கு எதிர்லதான் கடை வச்சிருக்காரு. ஆனாலும் அந்தத் தாத்தா, பிரேயர் பண்ணுறவர் பேரு தெரியாதுனு சொல்லுறாரே!’

‘எனக்கும் ஒன்னும் புரியல. சரி, உள்ள போய் உட்காருவோம். நீ உன் அப்பாவைக் கூட்டிட்டு வா’ என்று சொல்லிவிட்டு, அம்மாவைக் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார். அப்பா மும்முரமாகக் கையிலிருந்த கடைசி பீடியைப் பிடித்துக்கொண்டு வியர்வைக் கொட்ட அமர்ந்திருந்தார். கேஸ் வண்டி என்பதால் முன்சீட்டில் அமரச் சொல்லிப் புகைக்கவிட்டேன். அப்பா வரும்வரை வெளியிலிருந்து பார்க்கலாமென ஆலய வாசலுக்குச் சென்றேன். முகப்பில், ‘செயிண்ட் ஜார்ஜ் படைமிரட்டி புனித சந்தியாகப்பர்’ என்று எழுதியிருந்தது. 

பாரம்பரிய கத்தோலிக்க ஆலயத்தைப் போலவே இதிலும் வாயில்கள் மூன்றிருந்தன. அவை மூன்றிற்கும் கதவுகள் இல்லாமலிருந்தன. இடதுபக்கத்தில் நுழைந்ததுமே மாதா சொரூபமிருந்தது. அங்குமிங்குமாக பல தூண்கள் நின்றுகொண்டிருந்த ஆலயத்தின் வலப்பக்கத்தில் கணவன் மனைவி இருவரது திருவுருவச் சிலைகள் இருந்தன. அவர்களுக்குமுன் புதிதாக வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்ட வேட்டை நாயின் சிலையொன்றும் இருந்தது. ஆலய நடுவில் முன்பே கண்ட இரு போர் வீரர்களுனுக்கான அடையாளங்களுடன் குதிரையில் அமர்ந்தபடி இருக்கும் சிலைகள். அதில் வெள்ளைக் குதிரையிலிருப்பவர் படைமிரட்டி சந்தியாகப்பர் என்று கணித்தேன். சீக்கிரத்திலே என் கணிப்பு சரிதான் என்று தெரிந்துகொண்டேன்.  மூல சிலைகளுக்கு வலப்பக்கச் சுவரில், வயதான பிதா கைகளை விரித்தபடி தன் தீர்க்கமான கனிவுமிக்க விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தார். எல்லா ஓவியங்களைப் போலவே பிதாவின் கண்களும் எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் என்னையே பார்ப்பதுபோல் மயக்கம் தந்தன. நான் பார்ப்பதால் பார்க்கிறார்; நானிருப்பதால் இருக்கிறார் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டேன். 

அப்பா காரில்தான் இருக்கிறார் என்பதை மீண்டும் சரிபார்த்துக் கொண்டு, அம்மா மற்றும் மாமா பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டேன். அங்கமர்ந்திருந்த அனைவரும் ஏற்கனவே வந்திருந்தவர்கள் போல மிகச் சாவகாசமாகச் சாய்ந்தமர்ந்திருந்தனர். எல்லோரையும் சுற்றிச் சுற்றிக் கோழிகள் வலம் வந்தன. கொஞ்சம் அசைந்தாலும் கோழி விட்டைகளின் பிசுபிசுப்பை ஆடைகளில் சுமக்க வேண்டியிருக்கும் நிலையிலிருந்தது ஆலயம். ஆங்காங்கே கிடாக்களும். மார்பளவு வளர்ந்து நிற்கும் கிடாக்களை அப்போதுதான் நேரில் காண்கிறேன். அதன் கழிவுகளும் மேலிருந்து விழும் புறாக்களின் எச்சமும் திட்டுத்திட்டாகத் தரையில் படிந்திருந்தன. அதற்காகவே அடிக்கடி மேலே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. நேந்துவிடப்பட்டவையாக இருக்கலாம். அவ்வளவு அசுத்தமான ஆலயத்தை அதுவரை நான் கண்டதேயில்லை. முகம் சுளிக்கும் விதமாக இருந்தாலும் அதில் எதோ அமானுஷ்யம் இருப்பதாகப்பட்டது. அறியாத எதுவுமே எனக்கு அமானுஷ்யமாகத்தான் உள்ளது. 

