சிறுகதைகள்

போதியில்லா புத்தன் | கணேஷ்

சிறுகதை | வாசகசாலை

என் நிலையைக் கண்டவுடன் அவர்களே அழைத்துச் சென்று மருத்துவமனையின் வாசலுக்கு வலதுபக்கத்திலிருந்த அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள படுக்கையில் படுக்க வைத்தார்கள். மருத்துவமனைக்கென்ற ஒரு வாசமும், அந்தச் சூழலும் என்னைப் படுக்க வைத்திருந்த இடமும் என்னுள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருந்தது. படுத்துக்கொண்டே தலையைத் திருப்பாமல் மிரளும் விழிகளால் சுற்றிப் பார்த்தேன். எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். அந்த நிலையில் என்னைக் கிடத்திய பெண் செவிலியர் வேகமாக ஆண் மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் நடந்து வரும் வேகமே இன்னும் பீதியைக் கொண்டு வந்தது.

குளிர் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கின்ற நேரம். காலையில் பத்து மணி வரை குளிர் இருக்கும் பின் வெயில் தொடங்கி நான்கு மணி வரை நீடிக்கும் பின் மெல்லிய குளிர் ஆரம்பிக்கும். டெல்லிக்கு அருகிலிருக்கும் பரிதாபாத் ஊருக்கு வந்து சரியாக இரண்டு வருடமாகிறது. தனியாகத்தான் தங்கியிருந்தேன். செக்டார்களாகப் பிரிக்கப்பட்டுப் பெரிய வீடுகளைக் கொண்ட பகுதி என்னுடையது. அதில் ஐந்தாம் செக்டாரில் தனியாக மாடியில் தங்கியிருந்தேன்.ஒவ்வொரு செக்டாருக்கும் தனியாக ஒரு பூங்கா, பால்பண்ணை, கடைவீதி என எல்லாமே ஒரேயிடத்தில் ஒருங்கிணைந்திருக்கும். என் வீட்டின் அருகிலேயே பூங்கா இருந்ததால் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. நிலப்பரப்பு முழுதும் புல் வளர்த்து,சுற்றிலும் மரங்கள் சூழ அதனையொட்டி நடக்க திண்டு போல் கட்டப்பட்டவொரு அழகான இடம். தனியாகப் போய் அமர்ந்தால் நேரம் போவதே தெரியாது. தூரத்தில் விளையாடும் சிறுபிள்ளைகளின் சத்தம் சில நேரங்களில் தொல்லையாக இருந்தாலும், அவர்கள் இல்லையென்றால் அந்தப் பூங்காவிற்க்கு அழகில்லை. புற்களில் மேயும் பட்டம்பூச்சிகள் அவர்கள். வயதானவர்கள் பூங்காவைச் சுற்றிலும் நடைபயிற்சி செய்வார்கள். எங்காவது ஒரு இருக்கையில் தனியாக அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்தபடி மனதில் தோன்றும் எண்ணங்களை அசை போட்டுக் கொண்டே அதிகமான நாட்களை இனிமையாகக் கடந்து வந்திருக்கிறேன்.

அருகில் வந்த மருத்துவர், பழக்கதோசத்தில் இதயத்துடிப்பைச் சோதித்தார். உடல் முழுவதும் வியர்த்திருந்தது. அதைப் பார்த்தபடியே கண்ணின் இமையைத் தூக்கி சோதனை செய்தார். ஹிந்தியில் என்னவென்று வினவினார். என்னால் அப்போதைக்குச் சட்டென்று வாயைத் திறந்து பதில் சொல்ல முடியாததால் கொஞ்சம் தாமதம் ஆனது. அந்த இடைவெளியில் அவருடன் இருந்த செவிலியிரிடத்தில், “இவருடன் யாரும் வந்திருக்கிறார்களா?” என மலையாளத்தில் கேட்டார். மனதுக்குள் ஒரு நிம்மதி, “ஆம் என்னைச் சுற்றி இருக்கும் இருவரும் மலையாளிகள்.” கொஞ்சம் நம்பிக்கை வந்தது. என்ன நடந்தது என்பதைத் தமிழில் சொல்லலாமா அல்லது ஹிந்தியில் தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த மருத்துவர் மீண்டும் அதே கேள்வியை என்னிடத்தில் கேட்க,

“தமிழ் பேசலாமா? புரியுமா?” என்றேன்.

“கண்டிப்பா பேசலாம் எனக்குப் புரியும், நான் படித்தது சென்னைதான் சொல்லுங்க என்னாச்சு?” என்று அழகிய தமிழில் அவர் கேட்டதில் எனக்கிருந்த பாதிப் பிரச்சினை தீர்ந்திருந்தது. காரணம் என்னதான் அங்கு வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தாலும் ஹிந்தி ஓரளவுக்குப் பேச நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. இந்த காலங்களில் ஏகப்பட்ட சிக்கல்கள், ஏமாற்றங்கள் எல்லாமே மொழி பிரச்சினையாலும், ஹிந்தி தெரியாத ஒரு காரணத்தாலும் அனுபவித்திருந்தேன். எங்கு சென்றாலும் மனதுக்குள் ஒரு பயம் அல்லது எச்சரிக்கை உணர்வு இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த பயம் கலந்த மனநிலை இப்போது அவர் தமிழில் பேசியதும் விலகியிருந்தது.

