Short story: A window to the world.
Author: Issac Bashevis Singer (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்)
திறமையுடன் எழுதத் துவங்கும் சில எழுத்தாளர்கள், விரைவில் வாசகர்கள், விமர்சகர்களிடையே புகழடைந்த பிறகு திடீரென நிரந்தரமாக அமைதியின் வசமாகி விடுகிறார்கள். அத்தகைய இருவர் வார்சாவின் யூத மொழி எழுத்தாளர் சங்கத்தில் இருந்தனர். ஒருவர் மெனாஹெம் ரோஷ்போம். தன்னுடைய முப்பது வயதிற்குள் மூன்று நாவல்களை எழுதி முடித்தவர். இன்னொருவர் தம் இருபத்தி மூன்று வயதுக்குள் மிக நீண்ட கவிதையொன்றை எழுதியுள்ள ஜிம்மெல் ஹெஷெல்ஸ். இவர்கள் இருவருடைய படைப்புகளுக்கும் யூத ஊடகங்கள் சிறப்பான மதிப்புரைகள் வழங்கின. ஆனால் கிராமத்துப் பழமொழி ஒன்றில் சொல்லியிருப்பது போல மூடிக் கொண்ட அவர்களுடைய இலக்கிய கர்ப்பப் பைகள் அதற்குப் பின்னெப்போதும் திறக்கவே இல்லை.
நான் எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினரானபோது ரோஷ்போம் தன்னுடைய ஐம்பதுகளின் இறுதியிலும், ஹெஷெல்ஸ் தன் நாற்பதுகளின் இறுதியிலும் இருந்தனர். நல்ல சதுரங்க விளையாட்டு வீரர்களாகக் கருதப்பட்ட அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடுவதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். மெனாஹெம் ரோஷ்போம் எப்போதும் ஒரு இசைத் துணுக்கை மென் குரலில் பாடிக் கொண்டு, இடமும் வலமுமாக அசைந்தாடி, முகத்தைச் சுளித்து, தன்னுடைய வெண்மையும் கறுமையும் கலந்த ஆட்டுதாடியில் மீதமிருக்கிற சில முடிகளைப் பிடுங்க முயற்சி செய்து கொண்டிருப்பார். சதுரங்கப் பலகையின் ஒரு காயை நகர்த்துவது போல தன் கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் உயர்த்துவார். பிறகு தீக் காயம் ஏற்பட்டது போல திடீரென அவற்றைப் பின்னிழுத்துக் கொள்வார். ஹெஷெல்ஸை விட அவர் சிறந்த விளையாட்டு வீரர் என்று சொல்லப்பட்டாலும் விளையாட்டு இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது தவிர்க்க முடியாமல் தன் பொறுமையை இழந்து விடுவார். உயரமும் மெலிந்த சுருக்கங்களுடன் கூடிய வளைந்த உடலமைப்பும் கொண்ட மெனாஹெம் ரோஷ்போம் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவருடைய விரல்களும் நகங்களும் மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தன. தொடர்ந்து மோசமாக இருமிக் கொண்டிருந்த அவர் ஆழ்ந்த உறக்கத்திலும் புகை பிடிப்பார் என்று சொல்லப்பட்டது. புனைவு எழுதுவதை நிறுத்திய பிறகு இதழியல் துறையில் நுழைந்து வார்சாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த யூத தினசரி பத்திரிகைகள் இரண்டில் ஒன்றில் பணியமர்ந்தார். அதில் வெளியிடப்பட்ட பொழுதுபோக்குப் புனைவுகளின் விமர்சனப் பிரிவுக்கு தலைமை எழுத்தாளராக பொறுப்பேற்றார். நுரையீரல் காசநோய் இருந்ததாக சொல்லப்பட்டாலும் பல பெண்களுடன் குறிப்பாக யூத நாடக நடிகைகளுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது. தன் மூன்று மனைவியரை விவாகரத்து செய்திருந்தார். அந்த மூன்று மனைவிகள் மூலம் அவர் பெற்ற குழந்தைகள் அனைவரும் தமக்கு வேண்டிய பணத்துக்காக அவரையே நாடினர். யூத நடிகரின் மனைவி ஒருத்தி அவருடைய வைப்பாட்டியாக நீண்ட காலம் இருந்தாள். தன் மனைவியை ரோஷ்போம் உடன் இருக்க அந்த நடிகர் ஏன் அனுமதித்தார் எனத் தீர்மானிக்க முடியவில்லை. அவர் அதிபுத்திசாலித்தனமும் இழிதன்மையும் இணைந்த ஒருவர் எனப் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இலக்கியத்தின் மதிப்பையும் புகழின் மாயை பற்றியும் தன் உரையாடல்களிலும் கட்டுரைகளிலும் அவர் அடிக்கடி சிறுமைப்படுத்தி வந்தார். விருந்துகளில் பிறர் தனக்கு மரியாதை அளிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவரை யாராவது எழுத்தாளர் ரோஷ்போம் என்று அழைத்தால் “பின்னாளில் ஒரு வேளை நான் அவ்வாறு ஆகலாம்” என்று பதிலுரைப்பார்.
ஜிம்மெல் ஹெஷெல்ஸ் மெலிந்த உடல் வாகுடைய, அதிகம் பேசாத, கூச்ச சுபாவமுள்ள ஒரு தனிமை விரும்பி; திருமணமாகாதவர். அவருடைய குறுகலான முகத்தின் கன்னங்கள் எப்போதும் அழுத்தமாக சவரம் செய்யப்பட்டும் கன்னங்கள் இயல்பைவிட மென்மையாகவும் இருக்கும். பளபளப்பும் அடர்த்தியும் கொண்ட பழுப்பு நிறத் தலைமுடி ஆண் தன்மையற்றுத் தோற்றமளிக்கும். தாடி வளர வாய்ப்பற்ற மூன்றாம் பாலினத்தவர் என்று சிலர் அவரைக் கருதினர். ஒரு கம்பை வைத்துக் கொண்டு தன்னுடைய ஒரு காலை இழுத்திழுத்து நடப்பார். அவர் அணிந்திருக்கும் காலணிகளில் ஒன்றின் குதிகால் பகுதி மட்டும் சற்று உயரமாக இருக்கும்.