‘தம்பி, அப்பா வரலயா? நல்லாயிரும் தானே!’ என்று என் காதில் அம்மா கிசுகிசுத்தார். 

‘கொஞ்ச நேரம் கழிச்சு கூட்டிக்கலாம்மா’ என வாசலைப் பார்த்தேன். நிர்வாகி வருவதாகவே தெரியவில்லை. அவரை எப்படி அழைப்பதென்ற குழப்பமுமிருந்தது. அவர் பூசகரா? குறி சொல்பவரா? சாமியாடியா? ஜெபம் செய்பவரா? கோயில் பிள்ளையா? என்னவென்றே புரியவில்லை. ஆனால், பார்க்க வேண்டுமென்கிற ஆவல் மட்டும் குறையவில்லை. மாமாவுக்கு அடிக்கடி போன் வரவே, பார்த்துக்கொள்ளும்படி சைகை செய்துவிட்டு வெளியே போனார். நானும் அம்மாவும் ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டோம். பல்செட்டைக் காலையில் தேடமுடியாமல் அம்மா போடாமல் வந்திருந்தார். பார்க்கவே வித்தியாசமாக, வயதானவரைப்போல் காட்டியது. சோகையுடனிருந்தது முகம். ஆறுமாதங்களில் எங்கிருந்துதான் இத்தனை சுருக்கம் வந்தது என்று சொல்லுமளவு மாற்றம் கண்டிருந்தது. அப்பாவின் மனச்சிதைவு நாளுக்கு நாள் வீரியமடைந்துகொண்டே போகாமலிருந்திருந்தால்? அதனால் அம்மாவுக்கு மன இறுக்கம் உருவாகி சில வாரம் மௌனித்திருக்காவிட்டால்? எல்லா மௌனமும் ஞான வரம்பே என்று நானும் நினையாமல் இருந்திருந்தால்? இங்கு வந்திருக்கவே வேண்டியத் தேவையே இல்லையே எனச் சுற்றிலும் பார்த்தேன். கணவன் மனைவியாக, மகனும் அப்பாவுமாக, இரு பெண்களாக, பாட்டிகள், தாத்தாக்கள், குழந்தைகளெனப் பல தரப்பட்ட வயதினரும் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரது உடையிலும் தோற்றத்திலும் நிறத்திலும்கூட நிறைய வேறுபாடுகள். சாமியே அழைப்பார் என்று டீக்கடை பெரியவர் சொன்னதிலிருந்து ஆர்வம் தாங்கமுடியவில்லை. அவரே அழைத்து என்ன பிரச்சினை என்று சொல்வாராமே! பார்ப்போம் நமக்கு என்ன சொல்கிறாரென்று! ஒன்றா.. இரண்டா… என மீண்டும் வாசலைப் பார்த்தேன். 

மாமா ரொம்ப நேரமாக அழைத்திருப்பார் போல.. முகத்தில் சலிப்புடன் வா எனக் கையசைத்தார். ‘இதோ வரேன்’ என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வாசலுக்கு ஓடினேன்.

‘உங்க அப்பாக்கு பஸ் ஸ்டாண்டிலே வச்சு மாத்திரை கொடுத்ததாதானே சொன்ன?’ 

‘ஆமா மாமா..’

‘என்னத்த சொல்றது. வண்டிய எடுடானு என்னைய அடிக்காத குறைதான். பேண்ட்டில, சட்டையில மேல தண்ணிய ஊத்திக்கிட்டுப் பார்க்கவே சகிக்கல. இங்க எதோ குட்டை இருக்காம் அந்தப் பக்கம்தான் போனாரு. போய் அந்தச் சாமி வரதுக்குள்ள கூட்டிட்டு வா, சீக்கிரம்’ என்றதும் அவமானமாக இருந்தது. அவரை என்ன சொல்லி அழைத்து வருவது? எதற்காகப் போனார்? யாரையாவது பார்த்துவிட்டு ஏதேனும் தேவையில்லாமல் கேட்டுவிடக்கூடாதென நினைத்துக்கொண்டே அவர் சென்ற திசையையே பார்த்தேன். செருப்பைத் தேய்த்து நடந்தபடி காற்றில் கைகளை விசிறிக்கொண்டு வேகவேகமாக நடந்துபோய்க் கொண்டிருந்தார். ஓடி அவரைத் துரத்திப்பிடித்து, காருக்கு அழைத்தேன். 

