சிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்
புகழின் செல்வன்

போஸ்டரை மட்டுமே பார்த்து விட்டு, ‘இது கறுப்பின அரசியலைப் பேசும் படம்’ , ‘அடக்குமுறைக்கு எதிரான கதைக்களம்’ என்று பலரும் களமாடியிருக்கலாம் அல்லது இனிமேல் ஆட வாய்ப்புள்ளது. அரசியல் படம்தான் ஆனால் குறிப்பிட்ட ஒர் இனத்தின் அரசியல். வலுவான அரசியல். இவ்வுலகில் இருப்பது இரண்டு இனம் மாத்திரமே. அதில் முக்கியமான ஓர் இனத்தைப் பற்றிய கதை. நிலம் வேறுபட்டாலும் மொழி வேறுபட்டாலும் இக்கதையில் கையாண்டுள்ள கருத்தரசியல் உலகில் எல்லா மூலைகளிலும் பரவியிருக்கும் பெரும் மூளைகளுக்கும் குடைச்சலை உண்டாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆப்ரிக்க திரைப்படம். அமெரிக்கத் தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படம் என்றாலும் இதை அமெரிக்கத் திரைப்படம் எனச் சொல்லமாட்டேன். யாராவது அப்படிக் கூற முகத்தில் ஒரு முத்திரையைப் பரிசாகக் கொடுத்து விடுங்கள்.
கதைச்சுருக்கம்
வறட்சி ஒரு அழகிய வாஸ்துப் பறவையைப் போல மிக நேர்த்தியாக செயல்படும். இயலாதவர்களுக்கும் வறியவர்களுக்கும் மட்டுமே மேலும் மேலும் அதன் நீட்சியைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அந்த வறட்சிப் பறவையானது பறக்கிற போக்கில் பஞ்சம் எனும் கொட்டையைத் தூவி விட்டு ஒய்யாரமாகப் பெயர்ந்து சென்றுவிடும். அந்தக் கொட்டையானது அழுகிப் போகாமல் வறுமைத் துளிரை நிலமெங்கும் பசுமையாக்கி விடும். இந்தப் பசுமையின் நெடி தாங்க முடியாமல் வழிப்பறியையும் கொள்ளைகளையும் மருந்தாக உட்கொண்டு தன் வாழ்வை நீட்டிக்க மனிதகுலம் முயற்சிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் ஒரு ஆபத்பாந்தவன் அதிசயமொன்றைத் தருவிப்பான். அவன் பெரும்பாலும் மண்ணின் மைந்தனாகவே தான் இருப்பான். அதிசயம் அவர்களின் வாழ்வையே புரட்டி போட்டு விடும். அப்பறவையும் வழக்கம்போல் வேறு நிலத்தின் மேல் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கும்.
ஆப்ரிக்கர்களுக்கும் தமிழர்களுக்கும் ஆதி முதல் நிறைய தொடர்பிருக்கிறது. அது காலங்காலத்திற்கும் முன்னே பிணைக்கப்பட்ட சங்கிலி. அந்த பந்தத்தைப் படம் நெடுகிலும் எங்கோ என்னால் கானல் நீர் போல் உணர முடிந்தது.(எனக்குத் தோன்றியது மற்றவர்களுக்கு தோன்ற வேண்டும் என்று அவசியமில்லை). விவசாயம் தான் பிரதானம் என்பதை எடுத்த எடுப்பிலே பார்வையாளர்களுக்கு உணர்த்தி விடுகிறது திரைப்படம். விவசாயம் என்றால் நிச்சயம் வறட்சி இல்லாமலா. அந்த வறட்சியை, அதன் கோர தாண்டவத்தை, உண்மையான முகத்தைப் போகப்போக நம் கண் முன்னே காட்டியிருக்கிறார் இயக்குனரான நடிகர்.(இயக்குனருக்கு முதல் படம்.நடிகராக திரைத்துறையில் ஏற்கனவே கால் பதித்தவர்).
ஆப்ரிக்க தொல்குடியின் பாடலோடு தொடக்கக்காட்சி விரிகிறது. தொல்குடிக்கும் அந்நிலத்திற்குமிருக்கும் பிணைப்பை உணர்த்த அக்காட்சி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. வடசென்னையர்கள் என்றாலே அடியாட்களாகவும், வன்புணர்வு செய்பவர்களாகவும் இங்கு காட்டபடுவது போலவே, பெரும்பாலான படங்களில் கருப்பினத்தவர்கள் கொள்ளையர்களாக, கொத்தடிமைகளாக, நாகரீகக் கூலியாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், இங்கு அவர்களின் வாழ்க்கை முறையைக் காட்சிப்படுத்திருக்கிறார்கள். இதுவும் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். அதனால் காட்சிப்படுத்துதலில் இயக்குனருக்கு மட்டும் பங்கில்லை என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.
