கட்டுரைகள்

உறவுகளின் புனைவுப்பின்னல்கள்

கிருஷ்ணமூர்த்தி

ஒவ்வொரு நிலத்திலிருந்து உருவாகும் கதைகளுக்கும் ஒரு அடித்தளமான பொதுவாம்ச குணம் இருக்கிறது. அதன் பல்வேறு கோணங்களை, வடிவங்களை, பரிமாணங்களை ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களும் கொடுத்து வருகின்றனர். அவ்வகையில் தமிழ் கதைகளின் அடிநாதமாக குடும்பமே அமைகிறது. சமகாலத்தில் இருக்கும் மூத்த எழுத்தாளர்களில் சிலரும் இதைத் தீர்க்கமாக பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள். சமகாலச் சிறுகதைகளிலும் இந்த அம்சத்தை எளிதாக வாசகரால் இனங்காணமுடியும். குடும்பம் அமைவதற்கான பெரும் போராட்டம், அமைந்த குடும்பத்தில் உருவாகும் விரிசல்கள், உடைந்த குடும்பத்தின் கதைகள், குடும்பம் எனும் அம்சம் மறுதலிக்கப்பட்ட மனிதர்கள் எனும் பொது நீரோட்டத்தில் கதைகள் தமிழில் உருவாகின்றன. இதில் உட்கிளைகள் நிறைய தோன்றிய வண்ணம் இருக்கும். மரபார்ந்த தமிழ்ச் சமூகம் குடும்பம் எனும் அம்சத்தை நோக்கியும் பின் அதிலிருந்து விலகியுமே அமைந்திருக்கிறது. இந்திய அளவிலான இலக்கியங்களிலும் இந்தப் போக்கை காண இயலும்.

பல எழுத்தாளர்கள் இந்த குடும்பங்களுள் எழும் அகச்சிக்கல்களுக்கான காரணங்களை கதைகளின் வழியே கண்டறிய அல்லது கதைகளின் வழியே பிரதிபலிக்க முயன்றிருக்கிறார்கள். உளவியல் சிக்கல்கள் கூட குடும்பம் உருவாகவும் உடையவும் அடிநாதமாக இருக்கும் காமத்திலிருந்து துவங்குகிறது. இந்த காமம் ஆண்களுக்கு ஒருமுகமாகவும் பெண்களுக்கு வேறு முகமாகவும் தென்படுகிறது. இந்த இரு முகங்களும் அறிமுகமாகும் இடத்திலிருந்து தமிழ்க்கதைகளின் பாரம்பரிய வேர் கிளைவிடத் துவங்குகிறது. இந்த வேர்களை அதனதன் முகங்களிலிருந்து தெளிவுடன் எழுதியவர் தஞ்சை பிரகாஷ். அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளுக்கான தொகுப்பு டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்திலிருந்து கிடைக்கிறது. தொகுத்தவர் பொன்.வாசுதேவன். தஞ்சை பிரகாஷின் புனைகதையின் பன்முகத்தை அறிய இத்தொகுப்பு பேருதவி புரிகிறது. ஒரே கதையம்சத்தை தொகுப்பில் இனங்காணமுடிந்தாலும் அவற்றிற்கிடையில் இருக்கும் வித்தியாசங்களை வாசிப்பில் உணரும் பொழுது தொகுத்தலின் சிறப்பை நன்குணரமுடிகிறது.

