சிறுகதைகள்
Trending

இரவே முதலிரவே!

பொன் விமலா

‘’ காலையில தலை குனிஞ்சவ.. இன்னும் கூட நிமிராம கெடக்கா. அடியேய் அநியாயத்துக்கு இப்டி வெட்கப்படாதடி. கொஞ்சம் நிமிந்துதான் பாரேன்’’

“புதுப்பொண்ணுல்ல …புது அனுபவம். இன்னைக்கு மட்டும்தான் மேடம் சீனெல்லாம்…. நாளையில இருந்து பாருடி… மாப்பிள்ளதான் நகத்தைக் கடிச்சிட்டு ஓடப்போறார்’’

“ ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா ..ப்ளீஸ்’’ மணப்பெண் வளர்மதி தன் தோழிகள் இருவரையும் அதட்டினாள்.

“ ஏய் ஃபர்ஸ்ட் நைட்டுன்னா இப்டிதான் டென்ஷனா இருக்குமாடி?’’

“அடச்சீ… அடுத்த மாசம் உனக்கும் கல்யாணம் ஆகும்ல.. அப்ப நீயே தெரிஞ்சிக்க’’ தோழிகள் இருவரும் முதலிரவு அறைக்கு வெளியே நின்றுகொண்டு அதன் சுவாரசியத்தை விவரித்துக் கொண்டிருந்தார்கள்.

“வளர் கூட படிச்ச புள்ளைங்க யாருமே கல்யாணத்துக்கு வரக் காணமே.. என்னவா இருக்கும்?’’

“அவதான் சொன்னாளே… இவ்ளோ சீக்கிரம் கல்யாணம்னு சொல்லி பத்திரிகை நீட்டினா கேலி பேசுவாங்கன்னு யாரையும் கூப்பிடலைனு.’’

“இதென்ன கதையாருக்கு… இருவத்தோரு வயசுலதானே கல்யாணம் பண்ணிக்கிறா. நானெல்லாம் பாரு.. பத்தொன்பதுலயே கட்டிக்கிட்டு புள்ளயப் பெத்துட்டேன்’’

“அடியே உன் சாமர்த்தியம் யாருக்கு வரும். சடங்குக்குக் கூட்டிட்டுப் போவோம் வா”
தோழிகள் இருவரும் வளர்மதியை சாந்திமுகூர்த்த சடங்குக்கு அழைத்துச் சென்றார்கள்.
என்றைக்கும் இல்லாத அச்சம் வளர்மதிக்கு.

“தண்ணி ஊத்தணும். பாவடையை மட்டும் கட்டிட்டு வந்து உட்காரு வளரு’’

“என்னது பாவாடையை மட்டுமா? இவங்க எல்லாரும் சேர்ந்து மஞ்சத் தண்ணியை ஊத்துனா என் ரகசியம் எல்லாம் தெரிஞ்சு போயிருமா?… இவளுங்களுக்கு தெரியாட்டியும் , கணேஷ் எப்படியும் இன்னைக்குக் கண்டுபிடிச்சிருவான். என்னைப் பத்தின ரகசியம் தெரிஞ்ச முதலும் கடைசியுமான ஆளா அவன் இருக்கப் போறானா? இல்ல ஊரெல்லாம் சொல்லி என் ரகசியத்தை அம்பலத்துல ஏத்தப் போறானா தெரியல. பாவாடையை அக்குள் வரைக்கும் இறுக்கிக் கட்டிட்டுப் போய் தண்ணி ஊத்துற இடத்துல உட்கார்ந்துருவோம். இந்த இருட்டு ராத்திரியில யாருக்கு என்ன தெரிய போவுது. ஆனா இது தான் நான் செய்ற கடைசி திருட்டுத்தனமா இருக்கணும். ‘’ வளர்மதி தனக்குள் பேசிக்கொண்டே பாவாடையை மார்புக்கு மேல் கட்டிக் கொண்டு நீராட்டும் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“மொத ரெண்டு சொம்பு நாத்தனார்காரிங்க ஊத்துங்க. அப்புறம் அண்ணிங்க. பெறவு புள்ளப் பெத்த பெருசுங்க, தோழிங்கன்னு வரிசையா வாங்கடி..’’ கூட்டத்தில் இருந்த அத்தாச்சி ஒருத்தி அங்கே அதிகாரம் எடுத்துக்கொண்டு அதட்டிக் கொண்டிருந்தாள்.
நீராட்டும் சடங்கு முடிந்து தூய வெண்பட்டை உடுத்தினார்கள் வளர்மதிக்கு. கசங்கிய வெண்பட்டும் அதில் படிந்த கறைகளும்தான் முதலிரவு சுமுகமாக நடந்ததற்கு சாட்சி என்று யாரோ கிசுகிசுத்தது வளர்மதியின் காதில் விழுந்தது.

