
புறாக்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு மிகப் பழமையானது. மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்தில் அவன் தன்னோடு வளர்த்த முதல் பறவை இனம் புறா. அதனால்தான் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக புறாவோடு மனித இனமும் ஒரே கூட்டில் வாழ்ந்திருப்பதாக கணக்கிடுகிறார்கள். பகலில் சூரியனையும் இரவில் நட்சத்திரங்களையும் கொண்டு எல்லைகளற்ற ஆகாயத்தில் திசைகளை சரியாக அடையாளம் காணும் திறமை கொண்டவை புறாக்கள். அத்துடன் ஆண் – பெண் உறவில் புணர்ச்சிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதும் புறாக்கள்தான். முட்டை இடுவது மட்டுமே பெண் புறாவாக இருந்தாலும், அடை காப்பதில் ஆண் புறாவும் சம பங்களிப்பு கொடுக்கும். புறாக்களின் இயல்புகள் தனித்துவமானவை. நயத்தக்க நாகரிகமிக்கவை.
ஆண்புறா தான் விரும்பும் பெண் புறாவை சேர்வதற்கு அழைக்கும் குரலை ‘முரல்’ என்று நற்றிணை சொல்கிறது.
“வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல்” – நற் 71/8,9
புறாக்களின் முரல் தனித்துவமானது. பெண் மீதான வல்லாங்குகள் கொண்டதல்ல; பெண்ணை அது சக உயிரியாக மதிக்கிறது. பெண்ணுடலை இரண்டாம் பாலினமாக வரையறுத்திருக்கும் மத பீடங்களை தன் குரல்வளைக்குள் அடைத்துவிடும், அதன் பின் சூழும் நிசப்தத்தைக் கொரித்தபடி கழுத்தை சாய்த்துக் கொள்ளும். இறை நம்பிக்கைகள் மத பீடங்களாக மாறி, மதங்கள் தங்கள் அதிகாரத்தை பக்தி என்ற பெயரில் விற்பனை செய்யும் நிறுவனங்களாகிவிட்டன. ஆனால், புறாக்கள் மதமற்ற இறைமையில் உயிர்வாழ்கின்றன. புறாக்களோடு வாழ்ந்தாலும் மனிதனுக்கு புறாவின் குணாதிசயங்கள் எதுவும் வந்துவிடவில்லை. ஆண் பெண் உறவு முதல் அதிகார விளிம்பு வரை முரல் நீங்கிய புறாக்களிடமிருந்தும், முரல் எழுப்பும் புறாக்களிடமிருந்தும் மனிதன் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. !
“மசூதியின் மாடங்களில்
தேவாலய மணித்திடலில்
ஆலய விதானங்களில்
தன் முரலை குரல்வளைக்குள்
அடைத்து நிசப்தத்தை கொரித்தபடி
சாய்கழுத்தில்
மதமற்ற இறைமையை
இரையெடுத்துக் கொண்டிருக்கின்றன
முரல் நீங்கிய புறாக்கள்.”
– (பக் 138)
“மதமற்ற இறைமையை இரையெடுத்து” என்ற வரிகளில் கவிதை ஒரு தத்துவவெளிக்குள் மின்னலெனப் பாய்கிறது.
“காமத்தின் மீதொரு காலும்
காதலின் மீதொரு காலும்
பிணைத்த படி“
– (பக் 77)
உடன்பாட்டுத் துயர் மட்டுமல்ல; சம்பத்ஜியின் கவிதைகள் இந்த இரண்டிலும் இணைந்து பயணிக்கின்றன. அப்பயணத்தில் நிறுவன மயமான குடும்பம் முதல் கோவில்வரை பெண்ணோடு இயங்கினாலும் பெண்ணுடலை விலக்கி வைப்பதில் தப்பித்தலுக்கான சகல வழிகளையும் கண்டுபிடிக்கின்றன.
