இணைய இதழ் 121தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள் – மு.இராமனாதன் – அத்தியாயம் 22

ஹாங்காங்கில் மரணிப்பது

“மரணம் தவிர்க்க முடியாததும் அற்பமானதும் ஆகும்.” – இப்படிச் சொன்னவர் சமீபத்தில் காலமான மலையாளத் திரைக்கலைஞர் சீனிவாசன். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவர் தொடர்பான காணொலி நறுக்குகள் சமூக ஊடகங்களை நிறைத்தன. அதில் ஒன்றில்தான் சீனிவாசன் அவ்விதம் சொல்லியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பெரிதும் உடல் நலிவுற்று, பின் மீண்டெழுந்தார். அவ்வமயம் அவர் வழங்கிய நேர்காணல் அது.

மரணத்தைத் தவிர்க்க ஏலாது, நாம் அறிவோம். ‘நெருநல் உளனொருவன் (நேற்று இருந்தவன்) இன்றில்லை’ என்பார் வள்ளுவர். ‘நேற்றிருந்தாள், இன்று வெந்து நீறானாள்’ என்று தம் அன்னைக்காக இரங்குவார் பட்டினத்தார். ஆனால், நம்மில் பலர், வந்தவரெல்லாம் இங்கே தங்கிவிடலாம் என்று நம்புகிறோம். பாரதக் கதையொன்றில் தருமன் யட்சனிடம் சொல்வான்: ‘நாளாந்தம் மரணங்களைப் பார்க்கும் மனிதன், தன்னையும் அது ஒரு நாள் தீண்டும் என்று நினைப்பதில்லை, அதுவே இந்தப் பூவுலகின் ஆகக்கூடிய வியப்பு.’

இப்படியான தத்துவ விசாரங்கள் சீனச் சமூகத்திலும் உண்டு. மரணத்தை வாழ்வின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும் என்று அறிவுரைக்கிறது தாவோயிசம். மரணமல்ல, வாழ்வே முக்கியம் என்கிறது கன்பூசியத் தத்துவம். மரணம் எப்படித் தவிர்க்க முடியாததோ அவ்விதமே பல சமூகங்களிலும் ஈமச்சடங்குகளுக்கும் தவிர்க்க முடியாத பங்கு இருக்கிறது. ஆனால், இந்தியச் சடங்குகளுக்கும் சீனச் சடங்குகளுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஹாங்காங்கில் நிகழும் இந்தியர்களின் ஈமச்சடங்குகள் இவ்விரண்டிற்கும் இடையில் அமைகின்றன.


வந்தாரா சின்?

நானறிந்த கதை ஒன்றிலிருந்து தொடங்குகிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நான் பணியாற்றிய நிறுவனம் ஹாங்காங் உள்கட்டமைப்புத் திட்டமொன்றின் ஆலோசகராக இருந்தது. அன்றைய தினம் நாங்கள் ஒரு பொறியியல் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை நான் முந்தின நாள் இரவே முடித்துவிட்டேன். காலையில் கடைசி நேரச் சரி பார்த்தலில் ஈடுப்பட்டிருந்தேன். பத்து மணியளவில் ஒரு தொலைபேசி வந்தது. அழைத்தவர் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். அவர் பெயரைச் ‘சின்’ என்று வைத்துக்கொள்வோம். அவர்தான் இந்த அறிக்கையை அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னர்தான் சமர்ப்பிக்க முடியும். எப்போதும் அறிக்கைகளை அச்சிடுவதற்கு முன்னர் என்னை உடனிருத்தி படித்துப் பார்ப்பார். திருத்தங்கள் இருந்தால் சொல்லுவார். அன்றைய தினம் அவரால் அதைச் செய்ய முடியாது. அவருக்கு அவகாசம் இல்லை. ஆகவே, நானே அறிக்கையைச் சரி பார்த்து அச்சிட்டு விடலாம். அவர் மதியம் வந்து ஒப்பமிடுவார். உடன் சமர்ப்பிக்கலாம். இப்படிச் சொன்னார். நான் சரி என்றேன். இது அவரது வழமையல்ல. ஏதேனும் காரணங்கள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

