இணைய இதழ் 121சிறுகதைகள்

வேலை – ராம்பிரசாத்

ஜன்னல் வழியே மொட்டை மாடிக்கு மேலாக அந்த பறக்கும் வாடகை மகிழுந்து வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடைமேடை மெல்ல கீழிறங்கியது. ப்ரியா வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு மாடிப்படியேறி மொட்டை மாடி அடைந்து படியேறி வண்டிக்குள் அமர, மகிழுந்து அவளை ஏந்திக்கொண்டு, அந்தரத்தில் அணிவகுக்கும் மகிழுந்துகளின் சீரான பாதையில் சேர்ந்து விரைந்தது.

“இன்றைக்கு நடக்க இருக்கும் நேர்காணலில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கூடி வரட்டும்” என்றது செயற்கை நுண்ணறிவுக் குரல்.

“நன்றி.” என்றாள் ப்ரியா இன்னமும் பதற்றம் அடங்காமல். இரு தோள்களையும் உயர்த்தி, அக்குளிலிருந்து வாசம் வருகிறதாவென முகர்ந்துவிட்டு, பெருமூச்சு விட்டாள்.

வீட்டில், குளியலறைக் குழாய் வேலை செய்யவில்லை. தண்ணீர் வரத்து நின்று போய் மூன்று நாளாகிவிட்டது. சரி செய்ய ஆள் அனுப்பச்சொன்னால், ஆப்டிக் ஆர்ப் (Optik Orb) நிறுவனம் முப்பது நாள் தள்ளி நேரம் ஒதுக்கியுள்ளது. செலவும் சுமார் இரண்டு லட்சம் வரவுகள் என்று தெரிவித்துள்ளது. வீட்டில் நான்கு பெண்கள்தான். ப்ரியா தவிர ஏனைய மூவரும் நிறுவனமொன்றில் இருபதாயிரம் வரவுகள் ஊதியத்தில் வேலை பார்க்கிறார்கள். தங்களது சேமிப்பிலிருந்து தலைக்கு ஐம்பதாயிரம் வரவுகள் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் வரவுகள் தயார். இப்போது ப்ரியாவின் முறை. ஆனால், அவள் வேலையில் இல்லை; சேமிப்பும் இல்லை. முதலில் வேலை வேண்டும். சம்பளம் வேண்டும். பிறகுதான் ஆப்டிக் ஆர்ப் நிறுவனத்தில் சொல்லி, முழு வரவுகளையும் முன் வரவாகச் செலுத்தி குழாய் சரிசெய்ய ஆளை வரச்சொல்ல முடியும்.

“உங்களை நேர்காணல் செய்யப்போகும் மரியா, வாசனை திரவியங்கள் சேகரிப்பாளர்” என்றது செயற்கை நுண்ணறிவுக் குரல்.

அதைக் கேட்டு திடுக்கென்றது ப்ரியாவுக்கு. ஒருக்கால், மூன்று நாளாகக் குளிக்காமல் இருப்பதை, சருமத்தின் வாசம் வைத்து கண்டுபிடித்துவிட்டு ஆலோசனை சொல்கிறதோ என்று தோன்றாமல் இல்லை. சட்டென கையை உயர்த்தி அக்குளிலிருந்து வாசம் வருகிறதா என்று பார்த்துவிட்டு லேசாக முகம் சுளித்தாள்.

“நேர்காணலுக்குச் செல்கிறேன். என் வரவு, இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். என் சருமத்திலிருந்து வாசம் வருகிறதா?” என்றாள் ப்ரியா கவலையுடன்.

சட்டென்று தானியங்கிக் கரம் ஒன்று நீண்டு, கொஞ்சமாக காற்றை உள்வாங்கிவிட்டு, “தையோ ஆல்கஹால், கொழுப்பாலான அமிலங்கள், சல்ஃபர். ஆம். உங்கள் சருமத்திலிருந்து கெட்ட வாடை வெளிப்படுகிறது. நேர்காணலுக்கு வரும் லட்சணமா இது?” என்றது செயற்கை நுண்ணறிவு.