கோடையாக இருந்தாலும் குளிர்காலமாக இருந்தாலும் அகலமான கறுப்பு நிறத் தொப்பியும், கலைஞர்கள் வழக்கமாக தங்கள் கழுத்தைச் சுற்றி அணியும் பருத்தியாலான மெல்லிய அலங்காரத் துகிலும், கணுக்காலை மறைக்கும் நீளமான காற்சட்டையும் அணிந்தபடி தான் இருப்பார். கோடை விடுமுறை நாட்களில் ஒரு பிழை திருத்துனராகப் பணியாற்றித் தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த ஜிம்மெல் ஹெஷெல்ஸ் போன்ற ஒரு பரம ஏழை இந்த அளவுக்கு உடை உடுத்துவதே கூட கண்ணியமானது எனலாம். இலக்கியம் குறித்த தன் லட்சியத்தை அவர் இன்னும் விட்டுவிடவில்லை. எதையும் பிரசுரிக்கவில்லை என்றாலும் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது அறியப்பட வேண்டிய ஒன்று. பேனா நண்பர்கள் வட்டத்தில் உறுப்பினரான அவர் மாலை வேளைகளில் நடந்த இலக்கியக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார். தொழில் சார்ந்த ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தார். புகைபிடிப்பது, உதடுகளை மூடியபடி மென்மையாகப் பாடுவது, முகஞ்சுளிப்பது ஆகிய எதையும் அவர் செய்யவில்லை. தினமும் சரியாக நண்பகல் பனிரெண்டு மணிக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு வரும் அவர் எலுமிச்சைச் சாறு கலந்த ஒரு கோப்பைத் தேநீரை மட்டும் குடித்து, செய்தித் தாள்களை வாசித்து, ரோஷ்போம் அல்லது வேறு யாருடனாவது சதுரங்கம் விளையாடிவிட்டு மதிய உணவு உண்பதற்காக கூட்டம் அதிகரிக்கத் துவங்கும்போது, இரண்டு மணிக்கு அங்கிருந்து வெளியேறுவார்.
ஹெஷெல்ஸ் தன் உணவைத் தானே சமைத்து உண்பதுடன் தன் துணிகளையும் அவரே துவைத்துக் கொள்வதாக எழுத்தாளர் சங்கத்தில் பேசிக் கொண்டார்கள். கெர்சலாக்கில் பேரம் பேசி வாங்கும் ஒரு இடத்தில் ராணுவத்தினர் உண்ணும் விலை குறைவான வகை ரொட்டியை அவர் வாங்கியதைப் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். உணவுக்கும் உடைகளுக்கும் தான் செலவிடும் சொற்பத் தொகையை இதழியல் சங்க நிர்வாகிகளிடம் ஒரு முறை அவசரப்பட்டு வாய் தவறி உளறிவிட்டார். அவராகவே வெளிப்படுத்தியிராவிட்டால் அதை ஒருவருமே நம்பியிருக்க மாட்டார்கள்.
மெனாஹெம் ரோஷ்போமின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தது. ஆனால் எப்போதும் சதுரங்கப் பலகையின் எதிரே நிமிர்ந்து அமர்ந்திருக்கிற ஜிம்மெல் ஹெஷெல்ஸ், தன்னுடைய நிலைப்பாட்டை ரோஷ்போம் வெளிப்படுத்திய பிறகு “அப்புறம்… அந்த ராஜா எங்கே போனார்?” என்று முணுமுணுப்பார்.
எங்களைப் போன்ற வர்ணனையாளர்களுக்கு அரசர் வலைக்குள் சிக்கிக் கொண்டது தெரியும். நிலைமை நம்பிக்கையற்றுப் போவதை உணர்ந்தவுடன் ரோஷ்போம் எல்லா சதுரங்கக் காய்களையும் தன் கைகளால் வீசித் தள்ளிவிட்டு “நான் அந்த சிப்பாயை நகர்த்தி இருக்கக் கூடாது” என்பது போன்ற எதையாவது சொல்லிக் கொண்டே அடர்த்தியான கரும்புகையை ஜிம்மெல் ஹெஷெல்ஸின் முகத்துக்கு நேராக ஊதுவார்.
இளம் எழுத்தாளர்களாகிய நாங்கள் அவர்கள் இருவரும் ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டார்கள் என்ற விசயத்தை அடிக்கடி கிளறுவோம். குறிப்பாக ஜிம்மெல் ஹெஷெல்ஸ் பற்றிய துணைக் கதைகள், வதந்திகள் குறித்துப் பல முறை பேசிக் கொள்வோம். அவர் திருநங்கையா அல்லது ஆண்மையற்றவரா? அவருக்கு ஆண்களுடன் ரகசியத் தொடர்பு இருந்ததா? அவர் உண்மையில் எதாவது எழுதிக் கொண்டிருந்தாரா அல்லது வெறும் தற்புகழ்ச்சியா? தான் எழுதாமல் இருக்கும் மற்ற நேரங்களை, பகலிலும் இரவிலும் அவர் எவ்வாறு கழிக்கிறார்?திரையரங்குகளில், நாடகங்களில், நூலகங்களில் அவ்வளவு ஏன் நடைப்பயிற்சியில் கூட அவரைப் பார்க்க முடிவதில்லை. அவர் எப்போதும் அதே ஆடைகளை மறுபடி அணிந்தாலும் அவை தூய்மையாகவும் புதிது போலவும் தோற்றமளிக்கும். சங்கத்தின் இளம் எழுத்தாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கு விஷயம் எதுவும் இல்லையெனில் தங்கள் கவனத்தை ஜிம்மெல் ஹெஷெல்ஸ் பக்கம் திருப்பி விடுவார்கள். பூரணமான வாழ்வுக்கான வழியை அவர் கண்டுபிடித்துவிட்டாரா?