‘நான் எங்கயும் வரல. நீ பிடியக் கொடுத்துட்டு, முதல்ல என்னைய வீட்லேந்து எங்க கூட்டிட்டு வந்தெ’

‘தரேன் வாங்க.. அந்தப் பக்கம் கடையிருக்காம்’ என்று கையினைப் பிடித்து இழுக்க, ‘இப்ப கொடுடா. கள்ளப் பசங்களா… ஏமாத்தி எங்க கூட்டி வந்து கொல்லப் பாக்குறீங்க.’ என்று என்னை உதறித் தள்ளிவிட்டு வயக்காட்டுப் பக்கம் வேகமாக ஓடினார். வரப்புகளில் மட்டுமே நடக்க முடியும் என்ற அளவில் வயல்களில் பரவலாய் வெடிப்பு விழுந்துகிடந்தது. குட்டைப் பக்கம் போனவர், பெண்கள் இருப்பதைக் கண்டு வேறுபக்கமாய்ப் பள்ளம் பறிக்கப்பட்டிருந்த குளத்தருகே சென்று நின்றார். அது அரசாங்கம் கடமைக்கென வெட்டிய மழை நீர் குளம் போலிருந்தது. அங்கே இவர் இறங்குவது தெரிந்தால் சண்டையிடுவார்களோ என்று சந்தேகத்துடனே அவ்வப்போது முரண்டு பிடித்தவரைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டிருந்தேன். வியர்வையே புகை நெடிபோல் திணற வைத்தது.

‘பேண்ட்டை கழட்டாதயா. இங்கயா குளிப்பேன்னு வந்து நிக்கிறது. நல்லா எனக்குன்னு வந்து சேருறீங்க பாரு. சட்டையையும் கழட்டிப் போடு’ என்று கண்டபடி வாயில் வந்ததைப் பேசியபடி கழட்ட வைத்தேன். முன் எப்போதும் அதுபோல் பேசியதில்லை. அவரும் நடந்துகொண்டதில்லை. நான் நினைத்தால் இன்னும்கூட நிதானமாகக் கையாளலாம் என்று பட்டது. ஆனால், முடியவில்லை.

இறங்கியும் இறங்காததுமாகக் கத்த ஆரம்பித்துவிட்டார். அவரைச் சுற்றிப் பலர் இருப்பதைப் போன்றும், எல்லோரும் இவரோடு ஒருமித்துப் போவது போன்றுமொரு தோற்ற மிடுக்கில் என்னை அதட்டினார். காற்றில் நிறைந்திருந்த அவர் மனோரூபங்களோடும் போரிட வேண்டியிருந்தது. என்னை ஒருபோதும் திட்டியிராத வார்த்தைகளில், நான் கேட்டேயிராத வார்த்தைகளில் திட்டிக்கொண்டே இருந்தார். முன்னுக்குப் பின் முரணான அர்த்தமும் கோர்வையும் குழம்பிய சொற்களில் அவருக்கு முன்பே நனையத் தொடங்கியிருந்தேன். வெயில் ஏறத் தொடங்கிய சூட்டில் உள்ளங்கை வியர்வையால் நசநசத்தது. மாமாவை போனில் அழைத்து கைலியும் ஒரு கட்டு பீடி தீப்பட்டியும் வாங்கி வரச் சொல்லிவிட்டு அவரைப் பார்த்தேன். சேரில் புரண்டு அசிங்கமாகியிருந்த பேண்ட்டை எடுத்துப் போட முயன்றார். 

