இணைய இதழ்இணைய இதழ் 50சிறார் இலக்கியம்

ஜானு;1 – கிருத்திகா தாஸ்

சிறார் தொடர் | வாசகசாலை

ஜானு.. அப்படின்னு ஒரு பொண்ணு.

அவங்க ஊர்ல இருக்குற ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கிறா.

அவளோட பள்ளியில அவ அநியாயத்துக்கு நல்ல பொண்ணு. ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குற பொண்ணு.

பொதுவா ஒரு வகுப்புல மாணவர்கள் எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்ச ஒரு மாணவனையோ அல்லது மாணவியையோ ஆசிரியர்களுக்குப் பிடிக்காது.

அதே நேரத்துல ஒரு வகுப்புல ஆசிரியர்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு மாணவனையோ அல்லது மாணவியையோ அந்த வகுப்பு மாணவர்கள் மற்றவர்கள் யாருக்கும் பிடிக்காது.

ஆனா, ஜானுவை மாணவர்களுக்கும் பிடிக்கும். ஆசிரியர்களுக்கும் பிடிக்கும்.

அப்படி ஒரு பொண்ணு ஜானு.

ஆனா, அவளோட வீட்ல ஜானு ரொம்ப ரொம்ப ரொம்ப சேட்டை புடிச்ச பொண்ணு.

எந்த அளவுக்கு சேட்டைன்னா பெற்றோர்கள் – ஆசிரியர்கள் சந்திப்புல ஜானுவோட ஆசிரியர்கள் ஜானுவை ரொம்ப நல்ல பொண்ணு அப்படின்னு அவளோட பெற்றோர்கள் கிட்ட சொல்லும்போது அவங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும். ஒருவர் முகத்தை ஒருவர் ஷாக்கா பார்த்துக்குவாங்க.

அந்த அளவுக்கு சேட்டை பிடிச்ச பொண்ணு ஜானு.

ஆனா, ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.

ஜானு ஃபர்ஸ்ட் பென்ச் பொண்ணு கிடையாது. அவ வகுப்பில் இருக்கிற எல்லா பெஞ்ச்லையும் உக்காந்துட்டு இருப்பா.

இன்னும் கொஞ்ச நாள் நம்ம ஜானு கூட பயணம் பண்ணப் போறோம். ம்ம். இன்னும் கொஞ்ச நாள் அப்படின்னு சொல்லிட முடியாது. இனி எப்பவுமே ஜானு நம்ம கூட தான் இருப்பா.

அவளோடு முழு பெயர் ஜானகி. ஜானுவோட அப்பாவோட அம்மா பேரு.

சரி இனி ஜானுவோட வாழ்க்கைக்குள்ள போய்ப் பார்ப்போம்.

ஜானு வசிப்பது ஐந்து வீடுகள் கொண்ட ஒரு கட்டிடம்.

அதில் இரண்டாவது மாடியின் ஒரு வீட்டில் ஜானு மற்றும் அவளோட அம்மா அப்பா வசிக்கிறார்கள். 

இரண்டாவது மாடியின் இன்னொரு வீட்டில் குழந்தைகள் ராகுல் மற்றும் ராகுலின் தங்கை அஞ்சலி அப்புறம் அவங்களோட அம்மா அப்பா இருக்காங்க.

முதல் மாடியின் ஒரு வீட்டில் இரட்டைக் குழந்தைகளான ஆதினி மற்றும் ஆத்யா அப்புறம் அவங்க அம்மா அப்பா அப்புறம் அவங்க தாத்தா பாட்டி இருக்காங்க.

முதல் மாடியின் இன்னொரு வீட்டில் ஒரு கணவன் மனைவி இருக்கிறார்கள். சஞ்சய் & பவித்ரா. அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இன்னும் சில வருடங்களில் நடுத்தர வயதினை எட்டிவிடக்கூடிய தம்பதி.

தரைத்தளத்தில் உள்ள வீட்டில் முகிலன் அங்கிள் தனியாக வசிக்கிறார். ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அந்தக் கட்டிடத்தின் செக்யூரிட்டி கோபால் தாத்தா.

