“ஐய்யோ யாராவது வாங்களேன்” என்ற கூக்குரல் கேட்டதில் திடீரென விழித்து விட்டேன்.
அந்த இரவு நேரத்தில் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. பக்கத்தில் இருந்த மொபைலை எடுத்துப் பார்த்தேன் 1.20 ஏஎம் என்று நேரம் காட்டியது. தொலைகாட்சிகளின் அலறல் சத்தம் இல்லாத, இரவுக்கு உரிய அமைதி சில நொடிகள்தான் நீடித்தது. யாரோ கதவைத் தட்டும் சத்தமும், அதனைத் தொடர்ந்து ஐய்யோ என்று ஒரு பெண்ணின் கூக்குரலும் மீண்டும் ஒலித்தது.
சத்தத்தைக் கூர்ந்து கவனித்ததில் கீழ்தளத்தில் ஒரு வீட்டில் இருந்துதான் வருகிறது எனப் புரிந்தது. படுக்கையில் இருந்து எழுத்து அறையின் டியூப் லைட்டைப் போட்டேன். லைட்டைப் போட்டதும் என் மனைவியும் எழுந்து விட்டாள்.
“என்னங்க. இந்த நேரத்துல, எங்க கிளம்பிட்டீங்க” என்றாள்.
“கீழ் வீட்டுல யாரோ கதவைத் தட்டுறாங்க. வீட்டுக்குள்ள இருந்து பயந்துபோய் யாரோ கத்துறாங்க. என்னன்னு பார்த்துட்டு வந்துட்றேன் “என்றபடி ஹேங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்பினேன்.
“ஒண்ணும் இருக்காதுங்க. சும்மா படுங்க. ஏதாவது வம்புல போய் மாட்டிக்கிடாதீங்க” என்றாள் பெருநகருக்கே உரிய அச்சத்தில் என் மனைவி.
“நீ படு, என்னன்னு பார்த்துட்டு வந்துட்றேன்” என்றபடியே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.
மொட்டை மாடியில் இருந்த எங்கள் போர்ஷனில் இருந்து வெளியே வந்தபோது, இரவு நேர கடற்காற்று வெற்றுடம்பைத் தழுவிச் சென்றது.
“ஐய்யோ” என்ற பெண்ணின் சத்தம் மீண்டும் கேட்டது.
சரசரவென படிகளில் இறங்கிச் சென்றேன். கீழ்தளத்தில் தெருவை நோக்கி இருந்த போர்ஷனின் கதவை ஒருவர் தள்ளாடியபடியே தட்டிக் கொண்டிருக்க, அந்த வீட்டுக்குள் இருந்த வயதான பெண்மணிதான் கத்திக் கொண்டிருந்தார். கதவைத் தட்டிக் கொண்டிருந்தவனால் நிற்க முடியவில்லை. அவனின் தோளைத் தட்டி “ஏய் எதுக்கு அவங்க வீட்டுக்கதவை தட்டுற” என்றேன். தள்ளாடியபடியே அவன் என்னை நோக்கித் திரும்பினான். அவன் பேசியபோது மதுவாசனை. “சார் இந்த வீடு ஐஞ்சாம் நம்பர் வீடுதானே” என்று கேட்டான்.
“ஆமா” என்றேன்.
“இது என் வீடுதான் சார்” என்றான்.
போதையில் வீடு மாறி வந்திருக்கின்றான் என்று புரிந்தது.
“இது ஐஞ்சாம் நம்பர் வீடுதான். உன் வீடு இருக்கிற தெரு பேரு என்ன” என்றேன்.
“இது மாணிக்கம் தெருதானே” என்று கேட்டான்.
“இது கமலாம்பாள் தெரு. அடுத்த தெருதான் மாணிக்கம் தெரு” என்றேன்.
“சாரி சார். மன்னிச்சுக்கங்க” என்றவன் அடுத்த தெருவை நோக்கி தள்ளாடியபடியே நடந்து போனான்.
குடிபோதையில் வீடு மாறி வந்திருக்கின்றான். அளவுக்கு மீறிய போதை கண்களை மறைத்திருக்கிறது. நான் திரும்பச் சென்று படுத்து விட்டேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.
