நெஞ்ச வாய்க்காலுக்குள் வழிந்தோடும் கிராமத்து நினைவுகள் – இளையவன் சிவா
கட்டுரை | வாசகசாலை

சமகால கவிஞர்களில் பரவலாக அறிமுகமாகி நிறைய இதழ்களில் எழுதிவரும் கவிஞர் அய்யனார் ஈடாடி வெளியிட்டிருக்கும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு மற்றும் ஒரு ஹைக்கூத் தொகுப்பு ஆகிய மூன்றிலும் கிராமிய மணம் சற்று தூக்கலாகவே இடம்பெற்றிருக்கும். நகரத்தின் மத்தியிலிருந்தபடி ஓடைகளில் நீராடியபடியும் பறவைகளோடு உரையாடியபடியும் வெள்ளந்தி மனிதர்களின் இயல்போடும் நம்மால் இத்தொகுப்பின் வழியே உலா வர முடிகிறது.
இயற்கையும் இயற்கை சார்ந்த அமைவிடங்களும் கிராமியப் சூழலோடு பொருந்தியிருக்கும் கலைச்சொற்களோடு புதிய புதிய வார்த்தைப் பிரவாகங்களில் வேகமெடுத்து நமக்கு கிராமத்தின் இயல்பை வெளிப்படுத்துவதில் கவிதைகள் வரிசை கட்டி நிற்கின்றன.
அவரின் முந்தைய தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பிலும் கிராமியப் சொற்கள் இயல்பாகவே இடம்பெற்றுள்ளன. அலப்பி, சாணிப்பக்கு, புழுதிக் காற்று, முண்டியெழும்பி, ஆசக்தி, கொடுவாக்கள், சொடுக்கி, சீவாலி, முகங்குராவி, அரமரக்கா, நெற்றுக்கள், கூதக்காற்று, ஒரப்பு வெயில், வேணாப்பரித்த வெயில், சொனங்கி விழுதல், குலும பானை, சூட்டுப்பழங்கள், சண்டு படைக்கும், கொழுவங்கிணறு, பெருத்தொலிகள், கோதியலையும் நிழல், அனாமத்துக் கிடக்கை, முகட்டு சாலை, சீவாலி முங்கி, நிர்வாணச் சிறுவன் என பல வார்த்தைகள் விரவியுள்ளன.
இயற்கையில் ஏராளமான சொத்துகள் குவிந்து கிடக்கின்றன. இயற்கையில் ஒவ்வொரு உயிரும் ஒன்றுக்கொன்று தொடர்பில் வாழ்வதே உயிர்ச்சூழலுக்கு உகந்ததாக அமைகிறது. மழை பெய்கையில் உலகத்தின் நகர்வை உற்றுநோக்குகையில் மக்களின் கவனத்தில் ஏற்படும் மாற்றங்களும் கவிதைகளுக்குள் இடம்பிடித்து இயற்கை நேசத்தில் ஈர்க்கின்றன.
இயற்கையைக் காதலிக்கும் கவி மனதில் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ரசனையை வெளிப்படுத்துவோடு வறுமையை, உழவின் உழைப்பை, பறவைகளின் வாழ்வியலை, காதலின் மீதான கனவியலை, முதுமையின் வலியை, ஓயாது உயிர்களைக் காத்திட தன்னையே ஒப்படைத்தபடி உயரும் இயற்கையை கவிதைகளுக்குள் நிரப்பிக்கொண்டு நகர்ந்தபடி நாகரிகம் வளர்க்கும் நதியின் உயிர்ப்பை நெடுவாய்க்கால் முழுக்க மிதக்கவிடும் அய்யனார் ஈடாடியின் கவிச்சொற்களே நூலின் அடிப்படைக்குள் வித்தியாசம் காட்டுகின்றன.
“மெது மெதுவாய்
ஆழப் புணரும்
ஈரமழையில்
புதர்மண்டிக் கிடக்கும்
வெதுவெதுப்பான
புற்றிலிருந்து
தலைநீட்டும்
புற்றீசல்கள்
கட்டற்ற வெளியில்
நெடிய வற்றிப்போன
நிலத்தின் மடியில்
கிடத்தி அமர்கிறது.”
