
எனக்கு உங்களைப் போன்றோரைத் தெரியும். உங்க மீசை முறுக்கல்கள், கித்தாப்பு போன்ற எல்லா பொழ்சுகளும் தெரியும். நான் அப்படியல்ல. சென்னையை விட்டு புற நகருக்கே சென்று விடுகிற சாலை ஒன்றின் பாலத்துக்கு அடியே எப்போதும் பத்து காயிதம் பொறுக்கிகள் படுத்துக் கிடப்பார்கள். அதில் ஓரிரு பெண்களும் உண்டு. நடு இரவில் கொண்டு போன காரை தூரத்தில் போட்டு விட்டு சொக்கம்மாவை எழுப்பினால் அவள் என்னை, “வா கில்லாடி” என்பாள். நீங்கள் இப்பவே கூட உங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளலாம், எனக்கு அவள் நாற்றம் பிடிக்கும். அதாவது நான் சொல்ல வருவது, கில்லாடிகளை உங்களால் அளவெடுக்கவே முடியாது. நான் உங்கள் உச்ச நட்சத்திரம் படித்த கான்வென்டில் படித்தவன். ஒரே நேரத்தில் நாற்பது பேரை பொளக்க டைவ் அடிக்கிற அவன், நான் தலையை வாருவதற்கு கையை தூக்கினால் கும்பிடு போடுகிற கோழை. அப்புறம் சென்னையின் நம்பர் ஒன் கல்லுரி. அப்பா கலக்டர் லெவல். அம்மா ஆபீசர். பெரியவர்கள் செய்கிற சில தவறுகளை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு சிறுகச் சிறுக எனது வீட்டை அழித்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் பிரித்துக் கொண்டு அப்பா தம்பியுடன் ஓடினார். நான் எனது அம்மாவைத் தவிர அனைத்தையும் விற்றேன். நடுவில் ஒரு திருமணம் நடந்தது, அது எனக்கு வெறும் கனவு போலதான் இருக்கிறது. அவளது முகம் மனசில் கூட இல்லை. ஒரு கிட்னியை விற்ற காசில் அம்மாவை மூகாம்பிகை பக்கத்தில் உள்ள ஆஸ்ரமம் ஒன்றில் சேர்த்து விட்டு கல்கத்தா சென்று காளியைப் புரிந்து கொள்ளுவதற்காக ஒரு விடுதியில் மூன்று மாதம் தங்கினேன். உடம்பு தேறியிருந்தது. ஆனால் காசு தீர்ந்து முடியப் போகிறது. தினமும் இரவில் என்னோடு காதில் பேசுகிற முருகப் பெருமானிடம், ”நான் தற்கொலை செய்து கொள்ளவா, போரடிக்கிறது” என்றேன். அவர் அமைதியாக இருந்தார்.
எவ்வளவோ யோசித்தும் ஒரு பிடிப்பு வரவில்லை.
”அமிர்தா, அவளைப் போய் பார்க்கட்டுமா?” என்று கேட்டேன்.
அவருக்கு அதில் ஆட்சேபணை இல்லை.
அவள் கேரளாவில் கொல்லம் பக்கத்தில் இருந்தாள்.
நான் சொன்ன கதை நடந்த அந்நேரத்தில், சொத்துக்கள் எல்லாம் போன பிறகு அம்மாவை அவளது அக்கா வீட்டில் விட்டேன். ஒரு வேலைக்காரி கிடைத்த சந்தோஷத்தை அவர்கள் முகத்தில் பார்த்திருந்து ரோடு சுற்றினேன். அளவுக்கு மீறிப் பசித்தால் பிச்சை எடுத்து சாப்பிட்டேன். ”டூ யு ஹேவ் மணி பார் மை லஞ்ச் ?” ஒருமுறை குமரகம் அருகே ஒதுங்கின காரில் இருந்து இறங்கினாள் அமிர்தா. எனது கவுரவப் பிச்சையை அடித்துப் பார்த்தவாறு நின்றாள் அவள். அடேங்கப்பா என்ன கண்கள் அவை? சாப்பாடு வாங்கிக் கொடுத்தாள். சமமாக உக்கார்ந்து உணவருந்தி முடித்து, இறுதியாக பிரதமன் பாயாசம் குடிக்கும்போது நால்வர் வந்தார்கள். காரில் எல்லோருமாகப் போனோம்.
