இணைய இதழ் 121மொழிபெயர்ப்பு சிறுகதைமொழிபெயர்ப்புகள்

நெட்டையும், குட்டையும் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க

[தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்]

வள் சேபாலிகா. மிகவும் குள்ளமாகத் தெரிவாள். குள்ளமென்று சொன்னாலும் கூட ஆகவும் குள்ளமுமல்ல. தேகத்தில் உயரமாக இருக்க வேண்டியவை உயரமாகவும், வட்டமாக இருக்க வேண்டியவை வட்டமாகவும், ஒல்லியாக இருக்க வேண்டியவை ஒல்லியாகவும்தான் இருந்தன. அனைத்துமே அச்சில் வார்த்தது போல சரியாக அந்தந்த அளவுகளில் இருந்த போதிலும் உயரம்தான் போதாமலிருந்தது. வேண்டுமென்றால் ஐந்தடி உயரம் இருப்பாள். அதை விடவும் குறைவாகவும் இருக்கலாம். 

எனக்கொரு உயரமான பெண் கிடைக்க வேண்டும் என்றுதான் எப்போதும் நான் பிரார்த்தித்து வந்தேன். உண்மையில் சொல்லப் போனால் எனக்குக் கிடைத்த பலவற்றையும் மறுதலித்தவன் நான். முப்பத்தெட்டு வருடங்களாக எனக்குக் கிடைத்தவற்றையெல்லாம் நான் நிராகரித்து வந்தது இந்தக் குள்ளச்சியிடம் மனதைப் பறி கொடுக்கவா?! என்னை விட ஓரடியை விடவும் உயரம் குறைந்தவளிடம் நான் எப்படி இரண்டாக மடிந்து குனிவேன்?! என்னை விடவும் உயரமான பேரழகிகள் சைகை காட்டும்போது கூட நான் மறுதலித்து தலை திருப்பியிருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால் எனது அகங்காரமானது என்னை விடவும் உயரமானது. அதை முப்பத்தெட்டு வருடங்களாக சிதையாமல் பாதுகாத்து வரும் வேளையில்தான் இந்த முற்பிறவிப் பாவம் என்னைப் பழி வாங்கத் தொடங்கியிருந்தது.

இந்தச் சிறுக்கி எப்படித்தான் இந்த அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாளோ?! ஏதாவது மேலிடத்துத் தொடர்பு என்று நினைக்கிறேன். உண்மையில் என் மூலமாகத்தான் இவளது வேலை விண்ணப்பப் படிவம் மேலிடத்துக்குப் போனது. நான்தானே அதை ஏற்றுக் கொண்டேன். ஆனால், வேலை விண்ணப்பப் படிவமொன்றில் எப்படி ஒருத்தியின் முகமும், தோற்றமும், அங்க அமைப்புகளும் தென்படும்?! போதாதற்கு இவளால் எனக்கு இப்படியொரு இன்னல் ஏற்படுமென்று நேர்முகத் தேர்வின் போது எனக்கு எப்படித் தெரியும்?!

நான்தான் இந்த அலுவலகத்தின் ஜெனரல் மேனேஜர். இப்படியெல்லாம் நடந்தால் எனது ஜெனரல் மேனேஜர் பதவியும் கூட பறி போய்விடும். ஐந்து வருடங்களாக நான் இந்த அலுவலகத்தில் எனது கௌரவத்தைக் காத்து வந்திருக்கிறேன். என்னதான் இருந்தாலும் இவளைக் கண்டதுமே எனதுள்ளம் உருகி விடுகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சம் என்பது இப்போது அதிகம் அதிகமாக ஆகி விட்டது. எப்போது வரைக்கும் இந்த உணர்வை நான் உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்திருக்கப் போகிறேனோ?! என்னை விடவும் உயர்ந்து கொண்டிருந்த எனது அகங்காரமும், தற்பெருமையும் இப்போதெல்லாம் அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றன. அதுவும் இந்த ஐந்தடிக்கும் குறைவான குள்ளச்சியின் காரணமாக! 

நன்றாக யோசித்துப் பார்த்தால் இவளிடம் அப்படி என்னதான் அழகிருக்கிறது?! அழகு என்பது இதுவல்ல. அழகிகள் பலரும் எனது கடந்த கால வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். மேனியில் ஒரு தழும்பு கூட இல்லாமல் பிளாஸ்டிக்கில் வார்க்கப்பட்டவர்கள் போன்ற அழகிகள். அப்படிப் பார்க்கும்போது இவளிடம் என்னதான் அழகிருக்கிறது?! குள்ளச்சியென்றாலும் குதியுயர் காலணிகளைக் கூட அணிவதில்லை. இரண்டு வார்களுள்ள சாதாரண செருப்பைத்தான் அணிந்து வருகிறாள். கூந்தலில் கூட எவ்வித அலங்காரமுமில்லை. ஒன்றோ ஒரு சுவாரஸ்யத்தையும் தராத குதிரை வால் கொண்டை. இல்லாவிட்டால் சாதாரணக் கொண்டை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் அலங்காரங்களைத்தான் இப்போதும் பின்பற்றுகிறாள். இங்கு வந்து இப்போதுதான் மூன்று மாதங்களாகின்றன. இதுவரை இவள் குட்டைப் பாவாடை அணிந்து நான் கண்டதில்லை. பட்டிக்காட்டுச் சிறுக்கி. என்றாலும் இந்த அலுவலகத்திலிருக்கும் இளந்தாரிப் பையன்கள் எல்லோருமே இவளைத்தான் பின்தொடர்கிறார்கள். இவளைக் கிண்டல் பண்ணாமல் அவர்களுக்குத் தூக்கம் வராதோ என்னவோ?! இவளும் கூட சிரித்தவாறே அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறாளே ஒழிய ஒருபோதும் சண்டை சச்சரவுக்குப் போவதுமில்லை. என்னதான் இவளிடம் அழகு எதுவுமே இல்லாவிட்டாலும் கூட ஆண்களைப் பைத்தியமாக கிறங்கடிக்கும் அளவுக்கு வெளியே தென்படாத ஏதோ ஈர்ப்பு வளையங்கள் இவளிடமிருந்து வெளிப்படுகின்றன என்றே எனக்குத் தோன்றுகின்றது.

