...
இணைய இதழ்இணைய இதழ் 76தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 21

தொடர் | வாசகசாலை

ந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போது ஆரோவில்லில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நண்பர் அராத்து ஒரு முக்கியமான அவதானிப்பை முன் வைத்தார். நான் அமெரிக்கா பற்றிக் கூறுவதும், மற்றவர்கள் அமெரிக்கா பற்றிக் கூறுவதும் வேறுவேறான தகவல்களாக இருப்பதாகச் சொன்னார். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமெரிக்காவிலும் தமிழர்களாகவே இருக்கிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. அவ்வளவுதான் அவர்கள் அமெரிக்க கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள முடியும். ஆனால், என் வாழ்க்கை அப்படியல்ல. இது முழுக்க முழுக்க அமெரிக்க வாழ்க்கை. முதல் நான்கு வருடம் அரண்மனையில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், நமக்கு அரண்மனை வாழ்வு என்றுமே போதுமானதாக இருந்ததில்லை. அப்போது என்னிடம் கார் இல்லை. எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளியில்தான் இருப்பேன். பேருந்துகளிலும் ரயில்களிலும் பாஸ்டன் முழுவதும் சுற்றி வந்தேன். அப்போதுதான் ஒரு முக்கியமான விஷயம் எனக்குத் தெரியவந்தது. அமெரிக்க ஊடகங்களும் ஹாலிவுட் சினிமாவும் காட்டும் அமெரிக்கா ஒரு கற்பனையான உலகம். பாஸ்டன் வந்த முதல் வாரத்தில் ஒரு முதியவர் என்னிடம் வந்து, “சார், எனக்கு சில டாலர்கள் தந்து உதவ முடியுமா?” என்று பவ்யமாகக் கேட்டார். என்னையும் மதித்து இவ்வளவு மரியாதையாகக் கேட்கிறாரே என்ற ஆச்சரியத்தில் என்னிடமிருந்த சில டாலர்களை அவரிடம் கொடுத்தேன். அதுவரை இந்தியாவைத் தவிர மற்றெங்கும் பிச்சைக்காரர்கள் இல்லை என்பதுதான் என் புரிதல். ஆனால், அமெரிக்கா எங்கும் வீடில்லாமல், அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வோம் என்று தெரியாமல், இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நெருங்கிப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் என்னிடம் டாலர் கேட்ட அந்த முதியவர் என்ன செய்கிறார் என்பதை அங்கிருந்த சதுக்கத்தில் அமைதியாக அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். நான்கு பேரிடம் டாலர்கள் வாங்கிய பிறகு ஒரு கடைக்குச் சென்று சிகரெட்டுகள் வாங்கி புகைக்க ஆரம்பித்தார். பிறகு ஒரு பெரிய சாண்ட்விச் வாங்கி பாதி சாப்பிட்டுவிட்டு, மீதியை பாக்கெட்டுக்குள் சேமித்துக் கொண்டார்.