அந்தக் கட்டிடத்துக்கும் அதன் காம்பவுண்ட் சுவருக்கும் இடையில் மிகப்பெரிய இடம் உண்டு.

அங்கே தரையில் நிறைய செடிகள் நடப்பட்டு இருக்கும்.

அதோட குழந்தைகள் விளையாட இடமும் நிறையவே இருக்கும்.

இரட்டையர்களான ஆத்யாவும் ஆதினியும் ஆறாம் வகுப்பு படிக்கிறார்கள். ராகுலும் ஜானுவும் நான்காம் வகுப்பு படிக்கிறார்கள். ராகுலின் தங்கை அஞ்சலி இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.

இவர்களுள் ஆதினி சைலன்ட் ஸ்பீக்கர். அவள் பேச மாட்டாள்.

எல்லா சனி ஞாயிறுமே அந்தக் கட்டிடக் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

இந்த வாரத்தின் விடுமுறை நாட்களும் அப்படித்தான். என்றும் போல் கொண்டாட்டம்தான்.

ஆனால், அதையும் தாண்டி இந்த வார சனி ஞாயிறில் ஏதோ ஒன்று நடந்தது. 

அன்று சனிக்கிழமை.

முன்பகல். 

நண்பர்கள் கூட்டம் வாசலில் விளையாட ஒன்று கூடும் நேரம்.

ஜானு முதல் ஆளாக வந்து எல்லாருக்காகவும் காத்திருந்தாள். டியூஷன் முடித்துவிட்டு சாலையோர மக்களுக்கு உணவு கொடுத்து முடித்து விட்டு வந்து வாசலில் இருந்த படியில் உட்கார்ந்து இருந்தாள். 

ஜானுவை ஜன்னல் வழியாகப் பார்த்த ராகுலின் தங்கை அஞ்சலி இரண்டாவது மாடியில் இருந்து ஓடி வந்தாள். கையில் வைத்திருந்த ‘ஹைட் அண்ட் சீக்’ பிஸ்கட் பாக்கெட்டை ஜானுவிடம் கொடுத்துவிட்டு ஜானுவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

பரதநாட்டியம் பயிற்சி வகுப்பு முடிந்து ஆத்யாவும் ஆதினியும் வந்து சேர்ந்தார்கள். கிரிக்கெட் பயிற்சி முடிந்து ராகுலும் இணைந்து கொண்டான்.

எல்லாரும் சேர்ந்து பிஸ்கட் சாப்பிட்டு முடித்துவிட்டு விளையாடுவதற்காகத் தயாரானார்கள்.

அப்போது….

வெளியே சென்றிருந்த முகிலன் அங்கிள் அங்கே வந்து சேர்ந்தார்.

குழந்தைகள் எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த முகிலன் அங்கிள் அவரின் புல்லட்டை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் வந்தார்.

“என்ன கிட்ஸ், ஹோம் ஒர்க் எல்லாம் முடிஞ்சுதா?”

“முடிஞ்சது அங்கிள்” என்று கோரசாக கத்தினார்கள் எல்லாரும்.

“சரி, இப்போ உங்களுக்கு ஒன்னு சொல்லிக் கொடுக்கப் போறேன்”

– என்று சொன்ன முகிலன் அங்கிள் செக்யூரிட்டி கோபால் தாத்தாவைப் பார்த்து

“கோபால் அந்த ஏணியை எடுத்துட்டு வாங்க” என்றார்.

ஏணி என்ற வார்த்தையைக் கேட்டதுமே எல்லாருக்கும் குதூகலம் தொற்றிக் கொண்டு விட்டது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஒருவர் கையை ஒருவர் உற்சாகமாகப் பிடித்துக்கொண்டு பரவசப் புன்னகையை பகிர்ந்துகொண்டனர்.

கோபால் தாத்தாவிடமிருந்து ஏணியை வாங்கிய முகிலன் அங்கிள் அதை அந்தக் கட்டிடத்தின் வலது புற ஓரத்தில் ஒரு பக்கமாக சாய்த்து வைத்தார்.

“என்ன கிட்ஸ், ஏணி ஏறிப் பழகலாமா?”

“பழகலாம் அங்கிள்” மீண்டும் கோரஸ்.