மதியம் மூன்று மணியளவில் மீண்டும் அழைத்தார். இன்று அவரால் வர முடியாது. கெடுவைத் தவறவிடுவது சரியல்ல. அவர் சார்பாக நானே ஒப்பமிட்டு அறிக்கையைச் சமர்ப்பித்து விடலாம். நான் அவ்விதமே செய்தேன். சின் ஏன் அலுவலகம் வரவில்லை? காரணம் எனக்கு அடுத்த நாள் தெரிய வரும்.

மரணத்தில் நிதானம்

முந்தின தினம் சின்னின் தந்தையார் காலமாகிவிட்டார். அவர் அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காலையில் முன்னேற்றம் தென்பட்டிருக்கிறது. மதியம் சின் அலுவலகம் வர உத்தேசித்திருக்கிறார். ஆனால், மதியம் தந்தையாரின் உயிர் பிரிந்துவிட்டது. உடன் என்னை அழைத்து அறிக்கையைச் சமர்ப்பிக்கச் சொல்லிவிட்டார் சின். தொடர்ந்து மருத்துவச் சான்றிதழ் பெற்று, தந்தையாரின் உடலத்தை பிணவறைக்கு மாற்றியிருக்கிறார். பொதுவாக ஹாங்காங்கில் ஒருவர் இறந்தவுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை. சின்னின் தம்பி அமெரிக்காவில் இருந்தார். உறவினர்கள் சிலர் சீனாவில் இருந்தனர். இவர்களோடு ஆலோசித்து எல்லோருக்கும் வசதிப்பட்ட நாளில் அடக்கம் நடக்கும். அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். அதுகாறும் சடலம் பிணவறையில் பேணப்படும். அடுத்த நாள் சின் எப்போதும் போல் அலுவலகம் வந்துவிட்டார்.

இந்தக் கதை சிலருக்கு வினோதமாகத் தோன்றலாம். சின் பந்த பாசம் இல்லாதவர் என்று கூடச் சிலர் நினைக்கலாம். ஹாங்காங்கில் ஒரு மரணத்தைத் தொடர்ந்து துக்கம் எவ்விதம் அனுசரிக்கப்படுகிறது என்பதை அறிந்தால் இந்தக் கருத்து மாறலாம்.

சட்டமும் சடங்கும்

ஹாங்காங் அடுக்ககங்களால் ஆனது. யாரும் சடலத்தை வீட்டில் வைப்பதில்லை. துக்கம் விசாரிக்க யாரும் வீடுகளுக்குச் செல்வதில்லை. வீட்டிலோ வெளியிலோ இருக்கும்போது ஒருவரது உயிர் பிரிந்தால், சடலத்தை உடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வகையான இறப்புகள் ‘இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டவர்’ (brought dead) எனும் வகைமையில் வரும். இவ்வகையான இறப்புகள் அனைத்தையும் ஒரு நீதிமன்ற மரண விசாரணை அதிகாரி (coroner) விசாரிப்பார். தேவைப்பட்டால் பிணக்கூறு ஆய்வுக்கு (autopsy) உத்தரவிடுவார். இயற்கை மரணம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் அதற்கான சான்றளிப்பார். இதற்கு இரண்டு மூன்று நாட்களாகும். இந்தச் சான்று இருந்தால் மட்டுமே அடக்கம் செய்ய ஏலும். மருத்துவமனை மரணங்களுக்கு இந்தச் சான்று வேண்டியிராது.

இதன் பிறகு மரித்தவரின் குடும்பத்தினர் அடக்கம் செய்ய ஒரு நாளைத் தெரிவு செய்வார்கள். முன்னதாகச் சடலம் பிணவறையிலிருந்து ஈமச் சடங்கு நிலையத்திற்குக் (funeral parlour) கொண்டு வரப்படும். அங்கு பதனம் செய்யப்பட்டு நன்கு அலங்கரிக்கப்படும். மேலை நாடுகளிலும் இந்த வழமை உண்டு.

