
தொட்டப்பன் எல்லா வகையிலும் மனதுக்கு நிறைவான படமாக அமைந்தது. வேம்பநாட்டின் காயல் நடுவே உள்ளங்கை ரேகைகள் போல வேயப்பட்ட ஒத்தையடிப் பாதைகள் கொண்ட அழகிய சிற்றூர் தான் கதைக்களம், அந்த ஊரின் இரண்டு திருடர்களான இத்தாக் (விநாயகன்) மற்றும் ஜோனப்பனின் ( திலீஷ் போத்தன் ) கதையாக துவங்குகிறது திரைப்படம், அது மட்டுமல்லாது பல கிளைக்கதைகள் இதனூடே ரம்மியமாக இழையோடும். படத்தின் துவக்கமும் முடிவும் நீரிலேயே அழகாய் அமைந்திருந்தது.
இந்த ஜோடித் திருடர்களுக்கு ஒரு தனித்துவம் உண்டு. இவர்கள் அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள பள்ளிகளில் (தேவாலயம் )மட்டும் கன்னம் வைப்பார்கள், இரவோடு இரவாக அந்த தொண்டிமுதல் காயல் நீரின் ஆழத்தில் புதைக்கப்பட்டு மறு வாரமே கைமாறி வெளியூரின் கள்ளச்சரக்கு கொள்முதல் வியாபாரியிடம் சென்று சேர்ந்து விடும்.
திருடன் ஜோனப்பனின் ஒரு வயது பெண் குழந்தையான சாராவுக்கு ஞானஸ்தானம் செய்ய வீட்டில் முடிவாகிறது. தன் உயிர் நண்பன் இத்தாக்கிற்கும் கள்ளுக்கடை நடத்தும் பெண்மணியின் ஒரே மகளை மணமுடிக்கப் பேசிவைத்து இருவரும் பழகிப் பேச உதவியும் செய்கிறான் ஜோனப்பன்,
இத்தாக் தான் தன் மகள் சாராவின் ஞானஸ்தானத்தின் போது தலையைத் தாங்கிப் பிடிக்க தகுதி கொண்ட “தொட்டப்பன்” என்று ஏகமனதாக முடிவு செய்து அகமகிழ்கிறான் ஜோனப்பன்.
எதிர்வரும் இரட்டை விஷேசங்களின் செலவுக்கு வேண்டி ஒரு தேவாலயத்தில் திருடிய பெரிய கனமான தங்க குரிசை இருவரும் நீரினடியில் இறங்கி ஒளித்துவைத்துவிட்டு அன்றிரவு கரையேறுகின்றனர், விடியலில், வழமையான வியாபாரிக்கு அந்த திருட்டுப் பொருளைத் தராமல் வேற்றூரின் புதிய வியாபாரிக்கு இரட்டை மடங்கு விலை பேசுகிறான் தோழன் ஜோனப்பன்,
அது கடைசியில் கோளாறாகிறது, மகளின் ஞானஸ்தான தினத்தில் வேற்றூரான் ஒருவனால் சரக்கை நீரில் இருந்து வெளியே எடுத்து விற்க கையோடு அழைத்துச் செல்லப்பட்ட ஜோனப்பன் கடைசிவரை வீடு திரும்பவில்லை,
அவன் உடலும் வீட்டாருக்கு கிடைக்கவில்லை, என்ன ஆனான் என்று யாரும் அறியவில்லை, அவனைக் கூட்டிச் சென்ற மொய்தீன் கண்ணு ராவுத்தரை இத்தாக் இன்றும் கொல்லத் தேடுகிறான், அவனும் பல ஆண்டுகளாக சிக்கவில்லை.
ஜோனப்பனின் மனைவி மேரி கணவன் காணாமல் போனது முதலே யாரிடமும் பேசுவதில்லை, தன்னையே வீட்டுச் சிறை வைத்துக் கொள்கிறாள், இத்தாக்கோ ஜோனப்பன் தனக்காகப் பேசி வைத்த காதலியைத் துறக்கிறான், சாராவைத் தன் மகளாகவே தன்னுடன் வீட்டிற்குக் கொண்டு சென்று வளர்க்கிறான், அதுவும் ஒரு காட்டுச் செடியைப் போன்றே வளர்க்கிறான்.
