
வன்புணர்வு, பெண்ணின் தாடையில் குத்து, ரத்தம், ரம்பம், கழுத்தை அறுத்தல், பின் தொடர்தல், குடி, ஜெர்மன் பார், சைக்கோத்தனம், ஸ்டாக்கிங், again வன்புணர்வு, கொலை, பிணம் என்று 70களில் fritz honka என்னும் ஜெர்மன் சீரியல் கில்லரின் அன்றாடங்களை voyeuristic முறையில் அணுகும் படம். ஏன் இப்படிப்பட்ட ஒரு சீரியல் கில்லர் பற்றிய படத்தை இந்த மாதிரி ஒரு அணுகுமுறையில் எடுக்க வேண்டும் என்னும் கேள்விக்கு கடைசி ஷாட்டில் பதில் இருக்கிறது.
Post war ஜெர்மனி. போர் நடந்த போது பல ஜெர்மானிய பெண்கள் விபச்சாரத்தில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு கொடுமைகளை அனுபவித்தனர். போர் முடிந்ததும் பல பெண்கள் டிப்ரஷன் மனநிலைக்குச் சென்று, எப்போதும் குடித்துக் குடித்து பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர். அதில் சிலர் அந்த பாரில் குடிப்பார்கள், அவர்கள் குடித்துக் கொண்டிருக்கும் பாரில் ஒரு பதின்பருவ வாலிபன் அந்த பார் நடத்துபவரிடம், “Why are the curtains closed?” என்று கேட்பான். அதற்கு அவர், “So people don’t see the sun. People don’t drink when the sun is shining” என அதீத குடிக்கான ஒரு உளவியலை உவமையில் எடுத்துக்காட்டும் வசனம் பேசுவார். அந்தளவுக்கு விடிய விடிய குடி. பெண்கள் மட்டுமல்ல… veteran போர் வீரர்களும் அங்கே காலத்தை மறக்க எந்நேரமும் மது அருந்துவது வழக்கம்.
இவர்களுக்குள், சிறுவயதில் நாஸி கான்சன்ட்ரேஷன் கேம்ப்களில் கொடுமைகள் அனுபவித்த honka என்னும் சைக்கோவும் அந்த பாரில் அன்றாடம் மது அருந்துவான். அங்கே வரும் பெண்களுக்கும், ப்ராஸ்டிட்யூட்களுக்கும் இவன் மது offer செய்வது வழக்கம். இவனுடைய offerரை அவர்கள் எப்போதும் நிராகரித்து விடுவார்கள். இருந்தபோதிலும் யாராவது ஒரு வயதான பெண்ணையாவது இரவில் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் விடுவான். வீட்டிற்கு சென்றதும் மது… அருந்தியதும் அவர்களை வல்லுறவு செய்வான், அவர்கள் சிறு முரணை காட்டினால் போதும் அடித்து வாயை உடைப்பான், உதைப்பான், மது பாட்டிலை தலையில் போட்டு உடைப்பான், வலியில் துடித்து மயங்கியதும் கொன்று விடுவான், துண்டு துண்டாக வெட்டி வீட்டின் ஒரு பகுதியில் போட்டு மூடிவிடுவான். அதன் பின் ஓரிரு மாதங்களில் அடுத்த கொலை. அப்படி,
சைக்கோ ஒருநாள் இரண்டு பெண்களை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறான். 50 வயதைக் கடந்த பெண்கள். அதில் ஒரு பெண் முகத்தில் ரெண்டு அடிவாங்கியதும் நிலைகுழைந்து கீழே விழுகிறாள். விழுந்தவள், சில நொடிகளில் சுதாரித்து, கடுமையான குடி போதையிலும் சமயோஜிதமாக யோசித்து தப்பித்து விடுகிறாள். தன்னிடம் இருந்து தப்பித்து, தெருவுக்குள் இறங்கி தள்ளாடிப் போவதை தனது அறையின் ஜன்னல் வழியே பார்க்கிறான் சைக்கோ. நடந்த அத்தனை சம்பவங்களையும் பொறுமையாக சிகரெட்டை புகைத்தவாரே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அவளுடன் வந்திருந்த