ட்ட்ட் டோவ்…., ட்ட்ட் டோவ்… என்று பறவைகளின் சத்தம். எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டையும் தாண்டி இன்னொரு வீட்டின் வளாகத்தில் இருக்கும் மாமரங்களில் இருந்துதான் அந்தப் பறவைகள் தினந்தோறும் காலை 4.30 மணிக்கு ட்ட்ட்டோவ்…. என்று கீச்சிடுகின்றன.
நாள் முழுவதும் மாநகரின் விதவிதமான சத்தங்களில் நாட்களை கழிக்கும் முன்பு, ஒரு அமைதியான காலை வேளையின் தொடக்கமாக இது போன்ற இனிமையான தருணங்கள் வாய்க்கின்றன.
மேற்கு மாம்பலம் வீட்டுக்கு வந்த போதில் இருந்துதான் இதுபோன்று பறவைகளின் சத்தத்தைக் கேட்க முடிகிறது. பால் பாக்கெட் விற்கும் கடையில் இருக்கும் முதியவர் ஒருவர் இந்தப் பகுதியில் நீண்டகாலமாக வசித்து வருகிறார். அவர்தான் ஒருமுறை, “இந்த பக்கம் எல்லாம் வயற்காடா இருந்துச்சு தம்பி” என்றிருக்கிறார்.
வயற்காட்டில் முளைத்த காங்கிரீட் காடுகளில், இன்னும் மிச்சமிருக்கும் சில மரங்களில் கூட்டுக்குள் வசித்துக் கொண்டிருக்கும் பறவைகள் சில பல தலைமுறைக்கு முன்பு இந்த பகுதியில் வசித்த பறவைகளின் வாரிசுகளாக இருக்கலாம்.
இதற்கு முன்பு சைதாபேட்டையில் சடையப்பன் தெருவில் இருந்த போது இது போன்ற பறவைகள் சத்தத்தைக் கேட்டதில்லை. அந்த வீடு ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்ததால், தடதடத்துச் செல்லும் மின்ரயில்கள், விரைவு ரயில்களின் சத்தத்தை மட்டுமே கேட்டிருக்கின்றேன்.
படுக்கையில் இருந்து எழுந்து குளித்துவிட்டு, குழந்தைகளைப் பள்ளியில் விடுவதற்காக மூன்றாவது மாடி போர்ஷனில் இருந்து இறங்கி வந்தேன். நாங்கள் குடியிருந்த வளாகத்தில் மட்டும் 15 வீடுகள் இருக்கின்றன.
கீழே நிறுத்தியிருந்த வண்டியை எடுத்துத் துடைத்துத் தயார்செய்து வைத்தேன். அப்போது தரைத்தளத்தில் முந்தைய இரவு கத்திய பெண் கதவைத் திறந்து வெளியே வந்தார். நான் என்னவென்று கேட்காமலேயே “குடிகாரன் ஒருத்தன் கதவைத் தட்டிக்கிட்டே இருந்தான். அதான் கத்திட்டேன். வீட்டில என் ஹஸ்பெண்ட்டும் இல்ல. அவரு ஆபீஸ் வேலையா ஊருக்குப் போயிருக்காரு.”
“அவன் வீடுன்னு நினைச்சு கதவை தட்டி இருக்கான். நான்தான் வந்து, தெருமாறி வந்திருக்கன்னு சொல்லி அனுப்பி வச்சேன்” என்றேன்.
“தனியா இருக்கும்போது கதவைத் திறக்கறதுக்கு பயமா இருக்கு” என்றார் மிரட்சியுடன். மேற்கு மாம்பலம் வீட்டுக்கு, நாங்கள் வருவதற்கு முன்பிருந்தே அவர் அங்குதான் குடியிருக்கிறார். அலுவலகத்துக்குச் செல்லும்போது வண்டி எடுக்கும்போதும் அவருடன் அவ்வப்போது பேசுவது உண்டு. அப்படி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோதுதான் , அவர் கணவர் எல்.ஐ.சி-யில் பணியாற்றுவதாகச் சொன்னார்.