இந்த மனிரைப் பற்றி மட்டும் குறிப்பாக ஒரு ஆவல் எனக்கு இருப்பதை உணர்ந்தேன். என் நடத்தை குறித்த திட்டங்களை நான் தொடர்ந்து வகுப்பதும் பிறகு அவற்றை எப்போதும் மீறுவதும் தொடர் நிகழ்வுகள். நான் ஒரு சைவ உணவாளனாக முடிவெடுத்த மூன்றாம் நாள் கொத்துக் கறியை உண்டு கொண்டிருந்தேன். அறநெறியையும் ஆன்மீக தூய்மையையும் வாழ்வின் விதிமுறைகளாகக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன். எழுத, வாசிக்க, உறங்க, உடற்பயிற்சிக்கு, நடைப் பயிற்சிக்கு என ஒவ்வொன்றுக்கும் இத்தனை மணி நேரங்கள் என்று அர்ப்பணிக்க உறுதி பூண்டேன். ஆனால் இவை எதையும் நான் செய்யவில்லை. நான் ஜிம்மெல் ஹெஷெல்ஸ் உடன் ஒரு உரையாடலை நிகழ்த்துவதற்குப் பல முறை முயற்சி செய்தேன். ஆனால் அவர் சுருக்கமாகவும் கூர்மையாகவும் பதிலளித்ததால் மேற்கொண்டு பேசுவதற்கு விரைவிலேயே எதுவும் இல்லாமல் போனது. சொற்களுக்குப் பதிலாக சில சமயங்களில் அவர் தன்னுடைய தலையை மட்டும் ஆட்டுவார் அல்லது ஒரு கையை மட்டுமே அசைப்பார். ஜிம்மெல் ஹெஷெல்ஸ் தனக்குத் தானே விலங்கிட்டுக் கொண்டு தன் வாழ்வின் இறுதிக் காலம் வரை அதனுடனே இருந்து விடுவதைப் போலத் தோற்றங்காட்டினார். அவர் எழுதி வெளியிட்ட கவிதை நூல்கள் புத்தக விற்பனைக் கடைகளில் மட்டுமின்றி யூத நூலகங்களில் இருந்தும் கூட மறைந்து போனது விசித்திரமாக இருந்தது. எண்ணற்ற சமயங்களில் நான் அவற்றை வாசிக்க விரும்பியும் ஒரு பிரதியைக் கூட என்னால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு முன்பே நான் உளவியல் ஆய்வில் விருப்பங் கொண்டிருந்தமையால் ஜிம்மெல் ஹெஷெல்ஸ் ஒருவேளை ஆவி என்று சொல்வார்களே அதுவாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
பனிக்கால மாலையொன்றில் நான் என் அறையில் தங்காமல் எழுத்தாளர் சங்கத்துக்கு சென்று, ஒருபோதும் முடிவுறாது என்று நான் உறுதியாக முடிவெடுத்திருந்த என் நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது என் சக இளம் எழுத்தாளர்கள் ஒருவிதமான பரபரப்புடன் ஓடிவந்தனர். சற்று நேரத்துக்கு முன்பு நடைபெற்று முடிந்த பந்தயத்தில் தனிச் சிறப்பு மிக்க வெற்றியடைந்த ஒருவனுடையதைப் போல அவர்களுடைய கண்கள் ஒளிர்ந்தன. அந்த கும்பலில் இருந்த ஷ்முவெல் பிளெச்மேன் என்கிற புரளி பேசுபவன் என்னிடம் , “உனக்கு இந்த விசயம் முன்பே தெரியுமா?” என்றான்.
“எந்த விசயம்?” என்றேன்.
“உனக்குத் தெரிய வேண்டுமா? இல்லையா? என்னவாக இருக்கும் என்று யூகிக்க முயற்சி செய்யேன்” என்றான்.
“கூரை மீது பறந்து சென்ற ஒரு காகம் செம்பு முட்டைகளை இட்டது” என்றேன் நான்.
“அதைவிட மிக விநோதமான ஒன்று” என்றான்.
நான் நடக்க வாய்ப்பற்ற ‘மீட்பர் வந்துவிட்டார், ஸ்டாலின் ஸியோனிஸ்ட் ஆகிவிட்டார், யூத எதிர்ப்பாளரான நோவொஜின்ஸ்கி யூத மதத்தைத் தழுவினார்’ போன்ற சிலவற்றைச் சொன்னேன்.
இதற்கு மேல் அங்கு நிலவிய நிச்சயமற்ற தன்மையைத் தாங்கிக் கொள்ள முடியாத ஷ்முவெல் பிளெச்மேன், “ஜிம்மெல் ஹெஷெல்ஸ் திருமணம் செய்து கொண்டார்” என்று கூவிக் கொண்டே கைகளைத் தட்டி, சிரித்து ஆரவாரம் செய்தான். மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.
ஏனோ அப்போது சிரிக்கும் மனநிலையில் இல்லாத நான், “அந்த அதிர்ஷ்டக்கார மணப்பெண் யார்?” என்று கேட்டேன்.
“வந்து பார்” என்றவன் என்னை அடுத்திருந்த நீண்ட அறைக்குள் தள்ளினான். விருந்தினர்களோ எங்களைப் போன்ற புதியவர்களோ அல்லாது, சங்கத்தின் நீண்ட கால உறுப்பினர்களான மூத்த எழுத்தாளர்கள் அங்கு அமர்ந்திருந்தனர்.
அங்கிருந்த சுவர்கள் வண்ணமயமான சித்திரத் துணிகளாலும் தங்க முலாம் பூசிய சட்டங்களிட்ட ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டவை. ஒரு பியானோ இசைக்கருவியும் காணப்பட்டது. அங்கிருந்த மேடையில் அவ்வப்போது கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. மேடையின் மிக அருகில் யார் வேண்டுமானாலும் அமரக் கூடிய ஒரு நீண்ட இருக்கை இருந்தது. ஆனாலும் சங்கத்தின் மேல்மட்ட குழுவைச் சார்ந்தவர்களான சங்கத்தின் தலைவர், மன்ற உறுப்பினர்கள், பிழை திருத்துனர்கள், செவ்வியல் எழுத்தாளர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மட்டுமே வழக்கமாக அதில் அமர்ந்திருப்பர். அயல்நாட்டு விருந்தினர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள் அந்த இடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தொடக்க கால எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்கள் பொறாமையைப் பிரதிபலிக்கும் வகையில் அதனைச் ‘செயலற்றோர் இருக்கை’ எனப் பெயரிட்டு அழைத்தோம்.