இன்னொரு பெண். இவனிடம் அவள் எப்படி அடி வாங்கினாள் என்பதையும் பார்க்கிறாள், இவன் வலுக்கட்டாயமாக அவளை வன்புணர்ந்ததையும் பார்க்கிறாள். அவள் தப்பித்து ஓடுவதை இவன் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் போது, எங்கும் அசையாமல், மிகவும் பொறுமையாக, அவள் சாவகாசமாக சிகரெட் ஆஷஷை… ஆஷ் ட்ரெயில் தட்டுகிறாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் யோசித்தால், ப்ராஸ்டிட்யூட்டாக இருந்ததால் “ஏகப்பட்ட செக்ஸ் டார்ச்சர்களையும், கொடுமையான அடிகளையும் பலதடவை பார்த்தாச்சு… அந்த அனுபவங்களை விடவா இவனோடு நான் இருக்கப்போகும் இந்த ஒரு இரவு கொடுமையானதாக இருக்கப்போகிறது? குடியில் மூழ்கியிருக்கும் எனது மனது தெளிவடைய வேண்டாம்… மூழ்கியே இருக்கட்டும். குடி மயக்கத்திலேயே இரவு முழுக்க இருப்பதற்கு விஸ்கி இருக்கிறது. போர் வீரர்கள் செய்த கொடுமைகளை விடவா இவன் என்னை அடித்து சித்ரவதித்து கொடுமைப்படுத்திவிட போகிறான்?” என்ற யோசனையில் அவள் தட்டிவிட்ட ஆஷஸ் என்று நினைக்கையில், பொதுவான நார்மலான சினாரியோவில் வைத்துப் பார்த்தால் இது சாமர்த்தியமான யோசனை போல்தான் இருக்கிறது என அவள் மனதைப் புரிந்துகொண்டாலும் தற்போது இவள் மாட்டிக்கொண்டிருப்பது ஒரு சைக்கோவிடம் அல்லவா? என மனதில் பட்டபோது திடுக்கிட்டது. அடுத்த கொலை.
முதல் கொலையை 1970ல் செய்தவன். அடுத்த கொலையை 4 வருடங்கள் கழித்து செய்கிறான். அடுத்தடுத்த மாதங்களில் மூன்று கொலைகளை செய்கிறான். எதனால் 4 வருட இடைவெளி? எதனால் 4 வருடங்கள் கழித்து மூன்று கொலைகளை, ஆறு மாத இடைவெளியில் செய்கிறான்? அந்தப் பிணங்களை வெட்டி தனது வீட்டிற்குள்ளேயே உடல் பாகங்களை மறைத்து வைத்து வசிக்கிறான். எப்படி அந்த பிணங்களின் துர்நாற்றத்தின் ஊடே இவனால் வருடக்கணக்கில் மாதக்கணக்கில் வாழமுடிந்திருக்கிறது?
பிணவாடையை மறைக்க ஏகப்பட்ட செண்ட்டு பாட்டில்களை பயன்படுத்தியிருக்கிறான். வீட்டிற்கு வருபவர்கள் துர்நாற்றத்தை பற்றி இவனிடம் விசாரிக்கும் போது கீழே வசிக்கும் க்ரேக்கர்களின் மட்டன் சூப் சமையலினால் வரும் வாடை என சொல்லி சமாளிக்கிறான். ஒரு நாள் அந்த க்ரேக்கர்களின் சமையலினாலேயே அவனுக்கு மட்டுமில்லாமல் ஹாம்பர்க் பெண்களின் வாழ்க்கையும் தடம் மாறுகிறது.
எதனால் சீரியல் கில்லர்களை glorify பண்ணக்கூடாது? எந்தக்காரணத்தால் glorify செய்யலாம்? சீரியல் கில்லர்ஸ எப்படி glorify பண்ணாம எடுப்பது என்பதை புரிந்து படமாக எடுத்ததே இந்த படத்தை பாராட்டுவதற்கு முதன்மையான காரணம். சீரியல் கில்லர்ஸ ஏன் glorify பண்ணி காட்டக்கூடாது என்பது இன்னொரு கேள்வி? முதலில் glorify பண்ணனுமா வேணாமா என்பதில் இயக்குனருக்கும் திரைக்கதை எழுதுபவருக்கும் ஒரு தெளிவு இருக்க வேண்டும். பண்ணனும் என்று முடிவெடுத்தால் அதற்கு சரியான காரணம் இயக்குனரிடம் இருக்க வேண்டும். Glorify பண்ணவேண்டாம் என்றால் for obvious reasons. Golden gloveல் எந்தவித glorificationனுக்கும் Fatih Akin இடமளிக்கவில்லை.