என மழை வற்றிய நிலத்தையும் ஈரத்தின் சாரத்தையும் ஒருங்கே காட்டி வானியலை அறிமுகப்படுத்துகிறது.
ஒற்றைச் செம்போத்தின் மீது கவிஞருக்கு தனி பிரியம் போலும். நிறைய இடங்களில் ஒற்றைச் செம்போத்து நம் மனதை அலப்பி விடுகிறது கவிதைகளின் வழியாக. ஓர் இடத்தில் பூவரச மரத்தில் பூ அலப்பி விடும் செம்போத்து மற்றொரு இடத்தில் மர மல்லி மரத்தில் பூ அலப்பி விடுகிறது. இப்படி கவிதைகளின் காட்சிப் படிமங்களில் அளவுக்கு அதிகமாகவே செம்போத்தைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார் கவிஞர்.
தனது வாழ்நிலையை, தான் வாழும் சூழ்நிலையை பலவித தளங்களில் தனது கவிதைகளில் பதிவிடும் கவிஞருக்கு கிராமத்தின் எளிய சொற்களும் வளமிக்க இயற்கையும் வரமளித்து பொருட்செறிவில் ஆழப்புகுந்து வர உதவுகின்றன. பெரும்பாலான கவிதைகள் காட்சிப் படிமங்களாகவும் காட்சிப் பதிவுகளாகவும் உள்ளன. உறவுகளின் மீதான மனிதர்களின் பாசமும் நேசமும் அவர்களின் இயக்கத்திற்கு ஏதேனுமொரு வழியில் உதவுகின்றன. இவரோ அம்மாவைப் பேசிய அளவிற்கு அடுத்த உறவுகள் குறித்து பெரிதாகக் கவிதைகளில் பேசவில்லை. இருப்பினும் தன் மண் சார்ந்த மக்களுக்காகவும் அவர்களின் வாழ்வியலுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் கவிதைகள் மூலம் குரல் கொடுத்துள்ளார்.
“கனல் எழும்பும்
மணல் புதைந்த
பனி மோதிடும்
ஆற்றுப்படுகையில்
சிதறிய வடுக்களாக
சிப்பிகள் அப்பிய
குழிமேட்டில்
முண்டியெழும்புகிறது
நிர்வாணப் புழுக்கள்
ஒருபக்கம்
படைகிளம்பும்
மீன்குஞ்சுகளுக்கு
குடைபிடித்துவரும் அல்லிஇதழ்கள்
சடைப்பிடித்த பாசிகளுக்கிடையில்
விடைகொடுக்கும் நீரலைகளோடு
நடையெழுப்புகிறது மறுபக்கம்””
என்னும் கவிதையில் புழுக்களும் மீன்குஞ்சுகளுமென எதிர்துருவங்களை காட்சிப்படுத்தும் இதில் எதுகை மோனையும் சந்த நயமும் இயல்பாகவே நம்மை வாசிக்கத் தூண்டுகின்றன.
மனிதர்கள் மது அருந்தும்போது வரும் மயக்கத்தில் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. சில பேர் மயக்க நிலையிலேயே கிடப்பர். போதையும் அது தரும் தீய சிந்தனைகளும் அவர்களை முழுமையாக தன்னை அறிவதற்குக்கூட தலைதூக்க விடாது. மது தனக்கான குடும்பத்தை சீர்குலைப்பதோடு நின்றுவிடாமல் தான் சார்ந்த சமூகத்தின் நகர்தலையும் நாசப்படுத்தி விடுவதால் ஏற்படும் விளைவுகள் எண்ணிலடங்காதவை.