பிறகு பாஸ்டனின் பிரதானமான டௌன் டவுனில் நிறைய வீடில்லாத மனிதர்கள் இருப்பதைக் கவனித்தேன். இரவில் வெறும் பிளாஸ்டிக் தாள்களை போர்த்திக் கொண்டு தெருவோரங்களில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பாஸ்டனின் குளிர்காலம் கொடுமையானது. அதாவது எவ்வளவுதான் வசதியாக இருந்தாலும் குளிர் நம் முகத்தில் ஓங்கி அறைந்து கொண்டேயிருக்கும். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது நான் இருக்கும் இடத்தில் 10 டிகிரி ஃபேரன்ஹீட். நாம் பின்பற்றும் செல்ஷியஸ் அளவில் -12 டிகிரி. 0 டிகிரியில் அனைத்தும் உறைந்து போகும். -12ல் கற்பனை செய்து கொள்ளுங்கள். எந்த வார்த்தையும் இந்தக் குளிரை உங்களுக்கு கடத்திவிடாது. அதே சமயம் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் பஃபலோவில் பனிப்புயல் தாக்கி பலர் இறந்துவிட்டார்கள். பஃபலோவில்தான் நயாகரா அருவி இருக்கிறது. இந்தக் குளிரிலும் பலர் வீடில்லாமல் இருக்கிறார்கள். பொதுவாக குளிர்காலத்தில் இரவுகள் நீண்டும் பகல் சுருங்கியும் இருப்பதால் பலருக்கு பல உளவியல் பிரச்சனைகள் வரும். SAD என்று சுருக்கமாகச் சொல்வார்கள். Seasonal Affective Disorder. குளிரும் பனியும் மனிதர்களின் எல்லா கொண்டாட்டங்களையும் உறிஞ்சி எடுத்துவிடுகிறது. இந்தக் குளிரும் வீடில்லா மனிதர்களும்தான் என் எழுத்தின் ஆதாரமாக இருக்கிறார்கள். என்னுடைய நிறைய கதைகளில் இப்படியான வீடில்லா மனிதர்களை பற்றி எழுதியிருக்கிறேன். என் நண்பர்களுக்கு இது சலிப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு மனிதர்களிடமும் இப்படி பதியப்பட வேண்டிய நூறாயிரம் கதைகள் இருக்கிறது. நான் இதை ஒரு சாகசமாகவே செய்து பார்த்தேன். சாகசம் என்றால் உண்மையான சாகசம். ஒருமுறை இளைஞன் ஒருவன் என்னிடம் வழிப்பறி செய்து எல்லா டாலர்களையும் பிடுங்கிக் கொண்டான். என்னிடம் ஐம்பது டாலர்தான் இருந்தது. பின்னர் என் நிலையை புரிந்து கொண்டு முப்பது டாலரை திருப்பிக் கொடுத்து, இந்த மாதிரியான இடத்துக்கெல்லாம் வரக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினான். சிலர் மிகவும் மூர்க்கமானவர்களாக இருப்பார்கள். இப்படியான சாகசங்களை கதைகளாக எழுதினேன்.

சமீபத்தில் என்னுடைய செல்பேசியில் ஒரு வாய்ஸ்மெயில் வந்திருந்தது. ஒரு பெண்ணின் குரல் எனக்கு வாய்ப்பிருந்தால் உதவி செய்யுங்கள் என்று உரிமையாக கேட்டிருந்தது. முதலில் என் செல்பேசி எண் அவருக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்று புரியாமல் இருந்தது. பிறகு அந்தப் பெண் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்தேன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆர்வ மிகுதியில் எப்படி என்னுடைய எண் கிடைத்தது என்று கேட்டேன். யாரென்று தெரியாத ஓர் அழகிய இளம்பெண் எனது எண்ணைக் கொடுத்ததாக சொன்னார். பாஸ்டனில் அழகிய இளம்பெண் ஒருவர் எனது எண்ணை இன்னொருவருக்குத் தருவது வாய்ப்பேயில்லை. இருந்தாலும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம் அவரின் சோகக் கதையைக்கேட்டுக் கொண்டிருந்தேன்.

