கட்டுரைகள்
Trending

வடிவேலுவுக்கு என்டே கெடையாது

தாமு

சிங்காரவேலன் படப்பிடிப்பு இடைவேளை…

கவுண்டமணியும் கமல்ஹாசனும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். கவுண்டமணி சதா வடிவேலுவைத்  திட்டிய வண்ணம் உள்ளார். பரிதாபமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் சொல்வதைச் செய்கிறார் வடிவேலு. சிங்காரவேலன் வடிவேலுவை காமெடியாகத் தான் பார்த்திருப்போம். ஆனால், திரைக்குப் பின்னே நடக்கிற இம்மாதிரியான விஷயங்கள் அடையாளமேதுமற்ற அன்றைய வடிவேலுவை எவ்வளவு பாதித்திருக்கும்…

திரைத்துறையில் வடிவேலுவின் நிலை அப்போது உண்மையிலேயே இப்படித்தான் இருந்தது. ஏன், இன்றும் கூட எத்தனையோ கலைஞர்களின் நிலைமை இதுதான். வடிவேலுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவெனில், இதனால் எல்லாம் வடிவேலு மனம் நோகவில்லை என்பதைத்தான். இது போன்ற அவமானங்கள் அவரது முயற்சியையோ, தான் சார்ந்த திரைத்துறையின் மீதான ஆர்வத்தையோ சிறிதும் குறைக்கவில்லை. பின்பு, நடிகர் கமல்ஹாசன் தேவர்மகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவுக்கு வாய்ப்புக் கொடுத்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனே, “யார்றா இந்தப் பய…?” என வியக்குமளவுக்கு சிறப்பாக தன் முத்திரையைப் பதித்தார் வடிவேலு.

வடிவேலுவின் முதல் படமாக அனைவரும் நினைப்பது, “என் ராசாவின் மனசினிலே” திரைப்படத்தைத்தான். ஆனால், அவர் முதலில் நடித்தப் படம் 1988ம் ஆண்டு வெளியான TR இயக்கிய “என் தங்கை கல்யாணி” படத்தில் தான். அதில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அவர் முகம் கூட ஒழுங்காகக்  காட்டப்படாது. பின்பு 3 ஆண்டுகள் கழித்து தான் “என் ராசாவின் மனசினிலே” படத்தின் மூலம் நன்கு அறியப்படுகிறார்.

வடிவேலு நடித்த 6வது படம் “சிங்காரவேலன்”. அதில் அவருக்கு சொற்ப வசனங்களே கொடுக்கப்பட்டன. வெறும் உடல் மொழி மூலம் மட்டுமே பல இடங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பார். அதில் அவர் சொன்ன “வாவ்… சட்டே மேலே எவ்ளோ பட்டன்ஸ்” வசனம் இன்றும் யாரேனும் ஒருவரது டைமிங் காமெடிகளை அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கிறது. கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் சிக்ஸர் அடிப்பது வடிவேலு மட்டும்தான் என தாராளமாகச் சொல்லலாம்.

பின்பு 1993ல் வெளியான “கோவில் காளை” திரைப்படத்தில், ‘இளநீர் கடை’ காமெடிகள் தமிழ்நாட்டின் இண்டு இடுக்கெல்லாம் வடிவேலுவை இழுத்துச் சென்றுவிட்டன. அதுவரை சோலோ காமெடியில் நடிக்காத வடிவேலுவுக்கு “காதலன்” திருப்புமுனையாக அமைந்தது. திரும்பிய பக்கம் எல்லாம் “பேட்டராப்”. இன்னொரு பக்கம் NSK வந்துட்டாரா என்பது போல, விவேக் தனது நகைச்சுவையில் ஒரு பக்கம் சென்று கொண்டு இருந்தார். ஆனால் அது வேறு(விவேக்). இது வேறு(வடிவேலு).