இம் முறை அந்த இருக்கை முழுதாக நிரம்பி இருந்தது. அதில் நடுநாயகமாக ஜிம்மெல்ஸ் வீற்றிருக்க அவருக்கு அருகே வெளிநாட்டுப் பெண்ணின் தோற்றத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள். அகலமான வளைந்த அடிப்பகுதியைக் கொண்ட கறுப்பு நிறத் தொப்பி அணிந்திருந்த அவள், எழுத்தாளர் சங்கத்திலோ இதுவரை நான் சுற்றிய சாலைகளிலோ கண்டிராத ஒரு வகையான ஆடையை அணிந்திருந்தாள். அவளுடைய முகம் சிறுமியைப் போலக் குறுகலாகவும், கண்கள் பெரியதாக, கறுத்து, பிரகாசமாகவும் இருந்தன. நான் வியப்பில் வாய் பிளந்து நின்றேன்.
எங்கள் குழுவில் இருந்த ஒருவன் என் கழுத்தில் கிள்ளி “சரி. இப்போது என்ன சொல்கிறாய்?” என்றான்.
அந்த நீண்ட இருக்கையில் இருந்த ஒருவர் எங்களைப் பார்த்து குரைக்கும் ஓசையை எழுப்பி கதவை மூடுமாறு சொன்னதும் நாங்கள் சிறிய மண்டபத்துக்குத் திரும்பச் சென்றோம். ஷ்முவெல் பிளெச்மேன் என்னிடம் ,
“இதற்கு என்ன சொல்கிறாய்?” என்றான்.
“அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.
“ஹைண்ட் நாளிதழில் இது பற்றிய ஒரு அறிவிப்பு இருந்தது” என்று பதில் சொன்னவன் மேஜையில் இருந்த செய்தித் தாள்களைக் கிளறிப் பார்த்தபோது அந்த அறிவிப்புப் பகுதியை மட்டும் யாரோ கிழித்து எடுத்து விட்டிருப்பது தெரிந்தது.
விசயம் மெல்ல கசியத் துவங்கியது. லீனா ஹெஷெல்ஸ் எனும் உறவுக்காரப் பெண் அர்ஜெண்டினாவின் தலைநகரான ப்யூனோஸ் ஐரிஸில் இருந்து வார்சாவைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறாள். ஜிம்மெலைக் கண்டவுடன் காதல் கொண்ட அவள் அவரை உடனே மணந்து கொண்டாள். எழுத்தாளர் சங்கத்துக்கு ஜிம்மெல் ஓரிரு நாட்கள் வராததைக் கூட நாங்கள் கவனித்திருக்கவில்லை. அருகில் வாழ்ந்த ஒரு மதகுருவின் வீட்டில் மணவிழா நடைபெற்றிருக்கிறது. ஜிம்மெலின் மற்ற விசயங்களைப் போலவே அவருடைய திருமணமும் ரகசியமாக இருந்திருக்கும். ஸ்பானிஷ் கவிஞரான லீனா ஹெஷல்ஸ், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் குழுவில் இருந்து போலிஷ் எழுத்தாளர் குழுவுக்கு சிபாரிசுக் கடிதங்களைக் கொண்டு வந்திருக்கிறாள். புகைப்படத்துடன் அவளுடைய பேட்டி போலிஷ் செய்தித் தாளொன்றில் வெளியானதன் மூலம் தான் யூத எழுத்தாளர் சங்கத்துக்கு ஜிம்மெல் ஹெஷெல்ஸின் திருமண விசயமே தெரிந்தது. எழுத்தாளர் சங்கத்தின் காரியதரிசியாக இருந்த ஒரு கவிஞர் ஒவ்வொரு கோடையிலும் ஜிம்மெலை வேறொருவருக்கு மாற்று ஆளாகப் பணியில் அமர்த்துவதற்காக சிறப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்தது. ஜிம்மெலுடன் நீண்ட நேரம் வாதிட்ட பிறகே அவரால் ஜிம்மெலைத் தன் மனைவியுடன் விருந்துக்கு வரச் சம்மதிக்க வைக்க முடிந்தது.
ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகிற இதழ்களுடன் எழுத்தாளர்களுக்குத் தொடர்பிருக்கிற நற்குணமுள்ள உலகின் மீது யூத எழுத்தாளர் சங்க உறுப்பினர்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஜிம்மெல் ஹெஷெல்ஸ் வார்சாவிலிருந்த யூத எழுத்தாளர்களுக்கு உலகத்தின் சாளரம் ஒன்றைத் திறந்து வைத்தார்.
திருமண வரவேற்புக்குப் பிறகு வந்த ஒன்றிரண்டு வாரங்களுக்கு ஜிம்மெல் ஹெஷெல்ஸ் எழுத்தாளர் சங்கத்துக்கு வரவில்லை. பலரும் கருதியது போல அவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதோடல்லாமல் ஸ்பானிஷ் மொழியில் கவிதைகள் எழுதும் ஒரு அழகிய இளம் பெண்ணின் மனதைக் கவரக் கூடிய ஆண்மை மிக்கவர் என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. சில நாட்களுக்குப் பிறகு ஜிம்மெல் மறுபடி எழுத்தாளர் சங்கத்துக்கு வரத் துவங்கினார். தனியாக வராமல் லீனாவுடன் வந்தவர் இரண்டு கோப்பைத் தேனீருடன் பிஸ்கெட்டும் தருவிக்கலானார். அவர் மறுபடி சதுரங்கம் விளையாடியபோது வர்ணனையாளர்களின் அருகே நின்று கொண்டோ அமர்ந்தபடியோ லீனாவைக் காணமுடிந்தது.