நல்ல ஒரு நிறுவனத்தில் முக்கியமான வேலையில் இருந்தவர் இவர். மேனஜருக்கும் இவருக்கும் ஒத்துவரமால் போகிறது. போதிய காரணங்கள் இல்லாமல் வேலையிலிருந்து நிறுத்தப்படுகிறார். அடுத்த வேலை கிடைப்பதற்குள் வீடு பறிபோகிறது. மீண்டும் வேலை தேடும் போது கொரோனா தாக்கம். வீதியில் தங்க வேண்டிய நிலை. வீடில்லாதவர்களுக்கு ஆதரவாக சில குடியிருப்புகள் இருக்கிறது. ஆனால், நரகத்தில் வாழ்வதும் அம்மாதிரியான குடியிருப்பில் வாழ்வதும் ஒன்று. சில வருடங்களுக்கு முன்னால் அம்மாதிரியான வீடில்லாதவர்கள் தங்கும் குடியிருப்புக்கு வேறொரு காரணத்துக்காக சென்றிருக்கிறேன். மல ஜலம் ஆங்காங்கே கழிக்கப்பட்டு காய்ந்து போய் கிடந்தது. துர்வாடைகளின் உச்சம் அங்கேதான் அனுபவித்தேன். இரவு நீங்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் உடமைகள் களவு போகும். கொஞ்சம் அழகாக இருந்தால் பாலியல் சீண்டல்கள். வரம்பு மீறும் போது கற்பழிப்பு, கொலை என்று போகும். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி இம்மாதிரியான சூழ்நிலைக்கு ஆட்படாதிருப்பது மட்டும் தான். அப்படியில்லை என்றால் ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாகிவிடுவது. அதானால் தான் வீடில்லாத பலர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும், ஜெயிலுக்குச் செல்வதும் வாடிக்கையாக இருக்கிறது. மனித வாழ்வு ஒடுக்கப்படும் போது, மனிதர்களுக்கான தன்மையை இழந்து சகமனிதனை இவர்கள் ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. நான் சந்தித்த பெண் இம்மாதிரியான குடியிருப்புகளில் இருக்க விரும்பவில்லை. எனவே, ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் வசித்து வருகிறார். இரவு இரண்டு மணிக்கு காம்ப்ளக்ஸ் மூடப்படும். அப்போது அந்தப் பெண் வெளியே போய்விட வேண்டும். மீண்டும் ஆறு மணிக்குத் திறக்கப்படும் போது உள்ளே வரலாம். இந்தப் பெண்ணுக்கு அசாத்திய எதிர்நோக்கு (Hope) இருக்கிறது. எப்படியும் இந்தக் கட்டமைப்புகளைக் கடந்து தான் மட்டும் வாழ ஒரு வீடு கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார். ஆனால், வீடில்லாமல் போனவர்கள் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் காத்திருந்தால் மட்டுமே அரசாங்கம் வீடு வழங்கும். இதை நான் அவரிடம் சொல்லவில்லை. மற்றவர்களில் எதிர்நோக்குகளை இல்லாமல் ஆக்குவதற்கு நாம் யார்? ஒரு கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்நோக்குகள் தீரும் போது அதன் வலியை உணர்ந்தவர்கள் மட்டுமே அறிவார்கள். நம் கண் முன்பாக நாம் மரித்து வேறொரு பிறவியாக நாம் வாழ ஆரம்பிப்போம். எதிர்நோக்குகள் முடியும் இடத்தில் மனிதன் விலங்காக மாறுகிறான். அதற்கு முன்பாக இவர் ஒரு நல்ல வழக்கறிஞரை ஏற்பாடு செய்து முட்டிமோதி ஒரு தங்கும் இடம் பிடிக்க வேண்டும். அதற்காகத்தான் என்னைத் தொடர்பு கொண்டுள்ளார். நான் எனக்குத் தெரிந்த நண்பர்களின் உதவியை நாடினேன். ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை. அவருக்காக பிராத்தித்துக் கொள்வதைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

