இணைய இதழ் 121சிறுகதைகள்

அஸீர் – இத்ரீஸ் யாக்கூப்

இன்றும் பணி நிமித்தமாக இரு வேறு எல்லைகளுக்குச் சென்றிருந்தேன். இது கொஞ்சம் குறைவுதான். பெரும்பாலும் ஒரே நாளில் நான்கைந்து இடங்களுக்குக் கூட எந்திரம் போலச் சுழன்று வர நேரிடும்! பாலிடெக்னிக் முடித்து விட்டு இரண்டாண்டுகள் உள்ளூர் அனுபவத்தோடு ஒரு மெக்கானிக்காக இருபத்தி இரண்டு வயதில் அமீரகம் வந்து சேர்ந்தேன். இப்போது பிராயம் முப்பதைத் தொட்டுவிட்டது!

அயராத உழைப்பிலும் தொடர் தொழிற்முறை பயிற்சிகளாலும் இதோ இன்று ஒரு பொறியாளருக்கு நிகராக, ஒரு குழுவை வழி நடத்தும் தலைவனாய் ‘க்ரீன் க்ளோபல் எல்.எல்.சி.’ எனும் காய், கனி வகைகளை விளைவிக்கும் நிறுவனத்தில் கவுரவமாக பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறேன். அதற்கு அருண் பிரசாத் சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்! நம்மூர்க்காரர்தான்.

ஏபி (AP) சார் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர். அவர் ராஜினாமா செய்த பின்னர், குழுவை வழி நடத்த நிர்வாகத்திடம் என்னையே ஒருமனதாய் முன்மொழிந்தார். அந்த அளவிற்கு என்னை தகுதியானவனாகவும், இந்நிறுவனத்தில் அவர் இருந்த மூன்று ஆண்டுகளில் என்னை உருவாக்கியும் வைத்திருந்தார். மேலும், அவர் வாங்கி வந்த பாதி சம்பளத்தில் என்னைப் போல் ஒருத்தன் கிடைத்தால் எந்த கம்பெனியின் ஹெச்.ஆர்.-தான் சான்றிதழ் தகுதிகள் காட்டி மறுக்கும்? ஆனாலும் இதற்கு முன் இப்போது வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு குறைவாகவேப் பெற்று வந்தேன். ஆகையால் என்னளவில் இது பெரும் முன்னேற்றமே!

இது ஜனவரி மாதம், எங்களுக்கு இது ஹை சீசன்! அதாவது இப்போதுதான் விளைச்சல் அதிகமாக இருக்கும்! இந்த நிலை, குளிர் மாதமான நவம்பரில் ஆரம்பித்து இங்கே இளம் வெயில் படரும் ஏப்ரல் – மே வரை தொடரும். இன்று இரண்டு இடங்களில் பணி என்று ஆரம்பித்திருந்தேனல்லவா? அதில் ஒன்று உருளைக் கிழங்குகளை கிரேடிங் (grading) செய்யும் மெஷினை ட்ரையல் ரன் (trial run) செய்து பார்க்க வேண்டும்.

பிப்ரவரியிலேயே அறுவடை தொடங்குமென்றாலும் இயந்திரத்தின் தகுதி மற்றும் தயார் நிலையை இப்போதே எங்கள் டிபார்ட்மென்டிலிருந்து உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக மார்க்கெட்டிலிருந்து ஒரு டன் லெபனான் நாட்டு உருளைக் கிழங்குகள் தருவிக்கப்பட்டிருந்தன. மேலும் எங்கள் ஆப்ரேஷன்ஸ் ஹெட்டான (operations’ head) மிஸ்டர் சார்லஸ் மஹ்ளோஃபும் குறிப்பிட்ட பேக் ஹவுஸிற்கு வருகை தந்திருந்தார். அவரும் லெபனான் நாட்டுக்காரர்தான். ஒரு வகையில் அவரும் எனக்கு ரோல் மாடல் மாதிரிதான். இந்த நிறுவனத்தில் பண்ணையில் வேலை செய்யும் ஒரு சாதாரண அக்ரோனாமிஸ்ட்டாக (arogonomist) நுழைந்தவர். இன்று ஃபார்ம் ஆப்ரேஷன் (farm operations) அனைத்திற்கும் தலைமை அதிகாரியாக வளர்ந்து நிற்கிறார்!

