சிறுகதைகள்

நிலா முற்றம் – குமாரநந்தன்

சிறுகதை | வாசகசாலை

நாங்கள் அந்த வீட்டுக்குப் போன போது கார்த்திகை மாதத் தூறல் பனித்தூவலாய் தூறிக் கொண்டிருந்தது. போர்ட்டிகோ தூண் அருகே ரோஸ் நிற சம்பங்கிப் பூ போன்ற பூக்களைப் பூத்துச் சொறிந்து கொண்டிருந்த அந்தக் கொடி மௌனமாய் மழையை ரசித்துக் கொண்டிருந்தது.

வீடு எளிமையாய் இருந்தாலும், ஒரு விஷேசத் தன்மை மனதை மயக்குவதாய் இருந்தது. நாங்கள் புதிதாய் பவர்லூம் போட்டிருந்தோம். நெய்த துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் வைத்திருந்த நரசிம்மனைப் பார்த்து ஆர்டர் பிடிப்பதற்காக இங்கு வந்திருந்தோம். சிறிய அளவிலான வரவேற்பறையில் ஒரு அடி உயர குஷன் வைத்த சோபா போடப்பட்டிருந்தது. அதற்கு முன் இருந்த கண்ணாடி டீப்பாயில் அன்றைய தினசரிகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன.

“ஒரு நிமிஷம் உட்காருங்க.” என உள்ளேயிருந்து பெண் குரல் கேட்டது. நாங்கள் இருவரும் சோபாவில் உட்கார்ந்து அனிச்சையாக பேப்பரை எடுத்து விரித்தோம். குரலுக்குரிய அந்தப் பெண் எட்டிப் பார்த்து, “என்ன விஷயம்?” என்றாள். “என் பேர் கார்த்திக். இவன் ஜெயந்த். புதுசா தறி போட்ருக்கோம். சார் கிட்ட ஆர்டர் ஆர்டர் கேட்கலாம்னு வந்தோம்.” என்றேன். அவள், “இருங்க மாமா இப்ப வந்துடுவார்.” என்றாள். திறந்த கதவின் வழியே விசாலமான ஹால் தெரிந்தது. “கொஞ்சம் இருங்க காப்பி கொண்டு வர்றேன்.” என மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.

சில நிமிடங்களிலேயே காபியுடன் அங்கே வந்தவள், “எத்தனை தறி போட்டிருக்கீங்க?” எனக் கேட்டபடி காபியை வழங்கினாள்.

“பத்து தறி போட்டிருக்கோம்.” என நான் சொன்னேன். ஜெயந்ந் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் புன்னகையுடன் உள்ளே சென்றுவிட்டாள்.

ஜெயந்ந், “அந்த பொண்ணு நல்ல அழகி இல்லை?” என்றான். நான் அவன் கண்களுக்குள் விரலை விடுவது போல கொண்டு சென்று, “அவிங்க இந்த வீட்டு மருமக.” என்றேன்.
காப்பியைக் குடித்து முடித்தவுடன் நரசிம்மன் அறைக்குள் வந்தார். நாங்கள் எழுந்து நின்று வணக்கம் சொன்னோம். அவர் புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டு உட்காரச் சொன்னார். சோபாவுக்கு அருகில் இருந்த தனிச்சேரில் உட்கார்ந்து உடனடியாக பேச்சைத் தொடங்கினார். அவருக்கு எங்களை மிகவும் பிடித்து விட்டது என்று நினைக்கிறேன். அவருடைய பேச்சை மிக நெருக்கமாக உணர முடிந்தது. என்ன மாதிரியான துணிகளை ஏற்றுமதி செய்கிறார். என்ன விலைக்கு எடுத்துக் கொள்கிறார் போன்ற விஷயங்களை விவரித்தார். எங்களால் எவ்வளவு துணி நெய்து தர முடியும் என கேட்டுக் கொண்டார். அதன் தரம் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொன்னார். பேசி முடிந்தவுடன் கிளம்பத் தயாரானோம். நான், “சார் வீடு ரொம்ப அழகா இருக்கு.” என்றேன். அவர் பளிச்செனப் புன்னகைத்தார்.

“உள்ள வாங்க…” என ஹாலுக்குள் அழைத்துப் போனார். அது ஒரு அரண்மனையை நினைவுப்படுத்துவதைப் போல இருந்தது. ஜன்னல்கள் அழகாக இளஞ்சிவப்பு நிற திரைச் சீலையிடப்பட்டிருந்தன. அளவான வெளிச்சம் அந்த அறையை ஒரு ஓவியம் போல உணரச் செய்தது. நான் ஜெயந்த்திடம், “கட்டினா இப்படி ஒரு வீட்டைக் கட்டணும்” என்றேன். அவன் ஆமோதிப்பாய் தலையாட்டினான்.

அங்கே ஒரு பெரியவர் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உருவத்துக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஒருவேளை இங்கே வேலை செய்பவராய் இருப்பாரோ என நினைத்தேன். ஆனால் வேலை செய்பவர் எப்படி சோபாவில் உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்க முடியும். சரி யாராவது கிராமத்தில் இருந்து வந்த சொந்தக் காரராய் இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.
வீட்டின் பொருட்கள் கச்சிதமாய் வைக்கப்பட்டிருந்தன. இள நீல நிறச் சுவற்றின் நடுவே பச்சை வயல்களுக்கிடையே பொழுது புலரும் அழகான ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.
நரசிம்மன், சமையலறை, படுக்கையறை, பூஜை அறைகளைக் காட்டிவிட்டு மேலே மாடிக்குக் கூட்டிச் சென்றார்.