இப்படி வீடில்லாதவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை குளிர். உடலில் இயல்பாக இருக்கும் சூட்டுடன் ஒருவர் இங்கு நிலவும் அதீத குளிரைத் தாங்க முற்பட்டால் சில மணி நேரத்தில் மரணம் நிகழும். மரணம் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு Frostbite இருக்கிறது. Frostbite என்பது குளிரின் காரணமாக நம் கை கால்கள் விரைத்து அதன் பகுதிகள் அப்படியே செயலற்று விழும். மேற்குலகம் ரொமாண்டிசைஸ் செய்தவற்றில் மிக முக்கியமானது பனி. முக்கால்வாசி மனிதர்களுக்கு பனிப்பொழிவு என்றால் பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஆனால், தொடர்ந்து தங்கள் கதைகளிலும் திரைப்படங்களிலும் பனியைக் கொண்டாடுவது போல பாவனை செய்து வருகிறார்கள். பனிப்பொழிவு மிகவும் அழகாக இருக்கும் ஆனால், அதைத் தொடர்ந்து வரும் செயல்பாடுகள் மகிழ்ச்சிகரமானதல்ல. வீடில்லாத அகதிகள் சிலர் குறைந்த வருமானத்திற்காக பனி அள்ளும் வேலையை மற்றவர்களுக்குச் செய்து கொடுப்பார்கள். அரசாங்கம் சாலையில் உள்ள பனியை அப்புறப்படுத்திவிடும். ஆனால், வீடுகளுக்கு முன் இருக்கும் நடைபாதையில் இருக்கும் பனியை அந்தந்த வீட்டில் வாழ்பவர்கள் அப்புறப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் வீட்டின் முன் பனி இருந்தால் அது பனிக்கட்டியாக உறைந்துவிடும். இதில் யாராவது வழுக்கி விழுந்தால் விழுந்தவர்களின் மருத்துவச் செலவு வீட்டு உரிமையாளர் மீது வந்து விழும். ஆக, பனிப்பொழிவுக்கு பிறகு உடனடியாக அவ்வளவு பனியும் அப்புறப்படுத்தப்பட்டு உப்பு தூவுவார்கள். வீட்டில் முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களால் பனி அள்ளி அப்புறப்படுத்த முடியாது. அப்படி முயன்று இருதயம் நின்று இறந்து போனவர்கள் அதிகம். ஆகவே, குறைந்த பணத்திற்கு வீடில்லாத மனிதர்கள் இம்மாதிரியான வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவார்கள். ஆனால், முறையான குளிர் சட்டைகளும் காலணிகளும் இல்லாத இவர்கள் Frostbite தாக்குதலுக்கு ஆளாவார்கள். Frostbite ஏற்படுவது யாருக்கும் தெரியாது. இயல்பாக இருப்பது போலவே இருக்கும். வலி இருக்காது. ஆனால், தாக்குதலுக்கு உள்ளான இடம் கருப்பாக மாறும். இந்த நிலையில் சில சிகிச்சைகள் செய்தால் பிழைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு உணர்வற்ற நிலையில் நம் விரல்கள் ஒவ்வொன்றாக கழன்று விழும். பிறகு எதுவும் செய்ய முடியாது. அதே போல இன்னொரு கொடுமையான விஷயம் Hypothermia. இதில் எப்போது மரணம் நிகழும் என்று யாருக்கும் தெரியாது. பாஸ்டனில் இன்று காலை ஐம்பது டிகிரி ஃபேரன்ஹீட் இருந்தது. செல்ஷியஸில் பத்து டிகிரி. ஆனால், அதே நாள் இரவு இந்த கட்டுரையை தட்டச்சு செய்துக் கொண்டிருக்கும் நேரம் 10 டிகிரி ஃபேரன்ஹீட். செல்ஷியஸில் -12. வீடில்லாதவர்கள் வெளியில் சின்ன போர்வை போர்த்திக் கொண்டு தூங்கிவிடலாம் என்று நினைத்துத் தூங்கினால் அடுத்த நாள் காலை எந்திரிக்க மாட்டார்கள். இதிலிருந்து வெகுசிலர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்களின் படி எல்லாம் உறைந்த நிலையில் தாங்கள் காற்றில் மிதப்பது போல உணர்ந்தார்களாம். பிறகு திடீரென வெக்கையாக உணர்ந்தார்களாம். எந்தளவு வெக்கை என்றால் எழுந்து எல்லா துணிகளையும் அவிழ்த்துவிட்டு நிற்க வேண்டும் என்று நினைத்தார்களாம். ஆனால், எதுவும் செய்ய முடியவில்லை. அதிஷ்டவசமாக சிலர் இவர்களை மருத்துவமனையில் சேர்க்க, உயர் சிகிச்சைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தெருவில் ஒரு பூனையோ நாயோ தென்பட்டால் உடனடியாக அது மீட்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் யாரோ ஒருவருக்கு தத்துக் கொடுக்கப்படும். ஆனால், நாடு முழுவதும் பல இலட்சம் மனிதர்கள் ஆதரவின்றி தெருவில் வாழ்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் வாஷிங்டன்-சியாட்டல் சென்றிருந்த போது தெரு முழுவதும் அவ்வளவு மனிதர்கள். எல்லாம் ஆதரவற்றவர்கள். ஒரு குறிப்பிட்ட தெருவில் மனிதர்கள் செல்லவே அச்சப்படும் அளவுக்கு வீடில்லாத மனிதர்கள். இதற்கெல்லாம் தீர்வுகள் ஏதும் இன்றி உலக நாடுகளிடையே அமெரிக்கா இன்னும் தன்னை ஒரு வல்லரசாகக் காட்டிக் கொண்டேயிருக்கிறது.

(தொடரும்…)

முந்தையது 

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.