இணைய இதழ்இணைய இதழ் 83பத்தி

 வாதவூரான் பரிகள் – பகுதி 10 – இரா.முருகன்

பத்தி | வாசகசாலை

ருநூறு வருடம் முந்திய லண்டன் மாநகர முடுக்குச் சந்தில் மரப்படி ஏறி மாடிக்குப் போனால் அழுக்காக ஒரு ஆபீஸ். தினசரி குளித்து சவரம் செய்து கொள்ளாமல் அழுக்கு மூட்டைகளாக வேலைக்கு வந்த ஏழெட்டு வெள்ளைக்கார குமாஸ்தாக்கள். டைப் ரைட்டர்கள் இன்னும் உருவாக்கி வரவில்லை என்பதால் அசட்டு ஜோக் உதிர்த்துக்கொண்டு உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு பெண் டைப்பிஸ்ட் கிடையாது. நிரம்பி வழியும் குப்பைக் கூடைகள். ஃபைல்கள் ஒரு மேஜையிலிருந்து அடுத்த மேஜைக்கு நகர ஒரு மாதம். எங்கும் சூழ்ந்த புகையிலை வாடை. எத்தனையோ அந்தக்கால ஆபீஸ்களில் இதுவும் ஒன்று. 

ஒரே வித்தியாசம், இந்த ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆபீஸ், இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அரச குடும்பமும், அரசியல் வாதிகளும் பிரமித்துப் போயிருக்கிறார்கள். 

ஒரு சில மாதத்தில் இந்த வியாபாரக் கம்பெனி  கூடுதல் இடம் பிடித்து, மேஜை நாற்காலி போட்டுக்கொண்டு மும்முரமாகக் கணக்கு எழுதிக் கொண்டு 250 குமஸ்தக்கள் வேலை பார்க்கிறார்கள். ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்புறம் இந்தியாவில் இருபதாயிரம் சிப்பாய்களை லண்டனிலிருந்து இயக்கிய இவர்களைக் கொஞ்சம் தாராளமாக விட்டிருந்தால் பக்கிங்ஹாம் அரண்மனையில் நுழைந்து மகாகனம்  பொருந்திய விக்டோரியா மகாராணியையே ஆட்டிப் படைத்திருப்பார்கள். 

வில்லியம் டால்ரிம்பிள் தன் The Anarchy ‘அராஜகம்’ நூலில் காட்டுகிற பதினெட்டாம் நூற்றாண்டு இறுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் இது.

டால்ரிம்பிள் சரித்திரத்தைப் புனைவாகவும், புனைவை சரித்திரமாகவும் எழுதி, படிக்க சுவாரசியமாக்கக் கூடியவர்.    இருபது வருடம் முன்பு அவர் கடைசி முகலாய சக்கரவர்த்தி பகதூர் ஷா ஸபருடைய வாழ்க்கையை எழுதிய The Last Moghul ’இறுதி முகலாயர்’ புனைவு நடை வரலாற்று நூல் இதைச் சொல்லும்.

அந்த ஆண்டு சிறந்த புனைவு, அல்புனைவு நூல்களுக்கான  கிராஸ்வேர்ட் தேர்வுக் குறும்பட்டியல்களில் இடம் பெற்ற  ஆங்கில, மொழிபெயர்ப்பு புத்தக ஆசிரியர்களில் டால்ரிம்பிள், காலம் சென்ற அசோகமித்திரன் மற்றும் நானும் உண்டு. அசோகமித்திரன் அவரது தண்ணீர் நாவல் மொழிபெயர்ப்புக்காகவும், நான் என் அரசூர் வம்சம் மொழியாக்கமான Ghost of Arasur நூலுக்காகவும் இடம் பெற்றிருந்தோம்.

டால்ரிம்பிளுக்குத்தான் பரிசு என்று எதிர்பார்த்திருந்ததை விருது வழங்கும் விழாவில் என்  அருகில் அமர்ந்திருந்த அவரிடமே சொல்ல, இருக்காது என்று தலையாட்டினார் அந்த அடக்கமான ஸ்காட்டிஷ்காரர். அவருக்குத்தான் பரிசு.

அது The Last Moghul காலம். இது The Anarchy காலம்.