பயங்கர உற்சாகம் தொற்றிக் கொண்டு விட்டது குழந்தைகளை. அடுத்தது என்ன சொல்லப் போகிறார் அங்கிள் என்று அவரையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

“ஆல்ரைட். முதல்ல ஆதினி வா.”

ஆதினி வந்து ஏணியின் முன் நின்றாள்.

“ஜானு, ராகுல் ரெண்டு பேரும் வாங்க. ஏணியோட ரெண்டு பக்கத்துல நின்னு ரெண்டு பேரும் ஏணி ஆடாமல் அசையாமல் ஒரே மாதிரி கெட்டியா புடிச்சுக்கோங்க. நீங்க ரெண்டு பேரும் ஏணியை அசைக்கக் கூடாது. முன்னாடி இழுக்கக் கூடாது. தள்ளக்கூடாது. செவத்துல அது எந்த அளவுக்கு அழுத்தமா சாய்க்கப்பட்டு இருக்கோ அதே அளவு அழுத்தம் தொடர்ந்து நீடிக்கற மாறி அழுத்தமாகப் பிடிச்சிருக்கணும். கூடவே ஏணியில் ஏறுறவங்க; அவங்க ஏறும்போது அவங்களோட பேலன்ஸ் சரியா இருக்கா இல்ல மிஸ் ஆகுதா அப்படின்னும் நீங்க கவனிக்கணும். சரியா?”

“ஓகே அங்கிள்”

முகிலன் அங்கிள் சொன்ன மாதிரியே ஜானுவும் ராகுலும் ஏணியைப் பிடித்துக்கொண்டார்கள்.

அப்போது முகிலன் அங்கிள் ஆதினியைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே சம்மதம் கொடுத்துக் கண் அசைக்க ஆதினி ஏணியில் ஏறத் தொடங்கினாள்.

இந்தச் செயல் எல்லாருக்குமே ரொம்பவே பரவசமாய் இருந்தது.

இதே மாதிரி வேற வேற இரண்டு இரண்டு பேர் ஏணியைப் பிடித்துக்கொள்ள எல்லாருமே ஏணியில் ஏறிப் பழகினார்கள்.

பின்..” ஓகே கிட்ஸ், சாயங்காலம் சந்திக்கலாம். பத்திரமா விளையாடுங்க. போய் லன்ச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வந்து விளையாடுங்க பை.”

“பை அங்கிள்” திரும்ப கோரஸ்.

கோபால் தாத்தா ஏணியைக் கொண்டுபோய் அதனிடத்தில் வைத்துவிட மீண்டும் எல்லோரும் ஒன்று கூடி விளையாட ஆரம்பித்தார்கள்.

ஒளிந்து விளையாடும் விளையாட்டு.

முதலில் ராகுல் கண்டுபிடிக்க வேண்டும். மீதி எல்லாரும் ஒளிந்து கொள்ள வேண்டும்.

எல்லாரும் ஆங்காங்கே ஒளிந்து கொண்டார்கள். ஜானு பார்க்கிங் ஏரியாவுக்கு ஓடிப் போய் அங்கிருந்த ஒரு தூணின் பின் ஒளிந்து கொண்டாள்.

அப்போ

முதல் மாடியில் வசிக்கும் சஞ்சய்… ரொம்ப டென்ஷனா பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து அவரோட பைக்கில் உட்கார்ந்து பைக்கை ஸ்டார்ட் பண்றதுக்காக இரண்டு முறை முயல்கிறார். பைக் ஸ்டார்ட் ஆகவில்லை.

தூணின் பின் ஒளிந்து இருந்த ஜானு அவரை கவனித்துக் கொண்டிருந்தாள். அவர் இத்தனை டென்ஷனாக இருப்பதை பார்த்த ஜானுவுக்கு புருவங்கள் சுருங்கி கண்கள் விரிந்தது.

சஞ்சய் ரொம்ப டென்ஷனாகி ‘ச்ச’ என்று கத்த அப்போது அவருக்கு ஒரு கால் வருகிறது. அலைபேசியை இயக்கி அதை எடுத்துக் காதில் வைத்துப் பேசுகிறார் சஞ்சய்.

“ஹலோ..”

…….