நான் ஏனைய ஆண்களைப் போல இல்லவே இல்லை என்றுதான் எப்போதும் நான் கருதிக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஐஸிங் கேக் ஒன்றைக் கொண்டு வந்து வைத்தாலும் கூட எனக்குத் தேவையில்லை என்றால் நான் அதைச் சாப்பிடவே மாட்டேன். அப்படிப்பட்ட ஆள் நான். எனக்கென்றொரு ரசனை இருக்கிறது. நான் அப்படியெல்லாம் சுய கௌரவம் பார்க்கும் ஆள். அவ்வாறே நான் எனக்கென்றே சில சட்டதிட்டங்களை வகுத்து அவற்றைப் பின்பற்றி வருகிறேன். அந்தளவு சுய கட்டுப்பாடுள்ள ஆண் மகன் நான். இருந்தாலும் இப்போதெல்லாம் இந்தப் பைத்தியக்காரச் சிறுக்கி எனது கனவில் கூட வரத் தொடங்கியிருக்கிறாள். எவ்வளவுதான் சுய கட்டுப்பாடுள்ள ஆறடி ஆண் மகனாக இருந்தபோதிலும் இரவு முழுவதும் கனவில் இவளைக் கண்டுகொண்டிருந்தால் விடிகாலையில் அவனது ஆண்மையெல்லாம் உருகிக் கரைந்துதானே போகும்?! அவ்வேளையில் மெத்தையில் பூக்கும் நாரிலதா பூவுக்கு இவளின் முகம்தானே இருக்கும்?! ஐயோ கடவுளே! எனக்குத்தான் இவ்வாறான அதிரடி விபத்துகள் எவையும்தான் இதுவரை நேர்ந்ததே இல்லையே!!! இதோ சொல்லும்போதே அவள் வருகிறாள்.

குட் மார்னிங் சார்


மார்னிங்.”


இந்த செக்குகள்ல சைன் பண்ண முடியுமா, சார்? இவைதான் நீங்க கேட்ட கொட்டேஷன்ஸ்.”


என்ன இதெல்லாம்? யார் செஞ்சாங்க இதை? இந்தச் சின்னக் கணக்குகளைக் கூட சரியாகச் செய்ய முடியாதவங்களா இந்த ஆபிஸுல இருக்காங்க?”


ஏன்? என்னாச்சு சார்?”


என்னாச்சு? எனக்கு கிறுக்குப் பிடிச்சிருக்குன்னு உனக்குத் தோணுதோ? எனக்கு கணக்கைக் கூட்டிக் கழிக்க கால்குலேட்டரெல்லாம் தேவையில்ல. இலக்கங்களைச் சும்மா பார்த்தாலே மூளையில் கணக்கு தானா ஓடும். உனக்கு இந்தச் சின்ன வேலையைக் கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாதா? திரும்ப இதையெல்லாம் டபுள் செக் செஞ்சு எடுத்துட்டு வா. போ!”


ஸ்ஸாரி சார்.”

இவள் எனக்கு அருகில் வரும்வரைக்கும்தான் காலையிலிருந்தே நான் காத்திருந்தேன். பக்கத்தில் வந்ததுமே நன்றாகத் திட்டி துரத்தி விட்டேன். என்னதான் நான் இந்தளவு பேய் பிடித்தவன் மாதிரி கத்தியபோதிலும், சும்மாவேனும் இவளது முகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லையே?! என் மேல் பயம் கூட இல்லையோ என்னவோ! நான் சத்தம் போட்டால் அலுவலகத்திலுள்ள ஆண்கள் கூட நடுங்கிப் போவார்கள். இவளோ?! மிகவும் புதுமையான பெண்ணாக இருக்கிறாளே?! சூனியக்காரி ஒருத்தியோ என்னவோ?! இவள் மந்திரவாதக் கதைகளில் வரும் சூனியக்காரக் கிழவியின் மகளாக இருக்கவும் கூடும். இவளது கதிரைக்குக் கீழே பறக்கும் துடைப்பக்கட்டையும் கூட இருக்கிறதோ தெரியாது.

இவள் அருகே வரும்போது எவ்வளவு அருமையான நறுமணம் இவளிடமிருந்து வீசுகிறது. இவள் வந்தால் அலுவலகமே சுகந்தம் கமழ்கிறது. இவள் பாவிப்பது நடைபாதையில் இருநூறு, முன்னூறு ரூபாய்க்குக் கிடைக்கக் கூடிய மலிவான வாசனைத் திரவியமாக இருக்கவே இருக்காது. இவளது ஆடை அணிகலன்களைப் பார்த்தால் இறக்குமதி செய்யப்பட்ட தரமான விலையுயர்வான வாசனைத் திரவியங்களை பயன்படுத்துபவள் என்று கருதவும் முடியாதே. ஆனால், இந்த நறுமணத்தை வைத்து அவ்வாறு நினைக்காமலிருக்கவும் முடியாது. இந்தச் சிறுக்கியோ மிகவும் வித்தியாசமான ஒருத்திதான். நான் செய்த எந்தப் பாவத்திற்காக இவளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறேனோ?!