 1800-களின் தொடக்கத்தில் தில்லி முகலாய சக்கரவர்த்தி ஷா ஆலம் பற்றி விவரமாக தன் Anarchy ’அராஜகம்’ என்ற கிழக்கிந்தியக் கம்பெனி பற்றிய புத்தகத்தில் எழுதிப் போகிறார் டால்ரிம்பிள். அதுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் ரெடியான பதில் உண்டு. 

அந்தக் காலகட்டத்தில் காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை அரசியல், பொருளாதாரம், இயற்கைப் பேரழிவு எது நடந்தாலும் Ripple Effect ஆக கிழக்கிந்திய கம்பெனியின் சர்வதேச வர்த்தகத்தை பெரும்பாலும் அவர்களுக்குச் சாதகமாகப் பாதித்தது என்பது உண்மை.

 முகலாய சக்கரவர்த்தி   ஷா ஆலம்,  நவாப் ராஜ்ஜியங்களை வென்று அடக்கி தன் ஆட்சிக்குக் கீழ் வைத்திருந்தது தகவலாக மட்டும் இருந்தால் டால்ரிம்பிள் அதை விவரமாகச் சித்தரித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. 

இந்த சுற்றுவட்டார, தூரப்பிரதேச நவாப் ராஜ்ஜியங்களில் அவர் சுலபமாக வென்றது ரோஹில்லா பிரதேசத்தை. முகலாய சக்கரவர்த்தி ஷா ஆலம்,  ரோஹில்லாவின் இளைய நவாப் குலாம் காதிரோடு ஒருபாலின உறவு பூண்டிருந்தார். அவரது ராஜ்ஜியத்தைப் பிடுங்கிக்கொண்டு, உடம்பையும்  ஆக்ரமித்து காமத்தில் திளைத்திருந்தபோது ஷா ஆலம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்-  வளர்த்த கடா கண்ணில் பாயும் என்று. 

ஷா ஆலம் பாதுஷாவின் ஆட்சியைக் கவிழ்த்து தில்லி செங்கோட்டை அரண்மனையைக் கைப்பற்றினான் குலாம் காதிர். பாதுஷா புளகாங்கிதம் எய்த வழக்கம்போல் சக்கரவர்த்தியின் மடியில் உட்கார்ந்து காமம் சொன்னான் குலாம் காதிர். உடனே  சிறு கத்தியை எடுத்து சக்கரவர்த்தி கண்ணைப்  பிடுங்கினான்.

 அதோடு நிறுத்தாமல் ஷா ஆலம் பாதுஷாவின் மகள்களை நிர்வாணமாக்கி நடனமாடச் சொன்னவனும் அவனே. சில நாள் முன்பு அவர்களை சகோதரி என்று அன்பு கனிய அழைத்து வந்தவன் குலாம் காதிர்.

அரசவை முக்கிய உறுப்பினர் ஒருவரின் மகள்கள் சுந்தரிப் பெண்குட்டிகள் என்று கேட்டு உடனே  தன்   நண்பர்கள் குழுமியிருக்க அந்த அழகான ஸ்திரிகளின் உடை களைந்து, அவர்களின் உடல்   முழுக்க    பரிசோதனை செய்தான். அவர்களை நண்பர்களுக்குப் பரிசாக அளித்தவனும் அவன். 

ஷா ஆலம் ஆட்சிக் காலத்து பிரமுக வர்த்தகர்களிடம் கட்டாயமாக வரி என்று பணம் பிடுங்கி, கொடுக்காத வர்த்தகரை மலக்குழிக்குள் தள்ளி அவர்கள் நிலையைக் கண்டு கண்டு ஆனந்தித்தவன் குலாம் காதிர். 

நாற்றமடிக்கும் வரி வந்து சேர்ந்தது தான். அப்படி குலாம் காதிருக்குப் போகாவிட்டால் சுற்றிவளைத்துக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் காசு போயிருக்கும். எப்படி பிருஷ்டம் கழுவுவது என்று கூடத் தெரியாத இங்க்லீஷ்காரனுக்கு   காசு கொண்டு சேர்க்க நாம் ஏன் உழைக்கணும் என்று முகலாய அரசவை அதிகாரிகள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக, குலாம் காதிருக்கு ஆதரவாகப் போனார்கள்.  

