
எரித்ரா கிரகத்தை நெருங்கிக்கொண்டிருந்தது விண்கலன்.
ஆடா, ஜலேனி இருவரும் நீள் உறக்கத்திலிருந்து எழுந்து ஒளி வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த விண்கலன், மெல்ல மெல்ல வேகங்குறைந்து கிரகத்தில் தரையிறங்கத் தயாராவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“உன்னைப் பற்றிச் சொல்லேன். மெளனமாக வேலை பார்ப்பது என்னவோ போல் இருக்கிறது” என்றாள் ஜலேனி தன் முன்னிருந்த பொத்தான்களின் மீது, தன் விரல்களை படர விட்டபடி.
“விண்கலனுக்குத் தயாராகையிலேயே நமது அறிமுகம் முடிந்துவிட்டதே. மறந்துவிட்டாயா?” என்றாள் ஆடா.
“ஒன்பது ஆண்டுகால நீள் உறக்கமல்லவா? பலதும் நினைவில்லை.”
“ஹ்ம்ம். புரிகிறது. இதற்கு முன் பேய்களை ஆராய்ச்சி செய்பவளாக ஐந்து பூமி ஆண்டுகள் வேலை செய்திருந்தேன். பாரா நார்மல் ரிசர்ச்சர் (Paranormal researcher) என்று கேள்விப்பட்டதில்லை?”
ஜலேனி சிரிக்க, “சிரிக்க என்ன இருக்கிறது?” என்றாள் ஆடா.
“இல்லை. பேய் ஆராய்ச்சி செய்துவிட்டு, விண்வெளி வீராங்கனையாகியிருக்கிறாயே என்றுதான். பேய் பிசாசு என்பதெல்லாம் அமானுஷ்யம் அல்லவா?”
“என் கருதுகோள் அது அல்ல. ஐன்ஸ்டைன், பேய் குறித்த கேள்விக்கு ‘எனர்ஜி உருவாவதும் இல்லை. அழிவதும் இல்லை’ என்கிறார்”
“ஓ.. நல்லது..பேய் ஆராய்ச்சியில் என்ன செய்வீர்கள்?”
“அதற்கென கருவிகள் உள்ளன. குறிப்பாக, மின் காந்த புலன்கள் (Electro-Magnetic Fields). இந்தப் புலன்களில் மாற்றங்கள் இருந்தால் அங்கே பேய்கள் இருக்கின்றன என்று பொருள். அதுமட்டுமில்லாமல், ரெம் பாட்ஸ்(REM pods), ஒலி உள்வாங்கிகள், சலனப்படக் கருவிகள்(video cameras), இரவு பார்வைக் கண்ணாடிகள்(night vision goggles), தெர்மோகிராபிக் (thermographic) சலனப்படக் கருவிகள் என்று பலதும் இருக்கின்றன. மின் காந்தப் புலன்களே இவை எல்லாவற்றின் மையமும். கேள்விப்பட்டிருப்பாயே? மின் சக்தியில் ஓடும் மகிழுந்துகளான டெஸ்லாக்கள் மயானம் அருகே செல்கையில், ஆன்மாக்கள் இருப்பதாய்க் காட்டுமே” என்று ஆடா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே விண்கலனின் சைரன் உரத்து ஒலித்தது.
“எச்சரிக்கை! எச்சரிக்கை! விண்கல் ஒன்று விண்கலன் மீது மோதியதில் குறிப்பிடத்தக்க சேதாரம் நிகழ்ந்திருக்கிறது. கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் தளத்திற்கு விரையவும்” என்ற அறிவிப்பு வர, ஆடாவும், ஜலேனியும் அங்கே ஓடினார்கள்.
அங்கே, ஒரு விண்கல் விண்கலனைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததில், பரிசோதனைக் கருவிகள் சில சேதமடைந்திருந்தன. விண்கலனின் எந்திர மனிதர்கள் அந்த ஓட்டையை அடைத்துக்கொண்டிருந்தார்கள்.
