
“வாங்க ஸார், நல்லா இருக்கீங்களா? அம்மா நல்லா இருக்காங்களா?”
அவன் வருகையை எதிர்பார்த்திருந்த என் முகம் என்னை அறியாமல் மலர்ந்தது.
“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?”
“அப்படியே போகுது ஸார். இருங்க, புதுசா வந்திருக்கற ப்ரொஃபைல்ஸ் காட்டறேன்.”
அருகிலிருந்த அலமாரியிலிருந்து மணப்பெண்களுக்கான தடித்த கோப்பை எடுத்துக் கொடுத்தேன். அந்த அலமாரி முழுக்க அது போல பத்து கோப்புகளாவது இருந்தன. எல்லாம் வரன் தேடும் ஆண், பெண் சுயவிவரங்கள், ஜாதகங்கள், புகைப்படங்கள்.
“மேலாக இருக்கற பத்து அல்லது பதினோரு ப்ரொஃபைல்ஸ் மட்டும் பாருங்க. மத்ததெல்லாம் நீங்க ஏற்கனவே பாத்ததுதான். ஏதாவது ஓகேன்னா சொல்லுங்க.”
கோப்பை அவன் கையில் திணித்து விட்டு வேலையை கவனிக்கத் தொடங்கினேன். புதிதாகப் பதிவு செய்திருந்த ஆண், பெண் விவரங்களைக் கணிணியில் ஏற்றிக் கொண்டிருந்தேன். அதோடு ஜாதகம், படங்களை ஒளி வருடி இணைக்க வேண்டும்.
அவன் கையிலிருந்த கோப்பை மேலோட்டமாக மேய்ந்து கொண்டே ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பதை உணர்ந்தேன். நான் கண்கொட்டாமல் ரசிக்கும்படி அத்தனை அழகி எல்லாம் இல்லை. என் மதிப்பீட்டில் நான் சுமாரான தோற்றம்தான். ஆனாலும் ஓர் ஆணின் ஆழ ஊடுருவும் பார்வையின் அர்த்தம் புரிபடாத பெண் இல்லை.
நிமிர்ந்து “என்ன ஸார், ஏதும் ப்ரொஃபைல் பிடிச்சிருக்கா?” என்றேன். ‘உன்னைத்தான் பிடிச்சுருக்கு’ என்று அவன் சொல்லக்கூடும் என எண்ணிக் கொண்டேன்.
கடந்த இரு மாதங்களாகவே அவன் எங்கள் மையத்தில் தரப்படும் எந்தப்பெண்ணின் புகைப்படத்தையும் தேர்வு செய்வதில்லை. சும்மா பேருக்கு வந்து விவரங்களைப் பார்த்து விட்டு எதுவும் பிடிக்கவில்லை என்று சென்று விடுவான். பின் எதற்கு நேரம் செலவழித்து, மெனக்கெட்டு வாரா வாரம் ஒரு மணி நேரம் அமர்ந்து கோப்புகளை மேய்கிறான் என யோசித்தபோதுதான் மனம் ஆர்வக்கோளாறாய் ஆலோசித்தது.
அவன் என்னை பார்க்கவே வருவதாக நானே முடிவுக்கு வந்து விட்டேன். அப்படிப் பரஸ்பரம் ஈர்க்கும் வண்ணமான உரையாடலோ, செயல்களோ எங்களுக்குள் எதுவும் நடந்ததில்லை. ஆனாலும் சமீபமாக அவனது பார்வையில் ஒரு செய்தி இருப்பதாய் எனக்கு தோன்றத் தொடங்கி இருந்தது. அது மிகை கற்பனையாகவும் இருக்கலாம்.
இன்னும் சொன்னால் ஒரு மோசமான சண்டைதான் எங்கள் முதல் சந்திப்பில் நடந்தது.
‘மூன்று முடிச்சு திருமணத் தகவல் மையம்’ என்ற எங்கள் அலுவலகம் ஒரு பழைய, பெரிய வீட்டில் இயங்கி வந்தது. ஊரின் ஓரமாக இருந்த எங்கள் பஞ்சாயத்துப் பகுதி கிட்டத்தட்ட கிராமம்தான். அங்கு இது போன்ற திருமண மையம் என்பதே இது மட்டும்தான். படித்த புதிய தலைமுறை தவிர மற்றவர்களுக்கு கணினிப் பயன்பாடு பற்றிக் கூடப் பெரிதாய்த் தெரியாது. எங்கள் முதலாளிக்கு எழுபது வயது. ஒற்றை ஆளாய்த் திருமண தரகு வேலையை இளமையில் ஆரம்பித்தவர், இப்போது இதை ஓர் அலுவலகமாக்கி இருபத்து ஐந்து பேர் வேலை செய்யுமளவு வளர்ந்திருக்கிறார்.
பெரிய படிப்போ, வசதியோ இல்லாத பெண்கள்தாம் இங்கு எல்லாரும். பெரும்பாலும் எட்டாவது முதல் பனிரெண்டாவது வரை படித்தவர்கள். டிகிரி முடித்தோர் இரண்டு பேர்தான். இதில் ஐந்து பேர் திருமணமானவர்கள்; பத்தாண்டுகளாக இங்கு பணியில் உள்ளனர். எங்களுக்குப் பத்தாயிரம் சம்பளம். அவர்களுக்குப் பன்னிரெண்டாயிரம்.
ஏராள அறைகள் கொண்ட எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு அறை வாசலிலும் ஒரு சிறிய போர்டு மாட்டப்பட்டு இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு ஜாதிப் பெயர் – ஐயர், கவுண்டர், தேவர், வன்னியர், எஸ்சி/எஸ்டி, விஸ்வகர்மா, நாயுடு, நாடார், செட்டியார், கிறிஸ்தவர், முஸ்லீம், மறுமணம் என (மறுமணத்தில் பெரிய கட்டுப்பாடுகள் இராது என்பதால் அது தனி). ஒவ்வொரு அறையிலும் என் போலவே ஓர் ஊழியை. நான் ஓர் இடைநிலை ஜாதிக்கான பொறுப்பில் இருந்தேன். ஆண்ட பரம்பரைக் கதைகள் கொண்ட சாதி. அரசு அதைப் பிற்படுத்தப்பட்ட சாதி என்று வரையறுக்கிறது. இங்கு வேலை செய்யும் பிராமணப் பெண் “அவாள்ளாம் சூத்திரர்” என்றாள் ஒரு முறை.
