
பொதுவாக பெண்களின் உடல் ரீதியான துன்பத்தை விடவும் வலி மிகுந்ததான அவளுடைய மனத் துன்பத்தினை பெண்களே கூட உணர்வதில்லை, அதை இந்த சமூகமும் குடும்ப அமைப்பும் ஆண்களுக்குக் கற்றுத் தருவதும் இல்லை என்பதை மிக அழகாக உணர்த்தி இருக்கும் படம்தான் ‘தப்பாட்’ (THAPPAD).
அனைத்து உறவுக்கும் ஆதாரம் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மரியாதையும், அன்பும் (காதல்) நம்பிக்கையும் மட்டுமே…. இந்த ஆதாரங்கள் சிதையும் போது ஏற்படுகின்ற மனவலியை அழகாக எடுத்துரைக்கிறது இந்தப் படம்.
அழகான(?) குடும்பத்தில் காலை உணவு சாப்பிடக் கூட நேரமின்றி பணிக்குச் செல்லும் கணவனுக்கு கார் வரை சென்று உணவூட்டி வழியனுப்பும் அன்பான பொறுப்பான குடும்பத் தலைவியாக வரும் நாயகி தனது சுயமரியாதையைக் காக்க எடுக்கும் முடிவுகளிலும், “திருமணம் என்பது வெறும் ஒப்பந்தம் அல்ல, அது காதலை அடிப்படையாகக் கொண்டது….அந்தக் காதல் மனம் உடைந்த பின்பு அந்த உறவு மகிழ்ச்சி அளிக்காது” என்று தனது வழக்கறிஞரை ஏற்றுக்கொள்ள வைக்கும் காட்சிகளிலும் அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் நம்மை உலுக்குகின்றன. “இந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு, தனது மகிழ்ச்சியையும் திறமைக்கான அங்கீகாரத்தையும் நெடுங்காலம் தேடிக்கொண்டிருக்கும் புகழ்பெற்ற பெண் வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிடம், தான் இந்த முடிவை எடுக்க மாட்டேன் என்பதும் இருப்பினும் கட்சிக்காரரின் முடிவு தவறு இல்லை என்பதை ஏக்கத்துடன் ஒப்புக் கொள்ளும் போதும், தான் கடந்து வந்த பாதையில் இருக்கும் முட்களை அகற்றாமல் அகற்றவும் முயற்சிக்காமல் தனது அடுத்த தலைமுறையினருக்கு அதே பாதையில் நடக்கக் கற்றுத் தரும் பெண்களின் அடிமைத்தனத்தை இப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது. மேலும் ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் இம்மாதிரியான அடிமைத்தனங்களை பெண்களே சக பெண்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் போது, வாழ்க்கையை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டியது ஆண்களுக்கு அல்ல, பெண்களுக்குத்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு பெண்கள் தங்களது மரியாதை,தேவை மற்றும் சுயத்தையும் உணராது இருப்பது கவலைக்குரியது.
தனது தந்தை மற்றும் சகோதரனை விட்டுப் பிரிந்து தனது சுயமரியாதையை நிலைநாட்டப் போராடும் ஆண் ஒருவன் அதே சுயமரியாதை தனது மனைவிக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளவும் உணரவும் மறுக்கும்போது ‘சுயமரியாதை’ என்பது இங்கே ஆண்களுக்கு ஒன்றாகவும் பெண்களுக்கு வேறு ஒன்றாகவும் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
சாதாரணமாக ஒரு தேநீர் தயாரிக்கவே அவ்வளவு சிரமப்படும் ஒரு ஆண் காலையிலிருந்து இரவு வரை பெண்கள் தனக்காக இன்முகத்துடன் செய்யும் அனைத்து வேலைகளையும் துட்சமாக எண்ணுகிறான், தனது தவறை நியாயப்படுத்துவதற்காக தன் மனைவி மீது அடுக்கடுக்காக பொய்யான புகார்களை வைக்கிறான். மேலும் அவன் தன் மனைவியை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லும் காரணங்களான, “என்னைப் பற்றி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்ன நினைப்பார்கள்?” “என்னுடைய கௌரவம் என்ன ஆகும்?” போன்றவை திருமணம் என்பது சமுதாயம் சார்ந்த வெறும் ஒப்பந்தம் மட்டும்தானோ என்றே எண்ண வைக்கிறது. “women must learn to be tolerant. We Women do not matter. Our happiness is in their happiness.” என்று தன் மருமகளுக்கு சகிப்புத்தன்மையை கற்றுத் தரும் மாமியார் தன் மகனுக்கு அவன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை கற்றுத் தராதது வருத்தத்தை அளிக்கிறது. “The only reason I would stay here is I loved you” என்று ஒரே வரியில் கதையை மொத்தமாக விளக்கும் விதம் அருமை.
“Doing the right thing doesn’t always end in happiness…” போன்ற வசனங்கள் படத்திற்கு பெரும் பலம்.
“I was married to a wonderful man. I would like to believe men are wonderful people. so I prefer to pretend I didn’t hear what you just said” என தன் தவறுக்கு உதவி கோரியவருக்கு அழகாக அவரது தவறை சுட்டிக் காட்டி ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல என்று பதிலளிப்பது போன்ற காட்சிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன.
மொத்தத்தில் தான் சார்ந்த சமூகத்தில் தன்னை விடவும் அதிகாரம் படைத்தவர்களிடம் எந்தவித எதிர்ப்பையும் காட்டத் துணிவில்லாத ஒரு ஆண் தனது மொத்த இயலாமையையும்,கோபத்தையும் வெளியேற்ற பெண்களை ஒரு வடிகாலாகப் பயன்படுத்துவதையும் அதற்கு பெண்களே துணை போவதையும் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நமக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
பொதுவாகவே திரைப்படங்கள் பார்ப்பதில்லை.. அதுவும் வேற்று மொழி.. ஆனால்.. இந்த படம் பார்க்கலாம் போல் இருக்கிறது.. விமர்சனம் ❤️