“எச்சரிக்கை! எச்சரிக்கை! விண்கலன் எரித்ரா கிரகத்தை நெருங்கிவிட்டது” என்ற சைரன் ஒலியில் ஆடாவும் ஜலேனியும் ஒரு சேர பதற்றமானார்கள்.
“நீ போய் தரையிறங்குதலை கவனி, ஜலேனி”
“இல்லை. என்னால் தனியாக முடியாது. இதைத் தரையிறங்கியதும் பார்த்துக்கொள்ளலாம். நீயும் வா” என்றாள் ஜலேனி.
இருவரும் ஒருமனதாக, தரையிறக்கத்தைக் கவனிப்பது என்று முடிவு செய்துவிட்டு, மீண்டும் விமானி அறை (cockpit) நோக்கி ஓடினார்கள்.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், எரித்ரா கிரகத்தின் தரை தொட்டு, சற்றே பலமான அதிர்வுடன் தரையிறங்கியது விண்கலன்.
“இப்போது கதவு திறக்க இருக்கிறது. கிரகத்தில் பூமி போல் பிராணவாயு இருக்கிறது என்பதால், ஆயினும் விரிவான வளிமணடலம் குறித்த அறிக்கை தயாராகும் வரை விண்வெளிப் பயணிகள் தங்கள் தலைக்கவசங்களை அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றது ஒரு எந்திரக் குரல்.
ஆடாவும் ஜலேனியும் கதவு திறக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த உடல் கவசம் அவர்களது இதயத்துடிப்பு அதிகரிப்பதைக் கவனித்துவிட்டு “நிதானம் தேவை” என்றது.
சற்றைக்கெல்லாம் கதவு திறக்க, தொலைதூரத்து நட்சத்தின் வெளிச்சம் மெல்ல அவர்கள் மீது படர்ந்தது. எங்கும் வெறும் பாறைகள், கற்கள். கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியில் இருப்பதைப் போல் ஒன்றேகால் மடங்கு அதிகமிருந்தது. தோளில் ஒரு இரண்டு வயதுக் குழந்தை அமர்ந்தது போல் உணர முடிந்தது. அவர்கள் வந்திறங்கிய இடம் ஒரு பள்ளத்தாக்கு போல் தோற்றமளித்தது. இருமருங்கிலும் புஜங்கள் போல், மலைகள் நின்றிருந்தன. மத்திமமாகக் காற்று வீசிக்கொண்டிருந்தது. அத்துவானத்தில் சீற்றம் கொண்ட சுழல் ஒன்று நிலத்தையும், வானத்தையும் இணைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
தொலைவில் வானத்தில் இரண்டு நிலாக்கள் தெரிந்தது. ஒன்று பெரியது. ஒன்று சிறியது.
ஆடா கிரகத்தையே பார்த்தபடி சிலையாக நிற்பதை கவனித்துவிட்டு,
“உடற்கூட்டில் உள்ள ஆக்ஸிஜன் அதிக நேரம் தாங்காது, ஆடா. வேலையைக் கவனி” என்றாள் ஜலேனி.
“இப்போதுதானே வந்தோம். கணினித்திரையில், பாவனை நிரலில் பார்த்துப் பார்த்து சலித்துவிட்டது. இனி இப்படிப் பார்க்கக் கிடைக்குமோ என்னவோ? பார்த்துக்கொள்கிறேனே” என்றாள் ஆடா கெஞ்சும் குரலில்.
“அதெல்லாம் முடியாது. என்னவென்று குறிப்பில் எழுத? ஆடா ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்துவிட்டாள் என்றா?”
ஆடா முனுமுனுப்புடன் விண்கலனுக்குத் திரும்பினாள். மின் காந்த புலன் வெளியிடுவான்களை (EMF emitters) விண்கலனிலிருந்து எடுக்கக் கருவிகள் அறைக்கு வந்தபோதுதான், விண்கல் மோதலில் அது உடைந்திருப்பதை கவனித்தாள் ஆடா.
“ஜலேனி, மின் காந்த புலன் கருவிகள் சேதமடைந்திருக்கின்றன” என்றாள் ஆடா.
