அன்பின் அத்துமீறல்களை
அடக்குமுறைகளைத் தாளாது
அக்கினி வார்த்தை வீசி
உன்னை விசிறியடிக்கிறேன்
முகவரியின் தடங்களை
நினைவுகளில் அகற்றாமல்.
உன்னைத் தொலைத்துவிட்டதாக
பிதற்றிக்கொண்டிருக்கிறேன்
ஓய்ந்திருக்கும் வேளையில்
அனிச்சையாய் கால்கள்
உந்தன் வாசலுக்கே
என்னை இட்டுச் செல்கின்றன
வலிய வந்ததால் கர்வத்தில்
மயக்கும் சிரிப்புடன்
எனக்காகக் கை நீட்டுகின்றாய்
இயல்பாய்
கைகோர்த்துக் கொள்கிறேன்.
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தை
முடித்துக்கொண்டதால்
இருவரும் கலந்து
சற்று இளைப்பாறுவதாய்
நம்பிக்கொண்டிருக்கிறேன்.
ஆட்டம் முற்றுப்பெறவில்லை
உன்னை நானும் என்னை நீயும்
தொலைப்பதும் – மறுமடி
கண்டெடுப்பதும் வாடிக்கையான
தொடர் நிகழ்வுகளாகும்…
****
மனதின் காயங்களை
யாரிடமும் சொல்லாமல்
முடங்க ஆரம்பித்தபின்
வலிகள் மரத்துப்போய்
நீர் அடித்துச்செல்லும்
தக்கையாய் நதியோட்டத்தில்
இழுத்துச் செல்லப்படுகிறேன்.
உணர்வுகள் மரத்துப்போனதால்
பிறர் பகிரும் துன்பங்களுக்கான
கண்ணீர் சுரப்பதில்லை
துன்பம் இயல்பான ஒன்றாகவே
கடந்து செல்வதால் கண்ணிலும்
ஈரம் வற்றிப்போய்விட்டதோ?
தீர்த்துவைக்க முடியா
சோகங்களின் நிழல்
என் மீது கவிழ்வதை
அனுமதிக்க மறுக்கிறேன்.
எவரையும் நெருங்கவிடாமல்
எட்டவே நிற்கிறேன்.
பந்தபாசங்களை தூரத்தில்
தள்ளிவைத்து தனிமையில்
முடங்கிக்கொள்கிறேன்
மனதில் ஈரம் வற்றிய
தக்கை சோகக்கடலில்
அமிழ்ந்துபோவதில்லை.
****
பந்த பாசமற்ற உன்மீதான
நேசத்தின் வித்தை
அடக்கம் செய்ததாய் எண்ணி
அதற்கு கண்ணீர் வார்த்தேன்
வித்தில் ஈரம்பாய்ந்ததால்
வேர்விட்டு விருட்சமாகி
கொத்துக்கொத்தாய்
காய்த்துக் கிடக்கிறது
எட்டிக்காயாக முகம்சுளித்து
போகின்றாய்.
அன்பின் ஒவ்வாமை
கொண்டோன் மடியில்
விழுந்த விருட்சத்தின் கனி
விழலுக்கு இறைத்த
நீராக வீணாகியது.
****
வாடகைத்தாய்
பூவாது காய்க்கும் மரமுள
பாவையவளோ
காதல் அவளுக்கானதாக
என்றுமே உணர்ந்ததில்லை
இருந்தும் கனிதருவாள்.
அவளுக்கு காதலில்
வேடிக்கை மட்டுமே
சாத்தியம்.
****
என்னைச் சுற்றி இறைந்து கிடக்கும்
எல்லாவற்றையும்
வார்த்தைகளில் சேகரித்துவிட்டேன்.
அடைபட்ட நான்கு சுவருக்குள்
நான் பொறுக்கி எடுக்க
ஏதோவொன்று
புலப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
பூட்டிய கூட்டுக்குள்ளேயே
இத்தனையா..!
கட்டவிழ்த்துப் பறந்தால்
கைகொள்ளாமல்
அள்ளிவிடுவேனென்று சிறகுகள்
வெட்டப்பட்டதோ..!
ஆட்டுக்கு வாலை அளந்துதான்
ஆண்டவன் படைப்பானென்ற
அசரீரி செவி் தீண்டியது
கற்பனைக்குள் அடங்காத
அண்டத்தின் பொக்கிஷங்களை
காணாமலே
வார்த்தைகளாக்கி எழுத்தில்
வரைய முனைகிறேன்.
மயிலென்று நான் வரைந்தது
வான்கோழியென்ற உண்மை
எனக்குத் தெரியாமலே போகட்டும்.
******
கவிதைகள் சிறப்பு.
ந க துறைவன்.