அந்த வேலை எவ்வளவு நேரம் இழுக்கப் போகிறதோவென தவிப்போடு சென்றவனுக்கு நல்ல வேளையாக பன்னிரெண்டு மணிக்கு முன்னமே சிறப்பாக முடிந்து விட்டது! அந்த ஆசுவாசத்திற்கு காரணம் இன்று வெள்ளிக்கிழமை! நான் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும்!

அங்கிருந்து விரைவாகக் கிளம்பினேன். வழியில் சந்தன மற்றும் அரக்கு நிறத்தில் ஒரு அடக்கமான பள்ளிவாசல் ஜூம்ஆ தொழுகை அங்கே நடக்கும் அறிகுறிகளை எடுத்துக் காட்டியது. வாயிலில் நீலம், ஆரஞ்சு, கரும்பச்சை நிறங்களில் சீருடைகள் அணிந்த கணிசமான கடைநிலைத் தொழிலாளர்கள் அங்கே விரித்திருந்த சிவப்பு நிற கார்பெட்டுகளில் சம்மணமிட்டபடியும், குத்துகால் போட்டும், ஸுஜூதிலும் தத்தம் போக்கில் அமர்ந்திருந்தனர். கண்களுக்குக் குளிர்ச்சியான தங்க ஒளி அவர்களின் மீது படிந்திருந்தது.

நான் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கை, முகம், கால் கழுவி ஒது செய்துவிட்டு பள்ளியினுள் சென்றேன். இன்னும் பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) கொடுக்கவில்லை. மணி மதியம் ஒன்றென அங்கே பொருத்தப்பட்டிருந்த கடிகாரம் காட்டியது. நான் இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களில் பாங்கு கொடுத்து, இமாம் குத்பா (சிறப்புரை) ஆற்ற ஆரம்பிப்பார் என மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். நிறைய பேர் மௌனமாய், ஆழ்ந்து குர் ஆன் ஓதிக் கொண்டிருந்தனர்.

எனக்கு ஓதத் தெரியாது. ஆதலால் கைப்பேசியில் இருந்த தமிழ் மொழிபெயர்ப்பைச் சொடுக்கி வாசிக்க முனைந்தேன். அந்தச் செயலி திறக்க தாமதம் ஏற்படவே, கவனம் அருகிலிருந்தவன் மேல் படிந்தது. அவன் மன ஓர்மையுடன் கண்களால் அழகாய் கையில் வைத்திருந்த குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தான். முகம் அமீரகமாகவும் இருக்கலாம், அல்லது ஒமானியாகவும் இருக்கலாம் என்ற யூகம் தந்தது. அவனது கால் விரல்கள் பருத்து, தட்டையாக இருந்தன. என் கவனத்தை தமிழ் மொழிப்பெயர்ப்பு குர் ஆன் செயலியில் பதித்தேன்.

மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக ஆக்கினோம் (18:7) என்ற இறைவசனம் எனது கண்களை விட்டு அகலவில்லை! இரண்டு, மூன்று முறை வாசித்தேன். மனதில் இந்த உலக வாழ்க்கையை நினைத்து ஏதேதோ எண்ண ஓட்டங்கள். எல்லாவற்றையும் லேசாக்க வேண்டியும், நன்மையாக்க வேண்டியும் பிரார்த்தித்தேன்.

அனைத்தையும் படைத்தவனிடம் ஒப்படைத்துவிட்டு மிகவும் ராஹத்தாக கடமையான தொழுகையை தொழுது முடித்தேன். கூடவே பயணத்தில் இருப்பதால் அடுத்த தொழுகையான அஸரையும் ஜம்மு கஸராக அங்கேயே நிறைவேற்றினேன். மனமும், உதடுகளும் அடங்கும் வரை அல்லாஹ்விடம் எனது மன்றாடல்களை முன் வைத்தேன். பயணத்தில் கேட்கும் துஆக்கள் (வேண்டுதல்கள்) இறைவனால் அங்கீகரிப்படும் என்ற முழு நம்பிக்கையில்.