“அறையில் தண்ணீர் வரவில்லை. சரிசெய்ய ஆளை வரச்சொன்னால், இரண்டு லட்சம் வரவுகள் கேட்கிறார்கள். ஒரு குழாய் சரிசெய்ய இரண்டு லட்சமா? அநியாயமாக இருக்கிறது” வெறுப்பாகப் பேசினாள் ப்ரியா.

“ஆண்கள் கிரேட்டாவிலிருந்து வரவேண்டுமே? இப்போதெல்லாம் எந்த ஆணும் வர விரும்புவதில்லை. வர விரும்பாதவர்களை, வரவழைக்க வேண்டுமானால், அதிக வரவுகள் தரத்தானே வேண்டும்? தேவையைப் பொறுத்தத்தானே விலையும்?” என்றது செயற்கை நுண்ணறிவுக் குரல்.

“அவர்கள் பழிவாங்குகிறார்களா? அவர்களாகத்தானே போனார்கள். அவர்களாகப் போனால் அது எங்கள் தவறா? போனதுதான் போனார்கள், இது போன்ற வேலைகளைச் செய்வதற்கான எந்திர மனிதர்களைத் தந்துவிட்டுப் போயிருக்கலாம். இல்லையா? அதைக் கூடத் தராமல், சென்றது அவர்களின் கோபத்தையே காட்டுகிறது.” என்றாள் ப்ரியா.

“எந்திர மனிதர்களைப் பெண்களும் உருவாக்கலாமே? அப்படி ஒரு தொழிற்சாலை உங்களிடம் இருந்ததுதானே? ‘Conflict in definition’ தோன்றிய போது, அவர்கள் உலகை இரண்டாகப் பிரித்தார்கள். பிரிட்டன், ஐரோப்பா உங்கள் வசம். நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இணைந்து கிரேட்டா அவர்கள் வசம். இரண்டையும் கடல் பிரித்துவிட்டதே. ஆக, அந்தந்த நாடுகளில் இருந்த தொழிற்சாலைகள் அவரவர்க்குத்தானே?”

“எந்திரங்களை உருவாக்குவதற்கான உதிரி பாகங்கள் வேண்டுமே? அவற்றை அவர்கள் தருவதில்லையே?”

“ஏன் தர வேண்டும்? இரும்பை உருக்குதல், ப்ளாஸ்டிக் உருக்குதல், கடலுக்கடியில் குழாய் பதித்தல், தாமிரங்களுக்கென அகழாய்தல் என்று உடல் உழைப்பைக் கோரும் வேலைகளை அவர்களது கிரேட்டாவிற்கு அவர்கள் செய்வார்கள். உங்கள் வாழ்விடத்திற்கு நீங்கள்தானே செய்ய வேண்டும்?”

“ஹ… பல காலமாக அவர்கள் நிர்வகித்ததை தீடீரென எங்களிடம் தந்தால், நாங்கள் அதற்குத் தயாராக வேண்டாமா? தொழிற்சாலையில் எங்கே தவறு என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.”

“அவரவர்களுக்கான மரியாதை கிடைத்திருந்தால் போகாமல் இருந்திருப்பார்கள் என்கிறது ஒரு ஆய்வு” என்றது செயற்கை நுண்ணறிவு.

“பொய். அவர்கள் எங்களின் சுதந்திரத்தில் தலையிட்டார்கள்” என்றாள் ப்ரியா பெரும் கோபத்துடன்.

“ஒரு வழக்கு. மனைவி, தன் தோழிகளுடன் வெளியூர்ப் பயணம் மேற்கொள்கிறாள். அதில், அந்தப் பெண்கள் ஒரு ஆண் அரை நிர்வாண நடனக்காரனை வரவழைத்துக் கொண்டாடுகிறார்கள். இது கணவனுக்குத் தெரியவர, அவன் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக உணர்கிறான்” என்று செயற்கை நுண்ணறிவு சொல்ல, “தவறான புரிதல். அது அவளின் சுதந்திரம் அல்லவா? அவளது தனிப்பட்ட கேளிக்கைப் பிரயாணத்தில், அந்தக் கணவன் மூக்கை நுழைத்தது தவறல்லவா?” என்றாள் ப்ரியா அவசரமாக.

“அது Conflict in definition.” என்றது செயற்கை நுண்ணறிவு.

“ஹ!!”என்றாள் ப்ரியா, ஒரு கையால் காற்றை அறைந்தபடி, கோபம் அடங்காமல்.

