இணைய இதழ்இணைய இதழ் 48சிறுகதைகள்

வாயில்லா ஜீவன்கள் – வசந்தி முனீஸ்

சிறுகதை | வாசகசாலை

ழகான பொண்ணுக்கு அசிங்கமாய் மீசைமயிர்கள் முளைத்திருப்பதுபோல, பூச்செடிகளும் பழம் தரும் மரங்களும் நெறஞ்ச தோட்டத்து நடுவுல ஊம சித்தப்பாவின் பாழடைஞ்ச பழைய ஓட்டுவீடு. வீட்டைச்சுற்றி பெரிய மதில்சுவர். உள்ளே யாருமேறி குதித்திட முடியாது. குதித்தவனை கடித்துக் குதறாமல் செவலையும் விட்டது கிடையாது.

சித்தப்பாவுக்கு கூடப்பொறந்தவங்க மொத்தம் நாலு பேரு. மூணு ஆம்பள, ஒரு பொம்பள. அத்ததான் எல்லாத்துக்கும் மூப்பு.அவுங்க எல்லாருமே பொழைக்கப்போன பாம்பேலயே வீடுவாச கெட்டி, அங்கயே செட்டிலாகிட்டாங்க.கோயில் கொடைக்கி, இல்ல ஏதாவது நல்லது கெட்டது நடந்தா மட்டும் ஊருக்கு வருவாங்க. அந்த வரத்தும் போவப்போவ ரொம்ப கம்மியாடுச்சி…

ஆச்சியும் தாத்தாவும், நாம போன பின்ன ஊமையன கூடப்பொறந்ததுவ பாக்குதோ இல்லையோன்னு பக்கத்தூருல ஒரு பொண்ணப்பார்த்து கலியாணம் முடிச்சு வச்சாங்க. அந்த சித்தியும் ரெண்டுமூணு வருஷங்கழிச்சி வாழப் புடிக்கலன்னு, புள்ளயளத் தூக்கிட்டு அவ அம்மா வூட்டுக்கே போயிடுச்சு. அதுலருந்து ஒரு அஞ்சாறு வருஷங்கழிச்சி ஆச்சியும் தாத்தாவும் நோயிவாயிப்பட்டு, அவங்களும் போயிச் சேந்துட்டாங்க.

அன்னையிலிருந்து அந்த வூட்டுல ஊம சித்தப்பா ஒண்டிக்கட்டையா கெடந்து ரேசன்கடையில எடுபுடி வேல பாத்துக்கிட்டு காலத்த ஓட்டுனாரு. நூறு நாள் வேலைத்திட்டம் வந்தப்பொறவு யாருக்கிட்டேயும் கையேந்தாம அவரு பாட்ட அவரே பாத்துக்கிட்டாரு. அதுப்போவ கந்த விலாஸ் ஓட்டலுக்கு தண்ணியெடுத்து ஊத்துவாரு; எல வெட்டிக்கொண்டு போடுவாரு. அதனால புரோட்டா, இட்லினு எதாவது சாப்டக் குடுப்பாங்க. அவரு சாப்டுதாரோ இல்லையோ.. செவலைக்கி புரோட்டாவ நல்லாப் பிச்சி, அதுல சால்னாவ நெறய ஊத்தி பெணஞ்சி வப்பாரு. செவல ‘லவக் லவக்கு’ன்னு தின்னுட்டு, மாமரத்து மூட்டுல மண்ணத்தோண்டி மெத்தமாதிரி போட்டுக்கிட்டு, உண்ட மயக்கத்துல ஒறங்கிப்போய்விடும். ஆனா,அவரு அவ்வளவு சீக்கிரத்துல ஒறங்க மாட்டாரு. இரும்புக்கேட்ட பூட்டப்போட்டு பூட்டிட்டு, தார்சா படிக்கட்டுல தனியா ஒக்காந்து,எலவச கரண்டுயிருந்தும் லைட்டேதுவும் போடாம தனக்குள்ளயே நாக்குட்டியப்போல ஊ..ஊ..ன்னு ராத்திரி பன்னெண்டு ஒருமணிவர… வாயி தாண்டி வளந்த மீசையையும்,வயித்த தொடப்போகும் தாடியையும் தடவியபடி முனங்கிக்கொண்டே இருப்பாரு.