லீனா பேசிய யூதமொழி ஸ்பானிஷ் உச்சரிப்புடன் இருந்தது. அவள் இளம் எழுத்தாளர்களுடன் குறிப்பாக கவிஞர்களுடன் விரைவாக அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டாள். ஜிம்மெல் ஹெஷெல்ஸ் எந்த அளவுக்கு அமைதியானவரோ அதே அளவுக்கு லீனா பெரும் பேச்சுக்காரி. அர்ஜென்டினாவில் வாழ்ந்த ஸ்பானிஷ் எழுத்தாளர்கள், அங்கு வெளியிடப்படும் சிற்றிதழ்கள், காபிக் கடைகள், இலக்கிய சச்சரவுகள், சூழ்ச்சிகள், அவதூறுகள் ஆகிய அனைத்தைப் பற்றியும் அவள் பேசினாள். வார்சாவில் வாழ்ந்த எங்களைப் போலவே அர்ஜென்டினாவின் இளம் எழுத்தாளர்களும் புகழ் பெற்ற இதழ்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தனர். அதனால் ஒரு கவிதையையோ கதையையோ பதிப்பிப்பது அவர்களுக்கும் கடினமாக இருந்ததை நாங்கள் அறிந்து கொண்டோம். சில எழுத்தாளர்கள் தாங்களே செலவு செய்து தம் நூல்களைப் பதிப்பித்தனர். இங்கிருந்த விமர்சகர்களுக்குப் புதிய உலகம், புதிய பாணிகளுக்கான அணுகுமுறை குறித்து எப்படி மிகக் குறைந்த அளவு புரிதல் இருந்ததோ அதே அளவு புரிதலையே அங்கிருந்த விமர்சகர்களும் வெளிப்படுத்தினர். லீனா யூத இனத்தவளாக இருந்ததாலும், அவளுடைய பெற்றோர் போலந்து நாட்டிலிருந்து குடியேறியவர்கள் என்பதாலும் சில குறிப்பிட்ட பிரச்சினைகள் லீனாவுக்கு இருந்தன. அர்ஜென்டினாவிலேயே பிறந்திருந்தாலும் அதுநாள் வரையில் அந்நாட்டின் குடியுரிமை அவளுக்குக் கிடைக்கவில்லை.
வெளி உலகத்திலிருந்து எங்கள் நாட்டை சுற்றிப் பார்க்க வந்து, எங்களுள் ஒருவரான யூதக் கவிஞனை, ஒரு வறியவனை மணந்த அவளுடைய பேச்சு வியப்பையும் அனுதாபத்தையும் எங்களுக்குள் தூண்டியது. யூத மொழி இலக்கியத்துடனான தன் பரிச்சயத்தை அதிகரிக்கவும் அதனைக் கற்கவுமான தன் ஆசையை லீனா வெளிப்படுத்தியபோது நாங்கள் அனைவருமே அவளுடைய ஆசானாக இருந்து சேவை செய்யத் தயாராக இருந்தோம். வாசிக்க ஒருவர், எழுத்துக் கூட்ட இன்னொருவர், யூத மொழியில் நுழைந்து விட்ட ஈப்ரு மொழிச் சொற்களைக் குறித்து விளக்க மூன்றாமவர் என லீனாவுக்குப் பல ஆசிரியர்கள் கிடைத்தனர். தினந்தோறும் எழுத்தாளர் சங்கத்துக்கு வரத் துவங்கியவள் தன் கணவர் அங்கிருந்த இரண்டு மணி நேரங்கள் மட்டுமல்லாது மதிய உணவுக்கு முன்னும் பின்னும் பல மணி நேரங்களை அங்கு செலவிட்டாள். தன் வயதுடைய மற்ற எழுத்தாளர்களுடன் அவள் நேரம் செலவழிப்பதை பொறாமை காரணமாக ஜிம்மெல் அனுமதிக்க மாட்டார் என்று நாங்கள் அனுமானித்திருந்தோம். ஆனால் அவர் அவள் மீது நம்பிக்கை கொண்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. நிறைய மூத்த எழுத்தாளர்களும் லீனாவுடன் நெருக்கம் கொள்வதற்கு நீண்ட காலமாகவில்லை. யூத நாளிதழ் ஒன்றின் இலக்கியப் பிரிவு ஆசிரியர் ஒருவர் லீனாவின் கவிதை ஒன்றை மொழிபெயர்த்து அவளுடைய புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை பதிப்பில் பெரிய எழுத்துக்களில் வெளியிட்டார். ஏறக்குறைய அவை மொத்தமுமே வழக்கமான கறுப்பு நிறத்தில் காட்சியளித்தன.
ஒரு நாள் தவிர்க்க முடியாத ஒன்று நிகழ்ந்தது. லீனா ஒரு யூத மொழிக் கவிதையை எழுதியிருந்தாள். விகாரமாக, கற்பனைத் திறனற்று இருந்த அந்தக் கவிதையைப் புகழ்ந்து, பரவசம் எய்திய இளம் கவிஞர்கள் யூத இலக்கியத்தின் ஒரு பகுதியாக மாறியமைக்காக அவளை வாழ்த்தினர். அக் கவிதையை எப்படி வளப்படுத்துவது, மூலத்துக்கு அதி நெருக்கமாக மாற்றுவது பற்றிய தங்கள் அறிவுரைகளைப் பொழிந்தனர். அவர்கள் சொன்ன எல்லா மாற்றங்களையும் லீனா ஏற்றுக் கொண்டாள். அத்தகையதொரு குப்பையை அவள் பிரசுரம் செய்வதை ஜிம்மெல் அனுமதிக்க மாட்டார் என்று கருதினேன். ஆனால் அவரோ அவளுடைய எழுத்துகளை கண்டுகொள்ளாது முழுமையாக உதாசீனப்படுத்தினார்.