“வேலை செய்யுமிடத்தில் தலைவலி மற்றும் சளிக்கு மாத்திரை கேட்க அங்கிருந்த மருத்துவர் இரண்டு வேளைக்கு மாத்திரை கொடுத்தார். அதை மதியம் உணவுக்குப் பின் சாப்பிட்டேன் அடுத்து கொஞ்ச நேரத்தில் உடம்பில் அதிக மாற்றம். எங்கு சொரிந்தாலும் தடுப்புகள் வர ஆரம்பித்தன. தலை பாரமாக இருக்க ஒரு வித மயக்கம் கலந்த உணர்வினூடையே வீட்டுக்கு வந்தேன். எல்லாம் சரியாகப் போகும் என நினைத்த எனக்கு இந்தத் தடுப்பு இன்னும் அதிமானது. எங்கு கை வைத்துச் சொரிந்தாலும் அந்த இடத்தைச் சுற்றிலும் தடிப்பு தடிப்பாக மாறும்.” என்று சொல்லியபடி கைகளில் இருந்த தடுப்புகளை அவரிடம் காட்டினேன்.

என்னைத் திரும்பி படுக்கச் சொல்லிவிட்டு முதுகில் இருக்கும் தடுப்புகளைப் பார்த்து விட்டு, “இதே மாதிரிதான் எல்லா இடத்திலேயும் இருக்கா? ” என்று கேட்டார்.

“ஆமாம் இதோடு உடல் வலியும் மயக்கம் வருவதுபோல ஒரு உணர்வும் இருக்கிறது” என்றேன்.

“அது என்ன மாத்திரை? எதாவது பெயர் தெரியுமா?”

அங்கு மாத்திரை மொத்தமாக இரண்டு வேளைக்கு கொடுத்திருந்தார். மதியம் சாப்பிட்டது போக இன்னொரு ஜோடி என்னிடம் இருந்தது. அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதை ஆராய்ந்தபடியே அந்த செவிலியிரடம் கொடுத்தார். இருவரும் என்னைப் பார்த்தபடி எதையோ பேசிக் கொண்டிருக்க அது எதுவும் என் காதில் விழவில்லை.

அவர்கள் நகர்ந்ததும் மற்றொரு எண்ணம் மனதில் வலியைக் கொடுக்க ஆரம்பித்திருந்தது. பணம். சம்பளம் வாங்கியிருந்தாலும் மாதக்கடைசியில் எப்போதும் இருக்கிற பணம் இல்லை. வேலை நிமித்தமாகப் புதியதாக ஒரு மென்பொருள் சார்ந்த வகுப்பில் இணைய வேண்டியிருந்ததால் சரியாகச் செலவுக்கும் மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு மீதத்தை அங்கு கட்டியிருந்தேன். இரண்டு மாதத் தவணைகளாகக் கட்ட வேண்டும். இன்னுமொரு மாதம் இருக்கிறது. கணைக்குப் பார்த்து சரியாகப் பணம் வைத்திருந்தேன். இப்போது எவ்வளவு செலவாகும் என்பதுதான் என்னுடைய வலி. பேசாமல் எழுந்து போய்விடலாமா? என்ற எண்ணம்கூட மனதில் தோன்றி மறைந்தது.

மீண்டும் அந்த டாக்டர் வந்தார். “இது அந்த மாத்திரைகள் சாப்பிட்டதால் வந்த ஒவ்வாமைதான். ஒரு ஊசி போட்டால் சரியாகி விடும். ஊசி போட்ட பிறகு ஒரு மணி நேரம் கண்காணிப்பில் இருந்து விட்டு நீங்கள் போய் விடலாம். அல்லது இப்போது இரவாகி விட்டது இரவு தங்கி விட்டு போனாலும் போகலாம்” என்று சொல்லி முடித்தார். அவர் சொல்ல வருவது தனியாக ஒரு அறையில் சேர்ந்து சிகிச்சை பெறுகின்ற வழி. இன்னுமும் சிக்கலானது பண விசயம்.

“இல்லை டாக்டர்… வீடு பக்கம்தான் நான் போய்க் கொள்கிறேன். அந்த ஊசி உட்பட மொத்தமாக செலவு எவ்வளவு வரும்?” என்று கேட்டேன். அவரின் முகம் சற்று மாறியதை நான் கவனிக்காமல் இல்லை. “ஊசி மட்டும் போட்டு ஒரு அறையில் ஒரு மணிநேரம் கண்காணிப்பில் இருந்தால், குறைந்தது 1500 ரூபாய் வரை ஆகும்.” என்றார். அவரிடம் எப்படித் தெரிவிப்பது என்னிடம் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே இருப்பதை என்ற எண்ணம் நோயை விடக் கஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளியது. வரும்போது வீட்டு சொந்தக்காரரிடம் கேட்டு விட்டுத்தான் இந்த மருத்துவமனைக்கு வந்தேன். மருத்துவரைப் பார்க்க 200 ரூபாய் ஆகும். இன்னும்பிற மாத்திரைகள் இருந்தால் கூட 100 ரூபாய் ஆகுமென்ற கணக்கில் நான் எடுத்து வந்திருந்தேன். அதற்குமேலும் என்னிடமில்லை. இந்த நிலையில் எழுந்து வெளியில் சென்றால் பணம் எதுவும் கேட்பாரா? அல்லது வந்திருக்கும் பிரச்சினை சரியாகாமல் இன்னும் தீவிரமடைந்தால் என்ன செய்வது? என்ற குழப்பமான எண்ணங்கள் என்னுள் ஆக்கிரமித்தன.