அவர் மனதில் எவ்வளவு வலிகளோ… எத்தனை ஏமாற்றங்களோ… சொல்ல முடியாத சோகமோ… தீர்க்க முடியாத காமமோ! என்னானு யாருக்குத் தெரியும்? இமைக்கொட்டாமல் கேட்ட அந்த இருட்டுக்குத்தான் எல்லாமும் தெரியும்!

ஊமச்சித்தப்பா ஒடம்புக்கு ஏதாவது சொகமில்லாம போச்சின்னா சோறுகீறு எங்கவீட்ல கேப்பாரு. அதேமாதிரி வல்லிசா கையில காசு இல்லன்னா மட்டும் பாம்பேல இருக்குற சித்தப்பாக்களுக்கு போன் பண்ண சொல்வாரு. அவுங்களும் செலவுக்கு பணம் போட்டுவிடுவாங்க.நான் அத எடுத்துக் குடுப்பேன். அவ்வளவு தான். மத்தபடி எங்கிட்டேயும்,ஊருல யாருக்கிட்டேயும் பெருசா பேச்சுப்பொழக்கமல்லாம் கெடையாது அவருக்கு.

அவரு கோவத்த ஊர் பாத்துருக்கு. ஆனா, அவரு வெக்கப்பட்டு சிரிச்சத தெரு மட்டுந்தான் பாத்துருக்கு. பாத்துருக்குன்னு சொல்றதவிட பாத்து மெரண்டுருக்குன்னுத்தான் சொல்லனும்.

கோவா பாப்பு அத்த ஊமச்சித்தப்பாவுக்கு மைனி மொறங்கிறதால அவருக்கிட்ட எதாவது குறும்பு பண்ணிட்டேயிருக்கும்.

அப்படித்தான் ஒருநாளு நான் சின்னப்பயனா இருக்கும்போது, ஊமச்சித்தப்பா அடிப்பம்புல கொடத்த வச்சிட்டு அடிச்சியடிச்சி பாக்குறாரு, தண்ணியே வரல. அந்தநேரம் பாத்து பாப்பத்தயும் தண்ணியெடுக்க போச்சி. போன அத்தக்கிட்ட தண்ணி வரலன்னும், வீட்டுல குடிக்க சொட்டுத்தண்ணிக்கூட இல்லன்னு சைகையால சொல்லிக்கிறாரு.அதுக்கு அத்த, ஒனக்கு தண்ணி நாந்தாரேன்னு கொடத்த வாங்கிட்டு பண்ணுன காரியத்த பாத்து தல தெறிக்க ஓடிவந்தாரு எங்க வீட்டுக்கு…

“ப…ப…ன்னு” சைகையில எங்கம்மட்ட நடந்தத சொன்னாரு.

எங்கம்ம அவரு சொன்னது எதுவும் புரியாம,அவரப்பாத்து ‘பே’ன்னு முழிச்சா.

“எம்மோவ்! அடிப்பம்புல ஏதோ நடந்துருக்குன்னு,” நா சொன்னதுக்கு அப்புறம் அம்ம அவரக்கூட்டிட்டு அங்க போனா.

அதுக்குள்ள தெருச்சனம் பூராம் ஊமச்சித்தப்பா இடிச்சிரிப்பக்கேட்டு அடிப்பம்பு பக்கம் கூடிட்டு.

பாப்பத்தயவிட்டு பத்தடித்தள்ளி நின்னு சிரியோ சிரின்னு சித்தப்பா சிரிக்கிறாரு!

அத்தைக்கும் பள்ளம் மேட்டுல போற மாட்டுவண்டியப்போல சிரிப்பானி தாங்காம ஒடம்பு குலுங்குது!

