சீதை – நிர்மல்

“சீதை பாவம்டா…” மேஜையின் மறுபுறமிருந்து முருகேசனின் குரல் ஒலித்தது. ஏதோ ஆழத்தில் இருந்து வெடுக்கென்று நிகழ்காலத்துக்கு இழுத்தெடுக்கப்பட்டவனைப் போல் ரகு தலைநிமிர்ந்தான். முருகேசனின் பார்வை அவனைத் தொடவில்லை; அதைத் தாண்டி, ரகுவின் பின்னால் இருந்த ஏதோ எதையோ தேடிக்கொண்டிருக்கிறது.
கவனம் கலைந்த ரகு, முருகேசனை பார்த்தான். முருகேசன் உட்கார்ந்திருந்த நாற்காலி எல்லாப் புறமும் சுழலக் கூடியது. ஆனால், முருகேசன் உட்கார்ந்திருந்த தோரணை, அது நகராத, அசையாத நாற்காலி என்ற உணர்வை ரகுவுக்குத் தந்தது.
“முருகேசனை போலவே அவன் நாற்காலியும்,” என ரகு நினைத்துக்கொண்டான்.
முருகேசனின் குரலுக்கு முன் ரகு மஹோகனி மேசையில் இருந்த போட்டோ பிரேமினைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதன் அடியில் இருந்த காசோலை அவனுடையது. அந்தப் படத்தில் முருகேசன் அண்ணன், கல்பனா அண்ணி, ரஞ்சனி மூவரும் சிரித்துக்கொண்டிருந்தனர். அவன் கண்கள் அதன் கீழே இருந்த காசோலையைப் பற்றி அள்ளி எடுக்க முயன்றன. கரங்களுக்கு இருக்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லாமையால் சோர்வுற்றன.
பேமண்ட் டெர்ம்: 15-ஆம் நாளுக்குள் இன்வாய்ஸ், அதிலிருந்து 30-ஆம் நாள் பேமண்ட். இன்றைக்கு 50-ஆவது நாள்.
முருகேசன் அவனுடைய முக்கியமான வாடிக்கையாளர். அவரால்தான் அமெரிக்கா வந்தான். அவரிடம் கடன் வாங்கித்தான் முதல் ஸ்க்ராப் லோடு எடுத்தான். இன்று அவனுக்குச் சொந்தமாகத் தொழில் உள்ளது. முருகேசனிடம் ஸ்க்ராப் மெட்டல் லோடு ஏற்றுவது, அவனுக்குப் பெரும் லாபம். பால்டிமோர் துறைமுகத்தில் அவனுக்கு காண்ட்ராக்ட் கிடைத்ததே முருகேசனால்தான். தொழில் விரியும் நேரம்.
ஆனால், பேமண்ட் முருகேசன் எப்போதும் தாமதமாகத்தான் தருவான். நேரில் வந்து கேட்டால்தான் கிடைக்கும். ஏன் என ரகுவுக்கு பிடிபடவே இல்லை.
போட்டோ ப்ரேமின் கீழே இருந்த செக்கை முருகேசன் எடுத்து, ரகுவின் கையில் தரவேண்டும். வழக்கம்போல, முருகேசன் தரவில்லை. ரகுவுக்கும் அதைச் சொல்லத் துணிவில்லாமல் தவிப்பு மட்டுமே வழக்கம் போல இருந்தது. அந்த தவிப்பை முருகேசனின் குரல் இன்னமும் அதிகப்படுத்தியது
‘ஏதாவது பேசிக் கொண்டே செக்கைக் கொடுக்காமல் தள்ளிக்கொண்டே போகிறார். அவர் சொல்வதைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இன்றைக்கு எதற்காக சீதை?’ என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே, ரகு திரும்பி, தான் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்னால் தொங்கியிருந்த ஓவியத்தைப் பார்த்தான். சீதையை… சிரிப்புடன் இருந்தாள். தஞ்சாவூர் பாணியில் வரைந்த ஓவியம், ராம-சீதா கல்யாணம்.
முருகேசன் ரகுவுக்கு தூரத்து அண்ணன். முதல் முறை அமெரிக்கா வந்த போது, முருகேசன் அண்ணன் வீட்டில் அதை அவனிடம் சுமத்தி விட்டிருந்தார்கள். இப்போது, அமெரிக்கா வந்து எலிகாட் சிட்டியில், முருகேசனின் அலுவலகத்தில் அது ஜொலித்துக்கொண்டிருந்தது.