கதவைத் திறந்ததும் ஒரு கனவுலகில் நுழைந்ததைப் போல இருந்தது. அரைவட்டமான நிலா முற்றம் ஒரு பெரிய ஹாலைப் போல இருந்தது. பால்கனி கூரையை சரியான இடைவெளியில் நுண் வேலைப்பாடுள்ள தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தூண்கள் வெளியே தெரியாதபடி பூங்கொடிகள் அதில் சுற்றியிருந்தன. விதம் விதமான வண்ண வண்ணமான பூக்கள் அதில் பூத்து காற்றில் அசைந்து பனித் தூவலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

“சார்…. அற்புதம். நீங்க ஒரு தேர்ந்த ரசனையான ஆள் சார்.” என்றேன். அவர் புன்னகைத்தபடி, “பவுர்ணமி அன்னைக்கு நாங்க எல்லோரும் இங்கே வந்துருவோம். மேக மூட்டம் இல்லைன்னா இந்தப் பக்கம் செம்மஞ்சள் வானத்தில நிலா உதயம் அவ்வளவு அற்புதமாய் இருக்கும்.” என்றார்.

நான் அங்கே நிலா உதயமாவதைக் கற்பனை செய்து பார்த்தேன். ஏதோ மாயப்பொடியை நுகர்வது போல மயக்கமாய் இருந்தது. அங்கிருந்து வெளியே வரவே மனமில்லாமல் வெளியே வந்தோம். நரசிம்மனிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பத் தயாரானோம்.

வீட்டின் பக்கவாட்டில் இருந்த அலுவலக அறை போன்ற அறையில் இருந்து வந்த ஒரு இளைஞன் எங்களோடு இணைந்து கொண்டான்.

பனித்தூறல் நின்றிருந்தது. அந்த இளைஞன், “என் பேர் அசோக்.” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். “கொஞ்ச தூரத்திலதான் ஆபீஸ் வாங்களேன்.” என எங்களோடு நடக்க ஆரம்பித்தபடி, “நீங்க எங்கிருந்து வர்றீங்க?” என்றான்.

பின், “இந்த வீட்டுக்குள்ள ஒரு பெரியவரைப் பாத்தீங்க இல்ல, அவர்தான் இந்த வீட்டை கட்டினது. ஆனால் இப்ப அவருக்கே அது தெரியாது. அந்தப் பொண்ணு அவர் மகள்தான். அதுவும் அவருக்குத் தெரியாது.” என்றான். அவன் சொன்னதும் சட்டென எங்கள் இருவருக்கும் புரியவில்லை. “நீங்க என்ன சொல்றீங்க?” என்றேன் நான். ஜெயந்த்தும் அதே கேள்வியோடு அவனைப் பார்த்தான்.

“அது ஒரு பெரிய கதை. என்னவோ அதை உங்ககிட்ட சொல்லனும் போல இருக்கு.” என்றான். நாங்கள் “சொல்லுங்களேன்.” என்றதும், “இப்ப முடியாது ஆபீசுக்கு நேரமாச்சு. ஞாயித்துக் கிழமை லீவன்னைக்கு வாங்க சொல்றேன்.” என்று போன் நம்பர் கொடுத்தான்.
அதற்குப் பின் வந்த நாட்களிலும் அவ்வப்போது பனித்தூறல் தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் மனதில் அந்த வீடுதான் நிழலாடிக் கொண்டிருந்தது. தறி வேலைகள் விறுவிறுப்பாய் போய்க் கொண்டிருந்தன. ஆர்டர் எடுத்து வந்து, டிசைன் போட்டு, அதற்கேற்ற நூல்களை எடுத்து வந்து பாவு பிணைத்து தறியில் ஏற்றும் வேலை எல்லாம் முடிய நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அவ்வளவு வேலைகளுக்கு இடையேயும் அசோக் சொல்லவிருக்கும் கதையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே நாங்கள் அசோக் வீட்டில் இருந்தோம்.
அசோக் எங்களுக்குத் தேனீர் கொடுத்துவிட்டு, எழுதப்பட்ட வெள்ளைத்தாள் கற்றையை எங்கள் கைகளில் கொடுத்தான். “எனக்கு அப்படியே சொல்றதை விட எழுதிடறது பெட்டர்னு தோணுச்சி. அப்படியே எழுதிட்டேன். படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.” என்றான் புன்னகைத்தபடி. வீட்டுக்கு வந்ததும் அதை படிக்கத் துவங்கினோம்.
•••
ஒரு திகில் படத்தைப் பார்ப்பதைப் போல அண்ணாதுரை அண்ணாச்சியின் வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி மாணவனான எனக்கு அப்போது அண்ணாச்சியின் வாழ்க்கையை கூர்ந்து பார்ப்பது மகிழ்ச்சியாய் இருந்தது.

நெற்றியில் திருநீறு தீட்சண்யமான பார்வையுடன், அண்ணாச்சி பார்ப்பதற்கு செல்வச் செழிப்புள்ள மனிதர் போல இருப்பார். நொடித்துப் போகும் முன் அது உண்மையும் கூட. ஆனால் அவர் வீழ்ச்சிக்குப் பின், அந்த பெரிய மனித தோரணை அவரிடம் இருந்து விடைபெற்றுச் செல்வதை அவரால் தடுக்க முடியவில்லை.

அவர் துறையூரோ எங்கேயோ நல்ல வளமான காவிரிக் கரை பூமியில் இருந்து இங்கு வந்து மளிகைக் கடை வைத்திருந்தார். அவர் மட்டும் அல்ல அவர் உறவினர்கள் நிறைய பேர் இங்கே வந்து மளிகை கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, ஓட்டல் என வைத்திருந்தார்கள். உள்ளூர்காரர்கள் இதையெல்லாம் ஒரு ஆற்றாமையோடு சொல்லிக் கொண்டிருப்பார்கள். “எங்கிருந்தோ வந்தவங்க எல்லாம் இங்கே ராஜாவாட்டம் பொழைக்கிறாங்க. நம்ம ஆளுங்களெல்லாம் கூலி வேலைக்கும், கொத்து வேலைக்கும் போறாங்க.” என்பார்கள். சில இளவட்டங்கள், “இவங்களையெல்லாம் அடிச்சி முடுக்கணும்.” என அவர்கள் முன்னாலேயே சொல்வார்கள். ஆனால் அண்ணாச்சி முன்பாக யாரும் அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லத் துணிவு வராது. அவருடைய புன்னகை அப்படி.

