இணைய இதழ்இணைய இதழ் 51மொழிபெயர்ப்புகள்

தாஜ்மகால் கண்ணீர் – தெலுங்கில் : தும்மல ராமகிருஷ்ணா – தமிழில்: க. மாரியப்பன்

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

லைநகரம் தலை சுற்றியது. அகன்ற சாலைகள், உயர்ந்த மேடுகள். தேசிய மொழியில் பெயர்ப் பலகைகள்… வெவ்வேறு கலாச்சாரங்கள் – மன்னர்களின் மகிமை பொருந்திய சின்னங்கள்…

அசோகர் மார்க்… அக்பர் மார்க்…. பட்டேல் மார்க்… தான்சேன் மார்க்… பகதுர்ஷா ஜங் மார்க்… பாபர் ஜங் மார்க்… என்னனென்வோ பெயர்கள்… எல்லாம் குழப்பமாக இருந்தது. ஆட்டோ வேகமாக முன்னே கடந்துபோனது. திருமதி லலிதா, குழந்தைகள் திகைப்பாக முகத்தை வைத்துக்கொண்டு சாலைக்கு இரண்டு பக்கமும் வேகமாகப் பின்னால் ஓடுகிற காட்சிகளை விசித்திரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆட்டோ இந்தியா கேட் வழியாக, நாடாளுமன்றக் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு டோலாகு பாலத்தைத் தாண்டி தில்லி காந்த் சாலைமீது வேகமாகச் சென்றது.

“இன்னும் எவ்வளவு தூரம் இருக்குப்பா” வம்சி கேட்டான்.

“பக்கத்துல வந்துட்டோம். இன்னும் பத்துப் பதினைஞ்சு நிமிஷத்துல பேஸ் ஹாஸ்பிட்டல் போயிருவோம். அங்க சேகர் மாமா, லட்சுமி அத்த, திவ்யா இருக்காங்க” என்றேன்.

வம்சி முகத்தில் சந்தோசப் பூக்கள் பூத்தன.

ஆட்டோ பேஸ் ஹாஸ்பிட்டல் முன்பு நின்றது. வராத ஹிந்தியில் “உள்ள போறீங்களா?” என்றேன். சர்தார்ஜி தாடியை அங்கும் இங்கும் தடவிக் கொண்டு. “அந்தர் நை ஜானா…” என்றான். லலிதாவும் குழந்தைகளும் வேறுவழியின்றி ஆட்டோவில் இருந்து இறங்கி சூட்கேஸ்களை, பைகளை இறக்கி வைத்து அவை அனைத்தும் சரியாக இருக்கின்றனவா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மீட்டர் ரீடிங் ஐம்பது ரூபாயைக் காட்டியது.

“ஹவ் மச்” என்றேன். சர்தார்ஜி “ஹன்ட்ரடு ருப்பீஸ்” என்றான்.

பர்ஸில் இருந்து நூறு ரூபாய் காகித்தை எடுத்துக் கொடுத்தேன். லலிதாவும் பிள்ளைகளும் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள். நான் இருக்கிற கர்நூலில் இவ்வளவு ஆட்டோ சார்ஜ் கொடுத்து எந்நாளும் போனதில்லை. தலைநகரம் என்பதால் இங்கு அதிகம் போல. சர்தார்ஜி பணிவுடன் “நமஸ்தே ஜி” என்றுசொல்லிக் கிளம்பிச் சென்றார்.

அங்கும் இங்கும் திசைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது காற்று புழுதியை இறைத்தபொழுது சேகர் தோன்றினான். வந்ததும் “மன்னிக்கனும்….மாமா….ரயில்வே ஸ்டேசனுக்கு வரமுடியல. வார்டு டியூட்டி இருந்துச்சு…ஆபீசர் வேற புதுசு…பர்மிசன் கிடைக்கல…எதும் தப்பா நினைச்சுக்காதீங்க” என்னை எதிர்பேசவிடாமல் அவனே பேசினான். குழந்தைகள் அவர்கள் பைகளைப் பின்புறம் மாட்டிக்கொண்டார்கள். லலிதாவும் நானும் தலா ரெண்டு கைகளில் பிடித்துக்கொண்டோம். இன்னும் இரண்டு சூட்கேஸ்கள் ஒரு கைப்பை மீதமிருந்தது. மிகுந்த சிரமத்துடன் சேகர் கைப்பையையும் சூட்கேஸ்கள் இரண்டையும் எடுத்துக்கொண்டான். நடந்து…நடந்து… சேகர் என்னைப் பின்னால் திரும்பிப் பார்த்து “இவ்வளவு தானா… இன்னும் எதாவது இருக்கா?” என்றான். குழந்தைகள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். “இல்ல மாமா…நீங்க, அக்கா, குழந்தைக ரெண்டு பேரு. ஒங்க நாலுபேருக்கு ஒம்பது பேக்கை எடுத்துட்டு வரணுமா… நல்லவேளை இன்னும் நாலு எடுத்துட்டு வராமப் போயிட்டீங்களே…” என்று விளக்கமாகக் கேட்டான்.

நான் வெகு தூரம் பயணம் செய்தது குறைவே. மனைவி குழந்தைகளுடன் தில்லி வருவது இதுதான் முதல் முறை. எப்படியும் வருவதால் பத்து நாட்கள் இருக்கப் போகிறோம். பக்கத்தில் இருக்கிற இடங்களைப் பார்க்க நினைத்தோம். திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் கழித்து சற்று நேரம் கிடைத்ததால் புறப்பட்டு வந்த முதல் பயணம். தேனிலவு, திருமண நாள், பிறந்த நாள் போன்ற இன்பங்கள், ஆடம்பரங்கள், சந்தோசங்கள் என் வாழ்க்கையில் எப்பொழுதும் நெருங்கி வரவில்லை. அதை இதைப் பார்த்துக் கொண்டே நடந்தோம்.