“பாவம்தான் அண்ணா…” உதடுகள் சொல்லைக் குவிக்க, ரகுவின் கண்கள், காசோலையை விட்டு அகலவில்லை. மனம் காதில் வாங்கிய சொல்லைப் புத்திக்குச் செல்லும் முன்னரே அனிச்சையான பதிலாக்கியது. காசோலையை வாங்கிக் கொண்டு செய்ய வேண்டிய செலவுகள் நோக்கி அவன் கவனம் சென்றது. சீதை என்னும் சொல், மனம் தொட்டு, புத்திக்குச் சென்று, சித்தத்தினை அசைக்கையில் ‘சீதை அசோகவனத்தில் காத்திருப்பது போல இந்தக் காசோலை எனக்காகக் காத்திருக்கின்றதா?’ எனத் தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான்.
“அந்த ஓவியத்தினை நீதான் இந்தியாவிலிருந்து எடுத்து வந்தாய் அல்லவா…?” ரகு கேட்டான்.
“கல்பனா அண்ணிக்காக எடுத்து வந்தேன். அவர்கள் கேட்டார்கள்…” ரகு சொன்னான்.
“அவளுக்கு ராமாயணம் பிடிக்கும். குழப்பம் வரும் போதெல்லாம் சுந்தர காண்டம் வாசிப்பாள்… இந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு ஏன் பிடிக்கின்றது என நினைப்பேன்… “ என ஏதோ சொல்ல வந்து விட்டு நடுவில் நிறுத்தி ஓவியத்தினை உற்றுப் பார்த்தான். ரகு, முருகேசன் பேசுவதற்காகக் காத்திருந்தான்.
“பொதுவாகத் தஞ்சை ஓவியங்களில் சீதை சிரிப்பதில்லை. அமைதியாக இருப்பாள். இதை வரைந்தவன், ஒரு புன்சிரிப்பினைக் கொடுத்துள்ளான். பிழையான ஓவியம்…” முருகேசன் சொன்னான்.
“அது அழகு அண்ணா. கல்பனா அண்ணிக்கு அதுதானே பிடித்திருந்தது…”
“கல்பனாவுக்கு எல்லாமே பேண்டசிதான். வாழ்க்கையை விட்டால் காவியமாக்கி விடுவாள். இந்த பெயிண்டிங் போல உணர்வு வந்து விடும்… என்னவோ போ… சீதையாக இருப்பது பைத்தியக்காரத்தனம்தானே…” முருகேசனின் கேள்வி, ரகுவைச் சீண்டியது.
‘அண்ணியை ஏன் இழுக்கின்றார்?’ என்று ரகு ஒரு நொடி யோசித்தான். புத்தியின் மேற்பரப்பில் அவன் செய்ய வேண்டிய செலவுகள் உலையாய் கொதித்து வெப்பம் தந்தன; அந்த வெப்பத்தில், அந்த யோசனை எங்கோ ஆழத்தில் நழுவி மூழ்கியது.
“என் சீதை…” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு காசோலையைப் பார்த்தான்.
‘டேபிளில் இருக்கும் செக்கை எடுத்துக் கொடுங்க அண்ணே. அது என்னது என சொல்ல எனக்கு உரிமை இருக்கு. அண்ணனோ தம்பி என்பதால் அதிகாரத்தினை காட்டி தாமதப்படுத்துகின்றார்…ஏன் என்னால் திருப்பி கேட்க முடியவில்லை?…ஏன்?’ ரகுவுக்கு உள்ளுக்குள் எண்ணம் ஓடியது. அது எரிச்சல் கொடுத்தது.
ரகு, முருகேசனை நிமிர்ந்து நோட்டமிட்டான். முருகேசன் முகம், ரகுவின் பதிலுக்காகக் காத்திருந்தது. அந்தக் காத்திருப்பு, ரகுவைச் சீண்டியது.
‘சீதை படம் தொழில் அல்ல; இது குடும்பம் அல்ல; இது பொதுவான பேச்சுதானே… ஒரு கீறல், ஒரு அடி… எனக்கு முடியும்… எனக்கும் பேச தெரியும் என காட்டனும்’ ஒரு எண்ணம் பொம்மலாட்ட பொம்மை போல ரகுவுக்குள் வேக வேகமாய் ஆடியது.
