பனிக் குழந்தை- ஏஞ்சலா கார்ட்டர் (தமிழில் கயல்)
ஏஞ்சலா கார்ட்டர் (தமிழில் கயல்)

தூய வெண்பனி பொழியும் தாள முடியாத குளிர்கால நாளொன்றில் ஒரு பிரபுவும் அவர் மனைவியும் குதிரைச் சவாரி செய்கின்றனர். பிரபு ஒரு சாம்பல் நிறப் பெண் குதிரையிலும் அவள் ஒரு கருப்பு நிறப் பெண் குதிரையிலுமாகத் தங்கள் பயணத்தைத் துவக்கினர். அவள் மின்னும் கறுப்புநரித் தோலாடை போர்த்தி, கருஞ்சிவப்புக் குதிகால்களும் குதிமுள்ளும் கூடிய உயரமான, பளபளக்கும் கறுப்புக் காலணிகள் அணிந்திருந்தாள். அங்கு ஏற்கனவே கொட்டிக்கிடந்த பனியின் மீது மேலும் பனி பொழிந்தபடி இருந்தது. பனிப்பொழிவு நின்றதும் மொத்த உலகமும் வெண்மையானது. அதன் அழகைப் பார்த்த பிரபு, “பனி போல் வெண்ணிறத்தில் எனக்கொரு பெண் இருந்திருக்கலாம்” என்றான்.
அவர்கள் பயணம் தொடர்கிறது. வழியில் ஒரு பனிக்குழியைக் காண்கின்றனர். அது இரத்தத்தால் நிரம்பியிருந்தது. அதைப் பார்த்த பிரபு, “இரத்தச் சிவப்பில் எனக்கு ஒரு பெண் இருந்திருக்கலாம்” என்றான். மேலும் தொடர்கிற தங்கள் பயண வழியில் இலைகளற்ற ஒரு மரக்கிளையில் அண்டங்காக்கை ஒன்று உட்கார்ந்திருப்பதைக் காண்கின்றனர். “அந்தப் பறவையின் உதிர்ந்த இறகைப் போல் கறுத்த நிறத்தில் எனக்கொரு பெண் இருந்திருக்கலாம்” என்றான் அந்தப் பிரபு.
இவ்வாறாக பிரபு பெண்ணின் விவரணைகளைச் சொல்லி முடிக்கையில், சாலையோரம் ஓர் இளம்பெண் நிற்கக் கண்டனர். வெள்ளைத் தோலும், சிவந்த வாயும், கருங்கூந்தலுமாக ஆடைகளேதுமின்றி பிரபுவின் மொத்த ஆசைகளின் குழந்தையாக அவள் நின்றிருந்தாள். அவளைக் கண்ட கோமகளுக்கோ வெறுப்பு ஏற்பட்டது. பிரபு அப்பெண்ணைத் தூக்கி முன்புறமாக சேணத்தின் மீது அமர வைத்துக் கொண்டான். கோமகளுக்கு அவளை எப்படித் துரத்துவது எனும் ஒரே சிந்தனை தான் இருந்தது.