“ஏதுக்குட்ட ரெண்டுபேரும் இப்படி சிரிக்கிய?”ன்னா எங்கம்ம.

“ஏ தாயி! தவுச்ச வாயிக்கு தண்ணி குடுக்கணுமா வேண்டாமா?”

“கட்டாயம் குடுக்கணும்.ஆனா, அவன் சிரிக்கிற சிரிப்பப்பாத்தா நீ எடக்குமடக்கா எதோ பண்ணிருக்கட்ட.”

“எங்கொழுந்தன் தண்ணில்லாம தவிக்கிதப் பாத்து, யெனக்கு மனசு தாங்கல தாயி. கொண்டாரும் கொடத்தன்னு… கொடத்த வாங்கி இப்படித்தான் பண்ணுனேன்.” என்று பாப்பத்தை சொன்னதும்…

எங்கம்ம வெக்கப்பட்டு சிரிச்சா. தெருச்சனம் வுழுந்தும் பொரண்டும், ஒருத்தருக்கொருத்தர் முட்டி மோதியும் சிரிச்சது.

“அவன் குடிக்க தண்ணி கேட்டா, நீயென்னன்னா கொடத்த வாங்கி கவுட்டுல வச்சிருக்க. ச்சீ…ஒனக்கு கொஞ்சங்கூட கூச்ச நாச்சமே கெடயாதாக்கா?” -எங்கம்ம சொன்னா.

“ஏ தாயி.. நீ சும்மாரு. தவிச்சிப்போயிருக்குற யென் கொழுந்தனுக்கு இன்னைக்கு நா தண்ணி குடுக்காம விடமாட்டேன்”னு அத்த ஊமச்சித்தப்பா வெரட்ட ஆரம்பிடுச்சி.

அவரு வெக்கப்பட்டு கேட்ட பூட்டிக்கிட்டு வீட்டுக்குள்ள ஓடிட்டாரு.

அத்த பூட்டுன கேட்டுக்கு முன்னால நின்னு,”வாங்க கொழுந்தன்..தண்ணி வீணா போவப்போவுது. வந்து புடிச்சிக்காங்க”ன்னு முட்டிக்குமேல சீலயத்தூக்கிட்டு நிக்கிது.

அதப்பாத்துட்டு அவரு… ஆன் பண்ண ஆயிலு மோட்ரப்போல,வீட்டுக்குள்ள கெடந்து சும்மா ‘டப டப’ன்னு சிரிக்கிறாரு.

மறுநாளு கடைக்கி மளிகச்சாமான் வாங்கப்போன எங்கம்மட்ட, “ஏ,மரியா!நேத்து ஒங்க தெருவுல என்ன கூத்து நடந்துச்சு? ஊம அர்தலி எதுக்கு அப்புடி சிரிச்சான்?” ன்னு பக்கத்து தெருக்காரங்க கேட்டதுக்கு, ‘அதொரு வில்லங்கமான கதய்யா வெளில சொல்ல முடியாது’ன்னு வீடுவந்து சேந்தா எங்கம்ம.

பக்கத்து தெருவரைக்கும் ஊமச்சித்தப்பா சிரிச்ச சிரிப்பு கேட்டுருக்குன்னா, அவரு எப்படி சிரிச்சிப்பாருன்னு நீங்களே கணிச்சிக்கோங்க.

கிட்டத்தட்ட ஒருவாரம் தவிச்சவாயிக்கி தண்ணிக்குடுத்த கதய நெனச்சி நெனைச்சி,தெருவே… கண்ணுல தண்ணிவந்து கெடந்துச்சி.

காட்டுக்குள்ள ஒத்தயடித்தடம் கெடப்பது போல முன்வாசல்ல படந்து நிக்கும் பிச்சிப்பூ செடிக்கும், பின்வாசல்ல எப்போதும் பூப்பூக்கும் பட்டுரோசு செடிக்கும், இடையில் நடந்து நடந்து ஒத்தயடித்தடம் போட்டு வச்சிருந்தாரு சித்தப்பா. அந்த தடத்தத்தவுர மத்த எடமெல்லாம் புல்லுப்பத்தி பொதரு மண்டித்தான் கெடக்கும்.