படத்தின் துவக்கத்தில் மையக் கதை சொல்லப்பட்டு முக்கிய கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகமான பின் இத்தாக்கை அங்கு காணவில்லை, அவன் ஒரு திருட்டு வழக்கில் பிடிபட்டு சிறை சென்றுள்ளான், அங்கே வளர்ந்த சாராவை தான் நாம் பார்க்கிறோம்,
பதின்ம வயதுப் பெண், முரட்டு கருங்குதிரை போன்ற பளபளவென மேனியும், திரட்சியும் கொண்டவள், அழகு மிளிரும் கண்கள், கூர் நாசி, ஊராரிடம் யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? காரியம் சாதிக்க வேண்டும் என்ற தெளிவு, கூடவே நிறைய ஏழ்மை, அப்பனுக்கு ஒப்பான இத்தாக் சிறையில் இருப்பதால் வயிற்றுப்பாட்டுக்கு இவள் வீட்டு வேலை செய்கிறாள்.
பள்ளியில் படித்துக் கொண்டே பள்ளியின் சத்துணவு கூடத்தில் சமையல் வேலை செய்கிறாள். ஊரின் ஒரே சாயாக்கடையில் பசிக்கு சாப்பிட்டுக் கொள்கிறாள். ஊரின் ஒரே சிறிய மளிகைக் கடை அதை நடத்துபவர் அத்ருமன் என்ற பார்வையற்ற காகா.
அவர் கடையில் சிறியதாக தேன்மிட்டாய் போன்றவற்றை பாட்டில் மூடித் திறந்து திருடுவாள் சாரா. அவரின் பூனை அப்போது கத்தும். அது கடையில் பொருள் திருடு போவதற்கான சமிக்ஞை. அத்ருமன் அதைத் தெரிந்து கொண்டாலும் சாராவை மட்டும் கண்டு கொள்வதில்லை.
அன்று சிறையில் தண்டனை காலம் முடிந்து ஊருக்குள் வருகிறான் இத்தாக். சாயாக்கடையின் புழக்கடையில் வைத்து போர்த்தி, பூட்டி விட்டுப் போன தன் ஜாவா மோட்டார் சைக்கிளை ஒரே உதையில் கிளப்பி ஊரை வலம் வரத் துவங்கி விட்டான், இப்போது இத்தாக்கிற்கு வலது கையாக ஒரு இஸ்லாமிய இளைஞன் இஸ்மு சேர்ந்து கொள்கிறான்,
ஊருக்குள் நடக்கும் பிரச்சனைகளுக்கு, அடிதடிகளுக்கு, வேற்றூர் தேவாலயத்தில் திருடுவதற்கும் இத்தாக்கிற்கு உதவியாக இருக்கிறான் இஸ்மு. இப்போது இத்தாக்கின் ஜாவா மோட்டார் சைக்கிளை எடுத்து ஓட்டும் அளவுக்கு அவனிடம் நெருங்கிவிடுகிறான். ஒருமுறை உள்ளூர் பணக்கார பூர்ஷ்வா தெம்மாடி ஒருவன் தமிழ்க்கார பணிப்பெண் சிறுமியை வன்புணர்ந்து கிழிந்த நாராக்கி விட, இவர்கள் அங்கே சென்று உதைத்து அவன் விதையையே அறுத்து வருகின்றனர்.
இஸ்மு இஸ்லாமியன் என்றாலும் அவனைத் தன் மருமகனாகவே ஏற்க எண்ணுகிறான் இத்தாக். இஸ்முவின் வாப்பா அவனை சிறுவயதிலேயே விட்டு ஓடி விட்டார். அவர் பைத்தியமாகி விட்டார் என மட்டும் தெரியுமாம், இன்னும் நம்பிக்கையை விடாத இஸ்மு வாப்பாவை தேடிக் கொண்டேயிருக்கிறான்.
அன்று நடுநிசியில் வல்லத்தில் சாராவைக் கூட்டிக் கொண்டு போய் தன் புதிய கூட்டாளிப் பையன் இஸ்முவைக் காட்டுகிறான். சாரா இத்தாக் என்ன சொன்னாலும் கேட்பாள். அவள் ஒருமுறை துருபிடித்த இரும்புத் துண்டு ஏறி சீழ் கோர்த்து ஜுரத்தில் வீழ்ந்தவள் சாகும் எல்லைக்குப் போய் விடுகிறாள்.