அவர் ஊரில் உள்ள தோட்டம், துரவு, ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்குச் சென்று முடியும் பழங்கால வீடு எல்லாவற்றையும் அவர் கண்களில் பார்க்க முடியும். வேறு ஏதோ ஒரு மன்னர் காலத்தில் இருந்து நேரடியாக இங்கு வந்துவிட்டவர் போல அவர் ஜம்மென்று இருந்தார்.

எங்கள் வீட்டுக்குத் தேவையான எல்லா மளிகை ஜாமான்களையும் அவரிடம்தான் வாங்கினோம். நாங்கள் மட்டுமல்ல ஊரில் நூற்றுக்கணக்கான பேர் அவர் கடைக்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.

கடையில் எப்போதும் கூட்ட நெரிசலாய் இருக்கும். மூட்டையாக அரிசி வாங்குபவர்கள், ஆடு, மாடுகளுக்கு புண்ணாக்கு, பருத்திக் கொட்டை வாங்குபவர்கள் முதற்கொண்டு, கும்பாபிஷேகத்திற்கு பூஜை செலவு வாங்குபவர்கள் வரைக்கும் கடையில் காத்திருந்து வாங்கிப் போவார்கள். அண்ணாச்சி வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீடு என்பதால், நான் போனால் வெகுநேரம் காக்க வைக்காமல் அவ்வளவு கூட்டத்துக்கு நடுவேயும் கேட்பதை சீக்கிரமாய் கொடுத்து அனுப்பி விடுவார்.

அவர் வீட்டில் பணக்கார சாயலும், எளிமையின் சாயலும் ஒரே சமயத்தில் இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மனைவி மஞ்சுளா, ஒளி வீசும்படி அத்தனை நேர்த்தியாய் இருப்பார். அவர் மகள் இளமதிக்கு இரண்டு வயது பூர்த்தியானதும் இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தார். வாழ்க்கை சதுரங்கத்தில் அவருடைய கடினமான காலம் துவங்கியது.
யாருக்கும் அது தெரியவில்லை. ஏன் அவருக்கே அது தெரியவில்லை. ஏழு லட்சம் போல பணம் ரொக்கமாகக் கொடுத்து ஊரின் மையமான இடத்தில் நிலம் வாங்கினார். இந்தப் பக்கத்து மாதிரியாக இல்லாமல் ஏதோ ஜமீன்தார் பங்களாவைப் போல வீட்டின் அமைப்பே ராஜகளையாய் இருந்தது. கடைக்கால் எடுக்கும் முன்பாக லாரி லாரியாக கரம்பை மண்ணைக் கொண்டு நாடக மேடை மாதிரி இடத்தை உயரமாக்கினார். முன்னால் விசாலமான போர்ட்டிகோ. அதற்குப் பக்கவாட்டில் ஒரு அறை. ஊருக்கே விருந்து வைக்கலாம் என்பது போல விசாலமான முன்னறை. வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் என்னவென்றே தெரியாத இனம்புரியாத உணர்ச்சி என்னை பீடித்துக் கொண்டது.

‘இப்படியெல்லாம் நாம் எங்கே வீடு கட்டப் போகிறோம்…?’ என்ற ஏக்கம்தான் அப்படி ஒரு பொறுக்க முடியாத உணர்வாய் கிளம்பியிருக்கும் என பின்னாளில் நினைத்துக் கொண்டேன். இப்போது யோசித்துப் பார்த்தால் அது பொறாமைதான் எனத் தோன்றுகிறது.

என்னைப் போலத்தான் ஒவ்வொருவரும் நினைத்திருப்பார்கள். பின்னே யார் அவ்வளவு பெரிய வீட்டைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்க முடியும் என நினைத்துக் கொண்டேன்.
ஒரு நாடகத்தில் காட்சி மாறுவது போல எல்லாம் மாறிவிட்டது. அண்ணாதுரை அண்ணாச்சி கடனாளி ஆகிவிட்டார். ஊரில் யாராலும் அதை நம்ப முடியவில்லை.

அவருக்கு கடன் பிரச்சினை தலை தூக்கும் முன்பே அப்பாவிடம் ஐம்பதாயிரம் ரூபாயை வாங்கி விட்டிருந்தார். “வீடு கட்ட அவசர செலவுக்கு வேணும். இருந்தா கொடுங்க பேங்கில் பணம் எடுத்துக் கொடுத்துடுறேன்.” எனக் கேட்டார். அப்பாவுக்கு ஒரே பெருமை அண்ணாச்சி தங்களிடம் கடன் கேட்பதா? பேங்கில் சேமிப்பு என இருந்த அறுபதாயிரத்தில் ஐம்பதாயிரத்தை அப்படியே எடுத்துக் கொடுத்துவிட்டார். எனக்கு கூட பெருமையாகத்தான் இருந்தது. அண்ணாச்சிக்குக் கடன் கொடுத்ததன் மூலம் நாங்களும் அவர் அளவுக்கு செல்வாக்குள்ளவர்களாக என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

அண்ணாச்சி பணத்தை திருப்பித் தரவில்லை. ஒரு மாதம் போல அவர் சொன்ன விதவிதமான காரணங்களை உண்மையென்று நம்பிக் கொண்டிருந்தோம். பின்புதான் அவர் ஊரைச் சுற்றி இதேபோல கடன் வாங்கியிருப்பது தெரிய வந்தது. அப்பா ஆடிப் போய் விட்டார். பைனான்ஸ் கம்பெனியில் கணக்கு எழுதுபவராக வேலை செய்து கிடைத்த சொற்ப வருமானத்தில் குருவி சேர்ப்பதைப் போல சேர்த்து வைத்திருந்த காசு போய்விட்டதே என முகம் செத்துப் போனார். என்றாலும் நம்பிக்கையாய் போய் கேட்டார். அவரும், “உங்க பணம் எங்கயும் போகாது .இப்ப கொஞ்சம் முடை சரியாயிரும் தந்துருவேன்.” என சளைக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.
மளிகைக் கடை கிடு கிடு வென காலியாக ஆரம்பித்தது. முதல் போட பணம் இருந்தால்தானே கடையில் ஜாமான் இருக்கும். இருந்தாலும் அவர் வீட்டை எப்படியோ அழகாகக் கட்டி முடித்துவிட்டார். கிரகப் பிரவேசத்திற்கு ஊரையே அழைத்திருந்தார். அண்ணாச்சி இருந்த திடத்தைப் பார்த்தால் நம்பிக்கையாகத்தான் இருந்தது. பின் அந்த வீட்டுக்குக் குடி போனார். சின்ன வீட்டில் ராஜாபோல் இருந்தவர். பெரிய வீட்டில் தரித்திரத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தார்.