மடியில் உட்கார்ந்து காதலன் கண்ணை நோண்டி எறிந்து, இல்லாத அவமரியாதை எல்லாம் செய்து குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்காமல் கஷ்டப்படுத்திய விவரம் விலாவாரியாக வந்திருக்கிறது தி அனார்க்கி புத்தகத்தில். 

அந்தப் பையன் குலாம் காதிர் ஆணுமில்லை, பெண்ணுமில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று விவரம் தொடர்ந்து சொல்கிறார் டால்ரிம்பிள். 

எல்லாத் துன்பத்துக்கும் நடுவே முகலாய சக்கரவர்த்தி ஷா ஆலம் பாதுஷா உருதுக் கவிஞர்களின் ஷாயரி கவிதைகளை வாஹ் வாஹ் என்று கேட்டு அனுபவித்துத் தானும் கவிதைகளை மனதில் இயற்றியுள்ளார். டால்ரிம்பிள் எழுதுகிறார்.

 எல்லாம் சரிதான், கிழக்கு இந்தியா கம்பெனி? வந்துகொண்டே இருக்கு சார்.

1803-ஆம் ஆண்டு இரண்டு லட்சம் போர் வீரர்கள் இந்தியாவில் படை வகுத்திருக்க, நவாப், பாதுஷா, மஹாராஜா என்று இங்கே இருந்த அதிகார வர்க்கம் கம்பெனி வெள்ளத்தில் அடிபட்டுப் போகிறது. கும்பேனியார் ( கிழக்கு இந்தியா கம்பெனி) 1858-ல் பிரிட்டீஷ் அரசு சட்டம் மூலம் பிரிட்டீஷ் அரசுடமை ஆனது. அதன் வரலாறு விவரிக்க எழுதப்பட்ட ‘அராஜகம்’ – தி அனார்க்கி புத்தகத்தில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி அவ்வப்போது வந்து, காணாமல் போய்த் திரும்ப வருகிறது. இதுவும் கொஞ்சம் போல எழுத்து அராஜகம் தான்.  

Dalrymple, William. The Anarchy: The Relentless Rise of the East India Company . Bloomsbury Publishing. Kindle Edition

*****

 ஊருக்கு அருகே ஊர்க்காரர்கள் பெரும்பாலும் வேலை பார்க்கும் துணி மில். அங்கே நடந்தே போய்விடும் தூரத்தில் காம் சந்து. ஒழுங்கில்லாத வரிசையாகச் சின்னச் சின்ன வீடுகள். சந்தின் தொடக்கத்தில் இரண்டு சிறிய கழிப்பறைகள். அது முடிகிற இடத்தில் இன்னும் இரண்டு. சந்து வீடுகள் அந்த நாலு டாய்லெட்டுகளை பங்கு போட்டுக் கொள்ளும். மின்சாரம் இல்லாதவை அந்த கழிப்பறைகள். கயிற்றைப் பிடித்து இழுத்து தண்ணீர் ஒழுகும் சாதாரண ப்ளஷ் அவுட் கொண்டவை. துடைத்துக்கொள்ள டாய்லெட் காகிதம் கூட இல்லை அங்கே. பழைய செய்தித்தாளைக் கிழித்து உபயோகித்தாகிறது.

இந்த விவரணையைப் படித்தால் எழுபது வருடம் முன்பு திருச்சிராப்பள்ளி பக்கம் தொழிற்சாலையைச் சார்ந்து இருக்கும் சிற்றூரும் அங்கே குறுகிய தெருக்களும், சந்துக்களும், ஏழெட்டு வீடுகள் சேர்ந்து இருக்கும் ’ஸ்டோர்’களும், அவை  பங்கு போட்டுக்கொள்ளும் கழிவறைகளும். குளியலறைகளும் மனக் கண்ணில் விரியும். 

ஆனால் இது எல்லாம் திருச்சியோ புதுக்கோட்டையோ இல்லை. 1930களில் இங்கிலாந்து யார்க்‌ஷயர் கவுண்டியில் (மாவட்டத்தில்) இருந்த வீட்டு வசதி நிலைமை. அங்கே கழிவறையை ராத்திரி நேரத்தில் உபயோகிக்க முடியாது. சிறுநீர் கழிக்க படுக்கை அறையிலேயே வாளி வைத்துக்கொள்ள வேண்டும். டு பாத் ரூம் ராத்திரியில் வந்தால் வேறே வழியில்லை, விடியும்வரை காத்திரு தான்.