வெளியில் வந்தபோது கூட்டத்தில் தொண்ணூறு சதவீதத்திற்கு மேல் கலைந்து சென்றிருந்தது. சீருடைத் தொழிலாளர்களை ஏற்றி வந்த இரண்டு வெள்ளை நிற பேருந்துகளும், மூன்று நான்கு சிறிய வேன்களும் புறப்பட்டு விட்டிருந்தன. அவர்கள் அனைவரும் கட்டிடம் மற்றும் சாலை அமைப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடுபவர்கள். தங்களது குடும்பங்களுக்காக தேசம் கடந்து மணற்புழுயிதிலும், சுடும் வெயிலிலும் குடையாய் நின்று உழைப்பவர்கள். என்னை இந்த நிலையில் வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி கூறினேன்.

அப்போது வெளியில் தொழுபவர்களுக்காக விரிக்கப்பட்டிருந்த கார்பெட் விரிப்புகளை நீலநிறச் சீருடை அணிந்த அப்பள்ளியின் துப்புரவுத் தொழிலாளி சுருட்டி மடித்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனுக்கு வயது இருபது இருக்கலாம். வங்காள முகச்சாயல். வீசும் காற்றின் வேகத்திலேயாவது தாமரை இலையை கொஞ்சம் நனைத்து விட முடியுமா என்று இந்த நீர் மனம் அலைமோதத் தொடங்கியது. ஆமாம் அவனுக்கு ஏதாவது கைசெலவிற்குக் கொடுக்க வேண்டுமென மனம் உந்தியது.

பர்சில் இரண்டு நோட்டுகளாக வெறும் இருபது திர்ஹம்ங்கள் மட்டுமே இருந்தன. அவனுக்கு ஸலாம் சொல்லியபடி அதிலிருந்து ஒன்றை எடுத்து நீட்டினேன். மக்ரிப் நேரத்து முதல் பிறையைப் போல மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான்.

என்னிடம் பணமாக இருந்ததைத் தவிர வங்கிக் கணக்கில் எண்பத்தி நான்கு திர்ஹம்கள் மட்டுமே கையிருப்பாகவும் கிடந்தன. அதைக் கொண்டுதான் சம்பளம் வரும்வரை இன்னும் நான்கைந்து நாட்களை ஓட்ட வேண்டும் என்ற கவலையும் அந்நேரம் என்னை வாட்டாமலில்லை.

பசிக்க ஆரம்பித்தது போகும் வழியில் அந்தப் பகுதியின் மையமான ஒரு சிற்றூர் வரும்; அங்கே பிரியாணி சாப்பிடலாம் எனத் திட்டமிட்டேன். நான் அந்த துப்புரவுத் தொழிலாளியிடம் பேசிக் கொண்டிருந்தபோது இரு ஆப்பிரிக்க ஆண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை கவனித்தும் கவனிக்காமலும் வண்டியில் ஏறினேன்.

அதுவரை பார்க்கிங் செய்யும் இடத்தையொட்டிய பேரிச்சை மர நிழலில் இரண்டு தோள் பைகளோடு அமர்ந்திருந்தவர்கள் மெல்ல எழுந்து, என் காரின் அருகில் வந்து கதவின் கண்ணாடியை மெல்லத் தட்டினார்கள். ஒருத்தன் அரேபியர்களுக்கான கந்தூரா போன்ற உடையை அணிந்திருந்தான். வயது முப்பத்தைந்திற்கு மேல் இருக்கும். மற்றொருவன் இருபத்தைந்திற்குள் இருப்பான். இரண்டாமானவன் கருப்பு பேன்ட், மங்கிய வெள்ளையையையொத்த மஞ்சள் நிற சட்டைப் போட்டிருந்தான். அரபியில் ஏதோ சொன்னார்கள் போகும் வழியில் இறக்கிவிடச் சொன்னது மாதிரி மட்டும் கொஞ்சம் புரிந்தது. சிறிது யோசனைக்குப் பின் ‘சரி, ஏறுங்கள்!’ என்றேன்.