கொல்லர், சூடான இரும்பை தட்டி வாளாக்குவது போல, உலையெனக் கொதித்த புத்தியில் சொற்கள் உருக்கப்பட்டன.
“தமிழ் ஆட்களுக்கு, ‘சீதைகளை’ வைத்துப் படாத பாடு படுத்துவதில் ஒரு வித குஷி இருக்கிறது. அக்கினிப் பிரவேசம், ‘சீதை செய்தது சரியா?’ என்ற கேள்வி, பாலியல் தொழிலில் ஈடுபடுபவருக்கு ‘சீதை’ எனப் பெயரிடுவது, மண மீறல்களின் நாயகிகளை ‘சீதையாக்குவது’ ஆகிய விவாதங்கள்; இன்றும் சமூகத்தில் உயிருடன் ஓடிக்கொண்டு இருக்கின்றன…” சொல்லி முடிக்கையில், ரகுவின் கண்கள் அவன் சொல்போல் கூர்மை பெற்றிருந்தன. சேரில் பின்னால் சாய்ந்தபின், நேராக உட்கார்ந்தான். நிமிர்ந்து, முருகேசனின் கண்களை உற்று நோக்கினான்.
“மிகப் புனிதமாக்கி விட்டதால் எதிர்க் கேள்விகள் வருகின்றது. இந்த ஆர்க்கிடைப் பொறுமையாக இருந்து என்ன செய்வதென்று தவிப்பது… மருகுவது…பொறுமையைப் பெரிய ஆயுதமாக்கி சித்திரவதை செய்வது..” என முருகேசன் சலித்துக் கொண்டான். சலிப்பு நாற்காலியை அசைத்தது. அதைக் கண்ட ரகுவிடம் புன்னகை வந்தது.
“புனிதமாக்கு என சீதையா கேட்டாள். புனிதமாக்கி, அதே நேரம் அதைப் பிடிக்கவில்லை எனத் திட்டிக்கொண்டே ரசிக்கிறீர்கள்… பார்த்தீர்களா…?” அண்ணனை அந்த அசையாத நாற்காலியில் இருந்து உலுக்கி எடுக்க வேண்டும் என முடிவு செய்து பதில் சொன்னான்.
“ரசிக்கின்றேனா…?” முருகேசனின் குரல் கடுமையானது. ரகு சுருங்கினான். அப்பொழுது அறைக்குள் உதயா எட்டிப் பார்த்தாள். அறைக் கதவு திறந்தது. ‘என்ன என்பது போல முருகேசனின் கண் மாறும்’ என ரகு நினைத்தான். முருகேசனின் கண் துள்ளலுடன் இருந்தது. முகத்தில் ஒரு சிறிய சிரிப்பும் பதிந்தது.
உதயா, அவள் கரத்தை உயர்த்தி, அதில் இருந்த கடிகாரத்தைக் காட்டி, கதவை மூடி வெளியேறினாள்.
ரகு, “உதயா…?” என முணுமுணுத்தான்.
“ம்…” எனத் துள்ளலாக முருகேசன் சொன்னான். நாற்காலி நகர்ந்து பின்னால் சென்று சுவரில் முட்டி நின்றது.
“என்ன அண்ணா? வெளியில் வேலையா?… அவங்க?” என்று ரகு கேட்டான்.
“உதயா நமக்குப் புதிய இன்வெஸ்டர். பால்டிமோர் யார்டுக்கு கூட்டிப் போய் காட்டனும்…”
கொஞ்ச நேரம் ஏதோ யோசித்தான். பிறகு மேசை டிராயரைத் திறந்து, ஒரு காகிதத்தை எடுத்து, கோப்பில் வைத்து, மூடிக்கொண்டான். மேற்சட்டையை எடுத்து, மாட்டிக்கொண்டான். அங்கிருந்த கண்ணாடியில் பார்த்து, தன் தலையைச் சீவிக்கொண்டான்.
“எப்படிடா இருக்கேன்?” எனக் கேட்டான்.
ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. மையமாகத் தலையசைத்தான்.
“அண்ணா… என்ன இது? ஷிப்பிங் யார்டுக்குதானே போகிறீர்கள்?”
