19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரளாவில் இந்த போலிகாமி இருந்ததாம். Polygami என்றால் ஒரு பெண் பல கணவர்களை மணப்பது. நாயர்கள், தைய்யர்கள், கம்மாளர் சாதிகளில் ஆரம்ப காலங்களில் இந்த வழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது அந்த சில சாதிகளில் சொத்துக்கள் அந்த வீட்டின் பெண்களுக்கே சேரும். அவர்களின் குழந்தைகளுக்கே சேரும். அன்றைய நாயர்களில் பல ஆண்கள் கணவர்களாக இருந்ததாக பல செவி வழி கதைகள் உண்டு.
அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை தான் பரதனின் ‘வெங்கலம்’. குஞ்சுப்பெண்ணு என்கிற தாயாருக்கு இரு மகன்கள். கோபாலன்(முரளி), உண்ணிகிருஷ்ணன்(மனோஜ்.கே.ஜெயன்). அவர்களுக்கு பாரம்பரியமாக வெண்கல சிலை வடிக்கும் தொழில். சிலைகளோடு, பாத்திரம், விளக்கு போன்றவையும் செய்வார்கள். காலையில் ஆற்றில் இறங்கி குளித்து, பூஜை செய்து பயபக்தியோடு வேலையைத் தொடங்கினால் மாலை வரை செய்வார்கள்.
கோபாலன் வேலையே பழியாகக் கிடப்பவன். தம்பி உண்ணியோ பாட்டு, நாடகம் என்று கலாரசனை உடையவன். சுலோச்சனா என்கிற பெண்ணை அவன் காதலித்துக் கொண்டிருக்கிறான். அண்ணன் கோபாலன் ஒரு தாழ்ந்த சாதி பெண்ணை விரும்ப குஞ்சிப்பெண்ணு சம்மதிக்காததால் அவளுக்கு வேறு ஒரு ஆளுடன் திருமணம் நடக்கிறது.
குஞ்சிப்பெண்ணுக்கு தன்னைப்போலவே தன் மகன்களுக்கும் ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறாள். அம்மாவின் திட்டம் அறிந்த அவர்கள் இதை பற்றி பேசினாலே கோபம் கொள்கிறார்கள். பாட்டியும் அம்மாவின் இந்த ஆசைக்கு தூபம் போடுகிறாள். தாய்மாமாக்கள் இருவரும் ஒரே பெண்ணை கட்டி வாழ்கிறார்கள். அவர்களும் அவ்வப்போது ஊதி விடுவார்கள்.
கோபாலன், ஒரு தலச்சேரி பூரம் திருவிழாவில் தங்கமணி(ஊர்வசி)யை பார்க்கிறான். தங்கமணியை கோபாலன் அம்மாவின் சம்மதத்தோடு திருமணம் செய்கிறான். தங்கமணியை கோபாலன் தொடும்போதெல்லாம் அவன் செய்த கடவுள் சிலை நினைவுக்கு வந்து தடைகளை மனதில் ஏற்படுத்துகிறது. உண்ணி தங்கமணியோடு நல்ல உறவில் இருக்கிறான். தன் நாடகம், காதல் என எல்லாம் பகிர்கிறான். சகோதர, சகோதரியாக பழகும் இவர்களை தூரத்திலிருந்து கவனிக்கும் குஞ்சிப்பெண்ணுக்கு வேறொரு திட்டம் உருவாகிறது.
தங்கமணியின் மனதில் பாட்டியும், குஞ்சிப்பெண்ணும் திரௌபதி கதைகளை சொல்லி தவறில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு தங்கமணியைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். நாடகவேலை முடிந்து லேட்டாக வரும் உண்ணிக்கு தங்கமணியே சாப்பாடு வைக்கிறாள்.
