இந்திய அரசு வழங்கும் விருதுகள் மீதிருக்கும் மதிப்பும், மரியாதையும் என்றோ காணாமல் போய்விட்டாலும் கூட அவ்வப்போது உற்சாகம் தரும் ஒரு விஷயமாக அவை இருப்பதை நாம் மறுக்கவும் இயலாது. பாலைவனத்தில் தொலைந்துபோனவனின் எதிரே தோன்றும் நீர்ச்சுனை போன்ற ஒரு விஷயம் இந்த விருதுகள். இனியும் இங்கே செய்வதற்கு ஒன்றுமில்லை என்று மனம் வெறுத்துப்போன பல படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விஷயமாக விருதுகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. திரைப்படங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும் தேசிய விருதுகளும் அதில் ஒன்று.
ஆனால் அரசியல் மண்டிக்கிடக்கும் அந்த விருதுகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஒரு வரலாற்றை நாம எழுதித்தான் ஆகவேண்டும். ஏனெனில் மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு. இதோ நடந்து முடிந்த 78வது தேசிய விருதுகள் அறிவிப்பில் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. மீறி விருது வாங்கிய சில படங்களும் கூட அதற்கு தகுதியானவைதானா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. வாருங்கள் அலசுவோம்.
எந்த ஒரு திரைப்பட விருது என்றாலும் அதில் ஐந்து பிரிவுகள் மிக முக்கியமானவை. ஒன்று இந்தியாவின் சிறந்த திரைப்படம். இதுவரை தமிழ் சினிமாவில் அந்த பிரிவில் விருது வாங்கிய படங்கள் மொத்தம் எத்தனை தெரியுமா? இரண்டே இரண்டு. 1990-ல் சிவகுமார் நடிப்பில் வெளிவந்த மறுபக்கம் அடுத்து 2007-ல் பிரகாஸ்ராஜ் நடித்து ப்ரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம். இந்த இரண்டு படங்களையும் திரையரங்கில் பார்த்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதெல்லாம் வேறு விஷயம். ஏனெனில் 78 வருட விருது பட்டியலில் இரண்டே இரண்டு தமிழ்ப்படங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்னமாதிரியான விஷயம்?
இதுவே இந்தியில் 14 படங்கள் இதுவரை விருது வாங்கியுள்ளன. 11 மலையாளப்படங்கள் இந்தப்பெருமையை பெற்றுள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றவை. அவ்வளவு ஏன் கன்னடப்படங்கள் கூட ஆறு முறை இந்தப்பெருமையை பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கனவுத்தொழிற்சாலையின் நிலை இதுதானா? ஒரே ஆறுதல் தெலுங்கில் பாகுபலி மட்டுமே அந்த விருதை பெற்றுள்ளது. ஆனால் தெலுங்கு உலகின் கதையே வேறு.
மராத்தியில் மொத்தம் ஐந்து படங்கள். கிட்டத்தட்ட அந்த தரத்திற்கு நெருக்கமாக, சில இடங்களில் அதை தாண்டும் விதமாக இருந்த பரியேறும் பெருமாள் எந்தவிதத்தில் விருதுக்கு தகுதியில்லாமல் போனது என்பதை யார் விளக்குவார்? யாரிடம் கேள்விகள் கேட்பது? சொல்லப்போனால் எந்தவிகிதத்தில் இந்தப்படங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்? இதைவிட முக்கியமான கேள்வி தமிழ் சார்பாக சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரம் படத்தை பார்த்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அந்த படத்தின் இயக்குனருக்கு இது இரண்டாம் தேசிய விருதாம். அவர் பெயர் கூட இங்கே யாருக்கும் தெரியாது. உண்மையில் ஒரு சிறந்த படம் என்பது மக்களின் அங்கீகாரத்தின் மூலம் எழுவதே தவிர, ஐந்தாறு பேர் அமர்ந்து முடிவு செய்வது அல்ல. அதற்காக ஒட்டுமொத்தமாக நன்றாக ஓடிய படம் மட்டுமே தகுதியானது என்று கூறவில்லை.