“ம்… ம்ம்ம்ம்…” முருகேசன் ஏதோ பாடலை ஹம் செய்தான்.
“உதயா என் வயசை விட சின்னவர்களா இருக்கிறார்களே?” என்றான்.
“ஸ்வீட், ரைட்? ஷி இஸ் க்ரேஸி…” தனக்குள் சிரித்துக்கொண்டே முருகேசன் தலையசைத்தான்.
“அண்ணா…” என ரகு ஒரு கணம் எழுந்து நின்றான்.
முருகேசன் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் முகத்தில் சிரிப்பு அணையவே இல்லை.
ரகுவிற்கு பதற்றம் கூடியது. மேஜையை இறுக்கப் பற்றிக் கொண்டான். ஏதோ சரியில்லை எனத் தோன்றியது. திரும்பி ராம-சீதா படத்தினைப் பார்த்தான். அது இப்பொழுது வெறும் தஞ்சை ஓவியமாகத் தெரியவில்லை, சீதாவின் புன்னகை முருகேசனுடன் பேசிய வழக்கமான அரட்டை பேச்சாக இல்லை.
“அண்ணி… சீதை…” என தனக்குள் சொல்லிக்கொண்டான். அதைத் தாண்டி சொல்ல விழைந்தான். “அண்ணா… என் செக்…” எனத் தலையைச் சொறிந்து கொண்டே ரகு முணுமுணுத்தான். அந்த முணுமுணுப்பும் , அவன் காசோலையும் அந்த நொடியில் அர்த்தமற்றுத் தெரிந்தது. மனதின் மீது வேறு ஏதோ சுமை ஏறியது போலத் தளர்ந்தான். தோள்கள் குறுகின. கண்ணை மூடி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.
“இரு… கொஞ்ச நேரத்தில் ரிஸ்வான் வருவான். அவன் செட்டில் செய்து தருவான்.”
“அண்ணா, ஏற்கனவே ரிஸ்வான் கிளியர் செய்துவிட்டான். நீங்கள் அப்ரூவல் செய்தால் ஆகிவிடும்.”
“அப்படியா… நாளைக்கு வா. கொடுத்து விடுகிறேன். நான் என்ன அசலா.. அண்ணன்தாண்டா, நம்பு, நாளைக்கு வா தருகின்றேன்.”
ரகு, ஏமாற்றத்தை முகத்தில் காட்டாமல் இருக்கப் பெரிதும் முயன்றான்.
‘இந்த ஊரில் காசு, பணம் உண்டு, சொந்தம், ரத்தம் எனச் சொல்லிக் கொள்ள யார் உண்டு. மனுஷனுக்கு ஒரு தேவை இருக்கின்றதே. ஆயிரம் இருந்தாலும் இது அண்ணன். இத்தனை ஆயிரம் மைல் தள்ளி எனக்கு யார் இருக்கா? இவர்தானே இருக்காரு?’ ரகு தனக்குள் யோசித்துக்கொண்டே இருக்கையில், முருகேசன் கதவைத் திறந்து வெளியேறினான்.
வெளியே, கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொண்டு உதட்டைத் துடைத்துக்கொண்டிருந்த உதயா தெரிந்தாள்.
ரகுவுக்குக் கால்கள் நடுங்கின.
அன்றிரவு பத்து மணி. குழந்தையை அறையில் தூங்க வைத்துவிட்டு, கதவைச் சாத்தி, பெட்ரூமுக்குச் சென்றபோது, மனைவி டிவியில் நெட்ப்ளிக்ஸைப் மியூட்டில் போட்டுவிட்டு, யாரோடோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள்.
‘யார்?’ என்பது போல அவன் தலையை அசைத்தான்.
“கல்பனா அக்கா,” எனச் சொன்னாள்.
ஊர்க் கதை ஏதோ போய்க் கொண்டிருந்தது.
கொஞ்ச நேரத்தில், அவனிடம் தொலைபேசியை நீட்டினாள். “உன்னிடம் பேசனுமாம்,” என சொன்னாள்.
தொலைபேசியை வாங்கி, “அண்ணி…” என்றான்.
“தம்பி, அண்ணன் இன்றைக்கு யார்டிலேயே தங்கிக்கொள்கிறேன் என்றார். மூன்று-நான்கு மாதமாக யார்டில் அடிக்கடி தங்குகிறார்… நாம் எதாவது புது வேலை எடுக்கிறோமோ?” எனக் கேட்டார்.
