
‘திரைக்களம்’ மற்றும் ‘வாசகசாலை’ இணைந்து வழங்கும் ‘LUNCH BOX’ திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக தயார் செய்த உரையின் கட்டுரை வடிவம்.
வணக்கம்
தொழில்நுட்பக் காரணங்களால் முகநூல் நேரலை தடைபட்டதால்.. ‘லன்ச் பாக்ஸ்’ திரைப்படம் பற்றி இந்த நீண்ட கட்டுரையை எழுதுகிறேன்.
‘லன்ச் பாக்ஸ்’ பற்றி ரசிகப் பார்வையையும் சிறப்புப் பார்வையையும் முன்வைக்க மூன்று பெண்களைத் தேர்வு செய்த திரைக்களம் மற்றும் வாசகசாலைக்கு மனமார்ந்த நன்றி.
இர்ஃபான் கான் எனும் மாபெரும் கலைஞனை சினிமா ரசிகர்கள் இழந்து நிற்கும் வேளையில் இந்தக் கலந்துரையாடல் அவருக்கான ஆத்மார்த்தமான அஞ்சலி.
இர்ஃபான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் நாம் ஏன் இந்தக் குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம் என்று யோசித்தேன். காரணம், படத்தில் இலாவுக்கும் – சாஜனுக்கும் இடையே ஒரு கதாபாத்திரமாகவே நிற்கும் லன்ச் பாக்ஸ் சுமந்து செல்லும் அன்பு, ஏக்கம், வலி, தனிமை, காதல், எதிர்பார்ப்பு என இன்னும் எத்தனை எத்தனையோ உணர்வுகள். இந்த உணர்வுகள்தானே வாழ்க்கை. ஆனால், இன்று நாம் பரபரப்பாக மாற்றிக் கொண்ட வாழ்க்கையில் யாரும் யாருடைய உணர்வுகளையும் மதிக்கத் தவறிவிடுகிறோம். அன்பைப் பெற வேண்டும் என நினைக்கும் அளவிற்கு அன்பைத் தர மறுக்கிறோம். நம் துயருக்கு தோள் தேடும் அதே வேளையில் மற்றவர்களின்… ஏன், நம் கண் முன்னே இருப்பவரின் துயருக்குக் கூட தோள் கொடுக்க மறுக்கிறோம்.
இலாவின் மாடி வீட்டில் இருந்த ஆண்ட்டி கருணையையும் அன்பையும் சேவையையும் வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார், பெறுவதற்கு ஒன்றுமே இல்லாமல். இலாவின் தாயும் அவரது கணவருக்கான சேவகத்தால் மட்டுமே வாழ்க்கையை நிரப்பி வைத்திருந்தார். கணவரின் மறைவுக்குப் பின்னர்தான் அவரது பசி உணர்வைக் கூட நிஜமாக உணர முடிந்திருக்கிறது.
ஆனால், கிட்டத்தட்ட அதே நிலையில் இருந்த இலாவுக்கு அவளின் குரலைக் கேட்க ஒரு நல்ல மனம் கிடைத்தது. அவளின் கைப்பக்குவத்தை மணமாறப் பாராட்ட, ரசிக்க ஒரு மனிதன் கிடைத்தான். அவளைத் துயரில் இருந்து மீட்கும் மீட்பனாக அவன் அவளுக்குத் தெரிந்தான். அவன் காதலனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதனால்தான் முதல் முறை கடிதம் எழுதுவது சரியாக வராது என்று கூறும் இலா அடுத்தடுத்த கடிதங்கள் பற்றி ஆண்ட்டியிடம் பேசவே இல்லை.
லன்ச் பாக்ஸ் திரைப்படத்தை நான் முதலில் இர்ஃபான் கானிடம் இருந்தே பார்க்க விரும்புகிறேன். இர்ஃபானின் கடைசிக் கடிதமும் சரி, அவரின் அவ்வப்போதைய குறும் ட்வீட்களும் சரி, மிகவும் ஆழமானதாக இருக்கும். அதனாலேயே இப்போது இந்தத் திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் போது இர்ஃபானைத் தவிர அந்தக் கடிதங்களுக்கு அவ்வளவு பெரிய நீதியை யாரும் செய்திருக்க முடியாது என்று தோன்றுகிறது.