‘தி காட் ஃபாதர்’ (1972) படம் பார்த்தவர்கள் முதல் காட்சியை மறந்திருக்கமாட்டார்கள். காட் ஃபாதர் கோர்லியோனி இல்லத்திற்கு ஒரு நபர் உதவி கேட்டு வருவார். இரண்டு இளைஞர்கள் அவரது மகளிடம் முறைகேடாக நடந்து, அவளது முகத்தையும் சிதைத்து விட்டார்கள். இவர் போலிஸில் புகார் கொடுத்தார். அவர்கள் அந்த இளைஞர்களை விசாரித்து, அன்றே விட்டுவிட்டார்கள். நீதி கிடைக்கவில்லை. இப்போது கோர்லியோனியிடம் வந்திருக்கிறார். ‘இனி உங்கள் எதிரிகள், எனது எதிரிகள். உங்களுக்கு நீதி கிடைக்கும்’ என்பார் கோர்லியோனி. வந்தவர் கோர்லியோனியின் கைகளை முத்தமிடுவார். ‘இதற்கு நான் என்ன கைமாறு செய்ய வேண்டும், காட் ஃபாதர்?’. கோர்லியானி பதில் சொல்வார்: ‘இப்போது வேண்டாம். தேவைப்படும்போது நானே கேட்பேன்’

பின்னாளில் கோர்லியானிக்கு அந்தத் தேவை வரும். அவரது மகன் சன்னியை எதிராளிகள் கொன்றுவிடுவார்கள். முகத்தையும் உடலையும் குண்டுகளால் துளைத்து விடுவார்கள். கோர்லியானி முதல் காட்சியில் வந்தவரிடம் போவார். அவர் ஈமச் சடங்கு நிலையத்தில் மேக்கப் கலைஞர். தனது மகனை அவர் நன்றாக அலங்கரிக்க வேண்டும். அவன் சிதைந்த முகத்தைச் சீராக்க வேண்டும். தனது மனைவி இறந்த மகனைப் பார்க்கும்போது அது காணத்தக்க கோலத்தில் இருக்க வேண்டும். மேக்கப் கலைஞர் தனது திறனையெல்லாம் காட்ட வேண்டும். காட் ஃபாதரின் வேண்டுகோளை அவர் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவார்.

மேலை நாடுகளைப் போலவே பதனமிடுவதும் அலங்கரிப்பதும் ஹாங்காங்கிலும் முக்கியமானவை. சவப்பெட்டிகளும் மிகுந்த கலை நயத்தோடு உருவாக்கப்படும். ஈமச் சடங்கு நிலையங்களில் பல தளங்கள் இருக்கும், ஒவ்வொரு தளத்திலும் பல அறைகள் இருக்கும். எந்த நிலையத்தில், எந்தத் தளத்தில், எந்த அறையில், எந்த நாளில், என்ன நேரத்தில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதை அழைப்பிதழில் குறிப்பிடுவார்கள். சவப்பெட்டியின் தலை மாட்டில் இறந்தவரின் பெரிய படம் வைக்கப்படும். இறந்தவரின் குடும்பத்தினர் அந்த அறையில் சவப்பெட்டியின் அருகே இருப்பார்கள். அவர்கள் பொதுவாக வெள்ளை அல்லது கறுப்பு ஆடை தரித்திருப்பார்கள். சிவப்பு கொண்டாட்டத்தின் நிறம். அடர் நிறங்கள் மகிழ்ச்சியைக் குறிக்கும். ஆகவே, இந்த நிறங்களை அஞ்சலி செலுத்த வருவோரும் தவிர்க்க வேண்டும். வெளிர் நிற ஆடைகள் அணியலாம். சின்னின் தந்தையாரின் ஈமச்சடங்கிற்கு நாங்கள், அணுக்கமான அலுவலக நண்பர்கள் சிலர், வெள்ளைச் சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்து சென்றோம். பெண்கள் கறுப்புப் பாவாடை (skirt) அணிந்தனர். சின் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் தூய வெண்ணிற ஆடை அணிந்திருந்தனர்.