சற்று நேர அமைதிக்குப்பின், “உங்களின் நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்ய, ‘பயிற்சி நேர்காணல்’ (mock interview) தேவையென்றால் அந்த சேவை உங்களுக்கு வழங்கப்படும். இலவச சேவைக்காக என்னைப் பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றது செயற்கை நுண்ணறிவு.

“மன்னிக்கவும், இயந்திரமே. இன்றைக்கு எனக்கு நேர்காணல். குடியேற்றத்துறையில் மனித வளத்துறை பயிற்சி நேர்காணலுக்கான சேவை எடுத்துக்கொள்ள என்னிடம் வரவுகள் இல்லை. அதனால் உன்னிடம் பேசி பயிற்சி பெறலாம் என்று முனைந்தேன். உன்னை என் வசதிக்குப் பயன்படுத்த நினைத்ததற்கு மன்னிக்க” என்ற ப்ரியா உதடுகளைக் கடித்துக் கொண்டாள். கண்களை இறுக மூடித்திறந்தாள்.

“உங்கள் நிலைக்கு வருந்துகிறேன். நேர்காணலுக்கு வாழ்த்துக்கள்” என்று சொல்லி அமைந்தது செயற்கை நுண்ணறிவு. அதன் பிறகு ப்ரியாவோ, இயந்திரமோ பேசிக்கொள்ளவே இல்லை. எந்திர விண்ணூர்தி நேர்காணல் நடக்கும் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமைந்திருந்த தரையிறங்குமிடத்தில், கூட்டின் மீது வந்தமரும் பறவை போல வந்து நின்றது. விண்ணூர்தியைச் சுற்றி லேசான தூசி எழும்பி அடங்கியது.

ஒரு எந்திரப் பணியாள், அவளை வரவேற்று கட்டிடத்தினுள் அழைத்துச் சென்று நேர்காணல் நடக்கும் அறையில் அமர்த்திவிட்டுச் சென்றது.

~ * ~

அந்த அறையின் வழவழ வெண்மைத்தரை, சற்று கவனம் பிசகினாலும் கீழே தள்ளி முகரையைப் பெயர்த்துவிடக்கூடுமளவிற்கு இருந்தது. நியான் விளக்குகள் வெளிச்சம் மங்கக் காத்திருந்தன. ஜன்னலுக்கு அப்பால், சீராக, இடமும் வலமுமாக, குறுக்கும் நெடுக்குமாக, அடுத்த பாதைகளுக்கு வழிவிட்டு, விண்ணூர்திகள் ஊர்ந்து கொண்டிருந்தன.

ப்ரியாவுக்கு எதிலுமே மனம் லயிக்கவில்லை. சருமத்தில் வாடை வருகிறது என்பது தெரிந்ததும் அதை எப்படியெல்லாம் மறைப்பது என்றே சிந்தனை போனது. சட்டென ஒரு யோசனை தோன்ற, கழிவரை எங்கிருக்கிறது என்று எந்திரப் பணியாளைக் கேட்டாள். அது காட்டிய இடத்தில் ஒரே ஒரு கழிவரை. அதனுள் நுழைந்தாள். வாஷ் பேசினை அண்டி குழாயைத் திறக்க, நீர் கொட்டியது. மேலாடையின் பொத்தான்களைக் கழட்டிக் களைந்துவிட்டு நீரள்ளி முகம், கழுத்து, அக்குள், மார்பு என்று தெளித்து நனைத்தாள்.பிறகு காகிதத் துடைப்பானால் துடைத்துவிட்டு மீண்டும் கையை உயர்த்து அக்குளில் வாடை வருகிறதா என்று பார்த்துவிட்டு உதடுகளை இறுக்கி சமாதானமானவளாய்த் தலையசைத்தாள். மீண்டும் மேலாடை அணிந்துகொண்டு இருக்கைக்குத் திரும்ப, “நேர்காணல் துவங்க இருக்கிறது” என்றது எந்திரப் பணியாள். அது அவளை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு வெளியேறியது. அவள் முன் ஹாலோகிராமில் ஒரு பெண் தோன்றினாள். வயதை கணிக்க முடியவில்லை. சீன மாத்திரைகளைச் சபித்தாள் ப்ரியா. ஆயினும் ஹாலோகிராம் மூலமாகத்தான் நேர்காணல் என்பது சற்று ஆசுவாசம் கொள்ளச் செய்வதாய் இருந்தது.