மிகவும் பின்தங்கிய நிலமே கதைக்களம். விவசாயம் தான் அங்கு பிராதனம். வானம் பார்த்து வாழும் மக்கள். சோளத்திற்கு இக்கதையில் முக்கியப் பங்குண்டு. சோளம் தான் வாழ்வாதாரம். சரி கதைக்குள் செல்வோம் வாருங்கள்.
பழங்குடிகளின் பாடல் வரிகளுடன் தொடங்கும் போதே ஒருவித மென்பரவசத்தை பார்வையாளர்களுக்குள் கடத்தத் தொடங்கிவிடுகிறது இப்படம். நிலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூற அடுத்த காட்சியினை இயக்குனர் பயன்படுத்திக்கொள்கிறார். சோளக்காட்டிற்குள் கதையின் நாயகனான வில்லியமின் பெரியப்பா இறந்து விடுகிறார். அதுவரை பொதுவாக இருந்த நிலம் அவர் இறப்பிற்குப் பிறகு இறந்தவரின் மகனுக்கு செல்கிறது. அங்கு முதல் தான் கதையின் நாடி துடிக்கத் தொடங்குகிறது. அப்பொழுது அங்கு இடம் பெறும் நடனக்காட்சி நிச்சயம் ஒருவித தாக்கத்தை நமக்குள் ஏற்படுத்தும். ஒருவகை ஆப்ரிக்க ஆன்மீக நடன வகை அது. இறந்தவரை வழியனுப்புவதற்கான சாங்கியம் என்று கூடக் கூறலாம்.
படத்தின் தலைப்பை வைத்துப் பார்க்கும் பொழுது இக்கதையின் நாயகன் சிறுவன் தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா. அச்சிறுவனின் பெயர் வில்லியம். அமைதியான ஆரவாரமில்லாத ஹீரோ இன்ட்ரோடக்ஸன் சீன். வையர்கள் சூழ ரேடியோவை சீர்ப்படுத்தும் காட்சியை அழகியலுடன் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ரேடியோ பாட்டரி வையர்கள்… நிச்சயமாக இதைச் சார்ந்து ஏதோ ஒரு அற்புதத்தை இச்சிறுவன் நிகழ்த்தப் போகிறான் என்று பொறி தட்டவில்லை என்றால் தான் ஆச்சரியம், இல்லையேல் இத்தனை வருடங்களாகப் பல படங்கள் பார்த்ததற்கான பயன் என்னவாகும். அக்காட்சியின் கிளைக்காட்சியில் அப்பா மகனுக்கான பந்தத்தை உர்ரெனக் காட்டியிருக்கிறார். VIP திரைப்படத்தில் தனுஷ்-சமுத்திரகனி இருவருக்குடையே நடக்கும் கிணற்றடி காட்சி, “வேலைய விட்டுட்டியா அம்மா சொன்னா?” போன்ற காட்சிகளை ஒத்த காட்சிதான் இதுவும் ஆனால் வேறொரு பரிமாணத்தில். படம் நெடுக அவர்களுக்குள் இருக்கும் பாசத்தின் வெளிப்பாட்டுத் தன்மை மாறிக்கொண்டேயிருக்கும். சொல்லப்போனால் படம் என்ற உணர்வை இழக்கச் செய்து வாழ்வின் நம்பகத்தன்மையை கையாண்டிருக்கிறார். அரசியலைத் தாண்டி அழகான அப்பா மகன் உறவு இதிலிருக்கிறது. பெரும்பாலான எந்தத் தமிழ்படத்திலும் இதை உணரமுடியவில்லை. சமீபத்திய சென்சேசன் அசுரனில் முதற்கொண்டு.