“டாக்டர் இதை இப்படியே விட்டால் அதுவே சரியாகிவிடாதா?”

“அப்படி எதுவும் சொல்ல முடியாது. அந்த மாத்திரையை உங்கள் உடம்பு ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கு ஒரு நரம்பூசி போட்டால் 30 நிமிடத்தில் நிலைமை மாறத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் முழுதும் சரியாகி விடும். இப்படியே விட்டால் சரியும் ஆகலாம் அல்லது இன்னும் பிற பக்க விளைவுகளை வெளிப்படுத்தலாம் அது உங்களின் உடலைப் பொறுத்தது.” என்றார்.

கண்டிப்பாக அந்த ஊசி போட்டுத்தான் ஆக வேண்டும். நான் இருப்பதோ தனிமையில். ஏதாவதென்றால் அருகிலிருந்து கவனித்துக் கொள்ள யாருமில்லாத நேரத்தில் விபரீத முடிவுகள் எடுப்பது ஆபத்து என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இந்த இரவில் நண்பர்களை அழைத்து பண உதவி கேட்டால் நன்றாக இருக்காது. ஆனால் கண்டிப்பாக இப்போது எனக்கு பணம் தேவை. எப்படியாகினும் அந்த ஊசியைப் போட்டு குணமானால் சரி என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

“என்னிடம் பணமில்லை, 300 ரூபாய்தான் இருக்கிறது.” என்று அவரது முகத்தைப் பார்த்து ஒருவித குற்றவுணர்ச்சி கலந்த தாழ்வு மனநிலையில் சொன்னேன்.

“அந்த மருந்தே விலை அதிகமாயிற்றே? நான் உங்களை இங்கிருந்தபடியே அந்த ஊசியைப் போட்டு அனுப்பினாலும் குறைந்தது 800 ரூபாயாவது வேண்டும் என்ன செய்யலாம் என்று நீங்களே முடிவெடுங்கள். நண்பர்கள்,உறவினர்கள் யாரவது இருந்தால் எடுத்து வரச் சொல்லுங்கள். எவ்வளவு சீக்கிரம் ஊசி போடுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. அதோடு வேறு யாராவது பார்த்தால் உங்களை இங்கு அனுமதிக்கச் சொல்வார்கள். அது உங்களுக்கு இன்னும் சிக்கலாக மாறும்.” என்றார்.

அவரின் உதவி மனப்பான்மை எனக்குப் புரிந்தது. முடிந்த வரையில் மருந்துக்கு மட்டும் துட்டு வாங்கினால் போதுமென்று சொல்கிறார்.ஆனால் அதற்கே என்னிடமில்லாமல் இருந்தது. ஒருவித வெறுப்புணர்வு என்மேலே எனக்கு வந்திருந்தது. தன்னம்பிக்கை, தைரியம் இருக்கும் மனம் ஒரு சில இடங்களில் கூனிக் குறுகித்தான் போகின்றது என்பதை இந்த நிலையில் தெரிந்து கொண்டேன். மீதமிருக்கின்ற வழிகளை யோசித்து அடுத்த முடிவை எடுத்து அவருக்குச் சொல்ல வேண்டியவொரு கட்டாயம்.

“டாக்டர் நான் அப்படியே போய்விடட்டுமா?”

“ஏன் என்னாச்சு யாரும் உதவிக்கு இல்லையா இங்கே?”

“கூட வேலை செய்யும் நண்பர்கள் இருந்தாலும் அவர்களை இந்த நேரத்தில் இங்கு அழைத்து பணம் கேட்பது சரியென்று படவில்லை.”

“உங்களுக்கு வேறு வழியில்லை அதைச் செய்துதான் ஆக வேண்டுமென்றால் செய்யுங்கள்.”

நான் அமைதி காத்தேன். முடிவெடுக்கட்டும் என்ற எண்ணத்தில் வெளியில் சென்று மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கினார். அவர் சொன்னது போல நண்பர்களை அழைப்பதில் எனக்குத் துளிகூட விருப்பமில்லை. சொல்லப்போனால் அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக யாரும் எனக்கு அமையவில்லை. பிரச்சினை பணம் மட்டுமே. பணமிருந்தால் என்னால் அந்த ஊசியைப் போட்டுகொண்டு நிம்மதியாக வீடு போய் சேர முடியும். ஊரிலிருந்து பணம் வங்கிக்கணக்கில் போடச் சொல்லலாமென்றாலும், சொல்லும் காரணம் மோசமாக இருப்பதால் அதுவும் சாத்தியமில்லை. மிகுந்த எதிர்ப்பினூடே ரயிலேறியிருந்தேன். நான் இங்கு வருவதில் யாருக்கும் சம்மதமில்லைதான். இப்போது இந்தச் செய்தியைக் கேட்டால் உடனே கிளம்பி வரச் சொல்லிப் பிரச்சினை நடக்கும். எந்தப் பக்கமும் நுழைந்து போக முடியாத நிலையில் மாட்டியிருந்தேன்.

அந்தச் செவிலியர் அருகில் வந்து ” எதுனாலும் சீக்கிரம் சொல்லுங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்கள் ஷிப்ட் முடிந்து வேற ஆட்கள் வந்து விடுவார்கள். அவர்களிடம் நாங்கள் ரிப்போர்ட் ஒப்படைக்க வேண்டும்.” என்று மலையாளம் கலந்த தமிழில் எனக்குப் புரிய வேண்டுமென்பதற்காகச் சொன்னார்.

