சிறுகதைகள்
Trending

எலி – அநயிஸ் நின் (தமிழில் – விலாசினி)

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

நோட்டர் டேம் அருகே நங்கூரமிட்டிருந்த படகு வீட்டில்தான் நானும் அந்த எலியும் வசித்து வந்தோம். பாரிஸின் இதயமான அத்தீவைச் சூழ்ந்த நரம்புகள் போல் சியான் நதி முடிவற்று வளைந்து சென்று கொண்டிருந்தது.

அந்த எலி என்பது சிறிய கால்களுடனும் பெரிய தனங்களுடனும் மற்றும் பயந்த விழிகளுடனும் இருந்த ஓர் இளம் பெண். அவள் யாரும் கவனிக்க முடியாத வண்ணம், சில சமயங்களில் அமைதியாகவோ வேறு சில சமயங்களில் ஒரு பாடலின் சிறு பகுதியைப் பாடியவாறோ அந்தப் படகு வீட்டைக் கவனித்து வந்தாள். பிரிட்டனியின் நாட்டுப்புறப் பாடலிலிருந்து ஏழு சிறிய குறிப்புகளைப் பாடியவுடன் தொடர்ந்து சட்டிகளும் பானைகளும் உருளும் சத்தம்தான். அவள் எப்பொழுது பாடலைத் தொடங்கிப் பாடினாலும் அப்பாடல் உலகின் கொடூரத்திலிருந்து திருடப்பட்டதைப் போன்றும் எதுவோ ஒன்றின் தண்டனையையோ ஆபத்தையோ குறித்து பயந்தவள் போலவும் ஏனோ அதை முடித்ததேயில்லை. அந்தப் படகு வீட்டில் அவளுடையதுதான் இருந்ததிலேயே சிறிய அறை. அதிலும் படுக்கை நிரப்பியிருக்க, எஞ்சிய இடத்தில் ஓரமாக ஒரு சிறிய இரவு மேஜையும் எலியின் நிறத்திலிருந்த அவளது தினசரி ஆடைகள், இரவு காலணிகள், குளிரங்கி மற்றும் பாவாடை – இவற்றை மாற்றுவதற்கான கொக்கியும் இருந்தன. தன் புத்தம் புதிய உடைகளை மெல்லிய காகிதத்தில் சுற்றி கட்டிலிற்கு அடியிலிருந்த பெட்டியில் வைத்திருந்தாள். அந்தக் காகிதத்தில் ஒரு புதிய தொப்பியும், எலி நிறத்திலிருந்த கம்பளியும் கூட வைக்கப்பட்டிருந்தன. இரவு மேஜையின் மீது ராணுவ உடையில் இருந்த அவளது எதிர்கால கணவனின் புகைப்படம்.

அவளது மிகப் பெரிய பயமே இருட்டிய பிறகு நீர்வீழ்ச்சிக்குச் செல்வதுதான். பாலத்திற்கு அருகில் அந்தப் படகு வீடு இருந்தது. அதற்குக் கீழ் நீர்வீழ்ச்சி இருந்தது. அங்குதான் நாடோடிகள் தங்களை சுத்தம் செய்துகொண்டு இரவில் படுத்துறங்கினர். அல்லது வட்டமாக அமர்ந்து புகைத்தபடி உரையாடிக் கொண்டிருந்தனர். பகற்பொழுதில் எலி, ஒரு வாளியில் நீரைக் கொண்டு வர, அவள் தரும் மிச்ச மீதி பாலாடைக் கட்டி, அல்லது வைன் அல்லது துண்டு சவர்க்காரத்திற்கு பதிலுதவியாக அவர்கள் அந்த நீர் வாளியை அவளுக்காகச் சுமந்து வந்தனர். அவளும் அவர்களுடன் சிரித்துப் பேசினாள். ஆனால் இரவானால் அவளுக்கு அவர்களைக் கண்டு பயம் வந்தது.

