
லிசா என்னும் அதிசயம்
பெண் என்பவள் எப்போதும் அதிசயமானவள். அற்புதமானவள். லிசாவும் அப்படியே! மனிதகுலத்தின் இடையே உருவான அபூர்வப் பெண் லிசா. இந்த லிசாவை உங்களுக்குத் தெரியுமா? என்ன… இல்லையா? லிசா யாரென்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் இல்லையா? என்ன மனிதர் நீங்கள்? வாசகசாலையைப் படிக்கும் வாசகராக இருந்தும், லிசா என்னும் பெண்ணைத் தெரியவில்லை என்பது எவ்வளவு குரூரம்? சரி, லிசா யாரென்பதை நான் சொல்கிறேன். அதற்கு முன், ஒரு பெண்ணைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்குரிய அறிவு கொஞ்சமாவது உங்களுக்கு இருக்க வேண்டும். அறிவு தேவையெனில், அறிவியல் தேவை. அதனால், கொஞ்சம் அறிவியல் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
எங்கோ தொலைவில் நடக்கும் ஏதோவொரு செயலின் விளைவு, வெகுதூரத்திலிருக்கும் உங்களையும் வந்து தாக்கலாம். நான் சொல்வது பட்டாம்பூச்சி விளைவு பற்றியல்ல. இது நேரடி விளைவு. இப்போதுகூடப் பாருங்கள். சீனாவில் இருக்கும் யாரோ ஒருவன், ஏதோவொரு பிராணியை உண்ணப்போக, அதில் ஹாயாக உட்கார்ந்து கொண்டிருந்த கொரோணா வைரஸ், அவன் வாய்வழி உள்ளே சென்று கோடியாய்ப் பெருகி, அவனைக் கொன்றதெல்லாம் சரிதான். ஆனால், அதன் தொடர்ச்சியாய் இன்று உலகம் முழுவதும் பரவி, மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோரைக் கொன்றிருப்பது கொடுமையல்லவா? எங்கோ ஆரம்பித்த ஒரு செயல், வெகுதொலைவில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுபோலத்தான், 2004 ஆம் ஆண்டும் ஒரு சம்பவம் நடந்தது. பலரின் வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்ட சம்பவம் அது. இந்தோனேசியாவின் கடலடியில் இருக்கும் இரண்டு கண்டமேடைப் பாறைகள் சற்று விலகி, மேலேறி, மீண்டும் தம்மைச் சரிசெய்யச் சேர்ந்தபோது ஏற்பட்ட அதிர்வு, ஆழிப் பேரலையாக உருமாறியது. அது இலங்கை, இந்தியா எனப் பாரபட்சம் பார்க்காமல் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் உயிர்களைச் சில நொடிகளில் கொன்றழித்தது. கண்மூடிக் கண் திறப்பதற்குள், தானோஸின் விரல் சொடுக்குப்போல், பலரின் உயிரை எடுத்து ஓய்ந்தது. அந்த அழிவுக்குக் காரணம் ஒரு அலை. ஆரம்பித்த இடத்திலிருந்து 4000 கிமீ பயணம் செய்த பேரலை. சாதாரணமாக, அலைகளைக் கவனித்தீர்களென்றால், அவை கடலின் மேற்பரப்பிலேயே நகர்ந்து பயணம் செய்யும். கடலின் அடியாழத்தில் அவற்றின் தாக்கம் இருக்கவே இருக்காது. தட்டையான மேற்பரபுடைய கடல் மட்டத்தில் அவை உருவாகின்றன. அந்த அலைகள் போலவே, வேறுவகையான அலைகளும் இருக்கின்றன. அண்டவெளியென்னும் தட்டைப் பாய்வெளியில் நகர்ந்து செல்லும் ஈர்ப்பலைகளே (Gravitational wave) அவை.