“ம்ம். பேசினேன். ஆனா, பவித்ரா என் வழிக்கு வர மாட்டேங்கறா.”

…….

“நாளைக்குக் காலைல வரைக்கும் அவளுக்கு டைம். கையெழுத்துப் போடலைன்னா நாளைதான் அவளுக்குக் கடைசி நாள். முடிச்சுட்டு இங்கிருந்து உடனே கிளம்பிடுவேன்”

…….

“ம்ம். சரி. நாளைக்கு நானே கூப்பிடற வரை நீ எனக்குக் கால் பண்ண வேண்டாம் அஷோக்.பை”

பேசி முடித்த சஞ்சய் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிப்போனார்.

இந்தப் பேச்சுக்களை எல்லாம் தூணுக்குப் பின் ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டிருந்த ஜானுவுக்குப் பதைபதைத்தது.

அவளுக்கு அவளின் காதில் விழுந்த வார்த்தைகளின் அர்த்தங்கள் முழுதாய் விளங்கவில்லை. இருப்பினும் நாளை காலை பவித்ரா ஆண்ட்டிக்கு சஞ்சய் அண்ணாவால் ஏதோ ஒரு ஆபத்து வரும் போல் இருக்கின்றது என்று மட்டும் தோன்றியது.

இந்த விஷயத்தை உடனே ஓடிப்போய் எல்லாரிடமும் சொல்லி விடலாமா என்று தோன்றியது ஜானுவுக்கு. ஆனால் தான் கேட்டதன் அர்த்தம் என்ன அதோடு அது எல்லாம் உண்மைதானா என்று அவளுக்குப் புரியவில்லை.

யோசனையோடு தூணுக்குப் பின்னால் இருந்து வெளியே வந்து நடந்தாள். அப்போது ராகுல் இவளைக் கண்டுபிடித்து விட்டான்.

பின் மீதி எல்லோரும் ஒளிந்துகொள்ள ஜானு இப்போது கண்டுபிடிக்க வேண்டும்.

ஜானு எல்லோரையும் கண்டுபிடிப்பதை விட்டு விட்டு, முதல் மாடியில் இருந்த பவித்ரா ஆண்ட் டி வீட்டு பெட்ரூமின் ஜன்னலையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

என்ன செய்வது என்ற யோசனையோடு அன்றைய விளையாட்டு முடிந்து எல்லாரும் அவரவர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

அடுத்த நாள்

ஞாயிறு அதிகாலை

அந்த பில்டிங் ஓனரின் மகளுக்குத் திருமணம். அனைவரும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

எல்லாக் குழந்தைகளையும் அதிகாலையிலேயே எழுப்பி ஆத்யா ஆதினியின் வீட்டில் விட்டுவிட்டு எல்லாப் பெற்றோர்களும் திருமண விழாவிற்காக ஊருக்குக் கிளம்பிச்சென்று விட்டார்கள்.

முகிலன் அங்கிள் மட்டும் ஒரு சின்ன வேலை இருப்பதால் மதியத்திற்கு மேல் தான் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லிவிட்டு அதிகாலையிலேயே வெளியே கிளம்பிப் போய்விட்டார்.

ஆத்யா ஆதினியின் பாட்டி தாத்தாவின் பொறுப்பில் இப்போது அத்தனை குழந்தைகளும்.

விடிந்த பின் எல்லோரும் தூங்கி எழுந்து பிரஷ் பண்ணிவிட்டு வாசல் படியில் வந்து உட்கார்ந்து இருந்தார்கள். பாட்டி ராகிமால்ட் கலந்து கொடுக்க அதை ஆதினி கொண்டுவந்து எல்லாருக்கும் கொடுத்தாள்.

ஜானுவுக்கு யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. அவ்வப்போது திரும்பி பவித்ரா ஆண்ட்டி வீட்டின் ஜன்னலைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

பார்க்கிங் ஏரியாவில் கவனித்தாள். சஞ்சை அண்ணாவின் பைக்கைக் காணவில்லை.