பிச்சிப்பூச்செடி மதில்சுவர் தாண்டி வெளிமுத்தம் வரைக்கும் படர்ந்திருக்கும். கோலத்துக்கு புள்ளி வச்சதுப்போல அழகழகா முத்தத்துல பிச்சிப்பூக்கள் கொட்டிக்கிடக்கும்.

வெள்ளிச்செவ்வா ஆச்சின்னா, ஊரம்மங்கோயிலுக்கு பூச வைக்கிற பூப்பண்டாராம் கண்ணன். ஊமச்சித்தப்பா வீட்டுலவந்து பூப்பறிச்சிட்டு போவான். பறிக்குற பூவுக்கு அம்பதுநூறு அவரு கையில குடுப்பான். அது அவருக்கு செலவுக்கு ஓடும்.

போனவாரம் வெள்ளிக்கிழமை எப்போதும்போல கண்ணன் பூப்பறிக்க வந்தான். அவன் வர்ற நேரந்தெறிஞ்சி கதவத் தொறந்து வச்சிருப்பாரு சித்தப்பா. அன்னைக்கி கதவு பூட்டியிருந்ததால தட்டித்தட்டி பாத்துருக்கான். ஆளரவமுமில்ல;நாயிச்சத்தமுமில்ல. சந்தேகம் வலுத்து, எங்கவீட்டுக்கு பின்னால எலுமிச்சங்கா பறிச்சுட்டுருந்த என்னவந்து கூப்பிட்டான்.

நானும்போயி தட்டிப்பாத்தேன். எந்த அரவமுமில்ல. கேட்வழியா மேலயேறி உள்ள குதிச்சி, கருப்புவெள்ளயில காட்டுப்பூப்போல தாத்தாவும் பாட்டியும் சிரிச்சப்படியிருக்கும் பழைய கலியாணப்போட்டோ மாட்டியிருந்த ஆணியில தொங்கும் சாவிக்கொத்த எடுக்க தார்சாவுக்குப்போனேன். சாவிய எடுக்கும்போது ஒரு வீச்சமடிச்சது. உள்ளுக்குள்ள செவல மொணங்குவதும் கேட்டது. ஓடிப்போயி… கேட்டுக்கதவ தொறந்து கண்ணன உள்ள கூப்ட்டு அரங்கு வீட்டுக்கதவ தட்டுனேன்.கதவு உள்தாப்பா போட்டுருந்துச்சி. நானும் கண்ணனும் ஒருத்தோரட தோள ஒருத்தர் புடிச்சிக்கிட்டு கதவ ஓங்கி ஒரு மிதி மிதிச்சோம். பழைய கதவுங்கிறாதால படாருன்னு தொறந்துடுச்சி.

உள்ளப்போயி பாக்குறோம்… ஊமச்சித்தப்பா கீழ… குப்புறக்கெடக்காரு. கட்டுலு காலு நாலையும் மேல தூக்கனப்படி அவருமேல கவுந்துக்கெடக்குது; செவல… மூலையில வாலச்சுருட்டிக்கிட்டு மொணங்கிட்டு கெடக்குது.

கட்டுல ஓரமாத் தூக்கிப்போட்டுட்டு, ஊமச்சித்தப்பாவ மல்லாக்கப்போட்டோம்.வாயிலும் மூக்கிலும் கண்ணுமையி நெறத்துல பெரிய பெரிய ஈச்சியளு வருவதும் போவதுமாயிருந்தது; வயிறு ,மண்ணுக்குள்ளருக்கும் தண்ணித்தவளப்போல ஊதிப்போயிருந்தது.