‘துபாய் செல்கிறாயா? நாங்களும் அங்கேதான் போக வேண்டும். வரலாமா?’ எனக் கேட்டனர். ‘என்ன துபாயா? அதை நான் பார்த்தே பல மாதங்களாச்சு!’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். பெரும்பாலும் ஊருக்குப் போகும், ஊரிலிருந்து திரும்பும் சமயங்களில் மட்டுமே ஒரு தலையாய் காதலிக்கும் காதலனைப் போல துபாயின் பிரம்மாண்டப் பேரழகை சிறிது நேரம் ஆசைக்கு நின்று இரசிப்பதுண்டு. மற்றபடி நான் ஒரு தனிமையான காட்டுவாசி வாழ்க்கையைத்தான் விரும்பியும் விரும்பாமலும் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறேன்.மேலும் இன்று பணிக்கு இடையில்தானே கடமையான வெள்ளிக் கிழமைத் தொழுகையையும் நிறைவேற்றியதும்?

‘நான் துபாய் செல்லவில்லை, வழியில் வரவிருக்கும் அந்த மையமான சிற்றூரின் பேரைச் சொல்லி உங்களை அங்கே இறக்கி விடுகிறேன். அங்கிருந்து பஸ்ஸோ, டாக்சியோ பிடித்து நீங்கள் வேண்டிய இடத்திற்குச் செல்லலாம்’ என்றேன்.

“எங்கள் கையில் காசில்லை. பசிக்குது வேற! உன்னால் உதவ முடியுமா?” – என்றான் இவ்விருவர்களில் மூத்தவன் போலத் தெரிந்தவன். மனக்கண்ணில் டெபிட் கார்டில் உள்ள எண்பத்தி நான்கு திர்ஹம்கள் டிஜிட்டல் இலக்கத்தில் ஒளிர்ந்தன.

‘சாப்பாடு வாங்கித் தருகிறேன்’ என்றேன். ‘சரி’ என ஆமோதித்தனர்.

குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் மூவரும் நான் அவ்வழியில் வரும், செல்லும் வேளைகளில் சாப்பிடும் ஓட்டலில் நுழைந்தோம்.

“சிக்கன் பிரியாணி ஓகே வா?” என்றேன். தாமதிக்காமல் மூவருக்கும் அதையே ஆர்டர் செய்தேன்.

பிட்டுத் தின்னும் மரவள்ளிக் கிழங்கின் பிரகாசத்தோடு, இருவரும் மகிழ்ச்சி பொங்க என்னோடு நேசம் பாராட்டுவது போல் பேச ஆரம்பித்தனர்.

அவர்களின் பேரைக் கேட்டேன். வட்டார அரபி உச்சரிப்போ என்னவோ அவர்கள் சொன்ன பெயர்கள் எதுவும் எனக்கு சரியாகப் பிடிபடவில்லை. இதே அவஸ்தையைதான் உள்ளூரில் இஸ்லாமியர் அல்லாத பல ஆசிரியர்கள், மாணவர்கள் நான் படிக்கும் காலத்தில் அனுபவத்திருப்பார்கள் போலும்! இன்னொரு முறை விளங்கும்படி சொல்லச் சொல்லிக் கேட்டிருக்கலாம்தான். ஆனால், எதற்கு என்று முயற்சிக்கவில்லை.

என்னுடையப் பேரைச் சோதித்த போது ‘யாசிர்’ என்று பதிலளித்தேன். முழுப்பெயர் யாசிர் மஹ்மூத். அவர்கள் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி திரண்டது. எந்த நாடு என ஆவலாய் விசாரித்தனர். சொன்னேன். ‘இந்தி! இந்தி!’ என ஏதோ வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்பவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் சூடான் நாட்டைச் சார்ந்தவர்களாம்.