 குளியலறையும் பொதுவில் வைத்திருந்தது இன்னும் சிரமமானது. வாரம் ஒரு தடவை ஒவ்வொரு வீட்டாரும் ஒருவர் ஒருவராகக் குளியல் தொட்டியில் குளிக்க வேண்டும். அப்பா குளியலைத் தொடங்கி வைத்து அம்மா, அண்ணன் என்று மற்றவர்கள் குளித்து, வீட்டுக் கடைசி வாரிசு சின்னப் பையன் குளிக்கத் தொட்டியில் இறங்கும்போது தண்ணீர் அழுக்கும் சோப்பு வாடையும் கலந்து அடிக்கும்.

இப்படியான 1940ஆம் ஆண்டின் ஊர்க் கதையை சுயசரிதையில் பிணைத்து 2023இல் எழுதவும் வாசிக்கவும் ரம்மியமானது.   கிட்டத்தட்ட நூறாண்டுப் பழமை, அன்றைய வழக்கங்கள், மனிதர்கள், மதிப்புகள் பற்றிய தன்வரலாற்று நூல், Making it so – A memoir. 

அப்போது சிறுவனாக இருந்து இப்போது இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பிரபலமான ஷேக்ஸ்பியர் நாடக நடிகராக விளங்குகிறவர் எழுதியது. மற்றும் சின்னத் திரையிலும் திரைப்படத்திலும் காப்டன்  ழான் லுக் பிகார்ட் என்ற கதாபாத்திரப் பெயரில் உலகம் முழுவதும் பிரபலமான  சர் பேட்ரிக் ஸ்டூவர்ட் எழுதிய Making it so – A memoir நூல் இது. போன மாதம் வெளியாகி அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் சக்கைப்போடு போடுகிறது.

 சர் பேட்ரிக்கின் அப்பா இந்தியாவில் 1920 களிலும் 1930 களிலும் பிரிட்டீஷ் ராணுவ வீரராகப் பணியாற்றியதில் தொடங்கும் இந்த வரலாறு, பேட்ரிக் ஒன்பது வயதில் அடுத்த வீட்டு அதே வயதுப் பெண்ணுக்கு வீட்டுக் கதவை சாத்திவைத்து முத்தம் கொடுத்தபோது, அடுத்த வீட்டம்மா பார்த்து விட்டதில்   மெல்ல நடக்கிறது. 

பேட்ரிக்கின் தாத்தா நாடக நடிகராக இருந்த மறைக்கப்பட்ட பழங்கதையை பாட்டி சொல்வதில் வேகமெடுக்கிறது. ராணுவத்தில் சேர்ந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பி ஓடி வந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தவர் அவர் என்பதில் சர் பேட்ரிக் சந்தோஷப்படுகிறாரா துக்கப்படுகிறாரா என்று சரியாகத் தெரியவில்லை. 

அவர் நாடகத்தில் நடிக்கப் போனபோது, ராணுவத்திலிருந்து ஓடி வந்ததற்காகக் கைது செய்ய போலீஸ் நாடகக் கொட்டகை வாசலில் வந்து நின்றிருக்கிறது. 

நாடகத்தில் நான் நடிக்காவிட்டால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ஜனங்கள் ஏமாற்றமடைவார்கள். ஆகவே நாடகத்தில் நடித்து மேக்கப் கலைந்து திரும்பி வருகிறேன், என்னைக் கைது செய்யுங்கள் என்று மேடைக்கு கீழே டயலாக் அடித்தார் பேட்ரிக்கின் தாத்தா. 

போலீஸ் காத்திருக்க, நாடகம் முடிந்திருக்க, தாத்தா வேறு வாசல் வழியாகத் தப்பி ஓடி விட்டார். 

இந்த கஷ்டம் எதுவுமின்றி நாடக வாழ்க்கை துவங்குகிறது சர் பேட்ரிக்குக்கு. தாத்தாவை விடச் சற்றே வேகமெடுக்கிறது சர் பேட்ரிக்கின் நாடக ஜீவிதம். 

தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள் பட்ட பாடு எல்லாம் அவர்களின் இங்க்லீஷ்கார சகோதரர்கள் அனுபவித்திருப்பதற்கு சர் பேட்ரிக் எழுதிய இந்தப் புத்தகமே சான்று. 

இங்கே போல அங்கேயும் மேடையில் வந்து நிறைய காட்சிகளில் பேசி நடிக்கிற நடிகர்கள் ஒசத்தியானவர்கள்.    தெருவில் சும்மா நடக்கிறவர்கள் போன்ற atmosphere சூழல் உருவாக்கும் துணை நடிகங்கள் நடிகர்களில் கடைசி வரிசைக் கதாபாத்திரங்கள். ஷேக்ஸ்பியர் எழுதிய தெரு அது என்பதே பெருமை. 

மற்றபடி எப்படி நடிக்க வேண்டும் என்பதிலும் எழுதாத கட்டுப்பாடுகள் உண்டு. துணை வில்லனும் அடியாள்களும் மேடையில் தோன்றும் துக்கடா காட்சி என்று வைத்துக்கொள்ளலாம். வாங்கப்பா போகலாம் என்று அந்தக் கூட்டத்தில் ஒரு அசிஸ்டெண்ட் வில்லன் சொல்கிறதாக இருக்கும் என்றால், சும்மா அப்படிச் சொல்ல முடியாது. 

இந்தக் காட்சியின் மெயின் கதாபாத்திரமான துணை வில்லனைப் பார்த்து வாங்கப்பா என்று வேண்டுதல் செய்யவேண்டும். சரி தேடுங்கள் என்று துணை வில்லன் அவனுக்கான ஒரு வரி வசனத்தை தரையைப் பார்த்துச் சொல்வதே கௌரவம். 

அதிர்ஷ்டமோ, ஆற்றலோ சில நடிகர்கள் தெருவோடு நடந்து அட்மாஸ்பியர் உருவாக்கி நடித்து இருபது வருடம் கழித்து மெயின் கதாபாத்திரமாக ஜொலிப்பதும் உண்டு.   

சர் பாட்ரிக் பிற்காலத்தில் சின்னத்திரை மற்றும் திரைப்பட கதாநாயகராக மின்னும் போது – எண்பது பிளஸ் வயதில் தலை வழுவழுவென்று இருக்க-அந்த நாடக வில்லனாக   வந்து நடித்தவர் ஒரு பழம்பெரும் அட்மாஸ்பியர் நண்பர் தான் என்பதை போகிற போக்கில் சொல்லிப் போகிறார் பேட்ரிக். 

பிரிட்டிஷ் ஷேக்ஸ்பியர் நாடக நடிகராக பிரபலமாகி,  அமெரிக்காவில் அறிவியல் பெருங்கதை ஸ்டார் ட்ரெக் கதாநாயகனாக பேட்ரிக் மின்னத் தொடங்கியபோது அவருக்கு வயது நாற்பதுகளில். 

இங்க்லீஷ் குடியுரிமையோடு அமெரிக்கக் குடியுரிமையும் பெற்று கலிபோர்னியாவில் வீடு விலைக்கு வாங்கி செட்டில் ஆனதை சுவையாக விவரிக்கின்றார் பேட்ரிக். அதற்கு ஒரு வால் உண்டு.  

கலிபோர்னியா வீட்டில் நடு ராத்திரி மாடியில் யாரோ பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டபடி இருந்தது. ஹாலில் உட்கார்ந்து டெலிவிஷன் பார்த்தால் இதை விட பயங்கரம் – புத்தக ஷெல்ப்பில் இருந்து ஒவ்வொரு புத்தகமாக யாரோ எடுத்துத் தரையில் போட்டார்கள். 

உருவம் தெரியாத பிசாசு செய்த குறும்பு. பொறுக்க முடியாமல் வீட்டை விற்றுவிட்டார் பேட்ரிக். வீட்டை விலைக்கு வாங்கியவர் சில காலம் கழித்து பேட்ரிக்கை ஏதோ நிகழ்ச்சியில் சந்தித்தபோது கேட்டாராம் – வீடு விற்றீங்க, சரி. கூடவே ஒரு பிசாசையும் இலவசமாகக் கொடுத்திருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே, ஏன் சார்?