“ஐயோ, அது இல்லாமல் இந்த கிரகத்தின் வளிமண்டலத்தை எப்படி ஆராய்வது? என்னவென்று அறிக்கை தயார் செய்வது? வந்த காரியமே வீணா? அந்தக் கருவியை சரி செய்ய முடியுமா?”
“அப்படித் தோன்றவில்லை. பல காலம் ஆகலாம். அதுவரை, உண்ண உணவு, ஆக்ஸிஜன் நம்மிடம் இல்லை”
“சரி வா. வேறு என்ன பயனுள்ளதாக இருக்கிறது என்று பார்க்கலாம்” என்று ஜலேனி சொல்ல இருவரும் விண்கலனைத் துப்புரவாகத் தேடத்துவங்கினார்கள்.
தற்செயலாக, ஆடாவின் சொந்தப் பெட்டிகளைச் சோதித்ததில், அதில், இருந்த கருவிகளைப் பார்த்துவிட்டு,
“ஆடா, இவைகள் எல்லாம் என்ன?” என்றாள் ஜலேனி புருவச் சுருக்கங்களுடன்.
ஜலேனியின் கையில் உள்ளவைகளைப் பார்த்துவிட்டு, “அதுதான் சொன்னேன் இல்லையா? பேய்கள் இருக்கின்றனவா என்று பார்க்க, பயன்படும் கருவிகள்தான். மின் காந்த புலன்களை வெளியிடுவான்கள்!” என்றாள் ஆடா.
“சரி. அதை ஏன் இங்கு கொணர்ந்தாய்?”
“ஏன் இல்லாமல்? ஒன்பது ஒளி ஆண்டுகள் பயணம். உயிருக்கு ஏதேனும் நடக்கக்கூடச் செய்யலாம். அவைகள் என் கருவிகள். அவற்றை நான் பிரிந்திருக்க விரும்பவில்லை. ஒரு நியாபகார்த்தமாக எடுத்து வந்தேன் ஜலேனி” என்றாள் ஆடா.
“நல்லதாயிற்று. பேசாமல், இந்தக் கருவிகளை வைத்து வளிமண்டலத்தை ஆராய்வோம்” என்று துள்ளினாள் ஜலேனி. அவள் முகத்தில் இழந்ததை மீண்டும் பெற்றுவிட்ட ஆனந்தம்.
“ஆனால், கிரகத்தின் வளிமண்டலத்தைச் சோதனை செய்யப் பயன்படும் அளவிற்கு சக்திவாய்ந்தவைகள் அல்ல இவைகள்” தெளிவூட்டினாள் ஆடா.
“பரவாயில்லை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், ஆடா. இதை வைத்தே சிறிய அளவில் பரிசோதனை செய்து, புள்ளிவிவரங்கள் சேகரிப்போம். அது போதுமல்லவா?” என்றாள் ஜலேனி ஆர்வத்துடன்.
ஆடாவும், ஜலேனியும் அந்தக் கருவியை விண்வெளிக்கலனை விட்டு வெளியே எடுத்து வந்து கிரகத்தின் தரையில் நிறுத்தினார்கள்.
“ஆடா, எங்கே இந்தக் கருவியை கட்டமை. ஒரு ரீடிங் (reading) எடுத்துப் பார்ப்போம். என் கணிப்பு சரியானால், இவைகள், இக்கிரத்தின் வளிமண்டலத்தில் உள்ள துகள் (particles) மீது பட்டு வெவ்வேறு அலை நீளத்தை (wavelength) உருவாக்கும். அதை வைத்து கிரகத்தின் வெப்பம், ஈரப்பதம், மேக மூட்டங்கள் உள்ளிட்டவற்றை சிறிய அளவில் கணிக்க முடிந்தாலும் போதும்” என்று ஜலேனி பணிக்க, ஆடாவின் விரல்கள் அந்தக் கருவியைச் செதுக்கத்துவங்கின.
முடிவில், கருவி தயாரானது. ஜலேனி, தயாரான கருவியின் பொத்தான்களை அழுத்த, கருவியோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினி, திரையில் வரைந்த படங்களைப் பார்த்து அதிர்ந்தாள் ஆடா.