பெரிய மளிகைக் கடை பெட்டிக் கடையாக சுருங்கியது. மஞ்சுளா அக்காவை கடைப்பக்கமே பார்க்க முடியவில்லை. இளமதி ஐந்தாவது வரை நகரத்தின் பெரிய கான்வென்ட்டுக்குப் போனவள், அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு விபரம் தெரியும் போது ஏழ்மை நன்கு அறிமுகமாகியிருந்தது.

கடன்காரர்கள் தினம்தினம் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தார்கள். அண்ணாச்சி ஏதேதோ சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியபடி இருந்தார். யாருக்கும் அவர் பணத்தைத் திருப்பித் தருவார் என எண்ணமில்லை. என்றாலும் பேசாமல் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்களின் பொறுமை எல்லை தாண்ட ஆரம்பித்தது. எவ்வளவு நாள்தான் இந்த பதிலை கேட்டுக்கறது?

ஒரு லட்சம் இரண்டு லட்சம் கொடுத்தவர்கள் எல்லாம் “வீட்டை வித்து காசு கொடு.” என அவரை அரிக்க ஆரம்பித்தார்கள்.

“இப்போதான் கட்டின வீடு நாப்பது லட்சமாட்டம் செலவு பண்ணியிருக்கேன். இதுக்காகப் போய் ஏன் வீட்டை விக்கனும்.” என அவர்களிடம் மன்றாடினார்.

நாட்கள் செல்லச் செல்ல பலர் பொறுமை இழந்தனர். பத்து பேர் போல கூட்டமாகச் சேர்ந்து கொண்டு ஒருநாள் அண்ணாச்சி வீட்டுக்கு முன்பாக போய்விட்டனர். தெருவே கூடி விட்டது. வழக்கம்போல அவர் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் வந்தவர்கள் யாருக்கும் அதைக் கேட்கும் மனம் இல்லை. எல்லோரும் ஒரு மாதிரி உணர்ச்சி வசப்பட்டிருந்தார்கள். என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்ற கட்டுப்பாட்டை இழந்து பல நாள் அடைத்துக் கொண்டிருந்த சாக்கடையைத் திறந்துவிட்டதைப் போல கரு நிற வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்கள். அவர் மனைவியை ஊருக்குள் விட்டு சம்பாதித்துக் கடனைக் கட்டும்படி யாரோ சொன்னபோது அண்ணாச்சி திக்பிரமை பிடித்ததுபோல நின்று விட்டார்.
மஞ்சுளா சேலைத் தலைப்பை வாயில் பொத்திக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார். பேச்சே எழவில்லை. இருவருக்கும் பூமி ஒரு நிமிடம் நின்று சுழன்றதைப்போல இருந்தது. பின் முதலில் தன்னிலைக்கு வந்த அவர் மனைவி, அச்சத்தில் அழுது கொண்டிருந்த மகளை அணைத்துக் கொண்டு, மெல்லிய குரலில் “என்னங்க வீட்டை விற்க ஏற்பாடு பண்ணுங்க.” என்றார்.

கூட்டமே ஒரு மாதிரி ஆகிவிட்டது. கடன்காரர்கள் அதற்கு மேல் ஒரு வார்த்தை பேசாமல் போய்விட்டார்கள்.

நாற்பது லட்சம் செலவு செய்து கட்டிய அந்த பிரம்மாண்ட வீடு இருபது லட்சத்திற்கு விலை போனது. அண்ணாச்சியின் கடன் நிலவரத்தைத் தெரிந்து கொண்ட புரோக்கர்கள் சமார்த்தியமாகப் பேசி விலை அதற்கு மேல் தாண்டாதவாறு தந்திரம் செய்து விற்றுக் கொடுத்தார்கள்.

வெளியில் வாங்கியதில்லாமல் வங்கியில் வாங்கியிருந்த பத்து லட்சத்திற்கு வட்டி மூன்றாண்டுகளில் இருபது லட்சமாக வளர்ந்து விட்டிருந்தது. வந்த பணமெல்லாம் கடனுக்கே சரியாகிவிட்டது. அப்படியும் அப்பாவிடம் வாங்கிய ஐம்பதாயிரத்தில் இருபதுதான் வந்தது. அண்ணாச்சி அதை வீட்டுக்கு வந்து கொடுத்தார். அவர் கைகள் நடுங்கின. “எல்லாருக்கும் கொடுத்துட்டேன். உங்களுக்கு இவ்வளவுதான் இப்போதைக்கு முடிஞ்சது. எப்படியும் கொடுத்துருவேன்.” என்றார். அப்பா எதுவும் பேசவில்லை. இந்தப் பணம் வந்ததையே பெரியதாக நினைத்தார். “வேணும்னா இதை வச்சுக்குங்க அண்ணாச்சி அப்புறம்தான் கொடுங்க.” என அவர் சொன்னதும் அண்ணாச்சி கண் கலங்கினார். “வேணாம் வையிங்க.” என கொடுத்து விட்டுப் போனார்.

ஊரின் முக்கியப் புள்ளிகளில் ஒருவராய் இருந்த அண்ணாச்சி ஒரு சாதாரண மனிதராகிவிட்டார். அவரும் மஞ்சுளாவும் மில்லுக்கு வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள்.
••••••
இளமதி பள்ளிக் கூடம் விட்டு வந்தபோது அம்மா முன்வீட்டில் படுத்திருந்தார். “ஏம்மா சீக்கிரமா வந்துட்டியா?” எனக் கேட்டதற்கு ஒடம்புக்கு முடியல என்றார்.

