
இத்தனை வருட உலகக்கோப்பை பைனலில் இந்த பைனலைப் போல சிறந்த விறுவிறுப்பான போட்டி எதுவுமில்லை.50 ஓவர்கள் முடிவில் இரண்டு அணிகளும் ஒரே ரன்கள் அடித்து டிராவாகி சூப்பர் ஓவர் சென்று அந்த சூப்பர் ஓவரும் டிராவாகி அதிக பவுண்டரி அடித்த அணிக்கு கோப்பை வழங்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை ஈர்ப்பதற்காக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பல விதிமுறைகள் மாற்றப்பட்டு, 300,350 ரன்கள்அடிப்பது எல்லாம் சர்வ சாதாரணமாகி, பேட்டிங்கிற்கும் பேட்டிங்கிற்கும் நடக்கும் போட்டியாக மாறிப் போய் விட்ட கிரிக்கெட்போட்டிகளுக்கு மத்தியில் இந்த இறுதிப் போட்டி பேட்டிங்கிற்கும் பவுலிங்கிற்குமான போட்டியாக இருந்தது.
பொதுவாக ஹைஸ்கோரிங் போட்டிகளில் எந்தவொரு விறுவிறுப்பும் இருக்காது.போட்டி மிக எளிதாக ஒரு அணியின் பக்கம் சென்று விடும். ஆனால் இதுபோன்ற குறைவான ரன்கள் அடிக்கப்படும் போட்டிகளில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது. பவுலர்கள் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி மிகச்சிறப்பாக செயல்பட்டாகவேண்டும். இதுபோன்ற போட்டிகளில் சிறு தவறுகளுக்கு கூட இடம் கொடுக்க முடியாது. அந்த தவறுகளுக்கு மிகப்பெரிய இழப்புகளைக் கொடுக்க வேண்டி வரும். அந்த இழப்பு உங்களுடைய 44 வருட கனவாகக் கூட இருக்கலாம்.
ஒரு கட்டத்தில் 86-4 என நியூசிலாந்து பந்துவீச்சு தாக்குதலில் சிக்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியை பட்லர் & ஸ்டோக்ஸ் பார்னட்ஷிப் மீட்டது. பட்லர் ஸ்டோக்ஸிற்கு பிறகு வந்தாலும் ஸ்டோக்ஸிற்கு முன்பாகவே அரை சதமடித்தார். பொறுமையாக ஆடிய ஸ்டோக்ஸூம் 81 பந்துகளில் அரை சதமடித்தார். அடிக்கப்படவேண்டிய ரன்கள் அதிகமக இருந்ததால் அடித்து ஆட முயற்சி செய்ய ஆட்டமிழந்தார்.
வெற்றிக்கு 30 பந்துகளில் 46 ரன்கள் தேவை. இதுவரை இங்கிலாந்தின் பக்கம் இருந்த வெற்றி நியூசிலாந்து பக்கம் திரும்பியது. 46வது ஓவரில் ஸ்டோக்ஸ் அடித்த நான்கு ரன்னோடு மொத்தம் ஏழு ரன்கள் எடுக்கப்ட்டது. 24 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நேரத்தில் 47 வது ஓவரின் முதல் பந்திலேயே வோக்ஸை அவுட்டாக்கினார் பெர்குசன். அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.கிட்டத்தட்ட நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கி விட்டது.