ஈமச் சடங்கு நிலையத்தில் சடலத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வைத்திருப்பார்கள். பிறகு, தமிழ்ச் சொல் வங்கியில் இப்போது நிலைபெற்றுவிட்ட ‘அமரர் ஊர்தி’யில் ஏற்றி மயானத்திற்குக் கொண்டு செல்வார்கள். ஊர்தியின் முன்புறம் இறந்தவரின் படம் மாட்டப்படும். குடும்பத்தினரும் அதே ஊர்தியில் செல்வார்கள். விருப்பமுள்ளோர் மயானத்திற்குச் செல்லலாம். அவர்களுக்குத் தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

நீத்தார் பெருமை

சீனர்கள் பராம்பரியமாக சடலத்தை புதைத்தே வந்திருக்கிறார்கள். புதைத்த இடத்தில் கல்லறை எழுப்புவார்கள். இந்த இடத்தை துப்புரவாக வைத்துக்கொள்ள வேண்டும். சீனாவின் தொன்மை இலக்கியம் ஷிழ் சிங் (Shi Jing). கிமு 500 வாக்கில் தொகுக்கப்பட்டது. இதில் இடம் பெறும் ‘கல்லறை வாசல்’ (பாடல் எண்: 141) எனும் பாடல் இங்கு கருதத்தக்கது.

கல்லறை வாசலில் உள்ளது முற்புதர்
கோடரி கொண்டு வெட்டிட வேண்டும்.
மனிதனும் கூட நல்லவன் இல்லை
நாட்டு மக்களும் அறிவார் இதனை….


-என்று தொடரும் இந்தப் பாடலைச் சீன மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழி பெயர்த்தவர் பயணி தரன். (‘வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’, கவித்தொகை, காலச்சுவடு, 2012). இந்தப் பாடலுக்குப் பின் இயங்கும் சீனப் பண்பாட்டை பயணி தரன் இவ்விதம் விளக்குகிறார்:

“முன்னோரை மதித்தல் என்பது நெறிப்படுத்தும் ஒரு வாழ்வு முறை. அவர்களது மதிப்பீடுகளை, வாழ்வின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, நம் வாழ்வின் உண்மைகளை உரைகல்லாக வைத்து, மேன்மை அடைய அது வழி வகுக்கிறது. அது அவர்களுக்குச் செய்யும் மரியாதை மட்டுமின்றி, நம் வாழ்வுக்கான வழிகாட்டலும்தான். முன்னோரைப் புறக்கணித்தாலோ, வீழ்ச்சி அட்டிக்கும். கல்லறை வாசலில் முற்புதர் மண்டிக் கிடக்கிறது. அதைக் கோடரி கொண்டு வெட்டிச் சுத்தப்படுத்தி மரியாதைக்குரிய இடமாக மாற்ற வேண்டும். ஆனால், அதற்குப் பொறுப்பானவன், நல்லவனில்லை. மக்களுக்கும் அது தெரிகிறது…”

நீத்தாரை மதித்தல் சீனப் பண்பாட்டின் கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தக் கல்லறைப் பராமரிப்பு ஆண்டிற்கு ஒரு முறை திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிங் மிங் திருவிழா ஏப்ரல் முதல் வாரத்தில் வரும். குடும்பத்தினர் அனைவரும் நல்ல உடை அணிந்து இறந்தவர்களின் கல்லறக்குச் செல்வார்கள். அதைத் துப்புரவாக்குவார்கள். நீத்தாருக்குப் பிரியமான உணவு வகைகளைப் படையலிடுவார்கள். ஊதுபத்திகளை ஏற்றுவார்கள். தூபக் காகிதங்களுக்கு (joss paper) எரியூட்டுவார்கள். இந்தக் காகிதங்களில் ரொக்க மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும். இது முன்னோருக்குப் பின்னோர் வழங்கும் அன்பளிப்பு.