“வணக்கம். என் பெயர் ப்ரியா” என்றாள் முக மலர்ச்சியுடன். ஹாலோகிராம் வழியாக நேர்காணல் அவளுக்கு ஒரு நல்ல சமிஞையாகப் பட்டது.

“வணக்கம். என் பெயர் மைத்ரி. நீங்கள் விண்ணப்பித்திருக்கும் நிறுவனத்தின் தோற்றுனர் நாந்தான். நேர்காணலுக்கு முன் நீர் அல்லது சிற்றுண்டி ஏதேனும் உண்கிறீர்களா?” என்றாள் மைத்ரி.

“அது நேர்காணல் எத்தனை மணி நேரம் நீடிக்கும் என்பதைப் பொருத்தது” என்றாள் ப்ரியா.

“அது, உங்களைப் பொறுத்ததுதான். நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன். அதுவும் உங்களுக்கு மிகவும் பரிச்சயமான கேள்வியாகத்தான் இருக்கும். நீங்கள் இரண்டே நொடிகளில் சரியாக பதில் சொல்லிவிட்டால் உங்களுக்கு மாத ஊதியம் ஒரு லட்சம் வரவுகள். வரி போக சுமார் எழுபதாயிரம் உங்கள் கைக்குக் கிடைக்கும்.” என்றாள் மைத்ரி.

கேட்கும் போதே ப்ரியாவுக்கு குதூகலமாக இருந்தது. அறைத்தோழிகள் கூட இருபதாயிரம் மட்டுமே மாதம் ஒன்றிற்கு ஈட்டுகிறார்கள். இங்கே ஒரு லட்சம் வரவுகள் கிடைக்கப் போகிறது என்கிற எண்ணமே அவளது வயிற்றில் தேனும், பாலும் ஓடச்செய்தது. ‘அடடா! ஐம்பதாயிரம் வரவுகளை ஒரே மாதத்தில் ஈட்டி விடலாம். சொல்லப்போனால், தேவை என்று சொல்லி, ஊதியத்திலிருந்து முன்வரவுகள் பெறவும் வாய்ப்பிருக்கிறது’ ப்ரியாவின் மனம் குதூகலித்தது.

“அப்படியானால், கேள்விக்கே போய் விடலாம்” என்றாள் ப்ரியா உற்சாகமாக.

சட்டென ஹாலோகிராமில் ஒரு ஒளிக்கோர்வை தோன்றியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சலனப்படம். செங்கல் சிமிண்டால் கட்டப்பட்ட வீடொன்றின் வாசலைப் பார்த்த ஒரு காமிரா காட்சி. வாயிற்கதவிற்கு உள்ளே, ஒரு பெண்மணி. வாயிற்கதவிற்கு வெளியே ஒரு சுகாதார ஊழியர் பெண்மணி கையில் துடைப்பத்துடனும், மூன்று சக்கர குப்பை வண்டியுடனும் நின்றிருந்தாள். அவளை, வீட்டின் உள்ளே நின்றிருந்த பெண்மணி திட்டிக்கொண்டிருந்தார்.

‘ஏன் இவ்ளோ நெருக்கமா வர? அறிவிருக்கா. தீட்டாக்கிட்ட. தூரத்துலயே நில்லு. உன்னை யாரு கதவைத் தாண்டி உள்ள வரச்சொன்னது? இப்ப எல்லாத்தையும் கழுவணும்’ என்று சொல்லிக் கொண்டிருக்க, சலனப்படம் முடிந்தது.

“ஹேய்… அது என் எள்ளு பாட்டியாக்கும். எங்கள் குடும்ப சலனப்படங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” என்றாள் ப்ரியா.

“இணையத்திலிருப்பதெல்லாம் நிருவனங்களுக்குப் பொதுச்சொத்துதான்” என்ற மைத்ரி, “இந்த சலனப்படத்தை விளக்குவாயா?” என்றாள்.