இளமதி அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் கால்களை மெல்லப் பிடித்து விட்டாள். அம்மா அவளையே வெறித்துப் பார்த்தார். பின் கைகளை ஊன்றி எழுந்து உட்கார்ந்து மகளின் தலையை வருடி, “நீ போய் படிம்மா.” என்றார்.

அண்ணாச்சி வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தார். மது குடிக்க ஆரம்பித்திருந்தார். அவர் முகத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த பழம் பெருமையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. நம்பிக்கையெல்லாம் கொட்டிக் கவிழ்க்கப்பட்ட வெற்று உடலாக இருந்தார். அவர் புன்னகை சாயம் போன துணி மாதிரி இருந்தது. இருந்தாலும், தான் பழைய ஸ்திதியிலேயே இன்னும் இருப்பதாக பாவனை செய்வதை அவரால் விடமுடியவில்லை.
குடியால் வியர்த்த முகத்தோடு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தார். “அம்மா தண்ணி கொண்டு வாம்மா” என்றார் மகளைப் பார்த்து. இளமதிக்கு அப்பாவின் வியர்வையைப் பார்த்ததுமே புரிந்து விட்டது. உள்ளுக்குள் உடைந்து போனவளாய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

மஞ்சுளா மெல்ல, “வீட்டு வாடகை கேட்டாங்க.” என்றார்.

அண்ணாச்சி, “இந்த வாரம் கொடுத்தரலாம்.” என்றார்.

மகளைப் பார்த்து, “கண்ணு… இது என்னம்மா துணி? கொஞ்சம் நல்ல துணியா போட்டுகிட்டு நீட்டா இருக்கக் கூடாதா?” என்றார். இளமதி “ஏன் இதுக்கென்ன நல்லாத்தான் இருக்குது.” என்று புத்தகப் பையை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

“நல்லா இருக்குதா? இந்தத் துணி உனக்கு நல்லா இருக்குதா?” என்று வியப்பாய் கேட்டார். பின் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுதார்.

மஞ்சுளா எழுந்து கொண்டார். “தீபாவளி வருதுல்ல பிள்ளைக்கு நல்லதா நாலு செட் துணி எடுத்துக் கொடுத்துக்கலாம். எந்திரிங்க. எந்திரிச்சி முகத்தக் கழுவுங்க. சாயந்திர நேரத்தில உக்காந்து அழுதுகிட்டு. வாங்க விளக்கு போட்டுட்டு சாமி கும்பிடலாம்.” என்று உள்ளறைக்குள் நுழைந்தார்.

மகளிடம் “தோச ஊத்த போயி மாவு பத்து ரூபாய்க்கி பொட்டு கடலை பத்து ரூபாய்க்கி வாங்கீட்டு வா.” என்றார்.

மஞ்சளா விளக்கைப் போட்டுவிட்டு, வெங்காயம் தக்காளிப் பழங்களை எடுத்து வந்து அரிவாள்மனையோடு உட்கார்ந்தார்.

“எங்கியாவது இடத்தைப் பாத்து சின்னதா ஒரு கடை போடப் பாக்கலாமில்ல.” என்றார் . “இருக்கிற நிலமைய தெரிஞ்சிகிட்டேதான கேக்கிற. கடை போட பணம் எங்க இருக்குது? இனிமே கடை போட இங்க என்ன பையனா இருக்கான் மூட்ட மூட்டையா ஜாமான்களைத் தூக்கி நிறுத்த? நா இனிமே அவ்வளவுதான் நேரம் வந்தா போயி சேர வேண்டியதுதான்.” என்றார்.

“ஆமா வெள்ளிக்கிழமையும் அதுவுமா விளக்கு வெச்ச நேரத்தில பேச்சைப் பாருங்க. எல்லாம் முடிஞ்சி போச்சாம். பிள்ளைய எங்க கொண்டு போய் விடுவீங்க?” என்றார் ஆற்றாமையோடு.
“பிள்ளைய உன் சொந்தத்துல பாத்து நீ கட்டிக் குடுக்க மாட்டியா?” என்றார்.
மஞ்சுளா எதுவும் பேசவில்லை. தக்காளியை அரிய ஆரம்பித்தார். இளமதி பாத்திரத்தில் மாவு வாங்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

காலையில் மஞ்சுளா நேரத்தோடு எழுந்து சமையல் வேலையைத் தொடங்கினார். ஒன்பது மணிக்குள் இருவரும் மில்லுக்குப் போக வேண்டும். இளமதி பள்ளிக்கூடம் போக வேண்டும்.
அண்ணாச்சி எழுந்தவுடன் போய் குளித்துவிட்டு வந்தார். நேற்று நடந்தது எதுவும் அவர் நினைவில் இல்லை. பழைய சம்பவங்கள் கூட எப்போதும் போல அவர் மனதை அறுக்கவில்லை. ஏதோ ஒரு இனம்புரியாத தெம்பில் தெளிவாக அமைதியாக இருந்தார். இளமதியின் முகத்தைப் பார்க்கப்பார்க்க மனதில் வாஞ்சை பொங்கியது. “அம்மா நல்லா படிக்கணும். பெரிய வேலைக்குப் போகணும் தெரியுதா?” என்றார்.

இளமதிக்கு சலிப்பாய் இருந்தது. இந்த அப்பாவுக்கு இதைவிட்டால் வேறு எதுவும் தெரியாதா? எனத் தோன்றினாலும் “சரிப்பா” என்றாள்.