நிணம் தீயிலிட்டதன்ன…

சீனா நகரமயமாகி வருகிறது. இட நெருக்கடி மிகுந்துவிட்டது. ஆதலால் நகரங்களில் புதைப்பதற்கு பதில் எரியூட்டுவது வழக்கமாகி வருகிறது. ஹாங்காங்கில் ஐம்பதுகளிலிருந்தே புதைப்பது குறையலானது. இப்போது இஸ்லாமியர்கள் தவிர மிகப் பலரும் எரியூட்டவே செய்கிறார்கள். மின் மயானத்தில் எரியூட்டிய பின் அஸ்தியை ஒரு கலசத்தில் அடக்கித் தருவார்கள். இந்தக் கலசத்தை மயானத்தில் புதைத்து இறந்தவரின் பெயரை கல்லில் பதித்து வைப்பது முன்னர் வழக்கத்தில் இருந்தது. இப்போது அதற்கும் இடமில்லை. ஆகவே சாம்பல் தாழிகள் (columbarium) பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இது வங்கி லாக்கர்களை ஒத்திருக்கும். கட்டணம் செலுத்தி குறிப்பட்ட கால அளவிற்கு இந்தத் தாழிகளைப் பயன்கொள்ளலாம். சிங் மிங் திருநாளின் போது இந்தத் தாழிகளில் சடங்குகளை நிறைவேற்றலாம். அரசுத் தாழிகள், தனியார் தாழிகள், இரண்டும் உண்டு. பின்னதில் கட்டணம் கூடுதலாக இருக்கும். சின் பின்னதில்தான் தன் தந்தையாரின் அஸ்திக் கலசத்தைப் பேணி வருகிறார்.

சாவுக்கு பேதங்களில்லை. அது ஊள்ளூர்க்காரர்களை மட்டுமில்ல, புலம் பெயர்ந்து வாழ்வோரையும் தீண்டும். இதற்கு ஹாங்காங் வாழ் இந்தியர்கள் விலக்காக முடியாது. தவிர, சாவு சொல்லிக்கொண்டு வருவதில்லை. அது கூடவே அதிர்ச்சியையையும் துக்கத்தையும் அழைத்துக்கொண்டு வரும். இதற்கிடையில்தான் புலம் பெயர்ந்த இந்தியக் குடும்பங்கள் தாங்கள் அதிகம் அறிந்திராத ஹாங்காங் மண்ணின் நெறிகளுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டு தங்கள் அன்பானவரின் ஈமச் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். இதில் இந்தியர்களுக்கு இரண்டு அமைப்புகள் கைகொடுக்கும். ஒன்று, ஹாங்காங் இந்துச் சங்கம், இரண்டு, ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கம். ஹாங்காங்கில் நான் அஞ்சலி செலுத்திய இந்தியர்களின் ஈமச் சடங்குகள் அனைத்தும் இவ்விரு சங்கங்களின் ஏதோ ஒன்றின் ஒத்தாசையோடு நிகழ்ந்தவைதாம்.

ஹாங்காங்கில் மதம்

ஹாங்காங்கில் மதம் கட்டாயமில்லை, அது பிறப்பால் வருவதுமில்லை. அப்பா தாவோயிசத்தைப் பின்பற்றுவார். மகனுக்கும் மதம் இராது. அம்மா புத்த மதத்திலும் மகள் கிறிஸ்துவத்திலும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். பண்டிகைகளும் சடங்குகளும் இனம் சார்ந்தவை. மதம் சார்ந்தவை அன்று. முக்கியமாக, ஹாங்காங் ஒரு மதச் சார்பற்ற நாடு. எல்லா சமயத்தினருக்கும் வழிபாட்டுத் தலத்திற்கான இடத்தை அரசு வழங்கியிருக்கிறது. எல்லா சமயத்தினரும் அவரவர் நம்பிக்கைகளைப் பேணலாம், அவரவர் சடங்குகளைப் பின்பற்றலாம்.

