தமிழ் சினிமாவின் புது அலை 1980-களின் அருகில் நிகழ்ந்தபோது அங்கே பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். இதைத் தொடர்ந்து பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து பாக்யராஜ்,பாண்டியராஜன், பார்த்திபன் போன்றோர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பல முக்கியமான தமிழ்ப் படங்களை எடுத்தார்கள். போலவே பாலச்சந்தர் அவர்களின் சிஷ்யர்களான வசந்த், சுரேஷ் கிருஷ்ணா போன்றோரையும் குறிப்பிடலாம். இவர்களைப் போலவே க்ளாஸிக் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த பாலுமகேந்திராவின் பள்ளியில் இருந்து மிகவும் தாமதமாகத்தான் இயக்குநர்கள் வெளிவந்தார்கள்.
அவர்கள் லேட்டாக மட்டும்தான் வந்தார்கள். ஆனால் லேட்டஸ்ட்டாக வந்தார்கள். இயக்குநர் பாலாவின் சேது ஏற்படுத்திய அலை மிகப்பெரியது. நந்தா,பிதாமகன் என அவரின் கைப்பட்டதெல்லாம் பொன்னானாலும் கூட அவர் ஒரே வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டதை வெகு சீக்கிரமே உணர்ந்துகொண்டோம். அங்குதான் இயக்குநர் வெற்றிமாறன் நம் கவனத்தை அவர்பக்கம் திருப்புகிறார். திருப்பிய கவனத்தை மாற்றவே முடியாத அளவிற்கான படைப்புகளை அவர் தந்துகொண்டும் இருக்கிறார். அதன் விரிவான அலசலே இக்கட்டுரை.
பாலுமகேந்திராவின் படங்கள் க்ளாஸிக் அந்தஸ்தோடு இருந்தாலும் கூட அவை எல்லாமே வணிகரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படங்கள். உண்மையில் இந்தியாவில் ஒரு இயக்குநரின் பெயரைச்சொல்லி பாராட்டுகையில் இந்த க்ளாஸிக்+மாஸ் என்கிற லாவகத்தை அருமையாக கையாண்டவர்களே முன்னணியில் இருப்பர். இந்த வித்தை எல்லாருக்கும் கைகூடுவதில்லை. இன்றைய தேதியில் வெற்றிமாறன் அவ்வித்தையின் பிதாமகன் என்று சொன்னால் அது மிகையில்லை.
‘பொல்லாதவன்’ உலகப்புகழ் பெற்ற ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்தின் பாதிப்பில் உருவானதுதான். ஆனால் தனிப்பட்ட முறையில் பொல்லாதவன் பற்றிப் பேச நிறைய உண்டு. காரணம் மிக எளிமையான ஒரு கதைக்குள் வந்துபோகும் மாந்தர்கள் தங்களின் குணங்களை வெளிக்காட்டும் பொழுதில் அந்த எளிமையான கதையின் தாக்கம் வேறு ஒரு உலகத்திற்கே நம்மை அழைத்துச்செல்வதாய் இருப்பதை உணரலாம். தனது பைக்கை தொலைத்த நாயகனுக்கு எந்தவித பெரிய ஆசையும் இல்லை. திரும்ப தனது பைக் கிடைக்கவேண்டும் என்கிற ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான். தேடி அலையும் முயற்சியில் நாயகன் உபயோகிக்கும் பைக் போன்றே இன்னொரு பைக் கிடைக்கிறது. அதை எடுத்துக்கொண்டு கூட அவன் போயிருக்கலாம். ஆனால் அவன் தான் தொலைத்த தனது விருப்பத்திற்குரிய, தன் வாழ்க்கையையே மாற்றிய அதே வண்டிதான் வேண்டும் என்கிற முடிவெடுக்கும் அந்த தருணம்தான் வெற்றிமாறனின் சினிமா மொழி எனக் கொள்ளலாம்.
இதே மாதிரியான ஒரு காட்சியாக ஆடுகளத்தில் கருப்பு, தான் செலவழித்தது போக மீதியிருக்கும் பணத்தை அப்படியே சென்று பேட்டைக்காரனிடம் கொடுக்கும் காட்சியை குறிப்பிடலாம். பேட்டைக்காரனின் மனதில் வன்மம் குடிபுகுந்துவிட்டதை நாம் அறிந்தே இருப்போம். கருப்புவுக்கு அது தெரியாது. கருப்பின் அப்பாவித்தனம் என்றெல்லாம் இதைக் கூற இயலாது. கருப்புவின் நம்பிக்கை அத்தகையது. தன் வண்டி தனக்கு எப்படியும் கிடைக்கும் என்றும் தனக்கு எல்லாமே கொடுத்தது அந்த வண்டிதான் என்கிற பொல்லாதவன் பிரபுவின் அதே நம்பிக்கைதான் பேட்டைக்காரன் மேல் கருப்பு வைத்திருப்பது. இந்த நம்பிக்கை விளையாட்டு மிக உன்னதமானது. எந்தளவு உன்னதமானதோ அதே அளவு ஆபத்தும் நிறைந்தது. இது இரண்டையும் சரிசமமாக திரையில் நிறுவி, நம்மோடு உரையாடும் இந்த வெற்றிமாறனின் திரை மொழி மிகவும் சுவாரஸ்யமானது.