இப்போது நானும் இந்த அலுவலகத்திலிருக்கும் ஏனைய ஆண்களைப் போலவே ஆகிவிட்டேன். என்றாலும் அவர்கள் அளவுக்கு எனக்கு எங்கே சுதந்திரம் இருக்கிறது?! அவர்கள் எல்லாம் நினைத்த நேரத்தில் இவளுடன் அரட்டை அடிக்கலாம். என்னால் அவ்வாறு செய்ய முடியாதே. எனது உயரமும், தகுதியும் அதைச் செய்ய என்னை விடாது. எந்தப் பெண்ணிடமும் வேடிக்கையாகக் கதைக்கவும் என்னால் முடியாது. நான் அவ்வாறு கதைத்ததுமில்லை. பெண்கள்தான் என் பின்னால் வர வேண்டும் என்றுதான் எனக்கு எப்போதும் தோன்றுகிறது. ஒரு காலத்தில் பெண்கள் அவ்வாறு என் பின்னால் வந்தார்கள்தான். இப்போதும் அவ்வாறு வருபவர்கள் இருக்கிறார்கள். என்றாலும் பெண்களுக்கு என்னுடைய நேர்த்தி பிடிப்பதில்லை.

பெரும்பாலும் ஆண்களின் பலவீனமே பெண்கள்தானே. என்றாலும் நான் அந்தக் கும்பலில் விழுந்து விடாமல்தான் இவ்வளவு காலமும் இருந்தேன். பெண்களின் பின்னால் கெஞ்சிக் கெஞ்சி போகக் கூடிய அளவுக்கு எதுவுமே என்னை ஈர்க்கவில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு சுவை. அந்த எல்லாப் பெண்களுக்கும் சிறிது காலத்திலேயே நான் சலித்து விடுவேன். உனக்கு வேண்டாமென்றால் எனக்கும் நீ வேண்டாம் என்று நானும் அந்த எல்லாப் பெண்களையும் கை விட்டு விட்டேன். நான்தான் காதலன் இல்லையே. அதற்காக நான் கேடுகெட்டவனும் இல்லை. அவர்களுடன் உடல் ரீதியான கொடுக்கல் வாங்கல்தான் என்னிடம் இருந்தது. சொற்ப காலத்துக்கேனும் என்னுடன் இருப்பவளிடம் நான் நேர்மையாகத்தான் நடந்து கொள்வேன். அதுதானே வேண்டும்?! எனக்கு எனது கல்வி, உடல் ஆரோக்கியம், தொழில், அந்தஸ்து ஆகியவை மாத்திரம்தான் பிரதானமானவை. என்றாலும் அப்படியிருந்தவனுக்கு இப்போது என்ன ஆகி விட்டது?! ஐயகோ! ஐந்தடியே ஆன ஒரு சாதாரண அக்கவுண்ட் கிளார்க்கிடம் என்னுள்ளம் பறிபோய் விட்டது. எனது தகுதிக்கோ, வயதுக்கோ, தோற்றத்துக்கோ கொஞ்சம் கூடப் பொருந்தாத மூதேவி இவள். இப்படியே இன்னும் கொஞ்ச நாள் கடந்தால் நான் அவ்வளவுதான்.

ஒரு பெண்ணிடம் அழகு என்பது ஒன்று. அவளின் வசீகரம் என்பது வேறொன்று. அதைப் புரிந்துகொள்ளத்தான் எனக்கு இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது. ‘ஆண்கள் திராட்சையைப் போன்றவர்கள், அவர்கள் வைன் ஆக மாறுவதற்கு வெகுகாலமெடுக்கும்’ என்று கூறியவர்கள் ஒன்றும் காரணமில்லாமல் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார்களே. சேபாலிகா ஒரு குட்டிக் காந்தம். அந்தக் காந்தத்துக்கு பாகுபாடில்லாமல் எல்லா ஆண்களுமே ஈர்க்கப்படுகிறார்கள். தெருவோர யாசகர்கள் கூட யாசிப்பதை மறந்துவிட்டு இவளின் பின்னால் வருகிறார்களாக இருக்கும் என்றும் எனக்குத் தோன்றத் தொடங்கியது. இதுவென்றால் சிந்தனையை மாற்ற வேண்டிய பாரதூரமான பிரச்சினை. நான் இந்த அளவு மூளை குழம்பும் அளவுக்கு இந்தச் சின்னஞ் சிறுக்கியிடம் அப்படி என்னதான் இருக்கிறது?! நாங்கள் இருவரும் அருகருகே ஜோடியாக நின்றாலும்கூட எமக்கிடையே எந்த ஜோடிப் பொருத்தமும் இருக்காது. இந்த ‘பாடி கெமிஸ்ட்ரி’ என்பதைக் கண்டுபிடித்தவர் யார்? அது யாராக இருப்பினும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். என்றாலும் அவர் ஏன் இவ்விதமான ஈர்ப்புக்கொரு விடையைக் கண்டுபிடிக்கவில்லை?!

இந்தத் தலைவலியிலிருந்து விடுபட நான் இவளின் குறைகளையே தேடத் தொடங்கினேன். இவள் இந்த அலுவலகத்துக்கு வந்த நாளிலிருந்து நான் அதைத்தான் செய்து வருகிறேன். இவளால் நிகழும் சிறிய தவறுகளுக்குக் கூட நான் சத்தமாகத் திட்டினேன். நான் எவ்வளவுதான் அவளிடம் மோசமாக நடந்து கொண்ட போதிலும் இந்தச் சிறுக்கியோ அதைத் துளியும் கண்டுகொள்ளவில்லை. நான் சத்தம் போடும்போது எவருமே எனது கண்களை நேராகப் பார்க்க மாட்டார்கள். ஆனால் இவளோ எனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளது அந்தக் கண்களுக்குத்தான் நான் பயந்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. வேறொருத்தி என்றால் அழுதிருப்பாள். கண்களில் கண்ணீர் வழிய தலை குனிந்திருப்பாள். இவ்வளவு காலமும் நான் அலுவலகங்களில் அவ்வாறான பெண்களைத்தான் கண்டிருக்கிறேன். இவளோ எமகாதகி!