நான் வீட்லருந்த எங்கம்மட்டயும் அப்பாட்டயும் விசியத்த சொல்லிட்டு, தெருவுல இருந்தவங்கட்டயும் சொன்னேன். எல்லாரும் “ஐயய்யயோ, அடக்கடவுள”ன்னு அடிச்சிப்பொரண்டு 

ஓடிவந்தாங்க.

“தம்பி, கட்டுலத்தூக்கி மொதல முத்தத்துல போடுங்க.” எங்கப்பா சொல்லிச்சி.

அப்பறமா எல்லாரும் சேந்து சித்தப்பாவத் தூக்கிட்டு வந்து கட்டுல்ல கெடத்துனோம்.வீச்சன்னா வீச்சம் சரியான வீச்சம்! பக்கத்துல நிக்க முடியல.அதனால வீட்டுக்கு வெளில வந்து நின்னோம். செவல அவரவிட்டு நவுறாம கட்டுலுக்கடியிலப்போயி படுத்துக்கிட்டு.

அவரு வீட்டுச்செடியில பறிச்ச பூவ, அவரு தலமாட்டுலயே வச்சிட்டு. “நான் வாரேன் மக்கா”ன்னு முதல் ஆளாய் அஞ்சலி செலுத்திட்டுப் போனான் கண்ணன்.

“மாப்ளேய்! இப்படி நின்னா எப்படி? அடுத்து ஆவ வேண்டிய கதயப்பாப்போம்.ஊமயன் பொண்டாட்டிக்கும், அவன் தம்பியளுக்கும் போனடிச்சி தகவலு சொல்லு” என்றார் சந்திரன் மச்சான்.

“ஹலோ சித்தி…”

“ஏல அய்யா, சொல்லு..என்ன விசியம்?”

“ஊம..ச்.சித்தப்பா எறந்துட்டாரு…”

“செத்துட்டான்னா.சரி வையி.நான் தம்பியள கூட்டிட்டு வாரேன்.”

“சரி,சித்தி.”

“என்ன மாப்ள சொல்லீட்டியரா…? சித்திட்ட சொல்லிட்டேன். சித்தப்பாவுக்கு பண்ணிருக்கேன். ரிங்…போவுது.”

“சீக்கிரம் சொல்லும்!”

“ஹலோ…யப்பா…”

“சொல்லு மவனே!”

“ஆபீஸ்லயா?இல்ல வீட்லயாப்பா?”

“ட்ரைவீங்கல மவனே!”

“யப்பா!வண்டிய ரெண்டு நிமுசம் அப்படியே ஓரங்கட்டு.”

“எதும் முக்கியமான விசயமா?இரு,வண்டிய நிப்பாட்டிட்டு கூப்பிடுறேன்.”

“ஹலோ…”

“யப்பா! ஊமச்சித்தப்பா செத்துட்டாருப்பா…!”

“என்ன சொல்ற! அரே… போனவாரம் போன் பண்ணும்போது நல்லாருக்கான்னு சொன்னியேப்பா!”

“அன்னைக்கிலாம் நல்லாத்தான்பா இருந்தாரு. இன்னக்கிப்பாத்தா… வீட்டுள்ள செத்துக்கெடக்காரு.நீங்க ஒடனே கெளம்பி வாங்க.”

“மவனே, ஐஸ்பாக்ஸுல வையுங்க. நாங்க பிளேட்டப்புடிச்சி நாளைக்கு காலையிலே வந்துருதோம்.”

“சரிப்பா.”

“பூச்சிப்பட்டயேதும் கடிச்சிருக்குமோ?”-எங்க சின்னம்ம சொன்னா.

“‘ஆட்ட டக்கு’ வந்துத்தான் செத்துருப்பான் சித்தி.” என்றாள் இசைவேணி அக்கா.

“அவனுக்கு மூசு மூசுன்னு எளைக்கிற சீக்குண்டு”ன்னு திண்ணையில ஒக்காந்து ஆளாளுக்கு ஆரூடம் சொல்லிக்கிட்டிருந்தாங்க.