காற்று,நீர், உணவு, சுயமரியாதை போல் கல்வியும் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. பள்ளி மேல் மோகம் கொள்ளாத பால்யம் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை. ரேடியோ வேலைகளை ஓரங்கட்டிவிட்டு சுய காலைக் கடமைகளை எல்லாம் முடித்து வருபவனுக்கு இன்ப அதிர்ச்சி கட்டிலில் வில்லியமிற்காக காத்திருந்து அவனை கண்டதும் சிரிப்பை பளிச்சிட்டது. அதனை தன் மேல் போர்த்தி மிகுந்த ஆரவாரத்துடன் தனக்கு அன்பளித்த தந்தையை நோக்கி ஓடுகிற காட்சி கல்விக்கான இடம் அவர்களின் மனதில் எங்கு உள்ளது என்பதைத் தெளிவாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கட்டிலில் இருந்த பரிசு புத்தம் புதிய பள்ளி உடுப்பு. கதையின் நிலப்பரப்பென்பது நாற்பது டிகிரிக்கு சற்றும் குறையாமல் இருக்கும் வானிலையை கொண்டது. இருந்தபோதும் அங்கிருக்கும் பள்ளியாசிரியர்களின் உடைகள் உடையரசியலுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தரமானதொரு செய்கை. கொழுத்தும் வெயிலில் கோட்டு, ஷு, டை பார்க்கும்பொழுதே நெல்லைவாசியான எனக்கு வேர்த்து ஊத்துகிறது. முந்தைய காட்சியில் இடம் பெற்ற வானிலை அறிக்கை பள்ளிக் காட்சியில் புழுங்கிக் கொண்டிருந்த என்னைக் காப்பாற்றியது. வெயில் தாண்டவமாடும் பூமியில் பால்மழை பொழியத் தொடங்கியது. பல கனவுகளுடன் பள்ளிக்குள் அமர்ந்திருக்கிறான் வில்லியம். வகுப்பாசிரியரின் பெயரைக் கேட்டதும் சந்தோசம் அவனைத் தொற்றிக் கொள்கிறது. கொஞ்ச நேரம் மட்டும் தான். ஆசிரியர் வில்லியமிற்கு பின்னாளில் மாமாவாகப் போகிறவர். அவர் பெயரைக் கேட்ட சந்தோசம் அவரிடம் சென்று பேசியவுடன் கந்தக பூமியில் பெய்த முதல் மழைத்துளி போல் காணாமல் போனது. வில்லியம் பள்ளிப்படிப்பை இனித் தொடர வாய்ப்பில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் அச்சந்திப்பு. சோகத்தில் மூழ்கிருக்கும் மனிதனை சகமனிதன் தேற்றுவதைக் காட்டிலும் அவனுக்கு விசுவாசமயிருக்கும் உயிரினம் அச்சோகத்தை மறக்கடித்துவிடும். ஆப்பரிக்காவிலும் நாலு கால் கறுப்பி இருக்கத்தான் செய்தது வெளிர் மஞ்சள் நிறத்தில்.
கார்ப்பரேட் முதலைகளுக்கு இறையாக அம்மக்கள் மாறுவதற்கு ஏதுவாக வானமும் துணை நிற்கிறது. வில்லியமின் தந்தையான ட்ரைவெல்லைத் தவிர அங்கு எந்த ஒரு தந்தைக்கும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பதைத் தான் இயக்குனர் தன் காட்சியினூடே பதிவு செய்திருக்கிறார். வில்லியமின் நண்பன் ஊர்த்தலைவரின் மகன். கார்ப்பரேட் அரசியல் அங்கு தான் முதலைகளுக்கும் அதன் இறைகளுக்குமிடையே அரங்கேறிக் கொண்டிருந்தது. பள்ளி முடிந்தவுடன் நண்பனின் வீட்டில் தந்தையைக் கண்ட வில்லியம் அவரருகில் அமரும் அந்த காட்சி ட்ரைவெல்லின் லட்சியத்தை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. ட்ரைவெல்லையும் நண்பனின் தந்தையான ஊர்த்தலைவரின் மனநிலையையும் பிரித்துக் காட்டும் திடக்காத்திரமான காட்சி என்றே இந்தக்காட்சியைக் கூறலாம்.
சிறுவயதில் எல்லோருக்கும் தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் நட்பு பாராட்ட வேண்டுமென்கிற எண்ணம் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்ற ரேடியோ அறிவை பயன்படுத்திக் கொள்கிறான் வில்லியம்.
கட்டணம் கட்டத் தவறியவர்களுள் ஒருவனான வில்லியமை பள்ளியை விட்டு வெளியேற்றுகிறது நிர்வாகம். வறட்சி மெதுமெதுவாக ஊடுருவத் தொடங்கிய காலகட்டம். இம்முறை வறட்சி அதிக மழை பெய்ததால். ட்ரைவெல் நிலத்தைக் காக்க போராடிக் கொண்டிருக்கிறான். வில்லியம் பள்ளிக்கு சென்றே தீர வேண்டுமென்று அகப்போராட்டத்துள் சிக்குண்டிருக்கிறான். இருவரும் செய்வதறியாது திரிவதை சலிப்புத் தட்டாமல் திரைக்கதையாக்கிருக்கிறார் இயக்குனர்.
