தென் கொரிய எழுத்தாளர்கள் மேஜிக்கல் ரியலிசத்தில் முழுகி முத்தெடுக்கும் காலம் இது. வித்தியாசமான கதை சொல்லும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வாசகர்களுக்குப் பிடித்துப் போனதால் இருக்கலாம்.
அதைவிட முக்கியம் படைப்பை நல்ல இங்க்லீஷில் மொழிபெயர்த்துத் தர ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வேண்டும். அகில உலக அளவில் அந்த நாவலை (அல்லது சிறுகதை, குறுநாவல் தொகுப்பை) சர்வதேச ஆங்கிலப் பதிப்பாக வெளியிட்டால் போதும். இலக்கியப் பேருலகம் அதை இருகரம் நீட்டி மேலே ஏற்றிவிட்டுத் தாங்கிப் பாராட்டத் தயங்குவதே இல்லை.
கிழக்காசிய இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு உண்டான கொஞ்சம் பூடகம், கொஞ்சம் தொன்மம், கொஞ்சம் பேயோட்டம், கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் தேவதைக் கதையாடல் என்று சரிவிகிதத்தில் கலந்து தரும் படைப்புகள் தோற்பதே இல்லை. இப்போது, சபிக்கப்பட்ட முயல் பொம்மை (Cursed Bunny).
போரா சாங்குக்கு (Bora Chang) கிடைத்த மொழிபெயர்ப்பாளர் ஆண்டன் ஹெர் கொரிய, இங்க்லீஷ் மொழிகளில் தேர்ந்தவர். இவர்கள் கூட்டுறவில், ‘சபிக்கப்பட்ட முயல் பொம்மை’ புக்கர் பரிசுக்கான நீள்பட்டியலில் இந்த ஆண்டு இடம் பெற்றுப் பரவலாகக் கவனத்தை ஈர்த்தது.
முதல் கதை ‘முகம்’ அந்தக் கவன ஈர்ப்பைப் பெறுகிறது. கழிப்பறையில் இருக்கிறாள் கதாநாயகி. நரகல் வெளியேற்றும்போது கழிவுப் பாத்திரத்தில் ஒரு பெண் தலை தெரிகிறது. நரகலைத் தின்னும் அந்தத் தலைப்பெண், ‘அம்மா’ என்று அழைத்து கதாநாயகியோடு பேச முயல்கிறாள். அவசரமாக ஃப்ளஷை இழுத்துவிட்டு கழிவுப் பாத்திரத்தை மூடுகிறாள் நாயகி படபடப்போடு.
கழிப்பறைப் பெண் தலை தட்டுப்படுவது இனி இல்லை என்று நினைக்கிறாள். ஆனால், அப்புறம் அடிக்கடி டாய்லெட்டில் தலை மட்டுமாக அவள் கண்ணில் படுகிறாள்.
கதாநாயகியின் கழிவு உண்டு அவள் வேகமாக வளர்கிறாள். கதாநாயகி திருமணம் ஆகி குழந்தை பெற்று வளர்க்கும் போது அவள் மகளின் டாய்லெட்டுக்கு வருகிறாள் தலை மட்டும் தெரியப்படுத்தும் பெண்.
யார் அது என்று நாயகியின் மகள் கேட்க, அதுதான் தலை என்று நகைச்சுவை போல் சொல்ல அம்மாவும் மகளும் சிரிக்கிறார்கள்.
கதாநாயகி மட்டும் டாய்லெட்டில் இருக்கும்போது கண்ட நேரத்தில் வந்து சங்கடப்படுத்தியதற்காக தலைப் பெண்ணைக் கண்டிக்கிறாள் அவள். அந்தப் பெண் வேறேதும் பேசாமல் நாயகியின் உடுப்பை உடுத்திப் பார்த்துக் கொடுக்கும் சந்தோஷத்தை யாசிக்கிறாள். அப்புறம் வரவே மாட்டேன் என்று வாக்குறுதி வேறு தருகிறாள்.
நாயகி உடுப்பைக் களைந்து அவளிடம் தர வேகமாக அதை உடுத்திக் கொள்கிறாள். அவள் கதாநாயகி இளம் வயதில் இருந்ததுபோல் தெரிகிறாள். ‘நான் உன் இடத்தில் இனி இருப்பேன். நீ நரகல் தின்று இனி என் இடத்தில் இரு’ என்று ப்ளஷை இழுத்துத் தண்ணீர் அடித்து கழிவுப் பாத்திரத்தை மூட கதாநாயகி ப்ளஷ்ஷில் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டு மறைகிறாள்.