காமம் எனும் சொல்லை இவருடைய கதைகள் முழுதாக மறுக்கின்றன. மாறாக காதலின் வெளிப்பாடாகவே காமத்தையும் உடலுறவையும் முன்வைக்கிறார். அது ஒரு மொழி. அந்த மொழியை அறிதலே வாழ்வின் பகுதியாகவும் சிலருக்கு வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறது. இந்த மொழியையும் வேறு வேறு வடிவங்களில் மனிதர்கள் உணர்ந்தவண்ணம் இருக்கின்றனர். தொகுப்பின் ஆரம்பத்திலேயே அங்குசம் எனும் சிறுகதை இடம்பெறுகிறது. மின்னியின் அண்ணன் நாராயணன். அவளுடைய காதலன் ரத்தினராஜ். அந்தக் காதல் அண்ணனுக்கு பிடிக்கவில்லை. வீட்டில் எப்போதும் அடிக்கிறான். ரத்தினராஜ் கள்ளத்தனமாக உறவு கொள்ள யத்தனிக்கிறான். சிறு சிறு சீண்டல்களின் வழியே கொண்டாட்டத்தை உணர்கிறான். இந்த இருவேறு தன்மையை கிட்டதட்ட அனைத்து கதாபாத்திரங்களின் வழியேவும் வாசகனால் எளிதில் உணரமுடியும். ஆண் மனம் சீண்டல்களின் வழியேவும், முடியாத பட்சத்தில் வன்முறையின் வழியேவும் உடலுக்கான இன்பத்தை அடையமுற்படுகிறது. காமத்தைக் கூட ஆணால் வன்முறையின் வெளிப்பாடாக மாற்ற முடியும் என்பதை பல்வேறு கதைகளின் புனைவுவடிவமாக மாற்றியிருக்கிறார்.

காமத்தை வேறு வேறு வடிவங்களில் பிரகாஷின் கதைகள் கூற முறபட்டாலும் அவை ஒரு தத்துவார்த்த சுழலுக்குள் சிக்கிவிடுகின்றன. கொலைஞன் எனும் கதையில் வரும் கதாபாத்திரத்திடம் எழும் கேள்வி மொத்த தஞ்சை பிரகாஷின் கதைகளுக்கான பொது அம்சமாக உருவாகிறது. கொலைஞன் சிறுகதை தமிழ் திரைப்படங்களில் காணப்படும் மிகச் சாதாரண கதை. நாயகன் ஒரு கூலிக் கொலைகாரன். திருமணம் செய்தபின் காதலில் இருவரும் திளைக்கிறார்கள். பலமுறை வீடுமாற்றச் சொல்கிறான். அதன்படி இருவரும் அடிக்கடி வீடு மாறிக் கொண்டே இருக்கிறார்கள். நிறைய பணம் கிடைக்கிறது., அவ்வப்போது கணவனின் உடல்வழி இன்பம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்தில் மனைவிக்குள் எழும் கேள்வி எது என்னை எனக்குள் இருக்கும் ‘நான்’ஐ வரையறைப்படுத்துகிறது ? இந்த உடல் மட்டும் தானா ? அல்லது இதைத் தாண்டிய புலனாகாத ஏதோ ஒன்றா ? இந்தக் கேள்விகளை பிரகாஷ் ஒவ்வொரு சிறுகதைகளிலும் பின்தொடர்ந்தவண்ணம் சென்றுகொண்டே இருக்கிறார். இந்த தத்துவார்த்த வாதம் இச்சைகளை கேள்விக்குட்படுத்துகிறது. அதிலிருந்து தப்பிக்க முனையும் போக்குகளையும் கேள்விக்குடுத்துகிறது. அதற்கு இரண்டு சிறந்த உதாரணக் கதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஒன்று அவருடைய சிறந்த கதை எனப் பலராலும் பாராட்டப்பட்ட ‘மேபல்’. காதலுக்கு எதிரி பயம் தான் எனும் விஷயத்தைக் கூர்மையாக முன்வைக்கிறது. மேலும் இந்த பயம் என்பது கூட நவீனகால வரையறையே என்று முன்கூறியதை நிராகரித்து நவீன சிறுகதைக்கான முன்மாதிரியாக மாறுகிறது. மற்றொரு கதை “கடைசிக்க்கட்டி மாம்பழம்”.