“இதெல்லாம் இப்போதைக்கு அவசியமற்ற கிசுகிசுக்கள் . அதெல்லாம் நடக்க வேண்டுமே என் வாழ்வில். கணேஷ், `ஒருமுறை நீ செம கட்டைடி’னு சொன்னானே… எதுக்கு அவன் கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி போன் போட்டு சொல்லி இருக்கணும். அப்ப அவனுக்கு நான் செம கட்டையா இருந்தா தான் பிடிக்கும் போல… ஐயோ ….இன்னைக்கு ராத்திரி என்ன ஆகப் போகுதோ…’’ பக்பக்கென இதயம் துடிப்பதை நிறுத்த வழியில்லாமல் ஓரக்கண்ணில் ஈரம் வார்த்துக் கொண்டிருந்தாள் வளர்மதி.

“வளர்… பயப்படாத… லைட்டா தான் வலிக்கும். அதெல்லாம் மாப்பிள்ளை பாத்துக்குவாரு. நீ பயப்படாம இருக்கணும். சரியா?’’ காதில் வந்து ரகசியம் ஓதினாள் தோழிப் பெண்.

“சந்தனம் கரைச்சாச்சு. நலங்கு வைக்க கூட்டியாங்க’’ என்றாள் கொழுந்தியாள். வெண்பட்டுப் புடவையில் மெதுவாக நடந்து வந்தாள். அவளுடைய எடுப்பான பின்னழகையும் முன்னழகையும் பார்த்துப் பொறாமைப்பட்டாள் இன்னொரு தோழி.

“நலங்கு முடிஞ்சதும் பொண்ணை மாடியில இருக்க ரூமுக்கு கூட்டிட்டுப் போயிருங்க. நாங்க மாப்பிள்ளைக்கு நலங்கு வச்சு மூகூர்த்த ரூமுக்கு அனுப்பி வைக்கிறோம். நாங்க சொன்னப்பறம் பொண்ணை அழைச்சிட்டு வந்தா பால் சொம்பு குடுத்துவிடலாம்…நீங்க அதுக்குள்ள பொண்ணை கூட்டிட்டுப் போயி சீவி சிங்காரிச்சு வைங்க.’’ மாப்பிள்ளை வீட்டுப் பெண் என்ற வகையில் ஆரத்தித் தட்டில் கற்பூரம் ஏற்றி வைத்து திருஷ்டி சுத்தப் போனாள் அந்த குடும்பத்தின் மூத்த மருமகள்.
மங்கல நீராட்டியதில் ஈரமாகியிருந்த தலையைத் துவட்டி காய வைத்துக் கொண்டிருதாள் வளர்மதி. இடுப்பு தொடும் நீள முடி. குறைவில்லாத பின்னழகை உரசுவது போல அழகான பின்னல் போட்டு மல்லிகை வைக்க திட்டமிட்டார்கள். குண்டு மல்லிகைச் சரத்தின் வாசம் என்னவோ செய்கிறது வளர்மதிக்கு.

“வளர்… உனக்கு இப்ப வயிறு வலிக்குதா?’’