ரகுவுக்கு, காலையில் திறந்து மூடிய கதவு நினைவுக்கு வந்தது. அது ஒன்றுமில்லாமல் கூட இருக்கலாம். வராத காசோலை காரணமாகத் தன்னுள் தோன்றிய எரிச்சல் எனச் சமாதானப்படுத்திக் கொண்டான்.
“ஏன் அண்ணி…” எனக் கேட்டான்.
“அதில்லை தம்பி… கம்பெனி லோன் எல்லாம் நான்தான் மேனேஜ் செய்றேன். இவர் எனக்குத் தெரியாமல் யாரிடமும் கடன் வாங்கக்கூடாது. அதையெல்லாம் சமாளிக்கும் இடத்தில் நாம் இல்லை. மூன்று வருடம் முன்பு, வாங்கக்கூடாத இடத்தில் கடன் வாங்கி நாம் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியுமே.அது திரும்ப நடக்கக்கூடாது.” அவள் குரலில் கவலை இருந்தது.
ரகுவுக்கு, அண்ணி பணப் பிரச்சனையை மட்டும் நினைக்கிறாள் என்பதே ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது.ஆனால், அது நிம்மதிதானா என்பதில் ரகு குழப்பமடைந்தான்.
முருகேசன் தலை வாருவது, ஹம் செய்வது, எல்லாமே ரகுவுக்குக் கள்ளிச்செடியில் கை பட்டது போல இருந்தது. “அண்ணி…” என்றான். உறுத்தலைச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
மீண்டும் மீண்டும் காய்ந்து போன கடல் மணலை அள்ளி, கோட்டை கட்ட முயல்வதுபோல், அவன் வார்த்தைகள் சரிந்துகொண்டே இருந்தன.
“சொல்லு தம்பி…” என்றாள்.
“ஒன்றும் இல்லை, அண்ணி. எந்தச் சிக்கலும் இருக்கக் கூடாது…” என்றான்.
“தம்பி… உன் குரல் சரியில்லையே… வேறெதாவது இருக்கின்றதா?” என்றாள். கல்பனாவின் குரல் மாறியதாக ரகுவுக்குத் தோன்றியது.
அந்நேரம், ரகுவின் மனைவி, “போனைக் கொடு,” எனக் கூறி, வாங்கிக்கொண்டாள்.
“அக்கா, கவலைப்படாதீர்கள். நான் ரகுவிடம் சொல்கிறேன்…” என்றாள்.
மறுமுனையில் கல்பனா அண்ணியின் அழுகை ரகுவுக்குக் கேட்டது. உதட்டைக் கடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் இருக்க முயன்றான்.
“தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன்,” என மனைவியிடம் சொல்லிவிட்டு, கீழே இறங்கினான்.
பூஜையறையின் முன் நின்றான். அண்ணியின் விம்மல் அவனுக்குள் கேட்டது.
பூஜையறை கதவைத் திறந்தான்.
அம்பிகை, சமயபுரம் மாரியம்மன் வடிவில் சிரித்துக்கொண்டிருந்தாள். எட்டுக் கரங்களோடு, அபயம் சொல்லி, சிவந்த முகத்துடன் இருந்தாள்.ஒரு கையில் ஓங்கிய வாள் இருந்தது; காலில், அசுரர் தலை உருண்டு கொண்டிருந்தது. சீதையாய் சிரித்த முகமும், இந்த முகமும் ஒன்றா என்று ஒரு கணம் தடுமாறினான்.
“அண்ணனுக்கும், அண்ணிக்கும் எல்லாம் நல்லபடியாக இருக்கனும்” எனச் சொல்லிக் கொண்டான். கை கூப்பி நின்றான்.
திரும்ப, படியேறி வந்தபோது மனைவி படியில் யோசனையாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான்.
“ரகு, என்ன சாமி கும்பிட்டாய்…?” மெதுவாகப் பேசினாள்.
“அண்ணா… அண்ணி…” அவனுக்குச் சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது.
“கஷ்டம் ரகு… என்ன வேண்டிக்கறதுனே தெரியவில்லை…” அவள் குழப்பத்தினைக் குத்தாமல் பதில் சொன்னாள்.
