அழகிய நாட்கள் – உமாஷக்தி

சென்னையின் ஒரு அடையாளமாக மாறிவிட்ட புத்தகக் காட்சியின் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து பங்கேற்றது இனிய நினைவுகளாக மனதின் நீங்கா இடத்தில் உள்ளது. என்னுடைய பெற்றோர் புத்தக வாசிப்பை மிகவும் இளம் வயதிலேயே எனக்கு அறிமுகப்படுத்தி விட்டனர். காரணம் அவர்களும் நல்ல வாசிப்பாளர்கள். வீட்டில் எப்போதும் புத்தகங்கள் இருக்கும். அம்மா திருமதி சூர்யகுமாரி நவநீதகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். தனது ஊரான ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சாரா டக்கர் கல்லூரிக்கு வந்து படித்ததற்கான காரணம் தமிழ் மீதுள்ள ஆர்வம். அதன் பின் சென்னை மின்வாரியத்தில் பணி. கம்யூனிஸ்ட் தோழர்கள் நடத்திய தாய்மண் எனும் பத்திரிகையில் அம்மாவின் கட்டுரை மற்றும் கவிதைகள் தொடர்ந்து வெளிவரும். ஆனால், வெகுஜன ஊடகத்தில் அவருக்கு ஆர்வம் இல்லை. இலக்கிய சஞ்சிகைகள் வாங்கினாலும் அதற்காக எழுதி அனுப்பும் நேரம் அம்மாவுக்கு இருந்ததில்லை. இந்த காலகட்டத்தில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சிக்கு என்னையும் தங்கை தேவியையும் அழைத்துச் செல்வார்.
எங்களுக்குப் பிடித்த காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி தந்து தனக்குப் பிடித்த புத்தகங்களையும் அள்ளிக் கொள்வார் அம்மா. எங்கள் வீட்டில் அன்றிலிருந்து இன்றுவரை பொக்கிஷமாக பாதுகாத்து வருவது புத்தகங்களைத் தான். அப்போதெல்லாம் புத்தகக் காட்சி காயிதே மில்லத் கல்லூரியில்தான் நடக்கும். ஒரு முறை நடிகர் கமலஹாசன் கண்காட்சிக்கு வருகை தந்து பேசினார். முதல் வரிசையில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் ஞானக்கூத்தனைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார். அந்த காலகட்டத்தில் நான் கவிஞர் அப்துல் ரகுமான், இன்குலாப், தமிழன்பன், மீரா, வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்களைத்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். ஞானக்கூத்தன் என்ற பெயரே மிகவும் வித்யாசமாக இருந்தது. தேடிப் பிடித்து ஒரு கவிதைப் புத்தகத்தை வாங்கினேன். அதன் பின் கவிதையைப் பற்றிய என் கண்ணோட்டம் மாறியது.
இன்னொரு ஆண்டு புத்தகக் காட்சியில் கவிஞர் வைரமுத்துவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது கையெழுத்தை வாங்க என் நண்பன் பாபு அவர் எழுதிய ”வைகறை மேகங்கள்” எனும் கவிதைப் புத்தகத்தை வாங்கி அதில் ஒரு வரி எழுதினான், “இந்தத் தாள் தங்கமாக தங்களின் கையெழுத்து தேவை” – ஒவ்வொரு கையாக மாறி மாறி இறுதியில் வைரமுத்துவின் கரங்களை அடைந்ததும் அவர் ‘இதை எழுதியவர் யார்?’ என்று கேட்க, நண்பன் ஏதோவொரு காரணத்தில் வாளாவிருக்க, புத்தகத்தை திரும்ப வாங்க நான் கைகளை நீட்டியதால் அதை நான்தான் எழுதினேன் என்று நினைத்துப் பாராட்டினார். எனக்கல்லாத அந்தப் பாராட்டை என்ன நான் செய்வது? அதைப் போல் எழுதுவதுதானே சரியாகும். ஏற்கனவே கிறுக்கிக் கொண்டிருந்த டைரியில் சில கவிதைகளை எழுதத் தொங்கினேன். அவை கவிதைகளா என்று கூடத் தெரியாது படித்த புத்தகங்களைப் பற்றி சிறு குறிப்பை எழுதி வைப்பேன். சில சமயம் வெள்ளைத் தாளில் சிறார் பத்திரிகைக்கு கதைகள் எழுதுவது, கடிதம் எழுதுவதும் அதை மீண்டும் வாசித்துப் பார்த்து கிழித்துப் போடுவதும் பிடித்தமான செயல்கள் ஆயிற்று.