எலி அவளது சிறிய அறையிலிருந்து எலியின் நிறத்திலிருந்த குளிராடை, பாவாடை மற்றும் மேலாடை அணிந்து வெளியே வந்தாள். மிருதுவான சாம்பல் நிற இரவுக் காலணிகள் அணிந்திருந்தாள். ஏதோ பயமுறுத்தப்பட்டது போன்றே எப்பொழுதும் பதற்றத்துடன் நடந்தாள். அவள் உணவு உண்பதை யாராவது பார்த்தால் கண்களைத் தாழ்த்திக்கொண்டு உணவுத் தட்டை மறைத்துக்கொண்டாள். அவள் அறையிலிருந்து வெளியேறுவதை யாராவது பார்த்தால் உடனடியாகத் தன் கையிலிருந்த பொருளை ஏதோ திருடிக்கொண்டு வந்தது போல் மறைத்துக்கொண்டாள். அவளது மெல்லிய கால்களின் தோலில் வேரூன்றியிருந்த பயத்தை எத்தகைய கனிவும் கடக்க முடிந்ததில்லை. பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருந்தது போல் தோள்கள் இறங்கியிருக்க, ஒவ்வொரு சத்தமும் அவள் காதுகளுக்கு எச்சரிக்கையாக ஒலித்தது.

நான் அவள் பயத்தைப் போக்க விரும்பினேன். அவளிடம் அவள் குடும்பம், அவள் வீடு, அவள் இதற்கு முன்பு வேலை செய்த இடங்கள் குறித்துப் பேசினேன். ஆனால் எலியோ நான் விசாரணை செய்வதாக நினைத்து தவிர்ப்பது போலவே பதிலளித்தாள். ஒவ்வொரு முறை நட்பு பாராட்டும்போதும் அவள் சந்தேகமாகவும் சங்கடமாகவும் உணர்ந்தாள். ஒரு பாத்திரத்தை உடைத்துவிட்டபோது அவள் இவ்வாறு புலம்பினாள், “மேடம் என் சம்பளப் பணத்திலிருந்து கழித்துவிடுவீர்களே.” அவளிடம் இது ஒரு விபத்து என்பதால் இவ்வாறு செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லையென்றும், இதேபோல் நானும் உடைத்திருக்கக்கூடும் என்றும் கூறியபொழுது அமைதியாக இருந்தாள்.

பின்பு அவளுக்கு ஒரு கடிதம் வர அதைக்கொண்டு அவள் அழுதாள். அவளிடம் என்னவென்று விசாரித்தேன். “என் அம்மாவிற்கு என் சேமிப்புப் பணத்திலிருந்து கடன் வேண்டுமாம். நான் திருமணத்திற்காக சேமித்து வருகிறேன், எனக்கு அதிலிருந்து இனி வட்டி கிடைக்காது,” என்று கூறினாள். அந்தப் பணத்தைத் தருவதாக நான் அவளிடம் கூறவும் அதை ஏற்றுக்கொண்டாலும் ஏதோ குழப்பமாகவே இருந்தாள்.

தன்னை அந்தப் படகு வீட்டில் தனியாக நினைத்துப் பார்த்தபொழுது அந்த எலி மகிழ்ச்சியாகவே இருந்தாள். எப்பொழுதுமே முடிக்காத பாடலின் தொடக்கத்தைப் பாடினாள். காலுறைகள் தைப்பதற்கு பதில் தன் திருமண உடையைத் தைத்தாள்.

முதல் பிரச்சனை முட்டைகளால் உண்டானது. அந்த எலிக்கு நான் என்ன உணவு உண்டேனோ அதையே கொடுத்தேன், ஃப்ரென்ச் பணிப்பெண்ணைப் போல் அவளை என்றும் நடத்தியதில்லை. அந்த எலிக்கும் தனக்குக் கிடைக்கும் உணவைக் குறித்து மகிழ்ச்சிதான். ஆனால் ஒருநாள் என்னிடம் பணம் குறைவாக இருந்தபொழுது நான் அவளிடம் இவ்வாறு கூறியது வரைதான் அந்த மகிழ்ச்சி இருந்தது:

“இன்றைக்குக் கொஞ்சம் முட்டைகள் மட்டும் வாங்கிக்கொள், ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.”