ரகு, படியேறி அவள் அருகே நின்று, அவள் தோளைத் தொட்டான். அவள் குனிந்து, தலையை கையால் பிடித்துக்கொண்டிருந்தாள். கண்கள் கலங்க ஆரம்பித்தன.
“எனக்கும் தெரியவில்லை… எல்லாம் சரியாகி விட வேண்டும்… எப்படி ஆகுமென்று யோசிக்க முடியவில்லை. அண்ணி ப்ரைவசி பார்ப்பார். உன்னிடம் அழுததே பெரிய விஷயம். அனேகமாக இனிமேல் நம் காதிற்கு எதுவும் வராது…” ரகு இருளை வெறித்துக் கொண்டே சொன்னான்.
“போன முறை பைனான்ஸ் பிரச்சனை வந்தபோது கூட நமக்குப் பின்னால்தான் தெரிந்தது. இது வெறும் பைனான்ஸ் மட்டும் இல்ல…இந்த ஊரில் ஒரு பிரச்சனையை சொல்லறதும் அவ்வளவு ஈசி இல்லை. ஊரில் இருந்தாலாவது அம்மா, அப்பா…என யாரிடமாவது சொல்லலாம்” ரகுவின் மனைவி மெல்லிய குரலில் சொன்னாள்.
“சரி… வா, படுப்போம்…” எனக் கூறிவிட்டு, ரகு அவளைத் தாண்டி மேலே சென்றான்.
“ஏன் ரகு இப்படியெல்லாம் நடக்குது? இதே இடத்தில் என் கூட பிறந்த அக்காவாகவோ, உங்க அண்ணாவாகவோ இருந்தால் பேசிப் பார்க்கலாம்…” பின்னால் அவள் பேசிக் கொண்டே எழுந்து வருவது அவனுக்குத் தெரிந்தது.
மூன்று மாதங்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலிங் பெல் ஒலிக்க, ப்ரெட்டுக்கு ஜாம் தடவிக்கொண்டிருந்த ரகு, யார் என்று யோசித்துக்கொண்டே கதவைத் திறந்தான்.
கல்பனா அண்ணி நின்று கொண்டிருந்தார். முழுப் பார்மலில், அலுவலகத்துக்குக் கிளம்பும் தோரணையில் இருந்தார்.
ரஞ்சனி, “ஹலோ சித்தப்பா…” எனச் சொல்லிவிட்டு, தன் வயலின் பையுடன் அவன் கரங்களுக்குப் புகுந்து அவனைத் தாண்டி, “சித்தி!” எனக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே சென்றாள்.
ரகு, ஒரு கணம் தடுமாறி, “வாங்க அண்ணி…” என்றான்.
கல்பனா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். நகரவில்லை.
அப்பொழுதுதான், கதவை அடைத்துக்கொண்டு நிற்பதை உணர்ந்து, பின்வாங்கி உள்ளே சென்று, “வாங்க அண்ணி…” என மீண்டும் சொன்னான்.
கல்பனா உள்ளே வந்து, வரவேற்பறையில் இருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.
மாடியிலிருந்து, அரைத் தூக்கத்தில் ரஞ்சனியின் கையைப் பிடித்துக்கொண்டு, ரகுவின் மனைவி விரைந்து வந்தாள்.
“வாங்க அக்கா…” என்றாள்.
“உன் பேமெண்ட் எல்லாம் க்ளியர் ஆகிவிட்டதா?” என ரகுவை பார்த்துக் கேட்டாள்.
‘அதைக் கேட்க, அண்ணி ஏன் வந்தாள்? எங்கே போகிறாள்? ரஞ்சனி ஏன் வயலினோடு வந்தாள்?’
ரகுவுக்குப் பல கேள்விகள் ஏணிப்படிகள் போல மேலே மேலே சென்று கொண்டிருந்தன.
“ரகு…” என்று திரும்பக் குரல் வர, அதிலிருந்து திடீரெனக் கீழே விழுந்தான்.
“வந்திடுச்சு அண்ணி,” என்றான்.
“ரஞ்சனி, இன்றைக்கு இங்கே இருக்கட்டும். எனக்குக் கொஞ்சம் வெளியில் வேலை இருக்கிறது. நீ அவளை வயலின் கிளாஸுக்கும், சாயங்காலத்தில் அவளை ஒரு பிறந்த நாள் விருந்துக்கும் கூட்டிப் போய் விட்டுவிட்டு வா. நான் இரவில் வந்து கூட்டிக்கொள்கிறேன்,” என்றாள்.