அம்மாவின் கரம் பிடித்து போன காலங்கள் மாறி, நண்பர்கள் சூழ புத்தகக் காட்சிக்கு செல்லும் காலம் வந்தது. அப்போது பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள பள்ளியில் காட்சி மிகச் சிறப்பாக நடைபெற துவங்கியது. காயிதே மில்லத்தில் தீ விபத்து ஏற்பட்ட பிறகு அங்கு இட நெருக்கடி காரணமாக இந்தப் புதிய இடத்தை தேர்வு செய்திருந்தார்கள். எந்த இடமாக இருந்தால் என்ன லட்சக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் அந்த இடம் எனக்கு எதைவிடவும் மிக முக்கியமானதாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் அறிவுத் திருவிழா என்றால் அது சென்னைப் புத்தகக் காட்சிதான். அதை எதிர்நோக்கி காத்திருக்கும் மாதங்கள், தினங்கள் அர்த்தமானவை.
புத்தக வாசிப்பும், அதன் மீதான நேசிப்பும் வாழ்வின் முக்கியமானவையாகின. வாசகியாக இளம் வயதிலிருந்து புத்தகக் காட்சிக்கு வந்து கொண்டிருந்த நான் முதன் முதலில் என் கவிதைத் தொகுப்பு வெளியான ஆண்டில் கவிஞராக பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. 2007-ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தில் வெளிவந்த ‘கடோபநிஷிதம்’ என்ற ஆன்மிக நூலைத் தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு உயிர்மையில் வெளியான “வேட்கையின் நிறம்” எனும் கவிதை நூல் வெளியானது மறக்க முடியாது. அந்தக் கவிதை நூல் எனக்கு நிறைய கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியது. தமிழின் தலைசிறந்த எழுத்தாளுமைகளை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றது என்றென்றும் நினைவில் நிற்கும். அடுத்ததாக “திரைவழிப் பயணம்” எனும் உலக சினிமா கட்டுரை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. நூல் வெளியீட்டு விழாவை புத்தகக் காட்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். கவிஞர் சுகுமாரன் அப்போது காலச்சுவடு ஆசிரியராக இருந்தார். அவரது மேற்பார்வையில் வெளியான அந்தப் புத்தகம் மிகச் சிறப்பான வரவேற்பை சினிமா ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியது.
அதற்குப்பின் ‘பனிப்பாலைப் பெண்’ உயிர் எழுத்து வெளியீடாக வந்தது ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் என்று தொடர்ந்து புத்தகக் காட்சியில் என்னுடைய புத்தகங்கள் வெளியாகத் தொடங்கி, அது என்னை எழுதுவதற்கும் இயங்குவதற்குமான உத்வேகத்தை அளித்தது. வாசகசாலை வெளியீடாக அடுத்த ஆண்டு “ஆயிரம் நிலவினை இழுத்துச் செல்லும் தட்டான்கள்” எனும் கவிதை நூல் வெளியானது. அதனைத் தொடர்ந்து “சாம்பலில் பூத்த மலர்கள், நாம் ஏன் அந்தத் தேனீரைப் பருகவில்லை?, நித்தியத்தின் சாலையில் மூன்று இடை நிறுத்தங்கள்” ஆகிய புத்தகங்களை யாவரும் பதிப்பகம் வெளியிட்டது ‘கடைசித் தேநீர்’ எனும் நூலை ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டது. இந்த ஆண்டு (2026) கவிதை, புதினம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என நான்கு நூல்கள் வெளியாக இருக்கின்றது.