“ஆமா பயத்துல அடிவயிறே கலக்கிட்டு வருதுதான்… ஆனா அதை இப்ப நான் எப்படி சொல்றது?’’ – மௌனம் காத்தாள் வளர்மதி. அது வெறும் மௌனம் அல்ல. பேசவியலா வார்த்தைகளின் அடர்ந்த ரணம் என்பது அவளுக்கு மட்டும்தானே தெரியும்.

“ எனக்கெல்லாம் கழுத்துல தாலி ஏறுன கொஞ்ச நேரத்துகெல்லாம் வயித்து வலி வந்துருச்சு . அதுவும் அடி வயிறு வின்னு வின்னு வலிச்சது. இன்னைக்கு ராத்திரி என்னெல்லாம் நடக்கப் போகுதோனு செம ஃபீலாகிட்டேன்பா… உனக்கும் அப்டி இருக்குதானே?’’ கீச் கீச் குரலில் பேசி வளர்மதியை கிக் ஏற்ற நினைத்தாள் தோழி.

“இவ வேற வெறுப்பேத்துறாளே’’ என்பது போல் இருந்தது வளர்மதிக்கு.

“நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்’’

“ம்ம்ம் …சரிடி’’

“சொல்லாமல் கொள்ளாமல் இப்படியே இங்கிருந்து தப்பித்து விடலாமா? ஓடிப் போய்விட்டால் அசிங்கமா? இல்லை எங்கேயும் ஓடாமல் இந்த ரகசியத்தை ஒளித்து வைத்திருப்பது அசிங்கமா? மனக்குழப்பம் வெடிக்கிறது. “அன்னைக்கு ஹாஸ்டல்ல அப்படி ஒரு சம்பவம் நடக்காம போயிருந்தா இந்நேரம் என் காலேஜ் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணி இருப்பேன். அது எவ்ளோ பெரிய அசிங்கம். அன்னிக்கே இந்த கேவலமான பழக்கத்தை நான் விட்டிருக்கலாம். இப்ப தலையில அடிச்சிக்கணும் போல இருக்கு. ” முகத்தை தண்ணீரால் வாரி இறைத்து அழுது தீர்த்தாள்.

குயின் ஹாஸ்டல் மூன்றாவது மாடியில் 42 ம் நம்பர் ரூம் வளர்மதிக்கு. எல்லோரும் துணி துவைத்து விட்டு மொட்டை மாடியில் காயப் போடப் போகும் போதுதான் பரஸ்பரம் கலாட்டா செய்து பேசிக் கொள்வார்கள். வளர்மதி, கல்பனா, பூர்ணிமா மூவரும் பக்கத்துப் பக்கத்து அறைகள். தனி அறைகள் என்பதால் என்னோட ஐலைனர் காணோம், ஹேர்கிளிப் காணோம், ஜட்டியைக் காணோம், பாடியைக் காணோம் என்கிற பிரச்சனைகள் அதுவரை அவர்களுக்குள் வந்ததே இல்லை. இத்தனைக்கும் மூவருக்கும் ஒரே சைஸ் உள்ளாடைகள் கனக்கச்சிதமாகப் பொருந்திப் போகலாம். சொல்லி வைத்தாற்போல் ஒரே சைஸில் இருந்தார்கள். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தார்கள். ஒரே ஒரு பையனைக் காதலிக்கவில்லை என்பதைத் தவிர்த்து அவ்வளவு ஒற்றுமைகள். குயின் ஹாஸ்டலின் இந்த முடிசூடா இளவரசிகளின் ஒற்றுமை வேற்றுகிரக அறைவாசிகளை என்னவோ செய்திருக்க வேண்டும் தான். வளர்மதி நடுத்தர குடும்பத்துப் பெண். சிறிய நகரமொன்றில் இருந்து சென்னையில் வந்து தங்கிப் படிக்கிறாள். பேச்சுலர் டிகிரியை முடித்ததும் அடுத்தடுத்து மாஸ்டர் டிகிரி, வேலை என்று சென்னையிலேயே செட்டிலாகிவிட கனவு கண்டவள். ஒரே ஒரு சம்பவம் தான் அவளை இப்போது முதலிரவு அறையில் தள்ளிவிட்டிருக்கிறது.