எங்கள் அலுவலகத்தில் புதிதாக எவர் நுழைந்தாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி – “என்ன காஸ்ட்டுங்க?” ஜாதியை இப்படிக் கூச்சமில்லாமல் கேட்பதும் சொல்வதும் இங்கு சகஜம் என்பது கேள்வியின் தொனியில் தெரிந்து விடும். வரும் பதிலுக்கேற்ப அவர் செல்ல வேண்டிய அறையும் தரப்படும் மரியாதையும் தீர்மானிக்கப்படும்.
அப்படி ஆறு மாதங்களுக்கு முன் என் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அவனது பெற்றோர். அவன் பெயர் பிரபு. மகனின் புகைப்படத்தைச் சுற்றி மஞ்சள் குங்குமம் எல்லாம் இட்டுக் கொண்டு வந்திருந்தனர். நல்ல திருத்தமான முகம். புகைப்படத்தில் அவனுக்கு இருபத்து ஐந்து வயதுதான் சொல்ல முடியும். விவரத்தில் இருபத்தொன்பது என்றிருந்தது. பழைய புகைப்படத்தைத்தான் பெரும்பாலானவர்கள் தருகிறார்கள்.
ரியல் எஸ்டேட் தொழில். மாத வருமானம் இரண்டு லட்சம் எனக் குறிப்பிட்டிருந்தனர். அடுத்தபடியாக படிப்பு ப்ளஸ் 2 என்று இருந்ததைப் பார்த்ததுமே எனக்குத் தெரிந்து விட்டது. இவருக்கான வரன் இங்கு தற்போது கையிருப்பு இல்லை. ஆனால், அப்படி நான் அவர்களிடம் சொல்ல முடியாது. வரும் புது வாடிக்கையாளரை பணம் கட்டி பதிவு செய்ய வைத்தே ஆக வேண்டும். அதற்கான ஆர்வத்தை, நம்பிக்கையை பொய்களின் வழியும், தேன் ஒழுகும் பேச்சிலும் தந்தாக வேண்டும். புதிதாக ஒரு வாடிக்கையாளர் உள்ளே வந்து விட்டுப் பதிவு செய்யாமல் போனால் அந்தப் பிரிவுக்கான ஊழியருக்கு வார இறுதி மீட்டிங்கில் சிறப்பு கவனிப்பு இருக்கும்.
“ஏன்மா ஒரு கஸ்டமரைப் பதிவு பண்ண வைக்கக்கூட முடியலைன்னா அப்பறம் எப்படி நீங்க அவங்களுக்குக் கல்யாணம் வரை பேசி முடிப்பீங்க? கொஞ்சமாவது வாங்கற சம்பளத்துக்கு உண்மையா இருங்க. எட்டாவது ஃபெயிலான உனக்கு வேற எங்கயாச்சும் வேலை கிடைக்குமா சொல்லு? காலைல ஆடி அசைஞ்சு பத்து மணிக்கு வர வேண்டியது, ஆறு மணி ஆனா பையத் தூக்கிட்டுக் கிளம்ப வேண்டியது. பேங்க் வேலைனு நினைப்பு. இங்க வேலை போட்டுக் குடுத்து இந்த இந்த ஜாதிக்கு இன்ச்சார்ஜ்னு ஒரு பதவியும் கொடுத்த எனக்கு உங்களால நட்டம்தானேம்மா?”
எங்கள் தாழ்வுணர்வையும் நன்றியுணர்வையும் குற்றவுணர்வையும் தன் பேச்சின் மூலம் தூண்டி ஒரு கொலைக் குற்றவாளி போல் நிற்க வைத்திருப்பார். அதில் கூனிக் குறுகி போகும் ஒரு பெண்ணைக் கண்டு மற்ற பெண்கள் கமுக்கமாகச் சிரிப்பது இன்னும் நோகடிக்கும். சிரித்தவள் அடுத்த வாரம் கூனிக் குறுகப் போவதுதான். அல்லது போன வாரமே நடந்திருக்கும். ஆனாலும் அடுத்தவளுக்கு நிகழ்கையில் ஓர் ஆனந்தம். அந்த மீட்டிங்கிற்குப் பயந்தே நாங்கள் ஏதாவது சில்லறைச் சதி வேலைகள் செய்து வரும் வாடிக்கையாளரைப் பணம் கட்ட வைத்து விடுவோம்.
“தம்பிக்குத் தகுந்த புள்ளைக இருக்கா சாமி” அந்த அம்மாள் அப்பாவியாய் கேட்டார்.
“இருக்காங்கம்மா. நான் சில ஃபோட்டோலாம் காட்டறேன். நீங்க பாருங்க…”
நான்கைந்து பெண்களின் புகைப்படங்களை எடுத்துக் காட்டினேன். அவர்கள் பட்ட மேற்படிப்பு படித்த பெண்கள். எங்கள் பகுதி மட்டுமல்லாமல் வெளியூர் ஆட்களும் இங்கு பதிவு செய்வது உண்டு. பெண்கள் பெரும்பாலும் ஒரு டிகிரியாவது முடித்து விடுகின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் ஐடி துறை மணமகன்கள் அல்லது மருத்துவம். ஆனால் நான் அந்த அம்மாவிடம் வாய் கூசாமல் பொய் சொன்னேன்
“இந்தப் பொண்ணு பத்தாவது படிச்சுருக்கு.”
“இந்தப் பொண்ணு பன்னெண்டாவது…”
“இந்தப் பொண்ணு ஒம்பதாவது ஃபெயில்.”
ஒன்பதாவது ஃபெயில் என நான் கூறிய பெண் சித்தா டாக்டர். இப்படிப் பொய்யாகக் காட்டும் பெண்களின் ஊர் தொலைவில் இருக்கக் கூடியதாய்த் தேர்ந்து கொள்வோம். அப்போதுதான் சுலபமாய்க் கண்டுபிடிக்க மாட்டார்கள். இப்பொய்களில் என் மனசாட்சிக்கு எந்த உறுத்தலும் இல்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் பழகி விட்டது. என்ன செய்தேனும் ஏற்ற பெண்கள் இருப்பதாய்க் காட்டி அவர்களைப் பணம் கட்ட வைக்க வேண்டும் என்பதே எங்கள் பணிக்கான அறம், தர்மம், நீதி எல்லாம்.