சித்தார்த்தர் போதி சத்துவராக ஆகச் சென்றபோது அதைத் தடுக்க மாரன் பல சூழ்ச்சிகளைச் செய்தான். அவ்வேளையில் அவன் இவளைப் போன்ற பெண்களைத்தான் அவரிடம் அனுப்பியிருக்கக் கூடும். அந்தப் பெண்கள் எல்லோருமே அழகிகள் அல்லவே. தொடக்கத்தில் அழகிகள். பின்னர் காமரூபிணிகள். தொடர்ந்து அப்பாவிப் பெண்கள், கறுப்புப் பெண்கள், சிவப்புப் பெண்கள், அதன் பிறகு உயரமான பெண்கள், ஒல்லியான பெண்கள், பருமனான பெண்கள், இளம்பெண்கள், நடுத்தர வயதுப் பெண்கள், கர்ப்பிணிகள்… இவ்வாறு பெண்களை பல வடிவங்களில் அனுப்பினான்தானே. இவ்வாறெல்லாம் யோசிப்பதென்றால் அந்த மாரனுக்குத்தான் எந்தளவுக்கு ஆண்களைப் பற்றிய புரிந்துணர்வு இருக்க வேண்டும்?! என்னதான் இருந்தாலும் அவனும் ஆண்தானே?! எவ்விதமான ஆணையும் வசீகரிக்கக் கூடிய, வலையில் வீழ்த்தக் கூடிய பெண் வடிவங்கள் ஒன்றோ பலவோ இவ்வுலகத்தில் இருக்கின்றன என்பது அவனுக்கும் தெரிந்திருக்குமே. சில ஆண்களுக்கோ பெண்ணின் மூச்சு பட்டால் கூடப் போதும். ஆனால், எம்மைப் போன்ற நல்ல அந்தஸ்தில் கௌரவமாக இருப்பவர்களால் இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள முடியாதே. நான் சித்தார்த்தருமல்ல. துறவு வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்த்தவனில்லை நான். என்றாலும் எனது கர்வத்தை குழி தோண்டிப் புதைக்கவென இவளை இந்த பூமிக்கு அனுப்பியவனும் அதே மாரன்தான்.

இப்போது எனக்கு ஏன் திடீரென்று இந்த பெளத்தம் எல்லாம் ஞாபகம் வருகிறதோ?! இப்படியே போனால் எனக்கு முற்பிறவி ஞாபகங்கள் கூட நினைவுக்கு வந்து இளித்தவாறே இவளின் பின்னால் அலைய வேண்டி வருமோ… ராஜாமார் தமது ராஜ்ஜியங்களைத் துறந்து சாதாரண பெண்களின் பின்னால் போனது போல?! ஐயோ கடவுளே! அவ்வாறெதுவும் நிகழக் கூடாது. எனது அகத்திலிருப்பவை எல்லாம் முகத்தில் தெரிய வெகுநாட்கள் ஆகாது. அவ்வாறு ஏதும் நிகழ்ந்தால் மொத்த அலுவலகத்திடமும் நான் மாட்டிக் கொள்வேன். நானும் ஓர் ஆண்மகன். எனக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நான் வெளிப்படுத்த வேண்டியது இவ்வாறல்ல. 

*****************

புதிய அலுவலகம் மிகவும் அமைதியானது என்றே எனக்கு ஆரம்பத்தில் தோன்றியது. என்றாலும் அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது எனது பாஸிடம் இருக்கும் பிரச்சினை. எதற்கெடுத்தாலும் கத்துவதுதான் அவரது வேலை. என்னிடம் மட்டும்தான் அவர் சத்தமாகத் திட்டுகிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அலுவலகத்திலுள்ள ஏனையோரோ இந்தப் பிரச்சினையைப் பொருட்படுத்துவதேயில்லை. அவர்களுக்குப் பழகிவிட்டது. ‘நமது பாஸ் யாரையும் காரணமில்லாமல் திட்டுவதில்லை, திட்டும் அளவுக்கு ஏதேனும் தவறிழைத்தால்தான் அவர் சத்தம் போடுவார்’ என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். அவரது இந்த மிலிட்டரி சட்டதிட்டங்களுக்கு எல்லோருமே பயந்து கட்டுப்படுகிறார்கள் என்பதால் எமது பிரிவில் எல்லோரும் நன்றாகப் பணி புரிகிறார்கள். தவறுகள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன. எல்லோருமே சரியான நேரத்துக்கு வேலைக்கு வருகிறார்கள். சரியான நேரத்துக்கு வீடு திரும்புகிறார்கள். அவ்வாறே எல்லோரினது சம்பளமும் காலத்துக்குக் காலம் அதிகரிக்கிறது. போனஸும் வழங்கப்படுவதாகத்தான் எல்லோரும் சொல்கிறார்கள். அதாவது அதன் அர்த்தம் ‘பாஸ் என்னதான் கத்தினாலும், தனக்குக் கீழே பணி புரிபவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்’ என்பதுதானே?! நான் இந்த அலுவலகத்துக்கு வந்து இப்போது மூன்று மாதங்கள்தானே ஆகின்றன. என்னால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றோ அது எனது தவறு. இல்லாவிட்டால் பாஸின் தவறு. அவர் என்னிடம் மிகவும் அநீதமான முறையில் சத்தம் போடுகிறார். என்னைத்தான் அதிகமாகத் திட்டுகிறார். 