அந்தப் பெண்ணை எல்லோரும் லோகநாயகி அம்மா என்றுதான் அழைப்பார்கள். இப்போது எல்லோருமே அவரவர்கள் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. குழந்தைகளின் பெயரைச் சொல்லி அவருடைய அம்மா அல்லது அவருடைய அப்பா என்றுதான் அழைக்கிறார்கள். எனக்கும் ஆரம்பத்தில் என்னவோ போல இருந்தது. பின்னர் அதுவே வழக்கமாகிவிட்டது. நானும் பக்கத்துவீட்டுக்காரரைக் குறிப்பிட்டுப் பேசும்போது தினேஷின் அப்பா என்றுதான் குறிப்பிடுகிறேன்.
லோகநாயகியின் அம்மாவுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். லோகநாயகி அமெரிக்காவில் அல்லது ஏதோ ஒரு நாட்டில் சாப்ட் வேர் கம்பெனிகளில் பணியாற்றிக்கொண்டிருப்பார் என்று நினைத்தேன்.
“ராத்திரியில் வீட்டு முன்னாடி குடிகாரர்கள் எல்லாம் படுக்கிறார்கள். போதையில் உளறுகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வரவே முடியவில்லை” என்று என்னிடம் வருத்தப்பட்டார்.
“ஹவுஸ் ஓனரிடம் சொன்னீங்களா” என்று கேட்டேன்.
“சொன்னேன். எங்க போர்ஷனுக்கு முன்னாடி ஒரு கேட் போட்டுக்கொடுங்கன்னு கேட்டேன். கேட்க மாட்டேங்கிறார்” என்றார்.
அதற்கு பிறகு நான் குழந்தைகள் கூப்பிட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்று விட்டதால் அவருடன் பேச நேரம் கிடைக்கவில்லை.
இது நடந்து இரண்டு நாட்கள் இருக்கும், எங்கள் போர்ஷனுக்கு, கீழ் போர்ஷனில் குடியிருப்பவரின் வீட்டுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது என்று பிரச்னை வந்தது.
நாங்கள் குடியிருக்கும் வீட்டில் மாஃப் வைத்து துடைப்பத்தால் மாஃபில் இருந்து வழியும் தண்ணீர் தரையில் பதிக்கப்பட்டிருக்கும் சலவைக் கல்லின் இடையில் புகுந்து, கான்கிரீட் தளம் வழியே கீழே இறங்குகிறது என்று ஹவுஸ் ஓனர் சொன்னார். எனவே வீட்டை மாஃப் போட்டு துடைக்க வேண்டாம் என்றும் சொல்லி விட்டார்.
“எப்படிங்க வீட்டை சுத்தப்படுத்தாம இருக்க முடியும்?” என்று கேட்ட என் மனைவி, ஹவுஸ் ஓனர் பார்க்காத தருணங்களில் வீட்டை துடைத்துக் கொண்டிருந்தாள.
ஒரு நாள் மாடிப்பக்கம் வந்த ஹவுஸ் ஓனர், என் மனைவி தண்ணீரில் மாஃப்-ஐ நனைத்து தரையில் மெழுகுவதைப் பார்த்து விட்டார்.
“கழுவி துடைக்க வேண்டாம்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க”என்று உரத்த குரலில் கோபமாகச் சொன்னார்
இதற்கு பிறகு சில நாட்கள் வீட்டைக் கழுவவே இல்லை. திடீரென ஒரு நாள் காலை 7 மணிக்கு வீட்டுக்குள் வந்த ஹவுஸ் ஓனர், “இன்னமும் கீழ் போர்ஷனில் ஒழுகிக்கிட்டுத்தான் இருக்கு. தரை, பாத்ரூம் எல்லாம் உடைச்சு பார்க்கனும்”என்று வேலையாட்களுடன் உள்ளே வந்து விட்டார்.
“சார் நாங்க யாருமே இன்னும் குளிக்கல, சாப்பிடல. அதெல்லாம் முடிச்சுக்கிறோம். அதுக்கப்புறம் உங்க வேலையைப் பாருங்க சார்” என்றேன்.