அகில உலக நடிகர்களைக் கொண்டு பத்துமணி நேரம் நடக்கும் மகாபாரதம் நாடகம் நிகழ்த்திய் பீட்டர் புரூக்ஸ், காந்தியாக நடித்து உலகப் புகழ் பெற்ற பென் கிங்க்ஸ்லி போன்ற இயக்குநர்கள், நடிகர்களோடு நட்பு பற்றி விரிவாக எழுதும் சர் பேட்ரிக் தன் ’இரு வெரானோகார கனவான்கள்’ நாடக அனுபவம் பற்றிச் சொல்வது அலாதியானது. 

ஷேக்ஸ்பியரின் அவ்வளவாகப் பிரபலமாகாத நாடகம் இது.  வேலைக்காரனாக வரும் சர் பேட்ரிக் கூடவே அந்த வேலைக்காரன் வளர்க்கிற நாயும் ஒரு கதாபாத்திரமாக வரும். பேட்ரிக் நீள வசனம் பேசும்போது கொட்டாவி விடுவது அல்லது எழுந்து உள்ளே போகிறது என்று யாரும் சொல்லித் தராமலேயே ’தன் கருத்தைச் சொல்லும்’ அந்த நாய் வந்த ஒரு காட்சியில் விமர்சனமாகவோ என்னவோ செய்து காட்டியது மகா அராஜகம். சர் பேட்ரிக் நீள வசனம் பேசத் தொடங்க, மேடையில் அமர்ந்து நிதானமாகத் தன் குறி சுவைத்தது அந்த நாய். அரங்கம் கைத்தட்டில் அதிர்ந்தது.   அடுத்த வசனத்தை நிதானமாகச் சொன்னார் சர் பேட்ரிக் – நான் நாய். நாய் நான். நான் நான் தான். நாய் நாய்தான். 

எல்லாமே ஷேக்ஸ்பியர் எழுதியது.

Stewart, Patrick. Making It So: A Memoir. Gallery UK. Kindle Edition

*****

பதினெட்டு நிமிட நேரத்தில் ஓடி முடிகிறதாக,  ரோல் தாஹல் எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கிய திரைப்படம் ’எலி பிடிப்பவர்’. எலியைப் பிடிக்க, எலியை விட எலியாக இருக்க வேண்டும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்ட மையக் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. 

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பங்கில் எலித் தொல்லை ஒரேயடியாக ஓய்ந்துவிடும் என்று வழி சொல்கிறார் எலி பிடிப்பவர். இனிப்பு ஓட்ஸ் தட்டையை  சாக்கடை எலிகளுக்கு நான்கு நாள் சாப்பிடக் கொடுத்து அவற்றின் நம்பிக்கையைக் கவர்கிறார் அவர். 

அடுத்த நாள் விஷம் தடவிய ஒட்ஸ் தட்டையை சாக்கடையில் வைக்க, சாமர்த்தியமான எலிகள் தொடவே இல்லை. ஒரே வழியாக எலி பிடிப்பவர் சொல்வது, மற்றும் நடத்திக் காட்டுவது – பிரச்சனைக்கு ஒரே தீர்வு, சாக்கடை எலிகளைப் பிடித்துக் கடித்துக் கொல்வது தான். பாக்கெட்டில் கொண்டுவந்த எலிகளை வைத்து வாயில் ரத்தம் ஒழுக இதை மெய்ப்பித்துக் காட்டுகிறார். எலியாகி எலியைக் கொல்ல வழி வேறில்லை.  

அவரைத் திருப்பி அனுப்ப, எலி மாதிரி நடந்து போகிறவர் தலை அசைவும் முகச் சாயலும் அசல் எலி தான்.  

இந்தக் குறும்படம் கண்ட அறிவுசால் அறிஞர்கள், இதை வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்று இடமிருந்தால் சாற்றீரோ என்று வினவி, இது குறித்து மேற்கொண்டு ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எலியைப் பொறி வைத்துப் பிடித்து மைதானத்தில் விட, ’வெட்டவெளி பழக்கமில்லாமல் எலி தாறுமாறாக ஓடியது’ என்று அந்த இழிபிராணிக்கும் பரிவு பாராட்டும் அசோகமித்திரன் சிறுகதை ’எலி’ சற்றே உயரத்தில் இருக்கிறது! 

Netflix short film  Rat Catcher (2023)

**********

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button