‘பேசாமல் அவர்களிடமே கொஞ்சம் கடன் கேட்டால் என்ன? சம்பளம் வந்ததும் திரும்பிக் கொடுத்து விடலாம்.’ என்ற எண்ணம் மனதில் தோன்றி மறைந்தது. அவர்கள் தினமும் பார்க்கும் நோயாளிகளில் நானும் ஒருவன். வருகின்ற அனைவரும் அவரிடத்தில் இந்த நிலையில் இருந்தால் என்னாகும். எல்லாவற்றிக்கும் காரணம் இந்த பாழாய்ப்போன மனதுதான் அவசரத்துக்கு ஒரு ஆள்கூட இல்லாத நிலைமையில்தான் இதுவரை அங்கு வாழ்ந்திருக்கிறேன். அப்படியொரு வாழ்வியல் முறையை வகுத்திருந்திருக்கிறது மனது. ‘யாருடனும் பேசாதே? நீ உயர்ந்தவன். அவர்களாகவே வந்து பேசினால் நீ பேசு. அவர்களைவிட நீ எந்த விதத்தில் நீ குறைந்தவன்? நீ வேலை செய்கிறாய். சம்பாதிக்கிறாய். உன்னை யாரால் என்ன செய்துவிட முடியும்? நீ தைரியமானவன்?அறிவாளி.’ என்ற பொய்க் காரணங்களை எவ்வாறெல்லாம் என்னை நம்ப வைத்திருந்திருக்கிறது. கடைசிவரை நீயொரு சகமனிதன்தான் என்பதை என்னுள் உணர வைக்காமல் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறது. மெதுவாகத் தடுமாறி கட்டிலை விட்டு இறங்கி வெளியில் சென்று அந்த இருவரில் யாராவது தெரிகிறார்களா? என்று பார்த்தேன். செவிலியர்தான் எதிரில் வந்து கொண்டிருந்தார்.

“என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறேதும் சிறிய மருத்துவமனை அருகில் இருந்தால் சொல்லுங்கள் அங்கு போய்க் கொள்கிறேன்”

“எங்கு போனாலும் அந்த மருந்தின் விலை அதேதான். இங்கே அந்த டாக்டருக்குப் பதிலாக வேறு யாரவது உங்களைப் பார்த்திருந்தால் இந்நேரம் தனி அறையில் அனுமதித்து சிகிச்சையை ஆரம்பித்திருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் போடுவதும் இதே ஊசிதான் முடிந்தவரை இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.”

“பணமில்லாமல் நான் என்ன செய்வது?” கேட்டபடி தலையக் குனிந்தேன் உண்மையில் வெட்கமாகத்தான் இருந்தது.

“நீங்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பீங்க அதுல கொஞ்ச காசைக் கேளுங்க. இங்க உள்ளவங்க தருவாங்க. திருப்பிக் கொடுத்துருங்க. இதையாவது பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

நோயைவிட அது தரும் பயம்தான் மனிதனை மிகவும் பாதிக்கும் என்பதற்கான சான்றிது. இந்த எண்ணம் ஏன் எனக்கு இல்லாமல் போனது? அந்தப் பெண் எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறாள். வீட்டு உரிமையாளரிடம் சென்று நடந்தைச் சொல்லி இவ்வளவு பணம் வேண்டுமென்று கேட்டால் தருவாரா? தயக்கமாய் இருந்தது. அந்தப் பெண் சொல்லும்போது இருந்த தைரியம் இப்போது என்னிடமில்லை. இருக்கின்ற ஒரே வழியும் இதுதான். இதற்கே தயக்கமென்றால் வீட்டுக்குச் சென்று போர்வை மூடித் தூங்கிவிட்டு மறுநாள் உயிரோடு இருந்தால் உலகத்தைக் காணலாம். இந்தத் தயக்கம், பயம், சமூகத்தை விட்டு விலகி வாழ்ந்து எதைச் சாதிக்கப் போகின்றேன்? அப்படியே முடியாமல் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். வெளியில் வந்த அந்தப் பெண் மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு விருட்டென்று வேறுபக்கம் சென்றாள். இதற்குமேலும் அந்த இடத்தில் அவர்களால் எனக்கு உதவி செய்திட முடியாதுதான். முடிவை என்னிடம் கொடுத்திருந்தார்கள். பாழாய்ப்போன மனதுக்கு இன்னும் உணரவில்லை உடலின் வலி. தடுத்துக் கொண்டேயிருக்கிறது எதற்கும். வீட்டுக்காரரிடம் சென்று பணம் வாங்கினால் என்ன குத்தம்? அதற்கும் தயக்கமெனும் தடை. ‘நீ யார்? எவ்வளவு பெரிய ஆள் நீ போய் அவர்களிடத்தில்…..’ முதலில் இதற்கொரு வைத்தியம் பார்க்க வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்களை நிறுத்திவிட்டு அந்தப் பெண் சொன்னதுபோல பணம் கேட்டுப் பார்ப்பது என்ற முடிவில் எழுந்து நடந்தேன். நான் நகர்வதைப் பார்த்ததும் அந்தச் செவிலியர் என்னை நோக்கி வந்தார்.