உதாரணமாக சொன்னால், ஆஸ்கரில் பங்குபெறும் அல்லது நாமினேட் செய்யப்படும் ஒரு படம் அமெரிக்காவின் திரையரங்குகளில் கண்டிப்பாக வெளியாகி இருக்கவேண்டும் என்கிற விதிமுறை உண்டு. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அதை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தமுறையின் காரணமாக பரவலாக அந்த படத்திற்கு நாலாபுரம் இருந்தும் விமர்சனங்கள் எழும். அதில் இருக்கும் நிறை குறைகளின் மூலம் நாம் அந்த படம் தகுதியானதா இல்லையா என்பதை ஓரளவு முடிவு செய்யலாம். அதுவே ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச்செல்லும். ஆனால் இங்கே வெறும் பிலிம் பெஸ்டிவல்களில் வெளியான, அந்த வருடத்தில் சென்சார் செய்யப்பட்ட பட என்கிற ஒற்றை காரணமே விருது கொடுக்க எதுவாக இருக்கிறது. இதை எப்படி எடுத்துக்கொள்ள?
அடுத்து மிகமுக்கியமான ஒரு விஷயம் இயக்கம். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களை உருவாக்குவதில் தமிழ் சினிமா என்றுமே சோடை போனதில்லை. இதுவரை தமிழில் இந்த விருது வாங்கியவர்கள் நான்கே பேர். அகத்தியன்,பாலா, வெற்றிமாறன் ஆகிய மூவரும் நமக்கு நன்கு அறிமுகமான படங்களை இயக்கியவர்கள். இதுபோக எடிட்டர் லெனின் ஊருக்கு நூறுபேர் படத்திற்காக வாங்கியிருந்தார். ஆனால் இந்த வருடம் இந்தியில் விருது வாங்கியவர் யார் தெரியுமா? URI – Surgical Strike படத்தை இயக்கியதற்காக ஆதித்யா தர்-க்கு வழங்கப்பட்டிருக்கிறது. காரணம் நீங்கள் அறிந்ததுதான்.
மற்ற மொழிகளில் இதைவிட மிகச்சிறந்த படங்கள் மற்றும் இயக்கம் நிகழ்ந்திருக்கிறது. தமிழிலேயே குறைந்தது ஐந்து படங்களை கூறலாம். வடசென்னை, 96, ராட்சசன், பரியேறும் பெருமாள்,அசுரவதம், மேற்குத்தொடர்ச்சி மலை என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.
சரி நடிகர்களை எடுத்துக்கொள்வோம். விருது வாங்கிய விக்கி கவுஷால் மற்றும் ஆயுஷ்மான் குரானாவை நான் குறைகூறவில்லை. ஆனால் பதாய் ஹோ மற்றும் URI படத்தை விட அட்டகாசமான நடிப்பை கொண்ட படங்கள் 2018-ல் அணிவகுத்து நின்றிருக்கின்றன. உதாரணத்திற்கு வடசென்னை தனுஷ். எப்படிப்பட்ட ஒரு பாத்திரப்படைப்பு அது? ஏன் இவர்களின் கண்களில் அது தென்படுவதில்லை? நடிகைகளில் கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்தது மட்டுமே ஒப்புக்கொள்ளக்கூடிய அளவில் இருந்தது. ஏனெனில் மஹாநடிகை படத்திற்காக அவர் அவ்வளவு உழைத்திருந்தார். இந்த உழைப்பு ஏன் மற்றவர்களை தேர்ந்தெடுக்கையில் கண்களுக்கு தெரியவில்லை?
