
1,முன்மதியப் பொழுதுகள்
******
இந்த முன்மதியப் பொழுதுகளின் வெயில் அவ்வளவு உவப்பானதாக இல்லை..
முன்மதியப் பொழுதுகளின் வெயில் பதட்டத்தையும் சோர்வையும் ஒருங்கே தருகிறது.
பணி செல்லும் வாகன கூட்டம் வடிந்து நெரிசலற்று போயிருக்கும் இந்த நகரத்தின் வீதியில் ஒரு வேண்டப்படாத வெம்மையாக பரவுகிறது.
பள்ளியின் இரண்டாம் பீரியட் தொடங்குகிறது..
பணியிடத்தின் இரண்டாம் மணிக்கூறு ஆரம்பித்துவிட்டது..
தொழிற்சாலையின் வேலை நேர சங்கு ஒன்று ஊதுகிறது..
சுவாரஸ்மற்ற மனிதர்கள் பதட்டமின்றி அசிரத்தையாக வீதியை மெதுவாக கடந்து செல்கின்றனர்..
நிதானமாக கிளாஸ் கழுவி பாய்லரின் அரிப்பை ஒரு தட்டு தட்டி கொதிக்கும் பாலை குறைந்த சிம்மில் வைக்கும் மாஸ்டரிடம் நிதானித்து ஒரு டீ சொல்கிறேன்..
முன்மதியப் பொழுதுகளின் வெயில் இரக்கமற்றதாய் தோன்றுகிறது..
காலைப்பனி இந்நேரம் ஆவியாகியிருக்கும்..
கனவுகளின் பால்யம் வடிந்த முப்பது வயதுகளின் பொறுப்பும் ஏமாற்றமுமான யதார்த்தம் போலிருக்கிறது இந்த முன்மதியம்
இந்த முன்மதியப் பொழுதுகளின் வெயில் அவ்வளவு உவப்பானதாக இல்லை..
*******************
2,அலைக்கழிப்பு
***
யாருமற்ற துருவப் பெருவெளியில் உலவும் இந்த பனிக்காற்றில் ஒளிந்திருக்கிறது ஒரு அலைக்கழிப்பு.
துளித்திரள்வெளியென அலைவுறும் இந்த கடலில் கரைந்திருக்கிறது அலைக்கழிப்பு
அலைக்கழிப்பு என்பது நிர்சலனம்
அலைக்கழிப்பு என்பது பிரபஞ்சத்துக்கானதல்ல
அலைக்கழிப்பு என்பது ஆத்மாவின் சாபம்
அலைக்கழிப்பு என்பது ஒன்றுமற்ற நிகழ்தகவு
அலைக்கழிப்பு என்பது தியானமல்ல..
பிரபஞ்ச தியானத்தின் நித்யமுமல்ல
அசைவின்மையே பிரபஞ்ச தியானம்
அசைவின்மையே நிலைத்திருத்தல்..
அலைக்கழிப்பு மனிதனுக்கானது
அவனது மெல்லிய பலவீனமான ஆத்மாவுக்கானது..
அதன் பொறுமையற்ற தகிப்பு விடுதலையின் பொருட்டு
அலைவுறும் இந்த பனிக்காற்று உறைவதுண்டா..
அது உறைந்து மண்ணிறங்கி தியானிக்கும் போது தொடுவானம் வரை நிலைத்த நிர்சலனம் வியாபிக்கத் தொடங்குகிறது.
***