‘உங்க நாட்டில் யாசிர் எனும் பேரில் நிறைய பேர் இருக்காங்கத்தானே?’ என்றேன் சற்றேப் பெருமிதத்துடன். ‘ஆமாம்’ என்று சிரித்தபடி நான் எதிர்பார்த்ததைப் போன்றே வழிமொழிந்தனர்.

அவர்களை எதார்த்தமாக கையாள முனைந்து பேச்சு வாக்கில் மறுபுறம் பொதுவாக அந்நியர்களிடம் கடைபிடிக்கும் என்னுடைய எச்சரிக்கை உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டிருந்தேன்…

அப்போதுதான் அவ்விருவர்களில் இளையவன், சர்வரை அழைத்து ஏதோ அரபியில் பேச ஆரம்பித்தான். அதில் ‘அஸீர்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு பக்கென்றது. கலவரப்படும்படி அது அவ்வளவு மோசமான வார்த்தையெல்லாம் இல்லை. ஜூஸைதான் அரபியில் அஸீர் என்று அழைப்பார்கள்.

சர்வரும் ‘மீடியம் வேணுமா? லார்ஜ் வேணுமா? மொத்தம் மூணா?’ என்று தனது காரியத்தில் கண்ணாக இருந்தார். எனக்கோ காசில்லாத பீதி! ஒரு ஜூஸிற்கு குறைந்தது பத்து, பன்னிரண்டு திர்ஹம்கள் வரை வரும்! என்னிடம் அவ்வளவு காசில்லாததில், சற்று கோபம் வலுத்து ‘அதெல்லாம் வேணாம், அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் ஏதாவது சாஃப்ட் ட்ரிங்க்ஸ் கொண்டு வாங்க!’ என்றேன். அதன் பிறகு அவர்கள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை.

அவ்வப்போது சாப்பிடும் ஓட்டல் என்றாலும் அன்று பார்த்து குண்டுச் சட்டியில் சுடச்சுடக் குவித்தபடி பிரியாணி வந்தது. இதுவும் மலையாளிகளின் வியாபாரத் தந்திரமோ? காசு கூட வருமோ..? ஒன்றிற்கு அதிக பட்சமாக இருபது திர்ஹம்கள் என்றாலும் அறுபது வரும், அந்த கூல் ட்ரிங்ஸ்க்கு அஞ்சோ ஆறோ கொடுக்க நேரிடும். பார்த்துக் கொள்ளலாமென மௌனமாக சாப்பிட ஆரம்பித்தேன். அதன் பின் அவர்களிடம் எதுவும் கேட்கவுமில்லை, பேசவுமில்லை. எல்லாம் என் கரிசனத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்களே என்ற ஆதங்கம்தான்!

நிறைய பசியில் இருந்திருப்பார்கள் போல. சீக்கிரமே சாப்பிட்டு தட்டைகளைத் தடவி வழித்திருந்தார்கள். என்னதான் இருந்தாலும் அங்கே அவர்கள் என் விருந்தாளிகள். சூழலை இலகுவாக்கும் வண்ணம் கஷ்டப்பட்டு சிரிக்க முயன்று ‘நல்லது, சென்று வாருங்கள்!’ என்று முகபாவனையில் சொல்லி அனுப்பி வைத்தேன்.

வாகனம் ஓட்டும் பொழுதுகளில், உறக்கம் வரலாமலிருக்க மதிய உணவிற்கு பின் தேநீர் அருந்துவேன். அந்த அஸீரால் விளைந்த சடுதி மாற்றங்களில் இன்று அதற்கான அவசியமே இல்லாமல் போனது. இருந்தும் கோபத்தைத் தணிக்க, “ஒரு கரக்!” என நம்மூர் டீயை ஆர்டர் செய்தேன். இடைப்பட்ட அவகாசத்தில் முகநூலை சிறிது நேரம் மேய்ந்தேன். ஆற, அமர வந்த தேநீரை ருசித்துப் பருகிய பின் கொஞ்சம் ஆசுவாசம் பிறந்திருந்தது. ஆனால், வெளியில் வந்து பார்த்தால் என் வண்டி அருகேயே அந்த சூடானிகள் இருவரும் நின்று கொண்டிருந்தனர்!

எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இம்முறை துபாய் செல்ல வேண்டி என்னிடம் காசு கேட்டார்கள். பர்சில் வெறும் பத்து திர்ஹம் நோட்டு மட்டுமே! ஐம்பதோ, நூறோ இருந்திருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பேன்தான். இந்த மாதிரியான தருணங்களில் அறிவு சொல்லும் – ‘எல்லாம் பொய்யாக இருக்கும்! அவன் சொல்லும் கதைகளை நம்பதே! நம்பாதே!’ என்று. இருந்தும் கொடுத்து ஏமாந்திருக்கிறேன் நிறைய. ஆனால், இன்றைய நிலைமைக்கு ‘காசில்லை’ இயலாமையில் மீண்டும் அவர்களின் மீது கோபப்பட மட்டுமே முடிந்தது! அந்த கோபம் அவர்களைக் கடந்து வர மிகவும் உதவியது.

பிறகு அடுத்த சைட்டிற்கு காரைச் செலுத்தினேன். அங்கே பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிற குடை மிளகாய்களை ஒரே ட்ரேயில் (tray) வைத்து வண்ணமயமாக பேக் (pack) செய்யும் எந்திரத்தில் ஏற்பட்டிருக்கும் திடீர் கோளாறைச் சரிசெய்ய வேண்டும். ட்ரேயை பாலித்தீன் ராப்பர் (wrapper) சரியாகச் சுற்றி மூடி சீல் (seal) செய்யாமல், சணல் பிரிந்த மூடையிலிருந்து வெளியேறி உருளும் உரிக்காத தேங்காய்களாய், குடை மிளகாய்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. எல்லாம் அறிந்த வித்தைகள்தான். திட்டமிட்டுச் சென்ற தொழில் யுக்திகளால் வேலையை ஒப்புக்கொண்ட நேரத்திற்குள் முடித்துக் கொடுத்தேன். அந்த திருப்திக்குப் பரிசோ அல்லது பரஸ்பர உபசரிப்போ எனக்காக சோளக் கருதை அவித்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தான் அந்த சைட்டில் சூப்பர்வைசராக அமர்த்தப்பட்டுள்ள என் வயதையொத்த சக ஊழியன், புனேவைச் சேர்ந்த கௌஷிக் மானே. கூடவே காஃபியும் தயாரித்துக் கொடுத்தான். இந்த கூதலுக்கு ரம்மியம்தான்!

அவனோடு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததில் மக்ரிப் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது. அவன் கேபினிலேயே மக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளை நிறைவேற்றினேன். மனசு மீண்டும் லேசானது. அதே கனிவோடு மனைவியிடம் சில நிமிடங்கள் கைப்பேசியின் ஒளித்திரையில் அளவளாவினேன்.

கிரணிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்ட போது இருட்டாகி விட்டது. ஆமாம்; குளிர் நேரம் என்பதால் ஏழு மணிக்கே கும்மிருட்டு! நான் தங்கியிருக்கும் சைட்டிற்குச் செல்ல, அடுத்த இரண்டு மணி நேர பயணம் தொடங்கியது. மேலும், வரும் வழியில் இரவு உணவை முடிக்க வேண்டிய கட்டாயம். நமது கஜானா நிலைமையைதான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே! இருப்பினும் நஃப்ஸ் (மனோ இச்சை) கேட்கவில்லை. விடாது நாக்கு என்பது போல் ஏதாவது சாப்பிட்டுச் செல்ல வேண்டித் தூண்டிக் கொண்டிருந்தது.

இரவு உணவை பத்து திர்ஹம்களுக்குள் முடிக்கும் எண்ணத்தில் ஒரு அத்துவானக் காட்டிலிருந்து சிறிய மலையாளி ஓட்டலை நாடினேன். இதையும் செலவழித்து விட்டால் பர்சில் ஒன்றும் இருக்காதுதான். ‘நாளை சங்கதியை நாளை பார்க்கலாம்!’ இது எனது பெற்றோர்கள் வழி கடத்தப்பட்டப் பழக்கம் அல்லது நம்பிக்கை.