பேஸ் ஹாஸ்பிடல் இராணுவத்திற்காகக் கட்டப்பட்டது. சுற்றுப்புறங்கள் தூய்மையாக இருந்தன. ஆண்களும் பெண்களும் இராணுவச் சீருடையில் இருந்தார்கள். அதிகாரிகள் அனைவரும் பாசி நிறக் கம்பளி ஆடைகள் அணிந்திருந்தனர். அனைவர் தலை மீதும் தொப்பிகள் இருந்தன. கேடர் சிம்பல்ஸ், பேட்சுகள் மாட்டியிருந்தனர். ஒவ்வொரு வார்டு முன்பும் அழகான மலர்ச்செடிகள் நட்டு வைத்திருந்தனர். வளாகங்கள் முழுக்கப் பெரிய பெரிய ஆல மரங்கள்… வேப்ப மரங்கள் பரவியிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக மயில்கள் அகவிக் கொண்டிருந்தன. மரக் கிளைகளின் மீது குரங்குகள் அங்கும் இங்குமாகத் தாவிக்கொண்டிருந்தன. பறவைகள் கூட்டம் கூட்டமாக மரங்களின் மீதிருந்து பறந்து சென்றன.

சேகர் குடியிருப்பு வழியாக நடந்தான். அந்தக் குடியிருப்புகள் இஷ்வாகு காலத்தில் கட்டப்பட்டதாயிருந்தன. வரிசையாக ஒன்றுக்கொன்று அருகில் இருந்தன. தரையின் பல இடங்கள் பெயர்ந்து இருந்தன. தாழ்வாரத்தில் ஓடுகள் கீழே விழுந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தன. எப்பொழுது சுண்ணாம்பு அடித்தார்களோ, சுவர்கள் கருப்பாகி அசிங்கமாகயிருந்தன. குடியிருப்புக்கு அருகிலேயே கழிப்பிடம். எல்லாரும் செம்புகளைக் கையில் வைத்துக் கொண்டு போய்வந்து கொண்டிருந்தார்கள். பொதுக் கழிப்பிடமாக இருந்தது.

சேகர் குடியிருந்த வீடு சின்னதாக இருந்தாலும் நன்றாக இருந்தது. இரண்டே இரண்டு அறைகள். முதல் அறையில் இரும்புக் கட்டில் போட்டு மெத்தென்ற படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. கட்டிலுக்குக் கீழ் ஹீட்டர் பொருத்தப்பட்டிருந்தது போல் தெரிந்தது. அறைக்குள் நுழைவதற்கு முன்பே வெப்பக்காற்று வீசியது. சமையலைறையின் ஒரு மூலையில் குளியலறை. அதை ஒட்டியவாறு சமையல் பாத்திரங்கள், கொஞ்சம் இடப்பக்கமாக கேஸ் சிலிண்டர், ஸ்டவ்… வலப்பக்க சுவரில் பல்வேறு காய்கறிகள், விரித்த போர்வை எப்பொழுதும் விரித்தது போலவே இருந்தது. குழந்தைகள் இருவரும் விசித்திரமாக அறைகளை சோதனை செய்வது போல் பார்த்தார்கள். “உங்க அப்பா மாதிரி நான் அதிகாரி இல்லடா மச்சி” என்றான் சேகர். அப்படி சேகர் எதற்குச் சொன்னானோ குழந்தைகளுக்குப் புரியவில்லை. இருவரும் சிரித்துக் கொண்டே “வீடு நல்லாயிருக்கு மாமா” என்றார்கள்.

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தயாராகி பேஸ் ஹாஸ்பிடல் முன்பு நின்றோம். ஐந்தரைக்கெல்லாம் வருவதாகயிருந்த ரெட்டி டிராவல்ஸ் பேருந்து ஆறரை மணி ஆனபிறகும் வரவில்லை. குழந்தைகள் இருவரும் சோர்வடைந்தார்கள். லலிதா அவர்களுக்கு ஏதோ ஒரு பதில் சொன்னாள். ஹாஸ்பிடல் முன்பு இராணுவ வாகனங்கள் அதிகமாக நின்றிருந்தன. தெலுங்குக்காரர்கள் ஒருவரைக் கூடப் பார்க்கமுடியவில்லை. தேசிய மொழி வராது. குழந்தைகள் சௌமியா, வம்சி, திருமதி… ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லாரும் புதிய முகங்களே. ஹாஸ்பிட்டலுக்கு எத்தனையோ பேர் வருகிறார்கள்… போகிறார்கள். உல்லன் சுவட்டர்கள்… தோல் ஜர்கின்கள்…குரங்கு குல்லாக்கள்…இரும்புத் தொப்பிகள…இடையில் இறுக்கிக் கட்டப்பட்ட பெரிய பெல்ட்டுகள்…கார்ப்பரேட் பூட்ஸ்கள்.. நேபாளி, மலையாளி, தமிழன், கன்னடன், குஜராத்தி மாநில பேச்சுகள், சிரிப்புகள்… வாழத்துகள்…

“ஜீ… பாஹர் ஜாவ்…கர்நல் ஆயேஹா”- பாதுகாவலர் என்ன சொன்னாரோ சரியாகப் பொருள் தெரியாவிட்டாலும்… “தூரமாகச் செல்லுங்கள்” என்ற விசயம் மட்டும் கை சைகை மூலமாகத் தெரிந்தது. ஹாஸ்பிட்டல் வாசல் பக்கத்தில் இருந்த ப்ளாட்பார்ம் மீது அமர்ந்தோம்.

“ரெட்டி டிராவல்ஸ் வண்டி ஒரு மணிநேரம் கழிச்சு வரும். ரெட்டிக்கு செல்போன்ல நான் எல்லாத்தையும் சொல்லிட்டன். புள்ளைக ரெண்டு பேருக்கும் ரெண்டு சீட்டுகள் கொடுக்குறாங்க சீட்டும் ஒங்கள போல இருக்கும். பஸ் ஆஸ்பிட்டல் முன்னால வந்து நிக்கும். ஆந்திரா வாலான்னு கூப்பிடுவான். பஸ்ல ஏறி உடகாந்துக்குங்க. எனக்கு வார்டு டியூட்டிக்கு நேரமாகுது. நான் போய்ட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு எதும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் வந்த வேகத்திலேயே சைக்கிளில் ஏறி வெளியேறினான் சேகர்.