“தூமைப் பாசியில் நீந்தி
வழுக்கி விழுந்த
வாழ்வெங்கும் கழுவ
தீராப் பிசுபிசுப்பு.
எத்துனை கழுவியும் உலரா பிசுபிசுப்பை
அயர்ச்சியில் கைவிட்டேன்.
தாமதமாய்
அறிய நேர்ந்தது
அது தப்பித்தலுக்கான முன்தீர்மானமென்று.”
– (பக் 140)
காலம் கடந்து வரும் உடல்மொழியை வாசலில் பசிய சாணத்தில் சொருகிய பூசணிப்பூ கனவுகள் அறுபட கனவு ஏடாக மட்டுமே தேங்கிவிடுகிறது வாழ்க்கை. யாரும் வருவதில்லை, யாரும் போவதில்லை, யாரும் திறப்பதில்லை, ஆனாலும் இருக்கிறது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆழ்புதைவில் இன்னொரு முகம். அந்த ரகசியம் ரகசியமாக இருப்பதையே உன்னதங்கள் என்று கொண்டாடும் வாழ்க்கையை கவிஞரின் முரல் அங்ககத்துடன் கடந்து செல்கிறது.
“புழங்கவில்லை எனினும்
விரும்பத்தக்க
பின்கதவு”
– (பக் 54)
இதையே இன்னொரு கவிதையில் நினைவறைச்சுடராக
“உள்ளும் புறமும்
ஒருசேரத்
தாழிட முடிவதில்லை.
விரும்பத்தக்கதாய் இல்லை
எனக்கான உள்ளறைகள்”
– (பக் 112)
ஆண்டாளின் கண்ணனை இதுவரை யாரும் கற்பிக்காத இன்னொருன் காட்சியினூடாக நிறுத்தி “அன்றலர்ந்த ஆண்டாளின் “பசலை துடைக்கிறது முரல் புறா. அவனும் கண்ணன்தான். கண்ணன்கள் காலம் தோறும் ஆண்டாள்களின் பசலைத் துடைப்பதில்லை. காரணம் கண்ணன் காணமுடியாத உலகம் ஆண்டாள்களுடையது. பிறவி இருளில் சிக்கிக்கொண்ட கண்ணன் பிறவிப்பெருங்கடல் நீந்தவும் அவன் காயப்படும்போதெல்லாம் கைலாகு கொடுத்து கடைந்தேற்றவும் வருபவள் எப்போதும் ஆண்டாளாகவே இருக்கிறாள் . மற்றவர்கள் கடந்து செல்கிறார்கள். யுகாந்திர வேட்கையோடு இருப்பவள் அவள். ஒரு கணத்தில் யுகங்களின் பசலையைத் துடைத்துவிடும் ஆண்டாளாக பாற்கடலை வசப்படுத்தி விடுகிறாள். முரல் நீங்கும் இத்தருணத்தில் கண்ணனும் இதுவரை கடக்க முடியாத கோபியர்களின் உலகத்தைக் கடந்து விடுகிறான். அத்தனையும் ஆண்டாளின் கைலாகு கொடுத்த கடைத்தேற்றல்.
“இருளாண்டாள்” கவிதையில்தான் ஆண்டாள் இத்துனை அதிசயங்களையும் செய்கிறாள். இக்கவிதை கண்ணிழந்த ஒருவன், தார்ச்சாலையை கடக்கும் காட்சியின் ஊடாக எந்திரமயமான சூழலுக்கு நடுவில் ஒரு பெண்மனம் செய்யும் கருணையின் செயலாக – புறக்காட்சியில் விரிகிறது, ஆனால், கவிதை பயணிப்பது ஆண்டாளின் யுகாந்திர வேட்கைப் பயணத்தில் பசலைப் பாடினியின் கைலாகு கொடுத்து கண்ணனையும் கரைசேர்த்த பெண்ணியப் பெருவெளியாக விரிகிறது. மரபின் தொன்மங்களையும் படிமங்களையும் கொண்டு கவிதை பல்வேறு தளங்களில் தன்னை எழுதிக்கொள்கிறது.