தனது பயணத்தில் வடிவேலு எடுத்த அவதாரங்கள் எக்கச்சக்கம். சட்டென “சூனா பானா” ஆனார், “வந்துட்டான்யா, வந்துட்டான்யா” என்றார், ராசய்யா படத்தில் “கிளி” ஆனார், ”ஆசை” படத்தில் அஜித்துடன் இணைந்தார், ரஜினியுடன் இணைந்து, “இந்த அச்சாணி எதுக்கு என்றார்” , “காலம் மாறிப்போச்சு” படத்திற்கு தமிழக அரசு விருது வாங்கினார். “நேசமணி ஆனார், காண்ட்ராக்ட் எடுத்தார்” அதன் மூலம் பல ஆண்டுகள் கழித்து இன்று வேர்ல்ட் பேமஸ் ஆனார்.

நடிப்பு நகைச்சுவை அனைத்தையும் தாண்டி வடிவேலு ஒரு சிறந்த பாடகர். ‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடி கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசினிலே), ‘வாடி பொட்டப் புள்ள வெளியே’ (காலம் மாறிப்போச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பகவதி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி) என இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

//எதுவும் பண்ண வேண்டாம் = நீ புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான்.

அய்யயோ இப்படி ஆகிருச்சே = வட போச்சே

ரொம்ப நேரம் ஆகுது = தம்பி டீ இன்னும் வரல

சரி நடந்தது நடந்து விட்டது, மறந்துவிடுவோம் = ரைட்டு விடு//

இப்படி நம் மக்களின் மொழிக்கே புது டிக்சனரியை உருவாக்கினார். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதை ‘சினிமா மோகம்’ என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டுப் போக முடியாது. தமிழ்நாட்டில் இன்றைய இளைஞர்களிடம் பேசும் போது அவர்கள் பேச்சின் முடிவில் வடிவேலுவின் ஒரு வசனத்தையாவது தன்னையறியாமல் சொல்லி விடுவார்கள். எல்லோருக்குள்ளும் ஹீரோ ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமா என்று தெரியாது. ஆனால், நல்ல காமெடியனாக இருக்க வேண்டும், அதாவது தன்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரித்தபடியே மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக இருக்கும். மக்களை மகிழ்விக்கிற எல்லோருமே ஹீரோக்கள்தானே…அந்த வகையில் ஒரு நல்ல நகைச்சுவையாளன்தான் உண்மையான ஹீரோ. இப்படி மற்றவர்களைத் தங்களது பேச்சாலும் செயல்களாலும் சிரிக்க வைக்க இயலாதவர்களுக்கெல்லாம் வடிவேலுதான் கடவுள். தங்களது பேச்சினிடையே சூழலுக்குத் தகுந்தபடி வடிவேலுவின் வசனங்களை ஆங்காங்கே மழைச் சாரல் மாதிரி (இதுவே வடிவேலு டயலாக்தான்…) தூவி விட்டால் போதும். நண்பர்களிடையே நாமும் ஃபேமஸ் ஆகிவிடலாம். ஆச்சர்யம் என்னவெனில் நாம் அன்றாடம் எதிர்கொள்கிற அனைத்து பிரச்சனைகளுக்கும் அல்லது கிட்டத்தட்ட அனைத்து விதமான சூழல்களுக்குமான நகைச்சுவை வசனங்களையும் வடிவேலு பேசி நடித்திருக்கிறார். ஒருவன் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை முழுவதுமாகப் பார்த்து ஓரளவுக்கு ஞாபகம் வைத்துக் கொண்டால் கூடப் போதும். அதன்பின் அவரைக் கையிலேயே பிடிக்க முடியாது.