புத்தக வாசிப்பு நம்முடைய அகத்தை தெளிவாக்கி புதிய விஷயங்களை நம்முள் கடத்துகிறது. வாசகியாக இருந்த என்னை எழுத்தாளராக, பத்திரிகையாளராக, அதன் பின் பேராசிரியையாக மாற்றியது புத்தகங்கள்தான். நம்முடைய அறிவு, சிந்தனை, கற்பனைத் திறன், மற்றும் புரிந்துணர்வு யாவற்றையும் வளர்த்தெடுக்கும் ஆகச் சிறந்த கருவி புத்தகங்கள்தான் என்றால் மிகையில்லை. நாம் வாசிக்கும் ஒவ்வொரு நூலும் புதிய விஷயங்களை, கருத்தாடல்களை, அனுபவங்களை அள்ளித் தருகின்றன. வாசிப்பதன் மூலமாக நாம் அவற்றை உள்வாங்கி வெவ்வேறு வகையான பயணங்களை மேற்கொள்கிறோம். ஓரிடத்திலிருந்து காலம் இட வலமாக மாறி நம் இருப்பையே மறக்கச் செய்துவிடும். வாசிப்பும் ஒருவகையான தியானம்தான். நம்முடைய சிந்தனை திறன் மேம்பட்டு பகுந்தாய்ந்து வாழ்வில் எதிர்படும் பிரச்சனைகளுக்கான தீர்வை எடுக்கும் திறமையை அதிரிகரிக்கச் செய்யும். மேலும் வரலாற்று புத்தகங்களை வாசிப்பதன் மூலம் நாம் கடந்த காலத்தை புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் நிகழ்காலத்தை சரியாக அறிந்து கொண்டு எதிர்காலத்தில் சிறப்பாக திட்டமிட்டு செயலாற்ற முடியும். அரசியல், அறிவியல், பொருளாதாரம், சமூகம், புனைவிலக்கியம் என்று எல்லாவற்றையும் பரந்துபட்ட நிலையில் ஒருவரால் புத்தக வாசிப்பின் மூலமே அறிந்து கொள்ளமுடியும்.
புத்தக வாசிப்பு என்னுடைய மொழி, சொல்லாட்சி மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்துகிறது. எவ்வித யோசனையும் முன்முடிவும் இல்லாமல் சூரியனின் கீழுள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்து எழுத முடியும் என்ற நம்பிக்கையை புத்தக வாசிப்புதான் ஏற்படுத்தியது. மேலும் புத்தக வாசிப்பு கற்பனைத் திறனை விரிவாக்குகிறது. படைப்பூக்கம் ஏற்படும் தருணங்கள் நித்யமானவை. மனதின் அடியாழத்துக்குச் சென்றுவிட்டு படைப்பு மனநிலையிலிருந்து விடுபடும் அக்கணத்தில் தோன்றும் மன அமைதியை வார்த்தையில் சொல்லி விளக்க முடியாது. பேரானுபவங்களை அள்ளித் தருவது புத்தக வாசிப்பும் எழுத்தும் என்பதை அதில் லயித்தவர்கள் மறுக்க முடியாது.
இப்படியாக புத்தக வாசிப்பின் பயன்களின் பட்டியல் மிக நீளம்,. கண்காட்சியில் அனேக புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கையில் ஏற்படும் பரவசம் புத்தக விரும்பிகளால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும் ஒன்று. புத்தகங்களின் வாசனையைப் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம். அது ஒரு போதை; அது தரும் மயக்கம் இன்மையில் திளைக்கச் செய்வது. புத்தகக் காட்சியின் இன்னொரு முக்கியமான அம்சம் நண்பர்களின் கூடுகை. அது படைப்பாளிகள் மட்டுமல்லாமல், வாசகர்கள் மட்டுமல்லாமல், என்னுடைய மாணவர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் மட்டுமே சந்திக்க கூடிய பதிப்பாளர்கள் முக்கியமானவர்கள். அதிக பொருட்செலவில் மிகவும் பிரயத்தனப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை புத்தகமாக்கி வாசர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் அவர்களின் பணி மகத்தானது. பபாசி அமைப்பும் புத்தகக் காட்சியில் அவர்களின் செயல்பாடும் வரலாற்றின் பொன் எழுத்துக்களில் பதிக்கப்பட வேண்டியவை.