சித்தா டாக்டரின் ராசி, நட்சத்திரம், ஜாதகத்தை மேலோட்டமாகப் பார்த்த அந்த அம்மாள் “இந்தப் பொண்ணு பொருத்தம் வரும்னு நினைக்கறேன். எங்க ஜோசியர் கிட்ட பொருத்தம் பார்த்துட்டு சொல்றோம். பொண்ணு வீட்டுல யார்கிட்ட பேசனும்?”
“கண்டிப்பா சொல்றோம்மா. அதுக்கு முன்னாடி நீங்க ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க. ஆயிரம் ரூபா வருசத்துக்கு ஒருக்கா கட்டினாப் போதும். இந்த வருஷமே பொண்ணு அமைஞ்சுரும், அநேகமா இந்தப் பொண்ணே கூட அமையலாம். அமையாட்டியும் மாசா மாசம் உங்களுக்கு தொடர்ந்து பொருத்தமா வர பொண்ணுக விவரங்களை அனுப்பிட்டே இருப்போம். நீங்க எங்க வெப்சைட்லயும் பாத்துக்கலாம்.”
“அதுல எல்லாம் பாக்கத் தெரியாதும்மா. நீங்க தபால் அனுப்பிருங்க.”
“சரிங்கம்மா. நீங்க இப்போ பணம் கட்டிடறீங்களா?”
“கட்டறோம்மா. கட்டினதும் பொண்ணு வீட்ல பேசிருவீங்களா?”
“நீங்க பொண்ணு ஃபோட்டோ, விவரம் பார்த்த மாதிரி அவங்களும் உங்க பையன் ஃபோட்டோ, வேலை, படிப்பெல்லாம் பாக்கணும்லம்மா. இன்னிக்கே அவங்களுக்கு உங்க பையனோட டீடெயில்ஸ் அனுப்பிருவோம். அவங்க பார்த்துட்டு ஓகே சொன்னதும் உங்களுக்குத் தகவல் சொல்லுவோம்.” – என் பேச்சில் துளி பிசிறில்லை. தினம் சொல்லும் பொய்களுக்கு நம் முகம் மாறுவதில்லை. பதறுவதில்லை. சிரிப்பும், அக்கறையுமாக முகத்தை வைத்துக் கொண்டு அதை இயல்பாகச் செய்ய முடிகிறது.
பணம் கட்டி ஃபோட்டோ நகலை வாங்கிக் கொண்டனர். கைப்பட எழுதித் தரும் படிவத்தில் பெண்ணின் பெயர், படிப்பு, ஊர் பொய்யாய் நிரப்பிக் கொடுத்தேன்.
“சீக்கிரம் அண்ணனுக்கு நல்ல பொண்ணா அமையணும்னு வேண்டிக்கோம்மா.”
அப்போதுதான் அவன் புகைப்படத்தில் அழகை ரசித்து விட்டு வைத்திருந்த எனக்கு அந்த ‘அண்ணன்’ மெல்லிய சிரிப்பைத் தந்தது. “கண்டிப்பா அமையும்மா” என்றேன்.
“வரேன் சாமி” என்ற பிரபுவின் அப்பாவிடம், “சரிங்கப்பா” என்றேன். இதெல்லாம் சகஜமாகி விட்டது. அம்மா, அப்பா, அண்ணா அக்கா என எல்லாரையும் ஒரு உறவைச் சொல்லி அழைப்பதன் மூலம் வாடிக்கையாளருடன் நெருக்கம் வருவது மட்டுமின்றி, வரன் அமையாத போது கோபமாய் வருபவர்களை “வாங்கம்மா, ஏன் வெய்யில்ல வந்தீங்க. முதல்ல தண்ணி குடிங்க” என்ற வார்த்தைகள் தணித்து விடுகின்றன.
இரண்டு நாட்களில் பிரபுவின் பெற்றோர் திரும்ப வந்தனர். “ஒன்பது பொருத்தம் இருக்காம். பொண்ணு வீட்ல என்ன சொன்னாங்க?” – ஜோசியர் கொடுத்த தாளை நன்னடத்தைச் சான்றிதழ் போல பெருமிதமாக நீட்டியபோது பாவமாய் இருந்தது.
“அவங்களுக்கு அன்னிக்கே போஸ்ட் பண்ணிட்டோம்மா. இன்னிக்குதான் கைல கிடைச்சிருக்கும். நாளைக்கு பாத்துட்டு சொல்வாங்க.”
“ஒருக்கா நாங்க அவங்ககிட்ட பேசிக்கவா?”
“இல்லம்மா… பொண்ணு வீட்ல அப்படிலாம் உடனே பேச மாட்டாங்க. பொருத்தம்லாம் பாத்துட்டு சரின்னா கண்டிப்பா சொல்வாங்க.”
அந்த ஒரு வாரத்தை அப்படியும் இப்படியுமாக ஓட்டினேன். இதுவும் வாடிக்கைதான். இறுதியில் பெண் வீட்டில் பொருத்தம் இல்லை என்றதாகச் சொல்லி விடுவோம். அதற்கும் அடம் பிடித்தால், பையனைப் பொண்ணுக்கு பிடிக்கவில்லை என்ற இறுதி ஆயுதம் எறிவோம். அதில் பெரும்பான்மை பெற்றோரோ அந்த பையனோ காயம் பட்டு விடுவர். தன்னை / தன் மகனை ஒருத்தி பிடிக்கவில்லை என்று சொல்வதா? அவளுக்கென்ன அத்தனை திமிர்? வேறு பெண் பார்ப்போம் என்று ஒதுக்கி விடுவர்.
முறைப்படி இதே வரிசையில் காய் நகர்த்தி அந்தப் பேச்சை முடித்து வைத்தேன்.