பிறகு நான் போலி மீட்பரான ஜேகப் ஃப்ராங்க் பற்றி ஒரு குறுநாவல் எழுத ஆரம்பித்தேன். ஆனால் நான்காவது அத்தியாயத்தின் இறுதியில் எதிர்பாராத ஒரு தடங்கல் ஏற்பட்டு அதற்குமேல் என்னால் தொடர முடியவில்லை. தானாகவே நின்று போனது போலிருந்தது. ஐந்தாவது அத்தியாயத்தைத் துவங்க மறுபடி மறுபடி முயற்சி செய்து ஒரு முழு நாட்குறிப்பும் வீணானதே தவிர உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. இத்தகைய பிரச்சினைகளை ஒரு நீண்ட நடை தீர்க்கும் என்று பாயாட் எழுதிய எஜூகேஷன் ஆஃப் தி வில் அல்லது ஃபேரல்ஸ் எழுதிய ஸ்பிரிசுவல் ஹைஜீன் ஆகிய இரண்டில் எதிலோ நான் வாசித்த நினைவிருக்கிறது. அதைச் சோதனை செய்து பார்க்க முடிவெடுத்து வெம்மை மிகுந்த அந்தக் கோடை நாளில் க்ரேகோ புறநகர்ப் பகுதிக்குச் சென்ற நான் அப்படியே நடந்து நோவி ஸ்வியாட் தெருவை அடைந்து அங்கிருந்து உசாஸ்டோவ் அவென்யூ வரை சென்றேன்.வழியில் காணப்பட்ட புத்தக நிலையங்களின் ஜன்னல்கள் முன்பு சிறிது நேரம் நின்றேன். வரலாற்று நினைவுச் சின்னங்கள், தேவாலயங்கள், போலந்தின் மேட்டிமைத்தனம் குடியிருந்த வீடுகள் என எல்லாவற்றையும் கவனித்தேன். லாஸைன்கி பூங்காவுக்குள் நுழைந்த நான் அன்னங்கள் நீந்திக் கொண்டிருந்த குளத்தருகே வெகு நேரம் இருந்தேன். அங்கிருந்து பொனியாடாவ்ஸ்கி அரசரின் அரண்மனையைப் பார்க்க முடிந்தது.
குதிரைச் சவாரி செய்யும் ஆடைகளும் காலணிகளும் அணிந்த மெலிந்த உடலுடைய உயரமான இளம்பெண்கள் குதிரைகளில் என்னைக் கடந்து சென்றபடி இருந்தனர். அவர்கள் தங்கள் சேணங்களில் அமைதியாக நிமிர்ந்து அமர்ந்திருந்தது, எதோ ஒரு ரகசியத்தை அவர்கள் மற்றவர்களிடம் இருந்து மறைத்து தங்களுக்குள் மட்டும் வைத்திருப்பது போல எனக்குக் காட்சியளித்தது. மனித இனத்தை விட உயரிய வேறொரு இனமாக எனக்குத் தோன்றியது. வானத்தில் இருந்து விழுந்த தேவதைகள், ஆதி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேராற்றல் மிக்க ராட்சதர்கள் எல்லாம் இந்தப் பெண்களின் மீது காதல் கொண்டிருந்தனர் என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
என்னுடைய குறுநாவலில் நான் செய்துள்ள பிழை எனக்கு மெல்லப் புரிந்தது. ஜேகப் ஃப்ராங்க் துருக்கி மொழி பேசிய செபராது யூதர். அவருடைய தாய்மொழி யூதமொழி இல்லை. ஆகவே எனக்கு அந்நியமான கலாச்சாரமும் வாழ்க்கையும் கொண்ட ஒருவரை என் கதாநாயகனாகப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு எந்த உரிமையும் இல்லை. என்னுடைய ஈர்ப்பு போலந்தைச் சேர்ந்த அவருடைய சீடர்களான எலுஷா ஷார், ரப்பி நாஷ்மன் ப்ரெஸ்லோ, பிறகு மனம் மாறி தங்கள் பெயரை வொலொவ்ஸ்கி, மெஜெவ்ஸ்கி என்று அழகுற மாற்றிக் கொண்டவர்களிடம் மட்டும் இருந்திருக்க வேண்டும். முதலிலேயே இந்த உரிமையை அறியாமல் போனதற்காக நான் இப்போது வியப்படைந்தேன்.
அந்தி துவங்கியதும் பறவைகள் கீச்சிட்டன. ‘விஸ்டுலா நதியிலிருந்து தென்றல் வீசுகிறது’ என்ற பாடலை எங்கோ ஒரு இசைக்குழு பாடுவது கேட்டது. சூரியன் மறையுமுன்னே வானில் முழு நிலா எழுந்திருந்தது. தாவரங்கள், பூக்களின் நறுமணம் பசிய குதிரைச் சாணத்துடன் கலந்து வீசியது. இலக்கியத்துடன் சேர்த்து தனிப்பட்ட முறையிலும் சில வகையான சோதனைகளை நான் நிகழ்த்தினேன். இதற்கு முன்பே உலக யுத்தத்தையும் சில புரட்சிகளையும் நான் கடந்து வந்திருக்கிறேன். ரஷிய, ஜெர்மனிய, சுதந்திரமடைந்த போலந்து ஆகிய மூன்று ஆட்சிகளின் கீழ் நான் வாழ்ந்திருக்கிறேன். பால்ஃபோர் பிரகடனம் மூலமாக யூதர்களுக்கு யூத நாடு குறித்த உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. எத்தனை தலைமுறைகளுக்கு முன்பு நான் மதத்தைப் புறந்தள்ளினேன் என்று யாருக்குத் தெரியும். ஒரு பெரு வெடிப்பின் மூலம் தோன்றிய இந்தப் பிரபஞ்சம் பரிணாம வளர்ச்சியினால் உருவானது என்பதை நம்புவதற்கு நான் கடினமாக முயற்சி செய்தேன். வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே இந்தக் கிரகத்தில் நான் உலவி வருவதாக என்னுடைய இந்த இருபத்தி ஆறு வயதுக்குள் எனக்குத் தோன்றியது. வானம் இருள் கவிழத் துவங்கும் இத்தகைய நேரங்களில் ஆன்மாக்களின் அழிவற்ற தன்மையை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்.