அப்போது இத்தாக், ” மகளே உயிரை விட்டு விடாதே,பிடித்து நில்” என்று அதட்ட ஜுரம் மீண்டவள், இப்போது “இஸ்முவைப் பற்றிக் கொள்ளடி பெண்ணே… இவன் உன்னை வைத்துப் போற்றுவான். எனக்கு எத்தனை நாள் திருடுவது, சிறை செல்வது என்று கழியும் எனத் தெரியாது ” என்கிறான், இப்படித்தான் அவள் இஸ்முவைக் காதலனாக வரிக்கிறாள்.
இவ்வூரின் தேவாலயத்தின் பள்ளி அச்சனுக்கு ( மனோஜ் கே ஜெயன் ) இத்தாக்கின் மீது தனிப்பிரியம் உண்டு,
அவர்களுக்குள் நடக்கும் இந்த உரையாடல் சுவாரஸ்யமானது
இத்தாக்: அச்சா நான் ஒன்று கேட்கவா? என்னை ஏன் நீங்கள் திருடாதே என எப்போதும் தடுத்ததேயில்லை?
பள்ளியில் அச்சன்: (இத்தாக்கை ஆச்சர்யமாகப் பார்த்து சிரிக்கிறார்) எந்த உடமைக்கும் உடமைப்பட்டவன் கர்த்தராகிய இயேசு கிருஸ்து தெய்வம் தம்புரான் தானடா, மனிதனுடையது என உலகில் ஒன்றுமேயில்லை என்கிறார்.
படத்தில் முக்கிய கிளைக்கதை இது. அத்ருமன் மற்றும் அவரின் இளம் மனைவி, அவர் பாசமிகு பூனை ஒன்றைக் கடை வாசலில் வைத்து வளர்ப்பார். கண் தெரியாத தனக்கு மனைவி ஒரு ஊன்று கோலாக இருப்பாள் என நினைத்து மணமுடித்தால் அவள் அக்கம்பக்கத்து இளைஞர்க்கு கண்ணில் வலை வீசி வீட்டுக்கு தருவித்து சுகிக்கிறாள்.
அவளைத் தான் கண்காணிக்கிறேன் என உணர்த்த வேண்டி அத்ருமன் காகா அவளுக்கு அத்தர் வாங்கித் தருவார். அதே அத்தர் மணம் இளைஞர் யார் மீதாவது வீசினால் கையும் களவுமாய் பிடிக்கலாம் என்று..ஆனால், அவள் அதைப் பூசாமல் அத்தர் தீர்ந்து விட்டது என புளுகுவாள். அவள் அருகாமையை காதில் உணர அவளுக்கு கால் கொலுசு வாங்கித் தருவார். அவள் அவை அறுந்து விட்டதென புளுகுவாள்.
அவருக்கு அந்தப் பூனை அப்படி உதவும், கடையில் யாரேனும் வாடிக்கையாளர்கள் கன்னம் வைத்தால் இப்பூனை மெல்ல கத்தும். அதை வைத்து அவர் நடந்த மோஷனத்தை உணர்வார். வீட்டுக்கு யாரேனும் ஆடவர் வந்தாலும் இது இவருக்கு கத்தி உணர்த்தும்.
இப்போது இஸ்முவும் சாராவும் ஊரில் ஜோடியாக வலம் வருகின்றனர், இந்தக் காதலுக்கு இஸ்முவின் வாப்பா வடிவில் சிக்கல் வருகிறது. போலிசார் காட்டிய அனாதைப் பிணத்தைச் சென்று பார்த்து வந்த இத்தாக் , இஸ்முவை வெறுக்க ஆரம்பிக்கிறான். என் மகள் சாராவை நீ மறந்து விடு என முகத்தில் அடித்தது போல சொல்கிறான். இஸ்முவுக்குக் காரணம் புரியவில்லை. விடையும் கிடைக்கவில்லை. ஊரின் மளிகைக் கடைக்காரர் அத்ருமன் மனைவி இப்போது இஸ்முவை வீட்டினுள் அழைத்து சுகிக்கிறாள்,
அத்ருமன் யாரோ வீட்டுக்குள் வந்து போகிறான் ஆனால் நம்மால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை என மனம் வெம்புகிறார். வீட்டினுள் நடக்கையில் அவருக்கு ஒரு தாயத்து தட்டுப்பட, அதை பாதுகாத்தவர், இத்தாக்கிடம் தருகிறார். இவனை நீ கண்டுபிடிக்க வேண்டும். உன் கண்களை என் கண்களாக நான் நம்புகிறேன் என்கிறார். அது இஸ்முவின் தாயத்து என்று கையில் வாங்கியதுமே தெரிந்து விடுகிறது இத்தாக்கிற்கு,
அன்று இரவு இத்தாக் குடிபோதையில் காயல் கரையில் நடந்து வீடு திரும்புகையில் அங்கே காத்திருந்த இஸ்மு இத்தாக்கிடம், ” ஏன் எனக்கு சாராவை திருமணம் செய்து தர மறுக்கிறாய்?” எனக் கெஞ்ச, உன் இறந்து போன அப்பன் மொய்தீன் கண்ணு ராவுத்தர் தான் நான் இத்தனை நாள் கொல்லத் தேடியவன். என் நண்பனைக் கொன்றவன்.