ஏழு மணி ஆனபிறகும் டிராவல் பேருந்து வரவில்லை. குழந்தைகள் இருவரும் திரும்பி வீட்டுக்குப் போவோம் என்றனர். லலிதா இன்னும் அரை மணி நேரம் காத்திருப்போம் என்றாள். லலிதா சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்தில் பேஸ் ஹாஸ்பிட்டல் முன்பு டிராவல்ஸ் பேருந்து ஒன்று வந்து நின்றது. பேருந்தின் முகம் பார்த்தபிறகு குழந்தைகளுக்கு உயிர் வந்தது. பேருந்து படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பருமனான மனிதர் இறங்கி வந்து “ஆந்திரா வாலா” என்று அழைத்தார். ஆமா என்று வேக வேகமாகப் பேருந்தில் ஏறி எங்களுக்குக் காட்டின சீட்டில் அமர்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு பஸ் பிரமாதமாக இருந்தது. ஆனால், உள்ளே பான் குட்கா, சிகரெட்டு துர்நாற்றம் வீசியது. வயிற்றைப் புரட்டியது. சீட்டுகள் கூடப் பெரிய சௌகர்யமாக இல்லை.

அகன்ற சாலை மீது பஸ் வேகமாகப் போனது. கருப்பு தார் ரோட்டில் தரையில் கல் பதிக்கப்பட்டிருந்தது. அங்கங்கு பாலங்கள் அருகில் டிராபிக் ஜாம் ஆனது.

வம்சி பக்கத்தில் தலையைத் திருப்பி “பஸ் என்னமோ பார்ப்பதற்கு ஹைடெக் போல இருக்கு. இதவிட நம்ம ஊரு பஸ்கள் நல்லாயிருக்கும்ல டாடி…” என்றான். இதற்கிடையில் சௌமியா நடுவில் புகுந்து “நீ வாய பொத்திட்டு உட்காரு” என்றாள். வம்சிக்குக் கோபம் வந்தது. “என் இஷ்டம் – உனக்கெதுக்கு – உன் வேலைய நீ பார்த்துக்கோ, நான் டாடிட்ட பேசிட்டு இருக்கேன்…” என்று காட்டமாகப் பதில் சொன்னான். அவ்வளவுதான் என் மனைவி நடுவில் புகுந்து “சும்மா உட்காருரீங்களா! இல்லையா?” என்று குழந்தைகள் இருவரையும் கண்டித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் உர் உர் என்று பார்த்துக்கொண்டு மூச்சுகூட விடாமல் அமர்ந்திருந்தனர்.

பேருந்து நகர் முழுவதையும் நான்கு சுற்றுகள் சுற்றியது. பார்த்த சாலைகளையே பார்த்தோம். தான்சேன் மார்க்…பிர்லா மந்திர்…சர்தார் படேல் மார்க்… இப்படி அந்த சாலை, இந்த சாலை என்று சுற்றி அங்கு இரண்டு பேர், இங்கு இரண்டு பேர் என்று முப்பது பேரை ஏற்றிக்கொண்டது. பத்து மணி ஆனபோதும் நகரத்தைத் தாண்டவில்லை. “ஆக்ராக்கு போக நாலு மணி நேர பயணம்னு சொன்னீங்க, இருக்குற நேரமெல்லாம் இங்கயே போயிட்டு” என்று சலிப்புடன் என்னைப் பார்த்தாள் லலிதா.

எங்கள் முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த ஐந்தாறு பேர்கள் எங்களைப் பார்த்தார்கள். அநேகமாக அவர்கள் தெலுங்குக்காரர்களாக இருக்க வேண்டும். “நீங்க தெலுங்கு காரங்களா” என்றார்கள். “ஆமா” என்று தலையாட்டினேன். இருவரும் பெரு மூச்சுவிட்டோம். ஊமை போல இருக்க வேண்டிய வேலை இனி இல்லை என்று நினைத்தேன். “நீங்க எங்க இருந்து வர்றீங்க?” என்றேன். “பெஜவாடா”விலிருந்து என்றனர். அதோடு நிறுத்தாமல் எங்களுக்கு முன்னிருந்த சீட்டில் அமர்ந்திருந்த இளைஞர்கள் எங்களைப் பார்த்துத் திரும்பி…

“என் பேரு சுப்பராவ்ங்க, எங்க இன்னொருத்தர் பேரு வெங்கட்ராவ்ங்க, மொத்தம் இரண்டு குடும்பத்துக்காரங்க. பதினோரு பேரு இருக்கோம்;. பதினைஞ்சு நாளா பிரயாணத்திலேயே இருக்கோம். பத்ரி,.. கேதார்நாத்… ப்ரயாகா எல்லாம் பார்த்துட்டு வந்தோங்க. என்ன ஊரோ… என்ன சாப்பாடோ…. நம்ம சாப்பாடு…பப்பு…ஆவக்கா போல வராது… எவ்வளவு தடியான ரொட்டி… பருப்புக்கறி… உருளைக் கறி.. தின்னு நாக்கே செத்துப்போய்ட்டு…” என்று கலகல என்று பேசினார்.

சுப்பாராவைப் பார்த்து என்னவோ உணர்ந்தேன். முகஸ்துதி இல்லை. கூச்சம் இல்லை. புதுசு பழசு வித்தியாசம் இல்லை. மொட்டை அடித்திருந்தார். சுப்பாராவ் பேச்சைக் கேட்டால் ஆந்திராக்காரன் அமெரிக்கா போனாலும் ஆவக்காயை மறக்க மாட்டான் என்பது போலிருந்தது.