அந்த எலி அங்கேயே கண்களில் மிகுதியான பயத்துடன் நின்றுகொண்டிருந்தாள். எதுவும் கூறாமல் அங்கிருந்து நகராமல் இருந்தாள். அவளைப் பார்க்க வெளிறியிருக்க, திடீரென்று அழத் தொடங்கினாள். நான் அவள் தோள்களை லேசாகத் தொட்டவாறு என்ன விஷயம் என்று வினவினேன்.

“ஓ, மேடம்,” எலி கூறினாள், “எனக்குத் தெரியும். இது நீண்ட நாள் நிலைக்காது என்று. தினமும் நாம் கறி உண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கடைசியாக ஒரு நல்ல இடத்திற்குத்தான் வந்திருக்கிறேன் என்று நம்பினேன். ஆனால் நீங்களும் மற்றவர்களைப் போலவே நடந்துகொள்கிறீர்கள். முட்டைகள். என்னால் முட்டைகளை உண்ண முடியாது.”

“உனக்கு முட்டைகள் விருப்பமில்லையென்றால் நீ வேறெதாவது வாங்கிக்கொள்ளலாம். எனக்குப் பிரச்சனையில்லை. என்னிடம் இன்று பணம் குறைவாக இருப்பதால்தான் முட்டைகள் வாங்கச் சொன்னேன்.”

“எனக்கு அவை பிடிக்காது என்று இல்லை. வீட்டில், தோட்டத்தில் எங்கும் அவற்றை விரும்பி உண்டிருக்கிறேன். நாங்கள் நிறைய முட்டைகள் உண்டிருக்கிறோம். ஆனால் நான் முதன் முதலில் பாரிஸ் வந்தபொழுது வேலை செய்த அந்தப் பெண்மணியைக் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாது. அவர் மிக மிகக் கஞ்சம். அலமாரிகளை எப்பொழுதும் பூட்டியே வைத்திருப்பார். மளிகைச் சாமான்களை எடைப் பார்த்துதான் தருவார். நான் உண்ட சர்க்கரைக் கட்டிகளுக்குக் கணக்கு வைத்திருந்தார். நான் நிறைய சாப்பிடுவதாக எப்பொழுதும் குற்றம் சாட்டினார். அவருக்கு எப்பொழுதும் நான் கறி வாங்கி வர வேண்டும் ஆனால் எனக்கு எப்பொழுதும் முட்டை மட்டும்தான். காலை மதியம், இரவு என்று ஒவ்வொரு நாளும் முட்டைதான். என் உடல்நிலை மிகவும் மோசமானது. நீங்கள் இன்று முட்டைகள் என்று கூறவும் மீண்டும் அத்தகைய தினங்கள்  தொடரப்போகிறதோ என்று நினைத்தேன்.”

“நீ இங்கே மகிழ்ச்சியற்று இருப்பதை நான் விரும்பமாட்டேன் என்பது உனக்கு இந்நேரம் தெரிந்திருக்க வேண்டும்.”

“நான் மகிழ்ச்சியாக இல்லாமல் இல்லை மேடம். நான் இங்கே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதை நம்பத்தான் என்னால் முடியவில்லை. ஏதோவொரு உள் நோக்கம் இதற்கு இருக்கும் என்றே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு மாதத்திற்கு மட்டும் என்னை வைத்துக்கொண்டு கோடைக்கால விடுமுறைக்கு முன் என்னை நீங்கள் துரத்தி விட்டால் எனக்கு விடுமுறைக்கான சம்பளத்தைத் தர வேண்டியிருக்காது, பாரிஸ் நகரத்தின் கோடைக்காலத்தில் வேறு வேலையெதுவும் கிடைக்காமல் நான் தெருவில் நிற்க வேண்டி வரலாம். அல்லது கிறிஸ்துமஸிற்கு முன்னால் என்னை அனுப்பி விட்டால் புது வருடத்திற்கான பரிசு தர வேண்டாம். இவ்வாறெல்லாம் எனக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பு ஒரு வீட்டில் இருந்தபொழுது என்னால் வெளியில் ஒருமுறை கூட செல்ல முடிந்ததில்லை. மாலை வேளைகளில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் அனைவரும் வெளியே சென்றபொழுது நான் வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.” அவள் சொல்லி முடித்தாள். பல வாரங்களுக்கும் அவள் கூறியது இவை மட்டும்தான். மீண்டும் முட்டைகளைக் குறித்து அவள் பேசவில்லை. கொஞ்சம் பயம் குறைந்தது போல் இருந்தாலும், பதற்றமும் வேகமுமாகவுமே இருந்தாள். தான் உண்பதைப் பிறர் பார்ப்பது அவமானம் என்பது போல் வேகமாக உண்டாள். மீண்டும் என்னால் எலிக்கு இருந்த பயத்தின் எல்லையைக் கடந்து அவளிடம் செல்ல முடியவில்லை. என்னுடைய லாட்டரி டிக்கெட்டில் பாதியைக் கொடுத்தபோதும், அவளது வருங்கால கணவனின் புகைப்படத்திற்கு சட்டகம் ஒன்றை அளித்தபோதும், அவள் நான் எழுதுவதற்காக வைத்திருக்கும் காகிதத்தைத் திருடுவதைப் பார்த்த அன்றே அவளுக்கு எழுத காகிதங்கள் அளித்தபோதும் முடியவில்லை.