பெரியவளாகிப் பெரிய டெய்லர் ஆகி விட வேண்டும் என்பதுதான் அவள் கனவாக இருந்தது.
அண்ணாச்சிக்கு எப்போது பார்த்தாலும் மகள் பாந்தமான தோற்றத்தில் பெரிய ஆபீசராக வேலைக்குப் போவது போன்ற சித்திரம் மனதுக்குள் தோன்றிக் கொண்டே இருந்தது.
மஞ்சுளாவுக்கு அப்படியான காட்சிகள் எதுவும் தோன்றுவதில்லை என்றாலும், மகளும் கண்ணுக்கு லட்சணமான மருமகனும் பைக்கில் வந்து இறங்கி, சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் வரும் ஒரே ஒரு காட்சிதான் அவர் மனதுக்குள் வந்து கொண்டிருந்தது.
வெளியே மில் வண்டியின் ஹாரன் சத்தம் கேட்பதற்கும் அவர்கள் சாப்பாட்டுப் பையைத் தயார் செய்து கொண்டு வீட்டைப் பூட்டுவதற்கும் சரியாக இருந்தது.
மில் பஸ் கடைவீதி வழியாக ஊர்ந்து சென்றது. அண்ணாச்சி முன்பு மளிகைக்கடை வைத்திருந்தபோது சின்னச் சின்னதாய் இருந்த கடைகள் எல்லாம் இப்போது பிரம்மாண்டமாய் வளர்ந்து நின்றன. அவர் உறவினர்கள் ஒருவர் கூட சோடை போகவில்லை. நாம் மட்டும் எப்படி இப்படி ஆனோம் என்ற நினைவு நெஞ்சைக் கத்திபோல் அறுத்தது. கலங்கும் கண்களை இமை மூடி கட்டுப்படுத்தினார். இந்தக் காட்சிகள்தான் சாயந்திரம் அவரை மதுக்கடைக்கு துரத்துகின்றன.

மஞ்சளா சக பெண்களுடன் வேலையைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டு புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார்.

அண்ணாச்சி செல்வாக்காய் இருந்தபோது அவரிடம் அன்னியோன்யமாய் பழகியவர்கள் எல்லாம் இப்போது அப்படி இல்லை. பரிதாப உணர்ச்சியின் மீது கேலி கிண்டலைப் பூசி அதன் மீது சம்பிரதாயமான அன்பைத் தடவிப் பேசுவார்கள். ஏதோ உலகத்திலேயே அவர் மட்டும்தான் வீழ்ச்சியடைந்துவிட்ட மாதிரியும் அவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்பது மாதிரியும் பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களோடு பேசுவதற்கே அண்ணாச்சிக்குப் பிடிப்பதில்லை.

ஒரே நாளைப் பிரதி எடுத்ததைப் போல ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டிருந்தது. மாயம் போல சில ஆண்டுகள் ஓடி விட்டன. அண்ணாச்சிக்கு உண்மையில் நாம் வாழ்கிறோமா அல்லது வாழ்வதைப் போல கனவு காண்கிறோமா என சந்தேகமாய் இருந்தது. அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நிலைக்கு மாறிக் கொண்டிருந்தார்கள். சின்னக் குழந்தையாய் இருந்தவர்கள் சிறுவர்கள் ஆகிறார்கள். சிறுவர்கள் வாலிபர்கள் ஆகிறார்கள். வாலிபர்கள் குடும்பஸ்தர்கள் ஆகிறார்கள். ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் பெரிய ஆபீசர் ஆகிறார்கள். சிலர் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போய்விட்டார்கள். ஊரில் நான்கு வழிச்சாலை வந்து விட்டது. நகைக்கடைகள் எல்லாம் கூட வந்து விட்டது. ஒரு நகரின் சாயல் ஊருக்கு வந்து விட்டது.

ஆனால் அவரும் மஞ்சுளாவும் மட்டும் அப்படியேதான் இருக்கிறார்கள். குடியாலும் மன உளைச்சலாலும் அவருக்கு சீக்கிரமே வயோதிகம் வந்து விட்டது. அவர் மனைவிக்கும் வயதாகிவிட்டது என்றாலும் அவர் முகத்தில் கவலையின் ரேகைகள் இல்லை. அண்ணாச்சிக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவரால் மட்டும் எப்படி அப்படி இருக்க முடிகிறது? சாமி கும்பிட்டுக் கும்பிட்டு ஞானியாகிவிட்டாளா எனச் சந்தேகமாய் இருந்தது. ஆனாலும் அவரின் தலைமுடிகள் வெளுத்திருந்ததை வைத்து அவருக்குள்ளும் கவலை இருக்கிறது என அண்ணாச்சி நினைத்துக் கொண்டார். வெளுத்த தலைமுடியை வாரி, அதில் அளவான கனகாம்பரச் சரத்தை வைத்துக் கொள்ளும்போது காலம் என்பது ஒரு பஸ் போலவும் அவர் அதில் ஏறிச் செல்லும் ஒரு பயணி போலவும் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது போலத்தான் தோன்றினார்.

இளமதி பிளஸ் டூ படிக்கிறாள். பேரழகிக்கான சாயல் அவளிடம் தென்பட்டது. அது இருவரையும் திகிலடையச் செய்தது. அவளை ஒரு ஆபிசராக்கிவிட வேண்டும் என்ற கனவு அவரை அறியாமலேயே எப்போதோ விடைபெற்றுப் போய் விட்டது. ‘இவளை யாருக்குக் கட்டிக் கொடுப்பது?’ என்ற யோசனைதான் இப்போது அண்ணாச்சியின் ஒரே சிந்தனையாக இருந்தது.

என்றாலும் அண்ணாச்சிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. தங்கள் சாதியில் யாராவது ஒருவன் பெரிய ஆபிசராக இருப்பவன் அல்லது எங்காவது பெரிய ஜவுளிக்கடை வைத்திருப்பவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மகளைக் கட்டிக் கொண்டு போவான் என நினைத்திருந்தார்.
இளமதி சுமாராகத்தான் படித்தாள். வகுப்பில் பத்தாவது ரேங்க் எடுத்தாள். அவள் நடை உடை பாவனைகளில் ஆபிசர் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பொருளாதாரத்தில் தனக்கு ஏற்பட்ட வீழ்ச்சிதான் மகளை இப்படி மாற்றிவிட்டது என நினைத்து நினைத்து மறுகினார் அண்ணாச்சி. மளிகைக்கடை அப்படியே இருந்து கடனாளி ஆகாமல் இருந்திருந்தால், இவள் சீமாட்டி போல் இருந்திருப்பாள். டாக்டருக்கு அல்லது கலெக்டருக்குப் படித்திருப்பாள் என்ற நினைவை அவரால் சமன் செய்ய முடியவில்லை.
அந்த வீட்டில் மூன்று கனவுகள் சுற்றிக் கொண்டிருந்தன. மஞ்சுளாவின் கனவில் இளமதியின் அருமையான கணவன் அவளோடு மகிழ்ச்சியாய், ஒரு நல்ல வேலையில், அழகான வீட்டில் இருந்தான்.