“இருட்டின் வாசனையில்
தலைநீளும்
மெல்லின நத்தைபோல்
நகரும் பேருந்தில்
மூலையிடுக்கினுள்
இடம்பிடித்து வரும்
வெற்றிலைத்துண்டுக் கட்டருகே
கலைந்த ஆடையில்
உடல் கருத்த
நிர்வாண மரமாய்
மூத்திரக் கொச்சையோடு
மதுக்குளத்தில் மிதக்கிறான்
நிலையிலா
நினைவிலா
மானுடப்பிணம்””
என்னும் கவிதையில் மதுவில் மயங்கிக் கிடப்பவர்களை மானுடப் பிணம் என்று சாடியுள்ளார். பிணமாவது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால், மது அருந்தியவர்களோ எங்கு கிடப்பார்கள், எப்படி கிடப்பார்கள் என்று தெரியாமலேயே விளைவுகளை ஏற்படுத்துவதையும் உணர்த்தியுள்ளார்.
“திட மாத்திரை வில்லைகளோடு பிள்ளையைப் பறிகொடுத்த வயிறு கிழிந்த
தனிமையின் வெறுமையை விரட்டி அடிக்கிறது ஆட்டுக்கொட்டடியில்
பூவரும்பு அப்பிய
பூவரச மரத்தில்
உச்சிக்கொப்புகளை
அலப்பி உதிர்க்கும்
ஒற்றை செம்பூத்து..”
பிள்ளையை இழந்துவிட்டு மாத்திரைகளுக்குள் தன்னைப் புதைத்துக் கிடக்கும் தாய்மையின் தனிமையை அதன் கொடுமையை தணித்துவிடத் துடிக்கும் கிராமத்து உயிர்களை அவற்றின் தன்மையை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.
“களிற் மேலமர்ந் தக்கழல் அன்னை
கரைவலஞ் சுற்றிக் காக்க வந்த
எழிலாதி தன்னுயிர்தடம் பதித்து
குடமேந் திநின்ற தானத் தவத்தை
குளம் நிரம்பச் செய்தாளே
ஆற்றி லோர்வெள்ள த்தில்அடித்
துவந்து மின்னித் தங்கமாய் மிதந்தே
வேந்தி ரன்கைத னில்நீந்திப் பாய்ந்
திருபத்தோ ரங்குல மாய்படை
திரண்டு யணியாண்ட யய்யனே”
என்னும் கவிதை சங்கப்பாடலின் அடியொற்றி எழுதப்பட்ட ‘மரபுப்பா’வாகவே வெளிவந்துள்ளது. இப்படியும் கிராமத்து இயல்பை எழுதிப் பார்க்கும் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
“கண்ணீரின் சுவையறிந்த அம்மாவின் முத்தங்கள்
அழுத குரலோடு
வீட்டைக் கடக்கையில்
சிறுவன் மீது
பூ உதிர்க்கும்
மரமல்லி மரமென
உதிர்கிறது முத்தப்பூக்கள்.””
*””வேணாப்பரிந்த வெயிலில்
ஒதுங்கிப் பெய்யும் மழையென
வந்த கீழ்வானத்தின் முகடுகள்
பூவரும்பு அப்பிய
வேப்பங்கிளைகளை
சடசடவென
உதிர்த்த போது
களைக்கொத்துவோடு நனைகிறது
அம்மையின் வேர்வைப் பூக்கள்”
என்னும் இரண்டு கவிதைகளிலும் ஒருமை, பன்மை சிக்கல் உள்ளன. நனைகிறது என்று வருகிற போது பூ என்று வர வேண்டும். பூக்கள் என்றால் நனைகின்றன என வரவேண்டும். இதுபோன்ற ஒருமை, பன்மை பல கவிதைகளில் பயின்று வந்துள்ளதையும் கவனத்தில் வைத்திட வேண்டும்.
“புகைமுண்டியெழும்பும் அடுப்படியில்
வியர்வை படிந்த அம்மத்தாவின்
அகண்ட நெற்றிக்கு
ஒத்தடங்கொடுத்து விடும்
ஊது காற்று
முகட்டு ஓடுகளை
தொட்டணைக்கையில்
நிமிர்ந்து எரிகிறது
சாணிப்பால் பூத்த
ஒடுங்கிய அடுப்பில்
ஈரக்கட்டையிலிருந்து
செந்தீ”
என்னும் கவிதையில் வீட்டில் அடுப்பெரிக்கும் காட்சியோடு ஒரு தாயின் நிலையையும் சேர்த்தே உணர்த்தியுள்ளார். வியர்வைக்கு ஒத்தடம் கொடுக்கும் ஊதுகாற்றின் ஆறுதலாவது அம்மாவின் உழைப்பிற்கு மதிப்பு தருகிறது.