எந்த பதிலும் சொல்லாமல் கோபத்துடன் ஹவுஸ் ஓனர் வெளியேறி விட்டார்.
சில நிமிடங்கள் கழித்து வேலையாள் மட்டும் வந்து, “அவுஸ் ஓனர் உங்களை, வீட்டைக் காலி பண்ணச் சொல்றார்” என்றார்.
ஆடைகளை மாற்றுதைப் போல குடித்தனக்காரர்களை அடிக்கடி மாற்றுவதுதான் ஹவுஸ் ஓனர்களாகப்பட்டவர்களின் பாணி போல தெரிகிறது.
வேறு வீடு பார்க்கலாமா என்று குழப்பம். வேறு பகுதியில் வீடு மாற்ற வேண்டும் என்றால் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தையும் மாற்ற வேண்டும்.
இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் ஹவுஸ் ஓனர்கள் டார்ச்சர் செய்கிறார்களோ. என் மனைவி, ஹவுஸ் ஓனர் மனைவியடம் பேசி விட்டு வந்தாள். அதன் பின்னர் பிரச்னை ஓய்ந்தது. ஒரு விடுமுறை நாளில் ஹால், பாத்ரூமை உடைத்து ஒழுகலைச் சரி செய்தார்.
இது நடந்து ஒரு வாரத்துக்குப் பின்னர் வழக்கம் போல ஒரு நாள் பள்ளிக்கு என் குழந்தைகளை விட்டு வந்த பிறகு, கீழ் வீட்டில் இருந்த லோகநாயகி அம்மாள், “உங்களுக்கு கீழே இருக்கிற வீட்டுல ஒழுகுதுன்னு சொன்னாங்களே? சரியாயிடுச்சா?” என்றார்.
“ஆமா. எங்க வீட்டு பாத்ரூம்ல ஒரு பைப்புல ஓட்டை விழுந்திருக்கு. அந்த தண்ணிதான் ஒழுகி இருக்கு. வேற பைப் மாத்திட்டாங்க” என்றவன், அவர்களிடம், “நீங்கள் உங்கள் பெண்ணோடு போய் இருக்கலாமே” என்று கேட்டேன்.
உடனே அவர், “எங்களுக்கு குழந்தைகள் இல்லை” என்றார் .
எத்தனையோ பேரிடம் இதே பதிலை அவர் சொல்லியிருக்கக் கூடும். அவரது வேதைனையும் நாளடைவில் குறைந்திருக்கக் கூடும். அதனால், இப்போது அவரது வார்த்தைகளில் வேதனைகள் இல்லை. ஆனால், ஆதரவு ஏதும் இன்றி முதுமை காலத்தில் எப்படி அவர்களின் வாழ்க்கை செல்லப்போகிறதோ என்ற எண்ணத்திலும் சட்டென துயரமானேன்.
சில நிமிடங்கள் மெளனத்துக்கு பின்னர் “உங்க, சொந்த காரங்க, உங்க ஹஸ்பண்ட் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகலாமே” என்றேன்.
“அப்படியெல்லாம் போகவிருப்பம் இல்லை. எங்களை வச்சுப் பார்த்துக்கறக்கு யாரும் தயாராக இல்லை” என்றார்.
இன்னும் அதிகமாக அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், “உங்க சொந்த ஊர் எது” என்று கேட்டேன்.
“இங்கதான் சென்னையில் சிந்தாதரி பேட்டை” என்றார்.
“அவருக்கு” என்று அவர் கணவர் பற்றிக் கேட்டேன்.
“அவரும் சென்னைதான். கோடம்பாக்கம் “என்றார்.
“லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்களா” என்றேன்.
“இல்லை பெற்றோர் செய்து வைத்த திருமணம்தான்” என்றார்…
லோகநாயாகியின் வீட்டுக்காரரையும் அடிக்கடி பார்ப்பேன். அவர் யாரிடமும் பேச மாட்டார். பேசியும் பார்த்ததில்லை. சரியாக காலை 9 மணிக்கு மேல் லேக் வியூ ரோடு வழியாக நடந்து சென்று ஆட்டோ பிடித்தோ அல்லது பனகல் பார்க் வரை நடந்து சென்று பஸ் பிடித்தோ ஆபீசுக்கு செல்வார்.