பின்பு ஒருநாள் படகு வீட்டை விட்டு ஒரு வாரம் போல் நான் செல்ல வேண்டியதிருக்க எலி தனியாக வீட்டைக் கவனிக்க விடப்பட்டாள். நான் திரும்பியபொழுது அவளது கண்களை என்னைப் பார்க்க வைக்கவோ அவளை சிரிக்க வைக்கவோ முடியவில்லை. ஒரு பெண்மணி ஓடைத்துறையில் அவள் காதலனுடன் நடந்துகொண்டிருந்தபோது அவளது தொப்பி தொலைந்துவிட்டது. அவள் எங்கள் கதவைத் தட்டி எலியிடம் வெளியில் வந்து தொப்பியைக் குச்சியால் பிடிக்க உதவ முடியுமா என்று கேட்டாள். அது மறுபுறம் மிதந்துகொண்டிருந்தது. எல்லோரும் ஜன்னல் வழியாக எட்டிப் பிடிக்க முயன்றனர். துடைப்பத்தின் கனமும், ஓடும் நீரின் வேகமும் இணைந்து கிட்டத்தட்ட எலியை நிலைதடுமாறி விழவைத்தது. அனைவரும் சிரித்தனர், எலியும் சிரித்தாள். அவள் சிரிப்பதை அவளே கேட்டு பயந்தவளாக தன் வேலையைக் கவனிக்க விரைவாகச் சென்றுவிட்டாள்.

ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் சமையலறையில் காஃபிக் கொட்டைகளை அரைத்துக்கொண்டிருந்த எலி முனகுவதைக் கேட்டேன். அங்கே அவள் வயிற்று வலியால் வெளுத்துப் போய் இரண்டாக சுருண்டு மடிந்திருந்ததைப் பார்த்தேன். நான் அவளை அவளறைக்கு அழைத்துச் சென்றேன். என்னிடம் எலி உணவு அஜீரணம் என்றாள். ஆனால் வலி மோசமாகியது. வலியில் ஒருமணி நேரம் போல் துடித்தவள் இறுதியில் என்னிடம் அருகில் வசிக்கும் அவளுக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரை அழைத்து வர முடியுமா என்று கேட்டாள். டாக்டரின் மனைவிதான் என்னை வரவேற்றது. அந்த டாக்டர் எலிக்கு முன்பே மருத்துவம் பார்த்திருக்கிறார். ஆனால் அவள் படகு வீட்டில் வசிக்கத் தொடங்கியதிலிருந்து இல்லை. அவள் படகு வீட்டில் வசித்தது டாக்டருக்கு அவளை அங்கு சென்று வைத்தியம் பார்க்க முடியாமல் ஆக்கியது. ஏனெனில் அவர் போரில் பெரியதாக ஊனப்பட்டிருந்தார். அவருடைய மரக்காலை வைத்துக்கொண்டு நிலையில்லாத பலகைகளில் நடந்து ஆடிக்கொண்டிருக்கும் படகு வீட்டிற்கு நடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது நிச்சயம் முடியாது என்றே அவர் மனைவியும் கூறினாள். ஆனால் நான் அவளிடம் கெஞ்சினேன். பலகைகள் நல்ல திடமாக இருக்கின்றன என்று உறுதியளித்தேன். ஒரு பக்கத்தில் பிடித்துக்கொண்டு நடக்க கம்பிகள் இருக்கிறதென்றும், இன்னொரு படகு அருகில் சென்றாலேயொழிய இந்தப் படகுவீடு ஆடாது என்றும், படிக்கட்டிற்கு அருகிலேயே நங்கூரமிட்டிருப்பதால் உள்ளே நுழைவது சுலபமானது என்றெல்லாம் கூறி விளக்கினேன். அன்று நதி அமைதியாக இருந்ததால் எதுவும் விபத்து குறித்து பயம்கொள்ளத் தேவையிருக்கவில்லை. டாக்டரின் மனைவி பாதி சமாதானம் ஆனவள் போல் டாக்டர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவார் என்று பாதி உறுதியளித்தாள்.

