காணாமற்போன நாடு
சிலி : கேப்ரியல்லா மிஸ்ட்ரல்
ஆங்கிலம் : லேங்க்ஸ்டன் ஹியூக்ஸ்
தமிழில் : கு.அ. தமிழ்மொழி
காணாமற்போனது புதிரான நாடு
தெளிவற்ற கடவுச்சொல்லைவிட
தேவதையைவிட இலகுவானது
இறந்த பாசியின் நிறம்
மூடுபனியின் வண்ணமது
முடிவிலா நேரம்குறைந்த பேரின்பம்போல்
மாதுளை காய்க்கவில்லை
மல்லிகை மலரவில்லை அதற்கு
வானமோ, அடர்நீலக்கடலோ
இரண்டுமில்லை
கேள்விப்படாத உங்கள் பெயரை
நான் வைத்திருக்கிறேன்
பெயரில்லா நாட்டில்
இறக்கப்போகிறேன் நான்
பாலமோ, படகோ என்னை
இவ்விடத்திற்குக் கொண்டுவரவில்லை
அது தீவு அல்லது கரை
என யாரும் என்னிடம் சொல்லவில்லை
நான் அதைத்தேடவும்
கண்டுபிடிக்கவுமில்லை
இப்போது நான் கற்றுக்கொண்ட
அறநெறிக்கதையைப்போல் இருக்கிறது இது
நான் பறக்கக் கனவு கண்டேன்
இருக்கக் கனவு கண்டேன்
ஆனால் இது என் நாடு
நான் வாழ்ந்து, இறக்கும் இடம்
எந்த நாட்டிலும்
இல்லாதவற்றிலிருந்து பிறந்தேன்
நிலங்களின் மேல் நிலங்களை
வைத்திருந்து, இழந்தேன்
குழந்தைகள் இறப்பதைக் கண்டிருக்கிறேன்
ஒருமுறை நான் என்னுடையது
என்று சொல்பவை அதிக காலம்
என்னுடையதாக இருக்காது
நான் ஒருமுறை உறங்கிக்கழித்த
மலைத்தொடரைத் தொலைத்துவிட்டேன்
வாழ்வின் இனிமையுடன் சேர்த்து
தங்கத்தோட்டங்களைத் தொலைத்துவிட்டேன்
கரும்பு மற்றும் அடர்நீலத்தைக்கொண்ட
தீவுகளைத் தொலைத்துவிட்டேன்
அவற்றின் நிழல்கள் என்னிடம்
நெருங்கி வருவதைக் கண்டேன்
அப்பெருங்கூட்டமும்,காதலர்களும்
நாடாகிப்போனது
பின்கழுத்து, பின்புறமின்றியிருக்கும்
பிடரிமுடியில் மூடுபனி
அலைந்து திரியும் ஆண்டுகளின் வழியே
உறங்கும் காற்று பறக்கச் செய்வதைக் கண்டேன்
அது நாடாக மாறுகிறது
பெயரில்லா நாட்டில்
இறக்கப்போகிறேன் நான்
ஆசிரியர் குறிப்பு:
லுசிலா கொடேய் அல்கயகா என்னும் இயற்பெயர் கொண்ட கேப்ரியல்லா மிஸ்ட்ரல், 1889 இல் சிலியில் பிறந்தார். அவரின் புனைப்பெயரைத் தன்னுடைய விருப்பமான கவிஞர்களான கேப்ரியல் டி அன்னுன்சியோ மற்றும் ஃப்ரெடெரி மிஸ்ட்ரல் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பள்ளி ஆசிரியையாகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கிய அவருடைய படைப்புகள் வலிமையான உணர்ச்சியுடனும், நேரடியான மொழிநடையிலும் எழுதப்பட்டவை. அவரின் மையக் கருப்பொருள்கள் காதல், வஞ்சம், துயரம், இயற்கை, பயணம் குழந்தைகள் மீதான அன்பு ஆகியவை. மெக்சிகோ மற்றும் சிலியின் கல்வி முறைகளில் முக்கியப் பங்காற்றினார். 1945 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.