மேஜிக்கல் ரியலிசமும் பெண்ணியமும் இருத்தலியலும் தனிமைத் துயரும் சேர்ந்த கலவை இது. இவ்வளவு அடுக்குகளாக மேஜிக்கல் ரியலிசக் கதை எழுதினாலும் போரா சாங்க் கொரியாவில் பயங்கரக் கதை எழுத்தாளராகத்தான் கருதப்படுகிறாரம். அவர் எழுதுவது இலக்கியத் தரமான கதைகள் இல்லை என்கிறார்களாம் கண்டிப்பான விமர்சகர்கள். தென்கொரியாவும் தமிழகம் ஆயிற்று கண்டீர்!
**********
விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து மைக்ரோவேவ் அடுப்பில் சுமார் சூட்டில் காப்பி போட்டுக் குடிப்பதோடு இத்தனை வருடம் பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. ஒரு வருடமாக காப்பி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
லாப்டாப்பில் நெட் உள்ளே போய் நியூயார்க் டைம்ஸ் தளத்தில் wordle nytimes என்று கொடுத்து உள்ளே போக, ஆறு வரிசையாக, ஐந்தைந்து சதுரங்கள் எனக்குக் காத்திருக்கின்றன.
வார்த்தை விளையாட்டில் அடுத்த பத்து நிமிடம் என்னை மறக்கிறேன், என் சூழலை மறக்கிறேன், குடும்பத்தை மறக்கிறேன்.
இப்படி நான் மடடுமில்லை, லட்சக்கணக்கான பேர் உலகம் முழுவதும் வார்த்தையைக் கண்டுபிடிக்க ஒரு நாளுக்குக் குறைந்தது ஐந்து நிமிடம், அதிக அளவு ஒரு மணி நேரம் செலவழிக்கிறார்கள். இது இங்க்லீஷ் வார்த்தை அறிவு அதிகப் படுத்தும் விளையாட்டு என்பதால், வெட்டி நேரம்போக்கு இல்லை. அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ், மைக்ரோசாஃப்ட் பழைய தலை பில் கேட்ஸ் என்று வேர்டில் அன்பர்களாகினரே சோழா தோழா.
சுருக்கமாக வேர்டில் (Wordle) விளையாட்டு என்ன என்றால் – உங்களோடு விளையாடும் நியூயார்க் டைம்ஸ் கணினி ஒவ்வொரு நாளும் ஒரு ஐந்தெழுத்து வார்த்தையை யாரும் அறியாமல் பொத்தி வைக்கிறது. அந்த வார்த்தை என்ன என்று ஆறு வரிசை சதுரங்களை நிரப்பி ஆறு தடவைக்குள் முயன்று கண்டு பிடித்தால் உங்களுக்கு வெற்றி. இங்கிலாந்து வேல்ஸ் பகுதியிலிருந்து அமெரிக்காவுக்கு சாப்ட்வேர் பணி நிமித்தம் இடம் பெயர்ந்த பொறியாளர் வார்டில் (Wardle) தன் அன்பு மனைவிக்குப் பரிசாக உருவாக்கியது வேர்டில். அதன் பிரபலம் ஏறிவர வர, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அதை விலை கொடுத்து வாங்கி, பத்திரிகை கணினி அமைப்பில் ஏற்றி விலையின்றி எல்லோருக்கும் இயக்க சந்தர்ப்பம் அளிக்கிறது. Wardle – Wordle பெயர் ஒற்றுமை பாரீர்.
ஆங்கில மொழிச் சொல் அறிவு, ஸ்பெல்லிங் திறமை, நீண்ட கால, மற்றும் குறுகிய நேர நினைவாற்றல், விரைவு ஒப்பு நோக்கு இதெல்லாம் அதிகமாக, ஒரு நாளைக்கு ஐந்து அல்லது பத்து நிமிடம் இந்த விளையாட்டுக்குச் செலவு செய்து வெற்றியோடு லேப்டாப்பை மூடி வைக்கலாம், மொபைல் போனை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம்.