நாங்கள் ஜன்னல் வழி அவரை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவர் பலகைகளில் நொண்டியவாறு நடந்து வந்து வாசலில் தயங்கி நின்றதைப் பார்த்தோம். பலகைகள் எத்தனை உறுதியாக இருக்கின்றன என்று நான் அவரிடம் நடந்து சென்று காண்பித்தேன். அவர் நொண்டியபடி நடந்து வந்தவாறே மெதுவாக மீண்டும் மீண்டும் முனகினார்: “நான் போரில் ஊனமுற்றவன். படகுவீட்டில் வசிப்பவர்களுக்கெல்லாம் என்னால் மருத்துவம் பார்க்க இயலாது.” ஆனால் அவர் நதியில் ஒன்றும் விழுந்துவிடவில்லை. அந்த சிறிய அறைக்குள் நுழைந்தார்.

எலிக்கு சில விஷயங்களை விளக்கும் கட்டாயம் ஏற்பட்டது. தான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து பயந்திருக்கிறாள். அவள் சகோதரி முன்பு எப்போதோ சொன்னதை நினைத்து சுத்தமான அமோனியாவை எடுத்துக்கொண்டதால் இப்பொழுது தீராத வயிற்று வலியால் அவதிப்படுகிறாள்.

டாக்டர் தலையை ஆட்டிக்கொண்டார். எலி அவள் ஆடையைத் திறந்து காண்பிக்க வேண்டியிருந்தது. அவள் தன் மெல்லிய கால்களைத் தூக்கியிருப்பதைப் பார்க்க வினோதமாக இருந்தது.

அவள் ஏன் என்னிடம் கூறவில்லை என்று அவளிடம் கேட்டேன்.

“மேடம் என்னை இங்கிருந்து துரத்திவிடுவீர்களோ என்று பயந்தேன்.”

“இல்லை. மாறாக, தெரிந்திருந்தால் நான் உதவி செய்திருப்பேன்.”

எலி வலியில் முனகினாள். டாக்டர் அவளிடம், “உன் செய்கையால் உனக்கு மோசமாக தொற்று உண்டாகியிருக்கக்கூடும். இப்பொழுது இது வெளியே வரவில்லையென்றால் நீ மருத்துவமனைதான் செல்ல வேண்டும்.”

“ஓ, இல்லை. என்னால் முடியாது. என் சகோதரிக்கு இதுகுறித்து தெரிந்தால் அவள் என் மீது கோபமடைவாள். என் அன்னையிடமும் இதைக் கூறிவிடுவாள்.”

“ஒருவேளை இது தானாகவே மொத்தமாக வெளியே வந்தாலும் வந்துவிடலாம். ஆனால் என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும். இந்த மாதிரி விஷயங்களில் தலையிட எனக்கு விருப்பமில்லை. என் தொழிலில் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னுடைய நல்லதிற்காகவே. எனக்குக் கொஞ்சம் நீரும் துவாலையும் கொண்டு வா.”