“என்ன இது? ஐயோ?” என்று அவள் பதற,
“என்ன? என்னாயிற்று?” என்று ஜலேனியும் பதற,
“இத்திரையில் உருவம் தெரிகிறது, ஜலேனி.”
“அதனாலென்ன ஆடா?”
“இப்படி உருவங்கள் தெரிந்தால், அங்கே பேய்கள், ஆத்மாக்கள் இருக்கின்றன என்று பொருள்” என்றாள் ஆடா பதற்றம் விலகாமல்.
“என்ன உளறுகிறாய், ஆடா?”
“நான் உளறவில்லை. பூமியில் எண்ணற்ற உயிர்கள். அவைகள் மரணித்தால் பேயாகின்றன. ஆத்மாக்களாக எஞ்சுகின்றன. அவைகளை நான் ஐந்து வருடங்களாக இப்படித்தான் கண்டிருக்கிறேன். உருவங்களாக. எனக்கு நிச்சயமாகத் தெரியும். இவைகள் பேய் உருவங்கள்தாம்”
ஜலேனி தன் பங்கிற்கு ஒரு சிறிய கருவியை உருவி, அதனை இயக்க, சிகப்பு நிறத்தில் ஒளிர்ந்தது.
“அது என்ன ஜலேனி?”
“ஆங்… மக்னீஷியம் சல்ஃபேட் (Magnesium sulphate) இருக்கிறதா என்று பார்த்தேன். துளி கூட இல்லை. உயிர்கள் இருப்பின் அந்த வேதிப்பொருள் சன்னமான அளவிலேனும் வளிமண்டலத்தில் காணப்படும். அப்படி ஏதும் இல்லை. இக்கிரகத்தின் நிலையைப் பார்க்கையில், பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இங்கே உயிர்கள் துளிர்க்கக் கூட இல்லை என்பது புரிகிறது. உயிர்கள் வாழ்ந்து மரணித்தால்தானே பேய், ஆத்மா எல்லாம்” என்றாள் ஜலேனி.
“ஆமாம். அப்படியானால், இந்தக் கருவி ஒருவேளை குழம்பிவிட்டதா? சரியாக வேலை செய்யவில்லையா? சூரியக் கிரணங்களால் பாதிக்கப்பட்டிருக்குமோ?”
“டயாக்னாஸ்டிக்ஸ் (Diagnostics) ஓட்டு முதலில்”
ஆடா, அக்கருவியில் டயாக்னாஸ்டிக்ஸ் மென்பொருளை இயக்க, அது சற்று நேரம் பவ்யமாகச் சுற்றிவிட்டு, ‘கருவியில் பிழையேதும் இல்லை’ என்று அறிக்கை அளித்தது. ஜலேனி, கிரகத்தின் வெளியைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்தாள்.
“கருவியில் பிழையேதும் இல்லையே, ஜலேனி” என்றாள் ஆடா, குழம்பிய முகத்துடன்.
“அப்படியானால் இதற்கு ஒரு அர்த்தம் மட்டும்தான் இருக்க முடியும்” என்றாள் ஜலேனி, கிரக வெளியிடம் திருப்பியிருந்த தன் பார்வையை மீட்கத் தோன்றாதவளாய்.
“என்ன?” என்றாள் ஆடா கேள்வியாய்.
“இடைப்பரிமாண உயிரினங்கள்” என்ற ஜலேனி இப்போதும் கிரக வெளியையே வெறித்திருந்தாள்.
“என்ன?” இந்த முறை, அதிர்ச்சியும் கலந்திருந்தது ஆடாவின் குரலில்.
“ஓ..நீ இருப்பதை மறந்துவிட்டேன். உன் மொழியில் சொல்ல வேண்டுமானால், பேய்கள்தாம்.” என்றாள் ஜலேனி.