தந்தையில்லாத வீடு. பத்து பெண் குழந்தைகள். திடிரென குடும்பத்திற்குள் நுழையும் கலியராஜன் எனும் கதாபாத்திரம். நிராகரிக்கவும் முடியாமல் சேர்த்துக்கொள்ளவும் முடியாமல் குடும்பம் திளைக்கிறது. கிட்டத்தட்ட அம்மாவைத் தவிர அனைவரும் அவன் மீது காதல்கொள்கின்றனர். காதலை வெளிக்காட்டுகின்றனர். ஒவ்வொருவரையும் நேர்மையாக வளர்க்கிறான். அவர்களுக்கான வாழ்க்கையை சீர்படுத்தி கொடுக்கிறான். அம்மா கடைசிவரை சமையலறையிலிருந்து வெளிவராமல் திட்டிக் கொண்டே இருக்கிறாள். இத்தனை விஷயமும் எந்த பெண்ணுக்காக செய்கிறான் எனும் கேள்வியில் கதை சீராக நகர்கிறது. கதையின் கடைசியில் அவிழ்க்கப்படும் திறப்பு எது காதல், எது வேட்கை, எது தேவை, எது இச்சை எனும் சகல கேள்விகளுக்கும் தஞ்சை பிரகாஷின் அனைத்து தத்துவார்த்த மோதலுக்கும் விடையளிக்கிறது. வெளிக்காட்டும் அடையாளங்களுக்கும் பார்க்கப்படும் அடையாளங்களுக்குமான இடைவெளி மனித உறவுகளுக்குள் பெரும் இடைவெளியை ஏற்படுத்துகின்றன என்பதை இக்கதைகளின் வழி ஆழமாக சொல்லிச் செல்கிறார்.

காதல் கதைகளின் வழியாகவே தஞ்சை பிரகாஷின் கதைகள் தனது இரண்டாவது வகைமைக்குள் நீள்கிறது. அவை வரலாற்றுப் பார்வை கொண்ட கதைகள். அக்கதைகளில் வரலாற்றுப் பார்வையை பிண்ணனியாக கொண்டு காதலைப் பேசுகிறார். இராவண சீதை போன்ற கதைகளில் புராணங்களின் மீது அவர் செலுத்தும் வெளிச்சம் ராமாயணத்தின் மையக்கதையை வேறு கோணத்தில் முன்மொழிந்துவிடுகிறது. அதன் வழி ராவணனுக்கும் சீதைக்கும் இடையே இருக்கக்கூடிய அன்புசார் பிணைப்பை கேள்விக்குட்படுத்துகிறார்.

புராணங்களையும் கலை சார்ந்த நுட்பங்களையும், வரலாற்றையும் வெறும் பிண்ணனியாக மட்டும் கொள்வதில்லை. அவ்வரலாற்றினூடான வாழ்க்கையை முன்னிலைப்படுத்துகிறார். அஞ்சு மாடி எனும் சிறுகதையில் நினைவோடையின் வழியாக கதையைச் சொல்கிறார். தாதுப்பிள்ளை மற்றும் கோபிராவ் ஆகிய இரண்டு இரவு நேரக் காப்பாளர்களின் உரையாடலில் நீளும் சிறுகதை. அதன் வழி வரலாற்றையும் இல்லறத்தில் இருக்கக்கூடிய ஏமாற்றங்களையும், அவ்வில்லறத்தினூடே பெண் உடல் சார்ந்து ஏற்படும் தேவையையும், அதன் புரிதலின்மையையும் தெளிவாக விளக்குகிறார். அவற்றோடு அஞ்சுமாடி கட்டிடத்தின் வரலாற்றை அதன் சமூகத்தோடு சேர்த்து குறிப்பிடுவது கதையுடன் கச்சிதமாக ஒன்றிப் போகிறது. கோஸ் பூ சிறுகதையில் சிற்பியின் பார்வையில் கலை சார்ந்த பார்வையையும், பொறா ஷோக்கு எனும் கதையில் தஞ்சையில் இருந்த இஸ்லாமியக் குடும்பங்களின் அல்லது இஸ்லாமிய மரபின் வரலாற்றையும், தஞ்சையின் முதல் சுதந்திரப் போராட்டம் கதையில் தலைப்பையொட்டிய முழு அளவிலான வரலாற்றையும் தேர்ந்த சிறுகதையாக்கியிருக்கிறார்.