பல சீரியல் கில்லர் படங்களில் என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிய சம்பவங்கள் நிறைய இருக்கிறது. ஹிட்ச்காக் சைக்கோ படத்தில் அவன் கடைசி ஷாட்டில் ஏன் சிரிக்கிறான்? என்பதை யோசியுங்கள். Golden glove படத்தில் எங்கேயும் glorify செய்துவிடக்கூடாது என்று கான்ஷியசாக எழுதப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
த்ரில்லர் flow தடைப்படாமல் பயணிக்க எப்படி ஷாட் வைக்கலாம் எனப் பல விதமா யோசித்து முடிவுபண்ணி கடைசியில் ஒரு ஷாட் வைத்தாலும் ட்ரான்ஸிஷனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளனின் flow தடைபடும் அளவுக்கு தடுமாற்றம் அந்த புதிய ஷாட் கம்போஷிஷனில் இருக்கும். அப்படி எந்த விதமான தடுமாற்றமும் இல்லாம அடுத்த புது லொகேஷனையும் உள்ள இழுத்து, நமது மனநிலை பின்தொடரும் கேரக்டரையும் இன்னொரு வழியில் இழுத்து மெர்ஜ் பண்ணும் திறமையை மாஸ்டர் பண்ணிருக்கும் பெருமை இயக்குநர் Fatih Akinனுக்கு இருக்கு. இப்படிப்பட்ட சுய உழைப்பிற்கு தான் ஒரு மனிதன் பெருமைப்பட வேண்டும். மாறாக “அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என பெருமைப்படுகிறேன்” என்ற சிந்தனையையெல்லாம் ஒரு பெருமையென நினைக்கும் எண்ணத்தை எரியும் தீயில் சுட்டுப் பொசுக்க வேண்டும்.
“இதுவரைக்கும் நா வாழ்ந்த வாழ்க்கை வேற. இனிமேல் வாழப்போற வாழ்க்கை வேற”ன்னு ஒரு சீரியல் கில்லர் முடிவு பண்றான் கதையில் ஒரு இடத்துல. இங்க இதுவரைக்கும் காட்டப்பட்ட லொகேஷன்ஸ் வேற… அடுத்து காட்டப்போற லொகேஷன் geographyக்கும் பார்வையாளனுக்கும் நாம் க்ரியேட் பண்ணி வச்சிருக்க மனநிலைக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கு. இட்டு நிரப்ப என்ன மாதிரி ஷாட் கம்போஸ் பண்றதுன்னு, பார்வையாளன ஆட்டுவிக்கும் ஷாட் கம்போஷிஷனை கான்ஷியஸா யோசிக்கிற ஒரு இயக்குநருக்கு பெரிய குழப்பம் வரும். ‘திரை மொழியில் கதை சொல்லல்’ என்றால் என்னவென்றே தெரியாத வியாபாரிகளுக்கு அந்த குழப்பம் எல்லாம் வரவே வராது. திரைக்கதையின் ஒவ்வொரு வரியிலும் திரை மொழியின் ஒவ்வொரு ஷாட்டையும் பார்வையாளன் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கும் இயக்குநருக்கு ஒரு முக்கியமான இடத்தில் எப்படி ரசிக்கும்படியாக ஷாட் கம்போஸ் செய்வது என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும் என்பது இயல்பான விஷயம்.
வியாபார நோக்கம் முக்கியம் என்றாலும் அதை இரண்டாம் பட்சமாக வைத்து திரையில் கதை சொல்லும் கலையையும், பார்வையாளனின் ரசனையையும், தனது கலையின் தனித்துவத்தையும் முதலிடத்தில் வைத்து சினிமா காமிக்கும் இயக்குநருக்கு பார்வையாளனின் ரசனை மீது ஒரு அக்கறை இருக்கும். ரசிகனின் ரசனையும் தனது ரசனையும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும் என முயற்சி செய்வான் கலைஞன். அப்படிப்பட்ட காதலுள்ள ஒரு கலைஞனாக இருக்கிறான் Fatih Akin!.