முன்பு சைதாப்பேட்டை வீட்டில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் ஒரு முதிய பெண்மணி இருந்தார். அவரை ஜானகி ஆண்டி என்றுதான் அழைப்போம். அவருக்கும் குழந்தைகள் இல்லை. அவருடைய கணவர் மரணத்துக்குப் பின்னர் அடிக்கடி இடம் மாறி வாடகை வீடுகளில் தனியாக வசித்து வருகிறார். அவருடைய உடன் பிறந்த தங்கை ஒருவர் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் இருந்தபோதும், இவர் அங்கு போவதில்லை. தனியாக இருப்பதுதான் அவருக்குப் பிடித்திருந்தது.
மாதம் தோறும் பென்ஷன் பணம் எடுக்க வங்கிக்குப் போய் வருவார். அவராகச் சமைத்துச் சாப்பிடுவார். திடீரென அவராகப் பேசிக் கொண்டிருப்பார். ஒரு லேண்ட் லைன் போன் வைத்திருந்தார். அதில் அவரது தங்கை, உறவினர்கள் கூப்பிடுவார்கள். மணிக்கணக்காக அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்.
நாங்கள் அப்போது கிரைண்டர் எல்லாம் வாங்கவில்லை. எனவே, மாவுமில்லில் கொடுத்து மாவு ஆட்டி வாளியில் கொண்டு வந்து அவர் வைத்திருந்த ப்ரிட்ஜில்தான் வைத்திருப்போம். என் மனைவிக்கு நல்ல துணையாக இருந்தார்.
என் குழந்தை தவழ்ந்து, அவரது வீட்டுக்குப் போவாள். அந்த பெண்ணிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.
என் மனைவியின் பிறந்த நாள், என் பிறந்த நாள், எங்களின் திருமண நாள் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொண்டு காலையில் முதல் ஆளாக வாழ்த்துச்சொல்வார்.
திடீரென்று ஒருநாள், “கனடாவில் இருக்கும் உறவினர் வீட்டுக்குப் போகப்போகிறேன்” என்று சொன்னார்.
அவரிடம் இருந்த பிரிட்ஜை எங்களுக்குக் கொடுத்து விட்டார். அவரிடம் இருந்த மேலும் சில பொருட்களை பக்கத்து வீடுகளில் இருந்தவர்களிடம் கொடுத்து விட்டார்.
கனடாவுக்கு சென்றவர், அடுத்த பத்து நாளில் திரும்பி வந்து விட்டார். “அங்கே குளிராக இருக்கிறது. என்னால் இருக்க முடியவில்லை. அதான் வந்துட்டேன்” என்றார்.
ஆனால், “பிரிட்ஜ்ஜை திருப்பிக் கொடுங்கள்” என்று எங்களிடமோ, அல்லது பொருட்களைக் கொடுத்தவர்களிடமோ திரும்பக் கேட்கவில்லை.
குழந்தைகள் அற்ற முதியவயதில் பேரன்பில், இயற்கையின் போக்கில் அவர் இருந்தார் என்பதை உணர்ந்தோம். பின்னர், அந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் வீட்டை காலி செய்யும்படி அவரிடம் சொன்னார். அவரும் காலி செய்து விட்டார்.
பின்னர் எங்களையும் ஹவுஸ் ஓனர் காலி செய்யச் சொல்லி விட்டார்.
அதன்பிறகும் போனில் எங்களை அடிக்கடி அழைத்துப் பேசுவார்.
ஒருவருடைய வாழ்க்கையில் பெற்றோர், நெருங்கிய உறவுகள் தவிர இது போன்று ஒரு வருடம், இரண்டு வருடத்துக்கு அண்டை வீட்டுக்காரர்கள் என்ற பெயரில் பழகுவதும் பின்னர் அவர்களின் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு பிரிவதும் இந்த மாநகரத்தில் வாடிக்கையாகவே இருக்கிறது.