அவன் மகனுக்கு தெரிந்தே என் மகளைக் கட்டித் தருவது என் நண்பனுக்கு செய்யும் துரோகம் என்று அவனை போகச் சொல்கிறான். அவன் பிடிவாதமாகக் காலைப் பிடித்துக் கெஞ்ச மிதிக்கிறான், முகத்தில் அறைகிறான். அவனைப் பொருட்படுத்த எண்ணாது வீடு திரும்ப நடக்கையில் பின்னால் ஓடிச் சென்று கால் பிடிப்பது போல வந்து முதுகில் கத்தியை இறக்குகிறான். இத்தாக் சுதாரிப்பதற்குள் வயிற்றில் கத்தி இறங்குகிறது. மண்ணில் மல்லாக்கத் தள்ளி நிறைய கத்திக் குத்துகள் இறங்குகிறது. மேலே நிலவு சாட்சியாக இதைப் பார்த்தபடி இருக்கிறது.
இனி என்ன ஆகும்? இயக்குனர் இதை அழகான சிறுகதை போலத் தான் கையாண்டு ஒவ்வொரு காட்சியையும் இழைத்திருந்தார்,
காட்டுச் செடியாக வளர்ந்த சாராவுக்கு நிர்கதியாக நிற்பது ஒன்றும் புதிதல்ல. அவளுக்கு ஆறுதல் இப்படி சொல்லுவார் பள்ளியில் அச்சன் , “மகளே சாரா, மரணத்தைக் கண்டு நீ பயப்படாவிட்டால் உன்னால் எதுவும் சாதிக்க முடியும்.”
படத்தில் கவிதையான கதாபாத்திரங்கள் மற்றும் இரண்டு பேர் உண்டு. நிறைவேறாக் காதல் ஜோடிகள் இருவர், வெவ்வேறு வாழ்க்கைத் துணையை ஏற்றிருப்பார்கள், அவர்களுக்கு இடையே இந்நாளின் வார்த்தை பரிமாற்றம் , குசல விசாரிப்புக்கள் இத்தாக்கின் வழியே நடக்கும்.
ஒரு சிறிய கிருத்துவ தீவு கிராமத்தின் அழகைப் பறவைப் பார்வை கோணங்களில் அப்படி அழகாக அள்ளி வந்துள்ளது கேமரா. படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ்ராஜன், கேரளா கஃபே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இது அவருக்கு come back படமாக அமைந்திருக்கிறது. மலையாளத்தில் சிறந்த ஒளிப்பதிவிற்கான படம் என்று நினைவு கூறப்படும்படியான பணி.
இப்படத்தின் தந்தை மகள் கதாபாத்திர கட்டமைப்பு எனக்கு இயக்குனர் பரதனின் அமரம் படத்தின் அழகியலை, அதன் உணர்வுபூர்வமான தருணங்களின் நேர்த்தியை , தாக்கத்தைத் தந்தது. இந்த டிஜிட்டல் திரையுலகில் இப்படிப்பட்ட அழகியலுடன் இயங்கும் படக்குழு மிஞ்சி இருப்பது மனதுக்கு இதமாக இருந்தது.
இப்படத்தில் அறிமுகமான லீலா கிரீஷ் குட்டன் இசையும் படத்தின் பிடிமானமுள்ள ஓட்டத்திற்கு பக்க பலமான காரணி.
இயக்குனர் திலீஷ் போத்தன் மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டிமுதலும் திருக்ஷாஷியும் போன்ற அற்புதமான படைப்புகளைத் தந்தவர். அவர் விநாயகனுடன் நடிப்பில் இணைந்து நீரடித் திருடனாக கலக்கியிருக்கிறார். படத்தை காணத்தவறாதீர்கள்.
—