உண்மையைச் சொல்வதென்றால் நான் ஒரு வாக்குமூலம் அளிக்க வேண்டும். நானறியாமல் என்னால் நிகழும் தவறுகளும் இருக்கின்றனதான். அவ்வாறே நான் வேண்டுமென்றே தவறிழைக்கும் நாட்களும் இருக்கின்றன. அது இவரது அறைக்குள் சென்று இவர் கத்துவதை பார்த்துக் கொண்டிருப்பதற்காகவே இழைக்கப்படும் தவறுகள். நிஜத்தில் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதோ, என்னவோ! எமது பாஸ் ஒரு ஹிந்தி நடிகர் போலத்தான் எனக்குத் தென்படுகிறார். இவர் நல்ல உயரம். ஆறடியாவது இருப்பார். அதை விடவும் அதிகமாகவும் இருக்கலாம். அவ்வாறே நல்ல வெள்ளை. வெள்ளை என்றால் எலுமிச்சை மஞ்சள் நிறம். கண்களின் கருமணிகளில் மெல்லிய கபில நிறம் புலப்படுகிறது. உதடுகளில் இளஞ்சிவப்பு நிறம் படிந்திருக்கிறது. இவர் ஒரு பெண்ணாக இருப்பாரானால், ஆண்களெல்லோரும் இவரின் பின்னால் பைத்தியங்களாக அலைந்திருப்பார்கள். 

என்றாலும் இதுவரை பெண்கள் எவரும் இவர் மீது மையலுற்றிருக்க மாட்டார்கள். இவர்தான் எப்போதும் கத்திக் கொண்டிருக்கிறாரே. இவரது முகத்தில் ஒரு புன்னகையைக் கூட இந்த மூன்று மாதத்தில் நான் கண்டதேயில்லை. எவ்வளவுதான் அழகன் என்றாலும், மோசமான முரட்டு ஆண்களை சாதாரணப் பெண்களுக்குப் பிடிக்காதே. நான் சொல்ல விழைவது அதற்காக நான் அசாதாரணப் பெண் என்றல்ல. எனக்கு எமது பாஸை பிடித்திருக்கிறது. நாளுக்கு நாள் அந்த ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்வது எதனால்? எனது மனத்துக்குப் பிடித்த எதையும்தான் இவர் செய்வதுகூட இல்லையே! 

இவரோ, அமிதாப் பச்சன் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இருக்கிறார். என்றாலும் அபிஷேக் பச்சன் போல இல்லவே இல்லை. என்னதான் அபிஷேக், அமிதாப்பின் மகன் என்றாலும் அமிதாப்பின் ஆளுமை அபிஷேக்கிடம் குறைவாகத்தானே வெளிப்படுகிறது. எமது பாஸ் நல்ல நேர்த்தியாக இருக்கிறார். அவரது மேசையின் மீது அனைத்துமே மிகவும் நேர்த்தியாகத்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. பேனை கூட சரியாக தொண்ணூறு பாகையில் செங்குத்தாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. என்னதான் நான் பெண்பிள்ளையாக இருந்த போதிலும், நான் இந்தளவு நேர்த்தியெல்லாம் இல்லை. இருந்தாலும் ஒரு நாள் நேர்த்தியாகவே இருப்பதென்று முடிவு செய்து இருந்தும் பார்த்தேன். ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு என்னால் இப்படியெல்லாம் இருக்கவே முடியாது என்பது எனக்கே புரிந்தது. அவரது ஆடைகள் கூட அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அழகாக ஆடைகளை அணிந்திருப்பார். சட்டைகளில் ஒரு சுருக்கம் கூட இருக்காது. சரியாக காலை எட்டு முப்பதுக்கு ஆபிஸுக்கு வந்துவிடுவார். நேரம் தவறாமல் பணி புரிவார். அதனால் நானும் எப்போதும் அவர் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று முயல்வேன். காரணம் பாஸ் ஆபிஸுக்குள் நுழையும் இடத்தில்தான் எனது மேசையும், கதிரையும் போடப்பட்டிருக்கிறது. அவர் என்னைத் தாண்டிப் போகும்போது மிகவும் அருமையான வாசனை அவரிடமிருந்து வரும். அவரது தேகத்தில் மோதி வரும் தென்றல் கூட அவ்வளவு நறுமணம் மிக்கதாக இருக்கும். ஏதோ நானே அவர் பின்னால் ஈர்க்கப்பட்டுப் போவதை போலவே இருக்கும். 

அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் குளிப்பாராக இருக்கும். எப்படி இவ்வளவு உறுதியாக அதை என்னால் சொல்ல முடிகிறதென்றால் குளித்ததற்குப் பிறகு உடலில் தண்ணீரோடு கலந்த வாசனைத் திரவியத்தின் பரிசுத்தமான வாசனையை என்னால் தனித்தனியாக இனங்கண்டு கொள்ள முடியும். எனக்கு அந்தத் தருணம் மிகவும் பிடித்தமானது. அவ்வேளையில் சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டால் அமிதாப்பும், ராணி முகர்ஜியும் நடித்த ‘ப்ளாக்’ திரைப்படத்தின் காட்சியொன்று நினைவுக்கு வரும். என்றாலும் அந்தத் திரைப்படத்தில் மரங்களைச் சுற்றிச் சுற்றி வரும் காட்சிகள் இல்லை. ஆகவே, நான் கற்பனையில் அவ்வாறான ஒன்றை உருவாக்கிக் கொண்டேன். ராணி முகர்ஜியும் கூட அவ்வளவு உயரமானவர் இல்லையே. வேண்டுமென்றால் எனது உயரம்தான் அவருக்கும் இருக்கும். இருந்தாலும் நான் அவர் அழகுக்கு அழகியல்ல என்பது உண்மைதான். ஐயே… நான் என்னவெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