‘யோவ் லூசு. விடுயா அதை.. அசிங்கத்தப் போடப் போற.. அறிவில்ல உனக்கு..?’ எனப் பேசியதைக் கவனிக்காமல், அதையும்கூட உடுத்தாமலே குட்டையை விட்டுப் புறப்பட முயன்றார். அவரது கைகளைப் பிடித்திழுக்க, என் கைகளை விசிறிக்கொண்டே முன்னேற முயன்றார். நாங்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஊர்க்கார இளைஞர்களில் ஒருவன், குட்டையின் வேறு முனைக்குச் சென்றான். நாங்கள் மேலும் மல்லுக்கட்டுவதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் பீடியைப் பற்ற வைத்தபடி வேறு திசையைப் பார்த்து அமர்ந்தான். என் பிடியிலிருந்து மீளமுடியாக் கோபத்தில் அப்பா செருப்பை எடுத்து என் உடலெங்கும் கண்டபடி அடிக்க ஆரம்பித்துவிட்டார். தாங்கிக் கொள்ளமுடியாத அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு முன் இப்படி நடந்துகொண்டதே இல்லை. முகமெங்கும் ஒழுகிய வியர்வைத் துளிகளோடு அவரைப் பார்கையில் அகோரமாய் நானறியாத ஒருவராகத் தோன்றினார். அவரது முழுப் பெலத்தையும் ஒற்றைக் கையில் இழுத்துப் பிடித்து சமாளிப்பதைப் பற்றி ஓர் மெல்லிய சந்தோஷவுணர்வு என்னை மீறி வந்துபோனது. செருப்பை வீசிவிட்டுக் கல்லை எடுத்து என்னை அடிக்க ஓங்கினார். அவர் பயமுறுத்த அப்படிச் செய்வதுபோல் இருக்கவில்லை. மாமாவையும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணாததால், கல்லை ஏந்தியிருந்த கைகளை அழுத்திப் பிடித்தபடி நழுவ வைத்தேன். அவரை மணல் திட்டின் மீது தள்ளி மேலே ஏறியமர்ந்து, வலுவாக நான்குமுறை அறைந்தேன். ஒவ்வொருமுறை அவரது கன்னத்தை என் உள்ளங்கை வேகமாய்த் தீண்டும்போது இதயம் கனத்தது. ஐம்பது வயதின் உடலியலாமையை ஏற்கமுடியாமல் பலமாகப் பெருமூச்சுவிட்டபடி வெதுமணலில் படுத்தார். சட்டையில்லாமல் கீழ் நெஞ்செலும்புகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. பீடிப் பிடித்தபடி அமர்ந்திருந்த இளைஞனிடம் சென்று, ‘ஒரு பீடி இருந்தா கொடுக்க முடியுங்கலாணா? அப்பா கொஞ்சம் அடங்க மாட்றாங்க.’

அவன் மிகப் பரிவான குரலுடன், ‘தரேங்க. ஒன்னுதான் இருக்கு. வேறு யார்கூட வந்துருக்காங்க?’ என்றான்.

‘அம்மா. கோயில்ல இருக்காங்க’ என்றதும், ‘சிரமம்தான் பாத்துக்கோங்க’ என்று தீப்பெட்டிக்காகக் காத்திருக்காமல் போய்விட்டான்.

அப்பாவை நெருங்கி, ‘அப்பா பீடி’ என நீட்டினேன். ஆர்வமாக எழுந்து அனைத்தையும் மறந்தவர்போல் வாங்கிக்கொண்டு புகைக்கவாரம்பித்தார். அதுவரை மோசமாகத் திட்டியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அம்மா பக்கத்தில் இருந்திருந்தால் நான் பேசிய பேச்சைச் சகித்திருக்கவே மாட்டார். இன்னும் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம் என மீண்டும் மீண்டும் தோன்றியது. ஒருவகையில் அவசியமான கோபம்தான் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். மாமா கைலிப் பையுடன் தூரத்திலிருந்து கையசைக்கவே, அதை அணியவைத்து காருக்கு அழைத்துச் சென்றோம். மணி 11:30 ஆகியிருந்தது. 

கோயிலுள்ளே மூல விக்கிரகத்தையொட்டி போடப்பட்டிருந்த நாற்காலியில் மிகக் குண்டான ஒருவர் காவி வேட்டியுடன் அமர்ந்திருந்தார். அப்பாவை அழைத்துக் கொண்டு உள்ளே போனேன். முதலில் அடம்பிடித்தவர் பின்பு வந்தார். செருப்பை அவிழ்க்காமல் அவர் வந்ததும், நிறைய பேர் ‘வெளியே போடுங்க’ என்று சத்தமிட்டார்கள். அவர் ஒன்றும் புரியாதவராக ஒரு தூணுக்கருகில் வைக்கவே ஒருவன், ‘யோவ், வெளிய போடுன்னு சொல்லுறேன்ல’ என்று கத்தினான். நான் அவரை அமர வைத்துவிட்டு, செருப்பை வெளியே வைத்தேன். மலக்குவியலுக்கு அருகே அமர்ந்திருந்தும் அவனுக்குச் செருப்பு அசிங்கமாகப் பட்டது. அப்பா இரண்டு நிமிடம்கூட உட்காரமுடியாமல் பீடி பிடிக்க வேண்டுமென வெளியே போய்விட்டார்.

