இணைய இதழ்இணைய இதழ் 102சிறுகதைகள்

தொடர்தல் – கே.ரவிஷங்கர்

சிறுகதை | வாசகசாலை

தெருவின் முனையில் இன்று வர்ஷினி நின்றதும் அவனும் நின்றுவிட்டான். அவனேதான். அதே 20-22 வயதுப் பையன்தான். வர்ஷினி காலையில் அலுவலக பஸ் ஏறச் செல்லும் வழியில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தக் காட்சி இது. அந்த வினாடியில் லேசான பயத்தில் உடம்பு முழுவதும் ஜிவ்வென்று ஆனது. முகத்தை கர்சீப்பால் துடைத்துக் கொண்டாள். அடுத்து ‘ஓ…. இது ஸ்டாக்கிங்..!’ மெலிதாக உச்சரித்ததும் அடி வயிற்றில் லேசாக பீதி ரேகை ஓடியது.

போன வாரம் அதற்கு முந்தைய வாரங்களில் பார்த்த அதே பையன்தான். அப்போது இது யதார்த்தமான அன்றாட நிகழ்வுகளில் ஒன்று என நினைத்து தன் நடையைத் தொடருவாள். ஆனால், இன்று இது தொடர்தல் இல்லை, தொடர்கதை; பையனின் பின் தொடர்தலில் யதார்த்தம் இல்லை. உள் நோக்கம் என்று இன்று அப்பட்டமாகத் தெரிய வந்தது. ஏன் என்னைத் தொடர்கிறான்? எதற்குத் தொடர்கிறான்?

எவ்வளவு நாளாகத் தொடர்கிறான். முதன் முறையாக பின்னோக்கி பார்த்த நாளை தீவிரமாக யோசித்தபோது மூன்று மாதம் இருக்கும் என்று தோன்றியது. உஸ்ஸ்ஸ் மூன்று மாதம் தொடர்ந்திருக்கிறானா? ஏதாவது விபரீதம் நடக்கப் போகிறதா? போலீசுக்கு போகனுமா? பதட்டம் ஏற்பட்டது. செய்திகளில் அடிபட வேண்டுமா? ரூட்டை மாற்ற வேண்டுமா? அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை.

நான் யாருக்கும் ஒரு தப்பும் செய்யவில்லையே? தினமும் காலையில் அலுவலக வோல்வோ பஸ் மெயின் ரோடில்தான் நிற்கும். வர்ஷினிக்கு அங்குதான் போர்ட்டிங் பாயிண்ட். 10-20 நிமிடம் ஆகும் அங்கு செல்வதற்கு. மார்க்கெட்டிங் ஹெட் என்பதால் சுறுசுறுப்பாக கிளம்பி விடுவாள். இவள் கீழ் ஆறு பேர் வேலை செய்கிறார்கள். இன்று கிளம்பியது சற்று தாமதம். பஸ்ஸை தவற விட்டாலும் பரவாயில்லை. யார் இவன்? தெரிந்தே ஆக வேண்டும். வளர விடக்கூடாது. இவனுக்கும் நல்லது; எனக்கும் நல்லது. இல்லாவிட்டால் வேலை ஓடாது.

இன்று தைரியமாக நின்று கவனமாகத் கிட்டத்தில் பார்த்தாள். அவன் அதை எதிர்பார்க்கவில்லை. இரண்டு அல்லது மூன்று நிமிடம் அசையாமல் (இன்ப அதிர்ச்சி?) நின்றுவிட்டு ஸ்டைலாகப் புன்னகைத்துவிட்டு வேகமாக மறைந்தான். முன் பக்கம் முதன்முறையாகப் பார்க்கிறானோ?

பையனுக்குப் பார்க்கும்படியான முகம். கண்ணில் விகல்பம் தெரியவில்லை. பொறுக்கி அல்லது அராத்து லுக் இல்லை. மீடியமான கலரில் இருந்தான். தலையில் அடர்ந்த முடி. லேட்டஸ்ட் ஃபேஷனில் ஸ்டைலாக வெட்டி செதுக்கி இருந்தான். முகத்தில் சீராக்கப்பட்ட டிரெண்டி தாடி. டீசண்டான உடையில் இருந்தான். கண்ணியமாகத் தெரிந்தான்.