புத்தகக் காட்சியில் எனக்கு மிகவும் பிடித்தமான இன்னொரு விஷயம் வேடிக்கை பார்ப்பது. நாம் பார்வையாளர்களாக இருக்கும் போது பெரிய யத்தனங்கள் தேவையிருக்காது. சும்மா இருந்தாலே போதுமானது. புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களை அவர்கள் என்ன புத்தகங்களை விரும்பி வாங்குகிறார்கள் என்பதைப் பார்க்க பிடிக்கும். முக்கியமாக குழந்தைகள். பெற்றோர்களின் கரம் பிடித்து ஒவ்வொரு கடையாக ஏறி ‘எனக்கு இது வாங்கித் தா’ என்று சொல்லும் குழந்தைகளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கும். அறிவுசார் உலகத்துக்குள் நுழைய இப்போதே ஒரு படியில் ஏறிவிட்ட அவர்களை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க வேண்டும். சிலர் புத்தகக் காட்சிக்கு உணவும் காபியும் மட்டுமே மையப்படுத்தி வருவார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது, யாருக்கு எது பிடிக்குமோ அது அவர்களுக்கு இங்கு சர்வ நிச்சயமாக கிடைக்கும். நம் சமூகம் சமநிலை அடைவது என்பது வாசிப்பின் வழியே நீளும் பாதையில் பயணிக்கும்போது மட்டுமே நிகழும் என்று நம்புகிறேன்.
புத்தகக் காட்சி என்பது நினைவுகளின் பெட்டகம். ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய புத்தகங்களில் என் பெயரை எழுதி தேதி மற்றும் வருடத்தை முதல் பக்கத்தில் பதித்து வைப்பேன். இப்படி என் பத்து வயது தொடங்கி தற்போது வரை வாங்கியவை இரண்டாயிரம் புத்தகங்கள் உள்ளன. அவற்றில் படித்து முடித்துவிட்ட புத்தகங்கள் வீட்டருகே உள்ள நூலகத்துக்கு அளித்துவிட்டேன். தவிர முக்கியமான நிகழ்வுகளை பங்கேற்கும் போது புத்தகங்களை மட்டுமே பரிசளிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். மாணவர்களுக்கும் புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்தி அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை பரிசளித்து மகிழ்கிறேன். என்னிடமுள்ள புத்தகங்களையும் இனிமேல் வாங்கவிருக்கும் புத்தகங்களையும் சேர்த்து அழகான ஒரு நூலகம் துவக்க ஆசைப்படுகிறேன். புத்தக ஆர்வலர்கள் வந்து அமர்ந்து தேனீர் அருந்தி புத்தகங்களை வாசித்துவிட்டு அதைப் பற்றி உரையாடிவிட்டுச் செல்லும் இடமொன்றை உருவாக்குவது என்பது என் வெகு நாள் கனவு. கனவு மெய்ப்படும். நீங்கள் நிச்சயம் அங்கு வந்து உங்களுக்கு பிடித்த புத்தகத்தை எடுத்து வாசித்துப் பாருங்கள்.
கடுமையான மன உளைச்சலாக இருந்தாலும், அதீத சந்தோஷமாக இருந்தாலும் சரி எனக்கு இரண்டு விஷயம் எப்போதும் உடன் இருக்கும்.. ஒன்று புத்தகம், இன்னொன்று இசை. இவை போதுமென் கோப்பையை நுரைக்க. நிறைக்க. புத்தகங்களுடான ஒரு உலகத்தை மேலும் மேலும் உருவாக்குவோம். அந்த அறிவுலகத்தில் நீங்காத நட்சத்திரமாய் நாம் ஒவ்வொருவரும் ஜொலிப்போம்.. எனக்கு பாரதியை, கம்பனை, அம்பையை, சூடாமணியை மீராவை, ஜெயமோகனை, எஸ்ராவை, யூமா வாசுகி உள்ளிட்ட அனைத்து படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்திய புத்தகக் காட்சி என்றென்றும் என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. விரைவில் தொடங்கவுள்ள சென்னை புத்தகக் காட்சியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.