எங்கப்பா மூலைகரைப்பட்டி மணித் தாத்தாவுக்கு போன் பண்ணி சவப்பெட்டி, ஐஸ்பெட்டி, சாமியானா பந்துலு எல்லாம் கொண்டுவர சொல்லிச்சி.

நானும் எசக்கியப்பனும் பைக்கிலப்போயி கொள்ளிவைக்க பான, வேட்டி துண்டு, பெரிய ரோஜாப்பூ மால, செண்டுப்பாட்டிலு எல்லாம் வாங்கி வந்தோம்.

மணித்தாத்தா ஒருமணிநேரம் கழிச்சி குட்டியானையில எல்லாத்தையும் எத்திட்டு வந்தாரு. எல்லாரும் சேந்து முத்தத்துல விறுவிறுவென ஏறக்கி வச்சோம்.

“பேரப்புள்ள.. ‘வாட’ ரொம்பலா அடிக்கி… என்னைக்கி செத்தாரு?”ன்னு கேட்டார் மணித்தாத்தா.

“தெரில தாத்தா. கடேசியா செவ்வாக்கெளம காலையில பூப்பண்டாரம் பூப்பறிச்சிட்டு பாத்துட்டு போயிருக்கான். அன்னைக்கி ராத்திரி பதினோருமணிவர கேட்டு வாசல்ல ஒக்காந்துட்டு இருந்தத எதுத்த வீட்டு பேச்சியம அத்த பாத்துருக்கு.அதுக்கப்புறம் ரெண்டுநாளா யாரும் பாக்கல.”

“நீங்களலாம் அப்பாட்டுமெண்டுலயா இருக்கிய? பக்கத்து வூட்டுக்காரன் இருக்கானா.. இல்ல செத்தான்னான்னு தெரியாமப்போவுதுக்கு! தெருவுல நாலஞ்சி வூடுதான் இருக்கு. அதுல ஒரு வூட்டுக்காரன் ஆளு நடமாட்டமில்லன்னா, என்ன ஏதுன்னு பாக்க வேண்டாம்மாப்பா?” என்று சடச்சிக்கொண்டே ஊமச்சித்தப்பா ஒடம்ப தொட்டுப்பாத்துட்டு, “பேரப்புள்ள! பாடி கண்டிசன் ரொம்ப மோசமாருக்கு.இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துக்குள்ள பிரேதத்த தூக்கீயிருங்க. ஏன்னா, இப்பவே தொலியெலாம் பிஞ்சி நீரு வடிய ஆரம்பிடுச்சி.ஐசுப்பெட்டியில வச்சாலும் நாளைக்கி வர தாங்காது… அப்புறம் ஒங்க விருப்ப”மென்று பந்தலுப்போட ஆரம்பித்தார் மணித்தாத்தா.

“ஹலோ… யப்பா…”

“சொல்லு மவனே…”

“யப்பா! நெலம ரொம்ப மோசமாருக்கு. இருக்க இருக்க வாட தாங்க முடியல;வீட்டுக்கு வெளிலக்கூட நிக்க முடியல. வயிறு ஊதிக்கிட்டே போவுது.வெடிக்கிதமாரி இருக்குதுப்பா!அதனால இன்னைக்கே தூக்கிட்டுப்போயி அடக்கம் பண்ணிரணும்னு எல்லாரும் சொல்றாங்கப்பா.”

“மவனே, இன்னைக்கி ஒருநாளு ஐஸ்பாக்ஸ்ல வச்சி அட்ஜஸ் பண்ண முடியாதா?”

“யப்பா, நம்மூருல கரண்டு வந்தா போவாது; போனா வராது. அப்றம் ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆச்சின்னா, ஒன்னும் செய்ய முடியாது!”

“………………”

“யப்பா…என்னாச்சி?”