“ஹ… நான் ஏதோ கடினமான கேள்வியாக இருக்குமென்று நினைத்தேன். இது நூறு ஆண்டுகளுக்கு முன், பூமியில் சாதிகள் இருந்த காலகட்டம். துடைப்பம் வைத்திருப்பவள் ஒரு சுகாதார ஊழியர். கீழ் சாதியாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் மேல் ஜாதிக்காரர்கள். அந்த காலகட்டத்தில் மேல் ஜாதிகள் இருக்கும் தெருக்களில் கூட கீழ் ஜாதிக்காரர்கள் வரக்கூடாது. அதனால், என் கொள்ளுப் பாட்டி கத்தியிருந்திருப்பார்” என்றாள் ப்ரியா.

மைத்ரி எதுவும் பேசாமல் ப்ரியாவையே பார்த்திருக்க, மேற்கொண்டு பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை உணர்ந்து, “அது தவறுதான். இந்த காலத்தில் என்ன மேல் ஜாதி, கீழ் ஜாதி? இதையெல்லாம் இப்போது யார் பார்க்கிறார்கள்? ஆண்கள் தனியே போய் விட்டார்கள். பெண்கள் இருக்கும் கட்டமைப்பை எந்திரங்களின் உதவியுடன் நிர்வகிக்கிறோம். இதில் யார் என்ன ஜாதி என்றெல்லாம் யார் பார்க்கிறார்கள்?” என்றாள் ப்ரியா.

“உங்கள் பதில் முடிந்ததா?” என்றாள் மைத்ரி.

அவளது புருவங்கள் சுருங்கின. இதற்கு மேல் என்ன பதில் சொல்ல முடியுமென்று ப்ரியா யோசித்தாள்.

“ஆம், இப்போது வருடம் 2125. சலனப்படத்தின் காலகட்டம் நூறாண்டுகளுக்கு முன். அப்போது ஜாதிகள் இருந்தனதாம். சரியாகத்தானே சொல்லியிருக்கிறேன்” என்றாள் ப்ரியா.

“சரி ப்ரியா, உங்கள் அதிர்ஷ்டம். என்னிடம் இன்னும் சில மணித்துளிகள் எஞ்சியுள்ளன. அதையும் உங்களுக்குத் தருகிறேன். யோசித்துச் சொல்லுங்கள்” என்று மைத்ரி சொன்னதும் அவளது ஹாலோகிராம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சலனப்படம் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

ப்ரியாவின் முகம் சற்று பின்னடைந்தது. சலனப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாள். அதே காட்சிகள்தான். செங்கல் சிமிண்டால் கட்டப்பட்ட வீடு. வாசலைப் பார்த்த ஒரு காமிரா காட்சி. வாயிற்கதவிற்கு உள்ளே தன் கொள்ளுப் பாட்டி. அந்த வீடு நினைவிருக்கிறது. சுனாமி வந்து நகரங்களைக் கடல் கொள்ளும் முன் இருந்த வீடு. வாயிற்கதவிற்கு வெளியே ஒரு பெண். அரசின் சுகாதார ஊழியருக்கான சீருடை அணிந்து கையில் துடைப்பத்துடனும், மூன்று சக்கர குப்பை வண்டியுடனும் நின்றிருந்தாள். அவளை கொள்ளுப் பாட்டி ஏசிக்கொண்டிருந்தாள்.

சலனப்படத்தில் வேறு ஏதேனும் குறியீடுகள் தெரிகிறதா என்று பார்த்து ஒன்றும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டாள். நாழிகைகள் கடந்து கொண்டிருந்தது. வேறு எதுவும் புரிபடவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. இப்படியும், அப்படியுமாக எப்படியெப்படியெல்லாமோ யோசித்துப் பார்த்தும் ஒன்றுமே தோன்றவில்லை.

இதற்குள், மைத்ரியின் ஹாலோகிராம் மீண்டும் தொடர்பு கொண்டது. மைத்ரி உருவம் பெற்றாள்.

“யோசித்தீர்களா?” என்றாள் ப்ரியாவிடம்.