1916 ஆம் ஆண்டு ஐன்ஸ்டைன் அவர்களால், பொதுச் சார்புக் கோட்பாட்டை மையமாக வைத்துக் கருதுகோளொன்று சமர்ப்பிக்கப்பட்டது. கண்டமேடைப் பாறைகள் ஒன்றுடனொன்று இணையும் மோதலில் ஆழிப் பேரலைகள் உருவாவதுபோல, இரண்டு கருந்துளைகள் ஒன்றுடனொன்று இணைவதால், ‘ஈர்ப்பலைகள்’ தோன்றுகின்றன என்றார் ஐன்ஸ்டைன். கருந்துளைகளின் மோதல், அண்டவெளியில் அதிர்வுகளை உருவாக்குமென்றும், அப்படி உருவான அதிர்வுகள் அலைகளாகி வெகுதூரம் பயணிக்குமென்றும் ஐன்ஸ்டைன் கூறினார். இரண்டு மிகை எடையுடைய கருந்துளைகள் ஒன்றுடனொன்று இணையும்போது, வெளிவிடப்படும் ஆற்றல் (energy), அதிர்வுகளாகி அவை ஈர்ப்பலைகளை உருவாக்குகின்றன. இந்தக் கருதுகோளை ஐன்ஸ்டைன் வெளியிட்டிருந்தாலும், அவருக்கே அதில் சந்தேகங்கள் இருந்தன. ஆனால், மிகச்சரியாக நூறு ஆண்டுகளின் பின்னர், அவர் ‘சொன்னதெல்லாம் உண்மை’ என்று நிரூபித்தது நவீன அறிவியல். 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி, ‘லைகோ’ மற்றும் ‘விர்கோ’ என்னும் ஆராய்ச்சி நிலையங்கள், “ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்பலைகளை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், வெறும் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, ஈர்ப்பலைகள் உண்டெனக் கணித்துச் சொல்வது எவ்வளவு ஆச்சரியம் சொல்லுங்கள்? இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எப்படி இருக்குமென்றே தெரியாத ஒன்றை, இப்படித்தான் இருக்குமென்று கணிதத்தினால் ஒருவரால் கணிக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய அதிசயம். அப்படியானதொரு மாமேதைக்கு மகுடம் சூட்டும் அதிசயத்தை நிகழ்த்திக்காட்டி வைத்தன லைகோவும், விர்கோவும்.
“ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்பலைகள் நிச்சயம் இருக்கின்றன. அவற்றை நாம் கண்டுபிடித்தே தீருவோம்” என்று உறுதியாககச் சொன்ன நவீன இயற்பியலாளர்கள் உருவாக்கிய ஆராய்ச்சி நிலையங்களே, ‘லைகோ’ (LIGO – Laser Interferometer Gravitatinal wave Observatory) மற்றும் ‘விர்கோ’ (Virgo). அமெரிக்காவின் ஹான்ஃபோத்ட் நகரிலும், லிவிங்ஸ்டன் நகரிலும் இரண்டு லைகோ ஆராய்ச்சி நிலையங்களும், இத்தாலியில் விர்கோ ஆராய்ச்சி நிலையமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 90 டிகிரி கோண இடைவெளியில், நான்கு கிமீ நீளமுள்ள, நேரான குழாய்களைக்கொண்டு அவை அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த நீண்ட நேர்க்குழாய்களினூடாக லேசர்க் கதிர்கள் செலுத்தப்பட்டு, ஈர்ப்பலைகள் கண்டுபிடிக்கப்படுகிறது. 1.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், நம் சூரியனைப் போல 36 மடங்கு எடையுடைய ஒரு கருந்துளையும், 29 மடங்கு எடையுடைய இன்னுமொரு கருந்துளையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. அப்போது ஏற்பட்ட மோதலினால் உருவான அதிர்வுகள், ஈர்ப்பலைகளாகி, 1.3 பில்லியன் ஆண்டுகள் பயணம்செய்து, பூமியில் இருக்கும் லைகோவின் நீண்ட குழாய்களின் லேசர்க் கதிர்களைச் சற்றே அசைத்துவிட்டுச் சென்றுவிட்டன. அந்த லேசர்க் கதிர்களில் ஏற்பட்ட சலனம் மிகத்துல்லியமாகக் கணிக்கப்பட்டு, ‘இவை இரண்டு கருந்துளைகளின் மோதலில் ஏற்பட்ட ஈர்ப்பலைகளே!’ என்ற உண்மையைச் சொல்லியது.