எங்கே ஆரம்பித்ததோ என்னவோ பேருந்தில் சிறியதாகப் பிரச்சினை தொடங்கியது. பஸ்காரன் எவர் எவரிடம் எவ்வளவு வாங்கிக்கொண்டனர் என்று கலந்துரையாடினார்கள். பஸ்ஸில் எவர் நடத்துநர், எவர் பெருக்கித் துடைப்பவர், எவர் முதலாளி என்றே தெரியவில்லை. எல்லாரும் ஜீன்ஸ் பேண்ட்ஸ், டீ சர்ட், தடிமனான ஜெர்கின்கள் அணிந்திருந்தனர். எல்லாரும் குட்கா மென்று கொண்டிருந்தனர். எதற்கு ஒருவருக்கொருவர் கத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

ஒரு முறை இல்லை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாகப் பணத்தை வாங்கிகொண்டனர் போலிருந்தது. பணத்தை வாங்கியவர் ஏதோ மாயவார்த்தைகள் சொல்லி ஒரு காரில் அழைத்து வந்து பேருந்தில் ஏற்றிவிட்டுப் போனார். ஒருவர் என்னமோ முந்நூறு வாங்கிக் கொண்டாராம். இன்னொருவர் என்னமோ ஐந்நூறு கொடுத்தாராம் என்றார். சுப்பாராவ் என்னைப் பார்த்துத் திரும்பி “நீங்க எவ்வளவு கொடுத்தீங்க?” என்றார். உண்மையான விசயத்தை சொன்னால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று வேறு பேச்சை மாற்றி “என் மச்சான் பஸ் ஏற்றி விட்டார்” என்றேன். “பகல் கொள்ளைக்காரங்க இவங்க…ஒருவர் கிட்ட ஒரு வகையாகப் பணத்தை வசூல் பண்ணியிருக்காங்க” என்றார். இந்த வார்த்தைகள் அவர்களுக்குப் புரியவில்லை. ஒருவேளை அர்த்தம் புரிந்தாலும் அதை அவர்கள் பொருட்படுத்தியிருக்கவும் மாட்டார்கள்.

வம்சி எங்கள் பக்கம் திரும்பி “அம்மா, சாப்பிடுறதுக்கு எதும் இல்லயா?” என்றான். காலையில் வாங்கிய இரண்டு மூன்று பிஸ்கட் பாக்கெட்டுகள் எப்பொழுதோ காலியாய்ப் போய்விட்டிருந்தது. நல்ல தண்ணீர் பாட்டில் கூட காலியாய் இருந்தது. “எங்க வந்தாலும் ஒனக்கு சாப்பாடுதானா” என்று லலிதா கோபப்பட்டாள். “பசியெடுத்தா கேட்கறது தப்பா” மறுபடியும் கேட்டான் வம்சி.

காலையில் கிளம்பியதிலிருந்தே லலிதா என்னவோ ஒரு மாதிரியான மனநிலையில் இருந்தாள். வழக்கமாக அவசரப்பட்டு எதுவும் பேசமாட்டாள். திருமணமான நாளிலிருந்து எப்பொழுதும் எதுவும் கேட்டதும் இல்லை. எங்கும் சென்றதுமில்லை. இந்தப் பிரயாணத்திற்குக் கூட நான் கட்டாயப்படுத்தி அழைத்ததால்தான் வந்தாள். இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியாக வாழவேண்டும் என்பவள். நகைகள், துணிமணிகள், வாங்குகின்ற பொருட்களில் உண்மையான இன்பம் இல்லை என்று வாதித்தவள். வாழ்க்கை என்றால் அழகாக அலங்கரித்துக்கொள்வது, ஆயிரமாயிரம் செலவு செய்து செய்து வேலைக்கு வருவது, தேவையற்றதை வாங்குவது, மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுக் கவலைப்படுவது, ஆடம்பரமாக வாழ்வது வேண்டவே வேண்டாம் என்பாள். அதையும் தாண்டி ஏதோ இருக்கிறது. அது என்னவோ வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் போகிறேன். நம்மால் நான்குபேர் நன்றாக இருந்தால், இன்பமாக இருந்தால் போதும். அந்த திருப்தி வேறு எதிலும் வராது என்பாள். அதைவிட வாழ்க்கையில் நம்மைப் போன்றவர்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது என்பாள். லலிதா பற்றிய யோசனையில் நான் இருந்த பொழுது பேருந்து நின்றது போலிருந்தது. என்னவென்று தலையை வெளியே நீட்டி பார்த்ததும் “சௌத் இண்டியன் ரெஸ்டாரெண்ட்” என்ற பெயர்ப் பலகை கலர் கலராக தக தக என்று பிரகாசமாகத் தெரிந்தது.

“இங்க இருபது நிமிஷம் பஸ் நிக்கும். எல்லாரும் இறங்கி டிபன் செய்யலாம்” என்று ஹிந்தியில், இங்கிலீஷில், இன்னும் ஒன்றிரண்டு மொழிகளில் ஒரு வாக்கியத்தில் ஓர் ஆள் சொன்னான். அந்த நபர் எவரோ எப்பொழுது பேருந்தில் ஏறினாரோ தெரியாது.

எல்லாரும் வேக வேகமாக இறங்கி உணவகம் பக்கத்தில் இருந்த கழிப்பிடத்தை நோக்கிப் போனார்கள். ஐந்து நிமிடத்தில் ஒவ்வொருவராக வந்து உணவகத்தின் முன்னிருந்த புல்வெளியில் வட்டமாகப் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தார்கள். நாற்காலிகள் மத்தியில் வட்டமேசை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வண்ண வண்ணக் குடை வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மேசை மீதும் மினரல் பாட்டில்கள் வைத்திருந்தார்கள். அவையெல்லாம் சினிமாவில், தொலைக்காட்சியில் காட்டினால் ஒரு வண்ணமயமான பிரபஞ்சம் போல இருக்கும். சுற்றிலும் கோக், பெப்சி, தம்ஸப், லிம்கா டிரிங்ஸ் விளம்பரங்கள், அரைகுறை டிராயர்களோடு, பிகினி உடைகளில் உணவு வைக்கிற பெண்கள், அர்த்தமுள்ள விளக்கக் காட்சிகள். பெரிய பெரிய கட் அவுட்டுகள்.

என் பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த சுப்பாராவ் “என்னென்ன அய்ட்டம்ஸ் இருக்கு சாப்பிடுறதுக்கு” என்று வந்தவரை ஹிந்தியில் கேட்டார் ஆவலுடன்…

“இட்லி, வடை, பூரி, தோசை, பெசரெட், ஊதப்பம், உப்புமா, பொங்கல்…” என்று சர்வர் ஒப்பித்தார். சர்வருக்கு எல்லா மொழிகளும் தெரிந்திருந்தது. எல்லாரிடமும் பேசினார். ஆர்டர்கள் பெற்றுக்கொண்டார். எங்களோடு பேருந்தில் வந்த ‘தானியா’ தனியாகப் போய் வேறு ஒரு மேசையில் அமர்ந்துகொண்டாள். அவள் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தாளாம். ஹைதராபாத்தில் எவரோ தெரிந்தவர்கள் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக இருக்கிறாளாம். பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறாளாம். கோடை விடுமுறையில் ஆந்திரப் பிரதேசத்தின் பள்ளிக் கல்வியின் முறைமை மீது ஆராய்ச்சி செய்வதற்கு வந்தாளாம். தானியா ரொம்ப சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள். ஏதோ அவள் வாங்கிக்கொண்ட பழங்கள் தவிர எதையும் உண்ணவில்லை. எதற்கு என்று கேள்விகேட்டால் இந்த டயட் ஒத்து வராது என்றாள். நான் தானியாவிடம் பேசுவது என் குழந்தைகள் இருவருக்கும் ஆச்சர்யம்.

பேசிக்கொண்டே இருக்கும்போது சர்வர் எல்லாருக்கும் இட்லி, வடை தட்டுகளைக் கொண்டு வந்து வைத்தார். பெரிய வாளியில் சாம்பார் கொண்டு பக்கத்தில் வைத்தார். இட்லி பறவை முட்டை போலிருந்தது. வடை அதைவிடப் பெரிதாக இருந்தது. இட்லி கட்டியாகக் கல்லாக இருந்தது. பச்சரிசியில் செய்தது போலிருந்தது. புழுங்கலரிசி பயன்படுத்துவது அங்கு இல்லையென்று தோன்றியது. பத்துவயது நிரம்பாத வம்சி “டாடி…நான் நாலு ப்ளேட்டுகள்…” என்றான். “தம்பி, இங்க ப்ளேட்டு இட்லி வடைன்னா ஒரு இட்லி, ஒரு வடை, ஐம்பது ரூபா” என்றார் சுப்பாராவ். வம்சி எடுத்த இட்லியை வாயில் வைத்துக்கொண்டு அப்படியே சிலைபோல சுப்பாராவை பார்த்துக் கொண்டிருந்தான்.

“பெரிய ஆளுக… தம்பி… இந்த ***** மவனுக… இவங்களுக்கு இலவசமா எல்லாம் கொடுப்பாங்கன்னு, வயிறு முட்ட தின்னலாம்னு, இந்த ரெஸ்டாரெண்டுல பஸ்ஸ நிப்பாட்டுறானுக. நாம செம்மறி ஆடு மாதிரி தலைய குனிஞ்சு வயிறு முட்ட சாப்பிட்டோம்னா இந்த குப்பைக் கூளத்துக்கு நூறுகள், ஆயிரங்கள் கட்ட வேண்டியதுதான். குழந்தைகள் நீங்க பசிக்கு மட்டும் சாப்பிடுங்க. நாங்க தண்ணி குடிச்சுக்குறோம்” என்று அவர் அவர்களை உத்தேசித்து சொன்னார்.

சுப்பாராவ் பேச்சுக்கு சிரிப்பு வரவில்லை. அழுகை வந்தது சுப்பாராவ் சொன்னதில் ஒரு எழுத்து கூட தவறில்லை. பாவம் அவர்கள் இரண்டு குடும்பத்தினர்கள். பசங்க, பெரியவர்கள் எல்லாரும் பருமனாகவே இருந்தனர். அனைவரும் வயிறு நிரம்ப சாப்பிட்டால் கைகளில் கழுத்துகளில் உள்ளவற்றை விற்கவேண்டியதுதான்! அதுமட்டுமல்லாமல் பத்துப் பதினைந்து நாட்களாகப் பயணத்திலேயே இருக்கிறார்கள்.

சௌம்யா, வம்சி இட்லி வடையோடு ஏதோ வாங்கிக் கொண்டிருந்தார்கள். லலிதா ஏதோ ஒருமுறை வாயில் போட்டுக்கொண்டு கைகளைக் கழுவினாள். நான் எச்சில் விழுங்கிவிட்டு எழுந்தேன். ஓட்டுநர் ஹாரன் கொடுத்தவுடன் அனைவரும் எழுந்து தள்ளிக்கொண்டு போய் பேருந்தில் அமர்ந்தனர். பில்லை பார்த்த பொழுது இதயம் வெடித்தது போலிருந்தது. இருநூற்று தொன்னூற்று நான்கு ரூபாய்கள். வேறுஎதுவும் பேசாமல் செலுத்திவிட்டுப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் வராமல் பேருந்து சென்றுவிடுமோ என்று பதைபதைப்போடு பார்த்தனர் குழந்தைகள் இருவரும். லலிதா ஐன்னலிலிருந்து இடப்பக்கம் பார்த்தாள். சீட்டை நன்றாக சரிசெய்து அமர்ந்தேன். “பில் எவ்வளவு ஆச்சு?” என்றாள். மறைப்பது எதற்கென்று சொன்னேன். நம்பமுடியாதது போல முகத்தை வைத்துக்கொண்டாள்.

“சுற்றுலா இடங்கள் இப்படித்தான் இருக்கும்” என்றேன். “என்ன மனுசங்களோ என்னமோ… மனுசன் பசியில கூட வியாபாரம் தானா!” என்று கேட்டாள். “இந்த நாட்டில் வியாபாரத்திற்கு இருக்குற மகசூல் எதுக்கும் இல்ல” என்றேன். அவள் மௌனமாகத் தலையைப் பக்கத்தில் திருப்பிக் கொண்டாள். பேருந்து வேகமாக முன்னேறிச் சென்றது. பச்சை வயல்கள், பயிறு நிலங்கள் மத்தியில் பேருந்து நுழைந்து போனது.