டியர் இலா, என்று இர்ஃபான் ஆரம்பிக்கும் அத்தனை கடிதங்களும் இலாவின் தனிமைக்கு மருந்து.. எந்த வித சல்யூட்டேஷனும் இல்லாமல் வரும் இலாவின் பதில் கடிதமும், ருசிகளின் மாயாஜாலத்தோடு வரும் அவளின் சாப்பாடு வகையறாக்களும் இர்பானின் வலிகளுக்கு நிவாரணி. இருவரும் லன்ச் பாக்ஸ் வழியாக காதலைக் கடத்தவில்லை ஆறுதலை, தேறுதலைக் கடத்தினார்கள். யாரும் இல்லாததால் சாஜன் தன் துணைக்கு அழைத்துக் கொண்ட சிகரெட்டை இலாவின் ஒரே வார்த்தை நிறுத்த வைக்கிறது.
இர்ஃபான் இலாவை நிச்சயமாக அபகரித்துக் கொள்ள நினைக்கவில்லை. அவள் தனது கணவருக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டாவது குடும்பத்தில் நிம்மதி தேட வேண்டும் என்றே விரும்புகிறார். ஆனால், இலாவின் மூலம் அவர் தெரிந்து கொள்ளும் அந்தக் கணவர் கதாபாத்திரம் எந்தச் சூழ்நிலையிலும் இலாவுக்கான மனிதன் இல்லை என்று அவர் உணர்ந்து கொள்ள வைக்கிறது. அதனால்தான் கணவரின் பெண் சகவாசம் குறித்தும் தான் பூட்டான் செல்ல விரும்புவது குறித்தும் இலா சொன்ன மாத்திரத்திலேயே, “நான் ஏன் உன்னுடன் பூட்டான் வரக்கூடாது?” என்று ஒரே வரியில் தனது தனிமைக்கும் இலாவின் வெறுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறார். ஆனால், இலாவை நேரில் பார்க்கச் செல்லும்போது தன் மீதான முதுமை வாடையை உணர்ந்ததால் பார்க்கத் தவிர்த்து தார்மீக நேர்மையை வெளிகாட்டுகிறார். வார்த்தைகள் வழி ஆறுதல் வேறு, வாழ்க்கையின் யதார்த்தம் வேறு என்று உணர்த்தி நிற்கிறார். வார்த்தைகளில் இளமையைக் காட்டலாம் தோற்றத்தில் தோற்றுத்தானே போக வேண்டும். அந்த யதார்த்தம், மீண்டும் இலா வாழ்க்கையில் ஒரு புரிதல் இடைவெளியை உருவாக்கிவிடக் கூடாது என்பதாலேயே தயங்குகிறார். இந்த உண்மையை அறிந்து கொண்ட இலா நேரில் வரும் போது இர்பான் நாசிக் ரயிலில் இருக்கிறார்.
இர்ஃபானிடம் அந்த முதியவர் பேசும் சில வார்த்தைகள் அவரை மீண்டும் இலாவை நோக்கிச் செல்ல வைக்கிறது. “ஏன் திரும்பிவந்தீர்கள்?” என்று குழந்தைகள் கேட்பதற்கு பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் மிஸ்டர் ஃபெர்னாண்டஸ் முன்பிருந்த ஃபெர்னாண்டஸ்ஸாக இல்லை. அவர் பால்கனியில் நிற்கும் போது முன்பு சாத்திய ஜன்னலை அந்தச் சிறுமி சாத்தவில்லை. மாறாக கையசைத்து அன்பைப் பகிர்கிறாள். இலாவின் வருகை சாஜனுக்கு தனிமை தந்த வெறுப்பை நீக்கி மற்றவர்களுடன் சகஜமாகப் பழக வைத்திருந்தது.
இனி இலாவின் இதயத்திலிருந்து லன்ச் பாக்ஸைப் பார்ப்போம். இலாவுக்கு தேவைப்பட்டதெல்லாம் அன்பும் அரவணைப்பும். ஆனால், அவளின் கணவரோ அவளை ஒரு உயிராகக் கூட மதிக்கவில்லை. தாம்பத்ய உறவுக்காக நாடும் இலாவை அவளின் நோக்கம் அறிந்தும் விரலால் அழுத்தமாக விலக்கி வைத்துவிட்டு கடக்கிறான். குழந்தையையும் கவனித்ததாகத் தெரியவில்லை. கணவரின் அன்பைப் பெற அவள் எடுக்கும் அத்தனை முன்னெடுப்புகளும் தோல்வியில் மட்டுமே முடிகின்றன. ஒரு குழந்தையைத் தாண்டி மனைவிக்கு தன்னிடம் தேவை வேறெதுவும் இல்லை என்பதே இந்தியாவில் பெரும்பாலான ஆண்களின் மனோபாவமாக இருக்கிறது. வீட்டைப் பராமரிக்க, சமைக்க, குழந்தைகளை வளர்க்க, பணிவிடைகள் செய்ய, என்றோ கணவர் விரும்பினால் அவனின் பசிக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளவே மனைவி இருக்கிறாள். இலாவின் சமையலை ஐம்புலன்களால் ரசிக்கும் சாஜனும் டிவியைப் பார்த்துக் கொண்டே அதை உள்ளே கடத்தும் அவளின் கணவனும் எப்படிப் பார்த்தாலும் சமமானவர்களாக இருக்க இயலாது அல்லவா? ஆண் என்பதைத் தவிர அவர்களுக்குள் என்ன ஒற்றுமை இருந்துவிட முடியும்? அதனால்தான் சாஜன் இலாவுக்கு பிடித்தமானவன் ஆகிறான். அவனது கடிதங்களை டீ குடிக்கும்போது ரசித்துப் படிக்கிறாள். அவனது பெயர் தெரிந்ததும் சாஜன் படப் பாடலை இசைக்கும்படி இலா ஆண்ட்டியிடம் கேட்கிறாள். வாழ்க்கை என்பது இந்த சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் எல்லாம் சேர்ந்தது தானே.