36 மடங்கு சூரிய எடைகொண்ட கருந்துளையொன்றும், 29 மடங்கு சூரிய எடைகொண்ட கருந்துளையொன்றும் இணைந்தால், 65 மடங்கு சூரிய எடையுடைய புதிய கருந்துளைதானே உருவாக வேண்டும்? ஆனால், அப்போது உருவாகிய கருந்துளையானது 62 மடங்கு சூரிய எடையையே கொண்டிருந்தது. இதில் எஞ்சிய 3 மடங்கு சூரிய எடையும், ஆற்றலாக மாற்றப்பட்டு ஈர்ப்பலைகளை உருவாக்கி, நீண்ட காலம் பயணம் செய்திருக்கின்றன. அந்த ஈர்ப்பலைகளை வெறும் நான்கு கிமீ நீளமுள்ள லேசர்களால் மிகச்சொற்ப நேரமே உணரமுடிந்தது. அவ்வளவு மிகப்பெரிய காலம் நகர்ந்துவரும் ஈர்ப்பலைகளுக்கு, இந்த நான்கு கிமீ நீளமுள்ள லேசர் கதிர்கள் மிகமிகச்சிறிய அளவானவை. சில மில்லி செக்கன்களே அந்த ஈர்ப்பலைகளை, லைகோவினால் உணர முடிந்தது. ஆனாலும், அந்தச் சிறிய காலப்பகுதியிலும் அதிகளவு தரவுகளைப் பெற்றுக் கொண்டது லைகோ. மனிதனின் ஆராய்ச்சித் தாகத்துக்கு இச்சிறிய அளவீட்டால் தீனிபோட முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை பல ஈர்ப்பலைகளை லைகோ கண்டறிந்து விட்டது. அனைத்தும் ஆங்காங்கே கருந்துளைகள் மோதி இணைவதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகள்தான். ஆனால், இவை தவிர்த்தும் அண்டவெளியில் எத்தனையோ அற்புதங்கள் நடைபெறுகின்றன அல்லவா? அவற்றையும் நாம் கண்டுபிடிக்க வேண்டாமா? உதாரணமாக, இரண்டு நியூட்ரோன் நட்சத்திரங்கள் மோதிக் கலப்பதை அறிய வேண்டுமல்லவா? காலக்ஸிகள் இரண்டு ஒன்று சேர்வதைக் கணிக்க வேண்டுமல்லவா? இப்படியான பெரிய நிகழ்வுகள் எப்போதும் அண்டவெளியில் நடைபெறுகின்றன. அவை தாண்டிய வேறு சிறிய நிகழ்வுகளும் நிறையவே நடைபெறுகின்றன. அவற்றையும் கண்டுகொள்ள வேண்டுமென்றால் நாம் என்ன செய்வது? நான்கு கிமீ நீளமுள்ள ஆராய்ச்சிசாலையில் இவை சாத்தியமே இல்லையே! இதைவிட நீளமுள்ள அவதானிப்பு நிலையங்களை உருவாக்க முடியும். ஆனால், பூமியென்பது கோள வடிவமுள்ளதல்லவா? ஒரு அளவுக்கு மேலே, நீண்ட நேரான குழாய்களை அமைக்க முடியாதே! பூமியின் வளைவுடன் சேர்ந்து குழாய்களும் வளையுமல்லவா? அப்படி வளையும் குழாய்களில், எப்படி நேரான லேசர்க் கதிர்களைச் செலுத்துவது? நான்கல்ல, நாற்பது கிமீ நீளத்திற்குக்கூடக் குழாய்களை அமைக்க முடியும். ஆனால், நேராக இருக்காது. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குத்தான் உதவுகிறாள் லிசா.