“கடேசியா அவன் மொகத்தக்கூட பாக்க முடியாம போச்சப்பா…! அதான் கஷ்டமாருக்கு.சரி மவனே, நடக்கவேண்டிய கதயப்பாரு. உன் அக்கவுண்டுக்கு பைசா போட்டுவுடுதேன். எடுத்து ஊமையன நல்லபடியா அடக்கம் பண்ணுங்க. நாங்க ட்ரைனுலயே வாறோம்.”

“சரி,வாங்கப்பா.”

“மாமா, ஊமயன் பொண்டாட்டிப்புள்ளய வந்தாச்சி.நீருமால எடுக்க எல்லாம் ரெடி பண்ணட்டும்மா/”னு எங்கப்பாட்ட சந்திரன் மச்சான் கேட்டாரு.

சித்தியும் தம்பியளும் தள்ளிநின்னு, ஊமச்சித்தப்பா பாடிய பாத்துட்டு, “எப்பும் பிரேதம் தூக்கப்போறீய? பாம்பேலருக்குற இவந் தம்பியளு என்ன சொன்னானுவ?”னு சித்தி கேட்டதுக்கு, “மூணு சித்தப்பாவும் இன்னைக்கே அடக்கம் பண்ணச் சொல்லிட்டாங்க.இன்னும் ஒருமணி நேரத்துக்குள்ள தூக்கியிர வேண்டியதுதான்” என்றேன் நான்.

ஊமச்சித்தப்பா மவனுவ ரெண்டுபேத்தெயும் கூட்டிக்கிட்டு, மடைத்தலை பண்ணையார் கெணத்துலப்போயி நீர்மாலை எடுத்துட்டு வந்து…கட்டுல்ல நீட்டி படுக்க வச்சிருந்த சித்தப்பாவ, நீருமாலத்தண்ணியால தலமாட்டுலருந்து காலுமாட்டுவர ஊத்திக் குளுப்பாட்டி,புதுச்சட்டப்போட்டு வெள்ள வேட்டிக்கட்டி,தூக்கி உக்காரவச்சி புடிச்சிக்கிட்டோம் நாங்க.

மணித்தாத்தா வெள்ளத்துணி கிழிச்சி நாடிக்கெட்டு கெட்டிட்டு,சந்தனத்த கொளப்பி கண்ணுலயும், பஞ்ச சின்ன உருண்டையா சுருட்டி மூக்கு ஓட்டையிலும் சொருவுனாரு.

மாருல பாலுக்குடிச்சி மடியில தூங்குன புள்ளய தூக்கங்கலையாம தொட்டுல்ல தூக்கிப்போடும் தாயைப்போல, ஊமச்சித்தப்பாவ தூக்கி சவப்பெட்டியில கெடத்துனோம்.

எங்கப்பாவும் எசக்கியப்பனும் பிரேதத்துமேல செண்ட்டையும் பன்னீரையும் செழிப்பா தொளிச்சிட்டு, ரோஜாப்பூ மாலய கழுத்துல போட்டுவிட்டாங்க.

நான் பாம்பே சித்தப்பாக்களுக்கு செல்போன்ல போட்டாயெடுத்து வாட்சப்புல அனுப்புனேன். நீலநிற டிக் விழுந்தது. அந்த ரெண்டு டிக் அவரின் புகைப்படத்தை பார்த்து கைப்பேசி கண்கலங்கி ரெண்டு சொட்டு கண்ணீர் விடுவதுபோலிருந்தது எனக்கு.

“கடேசியா மொகத்த பாக்கரவுங்க பாத்துக்கோங்க.” என்ற கேள்வி அவசியமற்றுப்போனதால், சவப்பெட்டிய மூடி ஆணியடித்துவிட்டு, “என்னப்பா பாத்துட்டுருக்கீய? தூக்குங்க நேரமாவுது” என்றார் மணித்தாத்தா.