‘என்ன தம்பு?’

‘வெளியவே இருக்கட்டும் மா. இங்க கூப்பிட்டாப் பாத்துக்கலாம். அதான் மாமா இருக்காங்கள்ல’ என்று சாமியாரைப் பார்த்தேன். சராசரிக்கும் மிஞ்சிய உயரத்தில் பிரம்மாண்டமாய்ப் பெருத்த உடலுடன் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். அரை சயனம் போலிருந்தது. கூட்டம் மேலும் கூடவாரம்பித்தது. கோழிகளும் ஆடுகளும் தொடையில் ஏறி ஓடுமளவிற்கு நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர். பர்தா அணிந்த ஓர் இசுலாமியப் பெண், உள்ளங்கையைக் குவித்து சந்தியாகப்பர் முன் பிரார்த்தித்துவிட்டு சாமியார் முன் குனிந்து கையை நீட்டினாள். அவர் அப்பெண்ணின் விரலைத் தொட்டதும் கையை அப்படியே மடித்து தலைமுடியில் பூசிக்கொண்டாள். கையில் எண்ணெய் இருந்திருக்குமென நினைக்கிறேன். முடி மினுமினுத்தது. பலரும் அதுபோல் செய்தனர். ஒரு பெரியவர்க்கு எண்பது இருக்கலாம், அவரும் வந்து ஆசி வாங்கிவிட்டு சாமியாரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டுப் போனார். என்னால் சிகிககவே முடியவில்லை. அந்த நாற்காலிக்காரருக்கு நிச்சயம் ஐம்பத்தைந்துக்கு மேலிருக்காது. முதியவர் காலில் அணைவதை எப்படித் தடுக்காமலிருக்கலாம் எனத் தோன்றியபடியே இருந்தது. அது நிகழ்ந்தபோது அம்மாவும் ‘ச்ச்ச்ச்ச்…..’ என வாயில் கைவைத்தார்.  அவரது கால்மாட்டில் ஒரு சிறுவன் அமர்ந்து, கெண்டைக் கால் சதைகளைப் பிடித்துவிட்டான். பின்பக்கமாக நின்ற இன்னொருவன் தோளினைத் தட்டி மசாஜ் செய்துகொண்டிருந்தான். அந்தப் பயல்கள் உரிமையாகவும் விளையாட்டாகவும் செய்வது போலிருந்தது. 

‘எம்மா நீதான். கூட யாரு.. உன் பொண்ணா… கூட்டிட்டு வா’ என்று அவர் அழைத்ததும், ஓர் அம்மாவும் அவளது மகளும் அவள் மகளின் கணவனும் முன் சென்று கைகட்டி நின்றனர். ‘உட்காருங்க’ என்று தொடர்ந்தார்.  ‘இன்னும் உண்டாகல போலருக்கு பொண்ணு!’ என்றதும் ‘அடடா எப்படி அவராவே சொன்னார். ஏதும் ட்ரிக்ஸா இருக்குமோ. சரி, வந்துவிட்டோம் இனி என்ன சந்தேகப்பட்டுக்கொண்டு’ என நம்பிக்கையைத் திடப்படுத்திக்கொண்டு கவனித்தேன்.

‘ஆமா சாமி. நீங்கதான் சரி பண்ணிவிடணும்.’

‘பண்ணிரலாம்மா. ஆனா, தடையே நீயாவுல இருக்க. நீ பண்ணுன பாவம்ல உன் பிள்ளைய தொறதுது!’

‘நான் என்னங்க சாமி பண்ணேன். சரி பண்ணிவிடுங்க சாமி. கல்யாணமாகி நாலு வருஷமாச்சு!’ 

நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் சற்று நேரத்திற்குமுன் அனைவருக்கும் கேக் வழங்கியவரின் முதுகில் புறா அசிங்கம் பண்ணியது. அவர் மனைவி நீண்ட கிளினிக்கல் மாஸ்க்கால் அதைத் துடைத்தபடியிருந்தாள்.

‘நீ என்னமா எந்தத் தப்பும் பண்ணலேங்கிற.. சொல்லட்டா?’