படித்த, வசதி உள்ள பல ஆண், பெண்களுக்கு எங்கள் மையம் மூலம் திருமணங்கள் நடந்துள்ளது. அப்படி அமையும் போது ஒரு சிறுதொகையை அமைத்துக் கொடுத்த ஊழியர்களுக்குச் சிலர் தருவது உண்டு. நான் வேலைக்குச் சேர்ந்த ஈராண்டுகளில் பத்து திருமணங்களாவது என் பிரிவில் நடந்திருக்கும். அதில் நான்கைந்து பேர் ஆயிரம், இரண்டாயிரம் வரை தனிப்பட்டு எனக்கு தந்ததுண்டு. பத்தாம் வகுப்பு வரையே படித்திருந்த எனக்கு கணினிப் பயிற்சி தந்து வேலையும் தந்த இந்நிறுவனம் கடவுளாகத்தான் தெரிந்தது. மாலை ஆறு மணிக்குக் கிளம்பி விடலாம். சொற்பச் சம்பளமாக இருந்தாலும் பெண் பிள்ளைகள் நேரத்தோடு வீடு திரும்புவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக இருந்தது பலரும் இங்கு தொடர முக்கியக் காரணம்.
நம் முயற்சியால் திருமணம் நடக்கும்போது மனநிறைவு அடைந்ததெல்லாம் ஆரம்ப நாட்களில்தான். இப்போதெல்லாம் ஒரு திருமணம் நடந்தால் அவர்கள் வசதிக்கேற்ப தரப் போகும் தொகையை கணக்கிட்டு, எப்படியேனும் பேசி அமைக்க முனைவது வாடிக்கை ஆயிற்று. ஆனாலும் பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்த வண்ணம் இல்லாத ஆண் வாடிக்கையாளர்களிடம் இப்படித்தான் புளுக வேண்டி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த குற்ற உணர்வெல்லாம் நாளாக நாளாகக் காணாமல் போனது.
பல வருடங்களாக வரன் பார்த்து வந்த ஓர் இடைநிலை ஜாதி அம்மாவிடம் “அம்மா, வேற ஜாதில ஒரு பொண்ணு ஜாதகம் இருக்கு, பாக்கறீங்களா?” என்று கேட்டதற்கு தீயை மிதித்ததைப் போலக் குதித்தார். “எங்க வம்சம் பத்தி தெரியுமா? எப்படி நீ இப்படி கேட்கலாம்? இப்பவே உங்க முதலாளிகிட்ட சொல்றேன்.” என்று கொதித்தார். ”ஸாரி ஸாரி” என்று காலில் விழாத குறையாய் மன்னிப்பு கேட்டேன். அடுத்த வாரம் அவர் தேர்வு செய்து வைத்திருந்த அவரது ஜாதிப் பெண்ணைக் குறிப்பிட்டு, “அந்த பொண்ணு வேணாம்னுருச்சு” என்று முகத்தை பார்த்து குரூரமாகக் கூறி பழி தீர்த்துக் கொண்டேன். அவள் அடிபட்டதை முகத்தில் உணர்ந்து ஒரு நொடி ஆனந்தமானேன்.
“ஏனாம்?”
“படிப்பு பத்தாதாம்”
“அந்த புள்ளையே பத்தாவது தானே படிச்சுருக்கு?”
“ஆமா. ஆனா அப்படிதான் சொல்லறாங்க.”
“அதெப்படி அப்படி…” என்று ஆரம்பித்தவரை மேலும் அடக்கும் வன்மம் வந்தது.
“அவங்க சொன்னது வேற காரணம். வருத்தப்படுவீங்களேன்னு மாத்தி சொன்னேன்.”
“நீயேன் மாத்தி சொல்ற. என்னனு சொல்லு?”
“பையன் நல்லாவே இல்லை. தொப்பையும் தொந்தியுமா இருக்கார். வேணாம்னு சொன்னாங்க. நம்ப அண்ணனை அப்படிச் சொல்லிட்டாங்களேன்னு எனக்கே வருத்தமா இருக்கும்போது உங்ககிட்ட எப்படிச் சொல்வேன்?”
அந்த அம்மாள் அடங்கி விட்டாள். இப்படிப்பட்ட ஜாதி வெறி ஆட்களிடம் பொய் சொல்லி ஏமாற்றினால் என்ன கெட்டுவிட்டது என்ற மனநிலையை நானாகவே ஏற்படுத்தி என் பொய்களை நியாயப்படுத்திக் கொள்ளப் பிடித்திருந்தது.
பிரபுவின் பெற்றோரை அந்த வாரம் ஏமாற்றி விட்டு அடுத்தடுத்து வேறு நிஜமான பெண்களின் புகைப்படங்களைத் தேடத் தொடங்கி இருந்தேன். சிலர் வசதியைப் பார்த்து, படிப்பைச் சமரசம் செய்து கொள்வர். மாதம் இரண்டு லட்சம் வருமானம் என்பது எங்கள் ஊரைப் பொறுத்த வரை மிக நல்ல வருமானம். ஒவ்வொரு பெண் வீட்டாரிடமாய் அலைபேசி மூலம் பையனின் அருமை பெருமைகளை இட்டு நிரப்பிக் கெஞ்ச வேண்டும். மனிதர்கள் எதற்கு மயங்குவார்கள், எங்கு வீழ்வார்கள் என்பது பேசிப் பேசி அத்துப்படி ஆகி விட்டது. ஆனால் பெற்றோரைப் போல் பெண்களை எளிதில் சம்மதிக்க வைக்க முடியாது. அதற்கு அவர்களது அம்மாக்களின் தலையைச் சலவை செய்து, காலைக் கழுவ வேண்டும். அதிலும் வெற்றி சதவிகிதம் குறைவுதான்.
அப்படி ஒரு மதியம் யாரோ ஒரு பெண் வீட்டில் அலைபேசிக் கொண்டிருக்கும்போது பிரபு திடீரென என் அறைக்குள் நுழைந்தான். கையில் சித்தா டாக்டரின் புகைப்பட நகல். எனக்கு உடலெங்கும் அவசரமாக ரத்தம் பாய்ந்து வியர்வை எழுந்தது.
“இந்த பொண்ணு வீட்ல ஏன் வேண்டாம்னு சொன்னாங்கனு சொன்னீங்க?”
என்ன காரணம் சொன்னேன் என்று நினைவை மீட்டேன். பொய் சொல்வதின் முக்கியச் சிக்கல் இது – “அவங்க ஜோசியர் பொருத்தம் இல்லைன்னுட்டார். நீங்க உக்காருங்க. உங்களுக்குத்தான் மற்ற பொண்ணுக வீட்ல பேசிட்டு இருக்கேன்.”
“இந்தப் பொண்ணு பேர் என்ன?”