இந்துக்களின் மரணம்

ஹாங்காங் இந்துச் சங்கம் ஐம்பதுகளில் தொடங்கப்பட்டது. அரசு, நகரின் புகழ் பெற்ற ஹாப்பி வேலி குதிரைப் பந்தய மைதானத்திற்கு எதிராக உள்ள இடத்தை இந்து ஆலயத்திற்காக வழங்கியது. இந்த இடத்தில் ஆலயத்தை நிறுவியதும் அதைப் பராமரித்து வருவதும் இந்துச் சங்கம். மேலதிகமாக, ஹாங்காங்கில் மரணிக்கும் இந்துக்களின் ஈமச் சடங்கிற்கு சங்கம் உதவி வருகிறது.

மரணம் மருத்துவமனையில் நிகழவில்லையென்றால், முதலில் மருத்துவரின் சான்றுக்கும், தொடர்ந்து பிணவறையில் சடலத்தைப் பாதுகாக்கவும் சங்கம் ஏற்பாடு செய்யும். அடுத்து, நீதிமன்ற மரண விசாரணை அதிகாரியின் சான்றுக்கும் ஏற்பாடு செய்யும். குடும்பத்தினருக்கு இசைந்த நாளில் ஈமச் சடங்கு நிலையம், அமரர் ஊர்தி, மின் மயானம் முதலானவற்றைப் பதிவு செய்யும். புரோகிதர் ஒருவரையும் ஏற்பாடு செய்து தரும்.

மின் மயானத்தில் கொள்ளி வைக்க வேண்டியதில்லை. எனினும் அது அடையாளப்பூர்வமாகத் தொடர்கிறது. நம்மூர்களில் மின் எரியூட்டிக்குள் சடலத்தைச் செலுத்துவதற்கு முன்னதாக, கொள்ளி வைக்கும் முறையுள்ளவர், இறந்தவரின் நெஞ்சில் சூடத்தை ஏற்றுவார். இதுவேதான் ஹாங்காங்கில் இந்துக்களின் மரணத்திலும் நடக்கிறது. சூடத்திற்கு பதில் சந்தனக் கட்டைத் துண்டுகள் வைக்கப்படுவதும் உண்டு. அஸ்திக் கலசம் அடுத்த நாள் கிடைக்கும். இதைத் தென் சீனக் கடலில், அரசு நிர்ணயித்த குறிப்பிட்ட இடங்களில் (மட்டும்) கரைக்கலாம். இதற்கும் புரோகிதர் வருவார். முதல் நாள், சடலம் ஈமச் சடங்கு நிலையத்திற்கு கொண்டு வரப்படுவதிலிருந்து அடுத்த நாள் அஸ்தி கரைக்கப்படும் வரை இந்துச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கூடவே இருப்பார்கள்.

இஸ்லாமியர் மரணம்

ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கம் (IMA) 1979-இல் தொடங்கப்பட்டது. 1970 முதற்கொண்டு ஹாங்காங்கில் உள்ள ஐந்து பள்ளிவாசல்களையும் இரண்டு அடக்கத்தலங்களையும் ‘Incorporated Trustees of the Islamic Community Fund of Hong Kong’ எனும் அமைப்பு நிர்வகித்து வந்தது. இதில் சீன, போரா, பாகிஸ்தானிய முஸ்லிம்களின் பிரதிநிதிகள் தக்கார்களாக இருந்து வந்தனர். 1981 முதல் இந்திய முஸ்லிம் சங்கத்தின் பிரதிநிதிகளும் தக்கார்களாக இணைந்தனர்.