“போவதென்றால் டாக்டரிடம் சொல்லிவிட்டுப் போங்கள். உங்களை கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்”

“இல்லை. போய் நீங்கள் சொன்ன மாதிரி பணம் வாங்கிட்டு வருகிறேன்.” என்றேன்.

“எதுவாக இருந்தாலும் அவரிடம் சொல்லிவிட்டுப் போங்கள். அதுதான் நல்லது.” என்றாள் .

“இப்போது எங்கிருப்பார்?”

“உட்காருங்க. நான் கூப்பிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டுப் போனவள், 10 நிமிடம் கழித்து அந்த மருத்துவரோடு என்னிடம் வந்தாள்.

“பணம்தான் உங்களது பிரச்சனையா?”

“ம்ம்…” என்று தலையாட்டி வைத்தேன்.

“எங்கு தங்கியிருக்கிறீர்கள்?”

சொன்னேன்.

“குறைந்தது 30 நிமிடமாவது ஆகும். ஏற்கனவே அந்த ஊசியைப் போட்டிருக்க வேண்டும் இன்னும் தாமதமானால் பிரச்சினைதான்.” என்றார்.

“வேறுவழியில்லை டாக்டர் போய்தான் வாங்கி வர வேண்டும்”

சொல்லி முடித்த மறு நொடியில் அருகிலிருந்த மேஜைக்கு நகர்ந்தவர், அதன் மேலிருந்த தாளில் எதையோ எழுதி அவளிடம் கொடுக்க, அவளும் சொல்லி வைத்தாற்போல் மருந்தகம் நோக்கி நகர்ந்தாள்.

சற்று நேரத்தில் கையில் மருந்து இன்னும் பிற உபகரணங்களோடு வந்தவள், என்னை ஏற்கனவே படுக்க வைத்திருந்த அறைக்குள் வந்து படுக்கச் சொன்னாள். வலது கையை அவளே பிடித்து இழுத்து முழங்கையில் நரம்பைத் தேடுகின்ற வேளையில்,

“ஊசியைப் போடச் சொல்லி விட்டேன் போட்டு அரை மணி நேரம் கழித்து பணம் எடுத்து வந்து கொடுத்து விடுங்கள். தாமதம் வேண்டாம். ஷிப்ட் மாறிவிடும்.” என்றார்.

வட்டமாகத் தலையைச் சுற்றி சரியென்றேன். இவையனைத்தும் இந்தப் பாழாய்ப்போன மனது பார்த்துக் கொண்டுதானே இருக்கும். இப்படியும் சில மனிதர்களைப் பார்த்தாவது திருந்துமா? இல்லை, வீட்டுக்குப் போய்விட்டு “அதான் சரியாகிவிட்டதே இன்னும் என்ன பேசாமல் வீட்டிலியே கிட.” என்று சொல்லுமா? “அவர்களுக்கு உன் இருப்பிடம் தெரியவா போகிறது? இல்லையென்றால் நீதான் திரும்பி இங்கு வரப் போகிறாயா?” நறுக்கென்று ஊசியைக் குத்தியதில் எண்ணம் தடைபட்டு கவனம் குத்திய இடத்திற்குத் திரும்பியது. பெரிய ஊசியில் நிறைய மருந்துடன் மெதுவாக நரம்பில் செலுத்துவதில் கவனமாக இருந்தாள் நர்ஸ். மருந்து உள்ளே செல்லக் கொஞ்சம் வலி கொடுத்தது. திரும்பிக் கொண்டேன். முடிந்ததும் கையை மடிக்கச் சொன்னாள்.

“மயக்கமோ வாந்தியோ வந்தால் உடனே சொல்லுங்கள்.” என்றவள் எனக்குப் பயன்படுத்தியதை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தாள். நான் கையை மடக்கியபடி படுத்திருந்தேன். உடம்பில் எந்தவொரு மாற்றமுமில்லை. தடுப்புகளைப் பார்த்தேன் அப்படியே இருந்தன. ‘ஒருவேளை இந்த ஊசியும் உடம்புக்கு ஒத்துவரவில்லையா? இதற்கும் வேறொரு ஊசிபோடவேண்டிய நிலமை வந்தால் என்னாவது?’

அங்கு மருத்துவர் வரும்போது சரியாக நாற்பது நிமிடமாகியிருந்தது. உடம்பில் வேறேதும் மாற்றமில்லையென்றால் கிளம்பலாம் என்றார். மெதுவாக இறங்கினேன். முன்பைவிட நன்றாகவே நடக்க முடிந்தது. தலை சுற்றும் பிரச்சினையில்லை. வெளியில் வந்தேன்.அவள் வந்து கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்தாள். இன்னொரு கையில் மாத்திரை. காகிதத்தில் மொத்தமாக 800 ரூபாய்க்கு கணக்கிருந்தது. சொன்னதுபோல அந்த மருந்தின் விலை மட்டுமே அதிகம்.

“பணம் வாங்கிட்டு வந்து அந்த இடத்தில கட்டிடுங்க.” என்று சொன்னபடி கூட்டமாக இருந்த ஓரிடத்தை கை காமித்தாள்.