பயத்தை விட்டொழித்து மிகவும் யதார்த்தமாக வெகு நேரம் யோசித்தாள். பின் தொடர்தல் இல்லை இது. அவன் தன்னை விரும்புகிறான் என்று உள்ளுணர்வில் உணர்ந்துக் கொண்டாள். பின் பக்கம் தொடர்ந்து வந்து விரும்புகிறான். பஸ் ஏறும் வரை. ஏன் எதிரில் இதுவரை தென்பட்டதில்லை? அவனுக்கு பயமா? இல்லை; கட்டாயம் ஒளிந்திருந்து பார்த்திருப்பான். இது அவளுக்கு முதல் அனுபவம். கசப்பான அனுபவம். ஒரு நாள் தன் விருப்பத்தைச் சொல்வான். வாட்ஸ் அப்பில் அனுப்புவான்.

சரி, இவனோட காதல்லாம் யார் கேட்டா? அதையாவது சொல்லித் தொலைத்திருக்கலாம். அன்னிக்கே நேர் எதிரே லைவ்வாக பிரச்சனை சால்வ் ஆகி இருக்கும். இப்படி ரெண்டுங்கெட்டான இருந்தா எப்படி? மூணு மாசமா அப்படி என்ன ஆராய்ச்சி பண்றான்? மனநிலை சரி இல்லாதவனோ? தான் உண்டு தன் வேலை உண்டுன்னு சிவனேன்னு இருந்தவளுக்கு இதென்ன புது இம்சை? எனக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. காதலுக்கெல்லாம் நேரம் ஏது? பிடிப்பதும் இல்லை. ஊரில் எவ்வளவு பேர் இருக்க இப்படியான என்னை ஏன் தொடர்கிறான்?

யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தன் நிலைக்கு வந்தாள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். வேறு விபரீதமாகிவிடக் கூடாது. வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து மூணு மாசம் ஆகி டெல்லியில் ஒரு பையன் செட்டாகி விட்டது. திருமண நாள் விரைவில் ஃபிக்ஸ் ஆகிவிடும். மறுபடியும் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள்.

பாசிட்டீவ் அப்ரோச்தான் பெஸ்ட். லெட் மீ மீட் ஹிம் அண்ட் கவுன்சில் ஹிம் ஜெண்ட்லி. பையா, கம் ஃபார்வேர்ட்…! அடுத்த வாரத்தில் முதல் நாள் திங்கள் கிழமை. வழக்கமாகப் பின் தொடர்ந்தான் அந்தப் பையன். வர்ஷினி மெதுவாக நடந்து அவன் எதிர்பார்க்காத சமயத்தில் விடுவிடுவென கிட்டத்தில் நெருங்கி, ’ஹலோ ஐ ஆம் வர்ஷினி’ என்று அழைத்து புன்னகையுடன் கைகுலுக்கித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

எதிர்பார்க்காமல் சற்று அதிர்ச்சியாகி சுதாரித்துப் புன்னகைத்தான். மென்மையான கையைக் குலுக்கியதும் மயிர் கூச்சம் வாரியிறைத்தது அவனுக்கு. கையை உதறிவிட்டு பதிலுக்கு பெயர் கூட சொல்லாமல் ஸ்டைலாகப் புன்னகைத்தான்.

”எதுக்கு டெய்லி என்ன ஃபாலோ பண்றீங்க ப்ரோ?”

“………………”

”பதில் சொல்லுங்க.இது ரொம்ப சீரியஸ் விஷயம் ப்ரோ. போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தா உங்க லைஃப் பாழாகும். அதனாலேயே நான் நேர்ல மீட் பண்ணி விஷயத்த சால்வ் பண்றேன். ஃபாலோ பண்றதெல்லாம் என் விஷயத்துல செட் ஆகாது ப்ரோ. இனிமே பண்ணாதீங்க ப்ரோ”

“சாரி மேடம். ஓகே மேடம்” – அவனது முகம் இறுகி, விருட்டெனத் திரும்பி வேகவேகமாக நடந்து மறைந்து போனான்.

அன்று போனவன்தான். அதற்குப் பிறகு பத்து நாளாக பின் தொடர்தல் இல்லை. ‘தேங்க்யூ ப்ரோ’ என்று பத்தாவது நாள் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். நிம்மதியாகவும் அதே சமயத்தில் ஏதோ இழந்தது போலவும் இருந்தது வர்ஷினிக்கு.

பத்து நாள் முடிந்து அதற்கு அடுத்த வாரம். அலுவலக வோல்வோ பஸ் நிற்கும் நிறுத்தத்தை நெருங்கும் போது மொபைல் ரிங் அடித்தது. அஸ்வின்குமார் டெல்லியில் இருந்து.

“ஹாய் அஸ்வின்”

“ஹாய் வர்ஷினி”

“எப்படி இருக்க?”