“முண்டியலைந்து
மொய்க்கும்
மனிதத்தலைகள்
பிரித்துப் பார்க்காத
அப்பழுக்கற்ற
சமபந்தியில் கூட
கூறுக்கறியை
முகம்பார்த்து வைக்கும்
மானுடர்களிடம்
பொய்த்துப் போகிறது
மெய்யான உறவுகள்”
என்னும் கவிதையில் அடையாளம் காட்டும் பொய் மனிதர்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆளுக்கேற்றவாறு பரிமாறுவது பாரபட்சமான அணுகுமுறையல்லவா. பந்தியில் அமர்ந்த பிறகு எல்லோரையும் சமமென்றே கருத வேண்டும். அப்பழுக்கற்ற சமபந்தி என்பதில் இருக்கவேண்டிய பாரபட்சமற்ற மற்றும் சமநிலையான அணுகுமுறையிலும் அழுக்கு இருக்கிறது என்பதையே இவ்வரிகள் படம் பிடிக்கின்றன.
“அலம்பும் வெயிலில்
வகுடெடுத்த
முகட்டு சாலைகளில்
குலுங்கி நிற்கும்
நகரப் பேருந்தில்
மாம்பழ நிறக்குழந்தைக்கு
அள்ளித் தெளிக்கும்
தாயின் உச்சி முத்தங்களால்
தணிகிறது இளஞ்சூடு”
என்னும் கவிதையில் குழந்தைகளை அன்புடனும் ஆறுதலுடனும் வளர்ப்பதில் தாய்க்கு நிகர் யாரும் இல்லை என்பதோடு வெயிலில் வாடும் குழந்தைக்கு முத்தம் தந்து சூட்டைத் தணிக்கும் தாயை படம்பிடித்துக் காட்டுகிறார்.
“குருதிப் பிசுபிசுப்புகள்
திரளாய் அப்பி
படிந்து கிடக்கும்
பெருந்தெருக்களில்
இனக்குழுக்களின்
சாதிக் கனல்
தாழ்ந்து கிடக்கும்
மேட்டுக்குடிகளை
பெருங்காற்றின்
அபத்தமாய் கூடி
சுட்டெரிக்கிறது
அப்பழுக்கற்ற
மனிதர்களை”
என்னும் கவிதையில் சாதியின் இருப்பை கவலையோடு விவரிக்கிறார். அணையா நெருப்பென எல்லோரது உள்ளங்களிலும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சாதியின் அனலுக்கு இரையாகும் அப்பாவிகளைப் பற்றி யாரும் கவலைப்படக் கூட நேரமில்லாமல் ஓடுகிறார்களே என்ற வருத்தத்தையும் பதிவுசெய்யும் கவிதையில் பெருங்குடிகளின் சாதிக் கனல் அப்பழுக்கற்ற மனிதர்களைச் சுட்டெரிப்பதையும் கண்டு கவலைப்பட்டுள்ளார்.
“தினந்தினம்
தூக்கமற்று
துக்கத்தின்
கதவு திறந்த வாசலாய்
செம்பூவாய்
அலைந்துறும்
பட்டியலின மக்களின்
பூங்கண்களுக்கு
தூக்கம் ஏதிருக்கப்போகிறது
எப்போதிருக்கப்போகிறது”
இன்றும் பட்டியலின மக்கள் எப்படியெல்லாம் ஆதிக்க சாதியினரால் அவமானத்திற்கும் இன்னல்களுக்கும் உள்ளாகிறார்கள் என்பதையும் அவர்கள் இப்போதும் சாதித் தீண்டாமைக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்பதையும் கவிதை வெளிப்படுத்துகிறது..