முதலில் இரண்டு பரோட்டா, ஒரு சிங்கிள் சிக்கன் கறி என்று மட்டும்தான் சொல்லியிருந்தேன். திடீரென ‘ஆஃப் ஃப்ரை’ என்று மூளையில் மணியடிக்கவே, எனது நஃப்ஸை நொந்தபடி அதையும் ஆர்டர் செய்தேன். சொல்லி வைத்தாற் போல இந்த மாதிரி நேரங்களில்தான் இப்படிப்பட்ட ஆசையெல்லாம் தோன்றும்! ‘காசு பத்தலைன்னா டெபிட் கார்டையே மொத்தத்துக்கும் யூஸ் பண்ணிக்கலாம்’ என்று பிளான் B-யார் புன்னகைத்தார்.

நான் ஆப் பாயில் கேட்டதை சர்வர் கவனித்தாரா இல்லையா எனத் தெரியவில்லை. லோக்கல் அரபி ஒருவர் அந்த நேரம் பார்த்து கத்திக் கொண்டிருந்தார்.

ஆனால், சர்வரின் காது மிகவும் கூர்மை போல. அவ்வளவு அமளியிலேயும் எல்லாவற்றையும் மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டவராய் மேசையில் அழகாகப் பரப்பி வைத்துவிட்டுச் சென்றார்.

சாப்பிட்டு முடித்ததும் பில் எப்படியும் பத்துக்கு மேலதான் வந்திருக்கும் என்ற யோசனையுடன் கல்லாவிலிருந்த இக்கா சேட்டனிடம், “எவ்வளவு ஆச்சு?” என்றேன்.

நித்தியானந்தா சிரிப்புடன் “அரபி கொடுத்து! நீ போய்க்கோ அண்ணா!” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியாமல், “அரபியா? எதுக்கு?” என்றேன்.

“அரபிகள் நம்ம கடைக்கு இப்படி வருவதும், கொடுப்பதும் சகஜம்தான்” என்றார் அதே மலர்ச்சியுடன்.

எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தன்னியல்பாகவே அவர்முன் என்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி தெரியவில்லை முதலில்.

“மதியம் நான் சூடானிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அதான் அல்லாஹ் எனக்கும் நாடியிருக்கிறான்!” எனத் தயக்கத்தோடு சொல்லி முடிக்கும் போது, இக்கா சேட்டன் தனது ஆட்காட்டி விரலை மேல்நோக்கிக் காட்டி அர்த்ததோடு புன்னகைத்தார்.

கடைக்கு வெளியே ஆங்காங்கே இடப்பட்டிருந்த மேசை, நாற்காலிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட அரபிகள் குழுமியிருந்தனர். அதில் ஒருவர் முகம் மட்டும் தனித்து என்னைப் பார்த்தது. நன்றி சொல்லலாம்தான். ஒருவேளை வேறு யாரும் கொடுத்திருந்தால்…? உண்மையிலேயே அந்த உணவிற்கு குறிப்பிட்ட நபர் காசு கொடுத்துதான் இருக்க வேண்டுமா? ஒருவித கலவையான உணர்வோடு, மௌனமாய் காரின் இருக்கையில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

அந்த சூடானிகள் மேல் ஏற்பட்ட கடைசி நேர மனக்கசப்பெல்லாம் முழுதும் நீங்கி அல்லாஹ் ஒருவனின் கருணை மட்டுமே என்னை ஆட்கொண்டு, உள்ளுக்குள் கண்கள் மல்கச் செய்தது. அந்த பத்து திர்ஹமும் சொச்சக் காசும் பத்திரமாக உள்ளன. இன்ஷா அல்லாஹ் மிச்ச நாளும் எப்படியாவது ஓடிவிடும்!

-idris.ghani@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button