அவர் அவளிடம் சொல்லட்டா என்றதும் எனக்கு லேசாகக் கிலியாகியது. ஒருவேளை என்னிடம் இப்படிக் கேட்கப்பட்டால்? இவர் வரம்பெற்ற மனிதராகயிருந்து என் அழுக்குகளைப் பட்டியலிட்டால்? என மனம் அதைச் சுற்றியே முள்ளாய் அசைந்தது. செயலைவிடச் சிந்தையைத் துளாவக் கூடிய அந்த மனிதனின் கண்களில் நான் விழுந்தால் என்னாவேன்! அவர் என் பருவத்தை வைத்துச் சில விஷயங்கள் கேட்கலாம். அதற்குமேல் என்ன கேட்டுவிட முடியும் எனக் காத்திருந்தேன்.

‘நீ புருஷனைத்தாண்டி ஒருத்தன்கூட உறவுல இருந்திருக்கம்மா. அப்போ அவனோட பொண்டாட்டி கர்ப்பமாயிருந்தா பாத்துக்க! அவவிட்ட சாபம்தான் உன் பிள்ளையைத் தொத்திக்கிடுச்சு’

‘ஐய்யய்யோ அப்படிலாம் இல்லவே இல்ல சாமி’ என்று அந்தம்மா கண் கலங்கிவிட்டார். என்னால் என் அம்மாவைத் திரும்பிப் பார்க்கமுடியவில்லை. சபையெங்கும் ஊமைக் கேவல் சத்தமெழுப்பத் தயாராகி மௌனத்திருந்தது. இவ்வளவு ஆபாசமாக தன் மருமகன் முன்னிலையில், நூற்றுக்கணக்கான புதியவர்கள் முன்னிலையில், கேவலமாகச் சுட்டப்படுவதன் வலியைப் பலராலும் உணரமுடிந்ததென நினைக்கிறேன். அந்தச் சாமியாரின் முகத்தைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. அவரது முதுகில் தட்டிக்கொண்டிருந்த சிறுவன் தற்போது வலது கையினை பிடித்துவிடத் தொடங்கினான். எல்லாம் சர்வசாதாரணமாக நடப்பதைப் போன்ற பிம்பத்தைப் பார்க்க முடிந்தது. டீக்கடை முதியவர், கையில் எலுமிச்சையுடன் வந்து சந்தியாகப்பர் முன் முழங்காலிட்டு முணுமுணுத்துவிட்டுப் போனார். பலவும் சம்பிரதாயமாக நடப்பதாகப் பட்டது. நான் அவ்வப்போது மேலே புறாக்கள் அமர்ந்துள்ளனவா என்று வேறு பார்க்க வேண்டியிருந்தது. மணிக்கணக்கில் சம்மணமிட்டிருப்பதில் கால் சூரைப் பிடித்ததால் இடத்தைச் சுருக்கிக்கொண்டு உதறியபோது, ‘இல்லவே இல்ல சாமி. நான் அப்படிப்பட்டவ இல்ல. இது அபாண்டம்’ என்றதும் அவருக்குச் சுருக்கென்று கோபம் வந்துவிட்டது. தன் இருக்கையைவிட்டு எழுந்துகொண்டார்.

அவர்கள் மூவரும் எழுந்து நின்றனர். அவளது மகள் தன் கணவனது கையைப் பிடித்து மெதுவாகப் பிசைந்தாள். அவனும் பதிலுக்குப் பரிவாய்ப் பிசைந்துவிட்டான்.

‘எம்மா, உன் வீட்டில மஞ்ச சுண்ணாம்புச் செவுரா?’

‘ஆமா சாமி’

‘வீட்டுக்குப் பின்னாடி வாய்க்காலிருக்கா?’

‘ஆமா சாமி’

‘கொல்லைப் பக்கத்திலிருந்து தயிர்காரிச்சி வீட்டுக்குப் போ முடியுமா?’

‘போகலாம் சாமி பக்கத்துவீடுதான், பால்காரங்க.’

‘ம்ம்.. அப்போ நான் சொன்னது சரிதானே. அவ புருஷன்கூடத்தான் நீ இருந்திருக்கே!’

‘ஐயோ சாமி!’ என அவர் காலில் விழுந்து முதுமையின் நுழைவு வாயிலிலிருந்த மெலிந்த தேகம் அழத் தொடங்கியது. அம்மா மீண்டும், ‘அச்சச்சோ..ச்ச்ச்.’ என வாயில் கை வைத்துக்கொண்டார். இது என்ன அசிங்கம் என்பதைப்போல் கிளம்ப எத்தனித்தோம். அவர் அறிந்துகொண்டதைப் போல் எங்கள் பக்கம் கைகளை நீட்டி, ‘நீங்க வெளியூர்லேந்து வந்திருக்கீங்கள்ல? உங்கக் கூட உடம்பு சரியில்லாதவர் வந்தாரே?’ எனச் சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு, தன் கைப்பிள்ளைக்குப் பால் கொடுக்கத் தூக்கிச் சென்ற பெண்ணையே பார்த்தார்.