“கண்ணீரின் சுனைகளுக்குள்
கனத்து வலிக்கும்
சோகத்தின் நிரம்பல்கள்
உறிக்கப்பட்ட மரத்தின்
தூள் குவியலாய்
பெருகத் திரள்கிறது
வானூர்தி விரிவாக்கத்தால்
பறிகொடுத்த
முந்நூறாண்டு
நிலத்தில் மடியில்
மீண்டும் எப்போது
ஏர் பூட்டுவதென்று”
என்னும் கவிதையில் மக்கள் வானில் பறக்கவும் வெளிநாடு சென்று பொருளாதாரத்தை ஈட்டி நாட்டின் வளத்தை மேம்படுத்தவும் உள்ளூரில் உள்ள விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கியோ கையகப்படுத்தியோ அமைக்கப்படும் விமான நிலையங்களால் விவசாயிகளின் வாழ்வும் அவர்களின் தலைமுறையும் பாதிக்கப்படுவதை ஒரு விவசாயியின் வலியின் வழியே வெளிப்படுத்தியுள்ளார்.
“வீதிகளின் முனைகளில்
மொட்டப்பனைகளாய்
கனத்து நின்று
மின்மினிக்கும்
தந்திமரக் கம்பத்தில் அந்தரத்தில் அலையடிக்கிறது சீழ் வடிந்து புரையோடும் வெறிபிடித்த உணர்வுகளின் சாயக்கொடிகள்.”
கொடிகளின் எண்ணிக்கை பெருகப் பெருக மக்களின் மனங்களில் பெருகும் உணர்வுகளுக்குள் புரையோடும் எண்ணங்களை வெளிப்படுத்திவிடுகிறது இக்கவிதை.
“ஈரமான வெறகில்
கசியும் புகையென
சிறைச்சாலை வாயிலில்
ஒவ்வொரு முறையும்
பார்க்க வரும் போது
அம்மையின் கண்களில்
கசிந்து புகைகிறது
விடுதலையின்
தீராத அனல்”
இங்கே பிள்ளையின் விடுதலைக்கு மட்டுமல்ல அம்மாவின் போராட்டம். அடுக்களையின் ஓயாத புகையிலிருந்தும் பெண்ணுக்கான விடுதலையைத் தேடுகிறது கவிதை.
“உதிரும் கண்ணீர்
மரத்தின் சுருள்களாய்
தேய்ந்த உடலோடு
கூடை தூக்கிச் சுமந்து வெள்ளிக்கெழமை சந்தையில கூவிக் கூவி விற்றவளின் குரல்கள் காய்ந்து
கண்ணீர் உதிர்கின்றன
கருக்குடித்த மேகங்கள்
கூடி வருவதைப் பார்த்தும்
எச்சமிருக்கும்
கூறுக்காய்களின்
குவியலைப் பார்த்தும்.”
வாழ்க்கை நிலைப்பாட்டில் வயது ஒரு நகர்வாக இருந்தாலும் முதுமையில் தனிமை ஆணோ பெண்ணோ அனுபவிக்கும் போதே அதனதன் வலியை உணரமுடியும். கிழவியின் ஒருநாள் போராட்டத்தை உணர்த்தும் இவ்வரிகளில் உடல்ரீதியான மாற்றத்தையும் உளரீதியான இயல்பையும் அறியத் தரும் காட்சிகளும் தென்படுகின்றன.