‘சார் எப்போதும் பழைய ஆங்கிலப் பாடல்களைத்தான் கேட்டு ரசிக்கிறார்’ என்று அவருடன் காரில் போயிருக்கும் ஒருவர் என்னிடம் கூறியிருக்கிறார். எனக்கென்றால் அந்தளவு மேல்மட்ட ரசனையெல்லாம் கிடையாது. எனக்கு அவ்வளவாக ஆங்கிலமும் தெரியாது. அவர் பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் வாசிப்பவராக இருக்கவும் கூடும். என்றாலும் என்னிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கமே கிடையாது. நான் மிகவும் எளிமையான பெண்ணொருத்தி. எனக்குத் தெரிந்ததெல்லாம் பாட்டி சொன்ன பெளத்த நீதிக் கதைகளும், அம்மா சொன்ன நாட்டார் கதைகளும் மட்டும்தான். நான் பார்க்கும் ஹிந்திப் படங்களின் கதைகளும் தெரியும். எனக்கு அவை மாத்திரமே பிடிக்கும். புத்தகம் வாசித்தால் தூக்கம்தான் வரும். மனிதர்களைப் புரிந்துகொள்ள புத்தகங்களை வாசிக்கவே வேண்டுமா என்ன?! 

மனித உணர்வுகளைப் பற்றிய தெளிவான புரிதல் என்னிடம் இருக்கிறது. அதனால்தானே என்னுடைய பாஸ் என்னை எவ்வளவுதான் திட்டினாலும் அவரது இளங் கபில நிற கண்களினூடே அவரது நல்ல உள்ளத்தின் வெண்ணிறம் சற்றேனும் எனக்குத் தென்படுகிறது. அந்த இதயத்தை அவர் யாரிடமுமே காட்டியிருக்க மாட்டார். அவர் திட்டும்போதுதான் எனக்கு அதிகளவில் அவரது இதயம் தென்படுகிறது. ஐயோ! அந்த விழிகள்தான் எவ்வளவு அழகானவை?! ஏன் அவர் இன்னும் திருமணம் முடிக்காமல் இருக்கிறார்? இன்னும் வயதிருக்கிறதுதான். ஆண்களுக்கென்ன?! நாற்பது வயதிலும் இருபது வயது இளம்பெண்ணொருத்தியைத் திருமணம் முடிக்கலாமே. பெண்களைப் போல கருவளப் பிரச்சினை கூட இல்லையே. காலாவதியாவதும் இல்லையே. அவரது ஆள் அடையாள அட்டையின் பிரதி என்னிடம் இருப்பதால் அவருக்கு இப்போதுதான் முப்பத்தெட்டு வயது என்பதை நான் அறிவேன்.

அவர் கத்தும்போது அவரது முகம் சிவந்து கண்களின் ஓரமாக மெல்லிய ரேகைகள் உதிப்பதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் என்னைத் திட்டும்போது கூட நான் அவரது கண்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பேன். அதனால் அவர் என்னை என்ன சொல்லித் திட்டுகிறார் என்பதெல்லாம் எனது காதுகளில் நுழையவே நுழையாது. அவரும், நானும் கொஞ்சம் கூட பொருந்தக் கூடிய ஜோடிகளே அல்ல. அவர் யார், நான் யார்?! என்றாலும் எனது மனதில் தோன்றுபவற்றைத் தவிர்க்க முடியாதே. எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது. ஒரு நாளாவது அவருக்கு என் மீது கொஞ்சூண்டு கருணையாவது தோன்றி அவர் என்னுடன் புன்னகைக்க வேண்டும் என்றுதான் நான் ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு முன்பு பிரார்த்தித்து வருகிறேன். நான் ஒருபோதும் அவரது புன்னகையைக் கண்டதேயில்லை. புன்னகையைக் கண்டால் அவர் மீது எனக்குள் காதல் தோன்றவும் கூடும். அதற்குப் பரவாயில்லை. அவர் என்னுடன் புன்னகைத்தால், எனக்குள் அந்தக் காதல் தரும் துயரத்தை நான் எப்படியாவது தாங்கிக் கொள்வேன். 

திடீரென்று என்ன நடந்ததோ தெரியாது. ஒரு நாள் பாஸ் என்னைத் திட்டுவது நின்று போனது. அவருக்கு ஏதாவது சுகவீனமோ தெரியாது. என்னதான் நான் தொடர்ச்சியாகத் தவறிழைத்த போதிலும், நான் தவறிழைத்த இடங்களைச் சுட்டிக் காட்டினாரே தவிர என்னைத் திட்டவில்லை. நான் நன்றாகப் பயந்து போனேன். அவருக்கு ‘கல் ஹோ நா ஹோ’ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வருவது போல குணப்படுத்தவே முடியாத ஏதாவது நோய் வந்திருக்குமோ?! குணப்படுத்த முடியாத நோய் ஏதாவது தமக்கு வந்திருப்பதை அறிந்து கொள்ளும் ஒரு சில மனிதர்கள் உடனடியாக தமது தீய சுபாவங்களை கை விட்டு விடுவார்கள்தானே?