அவள் தன் கையுறை ஒன்றைப் பனியின் மீது வீசிவிட்டு, அப்பெண்ணை இறங்கித் தேடச் சொன்னாள். அப்படித் தேடும்போது அவளை அங்கேயே விட்டுவிட்டு வேகமாக குதிரையைச் செலுத்திக் கொண்டு போய்விடலாம் என்று நினைத்தாள். ஆனால் பிரபுவோ, “நான் உனக்குப் புதிய கையுறைகளை வாங்கித் தருகிறேன்” என்று சொல்லி விடுகிறான். அதைக் கேட்ட கோமகளின் தோள்களில் இருந்த கம்பளியாடை, ஆடையற்றிருந்த அந்தப் பெண்ணின் மீது பாய்ந்து சுற்றிக் கொண்டது. அடுத்து தன் ஆடையில் பொருத்தியிருந்த வைரத்தாலான அலங்கார ஊசியைப் பனியால் உறைந்திருந்த குளத்தினுள் வீசிய பிரபுவின் மனைவி, “குளத்தில் குதித்து அந்த ஊசியைக் கொண்டு வா” என்றாள். அந்தப் பெண் அதில் மூழ்கி விடுவாள் என்பது அவள் எண்ணம். ஆனால் பிரபுவோ, “அவ்வளவு குளிர் நீரில் நீந்துவதற்கு அவள் என்ன மீனா?” எனத் தடுக்கிறான். கோமகளின் காலணிகள் அவள் பாதத்திலிருந்து அவ்விளம் பெண்ணின் கால்களுக்கு இடம் மாறுகின்றன. தோல் போர்த்தாது திறந்து கிடக்கும் எலும்பைப் போல கோமகள் இப்போது ஆடையேதுமற்று இருக்க, அந்தப் பெண்ணோ கம்பளியுடனும் காலணியுடனும் இருந்தாள். பிரபு தன் மனைவிக்காக வருந்தினான்.
பிறகு அவர்கள் ரோஜாக்கள் நிறைந்திருந்த ஒரு நந்தவனத்தை அடைகிறார்கள். கோமகள் அப் பெண்ணிடம் “எனக்கு ஒரு ரோஜாவைப் பறித்து வா” எனச் சொல்ல, “நான் இதைத் தடுக்க மாட்டேன்” என்றான் பிரபு. அந்தப் பெண் இறங்கி ரோஜாவைப் பறிக்கையில், விரலில் முள் குத்தி இரத்தம் கசிய அலறிச் சரிகிறாள். மனம் தாளாது விசும்பியபடி குதிரையிலிருந்து இறங்கும் பிரபு தன் கால்சட்டையைக் கழற்றி தன்னுடைய ஆதிக்க ஆணுறுப்பை இறந்துபோன அந்தப் பெண்ணுள் நுழைக்கிறான். நிலைகொள்ளாத தன் குதிரையின் கடிவாளத்தை இழுத்து அடக்கிய கோமகள், பிரபுவைக் கூர்ந்து கவனிக்கிறாள். அவனும் விரைவில் செயலாற்றி முடிக்கிறான்.
பிறகு அந்தப் பெண் உருகத் துவங்கினாள். ஒரு பறவையின் உதிர்ந்த இறகும், பனியின் மீது நரியொன்று கொல்லப்பட்டது போன்ற சிறிய இரத்தக்கறையின் தடமும், அவளால் பறிக்கப்பட்ட ரோஜாவையும் தவிர அவளுடையது என எதுவும் அங்கு எஞ்சாமல் அதிவிரைவில் மறைந்துவிட்டன. இப்போது மீண்டும் கோமகள் எல்லா ஆடைகளையும் தரித்துக் காணப்பட்டாள். தன்னுடைய நீண்ட கைகளால் அவள் தன் கம்பளியாடையை வருடினாள். பிரபு ரோஜாவை எடுத்து, குனிந்து தன் மனைவியிடம் தந்தான். அவள் ரோஜாவைத் தொட்ட மறுகணம் அதைக் கைநழுவ விட்டு “இது என்னைக் கடித்து காயப்படுத்துகிறது” என்றாள்.
ஆசிரியர் குறிப்பு:
இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான ஏஞ்சலா கார்ட்டர் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியதுடன் பத்திரிகையாளராகவும் செயலாற்றினார். இவருடைய படைப்புலகம் பெண்ணியம், சாகசங்கள், மாய எதார்த்தவாதம் ஆகியவை சார்ந்திருந்தது. ப்ளடி சேம்பர் (Bloody chamber) எனும் நூலால் பெரும் புகழடைந்த இவர் தன் 51 ஆம் வயதில் மரணமடைந்தார்.