என்றைக்கும் இல்லாமல் ஹாஸ்டல் வார்டன் எல்லோரிடமும் துப்புத் துலக்கிக் கொண்டிருந்தார்.

“இது ஏதோ ஃபர்ஸ்ட் டைம் நடக்குதுன்னா பரவால்ல. இந்த ப்ளாக்ல இருக்கிற யாரோதான் இந்த வேலையை பாத்திருக்கீங்க. ஒழுங்கா உண்மையை சொல்லிடுங்க. இப்ப இந்த சில்ற வேலையை பண்றவங்கதான் நாளைக்கு வேற ஏதாச்சும் காஸ்டிலியான பொருளைக் கூட திருடலாம். என்கிட்ட தனியா வந்து கூட சொல்லிடுங்க. நான் சீக்ரெட்டா வச்சிருப்பேன்.’’

பன் கொண்டை போட்ட அந்த வார்டன் தலையை ஆட்டி ஆட்டிப் பேசுவதைப் பார்த்ததும் சக ரூம்மேட்டுகளுடன் சேர்ந்து இமிடேட் செய்து சிரித்தார்கள் வளர்மதி அண்ட் கோ.

“மேடம் நீங்க சொல்ற மாதிரி இது சில்ற விஷயம் இல்ல. எல்லாமே பிராண்டட். ஏதோ ஒன்னு ரெண்டுன்னா பரவால்ல மொத்தம் இதுவரைக்கும் பதினாலு மிஸ் ஆகியிருக்கு’’ என்றாள் ஹாஸ்டலுக்குப் புதியவளான மீரா.

அவரவர் கப்போர்டுகளை இழுத்துப் போட்டு ஆராயத் தொடங்கினாள் பன் கொண்டை வார்டன். “அந்த கொண்டையைப் பார்த்தால் அது அநேகமாக டூப்பாக தான் இருக்கும் போல… அது பாட்டுக்கு ஆடிட்டே இருக்கு பாரேன்” என்று கல்பனா சொல்லவும் கொஞ்சமும் ஆராயாமல் சிரித்து வைத்தாள் வளர்மதி. அது பன் கொண்டையில் ஊடுருவி வார்டனில் காதில் விழுந்திருக்கலாம். அதன் பிறகு ஒரு ராட்சஷியைப் போல் தன் கொண்டையை அவிழ்த்துப் போட்டாள். அடர்த்தியாய் இருந்த அந்த கூந்தல் தரையைத் தொட்டது. அவ்வளவு நீளமெல்லாம் இல்லை. அவ்வளவும் சவுரிமுடி என்பதால் அவிழ்த்ததும் பொத்தென கீழே விழுந்தது. விழுந்த சவுரியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள் வார்டன்.

“ இப்ப டவுட் கிளியர் தானே… எல்லாரும் உங்க கப்போர்டை ஓபன் பண்ணுங்க’’ குரலில் கோபம் தெரித்தது. சிரித்து வைத்த அவமானம் வளர்மதிக்கு.

கல்பனா, பூர்ணிமா இரண்டு பேரின் ரூமையும் கொட்டிக் கவிழ்த்து அலசிப் போட்டார்கள். எதுவும் கிடைக்கவில்லை.

“இதெல்லாம் லோக்கல் பிராண்டுகள் தான் மேம். நெக்ஸ்ட் ரூம் போகலாம்’’ மீராவின் பார்வை வளர்மதியின் ரூமை நோக்கி நகர்ந்தது.