“மெழுகுப்பூத்த விழிகளால்
பேரூழியை இசைத்துக் களைப்புற
தனது புல்லாங்குழலைத்
தளர்த்தினான் கண்ணன்.
…. பிறவியிருள் குடைந்து
ஊழித்திசை அழைப்பில்
உத்தேசத்தில்
கடந்து கொண்டிருந்தான் வாழ்வை
இருளோடியாய்.
—
யுகாந்திர வேட்கையோடு
தனித்த மென்னொளியில்
ஒளிர்ந்துகொண்டிருந்தவள்
உன்னித்தெழுந்த தடமுலைகளதிர
வழியும் பசலையை
துப்பட்டாவால் துடைத்தவாறே
சிதறிய கருணைகளை
அள்ளிக் கையளித்து
கைலாகில் கடைதேற்றுகிறாள் கண்ணனை.
பசலைப்பாடினி
அன்றலர்ந்த ஆண்டாள்.”
– (பக் 52, 53)
ஆணில் சரிபாதியாக பெண் இருக்கிறாள் என்பதை அடையாளப்படுத்தும்போது ஆண் முதன்மையானவனாக முன்னிறுத்தப்படுகிறான். அதாவது அடையாளங்கள் அனைத்தும் ஆண்வழி மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றன. மாதொருபாகன் என்றே அழைக்கிறோம். அர்த்த நாரீஸ்வரன் தான் அடையாளமே தவிர, அர்த்த நாரீஸ்வரி அல்ல. மொழிக்கிடங்குகள் நம் சிந்தனையை ஓர்மையை வெல்லும் இடமிது. அதனால்தான் மொழி எப்போதுமே ஆண் மைய சிந்தனையின் வெளிப்பாடு என்று பெண்ணியப் பெருவெளி அதைக் கட்டுடைக்கிறது. இந்த வெளியில் சம்பத்ஜியின் “பாகமுகி” பெயரிலும், கவிதை வடிவத்திலும், வரிகளிலும், கருத்தியல் ஓட்ட த்திலும் பெரும் வெடிப்பை ஏற்படுத்திய கவிதை வெளியாக இருக்கிறது. “பாகமுகி” என்று பெண்ணை மையப்படுத்தி வரும் அடையாளமாக வாசிப்புக்கு வசப்படும்போது ஏனோ “மாதொரு பாகமெனில் உனது பிழையிலும் பாகமாவேன்” என்ற வரிகளில் வரும் “மாதொரு பாகன்” நெருடலாகிவிடுகிறது.
“நஞ்சுண்ணலும் இறைமையின் ஒற்றைத்துயர்,…
நாம் ஏராளமான மன்னித்தல்களை முன் கூட்டியே பகிர்ந்துள்ளோம்”
(பாகமுகி.. பக் 126)
நீருறவு பெண்ணானது வியப்பில்லை. அவள் ஆழ்துளைக்கிணறானதும் வியப்பில்லை. ஆழ்துளைக்கிணறின் புறச்செயல்பாடுகள் அனைத்தும் பெண் மீதான சமூகத்தின் வன் கொடுமைகளாக கவிதை விரிவதும்
தண்ணீரைச் சுமந்தலையும் சமூகம் நத்தையாக ஊர்ந்து கொண்டிருப்பதும் சம்பத்ஜியின் கவிதைதுளிகளின் பிரக்ஞைப் பூர்வமான சமூக மனிதனின் ஈரத்துளிகள்.
வண்ணதாசன் சொல்லி இருப்பது போல சம்பதிஜி யின் கவிதைமொழி சுயம்புவானது. தமிழ் படைப்புலகின் முரலோசைக்கு வாழ்த்துகள்.
கவிதை நூல் : முரல் நீங்கிய புறா
கவிஞர் : சம்பத்ஜி.
வெளியீடு: புது எழுத்து
பக்கங்கள்: 144
விலை: ரூ 120.
*****