சரியென்று நகரும்போது நீங்கள் பணம் கட்டவில்லையென்றால் டாக்டரின் சம்பளத்தில் பிடிப்பார்கள் என்றாள் சிரித்தபடி. அவள் எந்த அர்த்தத்தில் சொன்னாளோ ஆனால் “ஏமாற்றாமல் வந்து பணத்தைக் கட்டிவிட்டுப் போ.” என்றே என் மனதுக்குப் புரிய வேண்டுமென்று நினைத்தேன். இதைவிட ஒரு தண்டனை அதற்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இதில் கற்றுக் கொண்ட பாடத்தில் மனதில் கட்டிய வீணான வீம்புக் கோட்டைகளைத் தகர்க்குமா? இல்லை இன்னும் வலுவாகச் சுவர்களை எழுப்புமா என்று கேள்விமயமானதில் எண்ணங்களைத் தடுக்கும் சுவர்கள்தான் எத்தனை. அதற்கு எது நல்லது? எது கெட்டது என்ற வரையறையை யார் சொல்லிக் கொடுப்பது? அது ஏன் என்னைக் கட்டுப்படுத்துகிறது? அவ்வாறு செய்ததால்தான் எனக்கு இந்த நிலைமை. இல்லையென்றால் வரும்போதே உடலில் பிரச்சினை இருக்கிறது மருத்துவமனைக்குச் செல்கிறோம் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் கூடுதலாக நண்பர்களிடமோ, வீட்டுக்காரரிடமோ கொஞ்சம் பணம் வாங்கியிருந்தால் இந்த நிலைமை இருந்திருக்காதே? ஒருவனால் மனதுக்கு தண்டனை தரமுடியுமா? அப்படியொரு வசதியிருந்தால் முதலில் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு தலைகீழாக இருக்கிறதே. அது செய்யும் தவறுக்கு நானல்லவா தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். மனதைப் பிடுங்கி தூக்கி வீசும் கலையொன்று கற்றுக் கொண்டால் தேவலையென்று இருந்து.

எனது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் சென்றதும், பெருத்த சத்தத்துடன், “ரிக்க்ஷா வேணுமா?” என்ற கேள்வியோடு அருகில் உரசாத குறையாக வந்து நின்றான் ஒரு பிஹாரி. நான் வட இந்தியா சென்றதும் வெறுத்த விஷயங்களில் ரிக்சாவும் ஒன்று. இதென்ன பழக்கம் மனிதனை வைத்து மனிதன் சுமப்பது. பண்டைய கால பல்லக்கு முறைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? எவ்வளவு பாவமான விசயமது? அதில் பயணிக்கிறவர்களுக்கு மனசாட்சியே இல்லியா? எப்படி தன்னை மற்றொருவன் சுமந்து செல்வதை அவர்கள் அனுமதிக்கிறார்கள்? என்றெல்லாம் மனதில் எழும் யோசனைகளால் மனதை நானே மெச்சிக்கொண்ட காலமது. ஒரு போதும் அதில் பயணித்ததில்லை. அப்படியொரு வைராக்கியம் என்னைக் கட்டிப் போட்டது. எல்லாமே அந்த பாழாய்ப்போன மனதுதான். ஆனால் உண்மை வேறு மாதிரி. அந்த சைக்கிள் ஓட்டுபவனுக்கு இதுதான் மூன்று வேளை உணவுக்கான வழி. எகிறி எகிறி மிதித்தாலும் அன்றைய கூலிக்கு அவனால் ஒருநாளுக்கான உணவை மட்டுமே அவன் குடும்பத்துக்கு வழங்க முடியுமென்ற நிலை. அதற்கு உதவத்தான் அவர்கள் இதன் மீது பயணிக்கிறார்கள். எல்லோருமே என்னைப்போல யோசித்திருந்தால் அதை ஓட்டுபவர்களின் நிலைமை? குறைந்த தூரமென்றாலும் அவன் கேட்ட துட்டை கொடுத்துவிட்டுத்தான் செல்வார்கள். அவன் வாங்கிய கையோடு அவர்களுக்கொரு வணக்கம் வைத்துவிட்டு ஒற்றைக்காலால் தனது சைக்கிளை உன்னி மிதிக்க ஆரம்பிப்பான். அந்தத் துட்டு அவனது குழந்தைக்கு ஒருவேளை ரொட்டிக்கு உதவலாம். எந்தவொரு வேலையும் செய்யாமல் அந்தப் பணத்தைப் பெற நினைத்திருந்தால்தான் தவறே ஒழிய அவனது உடல் உழைப்பை மூலதனமாக்கி சம்பாரித்துக் குடும்பத்தை நடத்துகிறவனுக்கு உதவுவதில் என்ன தவறு. என்னை ஏன் இந்த மனது இவ்வாறு கெடுத்து வைத்திருக்கிறது? என்ன ஆனாலும் பரவாயில்லை ஏறி அமர்ந்துவிட்டுப் போக வேண்டிய இடத்தைச் சொன்னேன். வண்டியை எடுக்கும் முன்பே எவ்வளவு என்பதை சொல்லிவிட்டுத்தான் மிதிக்க ஆரம்பிப்பான். எவ்வளவாகினும் நான் கொடுப்பதென்பது தீர்மானமானது. எனக்கும் மனதுக்கும் நடக்கும் சண்டையில் லாபம் பெறுகிறானோ? பெற்றுக் கொள்ளட்டுமே. இதுவொரு எடுத்துக்காட்டுதான். இதேமாதிரியான பல விசயங்களில் என்னை ஏமாற்றி வைத்திருக்கிறது இந்த பாழாய்ப்போன மனது.