என் மகள் வயதுக்கு வந்தபோது அந்தத் தகவலைச் சொல்ல ஜானகி ஆண்டியின் லேண்ட் லைன் போனுக்கு தொடர்பு கொண்டோம். கிடைக்கவே இல்லை. அந்தப் போன் உபயோகத்தில் இல்லை என்று வந்தது.
கடைசியாக அவர் இருந்த வீட்டுக்குச் சென்று நேரில் சொல்லப் போனேன். ஆனால், அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்றனர். இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த குடியிருப்புகளில் பலர் மாறி விட்டனர்.
எப்போதாவது ஒரு தருணத்தில் அவரை சந்திப்போம் என்று நினைத்தேன்.
2015- ம் ஆண்டு டிசம்பர் பெரும் மழையின் போது கீழ் தளத்தில் இருந்த லோகநாயகியின் வீட்டுக்குள் ஒரு ஆள் உயரத்துக்குத் தண்ணீர் புகுந்து விட்டது.
அப்போது அவர்கள் இருவரையும், நாங்கள் உட்பட அந்த வளாகத்தில் இருந்த அனைத்து வீட்டுக்காரர்களும் அழைத்தோம். ஆனால், அவர்கள் யார் வீட்டுக்கும் போகவில்லை. வீட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கு மிகவும் தயங்கியதாக என் மனைவியும் மற்றவர்களும் சொன்னார்கள்.
மழை நிற்பதாகத் தெரியவில்லை, தண்ணீரும் குறையவில்லை. ஹவுஸ் ஓனர்தான் அவரை வற்புறுத்தி அவர்களை அழைத்து வந்து அவரது வீட்டில் தங்க வைத்தார். வெள்ளம் வடிந்த பின்னர், அவர்கள் போர்ஷனுக்குச் சென்று விட்டனர்.
கொஞ்சநாட்கள் ஹவுஸ் ஓனர் பற்றி அந்தப் பெண்மனி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஹவுஸ் ஓனர் அவர்களைப் பற்றி புரிந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன்.
எங்கள் குடியிருப்பின் மொட்டை மாடியில் மேலும் 6 போர்ஷன்களை ஹவுஸ் ஓனர் கட்ட ஆரம்பித்தார். கீழ்தளத்தில் செங்கற்கள், மணலை கொட்டி வந்து 3 மாதங்களுக்கும் மேலாக வேலைகள் நடந்தன. லோகநாயகியின் வீட்டின் முன்பு மணல் கொட்டப்பட்டிருந்தது. காற்றடிக்கும்போது மணல் வீட்டுக்குள் புகுந்து அவஸ்தையாக இருப்பதாகச் சொன்னார். ஆனால், இதையெல்லாம் ஹவுஸ் ஓனர் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
“பொறுத்துக்கங்க, சீக்கிரம் முடிச்சிடுவார்” என்றேன்.
“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்றார் வலிநிறைந்த புன்னகையோடு.
குழந்தைகள் அற்ற, சொந்தங்கள் அற்ற சூழலில் வாழும் அவர்களின் உலகத்தில் சின்னச்சின்ன தொந்தரவுகள் பெரிய அளவில் மலை போல தோன்றுகிறது எனப் புரிந்தது.
2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், “நான் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடப்போறேன்” என்றார் அந்த அம்மாள்.
தனக்குத் தெரிந்த அரசியல் பற்றிப் பேசினார். அவரின் ஆர்வம் வியக்க வைத்தது.
இரண்டு நாட்கள் கழித்து, “இல்லை அவருக்கு ஓட்டுப்போட மாட்டேன். இன்னொருத்தருக்குப் போடப்போகிறேன்” என்றார்.
“ஏன் அப்படிச் சொல்றீங்க என்றேன். இல்லை அவர் பெரிய மோசடியெல்லாம் பண்ணிருக்காராம். பத்திரிகையில போட்டிருக்காங்க” என்றார்.