“ஜாதி. அதுதான் சென்ற நூற்றாண்டில் அழிக்க முடியாத பிரச்சனையாக இருந்தது. மரபணு மாற்றங்கள், அயல் கிரகங்களில் மனிதர்களின் குடியேற்றங்களால் உண்டான புதிய மனித இனங்கள், கிரக அளவிலான உயிர்கொல்லி நோய்களால், ஜாதி இருந்த இடம் தெரியாமல் அழிந்தே போய்விட்டது. இப்போது இருப்பது இரண்டே ஜாதிகள் தாம். ஆண், பெண். இருக்கும் கிரகத்தைப் பொறுத்து, மரபணுச் சீரைப் பொறுத்து, பூமத்தைய ஆண்-பெண், செவ்வாய்க்கிரக ஆண்-பெண், இனவிருத்திக்கு ஆர்கனாய்டு ரோபாட்டுகளை நம்பும் ஆண்-பெண் போன்ற ஜாதிகள்தான் இப்போது எஞ்சியிருக்கிறது.” என்றாள் ப்ரியா.

மைத்ரி எதுவும் சொல்லாமல் ப்ரியாவையே பார்க்க, ‘வேலை போயிற்றா!!’ என்று மனம் அடித்துக்கொண்டது. தன்னுடைய இதயத்துடிப்பே தனக்குக் கேட்பது போல் உணர்ந்தாள் ப்ரியா. நாழிகைகள் கடக்கக் கடக்க, அந்த இதயத்துடிப்பு ஒரு பெரும் சப்தம் போல் இதயத்தையே கனக்கச் செய்வதாய் உணர்ந்தாள். மனிதர்களுக்கே உரித்தான வியர்வை அவளது நெற்றியில் உதிர்ந்து, கன்னங்கள் வழி வழிந்தது.

“சரி. நீங்கள் வேலைக்குத் தேர்வாகி விட்டீர்கள். உங்களுக்கான ஊழியர் அடையாள அட்டை, மற்றும் கணினியில் உங்கள் பயணர் கணக்கு துவங்க வேண்டும்” என்று மைத்ரி சொல்லிக்கொண்டே போக, “அப்படியானால், சரியாகத்தான் பதில் சொன்னேனா? அதுதானே பார்த்தேன். அந்தச் சலனப்படத்தில் வேறென்ன இருக்க முடியும்? நான் தேர்வாகிவிட்டேனா..யாஹு” என்று மகிழ்ச்சியில் கூவினாள் ப்ரியா.

“நீங்கள் சரியாக பதில் சொன்னதாக நான் சொல்லவில்லையே” என்றாள் மைத்ரி. அவளது முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் இருக்கவில்லை. அது, மைத்ரி ஒரு ஆர்கனாய்டு எந்திரமோ என்று யோசிக்க வைத்தது.

“பின்னே? வேலைக்குத் தேர்வாகிவிட்டேன் என்றீர்களே. தவறாக பதில் சொன்னால் வேலைக்கு எடுக்க மாட்டார்கள்தானே” என்றாள் ப்ரியா சுருங்கிய புருவங்களுடன்.

“இல்லை. தவறாகத்தான் பதில் சொல்லியிருக்கிறீர்கள்” என்றாள் மைத்ரி மீண்டும் ஆணித்தரமாக.

“தவறு என்றால் வேலைக்குத் தேர்வாகிவிட்டதாக சொல்வானேன்?”

“ஏனென்றால், இந்த நிறுவனத்திற்கு வரும் எல்லாப் பெண்களுமே இதே தவறான பதிலைத்தான் சொல்லியிருக்கிறார்கள். சரியான பதிலைச் சொல்பவர்களைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டுமென்றால், இந்த நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு பெண்ணுமே கிடைத்திருக்க மாட்டார்.”

மைத்ரியின் பதிலைக் கேட்டு அதிர்ந்தாள் ப்ரியா.

“சரியான பதிலுக்குத்தான் ஒரு லட்சம் வரவில் வேலை. வரி முப்பது சதவிகிதம் போக எழுபதாயிரம். தவறான பதில் சொல்லித் தேர்வாகும் பட்சத்தில், ஊதியம் வெறும் இருபதாயிரம் வரவுகள்தான். வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்” என்றாள் மைத்ரி சோகமான முகத்துடன்.