‘ஆமாங்கய்யா காலைலயே வந்துட்டோம். திருச்சிலேந்து வர்றோம்.’ என்றேன்.

‘சரிப்பா உட்காருங்க. உங்களுக்கு ஜெபம் பண்ணிட்டேதான் உக்காந்திருக்கேன். எதோ பலமா கட்டப்பட்டிருக்கு. அப்பறமா பாக்குறேன். கொஞ்சம் பொறுங்க’ என்று மாமியார் உறவு பஞ்சாயத்திற்கே திரும்பிவிட்டார்.

காலையில் வந்ததும் எதிர்வீட்டு மாடியிலிருந்து ரொம்ப நேரம் காரையே பார்த்துக்கொண்டிருந்தவர், அவர்தானென நினைவுக்கு வந்தது.

‘நான் போய் அப்பாவைப் பார்த்துட்டு வரேன்’ என்று அம்மா சொல்லவும் அனுப்பி வைத்தேன். அப்பா குட்டைக்கருகே செய்த அட்டூழியத்தைச் சொல்லவேண்டாமென நினைத்திருந்தும் சொல்லிவிட்டிருந்தேன். சாமியார், அவர்களை எண்ணெய்யும் எலுமிச்சைப் பழமும் வாங்கி வரச் சொல்லிவிட்டு அடுத்ததாக ஒரு சிறுவனை அழைத்தார். சிறுவன் என்றால் பதினாறு, பதினேழு இருக்கும். ஆனால், குழந்தை முகம் மாறாமலிருந்தது. காத்திருந்தவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு ஒவ்வொருவரின் கதையையும், அவர்கள் வாங்கும் வசையையும், மறைத்து வைத்திருந்த – வெளிக்கொணரப்படும் குரூரத்தையும், இருண்ட பக்கங்களையும் காணும் ஆவலோடு காத்திருந்ததாகப் பட்டது. புதிதாக யார் முன்னால் அழைக்கப்பட்டாலும் அவர்களது கண்களில் தெரிந்த ஆர்வமும் உடல்மொழியின் மாற்றமும் அதைப் புரிய வைத்தது. தான் வெளிப்படக்கூடாது என்று அச்சப்படும் மனதுதான் அடுத்தவன் வெளிப்படுவதில் ஆனந்தமும் கொண்டு உறைந்திருந்தது.

‘என்னடா அம்மைய முழுங்கிட்டு அப்பனக் கூட்டிட்டு வந்துருக்கியா? நீ பண்ணுற வேலை சரியில்லயே’

‘இல்ல சாமி. நான் ஒழுங்காத்தான்….’

‘நிறுத்து! எனக்குத் தெரியாதா? சொல்லட்டா? சார், உங்கப் பையன் பொல்லாத காரியம் பண்ணுறான். இவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிரலாமா.?’

பழுக்கக் காய்ச்சிய இரும்புப் போல் சிவந்திருந்த கன்னத்தைத் தடவியவாறு, ‘சாமி… அதெல்லாம் நான்..’.

‘நிறுத்துடா பல பொம்பளைங்ககிட்ட போறதவிடப் பெரிய பாவம் பண்ணிட்டிருக்க. நிறுத்திக்கோ இல்லனா வாழ்க்கையே அழிஞ்சிடும். உடம்புப் போயிடும். சார் என்ன பண்ணுறான்னு தெரியுதா? இதுக்குமேல விளக்கிச் சொல்லத் தேவையில்லனு நினைக்கிறேன். போடா போய் உக்காரு’ எனக் கைகளை உயர்த்தி வெட்டி முறித்தார். என்னால் அதற்குமேல் உட்கார முடியாமல் – என் பைத்தியகாரத்தனத்தை எண்ணி மருண்டபடி – வெளியே வந்துவிட்டேன். 