அண்ணாச்சியின் கனவில் அவள் ஒரு செல்வந்தர் வீட்டு மருமகளாய் அரண்மனை போன்ற வீட்டில் இருந்தாள்.

இளமதியின் கனவில் அவள் ஒரு புகழ்பெற்ற டெய்லராய் இருந்தாள். தைக்க முடியாத அளவுக்கு அவளிடம் துணிகள் குவிந்து கொண்டிருந்தன. வேலைக்கு நான்கு பேரை நியமித்து எந்நேரமும் தைத்துக் கொண்டே இருந்தாள்.

மில் வேலை அண்ணாச்சிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஓயாமல் இருமல் வந்து கொண்டே இருந்தது. சில சமயம் இருமலோடு ரத்தம் வந்தது. ஒருமுறை இருமல் நிற்காமல் வந்தது. இருமி இருமி ரத்தம் ரத்தமாய் துப்பினார். இதயமும் நுரையீரலும் தூள் தூளாய் கிழிந்து ரத்தம் வழியாய் வெளியேறிவிட்டதா எனப் பார்த்தார். சாவு வந்துவிட்டதைப் போல அவ்வளவு களைப்பாய் இருந்தது. மஞ்சுளா தாரைதாரையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டு வாடகை வண்டி பிடித்து அவரை டாக்டரிடம் கூட்டிப்போய் காட்டினார். சோதித்துப் பார்த்த டாக்டர், “அவர் எங்கே வேலை செய்கிறார்?” எனக் கேட்டார். நூல் மில் என்றதும், “அவருக்கு பஞ்சு தூசி ஒத்துக் கொள்ளவில்லை. நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது அவர் இனிமேல் மில் வேலைக்கு போகக் கூடாது.” எனச் சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார்.

அண்ணாச்சி வேறு எங்கே வேலைக்குப் போகலாம் என்ற பலத்த யோசனையோடே வீட்டுக்கு வந்தார்.

நாட்கள் போய்க்கொண்டே இருந்தன. மஞ்சுளாவின் வாரக் கூலியை மட்டும் வைத்து நாட்களை உருட்டித் தள்ள வேண்டியிருந்தது. குடிக்க வேண்டும் என்று தோன்றினாலும் கையில் காசு இல்லாமல் என்ன செய்வது எனத் தெரியவில்லை. மஞ்சுளா வேலைக்குப் போயிருக்கும்போது வீட்டில் தனக்குத் தெரியாமல் பணம் ஏதாவது வைத்திருக்கிறாரா என ஒரு பக்கமாய் இருந்து துழாவிப் பார்த்தார். பத்து ரூபாய் கூடச் சிக்கவில்லை. படுத்துக் கொண்டு எத்தனை நாள் பொழுது போக்குவது என்று தெரியவில்லை. ஏதாவது ஓட்டலில்தான் வேலை செய்யலாமா என்ற எண்ணம் அவரைப் பிடித்து ஆட்டத் தொடங்கியது.
அன்று சாயந்திரம் மழை பெய்து கொண்டிருந்தது. இளமதி பள்ளி முடித்து வந்து விட்டாள். நனைந்த பையில் இருந்து புத்தகங்களை எடுத்துப் பரப்பி வைத்தாள். “அப்பா இன்னும் மூணு மாசம்தான் இருக்குது பரிச்சைக்கு.” என்றாள். அவள் குரலில் எந்த உணர்வும் இல்லை.
அவருக்கு திகிலாய் இருந்தது. மில் பஸ்சில் இருந்து இறங்கி மழையில் நனைந்து கொண்டே மஞ்சுளா வந்தவுடன் படுக்கையில் சாய்ந்து விட்டார். அவர் உடலில் காய்ச்சல் கொதித்தது.
“மஞ்சு வா டாக்டரைப் போய் பார்க்கலாம்.” என்றார். அவர் “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஒரு அனாசின் வாங்கிப்போட்டா சரியாயிடும்.” என்றார்.

“நான் டவுன்ல ஓட்டல் கடைக்கு வேலைக்குப் போகலாம்னு இருக்கேன். எத்தனை நாளைக்கு சும்மாவே உக்காந்திருக்கிறது?” என்றார். மஞ்சளா ஒன்றும் பேசவில்லை.

மறுநாள் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு டவுனுக்குப் போனார். ஓட்டல் கடையில் போய் எப்படி வேலை கேட்பது என்றே அவருக்கு தெரியவில்லை.

பஸ் ஸ்டாண்டை ஒட்டி வரிசையாய் இருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே கடந்து விட்டார். நான்கைந்து கடைகள் தள்ளி இருந்த அன்னபூரணா ஓட்டலைப் பார்த்ததும் இங்கே போய் கேட்கலாம் என்று தோன்றியது.

உள்ளே போய் கல்லாவுக்கு முன்னால் இருந்தவரிடம் தயங்கித் தயங்கி, “வேலை எதாவது கிடைக்குமா?” என்றார்.

கல்லாவில் இருந்தவர் கடை முதலாளியாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளைச் சட்டையும் நெற்றியில் திருநீறுமாய் எளிமையாக இருந்தாலும் அவர்தான் முதலாளி என்பதை சொல்லாமலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.

அவர் அண்ணாச்சியை ஒரு கணம் கூர்ந்து பார்த்தார். அவர் கண்களைப் பார்த்து அவர் வாழ்க்கை முழுவதையும் தெரிந்து கொண்டவர் போன்ற தோற்றத்துக்கு அவர் முகபாவம் மாறியது.

“யார் நீங்க? என்ன வேலை தெரியும்?” என எதுவும் கேட்கவில்லை. ‘‘சரி உள்ள போய் வேலை செய்ங்க.” என்றார். உள்ளே பார்த்து, “பரந்தாமன் ஐய்யா புதுசா வேலையில சேந்திருக்கார். அவர் என்ன செய்யணும்னு பார்த்து சொல்லுங்க.” என்றார்.