ஜானு மட்டும் வாசல்படியில் சும்மாவே உட்கார்ந்து இருக்க மற்றவர்கள் எல்லாரும் வாசலில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அங்கிருந்த செடிகளுக்கு கொஞ்சம் முன்புதான் தண்ணீர் ஊற்றப்பட்டு இருந்ததால் சுற்றியிருந்த கொஞ்சம் ஈரத்தில் ராகுல் வழுக்கி விழுந்தான்.

அப்போது ஆத்யா ஓடிச்சென்று அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கி விட்டாள்.

அப்போது அவனுடைய ஷார்ட்ஸ் பாக்கெட்டிலிருந்து இரண்டு எக்லேர்ஸ் சாக்லெட்டுகள் வெளியே வந்து விழுந்தன.

“ஹே ராகுல் நீ இன்னும் சாக்லெட் சாப்பிடுவதை விடலயா. போன வாரம் தானே உனக்குப் பல் வலி வந்து டென்டிஸ்ட் கிட்ட போனீங்க. உன்னைச் சாக்லெட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்கல்ல. உங்க அம்மா கிட்ட சொல்லட்டுமா.”

“ஆத்யா அக்கா வேண்டாம் ப்ளீஸ் நான் இனிமே சாப்பிட மாட்டேன். அம்மா கிட்ட சொல்லிடாதீங்க”

– என்று சொல்லி அந்த சாக்லெட்டுகளை திரும்பவும் ஷார்ட்ஸ் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

மீண்டும் எல்லாரும் விளையாடத் தொடங்கினார்கள்.

அப்போது

சஞ்சய்.. சாத்தியிருந்த காம்பவுண்ட் கேட்டை பைக்காலயே தள்ளித் திறந்து கொண்டு பார்க்கிங் ஏரியாவில் வந்து பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி அத்தனை வேகமாக கோபமாக வாசல் படி ஏறி அங்கே உட்கார்ந்து இருந்த ஜானுவைக் கடந்து மாடிப்படியை நோக்கிச் சென்றார்.

சஞ்சய், ஜானுவைக் கடந்து போகும்போது தன்னையே கவனித்துக்கொண்டிருந்த ஜானுவின் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே கடந்துசென்றார்.

ஜானுவுக்கு யோசனையும் சந்தேகமும் இன்னும் அதிகமானது.

ஒரு பத்து நிமிடங்களுக்கு மாடிப்படிகளையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அப்போது சட்டென்று ஒரு யோசனை உதித்தது அவளுக்கு.

எழுந்து ஓடிச்சென்று பவித்ரா ஆண்ட்டி வீட்டு பெட்ரூம் ஜன்னலைப் பார்த்தாள். பின் நண்பர்கள் அனைவரையும் அழைத்து

“ஹேஹே, நேத்து மாதிரி ஏணி ஏறிப் பழகலாமா?”

“ஓகே….”

ஜானு கேட்ட உடனே எல்லாரும் பரவசமாக ஓகே சொல்லி, ஜானுவைத் தவிர மீதி நான்கு பேரும் ஓடிச்சென்று அந்த ஏணியைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

அவர்களைப் பார்த்து ஜானு

“ஓகே இங்க போடலாம் ஏணியை.கொண்டு வாங்க” என்று சொன்னாள்.

அவள் ஏணியைப் போடச்சொன்ன இடம் பவித்ரா ஆண்ட்டி வீட்டு பெட்ரூம் ஜன்னல்.

“சரி, ஏணியைப் பிடிச்சுக்கோங்க..” என்று அவசர அவசரமாகச் சொன்ன ஜானு யாருக்காகவும் காத்திருக்காமல் சாய்ந்திருந்த ஏணியில் வேகவேகமாக ஏறினாள். ஏறி அந்த பெட்ரூம் ஜன்னல் வழியாக மெல்ல எட்டிப் பார்த்தாள்.

அங்கே

சஞ்சய் அண்ணா… பவித்ரா ஆண்ட்டியின்… கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தார். பவித்ரா ஆண்ட்டி கண்கள் மூடி சஞ்சய் அண்ணாவை தள்ளிவிட்டுவிட முயன்று கொண்டே இருந்தாள். ஆனால், எவ்வளவு போராடியும் அவளால் முடியவில்லை.

இதைப் பார்த்த ஜானு.. பதறிப்போனாள்.