என் முன் தெரிந்த காட்சியைப் பார்த்து நான் சட்டென நின்றேன். அடர்ந்த கிளைகளைக் கொண்ட ஒரு மரத்தின் பின்பிறம் இருந்த இருக்கையில் மெனஹெம் ரோஷ்போமும் லீனாவும் அமர்ந்திருந்தனர். அவர் லீனாவுடைய கைகளுக்குள் தன் கைகளைப் பொதித்திருந்தார். அவர்கள் பேசிக் கொண்டும் புன்னகைத்துக் கொண்டும் இருந்தனர். லீனா சிரித்தாள். ரோஷ்போம் அவளை நோக்கிக் குனிந்து முத்தமிட்டார். பேச்சிழந்த நான் அவர்கள் என்னைப் பார்த்து விடாதபடி அங்கிருந்த ஒரு மரத்தின் பின் வெகுநேரம் என்னை மறைத்துக் கொண்டு நின்றேன். மாப்பசான், ஸ்டிரிண்ட்பெர்க், அர்ட்ஸிபாஷெவ், குப்ரின், போலந்து எழுத்தாளர் கேப்ரியலா ஜபோல்ஸியா இன்னும் ஏராளமான எழுத்தாளர்கள் எழுதிய பாலியல் கதைகளை நான் இதற்கு முன்பே படித்திருக்கிறேன். ஓடோ வெணிங்கர் எழுதிய செக்ஸும் கேரக்டரும் கதையை நான் யூத மொழியாக்கம் செய்யக் கூட முயற்சி செய்திருக்கிறேன். கணவன் மனைவியருக்கு இடையேயான விசுவாசமின்மை குறித்து நானே சில கதைகளை எழுதிப் பிரசுரித்துள்ளேன். ஆனால் இத்தகைய துரோகத்தை இவ்வளவு நெருக்கத்தில் அனுபவிப்பது இதுவே முதல் முறை. என்னுடைய அப்பாவித்தனத்தை நினைத்து எனக்கே அவமானமாக இருந்தது. இதயம் படபடத்துத் தொண்டை அடைத்தது. என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. காதலர்களை வேவு பார்க்கும் விதமாக நான் அங்கு நிற்பது முறையற்றது என்று எனக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் என்னால் அங்கிருந்து நகர முடியவில்லை. லீனா ஜிம்மெலை மணந்து நான்கு மாதங்கள் கூட கடந்திருக்கவில்லை. அவர் அவளுடைய கணவன் மட்டுமல்ல உறவில் அவளுக்கு மாமன் முறையும் கூட.
ரோஷ்போம் அவளை விட நாற்பது வயது மூத்தவராக இருப்பார். அவருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வைப்பாட்டிகள் இருந்தார்கள். அவர் லீனாவைத் தம் பணத்தால் வீழ்த்தினாரா? அவள் அவரை உண்மையிலேயே காதலித்தாளா? அவளுக்குக் காதல் என்றால் என்னவென்று தெரியுமா?
போலந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தன் கவிதையிலும் யூத மொழிக் கவிதையிலும் லீனா காதலின் புனிதத்தைப் பற்றிப் பேசியிருந்தாள். என் மூத்த சகோதரன் ஜோஷ்வாவுடனான தன் சச்சரவுகளின் போது என் தந்தை காதலிப்பவர்கள் பிறன்மனை விரும்புபவர்கள், பொய்யர்கள் என்றும், இத்தகைய உணர்வுகளை விளக்கும் நாவல்கள் கடுமையான விடத்தை ஊட்டுவதாகவும் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். காதலர்கள் என்பவர்கள் தம் இணையை நேசிக்காமல் தம்மைத் தாமே நேசிப்பவர்கள் என்று என் தந்தை தர்க்கம் செய்தார். பெண் உடல்நலமின்றிப் போனாலோ உடல் இயக்கமற்றுப் போனாலோ காமுகனாகிய ஆண் அவளை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியுடன் சென்றுவிடுவான் என்று சொல்வார். என் சிறு வயது காரணமாக அந்த சமயத்தில் இத்தகைய உரையாடல்களில் நான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மணப் பொருத்தத்தை திருமணத் தரகர் மூலமாக மட்டுமே முடிவு செய்வது ஆசிய, வெறித்தனமான, ரோமப் பேரரசின் காலத்தைய பழமைவாதம் என்று வாதிட்ட என் சகோதரன் பக்கம் நான் ரகசியமாக நின்றேன். காதலித்து மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்கிற புனிதமான தீர்மானத்தை அந்த நேரத்தில் நான் எடுத்தேன்.
இருட்டத் துவங்கியது. இருக்கையில் இருந்த இரு நிழல் உருவங்கள் குவியலாக இணைந்தன. வேறு பக்கம் திரும்பிக் கொண்ட நான் இன்னொரு நுழைவாயில் வழியாக வெளியே சென்று ஒரு திறந்த பயணவண்டியில் ஏறி வீடு சென்று சேர்ந்தேன். மக்களைப் பித்தாக்குகிற கோடைக் கால இரவுகளில் ஒன்றாக அது இருந்தது. சூரியன் மறைந்து வெகுநேரம் ஆன பிறகும் வானம் அந்த நாளின் வெளிச்சத்தை இன்னும் தக்க வைத்திருந்தது. வெப்ப அலைகள் அதிலிருந்து வீழ்ந்து கொண்டிருந்தன. ஜோடிகள் திரளாக நடைபாதைகளில் நடந்து கொண்டிருந்த காட்சி, நடை போல அல்லாமல் நடனம் போல என் கண்ணுக்குத் தெரிந்தது. ஆண்கள் வெளிர் நிற ஆடைகளும் வைக்கோலால் ஆன தொப்பிகளும் அணிந்திருந்தனர். பெண்கள் பூக்களாலும் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தொப்பிகள் அணிந்திருந்தனர். பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் அவர்களுடைய மார்பின் வளைவுகள், இடுப்பு, பின்புற அழகை கவினுற வெளிப்படுத்தின. அவர்கள் அனைவரும் காதலின் போதையில் மூழ்கி இருந்தனர். ஆனால் நான் அவர்களைப் பரிதாபத்துடன் கூர்ந்து கவனித்தேன். அவர்கள் தங்கள் தாடை வரை நிரம்பியிருந்த பொய்யிலும் புரட்டிலும் புரண்டு கொண்டிருந்தனர். களைத்துப் போன என் எலும்புகள் வலித்தன. நான் திடீரென முதுமை எய்திவிட்டது போலிருந்தது. மனித முயற்சியின் அத்தனை தற்பெருமைகளையும் உணர்ந்தவர்கள் ஒளிந்து கொள்வதற்கு யூதத் துறவிகள் வாழும் மடத்தின் மேற்குவிகை ஒன்று இங்கு இல்லாததை எண்ணி முதல்முறையாக நான் வருந்தினேன்.