எவ்வளவோ எடுத்து சொல்லியும் தங்கத்திற்கு குஞ்சிப்பெண்ணுவின் உள்ளர்த்தம் புரியவில்லை. நாடக நடிகையை மணக்கக்கூடாதென்றால் தங்கமணியோடு உண்ணியை ஒன்று சேர வைக்க குஞ்சிப்பெண்ணு முயற்சிக்கிறாள். தனக்கு வலி இருக்கிறது என குஞ்சிப்பெண்ணு நாடகமாடி வைத்தியரிடம் செல்ல கோபாலனை அழைத்துக் கொண்டு தங்கமணியையும், உண்ணியையும் தனிமையில் இருக்க வைக்கிறாள். கோபாலனின் மாமாக்கள் கோபாலனிடம் தங்கமணிக்கும், உண்ணிக்கும் உறவு இருப்பதாக சொல்லிவிட சிரித்துக் கொண்டிருக்கும் தங்கமணியையும், உண்ணியையும் பார்த்து கோபத்தில் தம்பியோடு சண்டையிடுகிறான்.
சண்டையில் குஞ்சிப்பெண்ணு கோபாலனைப் பிடிக்க தங்கமணி உண்ணியைப் பிடிக்க உண்ணியை ஆசுவாசப்படுத்து என தங்கமணியிடம் குஞ்சிப்பெண் சொல்ல இதைக் கண்ட கோபாலன் வெகுண்டெழுகிறான். அப்போது இவை பற்றி ஏதுமறியாத தங்கமணி தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்ல கோபாலன் அது என் குழந்தை இல்லை என்கிறான்.
தங்கமணி தாய்வீடு போகிறாள். கோபாலன் தனியாளாகிறான். தேவியின் சிலை செய்ய ஆர்டர் வருகிறது. உண்ணி வராததால் கோபாலன் தனியே சிலை செய்கிறான். அவன் சிலை செய்து முடித்து மோல்டை அவிழ்க்கும் போது குழந்தை அழுவது போல் அவனுக்கு கேட்கிறது.
தங்கமணிக்கு குழந்தை பிறந்ததாக செய்தி கேட்டபோது சிலையோடு குழந்தை அழும் குரலை கேட்தையும் ஒப்பிட்டு அவன் தன் குழந்தையை காண ஓடி வருகிறான். தங்கமணியின் தாய் வீட்டின் உள்ளிருந்து உண்ணி வருவதை பார்த்த கோபாலன் கோபத்தோடு அடித்து துவைக்கிறான். நிறுத்துங்க என குரலோடு உள்ளேயிருந்து சுலோச்சனா, தங்கமணியோடு வெளிவர கோபாலனுக்கு சகலமும் புரிகிறது. அவன் உண்ணி ஜோடியை ஆசிர்வதித்து தங்கமணியோடும் குழந்தையோடும் சேருகிறான்…
குஞ்சிப்பெண்ணாக பரதனின் மனைவி கே.பி.ஏ.சி.லலிதா, பாட்டியாக ஃபிலோமினா, மாமாக்களாக பப்பு, மாலா அரவிந்தன், சுலோச்சனாவாக சோனியா போஸ்….
எழுதியவர் திரைக்கதை அரசர் ஏ.கே.லோஹிததாஸ்…இயக்கம் பரதன்…ஒரு பழைய மறைந்து போன வழக்கத்தை எடுத்துக்கொண்டு ஒரு அருமையான குடும்ப திரைக்கதையை எழுதி அசத்தி இருக்கிறார் லோஹிததாஸ்..வெள்ளந்தியான கிராமத்து மனிதர்கள், அவர்களின் அன்பும் பாசமும், அவர்களின் மனதில் தீய எண்ணங்களை புகுத்துவது, அதனால் ஏற்படும் சந்தேகம்….மாற்றங்களை அழகாக காட்சிப்படுத்தி அதை அருமையான குடும்பக்காட்சிகளாக நம்மை விதும்ப வைத்துவிடுகிறார் இயக்குனர் பரதன்…முதலிரவில் ஊர்வசியை தொடுவதும் அவன் சிலை வடிப்பதையும் தொடர்பு படுத்தி வரும் காட்சி பரதனின் கவிதை…
ஊர்வசி, மனோஜ், முரளி மூவரின் நடிப்பும் நம்மை கட்டிப்போட்டு வைத்துவிடுகிறது. யூடியூபில் காணக் கிடைக்கிறது வெங்கலம்.