ஆடுகளம் வெளியான வருடம் தமிழ் சினிமாவிற்கு மொத்தம் எட்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்கான காரணம் என்னவென்று அலசினால் அப்போது ஜூரி பேனலில் இரண்டு தமிழர்கள் இருந்தார்களாம். அதன் காரணமாகவே தமிழ் சினிமாவுக்கு கிடைத்தது என்கிறார்கள். என் ஒட்டுமொத்த கேள்வியே இதுதான். ஆக இங்கே ஒரு நல்ல படத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்றால் அங்கே பேனலில் நம்மாட்கள் இருக்கவேண்டும் என்பதை விட கொடுமையான விஷயம் ஏதாவது இருக்கமுடியுமா?
இந்த புறக்கணிப்பு இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல. பல காலங்களாக இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணத்திற்கு சிவாஜி கணேசன் அவர்கள் இன்று வரை சிறந்த நடிகருக்கான ஒரு விருது கூட வாங்கியதேயில்லை என்பதை எங்ஙனம் எடுத்துக்கொள்வது? அதுவே அரசியல் காரணங்களுக்காக ரிக்ஸாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்ஜிஆருக்கு தரப்பட்டது. இதெல்லாம் அராஜகம் அன்றி வேறென்ன?
‘கோயி மில் கயா’ என்றொரு இந்திப்படம். ஸ்பீல்பெர்க்கின் ET படத்தை அப்படியே காப்பியடித்து எடுக்கப்பட்ட இந்தப்படத்திற்கு Best film award for other social issues என்கிற பிரிவில் விருது தந்த கூத்தெல்லாம் இங்கே நடந்திருக்கிறது. ஆனால் உண்மையில் சாதிக்கொடுமைகளை அப்பட்டமாக திரையில் காட்டி, அதை வசூல் ரீதியாகவும் வெற்றிபெறும் வண்ணம் காட்டிய பரியேறும் பெருமாளுக்கு விருது இல்லை. ஆஹா என்னவொரு நடுநிலை!
அதேபோல் மணிரத்னம் அவர்களின் ரோஜா, பாம்பே ஆகிய இரண்டு படங்களும் Best film on National Integration பிரிவில் விருது வாங்கியிருந்தது. உண்மையில் எந்தவித சினிமா அறிவும் இல்லாத மனிதர்கள் நடுவர்களாக இருந்தால் மட்டுமே இப்படி விருதுகள் தர இயலும். மேற்கண்ட ரோஜா, பாம்பே இரண்டு படங்களும் மிக மிக மேலோட்டமாக இந்தியாவின் இரு முக்கிய பிரச்சினைகளை அலசிய படம். இந்தப்படங்களில் சொல்லப்படும் தீர்வுகள் “நான் பிரதமரானால்” என்கிற தலைப்பில் கட்டுரை எழுதும் ஐந்தாம் வகுப்பு பையனுக்கு இருக்கும் அறிவை விட குறைவான அறிவைக்கொண்டு சிந்திக்கப்பட்டவை. நல்ல இசையும், அலங்காரமான ஒளிப்பதிவும், தேர்ந்த நடிகர்களும் மட்டுமே ஒரு நல்ல படத்தை தீர்மானித்து விடாது. இதைவிட உக்கிரமாக தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்து பாலச்சந்தர் எடுத்த தண்ணீர் தண்ணீருக்கோ அல்லது ரோஜா வெளிவந்த அதே வருடத்தில் வந்த தேவர் மகனுக்கோ கிடைக்கவில்லை. இதையும் நாம் தமிழ் சினிமாவிற்கு செய்யும் துரோகமாகவே எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.
வெறுமனே இங்கே படங்களின் பெயர்களை பட்டியலிட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. உண்மையான மாற்றம் என்பது எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாத, பரிந்துரைகளுக்கு இடமளிக்காத நடுவர்களை, சினிமா காதலர்களை ஜூரி பேனலில் அமர்த்துவதால் மட்டுமே இது சாத்தியமாகும். அதுவரை நாம் புலம்பிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
Super…