18 பந்துகளுக்கு 34 ரன்கள் தேவை. கிட்டத்தட்ட தோனி நின்றிருந்த அதே சூழல் தான். இப்போது எல்லாம் ஸ்டோக்ஸின் கையிலே தான். அந்த ஓவரில் ஸ்டோக்ஸ் அடித்த ஒரு பவுண்டரியின் உதவியுடன் 10 ரன்களை எடுத்தது. 10 பந்துகளுக்கு 22 ரன் அடிக்கவேண்டும் என இருந்த போது ப்ளங்கட் ஆட்டமிழந்தார். 9 பந்துகளில் 22 ரன்கள் தேவை. ஸ்டோக்ஸ் அடித்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அருகில் பிடித்த போல்ட் எல்லைக்கோட்டை கவனிக்காமல் எல்லைக்கோட்டில் கால் வைத்து விட்டு அதை உணர்ந்து வேகமாக அருகிலிருந்த கப்திலிடம் பந்தை வீசினார். ஆறு ரன்கள் சென்று விட்டது.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. போல்ட் வீசிய முதலிரண்டு பந்துகளில் சிங்கிள் எடுக்க முடிந்தாலும் அதை எடுக்கவில்லை ஸ்டோக்ஸ். அந்த ஒரு ரன்னை விட ஸ்டோக்ஸ் கிரீசிஸ் இருப்பதன் அவசியத்தை ஸ்டோக்ஸ் உணர்ந்திருந்தார்.மூன்றாவது பந்தை சிக்சருக்கு பறக்கவிட ஆட்டத்தில் உச்சபட்ட பரபரப்பு.3 பந்துகளில் ஒன்பது ரன்கள் தேவை. டாஸ் பாலாக வீசப்பட்ட பந்தை மிட் விக்கெட் திசையில் அடித்துவிட்டு ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் ஓடினார். கப்தில் அந்த பந்தை எடுத்து வேகமாக ஸ்டெம்ப்சை நோக்கி எறிய அது வேகமாக கிரீசுக்குள் பாய்ந்த ஸ்டோக்ஸ் மீது பட்டு நான்கு ரன்கள் சென்றது. ஓவர் த்ரோவினால் நான்கு ரன்கள் மற்றும் ஸ்டோக்ஸ் எடுத்த இரண்டு ரன்கள் என மொத்தம் 6 ரன்கள் அந்த பந்தில் கிடைத்தது. யாராலும் அதை நம்ப முடியவில்லை. கடந்த போட்டியில் இதே போன்றதொரு இக்கட்டான நிலையில் கப்தில் விக்கெட் கீப்பரின் கைக்கு எறியாமல் ஸ்டெம்ப்சை நோக்கி எறிந்து தோனியை அவுட்டாக்கியதே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் அதே செயல் தான் ஆட்டத்தை மாற்றியது.கப்திலையும் குறை சொல்ல முடியாது அது ஸ்டோக்ஸ் மீது படாமலிருந்தால் கீப்பர் பிடித்திருக்கலாம்.
இதற்கிடையில் ஓய்வு பெற்ற பிரபலமான அம்பயரான சைமன் டபுல் நேற்றைய போட்டியில் அம்பயர்களின் கவனக்குறைவாலே நியூசிலாந்து தோற்றது என கூறியுள்ளார். ஸ்டோக்ஸ் மேலே பட்டு ஓவர்த்ரோவில் நான்கு போன போது அம்பயர், ஸ்டோக்ஸ் ஓடிய இரண்டு ரன்கள் மற்றும் ஓவர்த்ரோவில் போன நான்கு ரன்கள் சேர்த்து ஆறு ரன்கள் கொடுத்தனர். ஆனால் கிரிக்கெட் விதிமுறையின் படி பீல்டர் த்ரோ செய்யும் பொழுது கம்ப்ளிட் செய்த ரன்களே கொடுத்திருக்க வேண்டும்.அப்படி பார்த்தால் அம்பயர் ஐந்து ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு ரன் கூடுதலாக கொடுத்து விட்டார். அந்த ஒரு ரன் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பாருங்கள்.
அன்று தோனிக்கு எதிராக நியூசிலாந்திற்கு ஆதரவாக அமைந்த இது போன்ற சின்னசின்ன விஷயங்களே இன்று நியூசிலாந்து எதிராகவும் ஸ்டோக்ஸிற்கு ஆதரவாகவும் முடிந்துள்ளன. இந்த சின்னசின்னத் தவறுகளைத் தான் இங்கிலாந்து ரசிர்கள் அதிர்ஷ்டம் என்றும் நியூசிலாந்து ரசிகர்கள் விதி என்றும் கூறுகிறார்கள். இந்த சின்ன சின்னத் தவறுகளை மிக நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்டோக்ஸ் அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 49.4 வது பந்தை அடித்த ஸ்டோக்ஸ் ஒரு ரன் ஓட வேண்டிய இடமாகயிருந்தாலும் ஸ்ட்ரைக் தனக்கு வேண்டுமென்பதால் இரண்டாம் ரன்னுக்கு ஓடினார். பவுலிங் முனையில் ஓடிய ரஷித் ரன் அவுட்டானார். ஆட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு. ரசிகர்களின் விரல்களில் ஒரு நகம் கூட இல்லை. கடித்துக்கடித்து துப்பிவிட்டார்கள்.
விக்கெட் விழுந்தாலும் பெரிதாக மகிழ்ச்சியடைய முடியவில்லை. எல்கேஜி படத்தில் மயில்சாமி சொல்வதைப் போல எதிர்த்து நின்று ஆடுவது ஸ்டோக்ஸ் என்பதால். ஒரு பந்துக்கு இரண்டு ரன் தேவை. ஸ்ட்ரைக்கில் ஸ்டோக்ஸ். இரண்டு நாட்டு ரசிகர்களும் தங்கள் கடவுளை தங்கள் அணியின் வெற்றிக்காக மன்றாடினர். இரண்டு நாடுகளின் பொதுவான கடவுள் ஒருவர் தானே. இரண்டிற்கும் பொதுவான வேண்டுதலை அதனால் கொடுத்துவிட்டாரோ என்னவோ!