இவள் ஷாக்கான சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த சஞ்சய் அண்ணா வெலவெலத்துப் போய் பவித்ரா ஆண்ட்டியின் கழுத்தில் இருந்து கையை பட்டென்று எடுத்தார். பவித்ரா ஆண்ட்டி அப்படியே மயங்கி மெத்தை மேல் விழுந்தார்.

சஞ்சய் அண்ணா தன்னைக் கவனித்து விட்டதைப் பார்த்த ஜானு வேகவேகமாக ஏணியில் இருந்து இறங்கி நண்பர்களைப் பார்த்து

“பிரண்ட்ஸ் எல்லாரும் வேகமா வாங்க வாங்க..”

என்று சொல்லிக்கொண்டே முதல் மாடிக்கு ஓடினாள் .

நண்பர்கள் எல்லாரும் இவள் ஏன் ஓடுகின்றாள் என்று புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு அவள் பின்னாடியே ஓடினார்கள்.

ஓடிச் சென்ற ஜானு, சஞ்சய் அண்ணா வீட்டுக் கதவுக்கு முன்பு நின்றாள்.

இவளைத் தொடர்ந்து ஓடிவந்த நண்பர்கள் எல்லாரும் இவள் அருகில் மூச்சு வாங்க வந்து நின்று ‘என்னாச்சு எதுக்கு இப்படி ஓடி வந்த’ என்று கேட்டார்கள்.

ஜானு கடகடவென்று நேற்றிலிருந்து நடந்த அத்தனையும் நண்பர்களிடத்தில் சொன்னாள்.

அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ‘ஐயோ ‘ என்று சொல்லிப் பதறினார்கள்.

“இப்போ என்ன பண்றது?”

ஆத்யா கேட்டாள்”தாத்தாவைக் கூப்பிடலாமா”

“வேண்டாம் அவருக்கு பத்து நாள் முன்னாடி தான ஹார்ட் சர்ஜரி பண்ணி இருக்கீங்க. சஞ்சய் அண்ணா தாத்தாவை அட்டாக் பண்ணிட்டாருன்னா என்ன பண்றது” என்றாள் ஜானு 

“சரி இப்போ என்னதான் பண்றது?”

“ஆத்யா அக்கா நீங்க போய் தாத்தாவோட போனை எடுத்து உடனே முகிலன் அங்கிளுக்குக் கால் பண்ணி இங்க நடந்த எல்லாத்தையும் சொல்லி அங்கிளை உடனே வரச் சொல்லுங்க .” ஜானு

“அங்கிள்தான் ஊருக்குப் போயிருக்காரே” ஆத்யா 

“அங்கிள் இன்னும் ஊருக்குப் போகல. இங்கதான் இருக்கார். அவர் மத்தியானம்தான் போவார். அம்மா சொன்னாங்க” ஜானு.

“அப்போ சரி”… சொல்லிவிட்டு ஆத்யா வேகமாக வீட்டுக்கு ஓடினாள்.

ஜானு யோசித்தாள்.

சரி. ஆனால், முகிலன் அங்கிள் வரும்வரை சஞ்சய் அண்ணா பவித்ரா ஆண்டியை ஏதும் செய்து விடக்கூடாது.

உடனே அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது

“ராகுல் உன்னோட பாக்கெட்ல ரெண்டு சாக்லேட் வெச்சிருந்த இல்ல. அத கொடு.”

ராகுல் அவசரமாக சாக்லெட்டுகளை எடுத்துக் கொடுத்தான்.

சாக்லேட்டைக் கையில் வாங்கிக்கொண்டு மெதுவாக பலத்த யோசனையோடு போய் சஞ்சய் அண்ணா வீட்டுக் காலிங்பெல்லை எட்டிக் குதித்து இரண்டு முறை அடித்தாள் ஜானு.

பின் …

கதவின் முன்.. ஜானு, ராகுல், ஆதினி, அஞ்சலி நான்கு பேரும் ரொம்ப ஒபிடியெண்டாக ஒன்றாக ஒட்டிக் கொண்டு நன்றாகப் புன்னகைத்தபடியே நின்று கொண்டனர்.