கவிதானு எழுதினோமா, சவிதானு எழுதினோமா? யோசிக்க அவகாசம் இல்லை.
“நூற்றுக்கணக்குல பொண்ணுக இருக்காங்க சார், எல்லார் பேரும் நினைவில் இருக்காது. ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பாக்கணும்.” என்று இழுத்தேன். சிரிப்பில்லாத அவன் தீவிர முகம் என்னை கலவரமாக்கியது. என் உடல் நடுங்கியது.
“நான் சொல்றேன். இந்த பொண்ணு பேரு மதுமிதா. இவங்க ஒரு டாக்டர்.”
சமாளி சமாளி என்று மூளை குடைய, “ஐயோ, ஃபோட்டோ மாறிடுச்சு போல ஸார்… உங்களுக்குக் கொடுத்த பயோடேட்டா கரெக்டா இருக்கும். இருங்க செக் பண்றேன்.”
“சுளையாப் பணம் வாங்கிட்டு ஏன் இப்படிப் புளுகற? அவங்ககிட்ட விசாரிச்சுட்டேன். அவங்களும் உங்ககிட்ட போன வருஷம் ரெஜிஸ்டர் பண்ணி இருக்காங்க, இப்போ கல்யாணமே ஆயிடுச்சு. இன்னும் இந்த ஃபோட்டோவைக் காட்டிப் பதிவு பண்றவங்கள ஏமாத்திட்டு இருக்கீங்க? கேஸ் போட்டா என்னாகும் தெரியுமா?”
“இருங்க… நான் செக் பண்றேன்.” – பயமும் பதற்றமுமாய்த் தடுமாறினேன். சும்மா மேசைக் கோப்புகளிடையே தேடினேன் கேஸ் என்ற சொல் என்னை ஆட்டி இருந்தது.
“நீ ஒரு பொண்ணுதானே. இப்படி ஒரு பொண்ணோட ஃபோட்டோவை பொய்யா சுத்தல்ல விடறது தப்புன்னு படல? இப்படி ஒரு வேலை பார்த்து சம்பாதிக்கணுமா?”
“…”
“இந்தத் தொழில் பண்றதுக்கு வேற தொழில் பண்ணிப் பொழைக்கலாம்.”
அந்த வார்த்தைகளை ஜீரணித்துப் புரிவதற்குள் என் கண்கள் கலங்கி இருந்தன.
“அண்ணா…” – கண்ணீர் கன்னங்களில் உருண்டது.
“அண்ணா கிண்ணான்னே, செவுளோட அப்பிருவேன். எங்க உங்க ஓனர்? கூப்டு.”
“அண்ணா ப்ளீஸ் சத்தம் போடாதீங்க. இது என் தப்புதான். அப்போ அவசரத்துக்கு உங்க அம்மா இந்த ஃபோட்டோ பிடிச்சுதுனு சொன்னதும் எழுதிக் கொடுத்துட்டேன்.”
அக்கம் பக்கம் எல்லா அறைகளிலும் அந்தந்த பிரிவு வாடிக்கையாளர்கள் இருப்பர். இவன் கத்திக் கூச்சல் போட்டால் எல்லாரும் நிறுவனம் மோசடி என முத்திரை குத்தி விட்டால், நிறுவனப் பெயர் கெடுவதோடு, என் வேலை போவதோடு, ஜெயிலில் தள்ளி விடுவார்கள் என்பது வரை என் மனம் யோசித்து மிரண்டது. சமாளித்தாக வேண்டும்.
“ப்ளீஸ்ண்ணா. நான் உங்களுக்காக பொண்ணு பாத்துட்டே இருக்கேன். கண்டிப்பா பாத்துக் கொடுத்துடுவேன்.”
“சீய்…” என்று அந்த போட்டோவை மேசையில் வீசி விட்டுச் சென்றான். அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தேன். மற்ற பெண்கள் வந்து சமாதானப்படுத்தினர்.
“சரி விடு. எல்லாரும் அதானே பண்றோம். இங்க ஒவ்வொருத்தரையும் பதிவு பண்ண வைக்க எல்லாம் செஞ்சுதானேடி ஆகணும். இப்ப என்ன புதுசா இவ்ளோ அழற?”
‘வேற தொழில் செய்யலாம்ல’ என்று அவன் கேட்டதை யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அது உறுத்திக் கொண்டே இருந்தது. அந்நேரத்தில் ஏதோ ஒரு வைராக்கியம் வந்தது. இவனுக்கு நாம்தான் பெண் பார்த்துக் கொடுக்க வேண்டும், அப்போது அவன் முகத்தைப் பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அடுத்த வாரம் வந்தான். வியர்த்தேன். அவனைப் பார்க்கவே பயமாய் இருந்தது.
“வாரா வாரம் இனி நானே வர்றேன். பொண்ணுங்களோட ஒரிஜினல் டீட்டைல் எனக்கு வேணும். வயசானவங்க வந்தா ஏமாத்திடற.”
கோபம் தணிந்திருந்தது. அவனுக்காகப் பேசி இருந்த பெண்களின் விவரங்களை எடுத்துக் காட்டினேன். “எல்லாம் ஓகேங்றாங்க. படிப்புதான்…” – இழுத்தேன்.
அவன் முன்பே ஒரு பெண் வீட்டாரிடம் பேசினேன். – “நல்ல பேமிலிம்மா. தங்கமான பையன். நீங்க நேர்ல வரச் சொல்லிப் பாருங்க. உங்க பொண்ணுக்குப் பிடிச்சுரும்.”
“…”
“உங்க நம்பர் பையன்ட கொடுக்கவா?”
“…”
“தேங்க்ஸ்மா தேங்க்ஸ்.”
பெண்ணின் அம்மாவின் அலைபேசி எண்ணைப் பிரபுவிடம் கொடுத்தேன்.
“என்ன வயசு உனக்கு?”
“இருபத்தி ரெண்டு.”
“எனக்கு இருபத்தொன்பதாச்சு. நீ பாட்டுக்கு என்னமோ உன் மடில போட்டு வளர்த்த மாதிரி பையன் பையன்கற?”
“அது… பொண்ணு பையன்னு இங்க சொல்லிப் பழகிருச்சு” – பல்லைக் கடித்தேன்.