நதிகளின் நகர்வுகளே நாகரிகத்தை, பண்பாட்டை விதைக்கிறது எனலாம். ஆதிமனிதன் நாடோடியாகத் திரிந்து அலைந்து உருவாக்கும் குழு அமைப்பும் குடும்ப அமைப்பும் பெருகிட நதிகள் பெரிதும் துணை நின்றன. தமிழகத்தில் தற்போது பல கட்ட ஆய்வுகளில் நடைபெறும் கீழடி அகழ்வாய்வுகள் இந்திய வரலாற்றின் போக்கையே மாற்றும் தரவுகளை வெளிப்படுத்துகின்றன. வைகை நதியின் துணையாறான கிறிதுமால் நதியின் கரையில் இருக்கும் கொந்தகை, கீழடி, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் ஆய்வுகள் புதிய புதிய செய்திகளை அறியத் தருகின்றன. சங்ககாலப் பாடல்களில் சுட்டப்பெறும் பல செய்திகளுக்கான தகவல்கள், தங்க ஆபரணங்கள், கருப்பு சிவப்பு நிற முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக் கட்டைகள், சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி, உறைகிணறுகள், செங்கல் கட்டட அமைப்புகள் என ஆயிரக்கணக்கான பொருட்கள் தொல்பொருள்துறையால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் ஆரியர் முதலானவர்களுக்கு முன்பே திராவிட நாகரிகம் தோன்றியிருப்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் இச்செய்திகளை உள்வாங்கிக்கொண்டு கவிஞர் கீழடியின் நாகரிகத்தை கவிதையாக்கி
“கிழவன்களின் நாகரீகத்தை
கீழடியில் அகலத்தோண்டுகிறது
தமிழ் சிற்றுளி”
என ஆனந்தமடைகிறார்.
நிர்வாணப் புழு, புற்றீசல், செம்போத்து, ஊர்க்குருவி, ரெட்டைவால் குருவி, நத்தை, மீன் குஞ்சுகள், சிலந்தி, பூஞ்சிலந்தி, வரிச்சிலந்தி, மின்மினி, நாய், நீளச்சாரை, உள்ளான்கள், கரிச்சான் குருவி, வெரால் மீன், கட்டக்கிளிகள், கருநாகம், தாடிப்பூச்சி, மீன் கொத்தி, பூனை, மைனா, மரவட்டை, நீர்ப்பறவை, வெள்ளாட்டங்கெடா, காராம்பசு, பூநாரை, மலைத் தேனீ, அக்காக் குருவி, காட்டுக் குருவி, தவிட்டுக் குருவிகள், சாமக்கோழி, சாம்பல் நாரை, சில்வண்டு, காக்கை, பச்சைக் கிளி, அரிவாள் நண்டு, மஞ்சள் வண்டு என கிராமத்தில் வாழும் (கொஞ்சம் காணாமல் போன) எண்ணற்ற உயிரினங்களை தனக்குள் பட்டியலிட்டுப் படம் பிடித்து வைத்திருக்கும் கவிஞர் நமக்கும் அறியத் தருகிறார். தனது சிந்தனைகளுக்குள் அவற்றை இயல்பாகவே உள்நுழைத்து அவற்றின் குணநலன்களை சரியான இடம் பொருத்தி காட்சிப்படுத்திக் காண்பித்து நகரவாசிகளை ஏக்கம் கொள்ள வைக்கிறார்.
.
நீர் மிதக்கும் நெடுவாய்க்காலில் தனக்கு நன்கறிந்த, தான் வளர்ந்து நிலைநின்ற கிராமத்தையே கவிஞர் பல வகைகளில் சுற்றிச் சுற்றி படம் பிடித்துக் காட்டியுள்ளார். கிராமம் குறித்து எழுதுவதற்கும் கிராமத்தைக் காட்சிப்படுத்துவதற்கும் கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி மனதை வெளிக்காட்டவும் இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன என்பதையே இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் காட்டுகின்றன. நகரத்தின் அவசர நகர்விற்குள் தன்னைத் தொலைத்துக் கொண்ட மனிதர்கள் நின்று நிதானித்து கிராமத்தை ரசிக்கவும் எளிமையைக் கைக்கொள்ளவும் வழியமைக்கும் இதன் வாயிலாக மேலும் மேலும் கவிஞரின் பார்வை விரிவடைந்து பாதை காட்டட்டும்.
நீர் மிதக்கும் நெடு வாய்க்கால்
கவிதைத்தொகுப்பு
அய்யனார் ஈடாடி
முதல் பதிப்பு செப்டம்பர் 2025
வெளியீடு வேரல் புக்ஸ்
பக்கம் 128
விலை ரூபாய் 170
தொடர்புக்கு
கவிஞர் அய்யனார் ஈடாடி 9597056785



