கட்டுரைகள்
Trending

தோப்பில் முஹம்மது மீரான் நினைவுக் கட்டுரை – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்

தோப்பில் முஹம்மது மீரான் அவர்களின் முதல் நினைவு தினம் இன்று. தன்னுடைய தனித்துவமான கதை சொல்லல் முறையின் காரணமாகவும், இதுவரை பெரிதும் பேசப்படாத கதைக்களங்களில் இருந்து தன் கதாபாத்திரங்களை வார்த்தெடுக்கும் தன்மையின் காரணமாகவும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு ஆளான போதும், படைப்பிலக்கியம் என்று வருகையில் தன் எழுத்தில் எவ்வித சமரசதன்மையையும் காட்டாத, முன்னோடி இலக்கிய ஆளுமையாக தன்னை வளர்த்தெடுத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான். இன்றைய தினத்தில் அவர் இயற்றி அதன்மூலம் பல்வேறு விமர்சனங்களையும் கூடவே சாகித்ய அகாதமி விருதினையும் வென்ற ‘சாய்வு நாற்காலி’ நாவல் குறித்த பார்வையை உங்களுடன் பகிர்வதன் மூலம் அவர் எழுத்துக்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.

சாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான்

நனவோடையின் வழி கதை சொல்லுதல் கொஞ்சம் சவாலான விஷயம். ஒரே நேர்கோட்டில் ஒன்றன்பின் ஒன்றாகக் காட்சிகளை நகர்த்திக் கதை சொல்லும் போது சரத்தில் முல்லைப்பூ தொடுப்பது போல யாரையும் குழப்பாமல் எளிதில் கதை சொல்லிவிடலாம். ஆனால் நனவோடை வழி கதை சொல்லும்போது நிகழ்காலமும் இறந்தகாலமும் கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டைப் போல குழப்பமான ஒரு கோலத்தில் முன்னுக்குப்பின் முரணாக பரவிக் கிடக்கும். எங்கிருந்து எடுத்தாலும் அங்கிருந்து ஒரு கதை பிறக்கும். கவனமாகக் கையாள வேண்டிய துடுப்புச் சீட்டுகள் அவை.

எவ்விதங்களிலும் குழப்பாமல் அதேநேரம் சுவாரசியம் கெடாமல் எடுத்து அடுக்க வேண்டியதும், சொன்ன கதையை வேறு எங்கேனும் மீண்டும் சொல்லாதிருப்பதும், சற்றும் தேவையில்லாத ஒன்றைச் சொல்லி பின் சமாளிக்காதிருப்பதும் சவாலான விஷயங்கள். ஒவ்வொரு காட்சியிலும் புதிது புதிதாக மனிதத் தலைகள் எட்டிப்பார்க்கும் போது வாசகனின் தலைக்குள் குழப்ப ரேகைகள் எட்டிப் பார்க்காது காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் படைப்பாளியினுடையது.

யோசித்துப் பார்த்தால் ஒரு நாவல் எழுதுவதில் இத்தனை சவால் இருக்கிறதா என்ன? வாசகனை திருப்திப்படுத்தவது அத்தனை கடினமான ஒன்றா?

யார் வேண்டுமானாலும் எழுத்தாளன் ஆகிவிடலாம்.

வாசகனை வசீகரிக்கும் ஆளுமை கைவரப்பெற்றவனால் மட்டுமே நிலைத்திருக்க முடியும். எக்காலத்திற்குமான படைப்பாளியாக முடியும். வாசகனை முழுமூச்சுடன் வாசிக்கச் செய்வதற்கான பாடுபடல் ஒரு பெருந்தவம். அண்டத்தின் எல்லைக் கோட்டினையும் தாண்டி நிகழ்த்தும் உற்சவம். உலகப் பந்தினை ஒரு நீண்ட நெம்புகோல் கொண்டு புரட்டிப் போடுவதைப் போன்ற சவால். எங்கேனும் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் வாசகன் வேறு வேலை பார்க்கப் போய்விடுவான். அதிலும் இன்றைய நவீன உலகத்தில் வாசகர்கள் அத்தனை பேரும் பார்வையாளர்களாக மாறிப்போன யுகத்தில் எழுத்தென்பதும் வாசிப்பென்பதும் ஒரு நூறு பாகற்காய்களை வேப்பெண்ணையில் அரைத்து அமிர்தம் எனக் கொடுப்பதைப் போன்ற செயல்.