சரியாக மத்தியானம் இரண்டு மணிக்குப் பேருந்து ஆக்ராவைக் கடந்து தாஜ்மகாலுக்கு ஒரு கிலோமீட்டருக்கு முன் நின்றது. பேருந்திலிருந்து அந்த வெயிலுக்கு ஒவ்வொருவராக இறங்க முடியாமல் இறங்கினர். அனைவர் முகங்களும் சோர்வடைந்து இருந்தது. பேருந்தை விட்டு இறங்கிய அந்தக் கணமே ஜீப் காரர்கள், டாக்சிகாரர்கள் சூழ்ந்து கொண்டனர். “என் ஜீப்புல ஏறுங்க..” “என் டாக்சியில ஏறுங்க” என்று ஒரே சத்தம். ஒரு வயதான கிழவர்;, அழுக்கான தாடி, சட்டையோடு எங்கள் பக்கம் வந்து குதிரை வண்டியை நிறுத்தினார். வயதானவர் முஸ்லீமாக இருந்தார். என்னோடு பேருந்தில் வந்தவர்கள் எல்லாம் ஒரு கணத்தைக் கூட வீணடிக்காமல் ஜீப்பில் ஏறி அமர்ந்தனர். 

குழந்தைகள் வம்சி, சௌம்யா “நாம டோங்காவில் போலாம் டாடி” என்றனர். லலிதாவும் குழந்தைகள் விருப்பமே என்றாள். நான்கு பேர்களும் டோங்காவில் ஏறி அமர்ந்தோம். தனியாக குதிரை ‘டக்… டக்… டக்… டக்டகா…டக்டகா ..’ என்று குளம்படி சப்தம் கொடுத்தவாறு முன்னால் சென்றது. வம்சி குதிரையின் காலில் இருந்த குளம்படியின் சப்தத்தைக் கேட்டவாறு மகிழ்ச்சி அடைந்தான். சௌமியாவும் வம்சியும் சோர்வாகக் காணப்பட்டார்கள். ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் உலகம் அவர்களுக்கு. அவர்களின் ஆனந்தத்திற்கு முன்னால் தாஜ்மகால் கூடப் பெரிது இல்லை என்பதுபோல் இருந்தது அவர்களின் தோற்றம். டோங்காவில் ஏறிப் பத்து நிமிடம் கூட ஆகவில்லை. வயதானவர் வண்டியை நிறுத்திக் கையைக் கொடுத்து மெதுவாக அனைவரையும் கீழே இறக்கிவிட்டார். அங்கிருந்து நடந்து செல்லவேண்டும் என்று சொன்னார். எதிரில், உள்ளே செல்வதற்கு டிக்கெட் கொடுக்கிறார்கள் என்று சொன்னார்.

வயதானவரை உத்தேசித்து “எவ்வளவு கொடுக்கவேண்டும்?” என்று ஹிந்தியில் கேட்டேன். வயதானவர் எவ்வளவோ நன்றி தெரிவித்து “தஸ் ருப்பியா” என்றார். பர்ஸிலிருந்து பத்து ரூபாய் காகிதத்தை எடுத்து அவரின் கையில் வைத்தேன். “அல்லா… பலா கரேகா…” என்று சொல்லிப் பின்னால் போனார்.

குழந்தைகள் இருவரும் சாலையில் நடந்துகொண்டு அங்குலம் அங்குலமாக, காட்சிகளைப் பார்த்துக்கொண்டே போனார்கள். லலிதா மெதுவாக என் கையைப் பிடித்துக்கொண்டு “வண்டிக்காரருக்கு எவ்வளவு கொடுத்தீங்க?” என்றாள். “பத்து ரூபாய்” என்றேன். “என்ன மனுசன் நீங்க… அந்த வயதானவரைப் பார்த்தா பாவமா தெரியுது. அறுபது வயசுக்கு மேல இருக்கும். வண்டி இழுத்து வாழ்றாரு. நாம நாலுபேரும் ஜீப்புல, டாக்சில வந்திருந்தா எப்படியிருந்தாலும் இருபது ரூபாவாது வாங்கியிருப்பாங்க. இன்னும் ஒரு பத்து ரூபா அந்த தாத்தா கையில கொடுத்திருந்த எவ்வளவு சந்தோசப் பட்டிருப்பார்” என்றாள். “அப்பவே எதுக்கு சொல்லல” என்றேன். “நீங்க பத்து ரூபாய் தான் கொடுப்பீங்கன்னு எனக்கு என்ன தெரியும்? ரெஸ்டாரெண்ட்ல முந்நூறு ரூபா சும்மாவே கொடுத்தீங்க! அங்க ஏதாவது சாப்பிட்டமா! பத்துச்சா! ஏமாந்தது அந்த இடத்திலதானே!” பெண்கள் கொஞ்சம் கஞ்சமாக இருப்பார்கள் போல என்று எண்ணியிருந்தேன். என் கருத்துத் தவறாகத் தோன்றியது.

முதன்மை வாயில் அருகில் அனைவரும் வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். போய் வரிசையில் நின்றேன். வரிசையில் ஐந்தாறுபேர் வெளிநாட்டவர் நின்றிருந்தார்கள். அனைவரும் அவர்களையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். வெள்ளை நிறம்… அதில் வெள்ளையான தலை முடிகள்… வண்ண வண்ண சட்டைகள்… நிக்கர்கள்… கைகளில் கழுத்துகளில் கேமராக்கள்… மூவிங் கேமராக்கள்… இயர் போன்கள்… அணிந்திருக்கிற சட்டைகளில் நிக்கர்களில் கணக்கில்லாத சட்டைப்பைகள்… அது முழுக்க ஏதேதோ பொருட்கள்… இவை போதாதென்று பின்புறம் மாட்டிக்கொண்டிருக்கிற பைகள்… சுலபமாகச் சாலைமீது கொண்டுசெல்ல வசதியாக சக்கர சூட்கேசுகள்… குழந்தைகளும் லலிதாவும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பனியன் அணிந்திருக்கிற பெண்களை… நிக்கர்கள் அணிந்திருக்கிற பெண்களை பிரத்யேகமாக அவர்கள் பார்ப்பது அதே முதல் தடவை. அந்த வெளிநாட்டவர்கள் மட்டும் எவரையும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் உலகம் அவர்களுக்கு. சுற்றுப்புறங்களை முழுமையாகப் பார்க்கிறார்கள். தேவையான காட்சிகளைப் புகைப்படங்கள் எடுக்கின்றனர். அவர்கள் எல்லாருடைய கைகளிலும் சின்ன பாக்கெட் சைஸ் நோட்புக்ஸ், பென்சில்கள், பேனாக்கள் இருக்கின்றன. ஏதேதோ எழுதுகின்றார்கள். பார்ப்பதையெல்லாம் பதிவு செய்வது நல்ல விசயமாகத் தோன்றியது.