வளர்மதியின் ரூமுக்குள் கல்பனாவும் பூர்ணிமாவும் உடன் வந்தார்கள். கப்போர்டையும் மெத்தையையும் புரட்டிப் போட்டார்கள். பேச்சுலர் அறையின் ஒழுங்கீனத்தை இன்னும் கொஞ்சம் கூட்டிக் கொண்டது அந்த அறை. அங்குமிங்கும் தேடிக்கிடைக்காமல் அவள் மேசையின் ட்ராயர்களை வலுவாக இழுத்து ப்ளாக் பெர்ஃப்யூம் பாட்டிலை உடைத்துப் போட்டார்கள். அப்போதும் சந்தேகம் மீளாது அடுத்தடுத்து உருட்டவும் கல்பனாவும் பூர்ணிமாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்து வளர்மதிக்காக ஆதரவு வீசினார்கள். உச்சக்கட்ட ஆதரவாய் வார்டனும் மீராவும் பார்க்கிறபடி தங்கள் ஸ்லீவ்லெஸ் நைட்டிகளை சட்டென அவிழ்த்துப் போட்டார்கள். சொல்லி வைத்தாற்போல் இருவருக்கும் ஒரே சைஸ்தான்.

மீராவுக்கும் வார்டனுக்கும் அதிர்ச்சிதான்.

“இப்ப நாங்க என்ன அவுத்துக் காட்ட சொன்னோமா ஸ்டுபிட்ஸ்…’’ முணுமுணுத்தாள் வார்டன்.

வளர்மதி வைத்த கண் வாங்காமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய நைட்டியையும் கீழிருந்து மேலாக சட்டென உருவிப்போட்டாள் பூர்ணிமா. அத்தனை அவசரம் அவளுக்குத் தேவை இல்லாதது தான். இப்போது வளர்மதியின் தன்னம்பிக்கை இத்தனை சீக்கிரம் உடைந்திருக்க வேண்டாம் தான்.

வளர்மதியின் அரை நிர்வாணம் என்னவோ செய்தது அங்கிருந்த நால்வரையும். இந்தப்பக்கம் பூர்ணிமா நைட்டியை உருவ, ஒரு கோழிக் குஞ்சைப் போல் சுருண்டு கிடந்த வளர்மதியின் பிரேஸியரின் உக்ஸுக்களை படார் என பிரித்துக் கழற்றினாள் கல்பனா.

“ பாத்துக்க இதுவும் உன் பிராண்ட் தானா? ‘’ நீதித் தராசைக் கையில் பிடித்திருப்பது போல அந்த பிரேசியரை தூக்கிப் பிடித்திருந்தாள் கல்பனா. அந்த பிரேசியரின் இரண்டு கப்புகளும் தராசின் இரண்டு கிண்ணங்கள் போல இருந்தன. கொஞ்சம் விட்டால் சிலம்பை வீசியெறிந்து உண்மையை நிரூபித்த கண்ணகியைப் போல் அந்த பிரேசியரை மீராவின் முகத்தில் விட்டெறியக் காத்திருந்தாள் கல்பனா.

ஆனால், மீராவின் கண்கள் பிரேசியரில் இல்லை. சற்று முன்னதாக திறந்த மேனியாகப் பார்த்த வளர்மதியின் மார்பின் மீது இருந்தது. கல்பனா பிராவை பின்னால் இருந்து உருவ முன் பக்கமாக இருந்து கீழே விழுந்த இரண்டு காட்டன் உருளைகளின் மீதிருந்தது. அவள் தன் இருகைகளாலும் துளியும் வெளியே தெரியாமல் மார்பை மூடியிருந்ததில் ஏதோ ரகசியம் இருப்பதாய் உணர்ந்தாள்.

“ச்சீ வெளிய போடீ…’’ வளர்மதி சத்தமாய்க் கத்திக் கூச்சலிட்டாள்.

“ஒன்னுமில்லாம தான் இவ்ளோ சீனா? பாவம் உன் பாய் ப்ரெண்ட்’’ மீரா பதிலுக்கு கூச்சல் போடுகிறாள்.

“போடி மூடிட்டு…சனியனே.. உனக்கெல்லாம் சீக்கிரமே பிரேக் அப் ஆகிடும் பாரு’’ வளர்மதிக்கு அப்போது அவ்வளவு கோபம்.

“ உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது பாத்துக்க’’ என்று மண்ணைத் தூற்றாமல் சாபம் விட்டு நகர்ந்தாள் மீரா.
பூர்ணிமாவுக்கு ஓரளவுக்கு விஷயம் புரிந்தது. வார்டனுக்கும் அங்கு இருப்பது அநீதி என்பது புரிந்தது.