வாசகன் தன்னை புத்திசாலியாக்கிக் கொள்ளும் போதெல்லாம் அவனை விட படுவேகமாக தன்னை மெருகேற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுத்தாளனுடையது. எழுத்தெனும் கனவு, எழுத்தெனும் பிரம்மாண்டம் நிறைவடைவது வாசகனிடத்தில். ஆக அவனுக்கான தேடலின் ஆரம்பம் படைப்பாளி. ஒரு படைப்பு வாசகனை முழுமையாகச் சென்றுசேரும் தருணத்தில், ஒரு படைப்பின் தேவை சரியாக பூர்த்திசெய்யப்படும் நேரத்தில் அது முழுமையடைகிறது. சாய்வு நாற்காலி எனும் படைப்பு கலைப்படைப்பாவது கூட இது போன்ற ஒரு தருணத்தில்தான்.

தென்பத்தன் எனும் கடலோர கிராமத்தில் வசிக்கும் பாரம்பரியமிக்க ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழ்ந்த இரண்டு நூற்றாண்டுக் கதையே ‘சாய்வு நாற்காலி’. கதை நிகழும் களம் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூறாண்டாக இருக்க வேண்டும். மார்த்தாண்டவர்மா ராஜா காலத்தில் ஆரம்பித்து சுதந்திர இந்தியாவில் தொடரும் கதையாக நீள்கிறது. அல்லது முஸ்தபாக்கண்ணுவின் நனவோடை வழியாகப் பின்னோக்கிப் பாயும் நினைவுகளின் மீட்டலாகப் பரவுகிறது.

சவ்தா மன்ஸிலின் வெளித்திண்ணையில் கரையான் அரித்துக் கொண்டிருக்கும் தேக்குமரத் தூணின் அருகில் போடப்பட்டிருக்கும் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு சதாசர்வ காலமும் காம போதத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் முஸ்தபாக்கண்ணுவும், அவர் மூலம் புரட்டப்படும் ஞாபகப் பக்கங்களுமாக நிறைந்து கிடக்கிறது சாய்வு நாற்காலி.

கடலோர கிராமத்தின் கதை படித்திருந்த போதே சாய்வு நாற்காலி வாங்கிவிட்டேன் என்றாலும் அதனை வாசிப்பதற்கான சமயம் இப்போதுதான் வாய்த்தது. சமீபத்தில் வாசித்த பிற நாவல்களைப் போல இந்நாவலை அத்தனை எளிதில் வாசித்துவிட முடியவில்லை. மிகவும் கனமான கதைக்களம் கொண்ட நாவல். ‘அப்புறம் ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்கனும்’ என்ற கேள்விக்கான பதில் தோப்பில் முஹம்மது மீரான் நிகழ்த்தியிருந்த மொழிப்போர். அவருடைய அட்டகாசமான மொழியாளுமை ஒன்றுதான் இறுதிவரைக்கும் இந்நாவலை வாசித்து முடிக்க உதவியது. மொழியை இத்தனை லாவகமாக அதே நேரம் இத்தனை கனமாகக் கையாள முடியுமா என்ற வியப்பை பக்கத்திற்குப் பக்கம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தார்.

‘ஆழி சூழ் உலகு’ வாசிக்கும் போது ஒருசில குறிப்பிட்ட பக்கங்களைக் கடக்கும் வரையிலும் நாவலின் பின்பக்கம் தொகுத்துக் கொடுத்திருந்த அருஞ்சொற்பொருள்களை வாசித்து அர்த்தம் புரிந்து நாவலின் பக்கங்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் அது என் வாசிப்பு வேகத்தைக் குலைப்பது போல் தோன்ற, தேவையேற்படும் பட்சத்தில் மட்டும் பின்னுக்குப் போய் முன்னுக்கு வரலாம் என்று விட்டுவிட்டேன். மீனவ பாஷை உருயேற கொஞ்சம் நேரமெடுத்தது.

சாய்வு நாற்காலியிலும் இதே போல் ஒரு பிரச்சனை. இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழும் கதை என்பதால் அதிகமான அரபிச் சொற்களைக் கடக்க வேண்டிய நிலை. அதற்கான அர்த்தங்களை பின்பக்கம் இருக்கும் ஒரு நீண்ட சொற்களஞ்சியத்தினுள் தேடித்தேடி புரிந்து கொள்ளலாம் என்றால் இன்னும் ஒரு மாதகாலம் ஆனாலும் நாவலை முடித்துக் கொள்ளமாட்டேன். “என்னவானாலும் பரவாயில்லை அர்த்தம் பாராமால் நாவலை வாசி, புரிந்துகொள்ள முயல்!” என்ற உத்தரவின் பேரில் பக்கங்களை நகர்த்த, நாவல் தன்போக்கில் நகர ஆரம்பித்தது. வெகுசில சொற்களுக்கு மட்டும் அர்த்தம் கண்டிப்பாக தேவைப்பட்டது. இல்லையேல் அவை கதையைக் குழப்பிவிடும் அபாயம் இருக்கிறது. பெரும்பாலான சொற்களை அதன் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ப புரிந்துகொள்ள முடிந்தது. இது எனக்கு நானே பரிசோதித்து என்னையறிந்த கதை.