ஒரு அறிமுகம், மற்றும் எனக்கான வகுப்பு முடிந்து சென்னையை விட்டே போனோம்.
கோவையில் மந்திரிமார், போலீஸ் அதிகாரிகள், நடிகர் நடிகையர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட ஒரு பிரம்மாண்டமான விழாவுடன் சிட்டுக்குருவி சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் துவங்கப்பட்டது. அதற்கு மானேஜிங் டைரக்டர் நான்தான். எனக்கு சுரேஷ் கிஷன் என்று பெயர் சூட்டினார் ஒரு டிஎஸ்பி. தமிழ் தெரியாது. ஆங்கிலம், ஹிந்தி பேச வேண்டும். அதுவும் வாடிகையாளர்களிடம் பிரெஞ்சு மட்டுமே பேசுவேன். எல்லாத்துக்கும் துபாஷிகள் இருந்தார்கள். பணம் வந்து சேர்ந்தவாறு இருந்ததை என்னவென்று சொல்லுவது? ஒரு பக்க மார்பை காற்று வாங்க விட்டுக் கொண்டு கிளையண்டுகளை கொண்டு வருவாள் அமிர்தா. அவர்கள் அவளிடம் மயங்கினார்களா, பயந்து கொண்டிருந்தார்களா என்பதை சொல்லவே முடியாது. நடப்பதெல்லாம் ராஜநடை தான். நால்வர் அணி தங்கள் பாட்டுக்கு சகஜமாக இருந்தார்கள். கடையை ஊத்தி மூடி விட்டு ஓடுவதற்காக அதன் பார்மாலிட்டிகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஒருத்தன் வந்தான். பத்து போட்டவன். அம்பதை கையில் வாங்குகிறான். தப்பிச்சுப் போடா என்று நான் யோசிப்பதற்குள் அவன் அந்த அம்பதையும் போட்டான். அது கூடப் பரவாயில்லை, ஆந்திராவில் இருந்து ஒரு மினி பேருந்தில் ஆட்களைக் கூட்டி வந்தான். ஆளுக்கு அம்பது போட்டார்கள். அன்று இரவு எல்லாவற்றையும் சாத்திக் கொண்டு போவதற்கு முன் எனக்குக் கொடுத்திருந்த கோட்டு சூட்டை நால்வர் அணி பிடுங்கிக் கொண்டது. டிஎஸ்பி நான் எப்படி முடி வெட்டிக் கொண்டு தாடி வளர்க்க வேண்டும் என்பதை சொன்னார். மறைந்து வாழ்வது எப்படி என்பதையும் விவரித்தார். அதற்கு அடுத்த மூன்று நாளில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் அவர் அலுவலகத்திற்கு முன்புதான் வரிசையில் நின்றார்கள். அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டியளிக்கவும் செய்தார்.
எனக்குத் தருவதாக சொன்ன பணத்தில் பத்து சதவீதம் கூட கொடுக்கவில்லை.
நான் அதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கவுமில்லை.
முருகப் பெருமான் நான் அமிர்தாவை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவளைக் கொலை செய்ய வேண்டும் என்று நான் விரும்புவது அவருக்குத் தெரியாமல் இருக்குமா? அப்படியாகத்தான் அந்த நள்ளிரவில் கேரளா வந்து சேர்ந்து ஊரின் உள்ளே அடக்கமாக இருந்த அந்த ஊருக்கும் வந்து சேர்ந்தேன். எல்லாவற்றையும் மரங்களின் இருட்டு மூடி முழுங்கியிருந்தது. ஆங்காங்கே தூங்கி வழிகிற தெரு விளக்குகளின் வெளிச்சம் கூட பனியில் தளர்ந்திருந்தது. முக்கி முனகி பள்ளத்தில் விழுந்து எழுந்து சென்ற ஆட்டோவில் இருந்து இறங்கி கொஞ்ச தூரம் நடந்தபோது நாய்கள் குரைத்துக் கொண்டு பிடுங்க வந்தன. அதை நேரிட்டுப் பார்த்து நின்று ஒன்றைத் தடவிக் கொடுத்ததும், ’எனக்கு எனக்கு’ என்று அவை குழைந்தன. பையில் இருந்த கோழிக்கோடு அலுவா மொத்தத்தையும் பிய்த்துப் போட்டேன். சமாதானம் செய்து அவற்றை அனுப்பி வைத்து விட்டு அமிர்தாவின் வீடு என்று சொல்லப்பட்டிருந்த மேட்டில் இருந்த வீட்டுக்குப் படியேறினேன். அங்கேயும் ஒரு வேட்டை நாய் இருந்து பாய்ந்து வந்தது. ”இருடா நாயே, கொஞ்சம் இரு !” விளக்குகள் எரிந்தன. லுங்கியும் சட்டையுமாக அமிர்தா நின்றாள்.
