
வாழ்வின் பச்சையத்தையும், சருகுகளையும்
ஒருசேரக்கொண்ட பெரும் மலைக்காட்டில்
தனியே சுற்றித்திரிகிறேன்…
தூக்கம் கலைந்த ஒரு மாலையில்
ஞாபகப் பெட்டகத்துள் உறங்கும் காலப்பறவை
தன் சிறகுகளை மெதுவாய் அசைத்துப் பார்க்கிறது
உயிர்த்தலின் பயனாய் உடன்வரும்
முதல் முத்தம், காதல் , துக்கம்,துரோகம்
என மழை, வெயில் தாண்டி சிறகு விரிக்கிறது
தோட்டத்தின் முதல் அரும்பு மலர்ந்து உதிர்ந்தாலும்
நினைவுக் காம்பில் இருந்து உதிராமல்
ஒட்டிக்கொண்டு சிரிக்கிறது
தவறி விழுந்த ஓர்மையைப் பற்றி
இழுக்கையில் ஆதி பவளமல்லியின்
மதி மயக்கும் வாசம் வனமெங்கும் வீசத்துவங்கியது
பறத்தலை விரும்பாத அந்த நொடியில்
பறவையை கூடடையப் பணிக்கிறேன்
அது உணரக்கூடும் வாசம்மிக்க மலர்கள் அழகானவை என்று!
***
என் சாளரத்தின் வாயிலாக
தரிசிக்கும் தினசரிக் காட்சிதான்
ஆனாலும்
சலிப்பதே இல்லை!
பரந்து விரிந்த மரத்தடியில்
தன் சிறுவியாபாரத்தை அவள்
மகிழ்ச்சியாகச் செய்கிறாள்
எப்பொழுதும் சிரிக்கிறாள்
எல்லோரிடமும் பேசுகிறாள்
விளித்தும், கூவியும் விற்கிறாள்
சமயத்தில் நாய்களுடனும் கதையாடுகிறாள்.
புதிது புதிதாய் பலர் வருகிறார்கள், போகிறார்கள்
இதற்கு முன்னரும் வந்திருக்கக் கூடும்
அவள் முகம் மட்டுமே பரிச்சயம்
வேறு முகம் அறியும் ஆவலற்ற நாளில்
திரைவிலக்கிய பொழுதினில் கடை மட்டுமே
பெயர் அறியாத அவள் தேடலில் தப்பி
திடீரெனத் தென்பட்டாள்
தலைவிரிக் கோலத்தில் கோபமாய் இரைந்தவண்ணம்
மிருகம் ஒன்றினை
வேட்டையாடி முடித்த வெறியோடு வந்துகொண்டிருந்தாள்
அந்நொடியில் எனக்கவள்
கொற்றவையை போலத்தான் தோன்றினாள்
வந்தமர்ந்தவள் சட்டென சுருட்டைப் புகைக்க துவங்கினாள்
கொற்றவை புகைப்பதில்லையா என்ன?
*********
நன்றி திரு.மணி! காலப்பறவை!