கடைசி பந்தை அடித்து விட்டு இரண்டாவது ரன்னிற்கு ஓடி வரும் போது ஸ்டோக்ஸ் ரன்அவுட்டானார்.இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.போட்டி டிராவானது.
இதனைத் தொடர்ந்து உலகக்கோப்பையில் முதன்முறையாக சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர்ஓவரும் டிராவானால் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என அறிவித்தார்கள். சூப்பர் ஓவரை நியூசிலாந்தின் போல்ட் வீசினார். இந்த போட்டியில் விக்கெட் எடுக்காமல் 6 ரன்களுக்கு மேல் கொடுத்திருத்தாலும் வில்லியம்சன் போல்ட்டை நம்பினார்.
வில்லியம்சன் இப்பொழுதும் பதட்டப்படவில்லை. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய பட்லர் மற்றும் ஸ்டோக்ஸே சூப்பர் ஓவரில் இறங்கினர். சிறப்பாக ஆடிய இருவரும் 15 ரன்கள் விளாசினர்.
நியூசிலாந்து வெற்றிக்கு 16 ரன்கள் தேவை .நியூசிலாந்து அணியில் அவ்வளவு ஆக்ரோசமாக அடிப்பதற்கு ஆட்கள் இல்லை. கப்திலோடு சேர்ந்து யார் இறங்குவார்கள் என்கிற குழப்பம். இந்த ரன்களை நியூசிலாந்து அடிக்குமா என்கிற சந்தேகம்.கடந்த உலகக்கோப்பையாக இருந்தால் எதிரணி வெற்றி பெறுமா என்று தான் சந்தேகம் வந்திருக்கும். பிரண்டன் மெக்கலம் பேடைக் கட்டிக் கொண்டு வந்திருப்பார். மெக்கலத்தை நேற்று நிச்சயம் நியூசிலாந்து ரசிகர்கள் மிஸ் செய்திருப்பார்கள். மெக்கலம் என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தில் கமெண்ட்ரிபாக்ஸில் வர்ணனை செய்து கொண்டிருந்தார். கப்திலோடு நீசம் வந்து களமிறங்கினார்.
முதல் பந்தை வைடாக வீசினார் ஆர்ச்சர். முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் நீசம். இரண்டாவது பந்தை சிக்சருக்கு பறக்க விட ஆட்டம் பரபரப்பானது. மூன்றாவது நான்காவது பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தார் நீசம். கடைசி இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கப்தில் ஸ்ட்ரைக்கில் நிற்கிறார். ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை. கப்தில் இந்த இரண்டு ரன்கள் அடித்தால் இந்த போட்டியில் செய்த தவறுகளை எல்லாம் சரிக்கட்டி விடலாம். கடைசி பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்களுக்கு ஓடினர். அது ஒரு ரன் ஓட வேண்டிய பந்து தான்.ஓடினால் நிச்சயம் ரன்அவுட் என்றாலும் வேறுவழியில்லை கப்தில் ஓடிவர பந்தை எடுத்த ஸ்டோக்ஸ் சிறிதும் தாமதிக்காமல் கீப்பர் பட்லரை நோக்கி எறிந்தார். பந்து ஸ்டெம்ப்சை விட்டு அதிகம் விலகி எறிந்தாலும் அதைக் கைப்பற்றிய பட்லர் பாய்ந்து ஸ்டெம்ப்சில் அடித்தார். கப்தில் கோட்டின் அருகில் கூட வரவில்லை. சூப்பர் ஓவரும் டிராவானது. அதிக பவுண்டரிகள் அடித்த காரணத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதே இடத்தில் துவண்டு போய் கீழே உட்கார்ந்துவிட்டார் கப்தில். அரையிறுதியில் ஹீரோவான கப்தில் இன்று வில்லனாகினார். எல்லா நாளும் சிறப்பான நாளாக அமைந்துவிடுவதில்லை. கப்திலுக்கு இது மோசமான நாள் .நியூசிலாந்திற்கும் தான். அந்த அணிவீரர்கள் எல்லாம் மிக ச்சரியாக செய்தனர். இருந்தாலும் பவுண்டரிகள் அவர்களை விட அதிகம் அடித்து விட்டனர் என்பதற்காக கோப்பை இங்கிலாந்திற்கு கொடுக்கப்பட்டது. இந்த விதிமுறையை கம்பீர், முகமது கைப் போன்ற வீரர்கள் குறை சொல்லி நியூசிலாந்து சேம்பியனுக்கான தகுதியுடையவர்கள் என பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்களை 8 விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்தது. ஆனால் இங்கிலாந்தோ 241 ரன்களுக்கு 50 ஓவரில் ஆல்அவுட்டானது. அதேபோல ஸ்டோக்ஸ் மேல பட்டு நான்கு ரன்கள் சென்ற பந்து ஸ்டோக்ஸ் கிரீசிற்குள் வருவதற்கு முன்பாகவே பட்ட பந்து. அது ஸ்டோக்ஸின் மீது படாமல் இருந்தால் ஸ்டோக்ஸ் அவுட்டாகியிருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால், எந்தவித சந்தேகமுமில்லாமல் நியூசிலாந்து அத்தனை பேரின் இதயங்களை வென்று விட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது தோல்வியே இல்லை.
“கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல்கரம் வீழாது தானே
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்கையைக் கொள்ளையிடமுடியாதே “
என்ற பாடலுக்கேற்றபடி வில்லியம்சன் கோப்பையை இழந்தாலும் புன்னகையோடே வந்தார்.
கேப்டன் வில்லியம்சன் அப்பொழுதும் ஒரு புன்சிரிப்போடு தான் இருந்தார். தங்கள் அணி சிறப்பாக விளையாடியது என அணிவீரர்களை பாராட்டினார். இந்த தோல்லியை ஜீரணிக்க முடியவில்லை. வெற்றி பெற்ற இங்கிலாந்திற்கு வாழ்த்துகள். சிறப்பாக செயல்பட்டனர் எனக் கூறினார்.
உண்மையில் வில்லியம்சன் மாதிரி ஒரு கேப்டன் நியூசிலாந்து அணிக்கு பொக்கிஷம். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் கப்தில் அந்த ஓவர்த்ரோவில் நான்கு ரன்கள் கொடுத்ததற்கும் போல்ட் அந்த கேட்சை ஆறு ரன்னாக மாற்றிய பொழுதும் அந்த இடத்தில் கோலி எப்படி ரியாக்ட் செய்திருப்பாரென்று. இந்த இடங்களிலெல்லாம் வில்லியம்சன் நடந்து கொண்ட விதத்தையும் பாருங்கள். வில்லியம்சன் எவ்வளவு பெறுமையான நிதானமான கேப்டன் என்பது புரியும்.
தொடர் நாயகன் விருது வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் வில்லியம்சன் தான்.
வெற்றி பெற்ற கேப்டன் மார்கன் பேசுகையில், “இந்த வெற்றி எங்கள் நான்கு வருட உழைப்பின் வெற்றி. ரஷித் என்னிடம் கூறும் போது ,”அல்லாஹ் நம் பக்கம் தான் இருக்கிறார். நாம் வெற்றி பெறுவோம் என்றார். நாங்கள் நாடு,மொழிகளால் வேறுபட்டவர்கள் நாங்கள் இணைந்து கோப்பை வென்றுள்ளோம் . இந்த வெற்றியில் எங்கள் பக்கம் அதிர்ஷ்டமும் இருந்தது.” என்றார்.
ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 2016 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். முதல் நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர் அடித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றி பெறச் செய்தார் ப்ராத்வெய்ட். அப்போது ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ரசிகர்களின் வில்லனாகவே தெரிந்திருப்பார். அன்றைய இரவை அவரால் எப்படி கடந்திருக்க முடியும்? காலத்திற்கு எல்லாவற்றையும் மாற்றக்கூடிய சக்தி உள்ளது. இன்று பாருங்கள். ஸ்டோக்ஸ் தான் ஹீரோ. தன் அணி கோப்பை வாங்கியதில் ஸ்டோக்ஸின் பங்கு முக்கியமானது. ஆட்டநாயகன் விருது வென்று விட்டு ஸ்டோக்ஸ் பேசும் போது, “ஓவர்த்ரோவில் போன அந்த நான்கு ரன்களுக்காக வில்லியம்சனிடம் நான் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்” என்றார். அவரால் அந்த வலியை உணர முடிந்திருக்கிறது. இதனால் தான் கிரிக்கெட் ஜென்டில்மேன் கேமாக கூறப்படுகிறது. நேற்று கப்தில் நியூசிலாந்து வீரர்களின் வில்லனாக இருந்திருப்பார். அவரால் நேற்றைய இரவை நிம்மதியாக கழித்திருக்க முடியாது. இந்தத் தோல்விக்கான காரணமாக அவர் தன்னைத் தானே குறை கூறிக் கொண்டிருப்பார். காலத்திற்கு எல்லாவற்றையும் மாற்றக்கூடிய சக்தி உள்ளது. நாளை பார்க்கலாம்!