“ஏதாவது சாப்ட்டியா?“
“இல்ல“
அது ஒரு ஒடுங்கின சமையல் அறை. அங்கேயே மனை போட்டு அமர வைத்தாள். சோற்றை இறக்கி பரிமாறினாள். வயல் மீன்களை வைத்து செய்த குழம்பு சற்றே மண் வாசனை போன்ற ஒன்றோடு சுவையாக இருந்தது. வாத்து முட்டைகள் இரண்டு, வேக வைக்கப்பட்டவை. நன்றாக சாப்பிட்டேன். வீட்டில் இருந்த தட்டும்புறத்தில் மெத்தையைப் போட்டு அழைத்தாள். சிறுநீர் கழிக்க வந்தால் போவதற்கு அறையின் மூலையில் கோளாம்பி வைக்கப்பட்டிருந்தது. நான் தூங்கப் போகும்போது கீழே மரகதவுகள் தாழிடும் சப்தம் கேட்டன. ஒரு ஆணின் இருமும் சப்தமும் கேட்டது. தெரியும், அது அவளுடைய கணவர். வெகு காலமாக பக்கவாதம் வந்து படுத்திருக்கிறார். அந்த ஊரின் பெரிய வீடான மேனன் குடும்பத்தைச் சேர்ந்தவர். எவ்வளவோ தொழில்கள் அவர்களுக்கு. யானை எல்லாம் வளர்க்கிற பேரு கெட்ட குடும்பம். எல்லாவற்றையும் விட்டு அமிர்தாவிற்க்காக படியிறங்கி வந்து விட்டவர். படுத்து விட்டார். ”தேவடியா மகளே” என்று அவர் உறுமுவது குழறலாகக் கேட்டது. என்னவோ நடக்கட்டும், காசு இருக்குமா, தருவாளா, குத்திப் போட்டுவிட்டு போவது நன்றாக இருக்குமா என்பதில் எந்த முடிவும் வராமல் ஆயாசத்தில் தூங்கினேன். திடுக்கிட்டு எழுந்த போது அடிவயிற்றில் மூத்திரம் முட்டியது. அந்த செம்புப் பாத்திரத்தை பார்த்துக் கொண்டு நின்றேன். அதில் போக முடியும் என்று தோன்றவில்லை. படியில் இறங்கினேன். இரவு முடியப் போகிறது என்பதில் கண்களை அடருகிற இருள் இல்லை. புறக்கடைக்கு செல்லுகிற கதவு திறந்திருந்ததை பெரிதாகக் கவனிக்காமல் சிறுநீர் கழிக்க வேண்டிய ஆத்திரத்துடன் ஓடி, பாத்ரூம் கதவைத் தள்ளினேன். எழுந்த அமிர்தா முழுவதுமாக குளித்து நனைந்து ஒரு துணியும் உடுத்தாமல் நின்றாள். நான் அவளைப் பார்த்திருந்தேன். அவளும் மறைக்க கொள்ள செய்யாமல் எனது கண்களில் பார்த்திருந்தாள்.
அப்போது தான், தலையில் இடி விழுந்தது போல ஒரு உண்மையையை உணர்ந்தேன்.
நான் இவ்வளவு பாடுபட்டுக் கொண்டு இந்த ஊருக்கு வந்து அவள் போட்டதை சாப்பிட்டு அவள் போட்ட மெத்தையில் படுத்துத் தூங்கினது அவளைக் கொல்லுவதற்காக அல்ல.
அதைப் போலவே எனக்கு சோறு போட்டு இரவு தங்க வைத்ததற்கு அவளுக்கு ஒரு காரணம் இருந்தது. கொஞ்ச நேரத்தில் போலீசார் வந்து எனது கரங்களில் விலங்கு போட்டார்கள்.
அவள் அவர்களுக்கு போன் செய்திருந்தாள்.
கோவை மத்திய சிறையில் மூன்று வருடங்கள் இருந்தேன்.