பஞ்சத்தின் கோரப்பிடியில் சங்கிலியிடப்பட்ட மக்களின் மனநிலையை நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். எந்த இடத்திலும் அப்புனைவு சிதைக்கப்படாமல் காட்சியமைத்ததற்கு இயக்குனருக்கு நிச்சயம் வாழ்த்துகளை சொல்லியே தீர வேண்டும்.
வில்லியம் பள்ளிக்குச் சென்ற பின் அவனால் நிகழ்த்தப்பட்ட அதிசயம் என்ன என்பதை நிச்சயம் அனைவரும் இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். கதைக்களத்தை நம்முள் கடத்த முக்கியக் காரணியாகக் காட்சிகளை மண் சார்ந்த அழகியலுடன் பயன்படுத்திருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவாளரின் பங்கு இதில் அளப்பரியது. நடிப்பு ராட்சசர்களை மெருகேற்றிக் காட்டியிருக்கிறார் ஒளிக்கலைஞரான டிக் போப்.
இப்பபடம் பிடித்ததற்கான முக்கிய காரணம் மைக்கேல் சிம்பா(வில்லியம்). கண்ணீரையும் நம்பிக்கையற்ற புன்னகையையும் உண்மையாகக் காட்டியுள்ளான் வில்லியம். திரைப்படம் என்பதையே மறக்கடிக்கிற வகையில் தன் நடிப்புத்திறனை வெளிக்காட்டியிருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். வில்லியம் மட்டுமில்லாமல் அவனின் குடும்பத்தார்கள் அனைவரும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் திறமையையும் வெளிக்காட்ட ஒவ்வொரு காட்சிகளென படம் நெடுக விருந்து இருக்கத்தான் செய்கிறது. பல பதார்த்தங்களை வேண்டுமென்றே நான் இங்கு பரிமாறவில்லை.
“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்”
“இளமையில் கல்”
இந்தத் தமிழ் பழமொழிகளை அடிநாதமாக வைத்து உருவாக்கப்பட்ட நம் தொலைத்தூர பங்காளிகளின் படமே இந்த THE BOY WHO HARNESSED THE WIND.
இதே தலைப்பில் வெளியான புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மூன்று வருடத்திற்கு முன்னதாகவே தமிழில் இக்கதையை அருண்சிதம்பரம் என்பவர் கொலை செய்யும் நோக்குடன் குத்திக் கிழித்து உலகரங்கில் தூக்கி எறிந்து விட்டார். அப்படியான ஏதோ ஓர் அரங்கில் குத்துயிர் கொலையுயிராக கிடந்த இச்சிறுவனைக் காப்பாற்றி உலகமேடையில் தலை நிமிர வைத்திருக்கிறார் சிவ்விட்டல் எஜிய்யோஃபார்.
குறிப்பு: கனவு வாரியம் – தமிழ் படத்தலைப்பு. இதைக் கண்டிப்பாக யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை அப்படத்தைப் பார்த்திருந்தால் உப்பை அள்ளித் திண்ண கிறுக்கன் எப்படித் தண்ணி குடிப்பது உசிதமோ அதுபோல ஆப்ரிக்கப் படத்தை பார்த்தே தீர வேண்டிய கட்டாயத்திற்குள் அகப்பட்டு விட்டீர்கள். தப்பமுடியாது. ஆப்பரிக்கப் படத்தைப் பார்த்தவர்கள் சாகச விரும்பிகளாக மாற எண்ணி தமிழ் படத்தை தயவு செய்து பார்த்து விடாதீர்கள். பாதிப்பு பன்மடங்காக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துமில்லை.
Super movie.. good review…
மின்சார வசதியே இல்லாத கிராமத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது வில்லியம் (Maxwell Simba) 2000 வது வருடத்தில் தலை தூக்கும் மிகக் கொடுரமான பஞ்சத்தில் இருந்து தன் கிராமத்தை எவ்வாறு காப்பாற்றினான் என்பதை சொல்லும் திரைப்படம்.
என்னுடைய விமர்சனம் :
https://www.tamilhollywoodreviews.com/2020/08/the-boy-who-harnessed-wind.html