இலாவுக்கு தனது தந்தையின் இறப்பின் போது வீட்டில் தாய் பேசும் வார்த்தைகள் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது. அவளின் தாயைப் போலவே தனது வாழ்க்கையும் முடிந்துவிடுமோ என அஞ்சுகிறாள். சாவு வீட்டில் சாப்பாட்டுக்கு ஏங்கும் மனநிலை அவளுக்கு பித்து நிலையாகத் தெரிகிறது. அந்த நிலையைத் தவிர்க்கவே சாஜனின் அலுவலகத்துக்குச் செல்கிறாள். நவாசுதீன், “ஸாரி இலா மேடம்” என்று சொல்லும் போது ஒரு நடைபிணமாகத்தான் அவள் டாக்ஸி ஏறுகிறாள். இலாவின் கடைசிக் கடிதத்தில் ( கொடுக்கப்படாத கடிதம்) வாழ்க்கையில் சில நேரம் தவறான ரயில் சரியான இலக்குக்குக் கூட்டிச் செல்லலாம் எனக் குறிப்பிடுகிறாள். அது இருவருமே இது சரிவருமா என யோசிக்கும் பந்தத்தைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். இதே வார்த்தையை அதற்கு முன்னதாக ரயிலில் சாஜனிடம் நவாசுதீன் கூறியிருப்பார். அப்போதும் சாஜன் அதற்கு புன்னகைப்பார்.
இலாவையும் தமிழில் ‘மறுபடியும்’ படத்தின் ரேவதியையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். இருவரின் கணவரும் வேறு ஒரு பெண்ணை நாடிச் சென்றவர்கள். ஆனால், மறுபடியும் ரேவதியின் (துளசி) கணவர் இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் தன் வாழ்க்கையில் வைத்துக் கொள்ள நினைக்கும் அறமற்ற பேராசைக்காரன். இலாவின் கணவன் அறமற்றவன். துளசிக்கும் ஒரு மனோகர் சுமைதாங்கியாக வரத் தயாராக இருப்பார். இலாவுக்கும் சாஜன் பூட்டான் வரத் தயாராக இருப்பார். ஆனால், இரண்டு கதைகளிலுமே முடிவு ஓப்பனாக விடப்பட்டிருக்கும். ஒருவேளை துளசி மனோகரையும் இலா சாஜனையும் இணையேற்றிருந்தால் அது வேறு மாதிரியான விமர்சனங்களையும் பெற்றிருக்கலாம். ஆனால், இலாவின் சூழலைப் பார்க்கும் போது அவள் சற்று துணிந்து தவறான ரயில் என்று சந்தேகித்தாலும் அதில் பயணத்தைத் தொடர்ந்திருக்கலாம் என்றே நிறைய பேர் நினைக்கின்றனர்.
லன்ச் பாக்ஸ் திரைப்படத்தில் நிகழ்ந்தது போல் டப்பாவாலாக்களின் டப்பா வேறு ஒருவருக்கு மாறிச் செல்வது அரிதினும் அரிது எனப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அப்படி அரிதான சம்பவத்தின் வழியாக அன்பைப் பறிமாறிய, மனிதர்களின் ஏக்கத்துக்கு மருந்தாக இருந்த மனிதாபிமானப் பகிர்வுகள் போற்றுதற்குரியது. எல்லோருடைய வாழ்விலும் இப்படி ஒரு தவறான சம்பவம் நடக்கட்டும். ஏனெனில் அன்பும் அரவணைப்பும் எல்லோருக்கும் தேவைப்படும்தானே…
வாய்ப்புக்கு நன்றி.