‘இவன் வேற எல்லாத்துக்கும் ஏழரையக் கூட்டுவான் போலவே. இவன் கெட்ட கேட்டுக்கு மடில வேற போட்டு வளத்தறாங்க.”
“சரி, பொண்ணு வீட்ல பேசிட்டு சொல்றேன். வேற பொண்ணுங்க வந்தாலும் பேசி வை. கொஞ்சம் லட்சணமான பொண்ணாப் பாரு.”
“ம்ம்ம். சரிங்க, ஸார்.”
“என்ன அண்ணா, பையன் போய், இப்போ ஸார் ஆயிருச்சு?”
“இல்ல ஸார்… இனிமே இதே சொல்லிக்கறேன். வசதியா இருக்கு.”
வாரா வாரம் செவ்வாய்க்கிழமை வருவதை வாடிக்கையாக்கி இருந்தான். வந்ததுமே அதிகாரமும், அதட்டலுமாகத்தான் இருக்கும் அவன் பேச்சு.
“அந்தப் புள்ள வீட்ல போய் பேசினோம். அவங்க ஆத்தாக்காரி என்னமோ அவளைக் கட்டிக்க கேட்ட மாதிரி அந்த சிலுப்பு சிலுப்பறா. கம்மியா படிச்சவன்லாம் உசுரோட இருக்கறதா வேண்டாமான்னு தெரில.”
‘நீ பேசற பேச்சுக்கு உனக்கு பொண்ணே கிடைக்காதுடா’ மனதிற்குள் நினைத்தபடி “அப்டி இல்ல சார், அவங்க படிச்சுருக்கறப்போ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல!”
“ஆமா, நீ என்ன படிச்சுருக்க?”
“பத்தாவது.”
“என்ன சம்பளம் தர்றாங்க இங்க உனக்கு?”
“கம்மிதான், ஸார்.”
“எவ்ளோன்னு சொன்னா பங்கா கேக்கப் போறேன். சும்மா சொல்லு. வேற நல்ல வேலை இருந்தா சொல்றேன். இந்தத் தரகர் பொழப்பு எதுக்கு?”
“பத்தாயிரம். சிலர் கோவப்படறப்போ சமாளிக்கிறது கஷ்டம்னாலும் நம்மளால கலயாணம்லாம் அமையறப்போ சந்தோஷமா இருக்கும். இதுவே இருக்கட்டும் ஸார்.”
‘கோவப்படறப்போ’ என்பதை அழுத்தினேன். அவனுக்குப் புரிந்ததா தெரியவில்லை.
“வாயத் தொறந்தா பொய் சொல்றது ஒரு பொழப்பா?”
“ஸார், நீங்க ரியல் எஸ்டேட் வேலைதானே!”
என் கேள்வியின் அழுத்தத்தை ஒரு கணம் தாமதமாகப் புரிந்து கொண்டவன், “நீயே ப்ரோக்கர்தானேன்னு கேக்கறியாகும்?”
‘ஆமான்டா’ – “ஐயோ! இல்ல, ஸார்.”
“பொழச்சுக்குவ நீ!”
போகப் போக இந்த ஜாடை மாடை பதிலடிகள் பழகி அதை அவன் ரசிப்பதையும் உணர முடிந்தது. அவனது வெடுக் வெடுக்கென்ற பேச்சை நானும் ரசிக்கிறேனோ!?
சமீபமாக அவன் பெண்களின் எண் கேட்பதில்லை. “எதுவும் பிடிக்கல. பிடிச்சாலும் என்னை அதுங்களுக்குப் பிடிக்காது. அடுத்த வாரம் பாப்போம்” என்று நகர்கிறான்.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை தவறி வெள்ளிக்கிழமை மதியம் வந்தவன், “என்ன இன்னிக்குத் தலைக்கெல்லாம் குளிச்சு அழகா இருக்க போல!” என்றான் கோப்பைப் புரட்டிக் கொண்டே. நான் பதில் சொல்லவில்லை. புன்னகை செய்து வைத்தேன்.
இதோ இன்றும் வந்திருக்கிறான். “ஏதாவது பிடிச்சிருக்கா சார்?”
கேள்வியைத் தொடர்ந்து எண்ண ஓட்டங்கள் பின்னோக்கிச் சென்று ஆழ்த்தும் போதே, அனல் பறக்கும் வெய்யிலில் “தீதி தீதி” என்று குரல் கேட்டது. சில அறைகளில் இருந்து பெண்கள் எட்டிப் பார்த்தோம். வியர்த்து வழிந்தபடி தன் தோள்பட்டையில் மிகக் கனமான பண்டில் ஒன்றை ஏந்தி நின்றிருந்தான் ஒரு வடக்கத்திய இளைஞன்.
“ஆப் சுடிதார் மெட்டீரியல் ச்சாஹி ஹெய்ன்?”
“வேண்டாம். வேண்டாம். போ” – மூத்த அக்காள் விரட்டினார். ஒருத்தி கிசுகிசுப்பாய்ச் சொன்னாள் “ஸார்தான் லஞ்சுக்கு வீட்டுக்கு போயிருக்கார்ல. சும்மா பாப்போம்.” மதிய வேளை என்பதால் வாடிக்கையாளர் குறைவு. பேசிப் பேசி அனைவரும் முடிவெடுத்து அந்த இந்திக்கார இளைஞனை மூட்டையைப் பிரிக்க வைத்தனர்.
ஆளாளுக்கு ஒரு சுடிதாரை எடுத்துக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நான் ஒரு கருப்பு சுடிதாரை எடுத்துப் பார்த்து பெருமூச்சுடன் திரும்ப வைத்து விட்டு என் அறைக்குத் திரும்பினேன். கதவுகளற்ற அறைகள் எங்களுடையவை. நான் துணியை வைத்து விட்டு வந்ததைப் பார்த்து விட்டவன் அசட்டையாய்க் கேட்டான் –
“ஏன் நீ வாங்கலையா?”
“இல்ல. ஏதும் பிடிக்கல.”
“ஆசையாப் பார்த்தாப்ல இருந்துச்சு?”
“ம். மாசக் கடைசி. காசு இல்ல. இன்னும் சொன்னா இங்க பாக்கற யார்ட்டயுமே காசு இல்லனு எனக்குத் தெரியும். வாங்கறோமோ இல்லையோ பொண்ணுங்களுக்கு புதுப் புது துணிகளை பார்க்கறதுல ஒரு சந்தோஷம்.”