மேற்கூறிய வகைமைகளுக்குள் சிக்காது தனித்து தெரியும் சிறந்த கதைகள் சிலவற்றையும் தொகுப்பில் இனங்காணமுடிகிறது. அவற்றில் மூன்று கதைகளை தனித்தனியே கூற விரும்புகிறேன்.

  1. நியுசென்ஸ்

இது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட அல்லது களைத்துப் போடப்பட்ட கதை வடிவம் கொண்டது. பெரிய அளவில் சமூகத்தில் நிகழும் கொடுமைகளை மட்டுமே காணும் கண்களுக்கு உள்ளுக்குள் சிறு வடிவிலான கொடுமைகள் புலனாவதில்லை. தஞ்சை பிரகாஷின் இச்சிறுகதையில் பெரிய அளவிலான கொடுமைகளை விரிவாகப் பேசி பின் அவற்றை பகடி செய்யும் விதம் சிறிய அளவிலான அறமீறலை முன்வைக்கிறார். அதை சொல்லும் விதம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் பிழைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி செல்கிறது. கதையினுள்ளிருந்து சின்ன உதாரணம் எனில் கதையில் வரும் கதாபாத்திரம் ஒருவன் பரீட்சைத் தாளில் மண்டை ஓடுகளைப் படமாக போட்டுவிட்டான். அதை ஆசிரியர் ஏன் எனக் கேட்கிறார். அதற்கு ஆசிரியரை அடித்துவிட்டான். கேட்ட காவல் துறையிடமும் தகராறு செய்கிறான். இதை விரிவாக விவரிக்கிறார். அப்பா பையனை திருப்பி அழைந்துச் செல்ல வந்தவுடன் அவருடைய தொழிலை காவல் துறை அதிகாரி கேட்கிறார். தலைமை செயலகத்தில் வேலை என்றவுடன் ஐம்பது ரூபாய் எடு என்கிறார். கதையின் சிறு அத்தியாயம் இதோடு முடிவடைகிறது. இங்ஙணம் நிறைய Micro level Nuisance ஐ படம் பிடித்துக் காட்டுகிறார். நம் கண்கள் பெரிய அளாவிலான தவறுகளைக் கண்டு ஆத்திரப்பட்டே பழகியதில் இக்கதை இந்நூற்றாண்டிலும் சரியெனவே தோன்றுகிறது.

  1. சோடியம் விளக்குகளின் கீழ்

இந்தக் கதை ஓரிரவில் நிகழ்கிறது. தெரு விளக்கின் கீழ் வாடிக்கையாளருக்காக காத்திருக்கிறாள் விலைமாது. தெரு விளக்கு இருப்பதாலேயே வாடிக்கையாளர்கள் வர மறுக்கிறார்கள். அந்த இரவில் வாடிக்கையாளர்கள் எப்படிக் கிடைக்கிறார்கள் என்பது தான் கதையின் மீதி. மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு விளக்கும் வெளிச்சமும் எனில் அது தஞ்சை பிரகாஷிடம் செல்லுபடியாகாது எனும் எண்ணத்தையே கதை கொடுக்கிறது. வாடிக்கையாளர்கள் கிடைக்காத பட்சத்தில் நஷ்டப்படப் போவது அந்த விலைமாதுவின் வாழ்க்கை. அதற்கு காரணமாக அமைவது அந்த தெருவிளக்கு மட்டுமே. மனிதனுக்கு சில நேரங்களில் இருள் தேவைப்படுகிறது எனும் வரிகள் காலத்தின் வழியே பெரும் தரிசனத்தைக் கொடுத்துச் செல்கிறது. வெளிச்சம் வேஷமிடுவதற்கும் வேஷங்களை பறைசாற்றிக் கொள்வதற்கும் பேருதவிப் புரிகிறது. இருள் எப்போதும் உண்மையைப் பேசுபவை. மனிதனின் மனதுள் இருக்கும் கசடுகளை வெளிக்கொணரும் தன்மைக் கொண்டது. அதை இக்கதை தீர்க்கமாக அதே நேரம் உரக்கவும் பேசுகிறது.