வடிவேலு ஒரு சிறந்த நடனக்கலைஞர். அது சொல்லிக் கொடுத்து வரும் ஆட்டம் இல்லை, இசையை மனதாலும் உடலாலும் உணர்வுப் பூர்வமாக  உள்வாங்கி அப்படியே போகிற போக்கில் தெளித்து விடுவது. “அவளுக்கு என்ன அம்பாசமுத்திரம்” பாடலில் துவக்க ஆட்டமே வடிவேலுதான்.அதுபோல “கொப்புறானே, கொப்புறானே” என யுவன் இசையில் அவரது பாடலை இப்போது கேட்டாலும் ஆடத் தோன்றும்.

சமூகத்தின் ஒவ்வொரு கடைநிலை மனிதனையும் தேடிச் சென்று நகைச்சுவையை வாங்கவும், பின்பு அதையே அவர்களுக்கு திருப்பித் தரவும் செய்தவர் வடிவேலு. வெட்டியான் கதாபாத்திரத்தில் கூட அவ்வளவு நகைச்சுவை பண்ண முடியும் எனப் பொட்டில் அறைந்து சொன்னார். வெறுமனே நகைச்சுவையாக மட்டுமல்லாது வாழ்வின் யதார்த்தத்தையும் அப்படத்தில் பதிவு செய்திருப்பார். நரிக்குறவர் கதாபாத்திரத்தில் நகைச்சுவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடித்ததால் சில கண்டனங்களுக்கும் ஆளானார். 2000 க்குப் பிறகு தமிழ் சினிமாவின் மாற்றே இல்லா இம்சை அரசனானார்.

நகைச்சுவையில் பிரதானமான பங்கு வகிப்பது உடல்மொழிதான். இன்றளவும் திரைத்துறையில் வடிவேலுவின் இடத்தை யாராலும் அடைய முடியாதிருக்க காரணமே அவரது தனித்துவமான உடல்மொழிதான். வசனமே இல்லாமல் ஒரே ஒரு முகபாவனையில் கூட வடிவேலுவால் நம்மை சிரிக்க வைக்க இயலும். அந்த பாவனைகள்தான் இன்று கோடிக் கணக்கில் மீம்களாக அதுவும் சமூக அவலங்களுக்கெதிரான மீம்களாக நம்மிடையே உலா வந்து கொண்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற ரசிகர்கள் இன்றைய நாளை அவரது பிறந்தநாளாகக் கொண்டாடி வருகிறார்கள்.உண்மையில் செப்டம்பர் 12 தான் அவருடைய பிறந்தநாள்.இதனை வடிவேலுவே சன் தொலைக்காட்சி மூலமாக வந்து அறிவிக்கும் அளவுக்கு ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடித் தீர்த்து விட்டனர்.அதனால் என்ன? பிறந்தநாளன்றைக்குதான் அவரைக் கொண்டாட வேண்டுமா? வடிவேலு போன்ற கலைஞர்களுக்கெல்லாம் தினம் தினம் பிறந்தநாள்தான்.

பட வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்டாரா அல்லது இல்லாமல் போய்விட்டதா போன்ற விவாதங்களுக்குள் நாம் செல்லத் தேவையில்லை. இப்போதெல்லாம் புதுப்பட ட்ரைலர்கள் வந்தவுடனே அதன் வடிவேலு வெர்சன் பார்க்க காத்துக் கிடக்கிறோம்.எந்தப் படமாக இருப்பினும் எந்தப் பாடலாக இருப்பினும் அதன் வடிவேலு வெர்ஷனை கச்சிதமாக நம்மால் உருவாக்க முடிகிறது என்றால் அவர் எப்பேர்ப்பட்ட கலைஞன்…!

அவருடைய பாணியிலேயே இக்கட்டுரையை முடிக்க வேண்டுமெனில், “எனக்காடா என்டு கார்டு போடுறீங்க, எனக்கு என்டே கிடையாது”.

ஆம். இந்த வைகைப் புயல் தமிழ் மனங்களின் கரையை ஒருபோதும் கடக்கப் போவதில்லை…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. சிரிப்பு வருது சிரிப்பு வருது தேவா பாடினதில்லையா!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button