டிக்கெட் கொடுக்கும் இடத்தில் கையை ஆட்டி “ஏக் டிக்கெட் கித்னா ருப்யா” என்றேன். டிக்கெட் கொடுப்பவர் எதிரில் இருக்கும் பலகையைக் காட்டினார். பலகை முழுவதும் ஹிந்தியில் எழுதியிருந்தது. பலகையை மேலும் கீழும் பார்த்தேன். எப்பொழுதோ சின்னவயதில் படித்த ஹிந்தி… என் அவஸ்தையைப் பார்த்து அவர் சுத்தமான தெலுங்கில் “ஒரு டிக்கெட் பத்து ரூபாய் , வெளிநாட்டவர்களுக்குப் பத்து டாலர்ஸ்” என்றார். பன்னிரெண்டு வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு டிக்கெட் வாங்கத் தேவையில்லை என்றும் சொன்னார். இருபது ரூபாய் கொடுத்து இரண்டு டிக்கெட்டுகள் வாங்கினேன்.

என் கையில் இருந்த டிக்கெட், வெளிநாட்டவரான தானியா கையில் இருந்த டிக்கெட் வேறு வேறு வண்ணத்தில் இருப்பதைப் பார்த்து லலிதா “அவர்களுக்கு எதற்கு வேற டிக்கெட் கொடுக்கிறார்கள்?” என்று கேட்டாள். “அவர்கள் நம் நாட்டவர்கள் கிடையாது. அவர்கள் டிக்கெட் விலை உயர்ந்தது” என்றேன். “இது என்ன அநியாயங்க. எந்ததெந்த நாட்டிலிருந்தோ நம் நாட்டிற்கு வந்து நம் புராதன கட்டடங்கள், புதுமைகள், சிறப்புகள் அவர்கள் பார்ப்பது பெருமை தருமே! அப்படிப்பட்டவர்களிடம் பெருந்தொகையை வசூல் செய்வது தப்பு இல்லையா! இந்த முறை நல்லா இல்லைங்க…எனக்கு இது பிடிக்கலங்க” என்றாள் லலிதா.

“உனக்குப் பிடிக்குது பிடிக்கலனு யாரு கேட்டா. உன்னையும் என்னையும் கேட்டா எல்லாம் பண்றாங்க?” என்று நான் சொன்னவுடன், “மக்களின் உணர்வுகளுக்கு, மக்களின் ஆலோசனைகளுக்கு, விருப்பத்திற்கு, எந்த நாடு மதிப்பளிக்கிறதோ அந்த நாடுதான் நல்லநாடு. நம் நாடு அந்த நிலைமைக்கு இன்னும் வரவில்லை” என்றாள். “அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். பஸ்காரர் அரை மணிநேரத்தில சுத்திப் பாத்துட்டு திரும்ப வந்துரணும்னு சொல்லியிருக்காரு. முன்னாடி நட” என்று லலிதாவை அவசரப்படுத்தினேன்.

இரண்டாவது நுழைவாயிலில் எல்லாரையும் நெருக்கமாகப் பரிசோதித்தார்கள். பெண்களைப் பெண்களும், ஆடவர்களை ஆடவர்களும் பரிசோதித்து உள்ளே அனுப்பினார்கள்.

“உள்ளுக்குள் எல்லாம் கோலாகலமாக இருந்தது. வண்ண வண்ணப் பூக்களைப் பார்ப்பது போல… விதவிதமான மனிதர்கள்… வெவ்வேறு மொழிகள்… வெவ்வேறு கலாச்சாரங்கள்… ஜீன்ஸ் பாண்டுகள்… டீசர்ட்டுகள் … சுடிதார்கள்… ஜிப்பா பைஜாமாக்கள்… டவுசர்கள்… கொஞ்சமாக இருக்கின்ற இடுப்புத் துணிகள்… … ஸ்கர்ட்டுகள் …. சேலைகள் …. ஜாக்கெட்டுகள்… குழந்தைகள் …. முதியவர்கள்…. காதலர்கள்…. கணவன் மனைவிகள்…. நண்பர்கள்…

ஓர் அழகான மலர் வனத்தில் நுழைந்தது போலிருந்தது. கொத்துக் கொத்தாக அசைந்தாடுகின்ற பூக்கள்… யானைகளாக… குதிரைகளாக வெட்டப்பட்ட செடிகள், தரைமுழுதும் பச்சைக் கம்பளம் விரித்தது போலிருந்த பச்சைப் புல்வெளிகள்.. மொத்து மொத்தென்று காலுக்குக் கீழ் பருத்தி மெத்தை போன்று உள்ள பச்சைப் புல்வெளி.

“அம்மாடி” வலுவாக மூச்சு விட்டேன். தாஜ்மகாலைத் தூரத்தில் இருந்து பார்த்து…

“என்னங்க அப்படியே நின்னுட்டீங்க” என்றாள் லலிதா.

“எதும் இல்ல. இந்த ஜென்மத்துல நான் தாஜ்மகாலை பார்ப்பேன்னு நினைக்கல. எங்க அரகொண்டா… எங்க ஆக்ரா…எங்க தாஜ்மகால்…” என்றேன்.

என் பெருமூச்சை லலிதா பொருட்படுத்தவில்லை.

குழந்தைகள் இருவரும் எதையும் கண்டுகொள்ளாமல் அங்கும் இங்கும் வேகமாக…குதித்து…விழுந்து… எழுந்து… வெள்ளைப்பளிங்குக் கற்களை …புதர்ச் செடிகளை, வண்ண வண்ண மலர்ச் செடிகளை, பச்சைப் பசேல் குன்றுகளைத் தொட்டு மகிழ்ந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சி ஆகாயத்தைத் தொட்டது.