இஸ்லாமியர்கள் சடலங்களைப் புதைப்பதால் அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சிறிது வேறுபடும். ஹாங்காங்கில் இந்திய இஸ்லாமியர் ஒருவர் மரணித்தால், இந்திய முஸ்லிம் சங்கத்திற்குச் செய்தி போகும். ஹாங்காங் அரசு, ஹேப்பி வேலி, சாய் வான் என்கிற இரண்டு இடங்களில் இஸ்லாமியர்களுக்கு அடக்கத்தலங்களை ஒதுக்கியிருக்கிறது. முன்னதில் நிலத்தின் மதிப்பு அதிகம், அங்கே அடக்கினால் செலவு கூடும். குடும்பத்தினர் இரண்டு இடங்களில் எங்கே அடக்க விரும்புகிறார்கள் என்பதைச் சங்கம் அறிந்துகொள்ளும். தொடர்ந்து மருத்துவர் சான்று, தேவைப்பட்டால் நீதிமன்ற விசாரணை அதிகாரியின் சான்று முதலானவற்றுக்கும் சங்கம் ஏற்பாடு செய்யும். அடக்கத்தலத்தில் இடத்தை ஒதுக்கி அங்கு ‘மையக் குழி’ தோண்டுவதற்கு ஏற்பாடு செய்யும். சாய் வான்-இல் ஒதுக்கப்பட்ட இடம் சரிவுகளால் ஆனது. ஹாங்காங்கில் சரிவுகளில் பள்ளம் தோண்டுவதற்குக் கடுமையான விதி முறைகள் உள்ளன. அவற்றுக்கு உட்பட்டு எல்லாப் பாதுகாப்பு விதிகளும் அனுசரிக்கப்படும். சமீபத்தில் இங்கு சில கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியர்கள் பொதுவாக ஈமச்சடங்கு நிலையங்களைப் பயன்கொள்வதில்லை. சடலங்களைப் பாதுகாப்பதற்கும், குளிப்பாட்டி, உடலத்தில் நறுமணத் தைலங்கள் பூசி, வெள்ளுடை அணிவிப்பதற்குமான
‘மையத் அறைகள்’ அடக்கத்தலங்களிலேயே அமைந்திருக்கின்றன. போலவே அஞ்சலி செலுத்துவதற்கும் தொழுவதற்குமான அரங்கங்களும் அங்கேயே இருக்கின்றன.

[சாய் வான் அடக்கத்தலம்]

இஸ்லாமியர்கள் மரணம் சம்பவித்த இரண்டொரு நாட்களில் அடக்க விரும்புவார்கள். இந்துக்களும் பொதுவாக மூன்று நான்கு நாட்களில் எரியூட்டி விடுவார்கள். சீனர்களைப் போல் வாரக்கணக்கில் தாமதிப்பதில்லை. நமது பண்பாட்டுப் பின்புலத்தில் இது புரிந்துகொள்ளக்கூடியதே.

துக்கத்தைக் கடக்க…

மரணம் தவிர்க்க முடியாதது, அற்பமானது என்று சொல்லக்கூடிய தெளிவு சீனிவாசனுக்கு இருந்தது. நமக்கும் மரணம் ‘ஒழிவாக்காம் பற்றாத்தது’ என்று தெரியும். ஆனால், நம்மில் பலருக்கு அதை ‘நிசார’மாகக் கருதும் மனம் வாய்ப்பதில்லை. மரணம் சம்பவிக்கும்போது சுற்றியிருப்போரால் அதை உடனே ஏற்க முடிவதில்லை. அதைக் கடப்பதற்குச் சடங்குகளும் அஞ்சலிகளும் நினைவேந்தல்களும் உதவுகின்றன. இதுதான் சீனிவாசனுக்கு நடந்தது. ஹாங்காங் சீனர்கள் மரணிக்கும்போதும் இதுதான் நடக்கிறது. ஹாங்காங் வாழ் இந்தியர்களுக்கும் இதுதான் நடக்கிறது. மரணத்தைத் தழுவியவர்கள் சீனர்களாக இருக்கலாம், இந்துவாக இருக்கலாம், இஸ்லாமியராக இருக்கலாம், நடைமுறைகள் மாறலாம், ஆனாலும் துக்கத்தைக் கடக்க சடங்குகளும் அஞ்சலிகளும் பயன்படுகின்றன. 

ஹாங்காங் சட்டத்தின் மாட்சிமையைப் (rule of law) பேணி வரும் நாடு. இங்கு எல்லாம் விதிப்படிதான் நடக்கும், சட்டப் புத்தகத்தில் உள்ள விதிப்படி. இதற்கு ஈமச் சடங்குகளும் விலக்கல்ல.

(தொடரும்)

Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button