சில மாதங்களுக்குப் பின், “வீட்டைக் காலி பண்ணப் போறோம்” என்றார் திடீரென.
“என்னங்க ஆச்சு” என்றேன்…
“புதுசா குடிவந்த 6 போர்ஷன்காரங்களும் டூ வீலரை எங்க வீட்டு முன்னாடிதான் நிறுத்துராங்க. கதவைக்கூட தொறக்க முடியல. கஷ்டமா இருக்குது” என்றார் வேதனையோடு.
உண்மைதான். புதிய வீடுகளுக்குக் குடி வந்தவர்கள் தங்கள் வண்டிகளை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு முன்புதான் நிறுத்துகின்றனர். அவர்களுக்கு நிறுத்துவதற்கும் வேறு இடம் இல்லை. புது வீடுகளைக் கட்டும் ஹவுஸ் ஓனர் பார்க்கிங்குக்கும் இடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதுதானே என்று நினைத்தேன்.
இரண்டு நாட்கள் கழித்து “ஜூன் 25-ம் தேதியோடு காலி பண்ணப்போறோம்” என்றார் அந்தப் பெண்மணி.
தீர்க்கமாக முடிவு செய்து விட்ட அவர்களிடம் “எங்கபோகப்போறீங்க” என்றேன்.
“குரோம்பேட்டை போகப்போறோம்” என்றார்.
“அங்க யார் இருக்கா. தெரிந்தவர்கள் யாராச்சும் இருக்காங்களா” என்றேன்.
“இல்லை. அந்தப் பக்கம்தான் வீடு கிடைச்சது. அதுலயும் பர்ஸ்ட் ப்ளோர்லதான் இருக்கு. எப்படி மாடியில் ஏறி இறங்கப்போறமோ தெரியல. முதல்ல இங்க இருந்து போகனும். அதான் முக்கியம்” என்றார்.
“அவர் ஜூன் 30-ம் தேதியோட ரிட்டையர்ட் ஆகறார். அதான் அங்க போயிடலாம்னு இருக்கோம்” என்றார்.
“ஸ்டேஷனுக்குப் பக்கதுல வீடு இருக்கா” என்று கேட்டேன்.
“இல்லை. தூரம்தான். பஸ்ஸில் போகனும்” என்றார். ஜூன் 25-ம் லோகநாயகி வீட்டை காலி செய்து விட்டார். அதற்கு மறுநாள் நான் வண்டியை எடுக்கக் கீழே சென்றபோது அந்த வீடு பூட்டப்பட்டுக்கிடந்தது.
குரோம்பேட்டையில் எப்படி அவர்கள் இருக்கப்போகிறார்கள். அங்கேயும் என்னைப்போல் பேசுவதற்காகவாவது யாராவது அவர்களுக்குக் கிடைப்பார்களா என்று தெரியவில்லை.
அன்று மாலையே ஒரு இளைஞன் வந்து வீடு காலியிருக்கிறதா என்று ஹவுஸ் ஓனரிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
“நான், என்னோட பேரண்ட்ஸ், கூட ஒரு நாய் இருக்கிறது” என்றான் அவன்.
“இல்லை. நாய் எல்லாம் அலோவ்டு இல்லை” என்றார் ஹவுஸ் ஓனர்.
“வீட்டுக்குள்ளேயேதான் வச்சுப்போம்.வெளியே எல்லாம் விடமாட்டோம்” என்றான் அந்த இளைஞன்.
“இல்லைப்பா. விட முடியாது” என்று மறுத்து விட்டார் ஹவுஸ் ஓனர்.
அதன்பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண்மணி இருந்த வீட்டின் முன்புறம் டூ வீலர்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி சுவர் எழுப்பி, வீட்டுக்குள் நுழையும் இடத்தை சின்ன வரவேற்பு அறையைப் போல மாற்றிவிட்டார் ஹவுஸ் ஓனர்.
“இது போன்று ஒரு கேட் போட்டுக் கொடுங்கள்” என்றுதான் அந்தப் பெண்மணி கேட்டார். அப்போது ஹவுஸ் ஓனர் ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.