தமிழ் சினிமாவிற்கும் இலக்கியத்திற்குமான தொடர்பு பல சமயங்களில் எள்ளி நகையாடக்கூடிய வகையில்தான் அமைந்திருக்கிறது. வெற்றிமாறன் மூன்றாவதாக எடுத்த விசாரணை, ‘லாக்கப்’ என்கிற குறுநாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில் சினிமாவிற்கு தகுதியான இலக்கிய வடிவம் என்றால் அது குறுநாவல் அல்லது சிறுகதைதான். லாக்கப் குறுநாவல் சொன்ன கதையின் மையம் கெடாமல், அதற்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு திரைக்கதை எழுதி, அதை வெனிஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைகளுக்கான சினிமா என்கிற பிரிவில் விருதும் பெற வைத்தார். உண்மையில் இந்த குறுநாவல் பேசும் விஷயமே மனித உரிமைகளுக்கு எதிரான அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைதான். அதை திரையில் பேசி, மிகச்சரியாக அந்த விருதை வாங்குவதென்பது சாதாரண விஷயமில்ல. சமூகத்தின் மீதான இயல்பான புரிதல் உள்ள ஒருவரால் மட்டுமே அதைச் செய்ய இயலும். வெற்றிமாறன் அதைத்தான் செய்தார். இதோ இப்போது அவர் எடுக்கும் அசுரனும் கூட ‘வெக்கை’ என்னும் நாவல்தான். படம் நன்றாகவே வந்திருக்கும் என்கிற நம்பிக்கையை விசாரணை மூலம் ஏற்கனவே ஏற்படுத்திவிட்டார் வெற்றிமாறன்.
வடசென்னை பற்றிய கதைகள் சொல்லித்தீராது. காரணம் அந்த நிலப்பரப்பின் வரலாறு அத்தகையது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரமான, இப்போதைய அடையாளமான சென்னை, மெட்றாசாக இருந்த கதை அது. வாழ்வாதாரம் எதுவென்கிற புரிதலும், அந்த வாழ்வாதாரம் எங்கே வாழ்கிறோமோ அங்கேயே மேம்படுத்தல் மட்டுமே காலம்காலமாக அங்கே வாழும் மக்களுக்கு செய்யும் உண்மையான பரோபகாரமாக இருக்கும் என்பதையும் ராஜன், அன்பு கதையின் மூலமாக சொல்ல முயற்சித்தார் வெற்றிமாறன். சிறைகளின் கதைகளை வெற்றிமாறன் அளவிற்கு துல்லியமாகக் கூறிய தமிழ் இயக்குநர் வேறு யாரும் இல்லை என்றே கூறலாம். அவர்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே கூறுவது வரம். அதை வெளியிலிருந்து பார்க்கும் நம்மையும் அதற்குள் இழுத்துச் செல்வது எளிதில் கைகூடிவிடாது. வெற்றிமாறன் அதைச் செய்தார்.
மனதிற்கு நெருக்கமான சினிமா என்கிற விருது எல்லாருக்கும் கிட்டிவிடாது. அதை தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் செய்கிறார் வெற்றி. ஆடுகளத்தின் இரண்டாம் பகுதியை மட்டுமே வைத்து பல விவாதங்கள் நடத்தலாம். காரணம் அதுவரை கருப்புவின் எழுச்சியாக இருக்கும் சினிமா, பின்னர் பேட்டைக்காரனின் வன்மம் என்னும் தளத்திற்குள் நுழைகையில் எடுக்கும் விஸ்வரூபம் மிகப்பெரியது. கருப்பு அதை உடனே கண்டுபிடித்து பின்னர் வெறிகொண்டு எழுந்து, பேட்டைக்காரனை கொலைசெய்துவிட்டு ஹீரோவாகி இருக்கலாம். ஆனால் கருப்பு அப்படி அல்ல. பேட்டைக்காரனின் இயல்பும் அதுவல்ல. இந்த மெல்லிய கோடை வெற்றிமாறன் ஒவ்வொருமுறையும் வெற்றிகரமாக கடக்கிறார். இனியும் கடப்பார்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெற்றிமாறன் தனது சுதந்திரத்தை புரிந்த, அதை மதிக்கிற மனிதர்களோடு தொடர்ந்து வேலை செய்வதை நாம் கவனிக்கவேண்டும். ஒரு படைப்பாளிக்கு அது மிகவும் முக்கியம். ஒரு 80 பக்கங்கள் கொண்ட நோட்டு ஒன்றை வைத்து மூன்று பாகங்களாக வரக்கூடிய சினிமா செய்வது எளிதான காரியம் அல்ல. வடசென்னை உருவானது அப்படித்தான். அதற்கு எடுக்கும் காலமும், உழைப்பும் அளப்பரியது. அந்தவகையில் தனுஷ் வெற்றிமாறனின் பயணத்தில் மறுக்கமுடியாத நபராக இருக்கிறார். தொடர்ந்து இதை நாம் வரும் காலங்களில் பார்க்கப்போகிறோம் என்பதே வெற்றிமாறன் இந்த பிறந்தநாள் மூலம் நமக்கு கொடுக்கும் நற்செய்தி.
பாலுமகேந்திரா அய்யா அது ஒரு கணாக்காலம் செய்திருந்தால் இன்று தமிழ் சினிமாவின் வெற்றி, வெற்றிமாறன் கொஞ்சம் தாமதமாகவே வந்திருப்பார்.. தனுஷ் தேர்ந்த நடிப்பு என்ன என்பதை கற்று கொள்ள நேரம் பிடித்திருக்கும்.. பாலுமகேந்திராவே இங்கும் வெற்றி கொள்கிறார்.