“குழப்பாதே. பூமியின் மின் சக்தியில் ஓடும் மகிழுந்துகள் கண்டுபிடித்தது இடைப்பரிமாண உயிர்களைத்தான் என்கிறாயா? இந்தக் கிரகத்தின் துவக்கம் முதலே உயிர்கள் இல்லை என்றுதானே சொன்னாய்” என்றாள் ஆடா, வாக்குவாதம் செய்யும் நோக்கில்.
அவள் பேச்சைக் காதில் வாங்காதவளாய், விண்கலனின் விமானி அறைக்கு விரைந்தாள் ஜலேனி. கணினியைத் திறந்து, தனது அறிக்கையை எழுதலானாள்.
“எரித்ரா வந்துவிட்டோம். துரதிருஷ்டவசமாக, பயணத்தில் எங்கள் கருவிகள் உடைந்துவிட்டன. ஆனால், அதிர்ஷ்டவசமாக, ஆடா, தன் விருப்பப் பொருட்களாக எடுத்து வந்த கருவி ஒன்று பயன்பட்டது. அதனை வைத்து கிரகத்தின் வெப்பம், ஈரப்பதம், வேதிப்பொருட்களின் சதவிகிதம் என்று எல்லாவற்றையும் கணித்து தனித்த அறிக்கையாக அனுப்பியிருக்கிறேன். பார்க்கவும். எரித்ராவில் மனிதக் குடியேற்றம் சாத்தியமா என்றொரு கேள்விக்கு விடை தேடித்தான் இங்கே அனுப்பப்பட்டோம். ஆனால், இங்கே ஏற்கனவே இடைப்பரிமாண உயிர்கள், அதாவது interdimensional beings இருக்கின்றன. ஆடா பூமியிலேயே இவைகளை எதிர்கொண்டிருக்கிறாள். அவளுக்கு அவைகள் பேய்கள் என்ற அளவிலேயே பரிச்சயமாகியிருக்கின்றன. போகட்டும். சக மனிதர்களின் செயல்பாடுகள் என்னை எப்போதுமே புன்னகைக்க வைத்திருக்கின்றன. உடற்கூடுகள் குறித்த என் பிரஞை மிக எளிமையானது. நான் அணிந்திருப்பதை, நான்தான் அணிந்திருக்கிறேன். உள்ளிருப்பது நானே. ஆனால், அதற்கென, ஒரு உடற்கூடு கர்வம் கொண்டால், ஒரு உடற்கூடு தன்னைப் பெருமையாக எண்ணிக்கொண்டால், ஒரு உடற்கூடு தன்னைத்தானே மெச்சிக்கொண்டால், ஒரு உடற்கூடு தன்னையே முதன்மைப்படுத்திக் கொண்டால், உள்ளிருப்பவளாக, நான் என்னதான் செய்துவிட முடியும், நகைத்துக் கொள்வதைத் தவிர?”
“இந்தப் புரிதல் என்னை சலனப்படுத்துகிறது. என்னையே மலினமாய் எண்ணச் செய்து விடுகிறது. இந்த கிரகங்களுக்கிடையிலான பரவல், அதற்கான முனைப்பு, அதில் காட்டும் தீவிரம் எல்லாமும் பைத்தியக்காரத்தனமாய்த் தோன்றுகிறது. நான் எப்போதும் என்னைப் பற்றியே கவலை கொள்கிறேன். இத்தனைக்கும் நான் வெறும் ஒரு உடற்கூடு என்கிற புரிதல் என்னை அலைகழித்துக்கொண்டே இருக்கிறது. எரித்ரா மனிதர்கள் வாழக்கூடிய கிரகமாக இருக்கலாம்” என்று எழுதிய, ஜலேனி, சற்று யோசித்துவிட்டு, பின், எழுதிய கடைசி வரியை அழித்துவிட்டு,
“எரித்ரா, உடற்கூடுகளுக்கான கிரகம் மட்டுமல்ல; அதனுள் இருக்கும் எனக்கான கிரகமும்தான்; அறிக்கையின் இந்த வரியை எழுதுவது ஜலேனி உடலுக்குள் இருக்கும் நான்” என்று எழுதி அறிக்கையை சமர்ப்பித்தாள் ஜலேனி.