சஞ்சய் அண்ணா கதவைத் திறந்து அங்கு நின்றிருந்த எல்லாரையும் ஒரு முறை பார்த்துவிட்டு பின் ஜானு முகத்தைப் பார்த்து முறைத்தார்.

அப்போது ஜானு தன் கையில் வைத்திருந்த இரண்டு சாக்லேட்டுகளில் ஒரே ஒரு சாக்லேட்டை மட்டும் சஞ்சய் அண்ணாவின் முகத்துக்கு நேராக நீட்டி

“அண்ணா.. இந்தாங்க சாக்லேட். இன்னிக்கு என்னோட பர்த்டே..”

…….

“பவி ஆண்ட்டியை கூப்பட்றீங்களா அண்ணா. அவங்களுக்குச் சாக்லேட் கொடுத்துட்டு நான் பிலஸ்ஸிங்ஸ் வாங்கணும்..”

வீட்டுக்குள் ஒரு முறை திரும்பிப் பார்த்த சஞ்சய் அண்ணா முட்டிப்போட்டு ஜானுவின் உயரத்துக்கு நிகராக தரையில் உட்கார்ந்தார்.பின் 

“ஏய்…”

“சொல்லுங்க அண்ணா” அதே மாறாத ஒபிடியண்ட் புன்னகையோடு.

“நேத்து பார்க்கிங் ஏரியால ஒளிஞ்சு நின்னு பார்த்துட்டு இருந்தது நீதான..?”

“ஆமா அண்ணா நான் தான்” ஒபிடியன்ட் புன்னகை.

சஞ்சய் அண்ணா முறைத்தார்.

“ஜன்னல் வழியா என்னடி பார்த்த?”

ஒபிடியன்ட் புன்னகை.

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்த சஞ்சய் இன்னும் ஜானுவின் அருகே வந்து ரொம்ப மெதுவான குரலில் 

“ஏய் நீ பார்த்தத யார்கிட்டயாவது சொன்னேனா உன் கழுத்தைத் திருகித் தூக்கி வீசிடுவேன்”

“இப்போ பவி ஆன்ட்டி கழுத்தைத் திருகினிங்களே அதே மாதிரியா அண்ணா..”

“ஏய்..”

ஆத்திரத்தில் சஞ்சய் கையை ஓங்க.. சஞ்சயோட இரண்டு கையினையும் ஜானுவும் ராகுலும் இறுகப் பிடித்துக் கொண்டார்கள்.

அதற்குள் ஆத்யா ஓடி வந்தாள். அங்கே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.

“ஆத்யா அக்கா, டென்ஷன் ஆகாதீங்க. ஆதினி அக்கா, அஞ்சலி நீங்க ரெண்டு பேரும் போய் ஆண்ட்டி எப்படி இருக்காங்கன்னு பாருங்க.” ஜானு.

ஆதினியும் அஞ்சலியும் ஓடிப்போய் பவித்ரா ஆண்ட்டி என்ன ஆனாங்கன்னு பார்த்தாங்க.

பவித்ரா ஆண்ட்டி மயங்கி விழுந்து கிடந்தாங்க.

சஞ்சய் , ஜானு மற்றும் ராகுல் இருவரின் பிடியையும் உதறிக்கொண்டு உள் அறைக்கு ஓடினார். அப்போ ஆதினி பட்டென்று அறையின் கதவை அறைந்து சாத்தி தாழிட்டாள்.

ஆத்திரத்தில் கதவை எட்டி எட்டி உதைத்தார் சஞ்சய். திறக்க முடியவில்லை.

அந்த ஆத்திரம் அப்படியே ஜானு மேல் திரும்ப, ஆத்யா, ஜானு, ராகுல் மூன்று பேரையும் நோக்கி வந்தார் சஞ்சய்.

மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து வீட்டு வாசல் கதவைச் சாத்தி, வெளிப்பக்கம் இருந்த கைப்பிடியை இறுகப் பிடித்துக் கொண்டனர்.

சஞ்சய் அண்ணாவால் உள்ளே இருந்து கதவைத் திறக்கவே முடியவில்லை.

அதற்குள்..

முகிலன் அங்கிள் வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு சஞ்சய் வீட்டுக்கு ஓடி வந்தார்.