இருந்தாலும் அவர் தப்பித் தவறியேனும் என்னுடன் புன்னகைக்கவேயில்லை. அவரது வதனம் கூட நாளுக்கு நாள் வெளிறிக் கொண்டே வந்தது. இல்லாவிட்டால் எனக்கு மாத்திரம்தான் அவ்வாறு தோன்றுகிறதோ?! வெள்ளை முகம் வெளிறிப் போயிருக்கிறது. கடவுளே! இவர் செத்துப் போய் விடுவாரோ?! அதை எண்ணிப் பார்க்கும்போதே எனது விழிகளில் கண்ணீர் பெருகி வழிந்தோடத் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு இரவும் நான் அழுதேன். அவர் குணமாக வேண்டும் என்று பிரார்த்தித்து வந்தேன்.

ஒரு நாள் அவர் ஏதோ வேலையிருப்பதாகச் சொல்லி என்னை மாலையில் தாமதமாகப் போகச் சொன்னார். நான் ஒரு கணம் கூட யோசித்துப் பார்க்காமல் சரியென்றேன். அந்த வேலைகள் எமது பிரிவில் அல்லாமல் வேறேதாவது பிரிவிலுள்ள வேலைகளோ நானறியேன். என்னதான் இருந்தாலும் பாஸ் தரும் வேலைகளை எவ்விதக் குறுக்குக் கேள்விகளும் கேட்காமல் நான் செய்து கொடுக்கத்தானே வேண்டும்?! நான் அவற்றை அவர் சொல்லிக் கொடுத்தவாறே செய்து கொடுத்தேன். மேக் டொனால்ட்ஸிலிருந்து எனக்கென உணவும் தருவித்துத் தந்தார். அதில் சிறுவர்களுக்கான ஹேப்பி மீல் பரிசொன்றும் இருந்தது. ஹேப்பி மீல்? நானொரு பச்சைக் குழந்தை என்று நினைத்து விட்டாரோ?!

அவர் தந்த எல்லா வேலைகளையும் செய்து முடித்து விட்டு நான் அவரது அறையின் அருகே சென்றேன். அவரது மேசையிலிருந்த அனைத்துமே சிதறிப் போய் நேர்த்தியற்று இருப்பது எனக்குத் தென்பட்டது. பேனைகள் தரையில் கிடந்தன. அவர் தலையில் கை வைத்தவாறே எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். நிஜமாகவே அவர் உடல் நலமின்றி இருக்கிறார். மிகவும் தற்பெருமை பிடித்தவர் என்பதால் தனது நிலைமையை எவரிடமும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியாமலிருக்கக் கூடும். எனது விழிகளில் கண்ணீர் நிரம்பியது. நான் எதற்காக இந்தளவு கவலைப்படுகிறேன்?!

என்னதான் இருந்தாலும் இன்று நான், நடப்பது நடக்கட்டும் என்று இதைக் குறித்து இவரிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். ஆபிஸில்தான் யாருமே இல்லையே. அடி வாங்கினாலும் பரவாயில்லை. எனது கால்கள் நடுங்கத் தொடங்கின. என்றாலும் நான் அவரது அறைக்குள் சென்று அவரருகே நின்றுகொண்டேன். என்னதான் அவர் அமர்ந்திருந்த போதிலும், நான் அவரருகே சென்று நின்று கொண்டதும் எம் இருவரதும் பார்வை மட்டங்கள் சம அளவில்தான் இருந்தன. அவர் என்னைக் கண்டதும் பதறிப் போய் விட்டார். உண்மையில் என்னைக் கண்டல்ல, எனது கண்ணீரைக் கண்டு!

என்னாச்சு சேபாலிகா? எதுக்காக அழுவுறீங்க? பயப்படாதீங்க. நான் உங்களை வீட்டுக்கே கொண்டு போய் விடுறேன்.”

இல்ல சார். அது தெரியும்.”

பிறகு? எதுக்காக அழுவுறீங்க?”

எனக்குக் கவலையாக இருக்கு.”

கவலையா?”

உங்களை நினைச்சு.”

என்னை நினைச்சா?”

உங்களுக்கு உடம்பு சரியில்லல்ல? ஏதோ பெரிய கவலைல இருக்கீங்கள்ல? ஆனா, நீங்க அதை யாருகிட்டயும் சொல்ல விரும்பல்ல. நான் கடந்த இரண்டு கிழமையா உங்களை அவதானிச்சிட்டுதான் இருக்கேன். உங்க மனசுல ஏதோ பெரிய கவலை இருக்கு, இல்லையா? உங்க கண்ணுல அது தெரியுது. நீங்க இப்போ என்னைத் திட்டுறதும் இல்ல. உங்களுக்கு உடம்பு சரியில்லைல்ல? எனக்கு அதான் கவலையா இருக்கு. வேறேதும் சொல்ல எனக்குத் தெரியல.”

கடைசி வார்த்தைகளைச் சொல்லி முடிக்க முன்பே நான் தேம்பியழத் தொடங்கியிருந்தேன். அவரது கண்ணாடி மேசை மீது சட சடவென்று கண்ணீர்த் துளிகள் விழுந்தன. நான் அழுது முடிக்கும்வரைக்கும் அவர் எனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். தனது கண்களையே நம்பாத தோற்றமொன்றே அவரது கண்களில் வெளிப்பட்டது.


என்னைக் குறிச்சு யாரும் இந்தளவு கவலைப்பட்டதேயில்லை. அத்தோடு நான் உங்களைத் தவிர வேற யாருக்கும் இந்தளவு கடுமையா திட்டியதுமில்ல. அப்படியிருக்கும்போது நான் கவலையிலிருந்தா அதுக்காக நீங்க சந்தோஷப்படாம ஏன் அழுவுறீங்க?”