அவர் ஜாக்கிரதையாகக் கைகளைக் கழுவிக்கொண்டு தான் எவ்வாறு மீண்டும் திரும்பி வர இயலாது என்பதையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தார். அவளுக்குத் தொற்று உண்டாகியிருக்கக்கூடாது என்றும் நினைப்பதாகக் கூறினார். எலி அவளது படுக்கையின் மூலையில் குறுகி உட்கார்ந்தவாறு டாக்டர் தன் பொறுப்புகளிலிருந்து கை கழுவுவதைக் கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் போர் வீரர் எலியை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. அவர் நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்தின: “நீ ஒரு வேலைக்காரிதான். சின்ன வேலைக்காரப் பெண். மற்ற வேலைக்காரிகளைப் போலவே நீயும் பிரச்சனையில் மாட்டிகொண்டாய். இது முழுவதும் உன் தவறுதான்.” இப்பொழுது அவர் வெளிப்படையாகவே கூறினார், “வேலைக்காரிகளெல்லாம் எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கு பிரச்சனை கொடுப்பவர்கள்.”

கைகளைக் கழுவி முடித்தவுடன் அவர் மெதுவாக இறங்கி நொண்டியவாறு உறுதியாக இறுதி விடை பெற்றுக்கொண்டு பலகைகளில் நடந்து சென்றுவிட நான் அறைக்குத் திரும்பி எலியின் படுக்கையில் அமர்ந்தேன்.

“நீ என்னிடம் உண்மையைக் கூறியிருக்க வேண்டும். நான் உதவி செய்திருப்பேன். சரி இப்பொழுது அமைதியாகப் படு. நான் கவனித்துக்கொள்கிறேன்.”

“என்னை மருத்துவமனைக்கு அனுப்பாதீர்கள். என் அன்னை கண்டுபிடித்துவிடுவார். நீங்கள் சென்றுவிட்டதால், நான் இரவுகளில் தனிமையில் இருக்க மிகவும் பயந்துவிட்டதால்தான் இது நடந்தது. பாலத்திற்கு அடியில் இருந்த ஆண்களை நினைத்து நான் மிகவும் பயந்துபோயிருந்தேன். ஆகையால் என் ஆடவனை இங்கு தங்க வைத்திருந்தேன். இவ்வாறுதான் என் பயத்தினால் இது நிகழ்ந்தது.”

எலிக்கு இப்படித்தான் இது நிகழ்ந்தது. பயத்தில் எலி ஓடி பொறிக்குள் செல்ல அது அங்கு மாட்டிக்கொண்டுவிட்டது. எலிக்குத் தெரிந்த காதல் இதுதான், இருளில், பயந்த நொடியில்,

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அது அத்தனை பெறுமானம் இல்லை மேடம். எனக்கு அதில் என்ன இருந்தது என்றே புரியவேயில்லை. அதற்குப் பிறகு இத்தனை பிரச்சனைகளை சந்திக்கவும், இப்படி மாட்டிகொள்ளவும் என்ன இருக்கிறது அதில்? அப்படியெல்லாம் ஒன்றும் அது பெரிய அனுபவமாக இல்லை.”

“அமைதியாகப் படு. ஜூரம் இருக்கிறதா என்று பிற்பாடு வந்து பார்க்கிறேன்.” சில மணி நேரங்கள் கழித்து எலி என்னை அழைத்தாள். “அது நடந்துவிட்டது மேடம். நடந்துவிட்டது.”

எலிக்குக் காய்ச்சல் இருந்தது. அது அதிகரித்துக்கொண்டே இருந்தது. தொற்றும் இருந்தது, ஆனால் எந்த மருத்துவரும் அந்தப் படகுவீட்டிற்கு வரமாட்டார்கள். என்ன பிரச்சனை என்று தெரிந்தவுடனேயே அவர்கள் வர மறுத்தனர். அதுவும் ஒரு பணிப்பெண்ணிற்காக. இவ்வாறு அடிக்கடி நடந்தது. பிரச்சனையில் சிக்காமல் இருக்க பணிப்பெண்கள்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

மருத்துவமனைக்கு அவளைக் கொண்டு செல்ல என்னை அவள் அனுமதித்தால் அவள் சகோதரியிடம் ஏதாவது காரணம் கூறி நான் சமாதானப்படுத்துவதாக உறுதியளித்தேன். அவள் ஒப்புக்கொண்டதால் அவளது பயணப்பையைத் தயார் செய்ய உதவ முன் வந்தேன். பை என்று கூறியதுமே எலியின் முகம் வெளிறியது. உடல் அசையக் கூட தெம்பில்லாமல் முன்னெப்பொழுதை விடவும் பயந்து காணப்பட்டாள். அவள் கட்டிலுக்கு அடியிலிருந்து பெட்டியை வெளியே எடுத்து படுக்கையில் அவளுக்கருகே வைத்தேன்.