வேர்டிலில் முதல் வரிசை சதுரங்களை நிரப்பி விட்டால், மற்றவை கடகடவென்று நடந்தேறிவிடும் என்ற நம்பிக்கை அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு உண்டு. அவர் எப்போதும் வேர்டில் விளையாட்டை NOTES என்ற சொல்லை முதல் வரிசைச் சதுரங்களில் இட்டுத் தொடங்குகிறாராம். பிரிட்டீஷ் பிரதமர் ரிஷி சுனக் என்ன சொல்கிறாரென்று கேட்டுச் சொல்கிறேன்.
**********
அர்ஜெண்டினா தயாரிப்பான ஸ்பானிஷ் மொழித் திரைப்படம் ஆல் ஹெய்ல் (All Hail) நெட்ஃப்ளிக்ஸில் பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட பிரமாதம்.
சின்னத்திரையில் வானிலை ஆருடம் சொல்லிப் பிரபலமான மிக்யொல் இதுவரை சொன்ன எந்த ‘மழை வரும்’, ‘வெய்யில் அடிக்கும்’ ஆரூடம் – ஃபோர்காஸ்ட் – prediction – பொய்த்ததில்லை. ஒரே ஒரு ஆலங்கட்டி மழையை மட்டும், வரும் என்று கணிக்கத் தவறுகிறார். நாடு முழுவதும் அவர்மேல் கோபப்படுகிறது, அவர் கொஞ்சநாள் தலைநகரம் போனஸ் அயர்ஸை விட்டு, இன்னொரு நகரமான கோர்டோபாவில் மகள் வீட்டில் மறைந்திருந்து வாழ்கிறார்.
மிக்யொல் தன் புகழில் போதை ஏற்பட்டு அவ்வப்போது மகள் எழுதிய நான் சௌக்கியம் நீ சௌக்கியமா கடிதாசுகளுக்குக் கூட ஒரு வரி பதில் எழுதி அனுப்பாமல் மழை வருமா என்று ஆருடம் சொல்வதில் மும்முரமாக இருந்தார். மகளை அவள் வீட்டில் சந்தித்து அவளோடு இருக்கக் கிளம்பி வந்தபோது அவள் சொல்கிறாள் – நீங்க இங்கே இருந்தால் எனக்கு சரிப்படாது. ஏதாவது ஹோட்டல்லே பார்த்துக்குங்க.
எப்படியோ மன்றாடி அவளோடு தங்குகிறார். வெளியே போய்விட்டு வந்தால் வீட்டுக் கதவு உள்ளிருந்து ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டிருக்கிறது. டாக்டர் மகளும் அவளுடைய டாக்டர் நண்பன்களும் துணி துறந்து திரிந்து கொண்டு கதவைத் திறக்க, கண்டுக்காமல் போகவேண்டி வருகிறது வானிலை ஜோசியருக்கு.
அழுக்குக் கோட்டும் மரை கழன்ற நடையுடை பாவனையுமாக ஒருத்தரின் நட்பு கிடைக்கிறது மிக்யொலுக்கு. அழுக்குக் கோட்டார் விளையாட்டாக இன்னும் இத்தனை மணி நேரத்தில் இங்கே மழை பெய்யும் என்று நேரமும் இடமும் சொல்ல, அதன்படிக்கு ஒரு நிமிடம் முன்னே பின்னே இல்லாமல், வேறே எங்கேயும் பெய்யாமல், சொன்ன இடத்தில் சொன்ன நேரத்தில் மழை கொட்டுகிறது. அவர் உதவியோடு மிக்யொலுக்கு ஆருடப் புகழ் திரும்பக் கிடைக்கிறது. இப்படிப் போகிறது படம்.
நகைச்சுவையும், உருக்கமுமாக முன்னேறும் படத்தில் அந்த வானிலை ஜோசியரும் (Guillermo Francella), அவருடைய டாக்டர் மகளும் (Romina Fernándes) வரும் காட்சிகள் ஏழெட்டு நிமிடம் நீண்டாலும் சிறப்பான நடிப்பினால் மிளிர்கின்றன. Guillermo Francella அர்ஜெண்டினாவின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகராம்.
பார்க்க வேண்டிய திரைப்படம்.
**********
இதை எழுதும்போது உலகக் கோப்பை கால்பந்தாட்டம் 2022 கத்தாரில் அமோகமாக நடந்து வருகிறது. நேற்று செமிஃபைனலில் அர்ஜண்டினா குரேஷியாவை 3 -0 கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு அமர்க்களமாகப் போயிருக்கிறது.