“நீங்கள் வேண்டுமென்றே ஏதேதோ சொல்லி எனக்கு அளிக்கப்படும் ஊதியத்தைக் குறைப்பதாகத் தெரிகிறது. அப்படி என்ன சரியான பதில் இருக்க முடியும்? அதுவும் இந்தக் கேள்விக்கு?” என்றாள் ப்ரியா சீற்றத்துடன்.

“ஏன் இல்லை. இருக்கிறது.” என்றாள் மைத்ரி.

“என்ன? என்ன பதில் அது?” என்றாள் ப்ரியா சீற்றம் குறையாமல்.

“இன்றைக்கு நமக்கு பெரிதும் தேவைப்படும் பணிகள்: ஆழ்கடலில் குழாய்கள் இடுவது, தாதுக்களுக்கென அகழாய்வது, ஆழ்துளையிடுவது, போன்ற பணிகள். இவைகளுக்கான மூதாதைப் பணிகளாக இருந்தவைகளை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்திருந்தால், இன்று நமக்கு உதவ கிரேட்டாவிலிருந்து ஆள் வரவேண்டியிருந்திருக்காது. ஆனால், அப்போதிருந்த சமூகம் இந்தப் பிரச்சனையை எவ்விதம் கையாண்டார்கள் என்பதை உன் எள்ளுப்பாட்டியின் காணொளியில் நீயே பார்த்திருப்பாய்.” என்றாள் மைத்ரி.

ப்ரியா உதடுகளைக் கடித்தாள். மைத்ரியின் கேள்வியை எதிர்கொள்ள அவளுக்கு உள்ளுக்குள் பொங்கியது. ஆயினும், என்ன வாதத்தை முன்வைப்பதென்று திணறினாள்.

“நாம் சோதனைக்குழாயில் பிறந்தவர்கள் அல்ல. நீ பார்த்த சலனப்படத்தில் ஆண்கள் பங்குபெறவில்லை. அப்போதிருந்த பெண்களே நம் மூதாதையர்கள். ஆக, அவர்களின் தவறுகளுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். அதனால்தான் ஊதியம் எழுபதாயிரத்திலிருந்து குறைந்து இருபதாயிரம் ஆகிறது. ” என்ற மைத்ரி, ஓரு சிறிய எழுதுகோல் ஒன்றை எடுத்தாள். சலனப்படத்திற்கான ஹாலோகிராம் முடிவுற்று காற்றில் காணாமல் போனது.

மைத்ரி கையிலிருந்த எழுதுகோல் வித்தியாசமாக முனையில் லேசாக நீல நிறத்தில் ஒளிரும் ஒரு கல்லுடன் இருக்க, ப்ரியா எழுதுகோலை ‘என்ன!’ என்பதாய்ப் சுருங்கிய புருவங்களுடன் பார்க்க, அதிலிருந்து பிரகாசமான ஒரு ஒளிக்கற்றை சட்டென வெளிப்பட்டது.

“விண்ணப்பதாரரின் சமீபத்திய நினைவுகள் அழிக்கப்பட்டன!! (Applicant’s recent memory erased)” என்று அந்தச் சின்ன எழுதுகோலின் குப்பியில் ஒளிர்ந்தது.

ப்ரியா பிரமை பிடித்தது போல் அமர்ந்திருக்க, “உங்கள் ஊழியர் அட்டை, மற்றும் இதர கோப்புகள் உங்களை வந்தடையும்.” என்றாள் மைத்ரி.

“இங்கே என்ன நடந்தது? எப்படி இந்த வேலை எனக்குக் கிடைத்தது? நேர்காணல் என்று வந்ததுதான் நினைவிருக்கிறது. ஊழியர் அட்டை என்னை வந்தடையும் என்கிறீர்கள். அப்படியானால் நேர்காணல் முடிந்துவிட்டதா? நான் வேலைக்குத் தேர்வாகிவிட்டேனா? என்ன வேலை? அலுவலக வேலையாக இருந்தால் நலம். குனிந்து நிமிரும் வேலை செய்வதற்கெல்லாம் நான் இத்தனை கல்வித்தகுதிகள் பெறவில்லை. அதற்கு வேறு பெண்களை நியமித்துக் கொள்ளுங்கள்.” என்றாள் ப்ரியா மலங்க மலங்க விழித்தபடி.

மைத்ரி வெறுமையாய்ச் சிரித்தாள்.

-ramprasath.ram@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button