குழந்தைகள்… லலிதா அனைவரும் ஒருமுறை தாஜ்மகாலுக்குள் நுழைந்தோம். கிரீம் மேல் கால்பதித்தது போலிருந்தது. தலையணையில் கால் வைத்துத் தேய்த்தது போலிருந்தது. வெள்ளை மேககூட்டத்துக் குன்றுகள் மேல் நுழைந்தது போல் இருந்தது. விசித்திரமான உணர்வு. சுற்றி நான்கு பக்கத்திலும் நான்கு உயரமான மினார்கள். மனிதர்கள் பின்னோக்கி சாய்ந்த நிலையில் தலையை செங்குத்தாகத் தூக்கினார்களே தவிர மினாரின் உச்சி தெரியவில்லை. நான்கு மினார்களின் மத்தியில் பெரிய கும்மாஸ்… பிரபஞ்ச அதிசயத்தில் ஓர் அதிசயம். ஓர் அரிதான கட்டடம். பழைய கட்டடம். வெள்ளை சலவைக் கட்டடம். அற்புதமான சௌந்தர்யம்…ஷாஜகானின் காதல் சமாதி. பூவுலக சொர்க்கம் போன்று இருந்தது. எங்கிருந்தோ வீசிய காற்று குளிர்ச்சியை எடுத்துவந்து என் மேல் தெளித்துச் சென்றது. மனது உற்சாகமாகியது. சிறிது நிமிடம் அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த வெள்ளைப் பாறைகள் மேல் படுத்துக் கொள்ளத் தோன்றியது. ….அந்த உணர்வினை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. என்ன வேலைப்பாடு… என்ன செயல்திறன்… என்ன கலைத்திறன்… மும்தாஜுக்காக ஷாஜகான் சிந்திய கண்ணீர் உறைந்து தாஜ்மகால் வடிவம் கிடைத்தது என்றே தோன்றியது.

ஷாஜகானை போல அவரவர் மனைவியை அவரவர்கள் காதலிக்கலாம். ஆனால், எல்லாரும் தாஜ்மகால் போன்ற ஒன்றைக் கட்டமுடியாமல் போகலாம். அவர்கள் தங்கள் மனதுக்குள்ளாகவே தாஜ்மகாலை கட்டியிருக்கலாம். வெள்ளைப்பளிங்குக் கற்களால் அல்ல, அன்பான தொடுதல்களால், மகிழ்ச்சியான பதில்களுடன் கட்டியிருக்காலம். …. யார் கண்டார்கள்…

எண்ணிலடங்காத யோசனைகள்; தலை முழுக்கத் திரண்டிருந்தது. கூக்குரல் கேட்டுக் கண் திறந்து பார்த்தேன். குழந்தைகள், லலிதா தெரியவில்லை. மக்கள் வெள்ளத்தில் எங்கிருக்கிறார்களோ என்னவோ… பலம்கொண்ட மட்டும் திரட்டி “வம்சி” என்று கூப்பிட்டேன். பயனில்லை. எதிரொலி இல்லை. உடலில் உள்ள பலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி மறுபடியும் அழைத்தேன். அங்கிருந்தவர்கள் எல்லாம் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். கொஞ்சநேரம் கழித்து சௌமியா பதில் குரல் கொடுத்தாள்.

“எங்க இருக்கப்பா…” என்று மறுபடியும் அழுதேன்.

“இங்க இங்கதான் …. இங்க…” என்று அழைத்தாள்.

“அம்மா… வம்சி… எங்க” என்றேன்.

கைகளைத் தூக்கிக் காண்பித்தாள். வேகமாக ஓடிப் போனேன். வம்சி தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். லலிதா கண்கள் துடைத்துக்கொண்டு வம்சியை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாள்.

“என்னப்பா …எதுக்கு அழுதுகிட்டு இருக்குறப்பா” என்றேன்.

வம்சி தலையைத் தூக்கவில்லை. லலிதா தலை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னநடந்துச்சு சொல்லுடா” என்றேன் ஆவலுடன்.

இருவரும் ஒரே நேரத்தில் கண்ணீர் சிந்தினர். மெதுவாக வம்சி தலையைத் தூக்கி, “எதுக்கு அழுற சொல்லுப்பா” என்றேன்.

“தாஜ்மகால் அருகில் நீங்க என்ன பார்த்தீங்களோ தெரியாது. எனக்கு அதெல்லாம் நொண்டிக் கைகளாகத் தெரிகிறது டாடி” என்று மறுபடியும் அழத்தொடங்கினான். அவனின் அழுகை எல்லார் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்தது.

“எதுக்குப்பா…என்ன பேசுறப்பா நீ…” என்றேன்.

“எனக்கு எல்லாம் தெரியும்ப்பா… அங்க பாரு அந்த கைடு மாமா… ” என்று கைடைப் பார்த்துக் கை காட்டினான்.

லலிதா பக்கம் திரும்பி “என்ன இதெல்லாம்” என்றேன்.

“முதலில் நானும் என்னமோனு நினைச்சன்.. என்ன இருக்கு… ஒரு ராஜா அவன் பொண்டாட்டி ஞாபகமாக வெள்ளைப் பளிங்குகற்களால் கட்டின சமாதி. ராஜா அப்படிங்கறதால அதிகாரம், பணம் எல்லாம் இருப்பதால எத்தனையோ பேர்கள் முயற்சியால் தாஜ்மகால் கட்டினான்” என்றாள் மிக சாதாரணமாக. ஒரு கணம் தலை சுற்றுவது போலிருந்தது.

நான் எதற்கு என் மகன் போல, என் மனைவி போல தாஜ்மகாலைப் பார்க்காமல் போனேனோ எவ்வளவு முயற்சி எடுத்தாலும் எனக்கு இன்னும் புரியவில்லை.

******

தும்மல ராமகிருஷ்ணா

தெலுங்கில் : தும்மல ராமகிருஷ்ணா. திராவிடப் பல்கலைக்கழகத் துணைவேந்தர். தெலுங்கு எழுத்தாளர். இவரின் கதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், துளு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் மட்டிப்பொய்யி, அடப்பம் தெலுங்கில் பரபரப்பாகப் பேசப்பட்ட கதைகள். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தன் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தியவர். ஆந்திர எழுத்தாளர்களில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றவர்.

******

gmariappan.du@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button