முதல் சுற்று, இரண்டாவது என்று வந்த பந்தயங்களில் சில நம் ஊர் ராத்திரி எட்டரைக்கு, நமக்கு சௌகரியமாக நடந்தேற, மற்றவை நடுநிசி கழிந்து பேயுறங்கும் 12:30 க்குத் தொடங்கி ராத்திரி 2:30க்கு பெரும்பாலும் முடிவுறுகின்றன.
இந்த ஆண்டு பந்தயங்களில் கணிசமான அணிகள் 0-0 என்று இருக்கும். பந்தயம் நடக்கும் 90 நிமிஷத்தில் கோல் போடாமல், அதற்கு அப்புறம் தரப்படும் 30 நிமிடத்திலும் கோல் இன்றி, கடைசியில் பெனால்டியில் வெற்றி – தோல்வி நிச்சயிக்கப்பட்டது. இரண்டு மணி நேரம் இந்தப் பக்கம் 11 பேர், அந்தப் பக்கம் இன்னொரு 11 என்று உயிரைக் கொடுத்து ஆடியதுக்கெல்லாம் மதிப்பு இல்லாமல் ஒற்றைக்கு ஒற்றையாக கோல் கீப்பரை நிறுத்தி பெனால்டி உதை சவிட்டிப் பிடிக்கச் சொல்வது கொடுமை. உலகமே எதிரே நின்று பார்த்திருக்க, வரும் பந்தை எதிர்பார்த்து நிற்கும் கோல்கீப்பரின் தனிமை மகத்தான சோகமாகும்.
மற்றபடி வீரர்கள், வெற்றி, தோல்வி, மஞ்சள் – சிவப்பு அட்டைகள் – எல்லாம் உண்டு FIFA 2022லும்.
மெஸ்ஸி என்றால் அர்ஜெண்டினா, சௌதி அரேபியாவிடம் தொடக்கத்திலேயே பரிதாபமாகத் தோற்றதும், கிறிஸ்டியானோ ரொனால்டோ எனும்போது போர்ச்சுகல் சந்தித்த தோல்வியும், நெய்மார் என்கையிலே பிரசீல் க்ரோஷியாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட தோல்வியும், கேன் என்று சொல்லும்போது இங்கிலாந்து பிரான்ஸிடம் பரிதாபமாகத் தோற்றதும், லெவண்டஸ்கி ஒரு கோல் போட்டு ரிடையர் ஆக, போலந்து தோற்றதும், லுகாகூ என்றிட பெல்ஜியம் கோல் இன்றித் துரத்தப்பட்டதும், இது கோல் இல்லை என்று சில நேரம் ரெஃப்ரியும், பல நேரம் கம்ப்யூட்டரும் தரும் -ஆஃப் சைட் தீர்ப்புகளும், செட் பீஸ் பெனால்டி கிக், த்ரோ, கார்னர், ஹெடர், க்ராஸ், பாஸ் என்னும் பரிபாஷையும், தூக்கம் விழித்துச் சிவந்த கண்களும், தளர் நடையும் இன்னும் ஒரு மாதமாவது நினைவில் வராமல் வாய்ப்பில்லை. Viva La FIFA 2022!
உலகக் கோப்பை கால்பந்தாட்ட மேட்ச்கள் ஜியோ சினிமா சேனலில் தமிழில் பார்க்கக் கிடைத்தன. முழுக்க முழுக்க கால்பந்தாட்டக் கண்ணோட்டத்தில், பந்தாட்ட வீரர்கள் விஜயன், ராவணன் போன்றோர் மிக அழகான எளிய தமிழில் அளித்த வர்ணனைகள் இவை. Let their tribe increase.
என்.எஸ் மாதவன் மலையாளத்தில் அற்புதமான கால்பந்து சிறுகதை ‘ஹிகியுடா’ எழுதியது போல் தமிழில் ஃபுட்பால் கதை இல்லை என்ற வசை ஒழிய யார் காத்திரமான கால்பந்து கதை எழுதப் போகிறார்கள்? நான் கொஞ்சம் தமிழ், கொஞ்சம் மலையாளம் என்று எழுதிப் பார்த்த ‘பந்து’ ஒரு பிள்ளையார் சுழி.
(வரும்)