திரும்பி வந்து அம்மாவைத் தேடியபோது அவள் கர்நாடகாவின் மலைப்பிரதேசத்தில் உள்ள விஸ்தாரமான ஒரு ஆஸ்ரமத்தில் இருந்தாள். அதற்குள் குன்றுகள், நீர்த் தேக்கங்கள் எல்லாமிருந்தன. ஷக்தி வழிபாடு பற்றி புல்லரித்துக் கொண்டிருந்தார் என்னை அழைத்துச் சென்றவர். இப்போது உயிர் வாழும் அம்மையின் பெயர் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது. அவருடைய முகங்கள் எல்லா திசையிலும் இருந்தன. சற்றே இன்னமும் தேஜஸ் கூடின அமிர்தாவை அன்று இரவு சந்தித்துக் கூடினேன். பாலைவனத்தின் தோலுரிப்புடன் ஆற்றில் இறங்கின ஒருவனின் திளைப்பு அந்த சுகம். ஆத்மாவைத் தொட்ட குளிர் அது. இருவரும் எவ்வளவோ நேரம், அல்லது காலம் பேசாமலிருந்தோம். “குமரகம் ஓட்டல் வாசலில் நீ பிச்சை கேட்டாய் அல்லவா, அப்போதே நான் உன்னை என்னுள் எடுத்துக் கொண்டிருந்தேன்” என்றாள் அவள். நானும்தான் என்கிற எனது உண்மையை நான் சொன்னேன். “உன் கையால் நான் சாகடிக்கப்பட்டு விடுவேனோ என்கிற பயத்தில்தான் உன்னைக் காட்டிக் கொடுத்தேன்” என்றும் அவள் சொன்னாள்.
ஒரு மனிதன் காதலை அடைவதில் என்ன பெருமை?
காதல் எங்களை வந்து அடைந்தது.
எனது அம்மாவும் அவளுடைய புருஷனும் ஆஸ்ரமத்தில்தான் இருக்கிறார்கள்.
பேராசை மிகுந்த மக்கள் சிட்பண்டிற்கு திரண்டு வந்ததைப் போலத்தான் இங்கேயும் பேராசையுடன் அவர்கள் ஆத்மாவைக் கடைதேற்ற வருகிறார்கள்.
நீங்கள் பல விஷயங்களையும் நம்ப மாட்டீர்கள். என்னோடு முருகப் பெருமான் பேசுவதை நீங்கள் நம்பவில்லை அல்லவா? அமிர்தா என்கிற அற்புதமான பெண் தனக்குள் இருக்கிற காளியை வெளிக்கொணர்ந்து எத்தனையோ பரிதாபமான உயிர்களுக்கு நிம்மதியாகப் பரவுகிறாள், மேவுகிறாள், ஆசுவாசமாக உள்ளுறைகிறாள் என்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? நான் பார்க்காத நிபுணர்கள் இல்லை. கலந்து கொள்ளாத புத்தி ராவணர்கள் இல்லை. எனக்கு நண்பராக இருந்த சிவ தாசன் காதுகள் என்கிற நாவலைப் பற்றி சொன்னார். தமிழ் தகராறு என்றாலும் பலமுறை அதைப் படித்திருக்கிறேன். இதெல்லாம் சகஜம் என்றால் யாருக்கும் புரியாது. அதைப் போலவே வேறு ஒன்றையும் நீங்கள் தீவிரமாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும். நாங்கள் உடலுறவு கொள்ளும் போது அதைப் புகைப்படம் எடுத்துக் கண்டித்து பதவி, பணம் கேட்ட, மனித அடிப்படைகளை கோணலாக எடுத்துக் கொண்ட ஒரு நல்லொழுக்க வெறியனை தார் டப்பாவில் முழ்கடித்து பற்ற வைத்துக் கொலையும் செய்தோம். அது எங்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கவும் செய்தது. இந்த மாதிரி நேரங்களில் மட்டும்தான் நாங்கள் தடைகளைத் தாண்டி முன்னேறுவது போன்ற பகுத்தறிவை எடுத்துக் கொள்கிறோம். மற்றபடி எனக்கு உங்களைப் போன்றோரைத் தெரியும். உங்கள் மீசை முறுக்கல்கள், கித்தாப்பு போன்ற எல்லா பொழ்சுகளும் தெரியும் ….
*****