’’ஸாரி வளர்மதி… இது என்ன?’’

“சொல்ல முடியாது. இங்க இருந்து கெளம்புங்க மொதல்ல’’

கல்பனாவும் பூர்ணிமாவும் கிளம்பிச் சென்றார்கள். அதன் பிறகு கதவைச் சாத்திக் கொண்டாள். கண்ணாடியில் தன் முழு நிர்வாணத்தையும் பார்த்தாள். எல்லாமும் செதுக்கி வைத்த அளவுகள்தான். ஆனால், இந்த மார்புகளுக்கு மட்டும் ஏன் இத்தனை ஓர வஞ்சனை? முன்பொரு முறை வயதுக்கு வந்த புதிதில் துப்பட்டா போடாமல் வெளியே போகாதே என்றாள் அம்மா . அது தான் கண்ணியம் போல என்று பல வருடமாக நினைத்தாயிற்று. பின்னொரு நாள் அதே அம்மா சொல்கிறாள்,

“எதிர்வீட்டுப் பொண்ணு பாரேன் அசிங்கமா எவ்ளோ பெருசா வச்சிட்டு ஒரு துப்பட்டா கூட போடாம பால் வாங்கப் போறா.”

“அப்போ நான் ஏன் துப்பட்டா போடணும்?”

“ஏன்னா உனக்கு ஒன்னுமே இல்லன்னு தெரிஞ்சிரும் அதான் துப்பட்டா போட சொல்றேன். யாரும் என்ன ஏது கொறையானு கேட்கக் கூடாதில்லலைல”னு அன்னிக்கு அம்மா சொன்னது இப்பவும் வலிக்குது.

“எல்லாம் சரியா இருந்தும் இந்த மார்புகள் மட்டும் சொல்லிக்கிற சைஸ் இல்லாம இவ்ளோ சின்னதா இருக்கு. இதெல்லாம் யாரோட தப்பு . எல்லாரும் அளவா அழகா எடுப்பா ட்ரெஸ் போடுறப்ப நான் மட்டும் ஒட்டடை குச்சி போல கொம்புக்கு சுத்திவிட்ட மாதிரி கேலி பேச்சுக்கு ஆளாகணுமா? அதான் இப்படி காட்டன் பால் வச்சி 32 சைஸ் பிரேசியர்ல கவர் பண்ணிக்கிட்டேன் . இதுக்குப் போய் எனக்கு கல்யாணம் ஆகாதுன்னு சாபம் விடுறா. கல்யாணம் பண்ணிப்பேன் .மீரா முன்னாடி சந்தோஷமா இருப்பேன்.”கண்ணாடியின் முன் அழுதழுதுத் தீர்த்தாள் வளர்மதி.

மூன்றாண்டு முடிக்கும் வரை அடிக்கடி வீட்டுப்பக்கம் கூட போகாமல் ஹாஸ்டலில் இருந்து வீடியோகாலில் மட்டும் அம்மா அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தாள்.

“கணேஷ்னு ஒரு வரன் வந்திருக்கு வளர்மா. பொண்ணு இப்ப படிச்சிட்டு இருக்கா. மேல படிக்கணுமாம். இப்ப எதுக்கு கல்யாணம்னு சொல்லிட்டேன்மா” என்றாள் வளர்மதியின் அம்மா.

“இல்லம்மா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ போனைத் துண்டித்துவிட்டு கிளம்பியவள் பஜ்ஜி சொஜ்ஜித் தட்டோடு பெண் பார்க்கும் படலத்தில் எடுப்பாகப் போய் நின்றாள்.

அதன்பிறகு கல்பனாவும் பூர்ணிமாவும் போன் போட்டுச் சொன்னார்கள்.

“ஹாஸ்டல் முழுக்க உன்னைப் பத்தின ரூமர் பரவிடுச்சுப்பா. நம்ம க்ளாஸ்ல கூட ரெண்டு பசங்க இதைப் பத்திக் கேட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு வளர் ’’

அத்துடன் கல்லூரி தொடர்புகளைக் கல்யாணத்துக்கு அழைப்பதில்லை என முடிவானது.