அன்றிரவு விடியும்வரை நான் கண்ணயரவில்லை. உறங்கியபோது திகில் நிறைந்த கனவுகள் என்னை எழுப்பி விட்டன. கழுத்தருகே இருந்த தலையணை நனைந்து விட்டது. கொசுக்கள் காதுகளில் ரீங்காரமிட்டு என்னைக் கடித்தன. வெளியில் இருந்து குடிகாரர்கள் அல்லது எதோ தாக்குதலால் பாதிப்பு அடைந்தவர்களுடைய கூச்சல் கேட்டது. என் தந்தையின் குரல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் நிகழ்த்திய அற விளக்கப் பேருரையிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பதினோரு மணிக்கு மேல் எழுந்தேன். இரவு உணவு உண்ணா விட்டாலும் என் வயிறு உப்பி நாக்கு வெளுத்திருந்தது. சிற்றுண்டிச் சாலையில் வேகமாக ஒரு கோப்பை காபியைக் குடித்துவிட்டு எழுத்தாளர் சங்கத்துக்குச் சென்றேன். நேற்றைய நாடகத்தின் முக்கியக் கதாபாத்திரங்களை ஒருவேளை நான் சந்திக்க முடியும் என நினைத்தேன். ஆம். ஜிம்மெல் ஹெஷெல்ஸ், மெனஹெம் ரோஷ்போம், லீனா என அனைவரும் அங்கிருந்தனர். ஜிம்மெல் ஹெஷெல்ஸும் ரோஷ்போமும் சதுரங்கம் விளையாட, லீனா அவர்களருகே அமர்ந்து வர்ணனை செய்து கொண்டிருந்தாள். நான் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தேன். ஆனால் அவள் என்னைக் கவனிக்கவில்லை. விளையாட்டில் ரோஷ்போமின் நிலை மோசமாகியதும் அவர் தொண்டையைச் செறுமி, தாடியின் முடிகளைப் பிய்த்து, முகத்தைச் சுளித்து, சிகரெட் புகையைத் தன் நுரையீரலுக்குள் ஆழமாக இழுத்தார். ஒரு பெருங் குழப்பத்தில் அவர் புகையை உள்ளிழுத்தது போல சில நொடிகளுக்குத் தெரிந்தது. ஆனால் திடீரென அவருடைய வாயிலிருந்தும் முடி சூழ்ந்த நாசிகளில் இருந்தும் அது வேகத்துடன் முன்னோக்கி வெளியேறியது. புகை அவருடைய தாடியில் இருந்து சுழலாக வெளியேறியதாகக் கூட நான் கற்பனை செய்து பார்த்தேன்.
ஜிம்மெல் ஹெஷெல்ஸ் “ராஜா எங்கு சென்றார்?” என்றார்.
“ஆமாம். ராஜா எங்கு சென்றார்?” என்று எதிரொலித்த லீனா ஒளியுமிழும் அறிவார்ந்த பார்வையொன்றை ரோஷ்போமை நோக்கி வீசினாள். அவர் அவளை நோக்கி,”அம்மையீர்! வருத்தம் கொள்ள வேண்டாம். எனக்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இதற்கு மேல் இழிவான தந்திரங்கள் எதையாவது செய்வதற்கு முன் ஜிம்மெல் ஹெஷெல்ஸ் இனி இரு முறை யோசிக்க வேண்டும். நான் அந்தக் குழப்பவாதியை நார் நாராகக் கிழித்து விடுவேன்.” என்றார். பிறகு தன் கைகளை சதுரங்கக் காய்கள் அனைத்தும் சிதறியோடும்படி வீசி, “அந்த சிப்பாயை நான் நகர்த்தி இருக்கக் கூடாது” என்றார்.
சங்கத்தை விட்டு வெளியேறிய நான் அதன் படிக்கட்டுகளில் இறங்கும்போது இனி மறுபடி இங்கு வரக் கூடாது என்று முடிவெடுத்தேன். இந்த முடிவை இரண்டரை வாரங்களுக்கு செயல்படுத்தினேன்.
நான் மறுபடி சங்கத்துக்கு வந்தபோது ஷ்முவெல் என்னைப் பார்த்து “நீ எங்கே காணாமல் போய்விட்டாய்? லீனா உன்னுடைய ஒரு கதையை வாசித்து மெய் மறந்து போயிருக்கிறாள்.அந்தக் கதையை அவள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்க விரும்புகிறாள். அதற்காக உன்னைத் தேடிக் கொண்டு இருந்தாள். நீ ஒரு அதிர்ஷ்டக்கார நாய்! இந்த உலகின் சாளரம் ஒன்றை அவள் உனக்காகத் திறக்கப் போகிறாள்” என்றான்.
“அவள் அதை ஏற்கனவே செய்து விட்டாள்” என்றேன்.
“இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
இளம் எழுத்தாளர்களில் இன்னொருவன் “அவன் ஒரு பெரும்புள்ளி போல நடந்து கொள்ள விரும்புகிறான்” என்றான்.
அவர்கள் அனைவரும் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார்கள்.
நான் அவளுக்காகக் காத்திருக்கவில்லை.