‘விக்கிரகம் இருக்கும்போதே நான் கிளம்பச் சொல்லியிருக்கணும். சபைக்குப் போற நாமளே இங்கலாம் வரலாமா? என் பேச்சைக் கேக்குறதே கிடையாது. இங்கயும் கடவுள் கிடையாது; அந்தாள்கிட்டயும் கிடையாது. கிளம்பலாம் வா’ என்று அம்மா ஒம்னியின் பக்கவாட்டுக் கதவிடம் நின்றபடி சொன்னார். அப்பா அப்போதுதான் என்னைக் காலையிலிருந்து புதிதாகப் பார்ப்பதுபோல் சிரித்தபடி, ‘ஜெர்ரி…’ என்றார். அவரது கன்னத்தில் இலேசாகத் தடவினேன். இவருக்கு என்னதான் தீர்வு? நம்பி வந்துவிட்டோமே எனப் பதிலின்றி நின்றேன்.

மாமாவும், ‘ஆமாடா மாப்ள. டுபாக்கூர் மாறி தெரியுது. நல்லா விசாரிச்சிட்டு வந்திருக்கணும். தப்புப் பண்ணிட்டோம். நீ என்ன நினைக்கிற?’ என்றார்.

‘என்ன மாமா இத்தன பேரு முன்னாடி மருமகனை வச்சிக்கிட்டே மாமியா ஒழுக்கம் சரியில்லைனு சொல்றாரு. நாளைக்கு எப்படி அந்தக் குடும்பம் சேர்ந்திருக்கும்? அவன் எப்படி வாழுவான் அந்தப் பொண்ணோட?’

‘ம்ம். மெட்டிலா பேச்சைக் கேட்ருக்கக் கூடாது. அங்க போய்தான் குழந்தைப் பிறந்துச்சு. வீட்டுக்காருக்கு சம்பளம் ஏறுச்சுனு நம்ம சூழ்நிலைக்கேத்த மாறி ஏத்திவுட்டுட்டா’

‘ரெண்டு பேரும் முதல்ல வண்டில ஏறுங்க.’ அம்மா சொன்னதும் கிளம்பினோம். இருந்தாலும் அரைநாள் உட்கார்ந்துவிட்டுப் பார்க்காமல் வருவது ஒரு நமைச்சலாகவே இருந்தது. மெட்டிலா அக்காவிடம் போனில் சொன்னோம்.

‘ஐய்யோ அப்படிக் கிளம்பக்கூடாதுடா ஜெர்ரி. அங்க இருக்க அசுத்த ஆவி எதாவது கூடவே வந்துரும். நல்லதில்ல.. உடனே திரும்பிப் போயிடுங்க.’

‘ஹாஹா.. அக்கா இன்னுமா? அந்தாளு ஃபிராடுகா. வந்து பேசுறேன்..’ எனக் கட் பண்ணப் போனேன்.

‘இப்படிப் பாதியில வருவீங்கனு தெரிஞ்சிருந்தா புள்ளைய அம்மாகிட்ட விட்டுட்டாவது கூட வந்துருப்..’. என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கட் செய்தேன்.

காரைக்கால் வழியாகத் திரும்பினோம். தாத்தாவுக்காக இரு போர்ட் வொய்ன் பாக்கெட்கள் மட்டும் மாமா வாங்கிக் கொண்டார். திருவாரூரில் சாப்பிட்டுவிட்டு, தஞ்சை தாண்டி வந்துகொண்டிருக்கும்போது, அம்மாவை ஃபிட்ஸ் தாக்கியது. அவரது துடித்துக்கொண்டிருக்கும் உடலைப் பார்த்து பரிதவித்து நான் காரின் முன்னிருக்கையிலிருந்து பின்னால் தாவினேன். என் திடீர்த் தாவலில் வாகனத்தை நிலைக்குக் கொண்டுவர இயலாது நெடுஞ்சாலையில் மாமா ஸ்டீரிங்கையை அலைய விட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது அப்பா புதிதாய் ஒரு பீடியைப் பற்ற வைத்து இதழ்களில் புன்னகை விரிய என்னைப் பார்த்து, ‘அம்மாவைப் பிடிடா ஜெர்ரி’ என அடுத்த உறிதலுக்காய் அழகாய்க் கையை மேலிழுத்து எரியும் கங்கிணை உள்ளிருத்திக் கொண்டார். கங்கின் புகையாகா வெப்பம் அவர் கண்களில் கனன்று கொண்டிருந்தது. உடல் சரிந்தும் அம்மாவின் கண்கள் அனிச்சையாய் அழுகையுடன் அவரது கரிய புகை உதடைக் கண்டு மூடி மூடித் திறந்தன. 

********

george.joshe@gmail.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button