‘லிசா’ என்பவள் வேறு யாருமில்லை. அவளும் ஒரு வானியல் ஆராய்ச்சிக்குத் துணை செய்யும் ஒருவள். ஈர்ப்பலைகளைக் கிரகிப்பதற்கு, விண்வெளியில் அமைக்கப்பட இருக்கும் லேசர் ஆராய்ச்சிக் கருவிதான் லிசா (LISA). விண்வெளியில் மூன்று ஆண்டெனாக்களை முக்கோண வடிவத்தில் அமைக்கும் திட்டத்தின் ஆதாரம்தான் லிசா. லிசா (LISA) என்றால், Laser Interferometer Space Antenna என்பதன் சுருக்கம். ஐரோப்பிய வானியல் ஆராய்ச்சி மையம் (ESA) மூலம் இந்த மூன்று ஆன்டெனாக்களும் விண்வெளியில் விடப்படவுள்ளன. ஒவ்வொரு ஆண்டெனாவும் 5 மில்லியன் கிமீ இடைவெளியில் இருக்கும்படி, அந்த முக்கோண வடிவம் இருக்கும். இவை மூன்றும் லேசர்க் கதிர்களால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். துல்லியமான அளவீட்டுடன், பூமியானது சூரியனைச் சுற்றிவரும்போது, இவையும் சேர்ந்தே சுற்றிவரும் வகையில் அமைந்திருக்கும். ஒரு மில்லிமீட்டர்கூட அந்தப் பக்கம் இந்தப்பக்கம் விலகாமல், அந்த முக்கோண வடிவம் பாதுக்காக்கப்படும்படி அவை சுற்றிவரும். நான்கு கிமீ நீளமுடைய கருவியினாலேயே நம்மால் ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்க முடியுமெனில், 50 இலட்சம் கிமீ நீளமுள்ள லிசாவினால் எதையெதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்? தினம் தினம் அண்டவெளியில் நடக்கும் வானவேடிக்கைகளைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லுவாள் லிசா. அக்கம் பக்கம் நடக்கும் அத்தனை சண்டைகளையும், மோதல்களையும், வாக்குவாதங்களையும் அறிந்து சொல்வாள் அவள். ‘நேற்று அங்கு இரண்டு நியூட்ரோன் நட்சத்திரங்கள் ஒன்றாகின’, ‘இன்று இரண்டு வெள்ளைக் குள்ளர்கள் ஒன்றிணைந்தார்கள்’ என்னும் அத்தனை கிசுகிசுக்களும் நம் காதில் ஓதப்படும். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவையென்றாலும், அனைத்தையும் நேரில் பார்த்ததுபோல அறிவிப்பாள் அவள்.
இந்த லிசாவிற்கான செயற்திட்டத்திற்கு, மிக அதிகளவு பணத்தையும், காலத்தையும் செலவிட வேண்டும். இன்னும் பத்து ஆண்டுகள் இந்தத் திட்டத்திற்குத் தேவைப்படுகின்றன. அதிநவீன துல்லியமான கணக்கீடுகளும், அறிவியலும் இணைந்தே இத்திட்டம் தயார் செய்யப்படுகிறது. லிசா திட்டம் நிறைவேறும்போது நான் உயிருடன் இருப்பேனா, இல்லையா, தெரியாது. ஆனால், இதைப் படிக்கும் நீங்கள் அனைவரும் நிச்சயம் இருப்பீர்கள். அப்போது, இதை உங்களுக்குக் கூறிய ராஜ்சிவாவையும் ஒருதடவை நினைவில் கொள்ளுங்கள்.
தொடரும்…
ரொம்ப அருமை…