சார், நீங்க என்னை எவ்வளவுதான் திட்டினாலும் அது என் காதிலேயே விழாது. நீங்க திட்டுறது எனக்குப் பிடிச்சிருக்கு. நீங்க என்னதான் மோசமானவராகக் காட்டிக்கிட்டாலும் நீங்க கெட்டவரில்லன்னே எனக்குத் தோணுது. நான் இப்படியெல்லாம் சொல்றதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. நான் இப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது.”

*****************

சேபாலிகா (பாரிஜாதப் பூ) என்ற பெயர்தான் அவளுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. அழகு. கருணை. அன்பு. சிறியது. அரியது. அப்பாவி. அவளொரு அப்பாவி, நான் முட்டாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததால்தான் நான் அவளைத் திட்டுவதை நிறுத்தினேன். என்றாலும், அவள் விருப்பத்தோடுதான் என்னிடம் திட்டு வாங்கியிருக்கிறாள். எனக்கு அவளிடமிருந்து விடுதலையேயில்லை என்பது புரிந்ததுமே நான் எனது அகங்காரத்தைக் கை விட்டுவிட்டு அவளைப் பிடித்திருக்கிறது என்பதைச் சொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தேன். வேண்டுமென்றே அவளுக்கு ஏதாவது வேலைகளைக் கொடுத்து இரவு வரைக்கும் ஆபிஸிலேயே வைத்துக் கொண்டேன். அவ்வாறே, ‘என்னைப் பிடிக்காத ஒரேயொரு பெண் இந்த சேபாலிகா’தான் என்ற முழுமையான தீர்மானத்துக்கே வந்து அந்தத் தோல்வியை எனது தலையில் தூக்கி வைத்திருந்தேன். நான்தான் இவளை எவ்வளவு திட்டியிருக்கிறேன்?! என்னைப் பிடிக்கும் விதமாக எதையும் நான் இவளுக்குச் செய்ததே இல்லையே. எனதுள்ளம் படும் துயரத்தை வெளிப்படுத்துவது மாத்திரமே எனது தேவையாக இருந்தது. என்றாலும், இவளோ என்னை இவளது கனவு நாயகனாக ஆக்கிக் கொண்டிருக்கிறாள். ‘எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது சேபாலிகா. நீதான் எனது நோய்’ என்றதுமே அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள். அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. நான் அவளைப் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விட்டேன்.

*****************

நான் அவரிடமிருந்து ஒரு புன்னகையை மாத்திரமே எதிர்பார்த்தேன். அவரோ முற்றுமுழுதாக என்னவராக ஆகக் காத்திருந்திருக்கிறார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. ஒரு ஹிந்தி நடிகர், இவ்வளவு சுமாரான குள்ளச் சிறுக்கியை ஏன் விரும்புகிறார் என்பதை என்னாலேயே ஜீரணிக்க முடியவில்லை. இப்போதெல்லாம் அவர் என்னுடன் ஒவ்வொரு காலை வேளையிலும் புன்னகைக்கிறார். அது ஒன்றும் பெரிதான புன்னகையல்ல. ஆகவும் சின்னச் சின்னதாய் ஒரு மந்தகாசப் புன்னகை. என்றாலும் அந்தச் சிறிய புன்னகைக்கே எனது தேகம் முழுவதும் மரத்துப் போய் முழங்கால்கள் கூட உயிரற்றவை போல ஆகி விடுவேன். அந்தப் புன்னகை வேறொரு பெண்ணுக்குக் கிடைக்கவே கூடாது என்றுதான் இப்போதெல்லாம் நான் எதிர்பார்க்கிறேன்.

அடுத்த மாதமே இந்த வேலையை விட்டுவிடுமாறும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். வேலை பார்க்க வேண்டும் என்றால் வேறொரு இடத்தில் அவரே தேடித் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். ஏனோதானோவென்று ஆடையணியாமல் அழகழகான வர்ணங்களில் குர்தாக்களை அணிந்து கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். அப்போதுதான் நான் ஏதோ கொஞ்சமே கொஞ்சமாயினும் ராணி முகர்ஜியைப் போலத் தெரிவேன் என்றும் சொன்னார். அவர் எனக்குத் தேர்ந்தெடுத்துத் தரும் ஆடைகள் எல்லாமே அழகானவை. உண்மையில் நாமிருவருமே இரண்டு விதமானவர்கள். என்றாலும் இப்போதோ அந்த இரண்டு விதமான அழகுகளையும் நாங்கள் ஒருமித்து ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

**********

எழுத்தாளர் பற்றிய குறிப்பு

மனுஷா ப்ரபானி திஸாநாயக்க

இலங்கையில் சிங்கள மொழியில் சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வரும் எழுத்தாளர் மனுஷா ப்ரபானி திஸாநாயக்க ஒரு விளம்பர நிறுவனத்தில் கலை இயக்குனராகவும், விளம்பரங்களை எழுதுபவராகவும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பணி புரிந்து வருகிறார். இலங்கைத் தொலைக்காட்சிகளில் பார்க்கக் கிடைக்கும் பெரும்பாலான விளம்பரங்கள் இவர் எழுதியவைதான்.

மனிதர்களிடையேயான நேச உணர்வுகளைக் குறித்த கதைகளை அதிகளவில் எழுதி வரும் இவரது சிறுகதைகளில் ஒன்று, உலகின் சிறந்த காதல் கதைகள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இவரது சிறுகதைத் தொகுப்பு விதர்ஷன சாகித்திய விருதுவிழாவில் முதன்மையான ஐந்து சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 

தொடர்புக்கு – manupraba55@gmail.com

-mrishansh@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button