“ஆம்பளைங்களுக்கு கூட பொண்ணுங்கள பாக்கறது அப்படிதான்.”
“ஸார்…” மனதிற்குள் அது ‘டேய்ய்ய்’ எனத்தான் ஒலித்தது.
“ஆனா அந்த ஆள் பாவம். யாராவது வாங்குவாங்கன்னு நம்பித்தானே இத்தனையும் பிரிச்சு போடறார். டைம் வேஸ்ட். திரும்ப எல்லாம் அடுக்கி மூட்டை வேற கட்டனும்.”
“சரி. நீ வேணா உனக்கு பிடிச்சது ஏதாச்சும் வாங்கறியா? நான் காசு தர்றேன்.”
“அதெல்லாம் வேண்டாம். உங்ககிட்ட எனக்கு வேணும்னு கேட்டேனா?”
“அட, இதுல என்ன இருக்கு? சரி அவ்ளோ ரோஷக்காரின்னா இப்போ வாங்கிட்டு சம்பளம் வந்ததும் திருப்பிக் குடு.”
“அதுவும் வேண்டாம். வாங்கறதே அஞ்சும் பத்தும். இதுல ஐந்நூறு ஆயிரம் குறைஞ்சா கஷ்டம் ஸார்.”
“அட, வயசுப்புள்ள. ஆசைப்படறது வாங்கிப் போடு.”
“இல்ல ஸார், வேண்டாம்.”
குரலில் கண்டிப்பைக் கூட்டிக் கொண்டேன். அதன் பின் அவன் கேட்கவில்லை.
முக்கால் மணி நேரத்திற்கு பிறகு எல்லாரும் “இது நல்லா இருக்குல்ல”, “செம்மையா இருக்கு” என்று குதூகலிப்புகளுக்குப் பின் அவரவர் அறைக்குச் சென்று பிரித்துப் பார்த்து திரும்பக் கொண்டு வந்து தந்தனர். இது வெறும் கூச்சல் கூட்டம், ஒருவரும் வாங்கப் போவதில்லை என்று தெரிந்து அந்த வடக்கன் திரும்ப மூட்டை கட்ட ஆரம்பித்தான். திடீரெனப் பரபரப்பாகத் தேடி விட்டு “ஏக் ஐட்டம் ச்சூட் கயா” என்றான்.
முதலில் புரியாமல் விழித்த எங்களுக்குச் சற்று நேரத்தில் புரிந்து விட்டது – ஒரு ஐட்டம் குறைகிறது!
“எதுக்கும் எல்லார் ரூம்லயும் ஒருக்கா செக் பண்ணிப் பாருங்களேன்” என்றேன்.
அந்த இந்திக்கார இளைஞன் முகம் வாடி இருந்தது. “அண்ணா சாப்டீங்களா?”
புரியாமல் விழித்தான். உண்பது போல் சைகை செய்து அதையே கேட்டேன்.
“நஹி நஹி” என்றவன் திரும்ப “ஏக் ஐட்டம் ச்சூட் கயா” என்றான்.
அனைவரும் தேடினோம் . கிடைக்கவில்லை. முதலில் வேண்டாம் போ என்ற அக்கா, “ஒருவேளை நீ கொண்டு வந்ததே இவ்ளோதானா இருக்கும்” என்றார். சைகையும் சேர்த்து அதைச் சொல்லவே, புரிந்து கொண்டவன் உறுதியாக, “நஹி நஹி” என்றான்.
அதற்குள் முதலாளி வந்து விட்டார். “என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க, வேலை பாக்காம?” என்று அதட்டி விட்டு அந்த இளைஞனை விரட்டினார். அந்த பண்டில் இருபது கிலோவிற்கு மேல் இருக்கும். வாதாட முயன்று மொழி கை வராமல் தோற்று மூட்டையை தூக்கித் திரும்பத் தோளில் ஏற்றியவன் வெய்யிலில் கிளம்பினான்.
கிளம்பியவனிடம், “தண்ணி குடிச்சுட்டு போங்க” என்று நீர் பிடித்து நீட்டினேன். மறுத்து விட்டு “யாடி வஸ்து யஹான் ஹை, து க்ரிப்யான் முஜே சூச்சித் கரேன்.” என்று கூறி எழுதுவது போல் சைகை செய்தான். பேனா கேட்கிறானோ? அவன் அடுத்தபடி செல்பேசியில் பேசுவது போல் கை வைத்ததைப் பார்த்ததும் புரிந்து விட்டது.
“சொல்லுங்க” என்று அவன் சொன்ன அலைபேசி என்ணைக் குறித்துக் கொண்டேன்.
கோப்பை புரட்டிக் கொண்டிருந்த பிரபு “இந்த வாரமும் ஒண்ணும் தேறல” என்றான்.
என் மனம் அந்தத் துணி எங்கு போயிருக்கும் என்பதில் இருந்தது.
“என்ன துணி எடுக்காம விட்டுட்டோம்னு ஃபீலிங்கா?”
“சேச்சே… ஒரு மெட்டீரியல் காணும் ஸார். பாவம்ல, எவ்ளோ கஷ்டப்பட்டு தெருத் தெருவா இந்த வெய்யில்ல வர்றாங்க.”
“சரி. அதுக்கென்ன பண்றது? இங்கதான் யாரவது எடுத்துருக்கனும்.”
“எல்லார்ட்டையும் கேட்டாச்சே. யாரும் எடுக்கலைன்றாங்க.”
“உங்க ஆஃபீஸ்ல பொய் சொல்ல புதுசாக் கத்துக் கொடுக்கனுமாக்கும்!”
நக்கலாய்ச் சிரித்தான்
“ஸார், ப்ளீஸ். நான் பொய்தான் சொன்னேன். ஆனா, வேற வழி இல்ல. இங்க வரவங்க பணம் கட்டாட்டி முதலாளி திட்டுவாரு. உங்கள மாதிரி ஆளுகளும் எந்த ஜாதினாலும் ஓக்கேன்னும் சொல்ல மாட்டிங்க. இந்தக் குலம்தான் வேணும், இந்த கூட்டம்தான் வேணும்னு கேப்பீங்க. ரெண்டு பக்கமும் சமாளிக்க ஏதோ பொய் சொல்லிடறோம். சில நேரம் கடுப்பாகி இவனுங்கெல்லாம் லவ் பண்ணித் தொலஞ்சாதான் என்னனு கூட மனசில் திட்டுவேன். ஆனா, இந்த அண்ணா அப்படி இல்லைல! பாவமா இருக்கு.”