“பஜ்ஜி சைஸ் ரொம்ப சின்னதா இருக்கே…’’ தோட்டத்துக்குப் பக்கம் அழைத்துப் போய் கிண்டல் அடித்தானே இந்த பாவி கணேஷ். அப்பவே என்னையும் கணிச்சிட்டு ஓடிப் போயிருக்கலாம்ல. பிடிச்சிருக்குனு பட்டுன்னு சொல்லிட்டுப் போயிட்டான். இப்ப கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் நைட்ல வந்து நிக்குறேன். இன்னைக்கு அவன் இந்த காட்டன் பால்களைப் பாத்துட்டா என்னாகும்? அதைவிட அசிங்கம் ஒன்னுமில்ல. பேசாம உண்மையை சொல்லிடலாமா? இப்பவே இதை இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் தூக்கிப் போட்டுட்டா என்ன?

அதிகம் யோசிக்க நேரமில்லை. ரெஸ்ட் ரூம் கதவை தட்டிக் கொண்டிருந்தார்கள். காட்டன் பால்களுக்கு ஆயுசு கெட்டி. அதே மிடுக்குடன் வெளியே வந்தாள். கையில் பால் சொம்பைக் கொடுத்து உள்ளே தள்ளினார்கள்.மாப்பிள்ளையைக் காணவில்லை.

முறைப்படி மாப்பிள்ளை தானே ரூம்ல காத்திருப்பார்னு சொன்னாங்க. ஆனா கணேஷை காணோமே. ஒருவேளை என்னைப் பத்தி எதுவும் உண்மை தெரிஞ்சிருக்குமா? சின்ன மார்புகளோட இருந்தா பொண்ணே இல்லைனு அர்த்தமாகிடுமா? எனக்கும் எல்லா உணர்வுகளும் இருக்குன்னு அவனுக்கு சொல்லிப் புரிய வைக்கவே முடியாதா? சின்ன வயசுல இருந்து நான் அனுபவிச்ச கஷ்டங்கள் ஒன்னு ரெண்டில்ல. ஒரு உடலுறுப்புதான் இந்த வாழ்க்கையை தீர்மானிக்கப் போகுதா? குறைகள் இல்லாத மனிதர்கள்தான் சந்தோஷமா இருப்பாங்கன்னா மனசுல அழுக்கோட எவ்ளோ குறைகளோட சுத்திட்டு இருக்குறவங்கள் எல்லாம யோக்கியமா என்ன? நான் இதுக்கு இவ்ளோ பயந்து சாகணும். நடக்குறது நடக்கட்டும் பாத்துக்கலாம்.

அந்த அறையின் வெளிச்சமும் மலர் அலங்காரமும் சாங்கிய சம்பிரதாயங்களைப் பார்க்கையில் இதெல்லாம் கண்டுபிடிச்சவன் என் கையில கிடைச்சா என்பது போல் வெறித்தனத்தைக் கொடுத்தது வளர்மதிக்கு.

மாடியின் சிறிய வெளிச்சத்தில் ஓரமாய் நின்றுக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்தான் கணேஷ்.

வளர்மதிக்கு கண்களில் மின்னல் வெட்டுவதுபோல் இருந்தது. அதற்கு மேலும் அந்த அறையில் இருக்க முடியவில்லை. அறையின் உள்ளிருந்த ரெஸ்ட் ரூமுக்குள் அவசரமாக நுழைந்து வெளியேறினாள். கதவு தட்டுவது போல் இருந்தது.

கதவைத் திறந்தாள்.

வெஸ்டன் டாய்லெட்டில் காட்டன் பால்கள் இரண்டும் தன் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டு மூழ்கிப் போயிருந்தன.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. ஒவ்வெருவரும் இப்படி ஒன்றை எதிர்கொண்டே வாழ்கின்றனர்.அருமையான உணர்வுப்பூர்வமான படைப்பு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button