முகிலன் அங்கிளைப் பார்த்த மூன்று பேருக்கும் பெரு நிம்மதி உருவானது.

இறுகப் பிடித்திருந்த கதவை அப்படியே விட்டுவிட்டு

“அங்கிள் அங்கிள் அங்கிள்” என்று கத்திக்கொண்டு ஓடி வந்தனர்.

அப்போ

சஞ்சய் கதவைத் திறந்துகொண்டு ஆத்திரத்தோடு வெளியே வந்தார்.

அப்போது முகிலன் அங்கிளிடம் இருந்து ஒரு பலமான அறை கிடைத்தது சஞ்சய்க்கு.

முகிலன் அங்கிள் கோபத்தோடு சஞ்சய்யை முறைத்தார்.

“அங்கிள், பவித்ரா ஆண்ட்டி உள்ள இருக்காங்க” ராகுல்

சஞ்சயை வீட்டுக்குள்ளிருந்த இன்னொரு அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு எல்லாரும் ஓடிப்போய் பவித்ரா ஆண்ட்டியின் அறைக்கதவைத்தட்ட..

கதவு திறக்கப்படவில்லை.

அப்போது குழந்தைகள் எல்லாரும்”ஆதினி, நாங்கதான் கதவைத்திற” என்று கோரசாகக் கத்த..

ஆதினி கதவைத் திறந்தாள்.

முகிலன் அங்கிள் பவித்ரா ஆண்ட்டிக்கு முதல் உதவி செய்து ஆம்புலன்சுக்கும் போலிசுக்கும் ஃபோன் செய்தார்.

கொஞ்சம் நேரத்தில் ஆம்புலன்சும் போலீசும் வந்துவிட, பவித்ராவின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

ஆம்புலன்சில் இருந்த பவித்ராவிடமும் அவளின் பெற்றோரிடமும் போலீசார் ஏதோ பேசினார்கள்.

பின்.. 

ஆம்புலன்ஸ் சென்று விட்டது.

சஞ்சய்… கைது செய்து கொண்டுவரப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டான்.

வேனுக்குள் உட்கார்ந்து இருந்த அவன் ஜானுவைக் கொலைவெறியோடு பார்த்தான்.

குழந்தைகள் அமைதியாக நின்றிருந்தார்கள்.

போலீஸ் வேன் கிளம்பிப் போனது.

இத்தனை கலவரத்துக்குப் பின் அந்த இடமே இப்போது அமைதி ஆனது.

கொஞ்சம் நேரம் எல்லாரும் அப்படி அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை

பின் முகிலன் அங்கிள் குழந்தைகளை அத்தனை பெருமையாகப் பார்த்து”கொஞ்ச நேரத்தில எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிட்டிங்கடா கிட்ஸ். குட். குட்”

“தேங்க் யூ அங்கிள்”… கோரஸ்

“சரி. போய் விளையாடுங்க”

எல்லாரும் விளையாட ஓடினர். தூரத்திலிருந்து ஜானு மட்டும் அங்கிள் என்ன செய்கிறார் என்று திரும்பிப் பார்த்தாள்.

அங்கிள் பைக்கை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு அவரின் வீட்டை நோக்கி நடந்தார்.

அப்போ ஜானு, முகிலன் அங்கிளிடம் ஓடி வந்தாள்.

“அங்கிள்…”

“என்ன ஜானு.. ?”

ஜானு தன்னுடைய பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை எடுத்து முகிலன் அங்கிளிடம் நீட்டி

“எங்களுக்கு ஏணி ஏற சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்”

அந்த சாக்லேட்டைப் பார்க்கும்போது… முகிலன் அங்கிள் முகத்தில் அத்தனை பெருமிதம்.

முகிலன் அங்கிள் அதை வாங்கிக்கொண்டு ஜானுவின் கன்னத்தில் தட்டிக் கொடுத்துவிட்டு அவரின் வீட்டுக்குச் செல்லும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானு. 

பின்…

ஓடிப்போய் நண்பர்களோடு விளையாட்டில் இணைந்து கொண்டாள்.

( ஜானு.. தொடர்வாள்)

 ******

kritikadass86@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button