“உன் ஆடைகள் எங்கு இருக்கின்றன என்று சொல். உனக்கு சோப்பு, பல் துலக்கி, துவாலை எல்லாம் தேவைப்படலாம்…”

“மேடம்…” எலி தயங்கினாள். அவளுக்குப் பக்கத்தில் இருந்த சிறிய இரவு மேஜையைத் திறந்தாள். கடந்த மாதத்தில் நான் தொலைத்து விட்டதாக நினைத்த பொருட்களையெல்லாம் அவள் என்னிடம் ஒப்படைத்தாள். என்னுடைய சோப்பு, பல் துலக்கி, துவாலை, என் கைக்குட்டைகளில் ஒன்று, பவுடர் அடித்துக்கொள்ளும் பஃப் ஒன்று. அத்தனைப் பொருட்களைப் பார்த்ததும் புன்னகைத்தேன். மேஜையறையிலிருந்து என்னுடைய இரவு உள்ளாடை கவுன்களில் ஒன்றும் வந்தது. நான் காணாததுபோல் நடித்தேன். எலியின் கன்னங்கள் ஜூரத்தில் சிவந்திருந்தன. அவள் தன்னுடைய பையை மிகக் கவனமாக அடுக்கினாள். தன்னுடைய ஆணிற்கு எழுதுவதற்கு எழுத்தேடு, பின்னல் சாதனங்களை எடுத்துக்கொண்டாள். அவள் விரும்பிய புத்தகம் ஒன்று எங்கிருக்கிறது என்று என்னைப் பார்க்கச் சொன்னாள். அது பாலகர் இதழ். அதில் முதல் பத்து பக்கங்கள் இற்றுப் போயிருந்தன; ஆடு, மாடு மற்றும் குதிரைகளின் கதைகள் இருந்த பக்கங்கள். பல வருடங்களாக அவள் இதே கதைகளையே மீண்டும் மீண்டும் வாசித்திருக்க வேண்டும். அவள் அணிந்திருந்த ஓய்வறைக்கான காலணிகளைப் போலவே அவை வெளுத்து, இற்றுப் போயிருந்தன. நான் எலியிடம் அவளுக்கு ஒரு புது ஜோடிக் காலணிகள் வாங்கித் தருகிறேன் என்றேன். மெத்தைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த கையடக்கப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாள் எலி.

“கடவுளே, உனக்கு இதுவரை யாருமே எதுவுமே வாங்கித் தந்ததில்லையா?”

“இல்லை, மேடம்.”

“நான் ஏழ்மையிலும் நோய்மையிலும் இருந்திருந்தால் என் தேவைக்கு நீ எனக்குக் காலணிகள் வாங்கித் தந்திருக்க மாட்டாயா?”

வேறெதையும் விட இதைக் கேட்கவே எலிக்கு பயமாக இருந்தது. இத்தகைய தலைகீழ் மாற்றத்தை அவளால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

“இரண்டும் ஒன்றல்ல,” என்றாள்.

எலியை படகு வீட்டிலிருந்து சுமந்தவாறு வெளியே கொண்டு சென்றேன். பார்ப்பதற்கே மிகவும் சிறியதாக இருந்தாள். காகிதத்தில் சுற்றி வைக்கப்பட்டிருந்த தொப்பியை அணிந்து கொள்ளவும், அவளுடைய எலிக் கண்களின் நிறத்தில் இருந்த கம்பளியால் ஆன அங்கியை  அணிந்துகொள்ளவும் விரும்பினாள்.

மருத்துவமனையில் அவளை அனுமதிக்க மறுத்தனர்.