ரகு, ஒன்றும் பேசாமல் நின்றான்.
“நான் பார்த்துக் கொள்கிறேன் அக்கா… நீங்க போய்விட்டு வாங்க,” என ரகுவின் மனைவி சொன்னாள்.
கல்பனா எழுந்து, கதவைக் கடந்து நகர்ந்தாள்.
“ரகு, என் கூட வா…” என்றாள்.
காரை நோக்கிச் சென்ற கல்பனாவின் பின்னால் ரகு விரைந்தான்.
காரின் அருகே சென்று நின்றாள். திரும்பினாள்.
“தம்பி, உங்களுக்கு நான் எல்லாம் சொல்ல வேண்டும் என்று தேவையில்லை. உங்கள் காதுக்கும் விஷயம் வந்திருக்கும். நீங்களும் பால்டிமோரில் யார்டில் இருப்பவர்தான்…” என்று சொல்லிவிட்டு, நிறுத்தினாள்.
ரகு தலையசைத்தான்.
“லாயர், ஆடிட்டர் எல்லாம் பார்த்துப் பேசணும்… நண்பர்கள்தான். அதனால்தான் ஞாயிறு அப்பாயின்ட்மெண்ட். நானும் இங்கே பத்து வருடமாக தொழிலில் இருப்பதாலே எல்லாரையும் தெரியும். அடுத்து என்ன செய்யணும் என கேட்கணும். எல்லாமே லீகலாக இருக்கணும்ல…” சொன்னாள்.
“அண்ணி…” என்று ரகு மெதுவாக அழைத்தான். அவள் மேலே ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“அண்ணி…உங்கள் இருவரை பார்த்து நம்ம ஊரே பொறாமைப்படும். அப்படிப்பட்ட காவிய தம்பதிகள். எப்படியாவது இது சரியாகணும்…” ரகு சொற்களில் சிக்கித் தவித்தான்.
“காவியமாக வாழ்க்கை இருக்கறது ஈசி இல்ல… நான் உங்கள் அண்ணனுக்கு சீதாவாக இருக்கணுமெனில், அவர் ராமனாக இருக்கணும்… காதல் இருக்கனும்… இப்ப…” ஓர் இடைவெளி விட்டாள்.
ரகு, அவள் கண்ணைப் பார்க்காமல், தலையைக் குனிந்து நின்றான்.
“உங்கள் அண்ணன் எங்கள் வாழ்க்கையை யுத்தமாக்கினால்… அது வேறு காவியம். சும்பன் – நிசும்பனாக மாறினால்… துர்க்காதான்… அசுரர் தலை உருள…” ஏதோ சொல்ல வருவதாக இருந்தவள், நிறுத்தினாள்.
அவள் குரல் இறுகியது. முகம் சிவந்தது. கண்ணில் கண்ணீர் துளிகள் தெறித்தன. விரல்கள் இறுகின. மின்னல் மின்னி மறைந்தது போல, அந்த உணர்வு வந்து போனது. உடலைத் தளர்த்திக் கொண்டாள். கூலிங் கிளாஸை எடுத்து அணிந்தாள். மௌனமானாள்.
கார் கதவைத் திறந்து இருக்கையில் அமர்ந்தாள். கார் கண்ணாடியை இறக்கி, ரகுவை நேராகப் பார்த்தாள். குளிர் கண்ணாடியின் பின்னால் அவள் கண்கள் மறைந்து இருந்தன. ஆயினும் அந்தப் பார்வையில் உத்தரவு இருந்தது.
“சரிங்க அண்ணி… ரஞ்சனி இங்கே இருக்கட்டும்,” என்று ரகு அந்த உத்தரவுக்குப் பதிலளித்தான்.
“நான் சாயந்திரம் கிளம்பும் போதே போன் செய்கிறேன். அவளை கொஞ்சம் கிளப்பி வையுங்கள்,” என்று சொல்லிவிட்டு, காரை நகர்த்தினாள்.
கார் நகர்கையில் உறுமியது போல இருந்தது என ரகு நினைத்தான். கார் காங்கீரிட்டில் நகர்ந்த தடத்தினைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தான்.