”சுகம் சுகம் சுகம் வர்ஷ்”

“நானும் பரம சுகம்”

“குட்”

“ஓகே. பிளான் பண்ணா மாதிரியே சாயந்திரம் ஆறு மணிக்கு மீட் பண்ணலாம் இல்ல? இன்னிக்கு காலைல 11 மணிக்கு பிளைட் சென்னைக்கு வர்து இல்ல”

“எதுக்கு ஆறுமணிக்கு? இப்பவே மீட் பண்ணிட்டோமே”

அருகில் குரல் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பி பார்த்தாள்.

’ஓ அஸ்வின் யூ….!’

உடம்பெல்லாம் சந்தோஷம் பூத்து கண்கள் ஆச்சரியத்தில் அதிர்ச்சியில் விரிய சற்று வாய் பிளந்து பார்த்தாள். குறுந்தாடியோடு ஜீன்சும் கலர் ஷர்ட்டும் அணிந்து ஸ்மார்ட்டாக வர்ஷினி முன் நின்று புன்னகைத்தான் அஸ்வின். வருங்கால கணவன். முதன்முறையாகப் பார்க்கிறாள்.சற்று உறைந்தாள்.

”ஓ காட் வாட் எ லிட்டில் ஹாரர் சர்ப்ரைஸ்” மார்பில் கைவைத்து பெருமூச்சு விட்டாள்.

அஸ்வின் வாய்விட்டு சிரித்தான். ஆண்மை பொங்கி வழிந்தது.

“நா நேத்திக்கே சென்னை வந்துட்டேன். வருங்கால மனைவியை நேரில் பார்க்க அவசரம். இன்னிக்கு காலைல உங்க வீட்டு வந்தா நீ கொஞ்ச தூரத்துல நடந்து போயிட்டு இருக்க. கொடுத்து வச்சுருக்கேன். இஸ்ஸ்ஸ்ஸ்…வாட் எ கிரேஸ்ஃபுல் அண்ட் சோல்ஃபுல் வாக்! பாடி லேங்குவேஜ் யூனிக்கா இருக்கு. அக்கம் பார்க்கறது தலைய திருப்பறது.. அப்பறம் நடக்கறது.. பாசாங்குத்தனம் இல்லாம ஸ்பாண்டேனியஸ் லாங்குவேஜ். எல்லாம் தேவதை மாதிரி இருக்கு. கூட மேட்சிங் டிரஸ்” – வர்ஷினிக்கு புல்லரித்தது. வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தாள்.

”நா ரெண்டு வாட்டி தலய திருப்பினேன். ஆனா, பின்னாடி நீ வர்றத கவனிக்கல அஸ்வின்”

”நோ பிராப்ளம். அது ஏஞ்சலோட குணம்”

“அடேங்கப்பா…ஓவர் பில்ட் அப்பா இருக்கு. போதும் போதும். எனக்கு ஒரு வாரம் பசி எடுக்காது”

“எஸ், சத்தியமா உனக்கு இருக்கு. பில்ட் அப் கொடுக்கல வர்ஷினி. நோ flirting. மதர் பிராமிஸ்.ஆனா…….” இழுத்தான்

வர்ஷினி சஸ்பென்சாகி அவனைப் பார்த்தாள்.

”இதெல்லாம் ரசிப்பதற்கு தனி ரசனை வேண்டும். கூடப் பிறந்தே இருக்கும் இந்த ரசனை குணம். பிராமிஸ் வர்ஷ். எல்லாரும் ரசிக்க முடியாது. ஐ ஆம் கிஃப்ட்டட் வித் தட். அதே சமயத்துல ரசிக்கும்படியாகவும் ஆள் இருக்கனும். ரேர் காம்பினேஷன்”

வர்ஷினி புன்னகையை வாயில் அடக்கி அமைதியானாள். கொஞ்சம் மகிழ்ச்சியில் கனைத்துவிட்டுத் தொடர்ந்தான்.

”என்னாச்சு திடீர்னு சைலண்ட் ஆயிட்ட? நாந்தான் ஃபஸ்ட் பெர்சனா இருக்கனும். இவ்வளவு ரசனையா ஒரு நாள்ல ரசிக்கக் கூடியவன் இருப்பானா?”

“ஓ கிரேட் அஸ்வின். எனக்கு எப்படித் தெரியும். ரசிச்சவன் சொன்னதானே தெரியும்.” – சற்று நெருடலோடுப் புன்னகைத்தாள்.

-ravishankark57@gmail.com  

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button