சவப்பெட்டிய முன்னால ரெண்டுபேரு பின்னால ரெண்டுபேரு தூக்கிட்டு வந்து முச்சந்தியில மூணுச்சுத்து சுத்தி, குட்டியானை வண்டில வச்சி கொண்டுப்போயி பெரிய கொளத்துக்கரையில பொதச்சிட்டு, அந்த கொளத்துலயே எல்லாரும் குளிச்சிட்டு வந்தோம்.

எல்லாருக்கும் எங்கம்ம காப்பிப்போட்டு குடுத்தா. திண்ணையில உக்காந்து பேசிக்கொண்டே குடித்தோம்.

கெடையில கெடக்கும் முண்டுப்பாட்டி காப்பிய குடிச்சிக்கிட்டே, “பாவிப்பய..நாலுப்பேருக்கூட பொறந்தும் இப்படி நாதியத்தவங் கெணக்கா போயி சேந்துட்டானே…!”னு கண்ணீர் வுட்டா.

திண்ணையிலருந்த எங்கிட்ட, “யண்ணோ…நாங்க கெளம்புறோம்”னு சொன்னான் ஊமச்சித்தப்பா மகன் மூத்தவன்.

“ஏல தம்பி,என்ன கெளம்புறோம்ன்னு சொல்ற? ரெண்டுநாளு கழிச்சி பாம்பேலருந்து சித்தப்பாலாம் வாறாங்க. காரியம் பண்ண வேண்டாமா? ஏதோ சொந்தக்காரன் துஷ்டிக்கி வந்தமாறி ஒடனே கெளம்புற?”

“எங்கம்மக்கிம் எங்களுக்கும் அவரு செய்யவேண்டிய கடமையில எதாவது ஒண்ணு செஞ்சிருப்பாரா? சொல்லு பாப்போம்!”

“செஞ்சாருன்னு யாருப்பா சொன்னா. இருந்தாலும் கடேசியா இந்த ஒன்னையும் செஞ்சுட்டுட்டா ஒங்கடம முடிஞ்சிரும்.”

“யண்ணே! இந்த ஆளுக்கு கொள்ளி வச்சதே பெருசு.காரியம் காடாத்துலாம் நீங்களே பண்ணிக்கோங்க” என்று புல்லட்டில் அம்மாவையும் தம்பியையும் ஏற்றிக்கொண்டு,தெருவே அதிரும்படி கோபத்தில் ஆக்சிலேட்டரை முறுக்கி மின்னலாய் மறைந்துப்போனான்.

இரவானதால் அமர்ந்து பேசியவர்கள் அவரவர் வீட்டைப்பார்த்து பசியில் கலைந்து போயினர். திண்ணை அனாதையானது. தெரு ஊமச்சித்தப்பாவைப்போல் வெறிச்சோடி ஊமையானது.

நானும் சாப்பிட்டுவிட்டு உறங்குவதற்காக மச்சிக்கு படி ஏறிக்கொண்டிருந்தேன்.

“ஏல தம்பியோ.. கொஞ்சம் கீழ வா”யென்றாள் எங்கம்ம.

“என்ன சொல்லு?”

“ஊமயன் நாயிக்கு சோறு வச்சிட்டு கேட்டப்பூட்டாம வந்துட்டேன். போயி பூட்டிட்டு வந்துருய்யா.”

“சரி, நீ தூங்கும்மா”னு எங்கம்மட்ட சொல்லிட்டு ஊமச்சித்தப்பா வீட்டு வாசல்ல நின்னு உள்ள எட்டிப்பாத்தேன். தட்டுல வச்ச சோறு வச்சப்படி அப்படியே இருக்குது. தார்சாவுல அவரு எப்போதும் உக்காந்திருக்கும் படிக்கட்டுல படுத்துக்கொண்டு, வாய்பேசமுடியாத சித்தப்பாவின் பிரிவின் வலியை மனம்விட்டுப் பேச யாருமில்லாமல், வாயில்லா ஜீவன் செவலை ‘ஓ’வென இருட்டில் தனியாய் ஊளையிட்டுக்கொண்டிருந்தது…!

– munees4185@gmail.com

******

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button