யார் அவளுக்கு இதுவரை வைத்தியம் பார்த்த மருத்துவர்? யாருமில்லை. திருமணமானவளா? இல்லை. யார் அவளுக்குக் கருக்கலைப்பு செய்தது? அவளேதான். இதை அவர்கள் சந்தேகித்தனர். வேறொரு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுரை வழங்கினர். எலிக்கோ உதிரப்போக்கு அதிகரித்தது. காய்ச்சலும் சேர்ந்துகொண்டு அவளைப் படுத்தியது. நான் அவளை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கே இருந்த பெஞ்சில் அவளை அமர வைத்தனர். எலி அவளுடைய கைப்பையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள். அவளை அவர்கள் தொடர் கேள்விகளால் தாக்கினர். அவள் எங்கிருந்து வருகிறாள்? அவள் முதலில் வேலை செய்த இடம் எது? எலி பலஹீனமாக பதிலளித்தாள். அதற்குப் பிறகு? அவளால் முகவரியை நினைவுகூர இயலவில்லை. இது கிட்டத்தட்ட கேள்வி/பதில் சடங்கைப் பத்து நிமிடங்கள் தாமதப்படுத்தியது. அதற்கு முன்பு? எலி மீண்டும் பதிலளித்தாள். தன் வயிற்றின் மீது ஒரு கையை வைத்துக்கொண்டாள்.

“இந்தப் பெண் ரத்தம் இழந்துகொண்டிருக்கிறாள்,” நான் சத்தம்போட்டேன். “இந்தக் கேள்விகள் எல்லாம் தேவைதானா?”

ஒருவேளை மூன்றாவது முகவரி நினைவில் இல்லையென்றாலும் அவள் அதற்குப் பிறகு எங்கு வேலை செய்தாள் என்பது நினைவிருக்கிறதா? எத்தனை காலம்? எப்பொழுதும் இரண்டு வருடங்கள்தான். அது ஏன்? அங்கிருந்த ஆண் கேட்டான். ஒரு வீட்டில் இரண்டு வருடங்களுக்கு மேல் வேலை செய்யாதது ஏதோ ஆச்சரியமானதும் சந்தேகத்திற்கும் உரிய விஷயம் என்பது போல் அவன் கேள்வி இருந்தது. ஏதோ அவளிடம்தான் குற்றம் இருந்ததுபோல்.

“நீங்கள் தானே கருக்கலைப்பு செய்தது?” என் பக்கம் திரும்பி அவன் கேட்டான்.

அந்த பெஞ்சில் குருதி கசிய அமர்ந்திருந்த பெண் அங்கிருந்த யாருக்கும் பொருட்டல்ல. சிறிய, வட்டமான, ஈரம் கசியும் கண்கள், கழுத்தைச் சுற்றியிருந்த பழைய சிறிய கம்பளித் துணி, அவளிடமிருந்த மிரட்சி. புத்தம் புதிய தொப்பி, கம்பியைக் கைப்பிடியாகக் கொண்ட கிழிந்த பை. எண்ணெய் படிந்த கைப்புத்தகம், பாலகர் இதழின் பக்கங்களுக்கு இடையில் பாதுகாப்பாக பொதிந்து வைக்கப்பட்ட அவளுடைய ஆடவன் சிப்பாயின் கடிதங்கள். பயத்தில் இருளில் உற்ற இந்தக் கருவும் கூட. எலி ஒன்று பொறியில் சிக்கும் பயத்துடன் உற்ற கரு.

*** *** ***

குறிப்பு;

The Mouse – Anais Nin (அநயிஸ் நின்)

தமிழில்: விலாசினி

இக்கதை ‘Under a Glass Bell’ என்ற அநயிஸ் நின்-இன் 1944-ஆம் வருடம் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றது. இதன் ஆங்கிலத் தலைப்பு The Mouse. இக்கதையின் காப்புரிமை © The Anais Nin Trust –  சேரும்.

தமிழ் மொழிபெயர்ப்பிற்காக இக்கதை கீழ் வரும் மின் இணைப்பில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

https://www.shortstoryproject.com/story/the-mouse/

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button