முஸ்தபாக்கண்ணுவின் பாட்டனார் பவுரீன்பிள்ளைக்கும் திருவிதாங்கூர் சமஸ்தான திருமேனி மார்த்தாண்டவர்மா ராஜாவுக்கும் காலந்தொட்ட நட்பு இருக்கிறது. அந்த நட்பின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் வழியாகவும் பவுரீன்பிள்ளைக்குக் கிடைத்த வெகுமானப் பொருட்கள் பல சவ்தா மன்ஸீல் முழுமையும் நிறைந்து கிடக்கிறது. திருமேனி கொடுத்த வாள், வெள்ளிதாம்பாளம், பட்டுஉறுமால், சந்தன அருமாலி, தேக்கு மரத்தூண்கள், வம்சம் செழித்துக் குளிப்பதற்கான குளம் கூடவே சாய்வு நாற்காலி எனப் பல பொருட்களால் பல நினைவுகளால் பல வரங்களால் நிறைந்து கிடக்கும் ஒரு குடும்பம், மிகப்பெரிய ஆலமரம் எப்படி வீழ்ந்தது, அதன் கடைசி விழுதான முஸ்தாபக்கண்ணு அந்த பெரிய ஆலமரத்தை எப்படி வேரோடு சாய்க்கிறார் என்கிற துன்ப வரலாறு சொல்லும் கதைதான் சாய்வுநாற்காலி.

உடல், மனம் முழுக்க காமதாபத்தோடு திரியும் முஸ்தபாக்கண்ணு முதலாளித்துவத்தின் பெரும் எச்சமாகவே நாவல் முழுக்க வருகிறார். முஸ்தபாக்கண்ணுவின் வழியாக நாவல் ஏற்படுத்தும் பிம்பமும் அதுதான். தன்னிடம் இருக்கும் கடைசி அஸ்திரம் கைவிட்டுப்போனபின்னும் கூட தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் எங்குமே தன்னை மாற்றிக்கொள்ளாதவராகவும், தனக்கான நியாயங்கள் மட்டுமே சிறந்தவை எனும் அகங்காரம் கொண்டவருமாகவே வலம்வருகிறார்.

இல்லாதவனை ஏய்த்துப் பிழைப்பதும், பெண்ணடிமைத்தனமும் நாவல் முழுக்க பெரும்சித்திரமாக வருகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மரியம்பீவி, அதபு பிரம்பாலேயே தன்னை அடித்துக் கொன்றுவிடும்படி கெஞ்சுவது நெஞ்சை உருக்கும் சோக நிகழ்வு. எந்தவொரு பெண்ணுக்கும் இந்நிலை வரக்கூடாது என்று வருந்தச்செய்யும் கோரம். இயல்பு மாறாமல் அந்த வலியை நம்முள் கடத்துகிறார் தோப்பில் முகம்மது மீரான்.

முஸ்தபாக்கண்ணுவின் தங்கை ஆயிஷா, அவளது கணவன் செய்யதகம்மது, பணிவிடைக்காரன் இஸ்ராயில், வஞ்சிக்கப்பட்டு கழுத்தறுபடும் பெண்களாக வந்துசெல்லும் பாத்திமா சபியா என நாவல் முழுக்கவே பல முக்கியமான கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றன.

சாய்வு நாற்காலி, கதைக்களம் மற்றும் கதை சொல்லும் விதம் இவை இரண்டின் மூலமுமாகவே உச்சம் தொட்ட நாவல் என்று கருதுகிறேன். சாகித்ய அகாடமி விருது வென்ற சாய்வு நாற்காலி காலம் அழிக்க முடியாத பெருஞ்சித்திரம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. விமர்சனம் சிறப்பாக இருந்தது, முஸ்தபாகண்ணு “முதலாளி” என்னும் தொணியை விட எனக்கு “நிலபிரபு ” என்றே தெரிந்தார்.நிலப்பிரபுத்துவத்தில் தான் போலி கௌரவம் என்பது இருக்கும். முதலாளிக்கு தேவை லாபம், இங்கு முஸ்தபாகண்ணு உற்பத்தியில் ஈடுபடவில்லை, லாபம் எல்லாம் இல்லை. பெண்ணடிமைத்தனம், போலி கௌரவம் எல்லாம் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள். இஸ்ராயீல் அவரை முதலாளி என்று கூப்பிடுகிறார், ஆனால் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் கொண்டவர் தான் முஸ்தபாகண்ணு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button