வீட்டுக்காரரிடம் நடந்தவற்றைச் சொல்லி ஆயிரம் ரூபாய் கேட்டேன். கொஞ்சம் பதற்றமானார். “வேறொன்றுமில்லையே? போன் செய்திருந்தால் நானே அங்கு வந்திருப்பேனே? நீ என்னிடம் சாதாரண காய்ச்சல் என்றுதானே சொன்னாய்? இரு எடுத்து வருகிறேன்.” என்று சொல்லி உள்ளே சென்றார். ரிக்சா காரனுக்கு இன்னும் காசு கொடுத்திருக்கவில்லை. காத்திருக்கச் சொல்லிவிட்டு வந்திருந்தேன். திரும்பவும் மருத்துவமனைக்குச் செல்வதாக உத்தேசம். ஒரு காலைத் தரையில் ஊன்றியபடி வண்டியைத் திருப்பிய நிலையில் தயாராக நின்றிருந்தான். அவர் கையில் கொடுக்கும்போது சம்பளம் வாங்கியவுடன் தந்து விடுகிறேன் என்றேன். “ஒன்னும் பிரச்சினையில்லை. முதலில் இதிலிருந்து குணமாகு.” அதுவே போதுமென்றார்.

மருத்துவமனை வாசலில் இறங்கிய நேரத்தில், அவனுக்குக் கொடுக்க வேண்டிய எண்பது ரூபாயை நீட்டினேன். பத்து ரூபாயைத் திரும்பி என்னிடமே கொடுத்தான். போவதற்கு நாற்பது, வருவதற்கு எனக் கணக்கு சரிதானே என்ற குழப்பத்தில் அவனைப் பார்த்தேன். “சார்… இது போதும் சார்.” எனப் பாக்கு படிந்த பல்லோடு சிரித்தான். ‘இந்தா இதையும் வச்சிக்கோ’ என்று கொடுக்க முயல வேண்டாமென்று மறுத்துவிட்டுக் கிளம்பினான். என்ன நினைத்தானோ அல்லது அவனது மனது அவனை என்ன சொல்லி ஏமாற்றியிருக்கிறதோ? ஒருவேளை அவரிடத்தில் கடன் வாங்கிவந்து மருத்துவமனைக்கு செல்வதால் எனது நிலைமை அவனுக்கும் புரிந்திருக்குமோ? அதை அவனிடம் கேட்கும் மனநிலை எனக்கில்லை.

உள்ளே சென்று பணத்தைக் கட்டினேன். ரசீது கொடுத்தார்கள் வாங்கி கையில் வைத்துக்கொண்டே அந்த இருவரில் யாராவது தெரிகிறார்களா பார்த்தேன். பெயர்கள் கூடத் தெரியாது. கேட்கவில்லை. எப்படிப் பார்ப்பது? ஒரு வாய்மொழி நன்றியாவது சொல்லியாக வேண்டுமே. குறைந்தது நான் பணம் கட்டிவிட்டேன் என்பதையாவது தெரிவிக்க வேண்டும். ஒருவேளை ஷிப்ட் முடிந்திருக்க வேண்டும். எல்லாம் புதிய முகமாக இருந்தது. ஒருவேளை பார்க்கமுடியதோ என்ற எண்ணத்தில் நாற்காலியை நோக்கி நகர்ந்தேன், காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில். அந்தப் பெண் வந்தாள். அருகில் மற்றொரு மலையாள பெண். அனேகமாக அடுத்த ஷிப்ட்டாக இருக்கவேண்டும். பையிலிருந்த ரசீதை எடுப்பதுபோல பணம் கட்டிவிட்டேன் என்றேன்.சரியென்று சொல்லிவிட்டு “போய் வாருங்கள்.” என்றாள். அவளுக்கு அவசரமென்பது அவளது பேச்சில் தெரிந்தது. டாக்டரைப் பார்க்கமுடியுமா என்ற கேள்விக்கு முடியாதென்றாள். “அவர் மற்றொரு டாக்டருடன் பேசிக் கொண்டிருப்பார். பணி முடியும் நேரம். அப்படியே பாக்கணுமென்றால் நாளைக்கு வாருங்கள்.” என்றாள். வேகமான நடையில்தான் இவ்வளவும் பேசி முடித்திருந்தோம். நான் இப்போது நிற்பது மிகப் பெரிய வீதி போன்றொரு இடத்தில் இருபக்கமும் அறைகள் இருக்க இரண்டு இரண்டு பேராக பரபரப்புடன் இருந்தார்கள். அதற்குமேல் நான் செல்லவில்லை. வீடு திரும்பும் எண்ணத்தில் திரும்பி நடந்தேன்.

மணி பத்தைத் தாண்டியிருந்தது. சாலைகளில் கூட்டம் குறையத் தொடங்கியிருக்க, மீண்டும் ரிக்ஷா பிடிக்கலாமா? என்ற எண்ணத்தைத் தவிர்த்து நடக்க ஆரம்பித்தேன். கடந்து சென்ற மூன்று மணி நேரங்களில் எவ்வளவு பிரச்சினைகள், படிப்பினைகள். தெரிந்து கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது என்னிடத்தில். இதுவரை இருண்ட அறைகளில் என்னை வைத்துப் பூட்டியே வைத்திருந்திருக்கிறது எனது மனது. ‘அப்படியானால் என்னால் ரசிக்கும்படியும் வெறுக்கும்படியும் செய்தது? இதுதான் சரி தவறென்று உணர்த்தியதெல்லாம் என்ன?எங்கோ தவறா? இல்லை எல்லாமே தவறா? மனதோடு இந்தக் கேள்விகளைக் கேட்பதில் எனக்குத் துளியளவும் சம்பந்தமில்லை. ஏன் மனதையே எனக்குப் பிடிக்கவில்லை. அதனை மாற்ற முடியுமா? ஆம் என்றால் அதற்கான வழியும் அதனுள்ளேதானே இருக்கும். என்னவிருந்தாலும் மாற்றம் தேவைதான்.’ இதே நிலையில் நானிருக்க சுத்தமாக விரும்பவில்லை.

வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் பூங்காவின் திண்டில் அமர்ந்தேன். இளவயதினர் புல்லில் புத்தகத்தை வைத்துவிட்டு எதிரெதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நான் எப்போதும் அமர்ந்து ரசிக்கும் இடத்தில்தான் அமர்ந்திருந்தேன். ‘இந்த மனதால்தான் இந்தப் பூங்காவை ரசித்தோமா? எல்லாம் சரிதானா?’ அந்த ரசனைகள் மனதுக்கு இதம் தந்திருந்தாலும் அதன்மீது இப்போதொரு வெறுப்பு, சந்தேகம். இதிலும் மனது என்னை ஏமாற்றியிருக்கலாம் என்றவொரு எண்ணம். ‘ஆம், நடக்க முடியாமல் வயதான பாட்டியோ, தாத்தாவோ அருகில் வந்து அமர்ந்த போது, பாசமாக இல்லாவிட்டாலும் அறிமுகத்திற்காவது ஏதாவது பேசியிருக்கலாம். ஏன் சிரிக்கக் கூட இல்லாமல் அவர்கள் பக்கம் பார்வை படாத மாதிரியல்லவா அமர்ந்திருந்திருக்கிறேன். இதுதான் என் மனது எனக்குச் சொல்லிக்கொடுத்திருந்த ரசனை. எதிரில் அந்த சிறுவர்கள் தவறாக விளையாடியபோது நான் போய் திருத்தியிருக்கலாம் அல்லது அவர்களோடு விளையாடி மகிழ்ந்திருக்கலாம். அந்த பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்பைச் சரி செய்திருக்கலாமே… அதை விடுத்து தூரமாய் நின்று வாழ்வை ரசிக்க கற்றுக் கொடுத்த இந்த மனது எவ்வளவு கேவலமானது. வெறுமனே பச்சைப் புற்களையும், மரங்களையும் பார்த்து சாந்தமடையும் மனது மனிதர்களின் மனதையும் அதன் உணர்வுகளையும் எனக்குக் காட்டாமல் போனது எதனால்?எல்லாம் எனது தவறா? இல்லை, மனதின் தவறா? ஏன் அதனை சரிசெய்யாமல் அதனோடு பயணித்தேன்?’

‘இதோ அந்த மருத்துவரை மறுமுறை வேறெங்காவது பார்த்தால் இந்த மனது என்ன சொல்லுமென்று தெரியுமா? விலகி கண்ணில் படாமல் ஓடி விடு. அதான் அவனால் உனக்கு ஆகவேண்டிய வேலை முடிந்துவிட்டதே பின் என்ன? அப்படியே கண்ணுக்குக் கண் பார்க்க நேர்ந்தால் மெல்லியதாக சிரித்து வைத்துவிட்டு நகர்ந்து சென்று விடு என்றுதான் சொல்லுமே தவிர, அவரிடம் சென்று நன்றியுரைக்கவோ? அன்று அவரைப் பார்க்காமல் வந்ததுக்கு மன்னிப்பு கோரவோ இடமளிக்காது. மீண்டும் என்னை அதன் அறைக்குள் வைத்துப் பூட்டுவதே இந்த மனதின் எண்ணம்.’

‘ஆனால் இந்தமுறை விடுவதாய் இல்லை. அப்படியே எங்காவது அவரைப் பார்க்க நினைத்தால் நானே அவரின் முன்னால் சென்று பேசுவேன், நன்றி தெரிவித்து அவரின் சென்னை வாழ்க்கையைப் பற்றியும் இன்னும்பிற விசயங்களைப் பற்றியும் அவரின் அனுமதியோடு பேசிவிட்டுத்தான் வருவேன். முடிந்தால் நண்பனாக முயற்சிப்பேன். நாளையிலிருந்து அந்தப் பட்டாம்பூச்சிகளோடு விளையாட வேண்டும். அருகில் வந்தமரும் அந்த வயதானவர்களோடு சிரிக்கவாவது செய்ய வேண்டும். பேச்சுத் தொடர்ந்தால் கூடவே நடந்து சென்று அவர்களின் வாழ்க்கையில் பங்கெடுக்க வேண்டும். இதனைத் தடுத்தால் மனதை நான் அமரும் அந்த பெஞ்சில் கழட்டி வைத்துவிட்டு அவர்களின் மனதோடு பயணிக்க வேண்டும். மனது திருந்தினால் அதற்கு ஒரு பாடமாய் இதைச் சொல்லுவேன். இல்லையென்றாலும் நல்லொதொரு தருணத்தில் அதைத் திருத்துவேன். அதுவும் திருந்தும். மனதளவில் ஒருபடி மேலே சென்று புத்தனாக விரும்புகிற என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் போதிதான் தேவையென்றால் வேறு வழியில்லை. கிடைக்கின்ற பூங்காவோ, ரிக்க்ஷாகாரனோ, மருத்துவமனையோ போதுமானது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button