“என்கிட்ட எந்த ஜாதினாலும் ஓகேவானு கேட்கவே இல்லையே!”
“அப்போ உங்களுக்கு ஓகேவா?”
“ஓகேதான். அம்மாவை சமாளிச்சுக்குவேன்.”
“அப்போ வேற காஸ்ட் பொண்ணுக ஃபைலை வாங்கித் தர்றேன். பாக்கறீங்களா?”
“பாக்கறேன். அந்தப் பொண்ணு வீட்லயும் ஓகே சொல்றமாதிரி இருந்தாக் காமி.”
“ஓ!” – அவன் சொன்னது எனக்கு மகிழ்ச்சியா ஏமாற்றமா என்று புரியவில்லை.
“அது நாமதான் பேசனும் சார். நீங்க முதல்ல ஃபைல் பாருங்க. பிடிச்சாப் பேசுவோம்.”
“ம்ம்ம். சரி.”
அவனுக்கு என் மீது நாட்டம் இல்லை. எல்லாமும் என் கற்பனை என்ற ஏமாற்றத்தைத் தாண்டி அவனுக்கு எந்த ஜாதியும் சம்மதம் என்பது அவன் மீதான மதிப்பைக் கூட்டி இருந்தது. உடனே மற்ற ஜாதிப் பிரிவுகளில் சென்று பெண்களின் கோப்புகளைப் பெற பரபரப்பானேன். எனக்கே ஒரு நொடி அது ஆச்சர்யமானது. நிச்சயம் அவன் பிற பெண்களைப் பார்ப்பதற்குச் சம்மதம் சொன்னது எனக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் உடனே தொழில் ரீதியாய் என் ஆதாயத்தைப் பார்க்க ஆயத்தமாகி விட்ட என் மனமாற்றத்தைக் கவனிக்க முடிந்தது. பெண்கள் சூழலுக்கேற்பக் தங்களை மாற்றிக் கொள்வதில் தேர்ந்தவர்கள். தக்கன பிழைத்தலின் பேருதாரணம் பெண்!
ஒவ்வொரு பிரிவிலும் போய் பெண்களின் கோப்புகளை வாங்கினேன். இறுதியாய்ப் போன அறையில் அந்த அக்கா இல்லை. அருகிலிருந்தவள் “ரெஸ்ட் ரூம்” என்றாள்.
“சரி, கேர்ள்ஸ் ஃபைல் எடுத்துக்கறேன். அந்த அக்கா வந்ததும் சொல்லிடு”
வேகமாய் ஃபைலை இழுத்ததும் ஒரு சுடிதார் தொப்பென விழுந்தது. அதிர்ச்சிக்குக் கூட நேரம் தராமல் சட்டெனக் கையிலிருந்த கோப்புகளுக்குள் சுடிதாரை ஒளித்தேன். வேகமாய் அறைக்குள் வந்தவள் அவனிடம் பைல்களைக் கொடுத்துவிட்டு அந்தச் சுடிதாரை எடுத்து வைத்து விட்டு அலைபேசியில் அவனுக்கு முயற்சி செய்தேன்.
அவன் எடுத்ததும், “உங்க சுடிதார் கிடைச்சுருச்சு. வந்து வாங்கிக்கங்க” என்றேன்.
நான் சொன்னது எதுவும் புரியாமல், யார் பேசுகிறேன் என்றும் தெரியாமல், “க்யா க்யா” என்றான் அவன். பிரபுவிடம் “இந்தி தெரியுமா ஸார் உங்களுக்கு?” என்றேன். உதட்டைப் பிதுக்கினான். அலைபேசியைத் துண்டித்து விட்டு என்ன செய்வது என்று விழித்தவள் சட்டென ஓர் யோசனை தோன்றவே அவனிடம் கேட்டேன் –
“ஸார், அந்த அண்ணன் பஸ் ஸ்டாண்ட் வழியாத்தான் போயிருப்பாங்க. இதை குடுத்துட்டு வந்துடறீங்களா?”
“அவன எங்கேன்னு நான் போய்த் தேடறது?”
“இந்தாங்க, அவர் போன் நம்பர். வண்டி இருக்குல்ல உங்ககிட்ட. உடனே போனீங்கன்னா அடுத்த தெருவுலதான் இருப்பாரு. ப்ளீஸ் ஸார்.”
அவன் யோசனையாய் என்னைப் பார்த்தான். – “இதுக்காக ஏன் இவ்ளோ பதறிப் போற? இப்படி எத்தனையோ கடந்துதான் பிசினஸ்லாம் நடக்கும்!”
“உங்ககிட்ட உபதேசம் கேட்கல. உதவிதான் கேட்கறேன். இந்தச் சிறுக்கிக எங்க போகப் போறாளுங்க. வந்து பாத்துக்கலாம். சுடிதாரை குடுத்துட்டு வாங்களேன்…”
அவன் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்தான். எதுவும் பேசாமல் சுடிதாரை வாங்கிக் கொண்டு கிளம்பியவன் கால் மணியில் திரும்பி வந்தான்.
“அதை அவன்கிட்ட கொடுத்தாச்சு. சுக்ரியா சொன்னான். அது உனக்குதான்.”
“தேங்க்ஸ், ஸார்!”
“அப்பறம் இந்தச் சிறுக்கிக ஃபைல்கள திருப்பிக் குடுத்துரு. இனி தேவைப்படாது.”
“ஏன், ஸார்?”
“ஆமா, உனக்கு இந்தக் கருப்பு சுடிதானே பிடிச்சுதுன்னு சொன்ன?”
வடக்கன் மூட்டையிலிருந்த நான்கைந்து கருப்பு சுடிதார்களில் சரியாய் நான் தேர்வு செய்திருந்த மஞ்சள் துப்பட்டாவுடனான கருப்பு சுடிதாரைத் மேசை மேல் வைத்தான்.
நான் மறுக்கவில்லை. “ஆமா, இதான்” என்றேன் உரிமையாய் அவனைப் பார்த்து.
*********
சுவை குன்றாத கதையமைப்பு. சிறப்பு