அண்ணாச்சிக்கு அழுகை வந்தது. தேம்பி அழுது விடுவார் போல இருந்தது.

அன்றிரவு இருவருக்கும் டிபன் கட்டிக் கொண்டு வந்தார். ஓட்டல் முதலாளியைப் பற்றி மஞ்சுளாவிடம் கதை கதையாய் சொன்னார்.

மஞ்சுளா அன்று அபூர்வமாக உதிரி மல்லி வாங்கியிருந்தார். சாப்பிட்டு முடித்துவிட்டுத் தூங்கப் போகும் முன் மல்லிகைப் பூக்களை சரம் தொடுத்தார்.
அதைத் துணியில் சுற்றி வைத்துவிட்டுப் படுத்தார். காலையில் எழுந்திருக்கவில்லை.
•••
இளமதி பள்ளிக்கூடம் முடித்துவிட்டு வீட்டில் இருந்தாரள். அவளை காலேஜில் சேர்க்க உதவ முடியுமா என ஓட்டல் முதலாளியிடம் அண்ணாச்சி கேட்டார். அவர் நிச்சயம் உதவுவதாகச் சொன்னார்.
••••
அண்ணாச்சிக்கு சப்ளையர் வேலை நன்கு பழகிவிட்டது. பரம்பரை பரம்பரையாய் ஓட்டல் தொழிலில் இருந்தவர் போல வேலை செய்தார்.

இளமதி எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டும், ஏதாவது வேலை சம்பந்தமான பயிற்சி செய்வதுமாக இருந்தாள். அண்ணாச்சியின் கையில் ஏதோ கொஞ்சம் காசு சேர ஆரம்பித்தது.
இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் தன் கையில் பணம் புழங்குவதை நினைத்து அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஆனால், இந்த சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு பெண்ணை எப்படி வேலையில் சேர்ப்பது, திருமணம் செய்து வைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை.

ஆனால் இளமதி அவருக்கு அந்தக் கஷ்டத்தை வைக்கவில்லை. ஒருநாள் வேலை முடிந்து வந்தபோது மகளின் கடிதம் அண்ணாச்சியை வரவேற்றது.

“அப்பா நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அதை எப்படி உங்களிடம் சொல்வது எனத் தெரியவில்லை. அவருக்கும் அவர் அப்பாவிடம் சொல்ல பயம். நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்கிறோம். என்னை மன்னித்து விடுங்கள்.”

கடிதத்தைப் படித்தவுடன் மயங்கி விழுந்தார் அண்ணாச்சி. அப்படியே எவ்வளவு நேரம் கிடந்தாரோ தெரியவில்லை. மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவருக்குப் பழைய நினைவுகள் எதுவும் இல்லை. தான் யார் என்பதே நினைவில் இல்லை.

பைத்தியக்காரன் போல சாலையில் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார். அவர் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துவிட்டு அவரிடம் விசாரித்திருக்கிறார். ஆனால் அவருக்கு தான் யார் என்பதே தெரியவில்லை என்பதை அறிந்து பரிதாபப்பட்டு அவருக்கு சாப்பாடு போட்டுக் கொடுத்தார்.

அண்ணாச்சியைக் காணாத ஓட்டல் முதலாளி இரண்டு நாள் கழித்து கார் எடுத்துக் கொண்டு அவரைத் தேடி வீட்டுக்கு வந்தார். அண்ணாச்சி இருந்த கோலத்தைப் பார்த்ததும் அவர் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை அவரை காரில் ஏறச் சொல்லி தன் வீட்டுக்குக் கூட்டிப் போய் விட்டார்.

இளமதி பெங்களூரில் மெட்டல் டையிங் நிறுவனமொன்றில் மேலாளராக இருக்கும் கணவனுடன் நிம்மதியாய் இருக்க முடியாமல் தவித்தாள். அப்பாவை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவளை அறுத்துக் கொண்டே இருந்தது. கணவனிடம், “அப்பாவைப் பார்க்கப் போலாம்…” என நச்சரிக்க ஆரம்பித்தாள். மூன்று மாதங்கள் கழித்து இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். அப்பாவை ஓட்டல் கடைக்காரர் கூட்டிப் போய்விட்டதைத் தெரிந்து அவரைத் தேடிக் கொண்டு போனாள் இளமதி.
சுயநினைவில்லாத அப்பாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“அண்ணாச்சி, யார் இந்த பொண்ணு?” எனக் கேட்டார்.
••••
கவுதமின் அப்பா மகனின் காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை. இருவரும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு அங்கேயே இருந்துவிட்டனர். கவுதம் பெங்களூரு வேலையை ராஜினாமா செய்து விட்டு, அப்பாவின் எக்ஸ்போர்ட் கடையைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.
••••
மருமகளின் அப்பா சுயநினைவில்லாமல் ஓட்டல்காரரின் வீட்டில் தங்கியிருப்பது கவுதமின் அப்பாவுக்குத் தெரிய வந்தது. “அவரை நம் வீட்டுக்கே கூட்டி வந்துவிடலாம்.” என்றார்.
எல்லோரும் போய் அண்ணாச்சியைப் பார்த்து தங்களுடன் வரும்படி கேட்டார்கள். நரசிம்மனுக்கு அப்போதுதான் தம்மிடம் வீட்டை விற்றவர்தான் தனக்கு சம்பந்தியாகியிருக்கிறார் எனத் தெரிந்தது.

அண்ணாச்சி, ஓட்டல் கடைக்காரரிடம் சொல்லிக் கொண்டு இளமதியுடன் கிளம்பினார்.
வீட்டுக்கு முன்னால் கார் வந்து நின்றதும், “இந்த வீட்டை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குது.” என்றார் அண்ணாச்சி.

தாள்களில் இருந்து கண்களை விலக்கினேன். அண்ணாச்சி, அவர் மகள், நரசிம்மன், அசோக் எல்லோர் முகமும் மனதில் வந்து வந்து போனது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button