  1. என்னை சந்திக்க வந்த என் கதாபாத்திரம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மெடாஃபிக்‌ஷன் எனும் வகைமையினுள் எழுத்தாளர்கள் சோதனை முயற்சிகள் செய்த வண்ணம் உள்ளனர். கதைக்குள் கதையாசிரியரும் நுழைந்து கதையுடன் வளர்வது. தஞ்சை பிரகாஷும் இதற்கு விதிவிலக்கில்லை. இக்கதையில் பிரகாஷ் தன் கதையில் சாளிப்பிள்ளை எனும் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். அதே பெயர் கொண்ட சார்ள்ஸ் எழுத்தாளரை சந்திக்க வருகிறார். தன்னைப் பற்றி கதையில் தவறாக எழுதியிருப்பதால் தெருவில் இருப்பவர்கள் எல்லாம் என்னை அவமதிக்கிறார்கள் என பிராது கொடுக்கிறார். தன்னை நல்லவன் என நிரூபிக்க அவரை அதே கதாபாத்திரப் பெயர் கொண்ட வேறொரு சிறுகதையை எழுதச் சொல்கிறார். கதாபாத்திரத்திற்கும் கதாசிரியருக்கும் இடையே நிகழும் உரையாடலே இச்சிறுகதை. இதன் வழி உண்மைக்கும் பொய்க்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை புனைவுக்குட்படுத்துகிறார். மேலும் தன்னை நல்லவர்களாக காட்ட முனையும் மனிதப் போக்கை பகடிக்குள்ளாக்குகிறார். வேறொரு புனைவில் சென்று ஒளிந்து கொள்ளும் இந்த வாழ்க்கை மகத்தான புனைவு என்னும் நிலைக்கு வாசகரைத் தள்ளும் இடம் கதைசொல்லலில் உச்சத்தை எட்டுகிறது.

இக்கட்டுரையில் குறிப்பிட்டு விவரித்திருப்பதைக் காட்டிலும் மேலும் சில கதைகள் நல்ல கதைசொல்லல் முறையில் வேறு சில விவாதங்களை எழுப்பக்கூடியதாக இருக்கின்றன. தஞ்சை பிரகாஷை வாசிக்கும் பொழுது உறவுகள் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு புனைவுப்பின்னல்களை எளிதாக இனங்காண முடிகிறது. பல்வேறு சோதனைமுயற்சிகளில் கதைகளை முயன்றிருந்தாலும் அதில் பூர்ணத்துவத்தை அளிக்கின்றன இவரது கதைகள். தொகுப்பில் என் வாசிப்பின் அடிப்படையில் சிறந்த கதைகளாக சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அவையாவன,

“அங்குசம், ஜானுப்பாட்டி அழுதுகொண்டிருக்கிறாள், இராவண சீதை, கொலைஞன், நியுசென்ஸ், புலன் விசாரணை, சோடியம் விளக்குகளின் கீழ், மேபல், கோஸ் பூ, தென்னைமரம் பற்றி எரிந்தது, கடைசிகட்டி மாம்பழம், உம்பளாயி, புறா ஷோக்கு, தஞ்சையின் முதல் சுதந்திரப் போராட்டம்,  என்னை சந்திக்க வந்த என் கதாபாத்திரம், வைரமலை, நாகம், பள்ளத்தாக்கு, அஞ்சு மாடி”

தஞ்சை பிரகாஷ் சார்ந்த என் இரண்டாவது வாசிப்பிலேயே இப்பட்டியல் மாறக்கூடும். வேறு வாசகரின் வாசிப்பிலும் இவை மாற்றத்திற்குட்படும். தஞ்சை பிரகாஷின் கதைகள் வேறு வேறு வாசிப்பில் தனது வாதங்களின் வழி பல்வேறு அலைகளை எழுப்ப வல்லவை. அவற்றில் நிச்சயம் அலையை எழுப்ப வல்லவையே மேற்குறிப்பிட்டுள்ள சிறுகதைகள்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button